தழும்பும் அழகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,569 
 
 

“நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது அணைத்து வைக்கபட்டுள்ளது, சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “

இதை சொல்லும் அந்த குரலுக்கு தெரியாது இவன் 50 நிமிடங்களாய் அதே குரலை, 1௦௦ தடவைக்கு மேல் கேட்டுவிட்டான் என்று. ஆனாலும் அவனால் அதனை கேட்காமல் இருக்க முடியவில்லை.

பலமுறை பலகுறைகளை சொல்லி வரங்களை கேட்டு வணங்கிய தெய்வம் எதுவும் செய்யாமல் கல் போல் அமர்ந்த போதிலும், மீண்டும் சென்று வணங்கும் பரம பக்தனை போல் அந்த பதிவிட்ட குரலை பல முறை கேட்டுவிட்டான் அவன். ஒரு முறையாவது அது அவள் குரலாய் மாறாதா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும், கோபங்களாய் மாறி அவனை கொந்தளிக்க செய்தது. காற்றாடி சுழன்ற போதிலும் அவன் முகம் வியர்வை துளிகளாய் நிரம்பி இருந்தது. ஏதோ கரிதுண்டை கடிப்பது போல் பற்களை நர நர வென கடித்து எதை சுவைக்கிறான் என தெரியவில்லை.

அந்த கும்மிருட்டில், யாருமே இல்லாத அறையில் சுழலும் காற்றடியுடன் அதனை விட வேகமாய் சுழலும் அவன் தலையை ஒரு நிலைக்கு கொண்டு வருகையில் அந்த நர நர சத்தம் அவனுக்குள் ஒரு மிருகத்தை கொஞ்ச கொஞ்சமாய் வெளிவர செய்து கொண்டிருந்தது.இவனை மிகுந்த வெறிக்கு உள்ளாக்குவது, “சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “ – என்ற அந்த வாக்கியம் தான்.

அந்த குரலை நம்பி இவனும் தொடர்ந்து ,சில நிமிடங்களுக்கு பின்னும், பல நிமிடங்களுக்கு பின்னும். மீண்டும் மீண்டும் அதே பதில்.

கோபம் அவள் மீதிருந்து அந்த கைபேசி குரலின் மீது தாவியது.

“சிறிது நேரம்” – இந்த சிறிது நேரம் என்ற அந்த நேரத்தின் முழுகால அளவை அறிந்து கொள்ளும் வெறி மேலெழும்பி நிற்கிறது. அந்த குரலுக்கு சொந்தமானவரை கண்டுபிடித்து குரல்வளையை அறுக்க வேண்டும். அதுபோல் கைகளை மேசையின் மீது துழாவினான். அதே வேளையில் அவனது வலது கை கைபேசியில் மீண்டும் அதே எண்ணை அழைத்தது.

“நீங்கள் தொடர்பு கொண்ட எண்……..”

“சிறிது நேரத்திற்கு பின்…..”—— ஐயோ ஐயோ.

கத்தி கொண்டே மேசையின் மீது இடதுகையை அலையவிட்டான். அது அங்கிருந்த கணினி,விசைபலகை, புத்தகங்கள் என அனைத்தின் மீதும் மோதி சப்தத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தியது.

கருத்த இருளின் அமைதியில், மின்விசிறியின் தாலாட்டு இசையில், உறங்கி கொண்டிருந்த அந்த அறை இவனின் செயல்களால் விழித்து கொண்டது. எதைபற்றியும் யோசிக்காமல் அவன் இடது கையில் அடிபட்ட பேனா குடுவை மேசையின் மீது சரிந்தது.சப்த சிதறல்கள் மேலும் கூடியது. அவன் கையில் அகப்பட்ட ஏதோ ஒன்று அதை இருகபிடித்தான். பிடித்த பின்னும் கையின் ஆட்டம் அடங்காமல் அதிகரித்தது. அங்குமிங்கும் காற்றில் அந்த இனமறிய பொருள் உரசியது. ஏதோ ஒரு வேகம் தன் உடலின் வலது தோள்பட்டை மீது அதைகொண்டு உரசினான். அந்த உரசல் அவனுக்கு ஏதோ இன்பத்தை தந்திருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று, நான்கு முறை உரசினான். முடிந்தது..அந்த குரலை குத்தி கிழித்து தன் ஆசை தீர்ந்துவிட்டதாய் களைப்பில் நாற்காலியில் சாய்ந்தான். அனைத்தையும் அமைதியாய் வேடிக்கை பார்த்துகொண்டு இவன் கதறலுக்கு காரணம் தேடிகொண்டிருநதது அந்த இருட்டறை.

தோள்பட்டை ஏதோ ஈரம் உணர்த்த, சின்ன உறுத்தல் உருவாகி உடனே எழுந்து தடுமாறாமல் குளியல் அறை நோக்கி நடந்தான். ஆறு மாதம் பகலிலும் இரவிலும் அதே இடத்தில் பனி, உறக்கம், குளியல், குதூகலம் என எல்லாம் நிகழ்த்தியதால் இருள், வெளிச்சம் எதுவும் அவனுக்கு ஒன்று தான்.

மேசையில் இருந்து சரியாக நான்காவது அடியில் ஒரு வளைவு. வளைந்தால் நேராக இடது பக்கம் எட்டு அடி நடந்தால் குளியல் அறை. கதவை முட்டி கொள்ளல்லாம் என தெரிந்தே நடந்தான். கதவை தள்ளி உள்பக்க சுவற்றை தடவி ஏதோ மேடான ஒன்றை உணர்ந்து ஒரு அழுத்து அழுத்தினான். அது பட் என்ற சத்தத்தோடு அங்கு வெளிச்சமாய் வெடித்தது.

குளியலறையின் கை கழுவும் தொட்டிக்கு மேல் உள்ள கண்ணாடி. ஏனோ இன்று வித்தியாசமாய் அவனின் வலது தோள் பட்டையை சிவப்பு நிறமாக காட்டியது. அவன் கண்களில் தெரிந்த பயம் அவனை இன்னும் பயமுறுத்தியது. சற்று நிதானத்துக்கு வந்தவன் குழாயை திறந்து தண்ணீரை அள்ளி தோள்பட்டையை கழுவினான். அதுவும் பத்தாததால் குழாய் கீழே அமர்ந்து அதில் தோளை காட்டினான். குளிர்ந்த நீர் கிழிந்த தோலின் மீது மேலேழும்பும் ரத்தத்தோடு உரச புது உணர்ச்சி கொண்டு உடல் சிலிர்த்தான்.

குழாயிலிருந்து வந்த நீர் இவன் தோளை தழுவி கீழே விழுகையில் செந்நிறமாய் பொழிந்தது. சிலிர்த்த உணர்ச்சி சிறிது அடங்கியதும் அவன் தன தோளை பார்த்தான். வெண்மை நிற தோலில் நான்கு சிறிய சிறிய கண்கள் தென்பட்டன. அவை சற்று நீண்டதாகவும் விழிகள் அற்ற சதை கொழுப்பை காட்டி கொண்டும் இருந்தன. அவை வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக தென்பட்டன. கீழே செல்ல செல்ல அதன் நீளம் குறைந்துகொண்டே போனது. கடைசி வெட்டு சுண்டு விரலில் பாதியளவும், முதல் வெட்டு சுண்டு விரலின் முக்கால் அளவும் இருந்திருக்கும். அதனை கண்ட போது தான் அவற்றால் ஏற்படும் வலி அவன் மூளைக்கு எட்டியது. தலை சுற்றுவது போல் ஆனது, குனிந்து பார்த்தான். வாளி முழுவதும் சிவப்பு நீரால் நிரம்பியிருந்தது. ஏற்கனவே நீர் இருந்த அதில் இவன் இரத்தங் கலந்த நீர் சேர்ந்ததால் ஒரு கோரமான குளம் தோன்றியது. உடனே வாளியை காலால் எட்டி உதைத்தான். அது வெண்ணிற சலவைகற்கள் முழுவதும் பரவி சிவப்பு கம்பளம் போல் ஆனது.

அந்த பெரிய அறையின் முழு இருட்டு, குழியலறை வெளிச்சத்தில் தன்னை கொஞ்சம் குறுக்கி கொண்டது. பின்புல கருப்பு இருள், முன்புற வெள்ளை சுவர், ரத்த நீரால் கழுவிய தரை , கீறல்களால் ஏற்பட்ட எரிச்சல் கலந்த வலி, கலங்கி சிவந்த கண்கள் இவைஅனைத்தும் பார்த்து அந்த கண்ணாடி மிரண்டு போய் வெறி பிடித்த ஒரு செந்நாய் போல அவனை அடையாளம் காட்டியது.

கண்களில் கண்ணீரும் தோளில் செந்நீரும் ஊற, சுழன்ற தலையின் தள்ளாட்ட நடையால் அறைக்குள் தள்ளபட்டான் அவன். வெளிச்ச பொத்தானை தேடி அழுத்தினான். அது அவனின் சோக வெளிச்சத்தை அறை முழுவதும் நிரப்பி மகிழ்ச்சியில் உறங்கும் இருளை ஓடி ஒளிய வைத்தது.

“ஆழம் செல்ல செல்ல நீரின் அழுத்தம் அதிகம்

எனை அழிக்கும் காதலும் அது போல் தான் – ஆனாலும்

நான் இன்னும் சென்று கொண்டிருக்கிறேன்.

கை வலித்தாலும் கவிதை எழுத பிடிக்கிறது அவனுக்கு

பேனா முனையில் எழுத்துக்களை உதிர்க்கையில்

அதனுடன் வலியையும் உதிர்க்க முயற்சிக்கிறான்

சிறிது வலி குறைந்தது போல் உணருகிறான் ”

“அப்பா அப்பா என்னப்பா எழுதுற?”

“கதைம்மா”

“என்ன கதைப்பா?”

“வேணாம்மா இது உனக்கு இப்ப புரியாது. நீ பெரிய புள்ளையானதும் நீயே படிச்சு தெரிஞ்சுக்க சரியா?”

“அப்ப அதுவரைக்கும் இந்த கதைய பத்திரமா எனக்காவ வச்சிருப்பியா? ஆருக்கும் காட்டகூடாது.”

“ஹா ஹா சரி யாருக்கும் கொடுக்கல. என் செல்ல குட்டிக்கு மட்டும்தான்.”

“..ப்பா. இது ராஜா கதையா? இல்ல யானை கதையாப்பா.?.”.

“இது அப்பாவுக்கு இந்த கைல அடிபட்டு தழும்பு இருக்குல்ல அத பத்தின கதம்ம்மா…”.

“தழும்பா எங்க எனக்கு காட்டு பாக்குறேன். என்னப்பா இது ஒன்னு பெருசா இருக்கு. மத்ததெல்லாம் குட்டிகுட்டியா இருக்கு. நா தொட்டு பாக்கவா… ஒரு வாட்டி.”

“……ம்.”

“….ப்பா பஞ்சுமிட்டாய் மாதிரி இருக்குதே. ஒரு தடவ கடிச்சுக்கவா? வலிக்குதா?”

“இல்ல குட்டி. இப்ப வலிக்கல.”

“தொடும்போது கூட நல்ல இருக்கே. இது மாதிரி உனக்கு வேற எங்கேயாச்சும் இருக்கா?”

“இங்க பாத்தியா கால்ல எவ்ளோ பெருசுன்னு.”

“என்னப்பா இப்டி இருக்கு. அத விட பெருசு. இத கிள்ளிக்கிறேன்.வலிக்காம கிள்றேன். இது கூட விளையாடுறது எனக்கு ரொம்ப புடிசிருக்குப்பா. இது எப்டிப்பா வந்துச்சு…”

“இதுவா நானு, ராஜு மாமா , அப்புறம் போன வாரம் உனக்கு சாக்லேட் லாம் வாங்கி கொடுத்தாரே சரவணன் மாமா நாங்கெல்லாம் உன்ன மாதிரி சின்ன புள்ளையா இருந்தப்ப ஒன்ன படிச்சோமா…அப்ப பள்ளிகூடத்துல பென்ச் இருக்கும்ல அத தாண்டி தாண்டி வெளையாடுவோமா அப்போ ஒரு நாள் நா தாண்டி குதிக்கும்போது பென்ச்ல இருந்த ஒரு ஆணி அப்பா கால்ல நல்லா குத்தி இப்டி பெருசா கிழிச்சிடுச்சு. நெறைய ரத்தம் வந்துச்சு. அப்பாவுக்கு ரொம்ப வலிச்சது. அப்பா அழுதனா, அப்ப ராஜு மாமா , சரவணா மாமா அவங்க என்ன பண்ணாங்க கர்சிப் இருக்குல்ல அத தண்ணீல நனைச்சு அப்பா கால்ல கட்டி விட்டாய்ங்க. அப்பவும் நான் வலியில அழுதேன். நா அழ கூடாதுன்னு ஸ்கூபி டூ, டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் ல பொம்மைஎல்லாம் வரும்ல அது மாறி நடிச்சு காமிச்சி அப்பவ சிரிக்க வச்சாங்க.”

“அப்புறம் ராஜு மாமா, என் கால்ல கிழிச்சதுல்ல அந்த ஆணிய அவன் ஸ்லேட்ட வச்சு அடிச்சு தட்டி ஒடச்சு போட்டுடான். சரவணா மாமா மத்த பெஞ்சுல ஆணி ஏதாவது இருந்து அப்பா கால்ல மறுபடியும் கிழிச்சுட கூடாதுன்னு ஒவ்வொரு பெஞ்சா போய் நீட்டிகிட்டு இருந்த ஆணியெல்லாம் ஸ்லேட்ட வச்சு அடிச்சு ஓடச்சுட்டான்.”

“அப்பாவால நடக்க முடியல. அவங்களே கூட்டிட்டு வந்து என்ன வீட்ல விட்டாய்ங்க. அதான் அவங்கெல்லாம் அப்பாவுக்கு ரொம்ப நல்லது பண்ணதால அப்பா இப்பவும் அவங்க கூட நட்பா இருக்கேன்மா.”.

“அவுங்கல்லாம் அவ்ளோ நல்லவங்கலாப்பா. ஆனா ராஜு மாமா மீசைய பாத்தா பயமா இருக்குல்லப்பா.”

“ஹா ஹா பயபடதம்மா . நல்லவங்க முகத்த பாத்தா தெரியாது. குணத்த பாத்தா தான் தெரியும். காயபடுதுனவங்க கூட மறந்துடலாம். ஆனா காயப்பட்டப்ப உதவி பன்னவங்கல மட்டும் எப்பவும் மறக்க கூடாது. சரியா?…”

“…..ம். நீ எழுதினில்ல அந்த கதைய முடிச்சிட்டியாப்பா?”

“இல்லம்மா இன்னும் இருக்கு.”

“உன் கதைக்கு பேரு என்னப்பா ?”

“பேரு வந்து ……ஆங். நீ தழும்பு அழகா இருக்குன்னு சொன்னில்ல. அப்ப அதையே வச்சுடுவோம். அழகுன்னே வச்சுடுவோம்.”

தளும்பும் அழகு அதில் தழும்பும் அழகு.

மகிழ்வு மிகுதியில் மகள் தமிழ்செல்வியை அள்ளி முத்தம் கொஞ்சுகையில் தன் தமிழையே முத்தமிடுவது போல் சிலிர்த்தான் அவன். கன்னங்களின் பதுமை இதம் இவன் இதழ்களின் தமிழின் சுவையாய் ருசிக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *