தாத்தாப் பூ..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 9,239 
 
 

சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் கால்களைத் தண்ணிக்குள்விட்டு ‘சளக் புளக்’ என்று உழப்பிக்கொண்டு ஒரு முக்கியமான வேலை யில் இருந்தான். நாலு வயசுப் பையனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை என்று நீங்கள் கேட்கலாம். பெரியவர்கள் என்று சொல்லப்படுகிற முற்றிய மனிதர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் என்ன தெரியும்? உங்களுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போய்விட்டன. குறிப்பாக, சந்தோஷம் தருகிற விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, துக்கமான சங்கதிகளை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

சேகர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒரு நண்டைப் பார்த்தான். வரப்பில் கொஞ்ச தூரம் குடுகுடு என்று ஓடிய அதனைப் பிடிக்கலாம் என்று நினைத்தான். ஆனால், அதன் விரல்கள் கவட்டையாக ஒரு கத்திரி மாதிரி இருந்ததால், பயந்து கையைப் பின்னால் இழுத்துக்கொண்டு விரட்டினான். அது சைடுவாக்கில் வேகமாக நகர்ந்து வரப்பில் இருந்த பொந்துக்குள் நுழைந்துவிட்டது. இவன் சற்று நேரம் அந்தப் பொந்தையே பார்த்தான். உள்ளே போனது வெளியே வரவில்லை. அப்படியே வரப்பில் அமர்ந்துகொண்டான். அது எப்படியும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும். வந்ததும் அதனை மறுபடி பார்க்க வேண்டும். எதுக்கு என்று கேட்கிறீர்களா? நண்டைப் பார்க்க வேணாமா? இது என்ன அர்த்தம் இல்லாத கேள்வி!

வரப்பில் மெத்துமெத்து என்று புல் வளர்ந்து இருந்தது. புற்களினூடே தாத்தாப் பூச்செடிகள் நிறைய வளர்ந்து இருந்தன. தாத்தாப் பூச்செடியா என்று நீங்கள் புரியாமல் கேட்பது தெரிகிறது. ம்க்கும்… நீங்கள் அதையும்தான் மறந்து போய்விட்டீர்கள். காம்பு நீளமாக இருக்கும். உச்சியில் இத்துனூண்டாக ஒரு பூ இருக்கும். அதனைக் காம்போடு கிள்ளி எடுத்தான் சேகர். அதனைப் பார்த்துச் சிரித்தான். ”தாத்தா தாத்தா… பொடி குடு. தர மாட்டியா?” செல்லக் கோபத்துடன் அதனைப் பார்த்தான்… ”தர மாட்டியா?” ம்ம்ம்… ”தாத்தா தாத்தா… தலை குடு” என்று அதனைச் சுண்டிவிட, பூவின் தலை தெறித்து தனியே விழுந்தது. சேகர் சிரித்தான். அடுத்து, ஒரு தாத்தாச் செடியைப் பிடுங்கினான்.

”சேகரு, என்னடா செய்யிற?” – மோட்டார் ரூமில் இருந்து நிஜமான தாத்தா கூப்பிட்டார்.

”விளையாடிக்கிட்டு இருக்கேன் தாத்தா.”

”எந்திரிச்சு வாடா, நேரமாச்சு… வீட்டுக்குப் போலாம்.”

”இரு தாத்தா, நண்டைப் பாத்துட்டு வர்றேன்.”

தாத்தா துண்டை உதறி மூஞ்சியைத் துடைத்தவாறே வரப்பில் நடந்து வந்தார். அதற்குள் ஏழெட்டு தாத்தாக்களின் தலைகள் உருண்டு இருந்தன. தாத்தா சேகரின் அருகே குனிந்தார். ”வா வீட்டுக்குப் போகலாம்.”

சேகர் உட்கார்ந்தவாக்கில் குனிந்து, அந்த பொந்தைப் பார்த்தான்.

”பொந்துக்குள்ள என்னாடா பாக்குறவன்?”

”உள்ள ஒரு நண்டு போயிருக்கு தாத்தா… அது என்னா செய்யிதுன்னு பாத்தேன்.”

”அதுவும் உன்னைய மாதிரி விளையாடிக்கிட்டு இருக்கும். வா போகலாம்.”

”இதைப் பிடிச்சுக்கிட்டுப் போலாம் தாத்தா.”

”நண்டைப் பிடிச்சுட்டுப் போய் என்னடா பண்ணப் போற?”

”ஹார்லிக்ஸ் பாட்டில்ல போட்டு வளக்கப் போறேன் தாத்தா.”

தாத்தா சிரித்தார்… ”நண்டை எல்லாம் வளர்க்கக் கூடாதுடா சேகரு. அது கடிச்சுவெச்சிரும்.”

”கடிக்குமா?”

”அது கொடுக்கு பாத்திருக்கியா? பெருசா நீளமா இருக்கும். உன் விரல் சிக்குச்சுன்னு வெச்சுக்க. பாக்கு வெட்ற மாதிரி வெட்டிச் சாப்பிட்டுரும்.”

சேகரின் கண்கள் விரிந்தன. விரல்களைப் பார்த்துக் கொண்டான். நண்டு மிகக் கொடூரமானதாக இருக்க வேண்டும்.

”முறுக்கு மாதிரி நொறுக் நொறுக்னு சாப்பிட்டுரும் தெரியுமா?”

சேகர் பீதியுடன் பார்த்தான். இருந்தாலும், அவனுக்கு இன்னொரு முறை நண்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வரப்பில் எழுந்து நின்றவன் அப்படியே கேள்விக்குறி மாதிரி வளைந்து அந்த பொந்தைத் தலைகீழ்வாக்கில் பார்த்தான். தாத்தாவும் அதே மாதிரி நின்று பார்த்தார். ”ஒண்ணியும் காணோமடா சேகரு. இந்தப் பொந்துக்குள்ளதான் போச்சா? நல்லாப் பாத்தியா?”

”ஆமா தாத்தா! இந்தப் பொந்துதான்” என்றான். இருவரும் தலையில் ரத்தம் பாய, கண்கள் உஷ்ணமாகச் சில விநாடிகள் பார்த்திருப்பார்கள்… சரேலென்று தண்ணீரும் சகதியும் தெறிக்க ஒரு பாம்பு பொந்தில் இருந்து வெளியேறியது. ”ஐயோ ஆத்தி!” என்று கத்தியபடி தாத்தா துள்ளினார். சேகர் ”யம்மா” என்று அவரைவிட உரக்கக் கத்தியபடி அவரது காலைக் கட்டிக்கொண்டான். அந்தப் பாம்பு விர்ரென்று தண்ணீர் வழியே பாய்ந்து, வளர்ந்து இருந்த பயிருக்குள் போய்விட்டது. ”ச்சீய்! தண்ணிப் பாம்புதான்… கழுதை ஒண்ணும் செய்யாது” என்றார் தாத்தா, மேல் மூச்சு வாங்க.

”ஒண்ணும் செய்யாதா?”

”ம்ஹ§ம்… இது அப்பிராணிடா. புழுவு மாதிரி!”

”அப்புறம் ஏன் தாத்தா பயந்து சத்தம் போட்டே?”

”அது சும்மாடா. சரி சரி… வா வீட்டுக்குப் போகலாம். நேரமாகுது. உன் அவ்வா (பாட்டி) உனக்காக முறுக்கும் எள்ளுச் சீடையும் பண்ணிக்கிட்டு இருக்கு.”

உற்சாகமாக அவரது காலைக் கட்டினான் சேகர். தோளோடு சேர்த்து முத்தமிட்ட தாத்தா, சேகரைத் தோள் மீது தூக்கிக்கொண்டார். சேகர் அவர் கழுத்தைச் சுற்றிலும் தன் காலைப் போட்டு வளைத்துக்கொண்டு அமர்ந்தான். அந்த வண்டிப் பாதையின் இரு புறமும் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் நிறைந்து இருந்தன. தாத்தா நிதானமாக நடந்து வர… தாழ்வாகப் படர்ந்து இருந்த புளிய மரக் கொப்புகளுக்குக் கைநீட்டி புளியம் பிஞ்சுகளையும் புளியங்கொழுந்தையும் சிக்கிய வரைக்கும் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டான் சேகர்.

”நல்லாப் பிடிங்கித் தின்னு… தின்னுட்டு பல்லு கூசுது ஐயோ… அப்பான்னு உன் அம்மாகிட்ட வம்பு பண்ணு. முட்டாப் பய மகனே!” அவ்வப்போது சேகரை தாத்தா முட்டாப்பய மகனே என்று அழைப்பார். அதில் அவரது உள்ளார்ந்த ஒரு வேதனை இருந்தது. எல்லாம் சேகரின் அப்பனைப் பற்றிய வேதனைதான்.

நல்லுச்சாமிதான் தாத்தாவின் பெயர். ஊரில் ஓங்கிய சம்சாரி அவர். ஊருக்குள் 30 குழி மோட்டார் தோட்டமும் நாலு காணி வயலும் இருக்கிறது. அவரை ஊருக்குள் ‘கஞ்சப்பிசினாறி’ என்றுதான் பேசுகிறார்கள். ‘நல்லுச்சாமியா? அவன் இடியே விழுந்தாலும் இடுப்புல இருக்கற காசை அவுக்க மாட்டானப்பா’ என்று காது படவே சொல்லுவார்கள். நல்லுச்சாமி இதை எல்லாம் கண்டுகொள்கிற ஆள் இல்லை.

”சொல்லிட்டுப் போறான்க… சொல்றவன் யாரு? காபிக் கடையில ஓசிக் காபிக்கித் தொண்ணாந்து உக்காந்து இருக்க பய சொல்லத்தான் செய்வான். அவனுக்கு ஒரு காபியை வாங்கிக் குடுத்தா, நல்லுச்சாமிதான் தரும மகராசன்னும் சொல்லுவான். இந்தப் புலவன்கிட்ட பாட்டு வாங்கி நான் என்னா புடுங்கப் போறேன்? பொச கெட்ட பயலுக” என்பதுதான் தனக்கு மட்டும் ஒரு காபியை வாங்கி ஊதிக் குடிக்கும் நல்லுச்சாமியின் எதிர்வினை.

நல்லுச்சாமி நாலும் தெரிந்தவர். வாழ்வின் எல்லா துக்க சந்தோஷங்களையும் அதனதன் தன்மையோடு இத்தனை காலமாகக் கடந்து வந்திருக்கிறார். அவர் பாக்காத ஏற்ற இறக்கம் இல்லை. எல்லா மனுசனும் அவனவன் சுமையை அவந்தேன் சொமக்கணும் என்கிற தெளிவு இருக்கிறபடியால், யார் யாருக்குச் செய்யணும்? எவன் எவனை எங்கெங்கே வைக்கணும் என்கிற கணக்கு எல்லாம் அவருக்கு அத்துப்படி. அவரது கணக்குகள் தோற்றுப்போனது ஒரே ஒரு இடத்தில்தான்.

அவரது மருமகன். சேகரின் அப்பன்காரன் முத்துக்கிருஷ்ணன். எல்லா ஆட்களையும் கணக்காக மதிப்பிடத் தெரிஞ்ச நல்லுச்சாமி, முத்துக்கிருஷ்ணனிடம்தான் கொஞ்சம் மிஸ்டேக் ஆகிப் போனார். நல்ல கொணமான பயல் என்று கேள்விப்பட்டு சரிவர விசாரிக் காமல் மீனாட்சியைக் குடுப்பதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். அவன் தாலுக்கா ஆபீஸில் கிளார்க் என்கிற கவர்மென்ட் வேலை கவர்ச்சி வேறு. அதனால் குறை இல்லாமல் செய்முறை களைச் செய்து கல்யாணத்தை முடித்து வைத்தார். ஆனால், நடந்ததோ வேறு.

கட்டிக் குடுத்து மறுவீட்டுக்கு வந்திருந்த முத்துக்கிருஷ்ணன் மூணாம் நாளே இவர் கண் முன்னாலேயே பொண்டாட்டியை முக்காலியால் அடித்தான். அடித்த அடியில் அவளது மூஞ்சி தண்ணிப்பழம் போல வீங்கிவிட்டது. அந்த நிமிஷம் கொலை விழுந்திருக்க வேணும். அவ்வளவு கோபம் நல்லுச் சாமிக்கு. உடம்பெல்லாம் சாமி வந்தது போல நடுங்கியது. சுத்தியும் ராவினதில் கீழே மாப்பிள்ளைக்காரனுக்கு வாங்கி இருந்த புதுச் செருப்புதான் கிடைத்தது. எடுத்து வீசினார். பெத்த புள்ளைய முக்காலியைக்கொண்டு மூஞ்சி மேல அடிக்கிறவனைப் பாத்துக்கிட்டு சும்மாவா இருக்க முடியும்?

மருமகன் முத்துக்கிருஷ்ணன், அன்று மத்தியானம் கறிச்சோறு என்கிற காரணத்தால் சைக்கிளில் நாலஞ்சு மைல் போய் பக்கத்து ஊர் கம்மாக்கரை கருவேல மரங்களுக்கு இடையில் காய்ச்சிக்கொண்டு இருந்த ஊறலை வடிகட்டிச் சுடச் சுடக் குடித்துவிட்டு வந்திருந்தான். அந்த மிதப்பில் கறிக் கஞ்சியை வக்கணையாகத் தின்று முடித்து வெத்திலையும் போட்டு இருந்தான். இவர் வீசிய செருப்பு சரியாக அவன் வாய் மேலேயே பொடீ ரென்று அடித்தது. ஈறுகளில் ரத்தம் வடிய உதடு ‘பொம்’மென்று வீங்கிவிட்டது. குடிவெறியும், அடிவெறியும் சேர்ந்துகொள்ள அவன் நல்லுச்சாமி மீது பாய்ந்தான். அதன் பிறகு நடந்தவை அந்தக் கிராமத்தின் சரித்திரப் பதிவேடுகளில் ரணகளமாகப் பொறிக்கப்பட்டவை. ‘மறுவீடு வந்த இடத்தில் பொண்டாட்டி மூஞ்சியில முக்காலியைக் கொண்டு அடிச்சவன்’ என்கிற பட்டத்தையும் ‘மறுவீடு வந்த மருமகனைச் செருப்பால் அடிச்சவன்’ என்கிற பட்டத்தையும் முறையே முத்துக்கிருஷ்ணனும், நல்லுச்சாமியும் பெற்றனர்.

அந்தச் சின்னக் கிராமத்தில் நல்லுச்சாமி பண்ணிய காரியம் பாரதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்ததைவிடவும் மோசமானதாகக் கருதப்பட்டதில் வியப்பு இல்லை. (ஆயிரம் இருந்தாலும் மருமகனைச் செருப்பைக்கொண்டு அடிக்கலாமா?) இவர் வீசிய செருப்பில் முத்துக்கிருஷணனின் முக்காலிப் பிரயோகம் பின்னுக்குப் போய்விட்டது. ஊர் தூற்றியது நல்லுச்சாமியை. முத்துக்கிருஷ்ணன் வாசலில் நின்று சூளுரைத்தான். ”அம்புட்டுத்தான்டா… அம்புட்டுத்தான்… அத்துப்போயிருச்சு பூராவும். உன் மகளை இனி நீயே வெச்சு வாழ்ந்துக்கடா கிழவா.”

கட்டியவளை நோக்கிக் காறி உமிழ்ந்துவிட்டு அவன் செல்ல… இன்னும் தாலிகூடப் பிரிக்காத மீனாட்சி கண்ணீர் வற்ற வற்ற அழுதாள்.

கிராமத்தில் இது மாதிரி சந்தர்ப்பங்கள் ஊர் ஜனங்களுக்கு ரொம்பவே சுவாரஸ்யமானவை. எல்லாரும் தேடித் தேடி வந்து சுவாரஸ்யமாகப் பொரணி பேசினார்கள். எல்லாரும் சொல்லிவைத்த மாதிரி நல்லுச்சாமியைத்தான் குற்றவாளி ஆக்கினார்கள். மருமகனை அடிக்கிறது தப்பாம்! ”யோவ்! பொண்ணை அடிச்சானேய்யா… அதைப் பத்தி ஏன் எவனும் நியாயம் சொல்ல மாட்டேங்கிறீங்க?” என்று நல்லுச்சாமி கேட்டார். அதற்கு, ”நாம பொண்ணைக் குடுத்திருக்கோம் நல்லு… அவன் பொண்டாட்டியை அவன் அடிக்கிறான். சாஸ்திரத்திலயே புருஷனுக்கு உரிமை இருக்கே. அதை எப்படித் தப்பு சொல்ல முடியும்?” என்று ஒரு நியாயவான் சொல்ல, ”பொண்டாட்டியை முக்காலியால அடிக்கணும்னு எந்த சாஸ்திரத்திலடா போட்டிருக்கு… பொச கெட்டவனே” என்று நல்லுச்சாமி கேட்டது இன்னொரு தகறாராகிவிட்டது.

மனசொடிந்து போன நல்லுச்சாமிக்கு அடுத்த வாரமே இன்னொரு சிக்கல் வந்துவிட்டது. மீனாட்சி தலை சுத்துது என்று சொல்ல, வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்து மீனாட்சி உண்டாகி இருக்கும் தகவலைச் சொன்னார். நல்லுச்சாமி குழப்பத்துடன் பொண்டாட்டியைப் பார்த்தார். அவள் முகமோ ரொம்பப் பரிதாபமாக இருந்தது. மீனாட்சிக்கு சந்தோஷமும், சந்தேகமும் கலந்து பெற்றவர்களைப் பார்த்தாள்.

”இப்ப என்னம்மா செய்யிறது?”- மீனாட்சியின் குரலில் தெரிந்த வேதனை நல்லுச்சாமியை நொறுக்கியது. ரோஷத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, மருமகனிடம் ஆள்விட்டுச் சமாதானம் பேசினார். அவன் சட்டை பண்ணவே இல்லை. பல முறை முயற்சித்துவிட்டு, பிறகு மனைவி பாக்கியத்தையும் அழைத்துக்கொண்டு மருமகனைத் தேடிப் போய்ப் பார்த்தார். புருஷனும் பொண்டாட்டியும் அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்கள். அவன் உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றான். இன்ன அளவென்றில்லை அவன் பேசிய பேச்சு. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார்கள்.

சேகர் பிறந்தான். மறுபடியும் நல்லுச்சாமியும் பாக்கியமும் மருமகனைத் தேடிப் போனார்கள். முத்துக்கிருஷ்ணன் முன்பு என்ன பேசினானோ அதையேதான் இப்பவும் பேசினான். அவனது ஆத்தாளும் அக்காளும் அதற்கு மேலே பேசினார்கள். நல்லுச்சாமி அவனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார். ஆனால், அவன் இறங்கி வரத் தயாராக இல்லை.

நல்லுச்சாமியும் பாக்கியமும் தொங்கிப்போன முகத்துடன் வீட்டுக்கு வந்தார்கள். மீனாட்சி பச்சை உடம்புடன் பக்கத்தில் பிள்ளையைப் போட்டுப் படுத்திருந்தாள். இவர்கள் நுழைந்ததும் அவள் முகத்தில் ஆவலுடன் வாசலைப் பார்த்தாள். புருஷன் இல்லாமல் பெற்றவர்கள் மட்டும் திரும்பி வந்திருப் பதை உணர்ந்தாள். ”அவர் வரலியா ஐயா?” என்றாள் மீனாட்சி பதில் தெரிந்தவளாக.

”இல்லம்மா. ஆம்பளைப் புள்ள பிறந்திருக்குன்னு சொன்ன பிறகும் மாப்ள வர மாட்டேன்னுட்டாரு.”

”அவரோட ஆத்தாளும் அக்காக்காரியும் நல்லாத் தூண்டிவிடறாளுக மீனாட்சி. எங்களை நாயைப் பேசறாப்ல பேசுறாரு உம் புருஷன்” என்றாள் பாக்கியம்.

நல்லுச்சாமி பெருமூச்சுவிட்டார். ”ஒரே ஒருநாள் ரோஷப்பட்டது இம்புட்டுப் பெரிய தப்பாப் போச்சேம்மா. அதுக்குப் பிறகு ரோஷத்தைத் தலை முழுகிட்டுப் பத்து மாசமா நடையா நடந்துட்டேன். உம் புருஷன் தராதரம் தெரியாதவன். அவன் கால்ல நாய்கூட விழுகாது. ஆனா, நான் விழுந்தேன். ப்ச்! ஒரேயடியாத் தலையைக் குலுக்கிட்டாம்மா.”

”விட்டுத்தள்ளுங்கப்பா” என்றாள் மகள் தீர்மானமாக. வருடம் மூன்றைத் தாண்டிவிட்டது.

பேரனுடன் வீட்டுக்குள் நுழைந்தார் நல்லு. வீடு வித்தியாசமாக இருந்தது. பொண்டாட்டி ஒரு பக்கமும் மகள் ஒரு பக்கமும் உம்மென்று இருந்தனர். என்ன சங்கதி என்று கேட்டார். மருமகன் வந்திருந்தானாம். ‘இத்தனை நாள் என்னமோ விலகி இருந்துட்டோம்…

இனிமேல்பட்டு அப்படியே போயிர முடியுமா? ஆம்பளைப் புள்ளையைப் பெத்துருக்கேன். அதை இந்தப் பட்டிக்காட்டுல விடறதுக்கு மனசில்ல. ரெண்டு பேரையும் நாலஞ்சு நாள்ல கூட்டிட்டுப் போகணும்’ என்று சொன்னானாம்.

நல்லுச்சாமிக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் திடுதிப்பென்று வந்து கூப்பிடுகிறான்? யோசித்தார்… பிறகு கேட்டார். ”காசு கீசு கேட்டானாடி?”

மனைவி தயக்கத்துடன் சொன்னாள், ”வேலை போயிருச்சாம். லஞ்சம் வாங்குனப்ப சிக்கிக்கிட்டாராம் மாப்ள. கொஞ்சம் பணம் வேணுமாம்… ஏதாச்சும் கடை கண்ணி வெச்சுப் பொழைச்சுக்கிருவாராம்.”

நல்லுவுக்குப் புரிந்துவிட்டது, ”அதானே பாத்தேன். என்னடா, எலி என்னத்துக்கு அம்மணமாப் போகுதுன்னு. இதுதானா சங்கதி?”- கடுப்பாகச் சொன்னார். ”வக்கத்துப் போனவுடனே தேடி வர்றானா ராஸ்கோல்! நான் அனுப்ப மாட்டேன். என் பேரனை நான் ராசா மாதிரி வளர்ப்பேன்.”

”ம்க்கும். உங்க மக போறதுன்னு முடிவு பண்ணிட்டா, நீங்க வேற!”

திகைத்தார் நல்லு. நம்ப முடியாமல் மகளைப் பார்த்தார். ”என்னாம்மா… நிசமாவா சொல்லுற?”

”ஆமாய்யா” என்றாள் மகள். ”இங்கியே இருந்தா எம் புள்ளை உருப்படாமப் போயிருவான்.”

”என்னது..?” நல்லுச்சாமிக்குப் புரியவில்லை. ”என்னம்மா சொல்றே?” என்று பதைத்துப் போய் மகளைக் கேட்டார். பேரனைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார். கூடவே, கூட்டிக்கொண்டு அலைகிறார். இவர் சம்பாத்தியம் எல்லாம் அவனுக்குத்தான்.

மகள் சொன்னாள், ”இந்தப் பட்டிக்காட்ல இருந்தா புள்ளை முட்டாளாயிருவானாம். டவுன் ஸ்கூல்ல எல்கேஜி சேத்து, பூட்ஸ் போட்டு, யூனிஃபார்ம் மாட்டி புள்ளைய அனுப்ப வேணாமா? அதும் மத்த புள்ளைங்க மாதிரி, டாடி, மம்மின்னு சொல்ல வேணாமா? இன்னமும் தற்குறி மாதிரி அவ்வா, தாத்தா, அம்மான்னு என் புள்ளை சொல்லிக்கிட்டுத் திரியணுமான்னு எம் புருசன் கேக்கறாரு. அவரு சொல்றதும் சரிதானே?”

”என்ன சரியாச் சொல்லிட்டான் உம் புருசன்? நம்ம ஊருல எல்லாப் புள்ளைகளும் அப்படித்தானே வளருது? நீயும் அப்படித்தானே வளர்ந்தே?”

”ம்ஹ§ம், அவர் சொல்றது சரின்னுதான் எனக்கும் படுது. இவனைத் தினம் தினம் தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போயிர்றீங்க. தவளை பாத்தேன், காக்கா பாத்தேன், பட்டுப்பூச்சி பாத்தேன்னு லூசு மாதிரி பேசுறான். இப்படியேவிட்டா அவன் தலையெழுத்தும் உங்களை மாதிரியே ஆயிரும். வேணாம், எம்புள்ளை டவுன்லதான் வளரணும்.”

கோபமும், எரிச்சலுமாக அவள் பேசியதில் வாயடைத்துப் போனார் நல்லுச்சாமி,

சேகர் ஓடி வந்தான், ”தாத்தா! அன்னிக்கொரு நாள் நீ எனக்கு மயில் காமிச்சேல்ல, அது மாதிரி மயிலு டி.வி-யில வருது தாத்தா.”

இனிமேல் இவன் அதையெல்லாம் டி.வி-யில்தான் பார்த்தாக வேண்டும் என்று நல்லுச்சாமிக்குத் தோன்றியது!

– ஆகஸ்ட், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *