தாய், தகப்பன் ஆகலாமா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 6,370 
 
 

” நீ நினைக்கிற மாதிரி இல்லே. சுந்தரம் கட்டைப் பிரம்மச்சாரி ! ” சொன்ன தோழியை அதிர்ந்து, ஆச்சரியமாகப் பார்த்தாள் ராதா.

ரத்னா விடாமல் தொடர்ந்தாள்.

” அவரை எனக்கு நல்ல தெரியும். நாங்க ஒரே ஊர். பக்கத்து பக்கத்துத் தெரு. பள்ளிகூடம்கூட ஒண்ணா படிச்சோம். சுந்தரத்துக்கு அம்மா மட்டும்தான். அப்பா இல்லே. புள்ளை தலை எடுத்ததும் அவர் மண்டையைப் போட்டுட்டார். அஞ்சு அக்கா தங்கச்சிங்களைக் கரையேத்துறதுக்குள்ளே இவருக்கு கலியாண வயசு காணாம போச்சு. ‘ திருமணமே வேண்டாம் ! ‘ என்கிற முடிவுல இருந்தார். ‘எனக்குப் பின்னால் உனக்குத் துணை, யார் ஆக்கிப்போடுவா..?’ ன்னு பெத்தவள் அவரை விடாமல் நச்சரித்தாள். சுந்தரம் ஒரு நாள், சொல்லாம கொள்ளாம திரும்பி வரும்போது கையில ஒரு மூணு வயசு குழந்தையோட வந்தார். ‘என்னடா இது. .? ‘ன்னு அம்மா அதிர்ந்தாங்க. ‘உனக்குப் பின்னால எனக்குத் துணை, ஆக்கிப்போட ஆள். அனாதை ஆச்சிரமத்துலேர்ந்து தத்து எடுத்து வந்திருக்கேன். பொட்டைப் புள்ள ! ‘ சொன்னார். பெத்தவள் வாயைத் திறக்கலை. அவர் போய் உன்னை திருமணம் முடிக்கிறேன்னு சொன்னது எனக்கு ஆச்சரியமா இருக்கு. ” நிறுத்தினாள்.

ராதா திறந்த வாய் மூடவில்லை. இவ்வளவிற்கும் ராதா சுந்தரத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற கையோடு மாற்றல் வாங்கிக் கொண்டு சின்னதாய் ஒரு வீடு எடுத்துக்கொண்டு… ஒரு குழந்தையுடன் வாழ்ந்து தன் வேலை உண்டு. தானுண்டு வாழ்க்கை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு… இவள் கஷ்டம், சகதொழிலாளியான சுந்தரத்திற்கு உறுத்தியதோ என்னவளோ. . தானாக வந்து…

” மேடம் ! ஒரு சேதி! ” சொன்னான்.

” என்ன. .? ”இவள் ஏறிட்டாள்.

” உங்களுக்கு கோபம் வேணாம். விருப்பம், விருப்பம் இல்லே மட்டும் சொன்னால் போதும் .” என்றான்.

‘சுற்றி வளைப்பு எங்கோ தவறு ! ‘ இவளுக்கு மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

” எனக்கு ஊனமான ஒரு பெண் குழந்தை இருக்காள். அவளுக்கு நீங்க தாயாய் ஆக விருப்பம்ன்னா…. நான் உங்க குழந்தைக்கு தந்தை ஆக விருப்பம் ! ” சொன்னான்.

கேட்ட ராதாவிற்கு உள்ளத்தில் உதை. அதிர்ச்சியில் வாய் திறக்க முடியவில்லை.

” அவசரம் வேணாம். நல்லா யோசிச்சி சொல்லுங்க. .” சொல்லி சென்றான்.

ஆளை பற்றி விசாரிக்க தோழியிடம் எடுத்து விட்டால். ..? ! கதை இப்படி !!

” என்னடி யோசனை. .? ” ரத்னம் உலுக்கினாள்.

” ஆள் பேச்சு சுத்தமில்லே. .! ” என்றாள்.

” புரியல. .?! ” அவள் இவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.

” விசயம் இப்படின்னு நேரடியாய் என்கிட்ட உண்மையைச் சொல்லி சம்மதம் கேட்டிருக்கலாமே. .! ”

” உண்மையைச் சொன்னால் நீ ஒத்துப்பியா. ? ”

” பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. .! ”

”…………………….”

” சுந்தரம் யோசனையை நான் மறு பரிசீலனை செய்ய வேண்டி இருக்கு ரத்னா. என் முதல் கணவன் போல இவரும் பொய், பித்தலாட்டம், என் சம்பாத்தியம் மேல கண்.. ஆசைப்படுகிறாப்போல தெரியுது. அப்படி இல்லேன்னா. . இவர் என்னிடம் பொய் சொல்ல வேண்டிய வேலையே இல்லே. எனக்கு ஒரு சூடு போதும். இன்னொரு சூடு வேணாம். தாங்க மாட்டேன் ! ” சொல்லி கமறினாள். கண்களில் கண்ணீர் கட்டியது.

ரத்னாவிற்கு அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘வாழ்வில் எத்தனை பட்டிருக்கிறாள். .?! ‘ நினைக்க வருத்தம் வந்தது.

இவர்கள் இருவரும் கல்லூரியிலிருந்தே இணை பிரியா தோழிகள். ஆனால் முதன் முதலில் வேலை கிடைத்து ராதாவிற்குத்தான். மும்பையில் போய் சேர்ந்தாள்.

சேர்ந்த முதல் வாரமே. .

” நான் சந்தோசமா இருக்கேன் ! ” என்று இவளுக்கு கடிதம் எழுதினாள்.

அடுத்த மாதம். ..

” என்னை ஒருத்தர் காதலிக்கிறார் ! விரைவில் திருமணம். ” தொலைபேசி செய்தாள்.

மூன்றாவது முறையாக. ..

” கண்டிப்பாக வரவேண்டும் ! ” ஒரு கடிதத்துடன் திருமண அழைப்பிதழ்.

ரத்னாவும் தோழியின் அழைப்பைத் தட்டாமல் ஏற்று சென்றாள்.

திருமணம் மும்பையில் சீரும் சிறப்புமாக நடந்தது. மாப்பிள்ளை நல்ல அழகாக இருந்தார். ஜாடிக்கேற்ற மூடி!

அப்புறம். .. ரத்னாவிற்கும் ராதா வேலை செய்யும் கம்பெனியில் சென்னை கிளையில் வேலை கிடைத்தது. சேர்ந்தாள். தோழிக்கும் தன் இருப்பைத் தெரியப்படுத்தினாள்.

மும்பையிலிருந்து அடுத்து பேச்சில்லை மூச்சில்லை.

ஒரு வருட முடிவில். . பெட்டி, படுக்கை, கையில் ஒரு குழந்தையுடன் வந்து வாசலில் நின்றாள்.

” என்னடி சொல்லாம கொள்ளாம. ..” ரத்னாவிற்கு அதிர்ச்சி.

” எனக்கு இங்கே மாற்றல் ! ”

” புருசன். .? ”

” உள்ளாற வா சொல்றேன் ! ”

சென்றார்கள். அமர்ந்தார்கள்.

” திருமணத்துக்குப் பின்னால்தான் என் கணவரோட சொந்த முகம், சுயரூபம் தெரிஞ்சது. சரியான பணப்பைத்தியம். சம்பளத்துல அஞ்சு பைசா குறைந்தாலும் அடி, உதை. அப்புறம். .. நின்னா குத்தம். உட்கார்ந்தால் குத்தம். நரக வேதனை. கையில் குழந்தையோட விவாகரத்து முடிச்சி வந்துட்டேன். ! ” என்றாள்.

இதோ. .. அப்படியே வாழ்க்கை.

எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை ராதாவிற்கு.

மறுநாள்.

ராதா .. சுந்தரம் அலுவலகத்திற்கு வந்தும் பேசவில்லை.

சுந்தரத்திற்கு கஷ்டமாக இருந்தது.

மாலை.

அலுவலகம் விட்டு தனித்துச் சென்றவளைத் தொடர்ந்தான்.

” ராதா ! நான் ஏன் ஊனமான பெண் குழந்தையைத் தத்தெடுத்தேன் என்கிற உண்மை உங்களுக்குத் தெரியாது. எல்லோரும் நல்ல குழந்தைகளா எடுத்து ஊனத்தை ஒதுக்குறாங்க. அனாதையிலேயே இது ரொம்ப பாவம், பரிதாபம். மனசைப் பிசைந்தது. தத்தெடுத்தேன். நீங்களே அதை என் சொந்த குழந்தையாய் நினைக்கனும்ன்னுதான் அந்த உண்மையை நேத்து மறைச்சேன். அப்புறம். … உங்க குழந்தையும் சொந்த குழந்தை இல்லே என்கிற உண்மை எனக்குத் தெரியும். விவாகரத்துக்குப் பிறகு தனி மரமா நிக்கற உங்களைக் கழுகுகள் சுத்தும். அதை விரட்டவும், தன் தனிமை, துணைக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வந்திருக்கீங்க. இந்த விசயம் கேள்வி பட்ட பிறகுதான். .. நாம பிரம்மச்சாரியாய் இருந்து சாதிச்சது போதும். ஒரு பெண்ணுக்கு நல்ல புருசனாய், உண்மையான பாதுகாவலனாய் இருக்கலாமேன்னு தோணிச்சு. அடுத்து. ..நம்ம தத்து குழந்தைகளுக்கும் அம்மா, அப்பா ஏக்கம் போக்கலாமே என்கிற எண்ணம் மனசுல தோணிச்சு. உங்களிடம் பேசினேன். சம்மதமில்லேன்னா விட்டுடுங்க வர்றேன் ! ” சொல்லி வேகமாக நடந்தான்.

‘ எத்தனை பெரிய மனசு. என்ன உள்ளம் ! ‘ ராதா எதிர்பார்க்கவே இல்லை.

அதிர்ச்சியின் உச்சம் போய் நின்றாள்.

கொஞ்சமும் தாமதிக்காமல். ..

” அத்தான். .! ” ஓடிப் போய் சுந்தரத்தின் வலது கையைத் தாவிப் பிடித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *