எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.
இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள்.
பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு எவ்வளவு கிடைக்கும். ஒரு லட்சம்.அப்புறம் ஜிபிஎப் எல்லாம் சேர்த்து சுமாராக நாலு லட்சம் கிடைக்குமா? அதில் கடனெல்லாம் போக இரண்டு லட்சம் மிஞ்சும். அதை வைத்து எத்தனை நாள் சமாளிக்க முடியும்?
இப்படியெல்லாம் யோசிப்பேனென்று காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது கூட நினைக்கவில்லை.
காற்று அசைவற்று நின்றிருக்க, கழுவித் துடைத்தது போல் ஆகாயம் மேகங்களற்று வெறுமையாக இருந்தது.
மணி பதினொன்று இருக்குமா? ட்ரெயின் பதினொன்று இருபதுக்கு. சந்துரு இன்னேரம் கடிகாரத்தையும், நுழைவாசலையும் மாறி மாறி பார்த்தபடி அவசரத்தில் நான் வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்த செல்போனில் என்னை அழைத்துக் கொண்டிருக்கலாம், இருவரும் அலுவலக விஷயமாக பெங்களுருக்குச் செல்ல வேண்டும்.
சட்டென்று ஜானகியின் நினைவு வந்தது. சிவா,உங்களுக்கு புடிச்ச யானை, எனக்கு பிடிச்ச ரயில் ரெண்டிலேயும் புராதனமான ப்ரௌன் கலர் இருக்கு கவனிச்சீங்களா? பெட்டிகளெல்லாம் வரிசையா போறதப் பாக்கறப்ப ஒரு பெரிய யானைக் கூட்டம் வாலைப் புடிச்சிக்கிட்டு ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா போற மாதிரி இல்லையா
இப்படியெல்லாம் பேச அவளால்தான் முடியும்.
வாழ்நாளெல்லாம் உடன் வந்திருக்க வேண்டிய அற்புதமான உறவை தன்னிலை மறந்த ஒரு விஷ வினாடியில் புரண்ட என் நாக்கு விஷம் தோய்ந்த கத்தியென மிகுந்த கூர்மையுடன் துண்டித்து எறிந்த போது, நூறு ஜென்மங்களுக்குப் போதுமான அன்பை என் மேல் பொழிந்த அவளது கண்களிலிருந்து பெருகி கன்னங்களில் புரண்டோடிய உஷ்ணமாக கண்ணீரை இப்போது நினைத்தாலும் உயிர் கூசுகிறது.
ஜானகி, நீ என் மேல் வைத்திருந்த புனிதமான அன்பின் பெயரால் கேட்கிறேன்.என்னை மன்னித்தேனென்று ஒரு வார்த்தை சொல்.
வறண்ட போன நா நரம்புகளெல்லாம் தண்ணீருக்காகத் தவித்தன.
நான் ஓட்டி வந்த பைக், நூறடி தள்ளி கிடக்கிறது. என்னை மோதித் தள்ளிய லாரி இந்த நேரத்திற்கு பத்து கிலோமீட்டராவது தள்ளிப் போயிருக்கும். என் கால்கள் உடைந்து, தகிக்கும் சூரியனின் கீழ் கிடக்கும் என் பின்னந் தலையிலிருந்து வெளி வந்த ரத்தம் இடது காதை, கன்னத்தை நனைத்து சாலையில் பரவ ஆரம்பித்தது.
என்னைச் சுற்றிலும் கூட்டம் கூட ஆரம்பித்தது.
வினாடி நேரம் தயங்கி விட்டு வாகனங்கள் நகர்ந்து சென்றன,
அடப் பாவமே சின்ன வயசா இருக்கானேய்யா.எவன் அடிச்சிட்டுப் போனான்னு தெரியலையே
பைக்ல போற மாதிரியா போறானுக. ராக்கெட் ஓட்றதா நெனப்பு.இப்ப ரோட்ல கெடக்கறத பாத்தியா
100 சிசிக்கு மேல இருக்கற பைக்கையெல்லாம் மொதல்ல தடை பண்ணனும்.
யாராவது 108க்கு போன் பண்ணுங்கப்பா
மிகவும் ஆழமான கிணற்றிலிருந்து ஒலிப்பது போன்ற மெலிதான குரல்களின் பின்னணியில், மிக மோசமாக shake ஆன புகைப்படத்தைப் போல சுற்றி நின்ற உருவங்கள் தெளிவில்லாமல் தெரிய, அம்மா, அப்பா, ஜனனி, பாப்பா, சந்துரு எல்லோருடைய பிம்பங்களும் நினைவறைகளின் சுவர்களில் கலங்கிய சேறு போல குழம்பிக் கொண்டிருக்க,அடர்ந்த இருளுக்குள் நழுவ ஆரம்பித்தேன்.