தாய்மை எனப்படுவது..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 3,003 
 
 

“நெக்ஸ்ட்…..!!”

தன் முன்னால் இருந்த அழைப்பு மணியின் பொத்தானை அமுக்கினாள் டாக்டர்..மனோன்மணி .. MBBS..MD..(Gynecologist)….

அவளுடைய ரிஸப்ஷனிஸ்ட் பாத்திமா அடுத்த பேஷன்ட்டின் ஃபைலைக் கொண்டு வைத்துவிட்டு…’ நியூ என்ட்ரி’ “என்று சொல்லி விட்டுப் போனாள்…

ஃபைலைத் திறந்து பேரைப் படிக்கும் போதே…

“நான் உள்ளே வரலாமா டாக்டர் ..???” என்ற இனிய குரல்…

“உள்ள வாம்மா……!!!!!!!”

உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்ததும் ஒரு நிமிடம் மனோன்மணிக்கு ஒரு சின்ன ஷாக்…

உடனே சமாளித்துக் கொண்டாள்…
“உக்காரும்மா…..!!”

வந்தவள் பெண்ணல்ல… சிறுமி…மிஞ்சிப்போனால் பதினைந்து வயதிருக்கும்…. ஒரு சாயம் போன ஜீன்ஸும்…… மஞ்சள் நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாள்..

ஒற்றைப்பின்னலாய் முடி நீண்டு இடுப்பு வரை தொங்கியது…அதை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளுவதாய் இருந்தாள்…

கொஞ்சம் நெளிந்தாள்…. ஆனால் பயமில்லாமல் முகத்தை நேராகப் பார்த்தாள்..

“உக்காரும்மா ….!!!!ம்ம்…சொல்லும்மா…!!

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்குவது புரிந்தது…..

“எம்பேரு வர்ஷா…..!!!”

“ம்ம்ம்…வயசு பதினாலு…. அப்புறம்…..!!!”

ஃபைலைப் பார்த்துக் கொண்டு பேசினாள் மனோன்மணி……

“நான் இங்க ஒரு ஸ்கூல்ல 9th std.. படிக்கிறேன்…”

சொல்லும்மா வர்ஷா……!!!”

“டாக்டர்….. எனக்கு பீரியட்ஸ் தள்ளிப் போயிருக்கு…..!!!”

ஓரளவுக்கு மனோ இதை எதிர்பார்த்தாளென்றாலும் ‘ straight from horse’s mouth ‘ ……..கேட்பது ஒரு வித சங்கடத்தை ஏற்படுத்தியது…..

முப்பது வருடங்களுக்கு மேல் மகப்பேறு மருத்துவராய்…..

மருத்துவ கல்லூரி .. மகப்பேறு மருத்துவ துறையில் சிறிது காலம் ‘ ‘Dean ‘ ஆக இருந்துவிட்டு…

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மருத்துவ மனையில் மூன்றாண்டு காலம் சிறப்பு பயிற்சி பெற்ற மனோன்மணிக்கு …..

இதுமாதிரியான அனுபவம் புதிதாக இருக்கமுடியாது…..

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாய்….
‘ சக்தி மகப்பேறு மருத்துவ மனை’யின் சொந்தக்காரியாய் …. கைராசி டாக்டர் என்ற பெயரெடுத்த…. மனோவுக்கு ….

அதுவும் ‘ Teen age Pregnancy….The Physical… psychological. …and Emotional Care’ …. என்ற ஆய்வுக்காக சிறப்பு கௌரவம் பெற்று…

இங்கிலாந்து அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு…மூன்று வருடங்கள் மான்செஸ்டர் மருத்துவ மனையில் ஆராய்ச்சி மேற்கொண்டவளுக்கு …..

வர்ஷாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அதிர்ச்சியளிக்க வாய்ப்பில்லை…

“கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா….???”

“டாக்டர்… எனக்கு எப்பவுமே பீரியட்ஸ் ரெகுலரா வரும்…ஆனா இந்த தடவ…”

“ம்ம்ம்..மேல சொல்லு….”

“பதினஞ்சு நாளைக்கு மேல ஆயிடிச்சு…”

“வயசுக்கு வந்து எவ்வளவு நாள் இருக்கும்….????”

“ஒரு வருஷம் தான் ஆகுது டாக்டர்…..!!”

பயம்மா இருக்கு டாக்டர்….”

“என்னன்னு…..”

“பிரக்னென்ட்டா இருக்கேனோன்னிட்டு….!!”

“எதனால அந்த சந்தேகம்…..??? டெஸ்ட் எடுத்து பாத்தியா…???”

“இல்ல டாக்டர்… ஏதாவது மருந்து குடுப்பீங்கன்னுதான்….!!!”

“இதப்பாரு வர்ஷா…..நீ வந்து சொன்னதும் என்ன ஏதுன்னு கேக்காம மருந்த தூக்கி குடுக்கிறதுக்கு நான் ஒண்ணும் பெட்டிக்கடை வச்சு நடத்தல….

நீ நெனைக்கிற மாதிரி அத்தன ஈஸி கிடையாது….கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லு….!!!

யாரோடையாவது உடலுறவு வைச்சுக்காம நீ கர்ப்பமாக முடியாது என்கிறது உனக்கு தெரியுமா…..தெரியாதா…..!!!”

“தெரியும்… டாக்டர்……!!! ஆனா.. என் சம்மதமில்லாம நடந்த விபத்து…..!!”

டாக்டர் மனோ இந்த பதிலைத் தான் எதிர் பார்த்தாள்….

“முதல்ல உன்ன டெஸ்ட் பண்றேன் … அப்புறம் விவரமா எனக்குத் தெரியணும்…..”

கர்ட்டனை இழுத்து மூடிவிட்டு அவளுடைய கடமையைத் தொடர்ந்தாள்…

“உக்காரு…இதோ வரேன்…..”

“என்ன டாக்டர்…. ப்ரெக்னன்ட் தானே….!!”

வரஷாவின் துணிச்சல் டாக்டருக்கு எரிச்சலாயிருந்தது….

இது என்ன அசட்டுத் துணிச்சல் பெண்ணே…..!!!

“இப்போ சொல்லு…..!!!”

“என்ன இரண்டு மூணு பொறுக்கிப் பசங்க ரேப் பண்ணிட்டாங்க டாக்டர்….!

கொஞ்சமும் பதட்டப்படாமல் சொன்னாள்…….

“வீட்டுக்கு தெரியுமா…..??”

“இல்ல டாக்டர்..தெரிஞ்சா அப்பா என்ன கொன்னே போட்றுவாரு… நீங்க மருந்து குடுத்திங்கன்னா நான் போயிடுவேன் டாக்டர்…..”

மனோ பொறுமையை இழந்தாள்…

“வர்ஷா…நீ சின்னப் பொண்ணா இருக்கியேன்னு பேசாம இருந்தேன்..ஆனா என்ன விட நீ விவரமாத்தான் இருக்க…

எதுவானாலும் வீட்டில இருந்து யாராவது கூட இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது…

என் பேச்ச மீறி வேற ஏதாவது செய்ய நினச்சே…. உன் உயிருக்கே ஆபத்தாகும்…உடனே நேரத்த வீணாக்காம யாரையாச்சும் கூட்டிட்டு வரப்பாரு….!!!”

கோபத்துடன் சடாரென்று நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தாள் வர்ஷா….!

“இப்போ கோபப்பட்டு பிரயோசனமில்லை…. அடுத்து நடக்க வேண்டியதப்பாரு…

என்னால என்ன செய்ய முடியுமோ நிச்சயம் செய்வேன்..உம்மேல எனக்கு அக்கற இருக்கு வர்ஷா…. சீக்கிரம் வருவேன்னு எதிர்பாக்கறேன்….”

அன்றைக்கு மனோவுக்கு கிளினிக்கில் கூட்டம் அதிகம் இல்லை..சீக்கிரமே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்..

பர்வதம்மா சூடான பக்கோடாவும்… காப்பியும் கொண்டுவைத்தாள்…
குளித்து உடை மாற்றி சிறிது நேரம் ஓய்வெடுக்க படுக்கையில் சாய்ந்தாள்….

***

மனோ சின்ன வயது முதல் கண்ட கனவு மருத்துவராக வேண்டும் என்பதே… அப்பா.. அம்மாவும் அதற்கு பூரண ஒத்துழைப்பு குடுத்தனர்…

திருமணம் என்பது அவளைப் பொறுத்தவரை அநாவசியமாய் தோன்றியது…

கல்யாணமாகாமலே எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டாளே…!!!

இப்போது தலை நரைத்து …இளமை கடந்து போன நிலையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்கும்போதெல்லாம் அவளே ஒரு குழந்தையாய் மாறிப்போகிறாள்…..!!!

வர்ஷாவின் குழந்தை முகம் வந்து வந்து போனது…வர்ஷாவைப்போல் நிறைய பெண்கள் அவளிடம் வந்திருக்கிறார்கள்…

ஆனால் அவளின் இந்த துணிச்சலும், அலட்சியமும் அவளை வெகுவாக பாதித்தது…!!!!

இதுதான் பெண் விடுதலையா…..?? இவள் இருபதாம் நூற்றாண்டின் பிரதிநிதியா???

இவளையா கனவு கண்டான் பாரதி….???

மனோன்மணி அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்த நேரம்….பக்கத்து கிராமத்தில் போஸ்டிங்…கூட டாக்டர் ஜஹாங்கீர்…

ஒரு நாள் வாசலில் பெரிய சத்தம்… ஒரு பெண்ணின் கூச்சல்…

“சிறுக்கி மவளே…..இருடி…உன்ன கொன்னு போட்ட பொறவுதான் என்னோட வெறி அடங்கும்… மானம் போச்சுடி…..!!!!!

மவளே….எவனோட படுத்தெழுந்தரிச்ச… எனக்கும் தெரியாம எவனுக்குடி முந்தானை விரிச்ச ???

டாக்டரம்மா மட்டும் ஏதாச்சும் இருக்குன்னு சொல்லட்டும்…அத்தோட முடிஞ்சு போச்சு உங்கத….”

ஒரு இளவயது பெண் ….பன்னிரண்டு … பதிமூன்று….வயது சிறுமியின் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்து வந்தாள்… கன்னத்தில் மாறி மாறி அறை வேறு….

“நிறுத்தும்மா…இது ஆஸ்பத்திரி…இங்க இப்படியேல்லாம் கூப்பாடு போடக்கூடாது…உள்ள வா…..!!!”

ஆயா அதட்டினாள்…

“டாக்டரம்மா…. எம் மானம் போச்சே….ஆகாதத பண்ணிப் புட்டு அமுக்குணி மாதிரி நிக்கிறாளே…..!!!”

“இந்தாம்மா…ஒன்னோட ஒப்பாரிய வீட்டோட வச்சுக்க…உக்காரு இந்த பெஞ்சில..இப்போ டாக்டரம்மா கூப்பிடுவாங்க…..!!!”

மனோவே வெளியில் வந்தாள்….உள்ள வாங்க…. ஏன் இப்படி சத்தம் போடுறீங்க…???”

மனோ இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…

மனோ முன்னாலேயே அந்த சிறுமியை முதுகில் மொத்து மொத்தென்று மொத்தினாள் அந்தப் பெண்….

“ஏம்மா…உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா….??குழந்தயப் போட்டு இப்படி அடிக்கிற….????”

வெறி பிடித்தது போல ஆனாள் அந்தப் பெண்மணி…

“குழந்தையா…???இவளா…??இவளே ஒரு குழந்தய வயத்தில வாங்கிட்டாளே டாக்டரம்மா…

ஏதாவது ஊசி போட்டு இரண்டு பேத்தையும் கொன்னுடுங்க!!!”

மனோ எழுந்து அவள் கையைப் பிடித்து உட்கார வைத்தாள்….

மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள் செல்வி…

உருண்டை முகம்… கருகருவென்ற முகமும்….முடியும்… கண்களும்…. குள்ளமான உருவம்… சாயம் போன சீட்டி பாவாடையும்….நீல தாவணியும்….

குழந்தைத்தனமான முகத்துடனும் என்ன நடக்கிறது என்று புரியாமல்…..!!!!!

“இதப்பாருங்கம்மா… மூணு மாசம் முடியப் போகுது…மயக்க மருந்து கொடுத்துதான் சுத்தம் பண்ணனும்…பயப்படாதிங்க…

நாளைக்கே அட்மிட் பண்ணிடுங்க… அவளுக்கே தெரியாம நடந்த காரியத்துக்கு அவளுக்கு தண்டன குடுக்காதீங்கம்மா…!!!!”

சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பின் மறுநாள் வர சம்மதித்தாள்….

மனோன்மணி அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை… கசப்பான முதல் அனுபவம்…..

காலையில் எட்டு மணிக்கே ஆபரேஷன் தியேட்டரில் தயாராய் காத்திருந்தாள் மனோ…கூட ஜஹாங்கீரும் இருந்தான்….

மணி இரண்டைத் தாண்டி விட்டது…மனோ வுக்கு ஒரே கோபம்… ‘

“ஏன் இப்படி பொறுப்பில்லாமல்…….????”

“காந்தியம்மா… உங்களுக்கு நேத்து வந்த அம்மா எங்கிருக்காங்கன்னு தெரியுமா…???”

“பக்கத்தால எங்கியோ தான் சொல்லிச்சு… பாத்துட்டு வரவா….??”

காந்திமதி இப்படி ஒரு செய்தியைக் கொண்டு வருவாள் என்று மனோ கனவிலும் நினைக்கவில்லை…

அம்மாவும்… பெண்ணும் …அரளி விதையை அரைத்துக் குடித்து …..

மனோ இடிந்து போனாள்…

“மனோ…இந்த கிராமத்தில இதெல்லாம் சாதாரணம்…இதுக்காக இப்படி மனசொடிஞ்சு போகாத….நாம இது மாதிரி எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கும்….”

ஜஹாங்கீர் மட்டும் இல்லையென்றால் அன்றைக்கே வேலையை ராஜினாமா செய்திருப்பாள்…..!!!!!!

மணி ஒன்பதாகி விட்டது…..மனோ மெதுவாய் கண்ணைத்திறந்து பார்த்தாள்…

ஞாயிற்றுக்கிழமை … வாரத்தில் கிடைக்கும் ஒரு நாள் சுவர்க்கம்…..மனோவுக்கு தூங்குவது ரொம்ப பிடிக்கும்…

மற்ற நாளில் காட்டும் சுறுசுறுப்பை ஈடு கட்டுவது போல ஞாயிற்றுக் கிழமைகளில் முழு சோம்பேறியாகி விடுவாள்….

பேப்பரும்… காப்பியும் தயாராய் இருந்தது…..

பர்வதம் தானும் ஒரு காப்பி டம்ளருடன் அருகில் அமர்ந்தாள்… இப்படித்தான் துவங்கும் மனோவின் விடுமுறை நாட்கள்..

அந்த வாரம் நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் பர்வதத்திடம் சொல்லியாக வேண்டும்….இல்லையில்லை!!!!

பர்வதத்துக்கு தெரிந்தாக வேண்டும்…..

“ஏம்மா…. !!!!அந்தப் பொண்ண நினச்சு கவலைப் படுறீங்க போல….. எங்க ஊர்ல கூட இரண்டு மூணு பொண்ணுங்க கலச்சிட்டு வந்ததா சொன்னாங்க…

பொட்டப் பிள்ளைங்களுக்கு இப்போ தைரியம் கூடிப் போச்சு… எங்க போய் முடியப் போகுதோ….தெரியலையே…

நமக்கு நல்லவேளை… அந்தக் கவலயில்ல….”

பர்வதம்மாவும் மனோவைப் போலத் தான்……ஒண்டிக்கட்டை…

“ஆமாம்மா… உங்க கிட்ட ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன்….நீங்க வெளிநாட்ல இருந்தீங்களே….அங்க எப்பிடிம்மா….??”

மான்செஸ்டர் போய் ஆறுமாதம் ஆகியிருந்தது…

பதினைந்து வயது பெண்..கூடவே அதே வயதில் ஒரு பையன்…
இருவருமே பார்த்தால் பதினெட்டு வயது வளர்ச்சி…

“என் பெயர் எம்மா….இது என்னோடே பாய் ஃப்ரெண்ட் நிக்…”

“சொல்லும்மா…!!!”

“நாங்க இரண்டு வருஷமா லவ் பண்றோம்… நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்….”

“இப்போ எவ்வளவு மாசமாச்சு….???”

“மூணு மாசம் முடிஞ்சுது….”

“அபார்ட் பண்ணனுமா……???”

“No..No….I want my baby….Nick loves babies…..!!!இல்லையா நிக்… ???

அவனை அப்படியே கட்டிபிடித்து உதட்டில் முத்தமிட்டாள்…

இரண்டு நிமிடம் அப்படியே இருந்தார்கள்..

மனோவுக்கு தான் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டாமென்று தோன்றியது…

“இப்போ உனக்கு வயசு பதினைந்து தானே.. இதைப் பெத்து வளக்கிறதில இருக்கிற கஷ்ட்டநஷட்டங்க எல்லாம் யோசிச்சு பாத்தியா…??”

“ஆமா டாக்டர் மனோ….. நானும்.. நிக்கும்… வீக் எண்ட்டில் வேலைக்கு போறோம்…இப்பவே பணம் சேக்க ஆரம்பிச்சிருக்கோம்…”

“அப்பா…அம்மா…சப்போர்ட்…..???”

“எனக்கு துளிகூட கிடையாது.. ஆனால் நிக் வீட்டில் முழு சப்போர்ட்….!!!”

நிறைய கவுன்சிலிங்… ஸ்கேன்…. மருந்து… மாத்திரைகள்…

அழகான பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பூங்கொத்துடன் வந்தார்கள்…

“இவளுக்கு மனோ என்று பெயர் வைத்திருக்கிறோம்… உங்க ப்ளெசிங்க்ஸ் தேவை.!!!”

***

“பர்வதம்…சின்ன வயசில குழந்த பெத்துக்கிறத கண்டிப்பா ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன்…

ஆனால் அவுங்களோட நேர்மைய நான் பாராட்டறேன்…. அந்தப் பையனின் பொறுப்புணர்ச்சிய பாத்து வியந்து போறேன்….”

திங்கட்கிழமை… பொதுவாக கிளினிக்கில் கூட்டம் அதிகம் இருக்கும் நாள்…போனதுமே ஆரம்பித்தால் தான் மூணு மணிக்கு முடியும்…

அந்த கூட்டத்திலும் கண்கள் வர்ஷாவைத் தேடின…

கொஞ்ச நேரம் காத்திருந்தாள்….
ம்ஹூம்….வர்ஷா வரவில்லை…

ஏதாவது ஏடாகூடமாய் பண்ணியிருப்பாளோ….????

வேலைப் பளுவில் சீக்கிரமே தூங்கிவிட்டாள்…. மறுநாளும் வர்ஷா வரவில்லை….!!!!

புதன் கிழமை…. நுழைந்ததுமே இன்ப அதிர்ச்சி..!!!

முதல் ஆளாக வர்ஷா…கூடவே இருபது வயதில் ஒரு பையன்…நல்ல ஸ்மார்ட்….!!!!

பார்த்தவுடன் எழுந்து க்ரீட் பண்ணினார்கள்…!!!!

“உள்ள வாங்க….!!”

“இன்றைக்கு வர்ஷா மிகவும் அழகாகத் தெரிந்தாள்..முடியை அவிழ்த்து விட்டிருந்தாள்..

மஞ்சளில் பச்சை பூப்போட்ட டாப்ஸும்….பச்சை நிற பேன்ட்டும அவளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தது….

“குட் மார்னிங் டாக்டர் !!! இது என்னோடே அண்ணா பிரதீப்…..!!”

அண்ணாவா…??? அம்மா அப்பாவைக் கூட்டி வரச்சொன்னால்.??

“சரி… உக்காருங்க ..!!!!

வர்ஷா… நான் அப்பா அம்மாவத்தானே கூட்டி வரச்சொன்னேன்…!!!”

“பிரதீப் தான் எனக்கு எல்லாமே….நடந்ததெல்லாம் இவனுக்கு தெரியும்….”

“பிரதீப்…..என்ன பண்ற….???”

“கல்லூரியில முதல் வருடம் பி.காம்…..”

“ம்ம்ம்…சொல்லு…..”

“ஒரு மாசம் முந்தி ஒரு நாள்… …நானும் வர்ஷாவும் ஆஸ்பத்திரில அட்மிட் ஆன எங்க அத்தய பாத்திட்டு பக்கத்து பஸ்ஸ்டாப்ல நின்னுகிட்டிருந்தோம்..

இருட்டிப் போச்சு…

திடீர்னு மூணு ரவுடிப் பசங்க என்ன அடிச்சுப் போட்டுட்டு என் கண் முன்னாடியே வர்ஷா வாயப் பொத்தி இழுத்துட்டு போனாங்க…!!”

“என்ன ஒரு காலி கட்டடத்தில இழுத்துட்டு போயி….மாத்தி…மாத்தி…”

லேசாய் ஒரு விசும்பல்…

கர்ச்சீப்பால் முகத்தை மூடிக் கொண்டாள்…

உணர்ச்சியற்ற உரையாடல்கள்….

மனோவுக்கு ஏதோ நெருடியது….

“சரி உள்ள வா… மறுபடி முழு செக்கப்பும் பண்ணனும்…!!!”

வர்ஷா…நீ சொல்ற மாதிரி ஒரு மாசமெல்லாமில்ல…. அதுக்கும் மேலே இருக்கும்…

மயக்க மருந்து குடுத்து தான் அபார்ட் பண்ணனும். மூணுமணி
நேரத்தில முடிஞ்சிடும்… ஈவ்னிங் வீட்டுக்குப் போகலாம்…!!!”

“பிரதீப்…இந்த பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போடு…..”

“ரொம்ப நன்றி டாக்டர்….”

வர்ஷாவும்…பிரதீப்பும்… எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானார்கள்..லேசான சோர்வைத்தவிர வர்ஷா முகம் மலர்ச்சியாகவே இருந்தது…

“இத பாரு வர்ஷா… ஒரு வாரத்துக்கு மருந்தெல்லாம் எழுதியிருக்கேன்..அடுத்த வாரம் திரும்ப வரவேண்டியிருக்கும்..

உன்னோட கர்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு… இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்தா அப்புறம் எப்பவுமே குழந்தை பெத்துக்க முடியாம போகலாம்…..

அதுமட்டுமில்ல.. உன் உயிருக்கே ஆபத்தா முடியும்… டேக் கேர்.!!!!

***

“வர்ஷ்….பசிக்குதா…ஒரு ஹோட்டல்ல சாப்ட்டு போலாமா…??”

“நானும் அதேதான் நினைச்சேன்…”

Family room ல் ப்ரதீப்பின் தோளில் சாய்ந்து கொண்டாள் வர்ஷா…

“அப்பா … ஒரு மாசமா நான்
பட்டபாடு.!! பாரு எங்க போய் முடிஞ்சிருச்சுன்னு…!!”

“ஸாரி வர்ஷா…ஆனா எனக்கென்னவோ நாம சொன்ன கதைய அவுங்க நம்பலையோன்னு….நீ என்ன நினைக்கிற???”

“நானும் அதேதான் நினைச்சேன்.. அவுங்க ஒண்ணும் முட்டாளில்ல….என்ன செக்கப் பண்ணும் போது…

“என்ன வர்ஷா…உன்ன பலாத்காரம் பண்ணினாங்கன்னு சொல்ற… எங்கேயும் ஒரு கீறல் கூட இல்ல…!!! படிச்ச பொண்ணு நீ….உடனே டாக்டர் கிட்ட வரணும்னு கூடவா தோணல..??

“நான்…மயக்கமாயிட்டேன் டாக்டர்…. என்ன நடந்ததுன்னே நியாபகம் இல்ல.. லேசன காயம்…ஆறிப் போச்சு டாக்டர்…!!”

“உனக்கு நடந்த இந்த விபத்துக்கு நான் வருத்தப்படறேன்….!! “

“அவுங்க இப்படி சொன்னதுக்கு என்ன அர்த்தம். ஒண்ணும் புரிஞ்சுக்க முடியல…..”

“சரி…எப்படியோ.. இனி பயப்பட ஒண்ணுமில்ல.. நல்லா ரெஸ்ட் எடு.. ஒருவாரம் கழிச்சு வழக்கமான இடத்தில மீட் பண்ணலாம்…”.

அவள் கன்னத்தை செல்லமாய் தட்டினான்…

ப்ரதீப்…அவுங்க சொன்னத கேட்டியில்ல!!!!!…இனிமே இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரல்ல… என்கூட வந்ததுக்கு ரொம்ப நன்றி..

.ஐ லவ் யூ…..!!”

“ஐ லவ் யூ டூ….!!!”

***

சூடான சப்பாத்தியுடன்… காலிஃப்ளவர் குருமா… பருப்பு கடைசல்…. தயிர்சாதம்..

“வாங்கம்மா… சாப்பிடலாம்….!!!”

மனோவும் பர்வதமும் சாப்பிட அமர்ந்தார்கள்….

“ஏம்மா…அந்த பிள்ளை இன்னிக்காச்சும் வந்திச்சா….???”

“ம்… நானும் அதப்பத்திதான் சொல்றதா இருந்தேன்….!!!!”

நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள்….

“என்னம்மா இது….முழு பூசணிக்காய சோத்துல மறச்ச கதையாவில்ல இருக்குது….!!!

நீங்க நல்லா திட்டி அனுப்பியிருக்கணும்…..!

“பர்வதம்… இன்னும் கதை முடியல…. அவுங்க சொன்னத நான் நம்பினா இவ்வளவு வருஷம் நான் மருத்துவ துறையில் ஆராய்ச்சி செஞ்சதுக்குக்கெல்லாம அர்த்தமேயில்லாம போயிடும்….

அந்த பொண்ணு கர்ப்பமாவே இல்ல… இன்னும் பீரியட்ஸ் ரெகுலராகவேயில்ல…!!!!!

செஞ்ச தப்பு அவளுக்கு மன அழுத்தத்தை குடுத்திருக்கு.. இந்த மாதிரி சமயத்தில் பீரியட்ஸ் தள்ளிப் போக சான்ஸ் இருக்கு….!!!”

“அம்மா….பின்ன ஏன்..????”

“உண்மைய சொல்லி எச்சரிக்கை பண்ணியிருப்பேன்….ஆனா அவளோட திமிரும்…. அலட்சியமும்… பொய்யான கதையும் எம் மனசுக்கு அவர்கள் மேல் ஒரு எரிச்சல்…. கோபம்….!!

அவளுக்கு குளிர் விட்டுப் போகும்… மறுபடி இதே தப்ப செய்ய வாய்ப்புண்டு… அதான் என் மனசாட்சிக்கு விரோதமாக… முதல் முறையா… ஒரு பொய்யச் சொன்னேன்…!!!

அன்றைக்கு இரவு படுக்கப் போகுமுன் ஹிப்போகிரட்டிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள் டாக்டர் மனோன்மணி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *