திருட்டுக் கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 4,120 
 
 

வழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய- அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் – அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுவந்து விட்டுப் போவான். அடுத்த தெருவுக்குப் போகக் கார் எதற்கு என்று குழந்தையைத் தங்கவேலனுடன் அனுப்பினார்கள்.

அன்றும் அப்படிப் போனவன் ஒரு புதிய அநுபவத்துக்கு உள்ளானான். அவனுடைய பருவம் அன்று தலை காட்டியது. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வரும் மற்றக் குழந்தைகளையும் அந்த அந்த வீட்டு வேலைக்காரனோ, வேலைக்காரியோ கொண்டுவந்து விட்டார்கள். யாரோ ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு பெண் – பதினெட்டு வயசு இருக்கும்-வந்தாள். வந்தவள் தங்கவேலனுடன் இரண்டு குழந்தைகளைப் பார்த்ததும், ” என்ன துரை?, சௌக்கியமாக இருக்கிறாயா? ” என்று கேட்டாள். “பொன்னம்மா!” என்று பையன் ஆச்சரியத்தோடு சொல்லிக்கொண்டே பார்த்தான்

அவன் பார்த்தது கிடக்கட்டும்; தங்கவேலனும் அவளைப் பார்த்தான்; பிரமித்துப் போய்விட்டான். அவன் கண்ணுக்கு அவளுடைய அழகிலே வசியமருந்து இருந்தது. அவள் குறுகுறுத்த முகமும், வளப்பமான மேனியும் அவன் உள்ளத்திலே பதிந்துவிட்டன.

” நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வருகிறதில்லை?” என்று கேட்டான் துரை.

“வரமாட்டேன்” என்றாள் அவள்.

“ஏன்?” என்று குழந்தை மறுபடியும் கேட்டான்.

“ஏனோ!” என்று அவள் சொன்னாள்.

அவளை அவன் இதற்குமுன் பார்த்ததில்லை. அவள் எசமானர் வீட்டுக்குப் பழக்கமானவளா? பின், ஏன் அவள் இந்த இரண்டு மூன்று மாசகாலமாக வரவே இல்லை? குழந்தை கேட்ட கேள்வியைத் தானே கேட்கவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவள் சொன்ன,

“ஏனோ!” என்ற பதிலை விண்டு விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள எண்ணினான். முன்பின் முகம் அறியாத இளம்பெண்ணோடு துணிந்து பேசலாமோ? ஆனால் ‘இவள் யார்?’ என்றதை மாத்திரம் தெரிந்து கொள்ளத் துணிந்தான். “துரை, அது யார்?” என்று கேட்டான்.

அதற்கு விடை கிடைப்பதற்குமுன் அந்தப் பெண் ஒரு பார்வையினால் அவனை ஒரு வெட்டு வெட்டிவிட்டு பள்ளிக்கூடத்துக்குள் போய்விட்டாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த தங்கவேலன் மறுபடியும் துரையை, “இவள் யார்?” என்று கேட்டான்.

குழந்தை பதில் சொன்னான். அதைக் கேட்டவுடன் தங்கவேலுவுக்குப் பெருத்த ஏமாற்றம் உண்டாகிவிட்டது. குழந்தை என்ன சொன்னான் தெரியுமா? “பாக்கியத்தின் பெண்” என்றான். அதைக் கேட்டவுடன் தங்கவேலன் முகம் வாடியது. எதையோ பறிகொடுத்தவன் போல் ஆகிவிட்டான். ஏன்? ஒரு மாசத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சிதான் காரணம்.

***

“திருட்டுக் கை நிற்குமா? தவிட்டுக்கு வருகிற கைதான் தனத்துக்கு வரும். இன்றைக்கு இந்தச் சின்னப் பொம்மையைத் திருடின கையே நாளைக்கு ஏதாவது துணிமணியை எடுக்க நீளும்!” என்று இரைந்தான் தங்கவேலன்.

“நீ இங்கே வருவதற்கு முன்பே நான் பழகுகிறேன். அம்மாவிடம் நல்ல பேர் எடுத்திருக்கிறேன். நீ இன்றைக்குப் பெரிய திருட்டைக் கண்டுபிடித்தாயாக்கும்! இத்தனை பொம்மைக் குவியலில் இந்த ஒன்று குறைந்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்? நீதான் இந்த வீட்டுச் சொத்தைக் காப்பாற்றப் பிறந்திருக்கிறாயோ?” என்று கேட்டாள் பாக்கியம்.

“இல்லை; இல்லை. நீதான் இந்த வீட்டுச் சொத்துக்கு மகளாகப் பிறந்திருக்கிறாய்! இவ்வளவு வயசாகியும் உனக்குப் புத்தி இல்லையே! எனக்கு முன்பிருந்தே இங்கே இருக்கிறாய் என்று சொல்கிறாயே! அம்மாவிடம், எனக்கு இது வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொள்ளக்கூடாதோ? அதை எடுத்துப் பையில் எதற்காக ஒளித்து வைக்க வேண்டும்?”

“சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். அதற்குள் நீதான் போலீஸ் புலிபோலத் திருட்டைக் கண்டு பிடித்துவிட்டதாகத் தடபுடல் பண்ணுகிறாயே!”

“இந்தா அம்மா, அதிகமாகப் பேசாதே. செய்த தப்பை ஒப்புக்கொள். அம்மாவிடம் கேட்டு வாங்கிக் கொள்பவளாக இருந்தால் உன் பையில் எடுத்து மூலையிலே மறைவாக வைத்திருக்க வேண்டியதில்லை. திருடினது போதாதென்று, அது சரி என்று சமாதானம் வேறு சொல்ல வந்துவிட்டாய். இன்னும் என்ன என்ன சாமானை முன்பு எல்லாம் எடுத்துக்கொண்டு போனாயோ?”

“என்ன அது? இனிமேல் பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். நேற்றுப் பிறந்த பயல். நீ என்னை அதிகாரம் பண்ணுவதாவது!” என்று அவள் சீறினாள். வார்த்தைகள் தடித்தன. பேச்சுப் பலமாயிற்று. அதைக்கேட்டு, “என்னடா அங்கே ரகளை?” என்று சொல்லிக்கொண்டே எசமானியம்மாள் வந்தாள்.

“ஒன்றும் இல்லை அம்மா! சின்னச் சமாசாரம். இந்த நாய் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டுகிறது” என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாக்கியம்.

” நீங்களே பாருங்கள் அம்மா, இந்த அம்மாள் பேசுகிரதை. நாய் என்று சொல்லுகிறாள். திருட்டைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற ஆத்திரம்!”

தங்கவேலன் அந்தப் பங்களாவுக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன, பங்களாத் தோட்டத்தைப பராமரிக்கவும் மற்ற ஏவல்களைச் செய்யவும் அவனை நியமித்திருந்தார்கள். இருபத்திரண்டே வயசான அவன் வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். எந்த வேலைக்கும் அஞ்சாதவன். நாலு கோணல் எழுத்துத் தெரிந்திருந்தால் அவன் இருக்க வேண்டிய இடமே வேறாக இருந்திருக்கும்.

சிறுசுறுப்பு, நேர்மை, கண்டிப்பு உடையவன் தங்க வேலன். அந்த இரண்டு மாதத்தில் அவன் ஐயாவினுடைய அபிமானத்தைப் பெற்றான், எசமானியம்மாளும் எடுத்ததற்கெல்லாம் அவனைத்தான் கூப்பிடுவாள்,. அந்த வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே தங்கினான் அவனுக்குத் தாய் தகப்பன் யாரும் இல்லையாம்.

பாக்கியம் ஒரு வருஷமாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள். நல்லவள்தான். ஏதோ இன்று போதாத காலம். அவள் மனசுக்குள் சனிபகவான் புகுந்தான். அவள் கையை நீளச் செய்தான்.

நவராத்திரி முடிந்துவிட்டது. அந்தப் பங்களாவில் கொலு வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதைக் கலைத்து எல்லாவற்றையும் பெட்டியில் எடுத்து வைத்தார்கள்.

அப்படி எடுத்து வைத்தபோது ஒருவரும் இல்லாத சமயம் பார்த்துப் பாக்கியம் ஒரு பொம்மையை எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த பழம் பையில் போட்டு ஒரு மூலையில் பத்திரப்படுத்தினாள். இதை எப்படியோ தங்க வேலன் தெரி்ந்துகொண்டுவிட்டான். அவளைத் தனியே அழைத்துக் கேட்டான். அவள் பணிந்து போகவில்லை. திருடினவள் வீறாப்புடன் பேசுவதைக் கண்டு அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. கடைசியில் எசமானி யம்மாளுக்கே விஷயம் தெரிந்து விட்டது. ” ஏண்டி பாக்கியம், அவன் சொல்கிறமாதிரி உனக்கு வயசாகியும் புத்தி இல்லையா? திருடுகிறதையும் திருடிவிட்டு இத்தனை பேசுகிறாயே?” என்று அவள் கேட்டாள்.

இந்த ஆங்காரப் பேச்சின் பலனாகப் பாக்கியத்தை வேலையை விட்டுத் தள்ளிவிட்டார்கள். ” கையும் வாயும் படைத்த உனக்கும் நமக்கும் இனிச் சரிப்படாது” என்று எசமானியம்மாள் கம்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

பாக்கியம் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டபோது ” இரு, இரு; உன்னை விட்டேனா பார்!” என்று தங்கவேல னைக் கறுவிக்கொண்டே போனாள்.

***

ஒரு மாசத்துக்கு முன்னால் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வந்ககு தங்கவேலனுக்கு. ” அவளுக்கு இவ்வளவு அழகான மகளா!” என்று எண்ணினான். ‘ஏன் இருக்கக் கூடாது ஏன் அவளைக் கோபித்துக் கொண்டோம்?’ என்ற இரக்கமும் கூடவே தோன்றிற்று. அவள் வேலையை விட்டுப் போகாமல் இருந்தால் இந்தப் பெண்ணை அவன் அடிக்கடிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ” ஏன் துரை, இன்னும் உள்ளே போகவில்லையா?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் தங்கவேலன். அவளேதான். பள்ளிக்கூடத்துக்குள் தான் அழைத்து வந்த குழந்தையை விட்டுவிட்டு அவள் வந்துவிட்டாள். தங்கவேலன் இன்னும் படிக்கட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. அந்தப் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே விடு விடு வென்று நுழைந்தான்.

மற்றொரு நாள் தங்கவேலன் கடைக்கு ஏதோ சாமான் வாங்கிவரப்போனான். நடுவிலே ஓர் ஆள் அவனைச் சந்தித்தான். “தம்பி, நீதான் அந்தக் கீழ்க்கோடிப் பங்களாவில் வேலைக்கு வந்திருக்கிறாயோ?” என்று கேட்டான்.

“ஆம், நீங்கள் யார்?” என்று தங்கவேலன் கேட்டான்.

” நான் ஓர் அச்சாபீஸில் காவல்காரனாக இருக்கிறேன். சும்மாதான் கேட்டேன். இதற்குமுன் இருந்த தோட்டக்காரக் கிழவனை எனக்குப் பழக்கம் உண்டு. ஏன் தம்பி, உனக்குச் சொந்த ஊர் எது?”

“ஆரணி.” “சாதிசனம் எல்லாரையும் விட்டுவிட்டு இந்தப் பட்தணத்துக்குப் பிழைக்க வந்துவிட்டாயா?”

” சாதி சனம் சோறு போடுவார்களா? பட்டணத்திலே தான் உழைப்புக்குப் பலன் கிடைக்கிறது” என்று தங்கவேலன் சொன்னான்.

இப்படியே அவ்விருவரும் பேசி ஒருவரை ஒருவர் அறி முகம் செய்துகொண்டார்கள். அவனுக்கு முனிசாமி என்று பெயர். ஓர் அச்சு நிலையத்தில் காவலாளி. இரண்டு பேரும் ஒரே சாதி. ஒருவிதத்தில் பார்த்தால் முனிசாமிக்கும் தங்க வேலனுக்கும் பாத்தியம்கூட இருக்கும்போல இருந்தது. . தெருவிலே உண்டான இந்தப் பழக்கம் நீடித்தது. முனிசாமி அடிக்கடி தங்கவேலனோடு பழகினா ன். ஒருநாள் அவன் மெல்ல ஒரு கேள்வியைக் கேட்டான். ” தம்பி, உன் வயசிலே நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டேன். நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழக்கூடாதா?” என்று கேட்டான்.

” அதற்குள்ளேயா?” என்று தங்கவேலன் ஆச்சரியம் அடைந்தவனைப் போல எதிர்க்கேள்வி கேட்டான்.

” ஏன் தம்பி, உனக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயசு இருக்கும்போலே இருக்கிறது. இந்த வயசில்தான் கல்யாணம் கட்டிக் கொள்ளவேண்டும். வெட்கப்படாமல் சொல். நான் ஒன்று கேட்கிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். பதினெட்டு வயசு ஆயிற்று. கண்ணுக்கு நன்றாக இருப்பாள். உன்னைக் கண்டது முதல் நீ நல்ல உழைப்பாளி என்றும், கண்டிப்பானவன் என்றும் தெரிந்து உன்னிடம் அபிமானம் ஏற்பட்டு விட்டது. அதனால் சொல்கிறேன். கட்டிக் கொள்கிறாயா? இல்லை, ஏதாவது முறைப்பெண் ஊரில் இருக்கிறதா?”

தங்கவேலனுக்கு அப்படி முறைப்பெண் ஒருத்தியும் இல்லை. ஆனால் அவன் மனசுக்குள் பாக்கியத்தின் மகள் வந்து நின்றாள். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? சண்டை போட்ட வீட்டில் உள்ள பெண்ணைப் பற்றி நினைக்க நமக்கு என்ன உரிமை?’ என்ற நினைவு அடுத்து வந்தது.

முனிசாமி எப்படியாவது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதாகத் தீர்மானம் செய்துவிட்டான். மெல்ல மெல்லத் தங்கவேலனை வழிக்குக் கொண்டுவரலானான். “உனக்கோ அப்பன், அம்மா, உறவு ஒட்டு இல்லை. நீ கல்யாணம் பண்ணிக்கொண்டால் நம் வீட்டிலேயே இருக்கலாம். எனக்கும் மகன் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வருகிறாயா?” என்று கேட்டான்.

“பார்க்கலாம்” என்று தங்கவேலன் சொன்னான்.

இரண்டு நாட்களில் பார்த்தேவிட்டான். பார்த்தது மாத்திரம? பார்த்தபோது அவனுக்கு இருந்த மனநிலையை என்னவென்று சொல்வது! திடுக்கிட்டான் என்று சொல்லலாமா? பிரமித்துப் போனான் என்பதா? வெட்கப்பட்டான் என்பதா? ஐயோ, இப்படி ஏன் செய்தோம் என்று இரங்கினானா? இது என்ன உண்மைதானா என்று சந்தேகப்பட்டானா?- இந்த உணர்ச்சிகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவன் உள்ளத்தில் ஒரு பெரும் புயல் அடித்தது. இந்த உணர்ச்சிகள் மாறி மாறிப் பிரசண்ட மாருதமாக வீசின என்று சொல்லலாம்.

அவன் முன்னே நின்றவள் பொன்னம்மாள்! பாக்கியத்தின் பெண்ணாகிய பொன்னம்மாள்! அவனைக் கொஞ்ச நேரம் பள்ளிக்கூட வாசலிலே நிற்க வைத்தாளே அந்தப் பொன்னம்மாள் தான். ஆனால் வேலையை இழந்தாளே அவளுடைய மகளாகிய பொன்னம்மாள்; திருட்டுக் கையால் வளர்க்கப்பெற்ற பொன்னம்மாள். இவளா இவன் மகள்!

“நீங்கள்…” மேலே பேச முடியாமல் அசட் வழிய விழித்தான் தங்கவேலன்.

“நீ நினைக்கிறது தெரியும், தம்பி. பாக்கியத்தோடு சண்டை போட்டதும் எசமானியம்மாள் அவளை வேலையை விட்டுத் தள்ளினதும் நன்றாகத் தெரியும், தம்பி; அதைப் பற்றித்தானே நீ யோசிக்கிறாய்?”

“இல்லை…”” மறுபடியும் அவன் என்னவோ மாதிரி ஞெஞ்ஞெ முஞ்ஞெ என்றான்.

“அதையெல்லாம் மறந்துவிடு தம்பி. அவள் பண்ணின தப்புத் தப்புதான். அதற்கு இது பிராயச்சித்தம் என்று வைத்துக்கொள்ளேன்” என்று சிரித்தான் முனிசாமி.

***

கல்யாணம் நடந்துவிட்டது. “அவர் முகத்தில் நான் எப்படி விழிக்கிறது? நான் எப்படிப் பேசுகிறது?” என்று கேட்ட பாக்கியத்திற்கு, “நீ அவன் முன்னாலே நின்று பேச வேண்டாமே. மாமியார்க்காரி பேசாமல் மரியாதையோடு இருக்கிறதுதானே நியாயம்?” என்று சொன்னான் முனிசாமி.

பங்களாவிலே ஒரு மூலையில் குடிசை போட்டுக் கொண்டு இல்வாழ்வைத் தொடங்கினான் தங்கவேலன். முனிசாமி எப்படி விரோதத்தை மறந்து தனக்குப் பெண் கொடுக்க முன் வந்தான் என்ற புதிரை அவனால் விடுவிக்கவே முடியவில்லை. அவனையே கேட்டுவிடலாம் என்று கூடச் சில சமயம் தோன்றியது. ஆனால் அவன் கேட்கவில்லை. பொன்னம்மாதான் இருக்கிறாளே. அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பொறுத்திருந்தான்.

குடியும் குடித்தனமுமாக மனைவியோடு வாழத் தொடங்கிய அன்றே அவன் அவளைக் கேட்டு ரகசியத்தைத் தெரிந்து கொண்டான்.

“அது ஒரு பெரிய கதை!” என்று பீடிகை போட்டுக் கொண்டு அவள் ஆரம்பித்தாள். நடந்தது இதுதான்.

வேலையை விட்டு விட்டு ஆத்திரத்தோடு வீட்டுக்குப் போனாள் பாக்கியம். அன்று மாலை முனிசாமி வீட்டுக்கு வந்தான். வந்தவுடன், “அந்தப் பயலுக்குச் சரியானபடி புத்தி புகட்டவேண்டும்” என்று அவனிடம் சொன்னாள். அவன் நடந்ததைக் கேட்டான். ஆனால் கோபம் அடைய வில்லை. “உனக்கு வேலை போய்விட்டதே என்று கோபம் வருகிறதா? நீ பண்ணினது தப்புத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. தப்புச் செய்தது நீயாக இருக்க, அவனைக் கோபிக்கிறதில் பிரயோசனம் என்ன?” என்று கேட்டான்.

“நீங்களும் அந்தப் பயலோடு சேர்ந்து கொண்டீர்களா?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்டாள் பாக்கியம்.

“இந்தா, வீண் ஆத்திரம் வேண்டாம். உன் சமாசாரம் இருக்கட்டும். நான் சொல்கிற சந்தோஷ சமாசாரத்தைக் கேள்.”

“என்ன புதையல் கிடைத்திருக்கிறது?” என்று கோபத்தோடு பேசினாள் அவள்.

“நிதானமாகக் கேட்டால் சொல்கிறேன். எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம் உயர்த்தி இருக்கிறார்கள்.”

“ஹூம்!”

“எங்கள் ஆபிஸில் ஒரு பைண்டர் இருக்கிறான். அவன் புத்தகத்தைத் திருடிக் கொண்டே வந்தான். அதை நான் கண்டுபிடித்து எசமானிடம் சொன்னேன். அவனை வேலையை விட்டே நிறுத்திவிட்டார்கள்; எனக்குச் சம்பளம் கூட்டிப்போட்டார்கள்.”

” அதுதான் அப்படிப் பேசுகிறீர்களோ?” என்று அவள் கோபம் குறையாமல் கேட்டாள். அவள் அடிபட்ட புலிபோலச் சீறினாள். தன் கணவனுடைய நேர்மையை நினைத்துப் பார்க்கவில்லை. அவனுக்குச் சம்பள உயர்வு கிடைத்ததை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தனக்குத் திருட்டுப் பட்டம் கட்டி ஓட்டியவனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற உணர்வே மேலோங்கி நின்றது.

முனிசாமிக்கு இப்போது கோபம் வந்தது. ” உனக்கு இப்போது ஒன்றும் விளங்காது. திருட்டுத் தொழில் கேவலமானது. நான் ஆபீஸிலே ஒரு திருடனைக் கண்டுபிடித்தேன். வீட்டிலோ ஒரு திருடியை வைத்துக்கொண்டிருக்கிறேன். அங்கே எனக்குச் சம்பள உயர்வு கிடைக்கிறது. இங்கே வசவு கிடைக்கிறது! நீ புத்தியுடன் தான் பேசுகிறாயா?”

பேச்சு வளர்ந்தது. முனிசாமி வளர்த்தவில்லை. வெளியில் எழுந்து போய்விட்டான். ஒரு வாரம் அவர்கள் இருவரும் பேசவில்லை. கணவன் மனைவியருள் இது இயல்பு தானே?

பிறகு பாக்கியம் தன் பிழையை உணர்ந்தாள். கணவனிடம் நயமாகப் பேசினாள்; தான் செய்ததற்காக அழுதாள். ” ஆத்திரத்திலே ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு உங்கள நேரமையினால் அஞ்சு ரூபாய் உயர்ந்தது. எனக்கு என் திருட்டுத்தனத்தால் வேலையே போய்விட்டது. நான் பொல்லாதவள். உங்கள் அருமையைத் தெரிந்து கொள்ளாத பேய்” என்று சொல்லி வருந்தினாள். அவள் வேறு வீட்டைப் பிடித்துக்கொண்டு வேலை செய்யத் தொடங்கினாள். அந்தவீட்டுக் குழந்தையைத்தான் பொன்னம்மா அன்று பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தாள்.

இந்தக் கதையைக் கேட்டான் தங்கவேலன். “உன்னுடைய அம்மா மனசு மாறினதைத்தானே சொன்னாய்? உன் அப்பா என்மேல் வலை வீசினது ஏன்?” என்று கேட்டான்.

“அதுவா? என் அப்பாவே சொன்னார். அதையும் சொல்கிறேன்” என்று அந்த வரலாற்றையும் சொன்னாள் பொன்னம்மா. * * *

திருட்டைத் தான் கண்டு பிடித்தமையால் தனக்குச் சம்பள உயர்வு கிடைத்த நினைவோடு, தங்கவேலன் செய்கையையும் நினைத்தபோது முனிசாமிக்கு அந்த இளைஞனிடம் மதிப்பு உண்டாயிற்று. ஒரு நாள் அவன் அந்தப் பங்களாவின் வாசலில் நின்று, தங்கவேலனைப் பார்த்தான். அப்போது தங்கவேலன் தோட்டத்தில் ஒரு பாத்தியை வெட்டிக்கொண்டிருந்தான். உடம்பில் வேர்வை வழிய அவன் உழைப்பில் ஈடுபட்டிருந்தபோது முனிசாமி கவனித்தான். அந்தக் கோலத்தில் அவனுடைய சுறுசுறுப்பும் உடல்வன்மையும் உழைப்பும் முனிசாமிக்குப் புலப்பட்டன. அவனிடம் பின்னும் மதிப்பு உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் மெல்ல மெல்ல அவனைச் சிநேகிதம் செய்துகொண்டான். அவன் மனைவியிடமும் தங்கவேலனைப் பற்றி உயர்வாகப் பேசித் தன் எண்ணத்திற்குச் சம்மதிக்கச் செய்தான்.

“அதெல்லாம் சர்; அன்றைக்குப் பள்ளிக்கூடத்து வாசலில், அது ஏனோ என்று சொல்லிவிட்டு ஓடினாயே! அப்போது என்னைப் பார்த்தாயோ?” என்று பழங்கதையைச் சொன்ன பொன்னம்மாவைக் கேட்டான் தங்க வேலன்.

“நீங்கள்தாம் வெட்கம் கெட்டுப்போய் என்னை விழித்து விழித்துப் பார்த்தீர்களே! வயசுப் பெண்ணை அப்படிப் பார்க்கலாமா? அதற்குப் பயந்து கொண்டுதான் நான் ஓடினேன்.”

“என்மேல் உனக்கு அப்போது கோபம இல்லையா?” “நான் எப்போதும் அப்பாவினுடைய கட்சி!” என்று தன் வழியைச் சுருட்டினாள் அந்த மடமங்கை.

எசமானி அம்மாள் அவனைத் தனியாகச் சந்தித்த பொது வேடிக்கையாகக் கேட்டாள். “எண்டா, தங்கவேல், திருட்டுக்கை என்று சொல்லி வேலையை விட்டுத் தள்ளின வள் மகளைக் கட்டிக் கொண்டாயே! உனக்கு வெட்கமாக இல்லை? திருடி மகள் திருடியாக இருக்கமாட்டாளா?” எசமானியம்மாளுக்குப் பிரியமான வேலைக்காரன் அவன். அந்த அபிமானத்தினாலேதான் அவள் அப்படி வேடிக்கை யாகக் கேட்டாள்.

அதற்குத் தங்கவேலன். “ஆமாம் அம்மா, இவளும் பெரிய திருடிதான்!” என்றான்.

“என்ன! எதைத் திருடினாள்?”

“என் மனசை!” என்று சொல்லித் தங்கவேலன் சிரித்தான்.

– குமரியின் மூக்குத்தி (சிறு கதைகள்), அமுதம், முதற்பதிப்பு-டிசம்பர், 1957, நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *