கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 19,901 
 

‘…. இன்றைய மேடுபள்ள வாழ்வில் ஏழைகள் வாழ்க்கையின் எதிரிகளுடன் மாத்திரமல்ல, தங்கள் உடல்களில் தோன்றுகிற இயற்கை உணர்ச்சிகளுடனும் போராடவேண்டியிருக்கிறது. அதுவும் ஏழையின் தலையில் ஒரு தியாக வேள்வியாகிவிட்டது’

‘விடியமுதல் வெளியே போன துரையப்பன், மதியமாகும்போது கழுத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்து திண்ணையில் சரிந்தான்.

‘இண்டைக்கும் அடிப்பிலே உலை ஏறாதுபோல கிடக்கே’

உள்ளம் வெதும்ப, சின்னத்தங்கம் அவனைப் பார்த்தான்.
அவன் இவளையும், இவள் அவனையும் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகள் ‘வழக்கம் போலவே’ ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டன:

‘ஆச்சி பசிக்’குதணை. சோறு தாணை’

சின்னத்தங்கம் அடுக்களைக்குள் சென்று உறியிலிருந்த பழஞ்சோற்றை இறக்கி வைத்துவிட்டு, அடுக்குப் பெட்டிக்குள் வைத்த பனாட்டுத்தட்டைத் தடவ ஆரம்பித்தாள்.

‘சீமாட்டி சின்னத்தங்கம் ‘குபேரன்’ துரைப்பனைக் கைப்பிடித்து மூன்று ஆண்டுகள். ஒரு நாள்கூட நல்ல சோறுகறி வாயில் வைத்தறியாத ஒரு ஜீவன் அவள். மிஞ்சிப்போனால்  நெத்தலிக்கருவாட்டுக்கறியும், அமெரிக்கன் மாப்புட்டும், பனாட்டுத் துண்டுகளும்தான் அவள் கண்ட சொகுசு.

இந்தக் ‘குபேர வாழ்க்கை’ போதாதென்று மூன்று ஆண்டுகளுக்குள்ளே இரண்டு ‘குழந்தைச் செல்வங்கள்;’

கேட்கவேண்டுமா?

யாழும் குழலும் தோற்றுவிக்குமளவுக்கு, ‘இன்னிசை’யை ரசித்துக்கொண்டிருந்தது துரையப்பன் குடும்பம்.

இதோ இந்த நாலாவது வருஷம்…

கஞ்சியும் கூழுமாய்க் காலம் கடத்திவந்த துரையப்பன் குடும்பம் இடைப்பட்ட காலங்களில் உப்புக்கஞ்சியோடு படுத்த இரவுகளே அதிகம். அடுப்பே புகையாத நாட்களும் உண்டு.
துரையப்பன் முகத்தில் கண்ணீர்த் துளிகள் ‘பொடுக்கிட்டு’ விழுந்தன. அன்றும் அவன் வேலைக்குப் போகவில்லை.

வேலையே கிடைக்காத அந்தப் பயங்கர உலகத்தை நினைத்தபோது அவர் நெஞ்சு ஆக்ரோஷித்தது.

அப்படியே அயர்ந்துவிட்டான்.

நள்ளிரவு.

கண்களை அகலத் திறந்து விழித்துப் பார்த்தான். அரிக்கன் லாம்பு மங்கலாய் எரிந்துகொண்டிருந்தது.

மெதுவாகத் தணித்தான்.

விளக்கின் ஒளி லேசாக மங்கியது. அவனுக்கு ஒரு வித ‘மயக்கம்’

உலகம் பிரளயம் எடுத்து இரந்து கொள்வதாக  அவனுக்கு ஓர் உணர்வு.

அவன் சடலம் எரிந்தது. இரத்த நாளங்கள் குமுறி, முறுகித் துடித்தன. ‘கிண்’ என்று அனற் காற்று தேகம் முழுவதும் படர்வதுபோன்ற ஒருவித வீறுணர்வு. உடம்பு துன்னியது.

‘தங்கம்’

வறட்டிய தொண்டை கரகக்க மெதுவாக அவளை அழைத்தான்.

நெஞ்சில் இடியேறு விழுகிறதாக ஒரு பிரமை.

‘நானும் ஒரு மனுசனா? ஒரு கவளம் சோற்றுக்கு வழியைக் காணன், அதுக்குள்ளே ‘இது’ என்ன சவத்துக்கு?’

இருந்தும் கெந்தக மேனியை அவன் மனசால் அடக்க முடியவில்லை.

போராட்டம் சினைப்பெடுக்கிறது.

சில விநாடிகள் கழிந்தன….

மீண்டும் உடல் கெந்தகித்து எழுந்தது.

‘சீ, நான் ஒரு நாய்ப் பிறவி. இல்லை, ‘ஆட்டுக்கிடாய்’ போலக் காமம் பிடித்தவன்’

அவனின் மனக் குரங்கு கோணிக் குமைந்தது.

பக்கத்தே மூன்று வருஷங்களுக்குள் கிடைத்த ‘செல்வங்கள்’ கந்தைத் துணிகளால் போர்த்தப்பட்டதாக மூடப்பட்டுக் கிடந்து உறங்கிக்கொண்டிருந்தன.

என்றாலும், அவற்றையெல்லாம் அடித்து மீறி எகிறிய உணர்ச்சிகள் மேனியிற் சில்லிட்டன.

‘ஐயோ, எனக்கு இந்த எண்ணம் வரவேண்டாம். தங்கம் விரும்பினாலும்… நான்…ம்கூம்..அதுவும் பாவம், வருத்தக்காறி. இந்தச் சண்டாள உறவு இனி வேண்டாம்’

தனக்குள் கறுவிக்கொண்டான்.

அவன் கண்கள் கிறங்கின. உடல் தீய்ந்தது.

கண்கள் அவளை உணர்வூறி வெறித்துப் பார்த்தன. ஷணத்தில் வெறித்த அந்தக் கண்கள், மயக்கமுற்றுப் பூஞ்சணமடித்துப்போய்விட்டன.

அப்பால் அவனுக்குக் கண்கள் தெரியவில்லை. காதுகளும் கேட்கவில்லை.

ஆறு மாதங்களை எப்படியோ இப்படி இறுகப்பிடித்துத் தனது இந்தச் சடலத்தைக் கட்டி வைத்தவன் அவன்.

மின்மினி விளக்கொளியில் தங்கச் சரடுபோல் தங்கம் அப்போது பிரகாசித்தாள்.

கண்களை விழித்துப் பார்த்தான்.

அவள் நிமிர்ந்து மல்லாக்காய்க் கிடந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

கரங்கள், கால்கள், சர்வாங்கம்… எல்லாமே வெறிகொண்டு துடித்தன.

‘தலைக்கு மேல் வந்த வெள்ளம் சாண் ஏறினால் என்ன, முழம் ஏறினால் என்ன? இரண்டும் ஒன்றுதான்’

ஒரு ‘திடீர் ஞானம்’ அவனுக்கு உதித்தது.

‘தங்கம்… ஏய்…’

அவளின் காதோடு வாளை வைத்து மெல்ல அரட்டினான். அந்த ஆளரவம் கேட்டு இந்த அழகொளி வீசும் பொற்சிலை திரும்பியது.

‘ஏய் தங்கம்’

‘ம்…’

‘த்சொ… ஏய் தங்கம்’

உணர்ச்சிப் பிளம்பான அனற்கொதிப்பு அகோரித்துப் பற்றியது.

அடுத்த கணம் கடலில் விழுந்தாயிற்று.

அற நனைந்தவனுக்கு கூதல் என்ன, கொடுகடி என்ன? நனைந்தவன் நனைந்தவன்தான்.

விடிந்தது.

ஆனால், துரையப்பனுக்கு அந்த விடிவே நெஞ்சில் இடி விழுந்தது போலாயிற்று.

ஒரே ஏக்கம்.

அந்தத் தவிப்பை, அவனுக்கு வரும் ‘அந்த நாளை’ எதிர்பார்த்து மனதிற் குமைந்துகொண்டிருந்தான்.

அவளுக்கு அந்த ‘வழக்கமான நாள்’கூட வந்துவிட்டது.

ஆனால், அவன் எதிர்பார்த்தது வரவில்லை.

‘தங்கம்’

ஈனக் கண்களால் துரையப்பன் அவளை அழைத்தான்.

அவன் முகத்தில் திணறடித்த தவிப்பும், நெஞ்சில் விவரிக்கமுடியாத சுமையும் கூடின.

‘இப்ப எதுக்கு இந்தச் சோகம்? நீங்கள் சரியான அவசரம் பிடிச்ச மனுசனப்பா’

‘அது சரி தங்கம், ‘அது’ என்ன மாதிரி இருக்கு?’

‘மாதிரி என்ன? இந்த முறை தப்பாமல் சனிக்கும்’

‘ஆ’

அவன் விழிகள் பேந்தப் பேந்த முழிசின. அவளுக்கென்ன, அவனல்லவா உழைத்து மாரடிக்கவேணும். அவளுக்கு, ‘பெறுவது’ தானே வேலை.

‘என்ன தங்கம், நீ உப்பிடிச் சிரிக்கிறாய். வாய் துறந்து சொல்லு.. இப்ப என்ன மாதிரிக் கிடக்கு? ஏதாவது மாற்றம் கீற்றம் இருக்கா?’

‘என்னத்தைச் சொல்றதாக்கும். இனிமேல் கிட்டா தெண்ட நினைப்பில அவசரப்பட்டு நடந்திட்டு, இப்ப ஏன் உப்பிடி அங்கலாப்பான்? இதோட மூண்டாகிவிட்டால்…?’

என்ன தங்கம் நீ விளையாடுகிறாய். உண்மையைச் சொல்லு. தேகம் இப்ப எப்படி இருக்கு?’

அவனின் பதைபதைப்பைக் கண்டு அவள் அழுதே விட்டாள்.

‘எல்லாம் நாலு அஞ்சு நாளில் தெரிஞ்சிடும். அதுவரை மனத்தை அலட்டிக்கொள்ளாமல் இருங்கோ. ‘கடவுள் தருவதை’ நாங்கள் என்ன செய்யமுடியும்?’

‘ஒரு குவளை கஞ்சி குடிக்கவே நாய் படாப்பாடு. இந்தக் கஸ்டத்தைப் போக்காத இந்தக் கடவுள் இதை மாத்திரம் அள்ளிக்கொட்ட வந்திட்டாராம். உலகத்துப் பெண்களுக்கெல்லாம் அவர்தான் பிள்ளைகளைக் கொடுத்தாரா?

சீறிச் சினந்துகொண்டே துரையப்பன் வெளியே கிளம்பினான்.

‘வரேக்க பிஞ்சுப் பப்பாளிக்காய் கிடைச்சால் கொண்டு வாங்கோ. அதையாவது திண்டு பாப்பம்’

அவள் கேட்ட பப்பாளிக் காய்களோடு அவன் செக்கல் நேரம் வந்து சேர்ந்தான்.

விடிந்துகொண்டு வந்தது.

ஆனால், அவனுக்கு விடிவதாயில்லை, மனசு குமைந்து கறுவியது. பிரமை பிடித்தவன் போல் எழுந்த அவன் நெஞ்சில் ஒரே இடியேக்கம்.

‘வருகிற நாள்’ போய், நான்காம் நாளும் வந்து விட்டது.

உணர்ச்சிப் பிரவாகத்தை அடக்கிப் பொறுத்துப் பார்த்திருந்த விடிவுநாள் அது. விடிவையும் இரவையும் நிர்ணயிக்கும் சோதனை நாள்.

‘தங்கம்’

அவள் கவலை தோய்ந்தபடியே முகத்தைதக் கோணிக்கொண்டு அவனைப் பரிதவித்துப் பார்த்தாள்.

‘என்ன தங்கம், சரிபட்டு வந்ததா?’

‘ஒண்டையும் யோசிக்காமல் கண்கடை தெரியாமல் நடந்திட்டு இப்ப விழி பிதுங்க முழித்தால்…?’

‘நீ சொல்றது சரிதான் தங்கம். ஆனால்…?;’

‘ஆனால் என்ன…?’

‘நான் சொன்னதை மட்டும் நீ கேட்டு நடந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் தவிப்பானேன்?’

இரண்டு வருஷங்களுக்கு முன் அவன் அவனிடம் ‘கர்ப்பப்பையை  ஒப்பரேஷன் செய்ய வேண்டும்’ என்று ஆலோசனை கூறினான். அவளோ தன்னை ஒரு சோஷலிஷ நாட்டுப் பெண்ணென நினைத்து, ‘பிள்ளைப் பாக்கியம் வேணும்’ என்று ஆசைப்பட்டு அந்த ஆலோசனையை நிராகரித்துவிட்டாள்.

இப்போது இந்தப் ‘பெரும் பாக்கியம்’ கிடைத்திருக்கிறது.

அந்தி பிந்தி இருட்டியது.

அரிக்கன் லாம்பை அவள் கொழுத்தினாள். அவள் மனசிலே ஒளி இல்லை.

தன்பாட்டில் திண்ணையில் படுத்துக்கொண்டு பீடித்துண்டை பற்ற வைத்த வண்ணம் ‘ஈன ஜென்மம் எடுத்தேன் என் ஐயனே’ என்ற சுடலை ஞானப் பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் நெஞ்சு குமுறிக் கலங்கி உருகிக் கண்ணீராய் வழிந்தது.

தங்கம் பதறி, விம்மி, ஊளைக்குரல் எடுத்து அழுதாள். தாய் அழ, குழந்தைகள் அழத் தொடங்கின.

;நீ அழாதை தங்கம். நான் படுபாவி… ஒரு குடும்பத்தை உழைச்சுக் காப்பாத்த வலுவில்லாதவன்…. நீ அழாதை….’

‘உதென்ன பேச்சு. ஆகவும் சின்னக் குழந்தை போலப் பேசவேண்டாம். உழைப்பு ஒண்டு இல்லையே தவிர இந்தக் குடிசை வாழ்க்கையில் எங்களுக்கு என்ன குறைஞ்சுபோச்சு?’

‘அதுக்கில்லை, நாங்கள் ஏழைகளாய்த்தான் சீவிக்கிறம். ஆனால், உணர்ச்சி செத்தவர்களாகவும் ஆசையை அறுத்தவர்களாகவும் சீவிக்க முடியாது. தங்கம் நாங்கள் செத்த பிணங்களைவிடக் கேவலமாக….’

அவன் தொண்டை கரகரத்தது.

தங்கம் கேட்டாள்:

‘ இன்றைய மேடுபள்ள வாழ்வில் ஏழைகள் வாழ்க்கையின் எதிரிகளுடன் மாத்திரமல்ல, தங்கள் உடல்களில் தோன்றுகிற இயற்கை உணர்ச்சிகளுடனும் போராடவேண்டியிருக்கிறது. அதுவும் ஏழையின் தலையில் ஒரு தியாக வேள்வியாகிவிட்டது’ என்று கூறிய நீங்களே இப்பிடி மனம் தளர்ந்து கலங்கினால், நான் தாங்குவேனோ?’

‘ஓம் தங்கம்,  அதுசரிதான். ஆனால்…’

‘என்ன சரிதான். ஏங்க சிரியுங்கோ பார்ப்பம்’

அவள் சிரிப்பித்தாள்.

‘இங்கே  பாருங்கோ’

‘என்ன தங்கம்’

‘இதோ விடிவு’

‘அப்படியா சங்கதி, எங்கே?’

‘சும்மா கிடவுங்கோ. நீpங்கள் எதிலும் பச்சைப் பிள்ளைமாதிரி’

நாணத்தால் சிவந்துபோன  அவள் முகத்தில் ஒரு விடுதலை ஒளியை அவன் கண்டான். அந்த ஒளிக்குள்ளே அவன் தவிப்புள்ளம் புகுந்து விடிவு கண்டது.
அவள் புடவையை அவன் பார்த்தபோது…

அதிலே செங்குருதி வடு…

‘அப்பாடா!’

அவன் மனம் இன்ப சாகரத்தில் சஞ்சரிக்கலாயிற்று.

அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.

‘அம்மாடி, ஒரு கண்டம் தவறிவிட்டது… இனி, கவனம்’

சுட்டி விரலால் செல்லமாக அவனை உறுக்கினாள் தங்கம்.

(1954 – தாமரை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)