திடுக்கிடாத திருப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 11,019 
 

ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான். சுருக்கமா சொன்னா, ‘இனிமே இவ உனக்குதாம்பா. கூடிய சீக்கிரமே இவளை மிஸஸ் சஞ்சுளா ரமேஷ் ன்னு மாத்த நாங்க உறுதியளிக்கிறோம்’னு சொல்லி இவங்க வீட்டு பெரிசுங்களும் அவங்க வீட்டு பெரிசுங்களும் நிச்சயம் பண்ண, ரமேஷ் வாஸ் இன் ட்ரீம்ஸ் யா. ‘மிஸஸ் சஞ்சுளா ரமேஷ்’! நினைத்துப் பார்க்கவே ’ஹனி’த்தது. நிச்சயம் செஞ்சு வைச்ச அப்பாவுக்கு தேங்க்ஸ். மனசில் நூறு முறை சொல்லிக்கொண்டிருந்தான்.

அப்பா, ரொம்ப பெரிய ஆள். ஆளும்கட்சியின் சீனியர் அமைச்சர்களில் ஒருவர். இருபது வருஷமா தமிழகத்தில் எதாவது ஒரு அமைச்சர் பதவியில் இருக்கிறார். நடுவில் இரண்டு தடவை கட்சி மாறியும் இருக்கிறார். தன் மகன் ஆசைப்பட்டான் என்பதற்காக தன் தகுதியில் இருந்து இரண்டு ஃபுளோர் கீழிறங்கி போய், வட்டச்செயலாளர் மூர்த்தியிடம் பெண் கேட்டிருக்கிறார்.

மூர்த்திக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த நிச்சயதார்த்தை நடத்தி முடிப்பதற்குள் அவர் பயந்த பயம் அவருக்குத்தான் தெரியும். பின்னே! அமைச்சருக்கு சம்பந்தி ஆவதென்றால் சும்மாவா? ஆறாவதுல அஞ்சு வருஷம் இருந்தவனை திடீர்ன்னு மல்டிபுள் புரமொஷன் பண்ணி டாக்டர் பட்டம் கொடுத்து ‘நீ எல்லாத்தையும் படிச்சுட்டே’ன்னு சொன்னா அவனுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா? தெரியலைன்னா மூர்த்தியோட முகத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க. அவருக்கு மேல இருக்கிற மாவட்ட செயலாளர், மாமாவட்ட செயலாளருக்கெல்லாம் இவரு மேல ரொம்ப பொறாமை.’கட்சிக்கு நேத்து வந்த பய. இன்னைக்கு அமைச்சருக்கே சம்பந்தியாவப் போறானே’ன்னு அவனுங்க பேசினது இவர் காதுக்கும் வந்தது. கோவக்கார பசங்க!! எதாவது பண்ணி நிச்சயதார்த்தத்தை நிறுத்திடப்போறாங்கன்னு ரொம்பவே பயந்துக்கிட்டிருந்தார். அப்புறம் தன் பொண்ணு சஞ்சுளா வேற!

சஞ்சுளா, ரொம்ப அழகான பொண்ணு. எனக்கு எதுக்கு இப்போ கல்யாணம்னு தன் அப்பா மூர்த்தியிடம் ரொம்பவே அடம் பிடிச்சு பார்த்தா. ஆனா மூர்த்தி விடலை. இதனால குடும்பத்துக்கு எவ்வளவு லாபம், தன் அரசியல் வாழ்வுக்கு எவ்வளவு லாபம்னு சொல்லிப் பார்த்தார். பிறகு ஒரு மாதிரி மிரட்டி,கெஞ்சி பணியவைத்துவிட்டார். பொண்ணும் பையனும் கலந்து பேச ஏற்பாடு செய்தார். ’தன்னை பிடிச்சிருக்கான்னு’ ரமேஷ் கேட்ட கேள்விக்கு ‘ஆமாம்ன்னு’ ஏனோதானோன்னு பதில் சொல்லி வைத்தாள். ஒரே நிமிஷம் தான்.உடனே நிச்சயதார்த்தம். இப்போ அதுவும் முடிஞ்சி மண்டபத்தினுள் இருக்கிறாள்.

மண்டபம் ரொம்ப பெரிசு. மதியம் மணி மூணரை. கிளம்பறவங்களுக்கு ரமேஷ் போர்டிகோவிலே நின்று கொண்டு போய்ட்டு வாங்கன்னு சொல்லிக்கொண்டிருந்தான். உள்ளேயும் வெளியேயும் கும்பல் நடமாட்டம் இருந்துக்கிட்டெ இருந்தது. யார் வர்றாங்க யார் போறாங்கன்னு இவனுக்கு தெரியவில்லை. அப்பாவுக்கு தெரிஞ்சவங்க அவ்வளவு பேரு. எல்லாரும் சொல்லிவைச்சாப்போல் ஆளாளுக்கு ஒரு குட்டி கும்பலை கூட்டி வந்திருந்தாங்க. பிஏக்கள், எடுபிடிகள், அடியாட்கள், அடிவாங்குற ஆட்கள், சின்ன வீடு, பெரிய அபார்ட்மெண்ட்ன்னு ஒரே கூட்டம். கலைப்பா இருந்தது. ஆனா கலைப்பு தெரியலை. காரணம் உள்ளே இருந்த சஞ்சுளா. அவள் ஒரு இனிமை. இனிமையைத் தவிர வேறேதுமில்லை யுவர் ஹானர். ’காட், இவளை எப்பவும் நான் மகிழ்ச்சியா கலகலன்னு வைச்சிக்கனும். ஒரு நாள் கூட பிரியாம இவளை என் அரவணைப்பில் வைச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷம்..நூறு வருஷம் ஜாஸ்தின்னா..ஒரு தொண்ணூத்தொன்பதே வருஷம்..ஜாலியா வாழனும்’ன்னு கடவுள் கிட்ட மானசீகமா வேண்டினான்.

கடவுள் ரொம்ப பெரியவர். அவருக்கு பிகினிங்கும் இல்லை, என்டிங்கும் இல்லை. அந்த அளவுக்கு பெரியவர். அவர் விளையாடிப் பார்க்கனும்னு நினைச்சா யாராலதான் தடுக்க முடியும்? சஞ்சுளா இருந்த ரூமில் அவர் வேறு மாதிரி முடிச்சியை போட்டார். சஞ்சுளாவும் தன் புடவைகளையெல்லாம் கோர்த்து முடிச்சு போட்டு, ஜன்னலை திறந்து கீழே இறங்கினாள். கீழே அவள் காதலன் கார்த்திக் மற்றும் அவன் நண்பர்கள் சிலரும் ஒரு பொலிரோவில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

பொலிரோ ரொம்ப வேகமாக பறந்தது. உள்ளே கார்த்திக்கின் கையை பிடித்துக் கொண்டாள். ‘நீ எங்கெ வராம இருந்திடுவியோன்னு பயந்துகிட்டே இருந்தேன் தெரியுமா!’. கார்த்திக்கும் அவள் கையை பற்றினான். கூட இருந்த நண்பர்களில் ஒருவன் ‘சஞ்சுளா, கார்த்திக் எவ்வளவு டென்ஷனில் இருந்தான்னு எங்களுக்குத் தான் தெரியும். பெரிய இடத்து விஷயம்னு தெரிஞ்சதும், ரொம்ப நம்பகமான இடம்னு நினைச்ச இடங்கள்ல இருந்து கூட ஹெல்ப் கிடைக்கலை. ஆனா உங்க அப்பா கிட்ட இருக்கிற வாரியத்தலைவர் சத்யா தான் எங்களை பத்தி எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு ஹெல்ப் பண்றேன்னு சொன்னார். நாங்க முதல்ல நம்பலை. ‘அட நானும் காதல் கல்யாணம் பண்ணவந்தாம்பா. காதலுடைய அருமை எனக்கு தெரிஞ்சிதனால தான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு’ சொன்னப்ப எங்களுக்கும் சரின்னு பட்டுச்சு. அவர் தான் இந்த வண்டியையும் டிரைவரையும் அனுப்பிவைச்சார்.

டிரைவர் ரொம்ப வேகமாக வண்டியை ஓட்டினான். ‘சார், நீங்க எந்த பக்கம் போக சொன்னாலும் எனக்கு சரி சார்’ என்று கார்த்திக்கை பார்த்து பவ்யமாக சொன்னான். கார்த்திக்கும் வழியை சொன்னான். டிரைவர் அதைக் கேட்டுக்கொண்டான். டிரைவர் மட்டுமில்லை. அவன் பாக்கெட்டில் ‘ஆன்’ செய்ய பட்ட செல்ஃபோனின் அடுத்த முனையிலிருந்த வாரியத்தலைவர் சத்யாவும் கேட்டுக்கொண்டார். அதை அப்படியே அடுத்த ஃபோனில் மாவட்ட தலைவரிடம் ரிலே செய்தார். ‘அய்யா வட்ட செயலாளர் பதவிக்கு என்னை மறந்துடாதீங்கய்யா’ன்னும் மறக்காமல் கேட்டுக்கொண்டார்.

மாவட்டத்தலைவர் ரொம்ப பவ்யமாக அமைச்சரிடம் வந்தார். அமைச்சர் முகத்தில் ஃபிரெஞ்சு ஃபிரைஸ் வெடித்துக் கொண்டிருந்தது. எதிரே சஞ்சுளாவின் அப்பா மூர்த்தி, கதறிக்கொண்டிருந்தார். ‘அய்யா என்னை மன்னிச்சிடுங்கய்யா. என் பொண்ணை எப்படியாவது கண்டுபிடுச்சி கூட்டிட்டு வர ஆள் அனுப்பியிருக்கிறேனய்யா. வந்ததும் அவளுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாளும் பரவாயில்லைய்யா. நம்ப ரமேஷ் தம்பி அவளை எப்படி வேணும்னா போட்டு அடிக்கட்டும். அதுக்கப்புறம் அந்த கழுதையை நானே என் கையால வெட்டிப் பொட்டுடறேன்யா’ன்னு பினாத்திக் கொண்டிருந்தார். மண்டபமே அல்லாடிக்கொண்டிருந்தது. பின்னே! காலையில நிச்சயம் செஞ்சிக்கின பொண்ணு மதியம் ஒடிப்போச்சுன்னா, சும்மாவா? ரமேஷும் நெஞ்சு பிளந்து போய் ஒரு ஓரத்தில் சாய்ந்திருந்தான். அப்போது மாவட்டத்தலைவர் மெல்லிய குரலில் அமைச்சரிடம் சொன்னார்,’அய்யா அவங்களை பிடிச்சாச்சு. என் ஆளுங்க அவங்களை கூட்டிகிட்டு இப்போ வந்திடுவாங்க. டிரைவர் தப்பிச்சு ஓடிட்டான். இந்தப் பொண்ணோட காதலன், அவன் பேரு ஏதோ கார்த்தியாம்..அவனும் இவளை விட்டுவிட்டு தப்பிச்சு ஓடிட்டான். அவனைப்போய் நம்பி இவ ஓடினா பாருங்க! காதல் அந்தளவுக்கு கண்ணை மறைச்சிடுச்சு போல. வண்டியும் ஏதோ திருடின வண்டியாம். அவங்களை இப்போ கூட்டியாந்திடுவாங்க அய்யா’ன்னு பவ்யம் பண்ணினார்.

‘அவங்க’ ரொம்ப பயந்து நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தார்கள். சஞ்சுளாவைத்தவிர மற்ற அனைவரும் வரும் வழியிலே ‘செமத்தியாக’ கவனிக்கப் பட்டிருந்தனர். எதிரே அமைச்சர், மற்றும் பலர். வீட்டுப் பெண்கள் அழுத முகத்துடன் இருந்தார்கள். மூர்த்தி தன் மகளைப் பார்த்ததும் வெறி கொண்டு பாய்ந்தார். ‘என் குடியை கெடுக்க பொறந்தவளே’ன்னு மாறி மாறி அவளை அறைந்தார். ‘அப்பா என்னை அடிக்காதீங்கப்பா. ரொம்ப வலிக்குது’ – மகள் கெஞ்சினாள். அப்பாவின் அறை கன்னத்தில் வலியை கொடுக்க, தன்னை விட்டுவிட்டு கார்த்திக் ஓடியது உள்ளத்தில் வலியை கொடுக்க அவள் ரொம்பவே துவண்டு போயிருந்தாள். அவள் கெஞ்சகெஞ்ச அப்பாவின் வெறி இன்னும் ஏறியது. இம்முறை அவள் உடம்பிலும் அடி விழுந்தது. ‘அப்பா, வலிக்குதுப்பா. நான் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு உங்களை அப்பவே கெஞ்சினேனே?” என்றழுதாள். ‘உனக்கு என்னடி தெரியும். நீ யாரைக் கல்யாணம் பண்ணனும்னு எனக்குத் தெரியும். உன்னை வெட்டிப் போட்டாத்தான் என் மனசு ஆறும்’னு அவளை மேலும் அடிக்க பாய்ந்தார். பாய்ந்தவருக்கு ‘பளாரென்று’ ஒரு அறை விழுந்தது. அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போனார்கள். அறைந்தவன்..ரமேஷ்.

ரமேஷ் ரொம்ப ஆவேசமாக நின்றுக்கொண்டிருந்தான். ’இப்போ எதுக்கு அவளைப் போட்டு அடிக்கிறீங்க? தப்பு பண்ணியதெல்லாம் நாம்ப. அவ வேணாம் வேணாம்னு சொல்லியும் நீங்க இந்த நிச்சயதார்த்தத்திற்கு அரேஞ்ச் பண்ணீங்க பாரு. அது மன்னிக்க முடியாத தப்பு. அப்புறம், நானும் அவளும் தனியா பேசும் போது அவளுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டேன். அதுக்கு அவளும் பிடிச்சிருக்குன்னு சொன்னாளே தவிர, அவ முகத்துல அதற்கான மகிழ்ச்சி இல்லை. நானும் அவ மேல இருந்த ஆசையில அதைப் பத்தி யோசிக்கவே இல்லை. இது என்னுடைய தப்பு. அவ பொய் சொல்லியிருக்க வேண்டாம்தான். ஆனா அவளை நீங்க எந்த அளவுக்கு மிரட்டி வைச்சிருக்கீங்களோ! யாருக்குத் தெரியும். நியாயமா பார்த்தா நீங்க தான் தண்டனையை அனுபவிக்கனும். உங்களை விட வயசுல ரொம்ப சின்னவன் நான். என் கையால நீங்க வாங்கின அறை தான் உங்களுக்கான தண்டனை. ஆனா இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. இனிமேல் யாரும் சஞ்சுளா மேல கையை வைக்க கூடாது. இதுக்குமேல அவ அடிவாங்கிறதை பார்க்கிற சக்தியும் எனக்கு கிடையாது. அவளுக்குக்கு அந்த கார்த்தியை பிடிக்கும்னா அவனையே கல்யாணம் பண்ணிவைங்க’ன்னு உடைந்து போனான். அப்போது கட்சியின் லோக்கல் தீத்துளி பேச்சாளர் தலைமையில் ஒரு கும்பல் மண்டபத்தில் நுழைந்தது.

கும்பல் ரொம்ப கொவமாக கோஷம் போட்டுக்கொண்டே நுழைந்தது. ‘அண்ணே! எங்கள் ஆண் சிங்கம்ணே நீங்க. உங்களைப் போய் ஒருப்பெண் வேணாம்னு சொன்னாளா? அவ பெண்ணே அல்ல. பேய்! அவள் ஒழிக!’ என்று தங்கள் விசுவாசத்தை காட்டினார்கள். ’போதும் நிறுத்துங்க’ – ரமேஷ் கர்ஜித்தான். ’நான் ஆண் சிங்கம்னா, உடனே ஊருல இருக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் என்னைப் பிடிச்சிடனுமா? அப்படி பிடிச்சிருந்தா மத்த ஆம்பிளைங்களுக்கு எப்படி கல்யாணம் நடக்குக்ம்? லூஸுத்தனமா கோஷம் போடாதீங்க. எனக்கு சஞ்சுளாவைப் பிடிக்கும். அவளுக்கு என்னை விட அந்த கார்த்தியை பிடிக்கும். அவ்வளவுதான். அதனால நான் ஒண்ணும் மட்டமாக போய்விடவில்லை. அதே சமயம் நாளைக்கு யாராவது பொண்ணு என் வாழ்க்கையில குறுக்கிடலாம். அவளுக்கு மத்த எல்லா ஆண்களையும் விட என்னை பிடிக்கலாம். அதனால நான் ஒண்ணும் மத்தவங்களை விட உசந்தவனில்லை’ என்று முடித்தான். சஞ்சுளா இப்போதுதான் அவனை சரியாக ஏறெடுத்துப் பார்த்தாள்.

– நவம்பர் 19 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *