தாலி பாக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 8,165 
 
 

காலை ரயிலில்வரும் என் மாமியாரை அழைத்துவர அஸ்வின் காரை எடுத்துக்கொண்டு ஐந்தரை மணிக்கே புறப்பட்டார். நல்லவேளை! திடீரென்று திட்டமிட்டபடி, திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டு, நேற்றே திரும்பிவிட்டோம். நான் குளித்து விட்டு காலைச்சிற்றுண்டி செய்ய ஆரம்பித்தேன். நேத்ராவும் பள்ளிக்குச்செல்ல கிளம்பிக்கொண்டிருந்தாள். மாலையில் அலுவலகம் சென்று திரும்பியபின்தான் மாமியாரிடம் சாவகாச மாகப்பேசவேண்டும். சட்னியை மிக்சியில் அரைத்துவிட்டு நிமிரும்போது வந்துவிட்டார்கள். நேத்ரா ஓடிச்சென்று பாட்டியைக்கட்டிக்கொண்டாள்.

வரவேற்ற என்னைக்கவனித்த அத்தை அதிர்ச்சியில் உறைந்து, கோபம் கொப்பளிக்க, “என்ன லாவண்யா இது? என்ன ஆயிற்று உனக்கு? நம் குடும்பத்தில் இதுபோன்ற பழக்கம் கிடையாதே! ஏனிப்படி?” என்றார்கள். நான்,”அத்தை!சிறு வயது வேண்டுதல்:நிறைவேற்றமுடியாமல் போய்விட்டது. அதனால்தான் இப்போது …” என்று இழுத்தேன். அத்தையோ, “தப்பும்மா! வேண்டுதல் அப்போதே முடித்திருக்கவேண்டும். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கக்கூடாதா? நான் சொல்லியிருப்பேனே! ஒரு சுமங்கலிப்பெண் பூமுடி காணிக்கை செலுத்தினால் போதாதா? சுவாமி கோபித்துக்கொள்வாரா,என்ன? இப்படியா முழுமொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்? நம் குலவழக்கப்படி, வேண்டுதலாகவே இருந்தால்கூட இது செய்யத்தகாத செயல். என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” கண்களை துடைத்துக்கொண்டு அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தார்கள். நான் கொண்டுவந்த காபியை மெதுவாக நீட்டியபடி, “அத்தை! நான் அலுவலகம் கிளம்ப நேரமாகிவிட்டது. குளித்துவிட்டு வாருங்கள். சிற்றுண்டி மேசை மேல் இருக்கிறது. மூவரும் சாப்பிடுங்கள். அவர் நேத்ராவை பள்ளியில் விட்டுச்செல்வார். மதிய உணவு ஹாட் பாக்சில் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். மாலையில் பேசிக்கொள்ளலாம்” என்றபடி, தலையில் மறக்காமல் ஸ்கார்ப்பைக்கட்டிக் கொண்டு பின்னர் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரில் கிளம்பினேன்.

என் மாமியார் மிகவும் நல்லவர்தான். ஆனால் பழமைவாதி. பாரம்பரியப் பழக்கவழக்கங்களை கடுமையாகப்பின்பற்றுபவர். இதற்கே இப்படி கோபித்துக் கொள்கிறார்கள் என்றால் முழு சம்பவத்தையும் கேட்டால், எப்படி எடுத்துக் கொள்வார்களோ? பின்னர் அலுவலக வேலையில் மூழ்கிப்போனேன். தேநீர் நேரத்தில் அவருக்கு போன் செய்து, வரும்போது கொடுத்திருந்த புகார் பற்றி காவல் நிலையத்தில் விசாரித்து வரச்சொன்னேன். அவரும் அம்மா அபசகுனமாக எண்ணி கவலை கொள்வதைத்தடுக்க வேண்டுமென்றால் காவல்நிலையத்திலிருந்து நல்லசெய்தியாக வரவேண்டுமேயென்று கவலைப்பட்டார்.

சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப்புறப்பட்டு வந்தேன். அத்தை நேத்ராவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். தாத்தா ஏன் வரவில்லை என்று அவள் கேட்டதற்கு, ஊரில் அவர் பொறுப்பிலுள்ள கோயிலைப்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், சாமியேகதியென்று பொழுதைக்கழிப்பதாகவும் சொன்னார்கள். அஸ்வினும் வந்துவிட்டார். சமையலறையிலிருந்த என்னிடம், புகார் தொடர்பாக எந்த முன்னேற்றமு மில்லை என்றார்.. “அத்தையிடம் இதைப்பற்றி சொல்லாமல் இருந்தால் என்ன?” என்று கேட்டேன். அவரோ, “நானும் யோசித்துப்பார்த்தேன். அம்மா எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள்! அதற்கு முன் சொல்லிவிடுவதே நல்லது” என்றார். சென்டிமென்டலாக மிகவும் விபரீதமாக யோசித்து, என் அலட்சியத்தாலும், பொறுப்பற்ற குணத்தினாலும் இப்படி நடந்ததாக, என்னை ஒரு பிடிபிடிக்க போகிறார்கள் என்ற அச்சமே ஏற்பட்டது. இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்து , அத்தையின் எதிரே உட்கார்ந்தோம். அஸ்வின் தான் ஆரம்பித்தார். “அம்மா! லாவண்யாமேல் எந்த தப்பும் இல்லை. சென்றவாரம் ஒரு விபரீதம் நடந்தது. லாவண்யா கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் ஏறுமுன்பு, பைக்கில் ஹெல்மெட்டுடன் வந்த இருவர், இவள் கழுத்திலிருந்த தாலிசங்கிலியைக் கழட்டி கொண்டு போய்விட்டார்கள்.. இரண்டு தடியன்களுடன் இவளால் எதிர்த்து நிற்க முடியுமா என்ன? ஒருவன் கையில் கத்தி வேறு. பைக் நம்பரையும் பார்க்கமுடியவில்லை. போலீசில் புகார் கொடுத்துள்ளோம். சாமிகுற்றம் இருந்ததால்தான் இப்படியென்று அவள் அம்மா சொல்ல, முடிகாணிக்கை பாக்கியிருந்ததையும் நிறைவேற்றி வந்தோம். அவர்கள் குடும்ப ஜோசியரிடம் கலந்தாலோசித்ததில் இன்னும் இரண்டு பரிகாரங்கள் சொல்லியிருக்கிறாராம்.” என்று விளக்கினார். அத்தை அமைதியாக இருந்தார்கள். புயலுக்குமுன் அமைதியா? தெரியவில்லை.

அத்தை இறுக்கமான முகத்ததுடன், “வெறும் கழுத்தோடேயா இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.

“இல்லை அத்தை, வேறு ஒரு சங்கிலி போட்டிருக்கிறேன்”

“நான் அதைக்கேட்கவில்லை. தாலிக்கு பதிலாக என்ன போட்டுக்கொண்டிருக்கிறாய்?”

” ஒன்றும் இல்லை அத்தை!”

“போ. பூசையறைக்குச்சென்று விரளிமஞ்சளும், மஞ்சள்கயிறும் எடுத்து வா!”

ஓடிப்போய் எடுத்துவந்தேன். மஞ்சளைக்கயிற்றின் நடுவே வைத்துக் கட்டினார்கள். எங்களை பூஜையறைக்கு அழைத்துச்சென்றார்கள்:விளக்கேற்றச் சொன்னார்கள். அவரிடம் கொடுத்து என் கழுத்தில் கட்டச்சொன்னார்கள். கட்டியபின்னர், சற்று சமாதானமடைந்ததுபோல் தோன்றியது. பசியில்லை யென்பதால், இரவு அவர்களுக்காக எதுவும் செய்யவேண்டாமென்றார்கள். நான்கு வார்த்தை திட்டினால்கூடப்போதும். ஆனால் ஆழ்ந்த அமைதியுடனி ருந்தது என்னவோபோலிருந்தது.

லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அவர் வேலையைக்கவனிக்க சென்றுவிட்டார். நான் நேத்ராவுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கச்செய்தேன். அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்க்கும்போது, அத்தை ஹால் சோபாவில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்தார்கள். தூங்குவது போலும் தெரியவில்லை. என்னால் அவர்களுக்கு இவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டுவிட்டதே:மன்னிப்பு கேட்டுக்கொள்வோம் என்று கருதி, அவர்களை எழுப்பி கொண்டு வந்திருந்த பாலைப்பருகச்செய்தேன். “அத்தை! என்னை மன்னித்துவிடுங்கள். என் கவனக்குறைவால் இப்படி நிகழ்ந்து விட்டது. அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம். என்னை நன்கு திட்டுங்கள்: கேட்டுக்கொள்கிறேன். தப்பு என்பேரிலேதானே” சோபாவின் கீழமர்ந்து அவர்கள் கைகளைப்பிடித்து, அழாக்குறையாக கேட்டுக்கொண்டேன். நிமிர்ந்து உட்கார்ந்த அத்தை, முடியில்லாத என் தலையை வருடியபடியே, “அடி,அசடே! இந்த நிகழ்வுக்காக நான் நிதானம் இழந்துவிடவில்லை. சோகமயமான சில கடந்தகால அனுபவங்களில் மூழ்கிவிட்டேன். உனக்கு தூங்கும் நேரம் என்றால், நீ போய் படு. எங்கே அஸ்வின்? என்று கேட்டார். அஸ்வினும் லேப்டாப்பை வைத்துவிட்டு, அத்தையின் அருகில் வந்து அமர்ந்தார். நான், “இன்னும் தூக்கம் வரவில்லை அத்தை! பழைய நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்றால் சொல்லுங்களேன். அவை அஸ்வினுக்குத் தெரியுமா?” நீண்ட பெருமூச்சிற்குப்பிறகு, “இல்லை லாவண்யா! அவனுக்குக் கூட தெரியாது. முட்கள் நிறைந்த வாழ்க்கைப்பாதையில் நிகழ்ந்த ஒன்றிரண்டைப்பற்றிமட்டும் சொல்கிறேன்.

அப்போது அஸ்வின் அப்பா ஒரு சிறிய நகைக்கடை வைத்திருந்தார். நாணயமான வணிகம்: ராசியான கடை. அவர் கைகளிருந்து நகைகளைப் பெற்றுக்கொண்டால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை. வாடிக்கை யாளர்கள் அதிகம் என்றாலும், நேர்மையான, நியாயமான வருமானம் மட்டும்: அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அஸ்வினுக்கு அப்போது ஒரு வயது. இனிமையான வாழ்க்கை. ஆனால் விதி யாரை விட்டது? ஒருநாள் திருட்டுநகையை இங்கேதான் விற்றேன் என்று திருடன் ஒருவன் சொல்ல, உடன்வந்த காவல்துறை அதிகாரி, எல்லாவற்றையும் எடுக்கச் சொல்லி மிரட்டி, இல்லையென்றால் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கவனிக்கவேண்டியவிதத்தில் கவனித்து உண்மையை வரவழைப்போம் என்று சொல்ல, அவ்வளவு படிப்பறிவில்லாத அஸ்வின் அப்பா என்ன செய்வார்? அதிகாரிகளுக்குப்பணம் தேவைப்படும்போதெல்லாம் இப்படி செய்வது வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் உள்ளதுபோல் சங்கங்கள் அப்போது இல்லை. போட்டியாளர்களும் பொறாமை பிடித்தவர்களுமே சுற்றியிருந்தனர். உதவ நினைத்தவர்களும் போலீஸ் என்றதும் பயந்தனர். கொஞ்சம் கால அவகாசம் வாங்கிக் கொண்டு, அவர்கள் கேட்டவற்றை அல்லது அதற்கு ஈடானவற்றை ஏற்பாடு செய்துகொடுத்தார். விளைவு கடை மூடப்பட்டது.

கடன் அதிகமாகிவிட்டதாலும், உள்ளூரில் பார்த்த வேலையில் சம்பளம் பற்றாக்குறையாக இருந்ததாலும், இங்கு சென்னையில் ஒரு நிதிநிறுவனத்தில், நல்ல சம்பளம் என்று சேர்ந்தார். பரபரப்பான சென்னை வாழ்க்கை அவ்வளவு பிடிக்காவிட்டாலும், அஸ்வினை நல்ல பள்ளியில் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்தோம். வாழ்க்கை சக்கரம் தடங்கலில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. இவர் தான் தொடர்பு வைத்திருப்போர்களை அறிமுகம் செய்ய வியாபாரம் நன்குசெழித்தது. சில ஆண்டுகள் சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் எங்களது ஊழ்வினை போலும்! முதலாளியின் தகாத செய்கைகளால், நாணயம் கெட்டு, இவரை மாட்டிவிட்டு அவர் ஓடிவிட்டார். கோர்ட்கேஸில் இவரும் மாட்டிக்கொண்டு, வெளியில் வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது முழு ஓட்டாண்டியானதும்தான், அஸ்வின் கல்லூரியில் சேர்ந்தான். பொறுப்பாகப் படித்தான். மற்ற மாணவர்கள்போல் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க நாங்கள் உறுதுணையாக இல்லை”.

“அதெல்லாம் நடந்துமுடிந்த கதை. இப்போது எதற்கு அம்மா?” என்று அஸ்வின் முற்றுப்புள்ளி வைக்க முயற்சிசெய்ய, அத்தை தொடர்ந்தார்கள்.

“இ ந்நிகழ்ச்சிகள் ஏன் நினைவுக்கு வந்தது என்றால், இவற்றில் பறிபோனது முக்கியமாக என் தாலி! கட்டிய புருசனுக்கு தாங்கொணாத்துயரம் என்றால், அதை எப்படியாவது தீர்த்துவைக்க, தாலியாகவே இருந்தாலும், கொடுத்துவிடத்தானே தோன்றும். தாலியின் மகத்துவமென்பது, அது பிரபலமான கடையில் வாங்கப்பட்டது என்பதிலோ, அதன் வடிவத்திலோ, உறுதியிலோ, சுத்தமான தங்கத்தினாலானது என்பதிலோ, அருமையான வேலைப்பாடு என்பதிலோ, இல்லை: அது உணர்வு பூர்வமானது. அதைக் கழட்டிக்கொடுக்கும்போது ஏற்படும் மனதின் வலியை விவரிக்க முடியாது. வலியைத்தாங்கும் பொறுமை பெண்களுக்கே உரித்தானதுதானே! அது தொன்மையான, பாரம்பரியமான அடையாளம் மட்டுமே என்று ஒவ்வொரு முறையும் சமாதானப்படுத்திக்கொண்டேன். எனக்கு கல்யாணமாகி நாற்பது ஆண்டுகளில் இருபத்து ஐந்து ஆண்டுகள் மஞ்சள் கயிறோடுதான் இருந் திருக்கிறேன். அதனால் என்ன? எந்த அபசகுனமும் ஏற்படவில்லை. பரிகாரம் செய்யவும் இல்லை. இது அஸ்வின் அப்பாவுக்கும் எனக்கும் தவிர யாருக்கும் தெரியாது. இப்போதும் சங்கிலித்திருடன் குறுக்கிடாமலிருந்தால், நான் சொல்லியிருக்கமாட்டேன். திருடு போனவுடன் பதற்றப்படாமலிருந்த லாவண்யாவைப்பாராட்ட வேண்டியதுதான்! அதேசமயம் பரிகாரம் செய்கிறேன் பேர்வழியென்று இப்படி இறங்குவதுதான் முட்டாள்தனமாகத் தெரிகிறது. இனி ஒரு பரிகாரமும் வேண்டாம். நான் சொல்வதுபோல் செய்யுங்கள். சங்கிலித்திருடனை போலீஸ் பிடிக்கும்வரை காத்திருக்காமல், அதேபோன்ற தாலியையும், சங்கிலியையும் வாங்கி நல்ல நேரத்தில் சாமி முன்பு அஸ்வின் கட்டட்டும். அது போதும்” என்றார்கள்

அஸ்வின் கொட்டாவி விட ஆரம்பித்தார். நான் அத்தை முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். அத்தை தொடர்ந்தார்கள். “உங்களுக்குத்தூங்கும் நேரம் நெருங்கிவிட்டது. இதை மட்டும் சொல்லி விடுகிறேன். தாலி சென்டிமென்டை வைத்து வெற்றிகரமான சினிமாவை வேண்டுமானால் தயாரித்திருக்கலாம். அதில் காட்டிய மூட நம்பிக்கைகளை யெல்லாம் வளர்த்துக்கொள்ளவேண்டாம். பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் பின்பற்றவும் வேண்டாம். படித்த பெண்ணான லாவண்யாவுக்கு இதெல்லாம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. சரி, நேரமாகிவிட்டது. போய் நிம்மதியாக உறங்குங்கள்” என்றார்கள்.

அப்பப்பா! மாமாவும் அத்தையும் அக்காலத்தில் எவ்வளவு துயரங்களை மனத்திண்மையுடன் தாங்கியிருந்திருக்கிறார்கள். அவர்கள்மேல் மதிப்பும், மரியாதையும் மேலும் அதிகமானது. பழமையான, கட்டுப்பெட்டி யான அத்தையென்று நான் நினைத்திருக்க, அவர்களிடம் இவ்வளவு தெளிவான, தீர்க்கமான சிந்தனை! அவர்கள் அனுபவத்திலிருந்து அறிந்து, தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அத்தையின் அறிவுரைகளைக் கேட்டபிறகு மனதிலிருந்த பெரியபாரம் இறங்கியது போலிருந்து. தெளிந்த மனதுடன் நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *