கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 12,171 
 
 

பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க பாண்டியின் முகம் வீக்கம் கண்டிருந்தது. பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த இடத்தில் ஆளாளுக்கு இடித்துக் கொண்டே எட்டி எட்டி பார்த்தார்கள். வேஸ்ட் குடோன் மாணிக்கம் ஒரு ரோஜா மாலையை அவன் நெஞ்சில் சாத்திவிட்டு நகர்ந்தார். இன்னும் இரண்டு மாலைகள் கால்மாட்டில் போடப்பட்டன. சடலத்தின் மீது இருந்த மருத்துவமனைக்கான வாடையோடு ரோஜாவின் மணம் அபத்தமாய் கலந்தது.

”நா பாக்க மாட்டேன்.. இல்லக்கா.. நா பாக்க மாட்டேன்.. அவரு இல்ல இது.. ” வாசுகியின் தோளில் முகம் புதைத்தபடி ராஜம் குமுறினாள். காலையிலிருந்து கண்ணீரைத் தேக்கி வைத்தபடி வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தவள் பாண்டியின் உடல் உள்ளே எடுத்து வருவதைக் கண்டதும் பயந்து ஓலமிட்டாள். வாசுகி அவள் முகத்தைத் திருப்பினாள்.

”பாவி.. பொணமாக் கெடக்கறான் அவன்.. நீ அவனில்லை.. அவனில்லைன்னு பைத்தியமாட்ட ஒளர்ற.. பாருடி.. கண்ணத் தொறந்து பாரு.. உன்ன இப்பிடி தெருவுல விட்டுட்டு கெடக்கறான் பாரு..”

அழுதபடியே ஒடுங்கியவளை இழுத்து வாசுகி அவன் தலைமாட்டில் உட்காரவைத்தாள். முகத்தை மூடிய கைகளை மெல்ல விலக்கி பாண்டியை நிதானமாக பார்த்தாள். அவன் தூங்குவது போலத்தான் இருந்தது. ”மாமா.. மாமா.. என்ன பாரு மாமா? கண்ணத் தொறந்து பாரு மாமா..” என்று கேவல்கள் வெடித்தன. உதடுகள் துடிக்க அவன் தோளில் விழுந்தாள். வாசுகி அவசரமாக அவளை விலக்கினாள். மார்பிலும் முகத்திலும் அய்யோ அய்யோவென உயிர் துடிக்க அழுதவளை சமாதானப்படுத்த முடியாதவளாய் வாசுகியும் அழத் தொடங்கினாள்.

பாண்டியைப் பார்க்க கூட்டம் வந்தபடியே இருந்தது. வீட்டு வாசலில் இருந்த வேப்பமர நிழலிலும் தெருவின் மறுபக்கம் இருந்த பனியன் கம்பெனியின் வாசலிலும் நின்றவர்கள் பாண்டியை பலி வாங்கிய விபத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கம்பெனியை அடுத்திருந்த கனகுவின் வீட்டு வாசலிலும் ஆட்கள் சேர்ந்திருந்தார்கள். வாசல் திண்ணையில் இருந்த கனகுவை அனைவரும் சூழ்ந்திருந்தார்கள். கலைந்த தலை, சிவந்து களைத்திருந்த கண்களுடன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். விஸ்வமும் காசியும்தான் மின்மயானத்துக்கு போய் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

”விஜயன் எப்பிடி இருக்கான் கனகு?”

குடோன் மாணிக்கம் கனகுவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவனுக்கு அழுகை கொப்புளித்தது.

0

நேற்று காலை எட்டு மணிக்கு விஜயனும் பாண்டியும்தான் புறப்பட்டுப்போனார்கள். விஜயன் செகணன்டில் யமஹா பைக் வாங்கி இரண்டு வாரம்தான் ஆகியிருந்தது. பைக் வாங்கிய பொழுதிலிருந்து பாண்டியும் விஜயனும் சேர்ந்தேதான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். கனகு அப்போதுதான் தெருமுனை குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்ததும் வண்டியை வேகம் தணித்தார்கள். பாண்டி வண்டியை ஓட்ட விஜயன் பின்னால் உட்கார்ந்திருந்தான்.

”கனகு.. தென்திருப்பதிக்கு போயிட்டு வரோம்.. சாயங்காலமா சாந்திக் கொட்டாயில டிக்கெட் வாங்கி வெச்சுரு.. வந்தர்றோம்”

வண்டி உறுமியபடி முன்னால் நகர்ந்து மறுபடியும் நின்றது. பாண்டி திரும்பிப் பார்த்து.. ”கனகு.. நாலு டிக்கெட் வாங்கணும்..” என்றான்.

தண்ணீர் குடத்தை முகப்புத் திண்ணையில் வைத்துவிட்டு குனிந்து உள்ளே போன கனகு, மிளகரைத்துக் கொண்டிருந்த வாசுகி அக்காவிடம் கேட்டான்.

”காலங்காத்தாலே வண்டிய எடுத்துட்டு ரெண்டுபேரும் கெளம்பிட்டாங்க.. எதாச்சும் சாப்புட்டாங்களா?”

வாசுகி அக்கா சந்தனப் பதம் வந்துவிட்டதா என்று விரல்களால் சோதித்தபடியே தலையாட்டினாள். ”இந்த பைக்கை வாங்கினதிலிருந்து வீடு தங்க மாட்டேங்கறாங்க. இவன்தான் வளுசுப் பய, திரியறான்னா.. அந்தப் பாண்டி.. கட்டுன பொண்டாட்டியகூட கண்டுக்க மாட்டேங்கறான்”.

வாசுகிக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பு. சலிப்பு. முப்பத்தி ஆறு வயதுக்குள்ளாக வாழ்க்கை அவள் மீது திணித்துவிட்டிருந்த துக்கத்தினாலும் கசப்பினாலும் விளைந்த சலிப்பும் வெறுப்பும். விளையாட்டுப் பிள்ளைகளாய் விஜயனும் கனகுவும் இவளை அண்டிக் கிடந்த காலம் மாறி இன்று தம்பிகள் தயவில் நாட்கள் கழிகின்றன. ஆண்டிப்பட்டியிலிருந்து மணப்பெண்ணாய் அய்யம்பாளையம் போன மூன்றாவது மாதமே வெறுங்கழுத்துடன் திரும்பியவளின் கண்ணீர் காய்வதற்குள் ஆதரவாயிருந்த அப்பாவும் தம்பிகளை கைசேர்த்துவிட்டு கண்ணை மூடிவிட்டார். கதியற்று நின்றவள் தம்பிகளுடன் ஒரு நாள் அதிகாலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வந்திறங்கினாள். ஒரு கணம் வாழ்வின் அனைத்து வழிகளும் அடைபட்டு போய்விட்ட மருட்சி அவள் நெஞ்சை அடைத்தது. கண்ணீர் பெருக டீக்கடை வாசலில் தம்பிகளுடன் நின்றாள். பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் இருந்த உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த வேஸ்ட் குடோன் மாணிக்கம் அருகில் வந்து விசாரித்தார். ஆறுதல் சொல்லி குடோனுக்கு அழைத்து வந்தார். அவருக்கு சொந்தமான லைன் வீடுகளில் ஒன்றில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். குடோனில் வேலையும் கொடுத்தார். இரண்டாம் நாள் இரவில் மண்ணெண்ணை அடுப்பில் சோறு பொங்கி மூவரும் வயிறார சோறு உண்டபோது வாசுகிக்கு பிழைத்துவிடுவோம் என்ற தைரியம் வந்தது. விஜயனும் அடுக்கிக்கட்டுவதில் தொடங்கி கைமடித்து சிங்கர் டெய்லராகிவிட்டான். பள்ளிக்கூடம்தான் போவேன் என்று ஆரம்பத்தில் அடம்பிடித்த கனகுவும் பிறகு சமாதானமாகி கம்பெனிக்குள் கால்வைத்து இப்போது கட்டிங் மாஸ்டராகிவிட்டான்.

ஒண்டிக்கொள்ள நிழலுமின்றி பசியாற வழியுமின்றி பரிதவித்த நாட்கள் போய், நிம்மதிப் பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தபோது அதுகாறும் பதுங்கிக் கிடந்த வெறுமையும் கசப்பும் வெடித்து வெளிப்பட்டன. இதற்காகவே வேலைகளை இழுத்துப்போட்டுக் கொள்வாள். ஆனாலும் ஒரு சில நாட்களில் திண்ணையில் கவிழ்ந்து படுத்தால் சாயங்காலம் வரைக்கும் கண்ணீர் விட்டபடியே அன்ன ஆகாரம் இல்லாமல் துவண்டு கிடப்பாள். ராஜம் அந்தத் தெருவிற்கு வந்த பிறகு அவளுக்கு ஒரு பெரும் பிடிப்பு ஏற்பட்டது போலொரு உற்சாகமும் வந்தது.

தம்பிகளை அழைத்துக் கொண்டு வாசுகி வந்திறங்கிய அதே நிலையில்தான் பாண்டியும் ராஜத்தோடு திருப்பூர் வந்து சேர்ந்தான். திருச்சுழியில் டூ வீலர் மெக்கானிக். ஒற்றை ஆளாய் இருந்த வரையில் வருமானம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ திட்டங்கள் எதுவுமில்லாமல் திரிந்தவனுக்கு ராஜத்தை கட்டிக் கொண்டபிறகு கவலைகளும் சேர்ந்தே வந்தன. ராஜத்தின் அண்ணன் மகனும் சித்தப்பா வீட்டு பிள்ளைகளும் சொன்ன அனுபவத்தில் ராஜம்தான் திருப்பூர் போய் பிழைக்கலாம் என்று பாண்டியை சம்மதித்து அழைத்து வந்தாள். இரண்டு லெதர் பைகளும் சிறிய கோணிப் பையில் வீட்டுச் சாமான்களுமாக பாண்டியும் ராஜமும் வாசலில் வந்து நின்றார்கள். ”வாடகைக்கு வீடு இருக்கா இங்க?”. வேர்வையும் களைப்புமாய் நின்றவர்களை திண்ணையில் உட்கார வைத்து விசாரித்தாள். சூடான தேநீரைக் குடித்தபடியே பாண்டி விபரம் சொன்னான். வாசுகியின் பரிந்துரையில் மீனாட்சி வாடகைக்கென்று அமைத்திருந்த நான்கு வீடுகளில் முதலாவது, தெருவை ஒட்டிய வீடுதான் பாண்டிக்கு வாய்த்தது. சீமை ஓடுகள் வேய்ந்து நாலாபக்கமும் தென்னை ஓலைகள் அடைத்த தட்டிகளையே சுவராகக் கொண்டது. சிமெண்டு தரை. வட கிழக்கு மூலையில் அடுப்பங்கரைக்கென ஒரு தடுப்பு. தகரத்தாலான கதவு. ஒரே ஆறுதல் வாசல் வேப்பமரம். அன்று மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோதுதான் விஜயன் பாண்டியைப் பார்த்தான். பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. மெக்கானிக் வேலை பார்க்கப் போகிறேன் என்று இருந்தவனை விஜயன்தான் கம்பெனிக்குள் இழுத்துப்போட்டான்.

சாந்தி தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தபோதுதான் கனகுவின் செல்போன் ஒலித்தது. அழைப்பு விஜயனின் எண்ணிலிருந்துதான் வந்தது.

”அலோ.. யார் பேசறதுங்க?” மறுமுனையில் விஜயனின் குரல் ஒலிக்கவில்லை.

”அலோ.. நா கனகுதான் பேசறேன்.. விஜி இல்ல.. நீங்க யாரு?” மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். போன் எங்கும் கீழே விழுந்துவிட்டதா? ராங் நம்பரா? எண்ணை சரியாக பார்க்கவில்லையா?

”அன்னூர் ஸ்டேஷன் போலிஸ் கான்ஸ்டபிள் பேசறேன். ஒரு ஆக்ஸிடென்ட் இங்க. ஸ்பாட்ல ஒருத்தர்கிட்ட இருந்த போன்ல இருந்துதான் பேசறேன்..” மேலும் அவர் சொல்லியது எதையும் காதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை கனகுவால். வரிசையிலிருந்து விலகினான். செல்போனை பிடித்திருந்த கை நடுங்கியது. தியேட்டர் வாசலில் இருந்த அனைத்து இயக்கங்களும் ஓசையிழந்து சுழன்றன. செல்போனில் அழைப்பு வந்த எண்ணை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டான். நேரத்தை சரிபார்த்தான். விஜயனின் போனிலிருந்து அவன் பேசவில்லை. ஒரு போலிஸ்காரர் பேசுகிறார். என்றால் விஜயன் என்ன ஆனான்? பாண்டிக்கு என்ன ஆனது? இருவரையும் 108 ஆம்புலன்ஸில் கோயமுத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு போகிறோம், நீங்கள் உடனடியாக அங்கே வந்து சேருங்கள் என்று சொல்கிறார். அடுத்து என்ன செய்வது என்பதை கனகுவால் தீர்மானிக்க முடியவில்லை. காசியை அழைத்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஸ்வத்தோடு வந்து சேர்ந்தான்.

”அக்காகிட்ட இப்ப எதுவும் சொல்லவேண்டாம் கனகு.. நாம கோயமுத்தூர் போயி பாத்துட்டு அப்பறமா சொல்லலாம்” சாந்தி தியேட்டர் வாசலிலிருந்தே கோயமுத்தூர் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். ஒன்றரை மணி நேர பயணம் கனகுவிற்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. கண்களை திறக்காமல் இறுக மூடிக்கொண்டான். உள்ளுக்குள் ஆயிரம் காட்சிகள். பாண்டியின் முகம். சீறிச் செல்லும் வாகனம். பின்னிருக்கையிலிருந்து கால்களை விரித்துக் கொண்டு மல்லாந்து விழும் விஜயன். தெறிக்கும் ரத்தம். சாலையில் கிரீச்சிட்டு தேயும் பிரேக்கின் நாராசம். காசி அவனை தேற்றுவதற்காக தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாலும் கனகுவால் கவனத்தை திசைமாற்றிக் கொள்ள முடியவில்லை.

இரவு ஏழரை மணிக்கு அரசு மருத்துவமனை வளாகம் மங்கலான வெளிச்சத்தில் ஓய்ந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்சி சாலையும் அடங்கியிருந்தது. வளாகத்தினுள் மஞ்சள் ஒளியில் கட்டிடங்கள். கிளை விரித்து ஆடிய தூங்குமூஞ்சி மரங்கள். மருத்துவமனைக்கேயுரிய பிரத்யேகமான நெடி. கனகுவிற்கு உள்ளே வரவே பயமாயிருந்தது. கால்கள் நடுங்கின. மூவரையும் பார்த்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நெருங்கி வந்தான்.

அன்னூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி ரைஸ் மில் அருகில் பைக்குக்கு பின்னால் வந்த ஒரு செங்கல் லாரி மோதியிருக்கிறது. சற்று தொலைவில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் ஓடிவந்து காவல்துறைக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். யார் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவிலும் இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருப்பதாக டிரைவர் வழிகாட்டினான்.

கனகுவிற்கு தலை சுற்றியது. அடிவயிறு கலங்க அப்படியே தரையில் உட்கார்ந்தான். காசி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினான். திரும்பி வந்தவன் கனகுவை எழுப்பினான்.

”டேய்.. வாடா.. விஜயன பாத்துட்டேன்.. ஒண்ணுமில்லடா.. வா.. பாக்கலாம்”

வலது கணுக்காலிலும் முழங்காலிலும் எலும்பு முறிவு. இடது நெற்றியில் பலமான அடி. ரத்த நெடியோடு மயக்கத்தில் கிடந்தான். இரவுப் பணியிலிருந்த டாக்டர் மறுநாள் காலையில் அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று சொன்னார். கனகுவுக்கு பெரும் ஆசுவாசமாயிருந்தது. தண்ணீரை முகத்தில் இறைத்து கழுவிக் கொண்டான். கால் நடுக்கம் மட்டுப்பட்டது.

”டேய்.. பாண்டிக்கு என்னாச்சுன்னு பாக்கலாம் வாடா” விஸ்வம் தோள்தொட்டு அழைத்தபோதுதான் அவனுக்கு பாண்டியைப் பற்றிய நினைப்பே வந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவு இரண்டு கட்டிடங்கள் தள்ளி சற்றே உள்ளடைந்து நின்றது. வராந்தாவில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் நீண்ட பெஞ்சுகளில் உறவுகள் காத்திருந்தன. தரை விரிப்புகள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள், தட்டு, டம்ளர், பாத்திரங்கள், பிளாஸ்க் ஆகியவை அடங்கிய கட்டை பைகள். இரவுப் படுப்பதற்காக மின் விசிறிக்குக் கீழாக விரிப்பைப் போட்டு சிலர் தயாராகியிருந்தார்கள். திரைச் சீலையுடன் இருந்த கண்ணாடிக் கதவுக்கு வெளியே நீண்ட மேசைக்குப் பின்னாக நின்றிருந்த நர்ஸ் செல்போனில் நிதானமாகப் பேசிக் கொண்டிருந்தாள். மேசையில் சாய்ந்து நின்று அவளையே பார்த்து புன்னகைத்தபடியிருந்த காக்கிச் சீருடை காவலரிடம் காசி விபரம் கேட்டான்.

”அன்னூர் ஆக்சிடெண்ட் கேஸா?.. ஆமாமா.. ஒரு ஆளு இங்கதான் இருக்கறாரு.. பேரு கூட தெரியாது”

நர்ஸ் செல்போனை அவசரமாக அணைத்துவிட்டு கேட்டாள்.

”நீங்க அவருக்கு தெரிஞ்சவங்களா? சொந்தமா?”

கனகுவுக்கு அடிவயிறு மீண்டும் புரட்டியது. தொண்டை வறண்டது. அபாயத்தின் பெரும் இருளுக்குள் அமிழ்த்தப் போகிற முதல் படியாக அந்த கேள்வி நின்றது.

”பிரண்டு.. என்னாச்சு அவருக்கு?..”

ஆட்கள் வந்துவிட்ட நிதானம் அவளிடம் இப்போது. இண்டர்காமை எடுத்துப் பொத்தான்களை அழுத்தி பேசினாள். சில நொடிகளுக்குள்ளாக மருத்துவமனை காவல் மையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபிளும், ஏட்டும் வந்துவிட்டார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவின் பணி மருத்துவரும் வெளியில் வந்தார். கனகுவிடம் பாண்டியைப் பற்றி விசாரித்தார்கள். படிவங்களை நிரப்பி கையொப்பமிடச் சொன்னார்கள்.

”தலையிலதான் பலமான அடி. நெறைய ரத்தம் போயிருச்சு.. சர்ஜரி பண்ணவேண்டியிருக்கும். டாக்டர்ஸ் இப்ப வந்து பாத்து முடிவு பண்ணுவாங்க.. இப்ப இருக்கற நெலமையில ஒண்ணும் சொல்ல முடியாது.. அவங்க வீட்ல இருந்து யாராவது இங்க வந்து இருந்தா பார்மாலிட்டீசுக்கு வசதியா இருக்கும்.. அப்பறம்.. பிளட் அரேஞ்ச் பண்ண வேண்டியிருக்கும்..”

பணி மருத்துவர் சொன்ன தகவல்கள் தைரியத்தைக் குலைத்தன. யாராவது ஒருவர் உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்று அனுமதித்தபோது கனகு அவசரமாக விலகி நின்றான். காசி தயங்கியபடியே உள்ளே போய்விட்டு வந்தான்.

”இங்கயே இருங்க.. வெளியில எங்கயும் போயிடாதீங்க..” நர்ஸ் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாள்.

வெளியில் வந்தபோது இரவுக் காற்று சிலீரென்று முகத்தில் மோதியது. கனகு ஒன்றுமே பேசாமல் தலையை உலுக்கியபடியே நடந்தான். 108 ஆம்புலன்ஸ் டிரைவரும் அன்னூரிலிருந்து வந்த கான்ஸ்டபிளும் மெல்ல நெருங்கி வந்தனர். பாண்டியின் செல்போனை கனகுவிடம் ஒப்படைத்தார்.

”வண்டி அங்கயேதான் கெடந்துது. ஸ்டேஷன்ல கொண்டுவந்து போட்டுருப்பாங்க. இதெல்லாம் முடிஞ்சதுக்கப்பறமா வாங்க.. பாத்துக்கலாம்”

பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் நகர்ந்த பிறகு காசி செல்போனை எடுத்தான்.

”கனகு.. அக்காகிட்ட இருந்து நாலைஞ்சு மிஸ்ட் கால் வந்துருக்கு.. விஜயனோட போன்லயும். அவங்கள கூப்பிட்டு விஷயத்தை சொல்லிரலாம்..”

கனகு நிமிர்ந்து பார்த்தான். தீவிர சிகிச்சைப் பிரவுக்குள் சென்று பாண்டியை பார்த்துவிட்டு வந்தபின் காசி சொன்னதுதான் இன்னும் அவன் காதில் ஒலித்தபடியிருந்தது.

”பயமா இருக்குடா கனகு.. தலையில பெரிய கட்டு.. கர்..கர்னு சத்தம்.. என்னால நிக்கவே முடியலை.. பாண்டிதான்னு உத்துப் பாத்துட்டு நகந்து வந்துட்டேன்.. காலையில வரைக்கும் அவன் பொழைச்சுருப்பான்னு எனக்கு நம்பிக்கையில்ல..”

வாசுகி மறுபக்கத்தில் அவசரமாக பேசுவது தெரிந்தது.

”ரெண்டு பேரும் நல்லாத்தான் அக்கா இருக்காங்க.. அன்னூர்கிட்ட ரோட்ல விழுந்துட்டாங்க.. இல்லை.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமையில்ல.. அதான்.. டாக்டருக இல்லை.. நாளைக்கு பாத்துட்டுத்தான் டிசார்ஜ் பண்ணுவாங்க.. நாங்க பாத்துக்கறோம்.. காலையில போன் பண்றோம்.. வரணும்னா பாண்டி சம்சாரத்த அழைச்சிட்டு வாங்க.. கனகு இதோ.. இங்கதான் இருக்கான்..”

”கனகு.. நீ பேசினாதான் நம்புவாங்க.. தைரியமா பேசு.. அழுது வெச்சறாதே..” சன்னமாக எச்சரித்துவிட்டு செல்போனை நீட்டினான்.

”ஆமாக்கா…. ஒண்ணுமில்லை.. கீழ விழுந்ததுல லேசான அடிதான்.. அதெல்லாம் வேண்டாம்.. காலையில பாத்துக்கலாம்”

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு செல்போனை துண்டித்தவனிடமிருந்து அழுகை வெடித்தது. மரக் கிளைகளிலிருந்து பறவைகள் சடசடத்து அமைந்தன. அழுகுரல் கேட்டு வராந்தாவில் படுத்துக் கிடந்தவர்கள் எழுந்து பார்த்தார்கள். விஸ்வம் கனகுவை இழுத்து தோளில் புதைத்துக் கொண்டான்.

0

தூங்கிக் கிடந்தவனை காசி உலுக்கி எழுப்பினான். தீவிர சிகிச்சைப் பிரிவின் ஒரு மூலையில் சரிந்து உட்காரந்தபடியே தூங்கிப் போயிருந்தான். இன்னும் விடிந்திருக்கவில்லை. பனியும் குளிருமாக இருள் உறைந்திருந்தது.

கண்களை திறக்கவே முடியாத எரிச்சல். ஒரு கணம் அனைத்துமே தெளிவற்ற காட்சியாக சுழன்றது.

”என்னடா ஆச்சு?”

காசியின் முகம் சுண்டிப்போயிருந்தது. விஸ்வம் தலையில் கைவைத்தபடியே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

”எல்லாம் முடிஞ்சுபோச்சுடா கனகு.. பாண்டி தலையில கல்லப் போட்டுட்டாண்டா”

கனகு சுவற்றில் சரிந்து உட்கார்ந்தான். பதற்றம் மெல்ல மெல்ல அடங்கியது. மூச்சு சீரானது. கண்ணீர் நிறைந்து தளும்பி வழிய மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.

அதிகாலையில் ஆபரேஷனுக்கு தயார்படுத்துவதற்கு முன்பே பாண்டி விடைபெற்றுக் கொண்டிருக்கிறான்.

0

”எடுத்தர்லாமா கனகு?” மாணிக்கம் மறுபடியும் அருகில் வந்தார். கனகு மெல்ல எழுந்தான். திண்ணையின் மேற்கு மூலையில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தவளைப் பார்த்தான். மெலிதான தேகம். கருத்து நீண்ட தலைமுடி. முகமும் உடலும் தாய்மையின் பொலிவுடன் மின்னின. அடர்பச்சை நிற பருத்திப் புடவையில் உதடு துடிக்க வெற்றுப் பார்வையுடன் பாண்டியின் வீட்டு வாசலையே பார்த்தபடி இருந்தாள். அவளருகில் உட்கார்ந்திருந்த வாசுகி எழுந்தாள். விறுவிறுவென்று பாண்டியின் வீட்டுக்குள் போனாள்.

ராஜம் இன்னும் தலைமாட்டில் முகம் புதைத்து அழுதபடியிருந்தாள். வாசுகி அவளருகில் உட்கார்ந்தாள். ராஜத்தின் முதுகில் கைவைத்து அணைத்தபடியே குனிந்து அவள் காதில் மிக மெதுவாக சொன்னாள்.

”ராஜம்.. போதுண்டா.. போனது போயிட்டான்.. இனி அழுதுட்டே இருந்தா ஆச்சா?”

ராஜம் தலை நிமிர்த்தினாள். வாசுகி இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள் என்பதுபோல பார்த்தாள். கண்கள் களைத்து முகம் வீங்கியிருந்தது.

”சொல்லுக்கா”

வாசுகிக்கு அழுகை கொப்பளித்தது.

”ஆனது ஆச்சடி.. நா சொல்றத பொறுமையா கேளு.. கோவப்பட்டு கத்தாதே.. என்ன?”

ராஜத்தின் பார்வை கூர்மை பெற்றது. ”சொல்லுக்கா… ”

”அவ வந்து உக்காந்துருக்கா ராஜம்.. ஒரே ஒரு தடவ மொகத்தப் பாத்துட்டு போயிரட்டுமே..”

விலுக்கென்று ஆவேசத்துடன் நிமிர்ந்தாள் ராஜம். தலையை அள்ளி முடிந்து கொண்டவளின் பார்வை வாசுகிக்கு அச்சம் தந்தது.

”இங்கயே வந்துட்டாளா அவ.. விடமாட்டேன் அக்கா.. நா விடமாட்டேன். உசுரோட இருந்தவரைக்கும்தான் பங்குப் போட்டுக் கெடந்தான்னா.. இப்ப பொணத்தையும் பங்கு போட்டுக்க வந்துட்டாளா? முடியாது.. அவ இங்க இருந்தான்னா பொணத்தை எடுக்கவே விட மாட்டேன்.. மொதல்ல அவள இந்த எடத்தை விட்டு போகச் சொல்லுங்க.. போச் சொல்லுங்க..”

அவளுடைய கூச்சல் அனைவரது பார்வையையும் வாசுகி வீட்டுத் திண்ணையில் இருந்தவளின் மீது குவிக்கச் செய்தது.

ராஜத்தின் குரல் அவள் காதிலும் விழுந்தது. ராஜத்தின் ஒவ்வொரு சொல்லும் அவளது விசும்பல்களை உக்கிரமாக்கியது. பாண்டியின் சாவும் ராஜத்தின் துக்கமும் மறந்து அனைவரும் இப்போது அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனைகளில் சுவாரஸ்யம் கொண்டிருந்தனர்.

வாசுகிக்கு ராஜத்தின் மீது ஆத்திரம் பொங்கியது.

”சொன்ன கேக்க மாட்டியா நீ? பொணத்தக் கட்டிக்கிட்டே எந்நேரம் கெடப்படி.. அவ வயத்துல புள்ளையோட உக்காந்துருக்காடி.. பாவி. அதுக்காகவாவது அவ மொகத்த பாத்துட்டுப் போகட்டுமே..”

ராஜம் வாசுகியின் தோளைத் தொட்டாள். முகம் பார்த்தாள். கண்களில் ஆவேசம் இல்லை. பதற்றம் இல்லை. அவள் கண்களுக்குள் ஒரே ஒரு கேள்விதான் கண்ணீருடன் தளும்பி நின்றது.

வாசுகி ஆமோதிப்பவள்போல் தலை அசைத்தாள். ராஜம் பாண்டியின் முகத்தைப் பார்த்தாள். அவனைப் பார்த்தபடியே மெல்ல நகர்ந்து ஓலைத் தட்டியில் சாய்ந்துகொண்டாள். வயிற்றில் அறைந்தபடியே அழத் தொடங்கினாள்.

”போங்கக்கா.. போங்க.. அவள அழச்சிட்டு வாங்க.. இங்க வெச்சு.. எல்லா சீரையும் அவளுக்கே செய்யுங்க.. இனி நா சொல்றதுக்கு என்ன இருக்கு?.. நியாயமா அவளுக்குத்தான செய்யணும்..போங்க. போய் கூட்டியாங்க..”

வாசுகிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. ராஜத்தை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

ராஜம் விலகினாள். முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

”அக்கா.. நேரமாகுது.. போங்க.. போய் கூட்டியாங்க.. எனக்கொண்ணுமில்லை.. வரட்டும்.. வந்து பாக்கட்டும்.. போங்க..”

கரகரத்த அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.

வாசுகி எழுந்து தலைமுடியை அள்ளி முடிந்தபடி வெளியே வந்தாள். இதற்குள் அந்தப் பெண்ணைச் சுற்றி கூட்டம் சேர்ந்து வேடிக்கைப் பார்த்திருந்தது. தலை குனிந்து அழுதுகொண்டிருந்தவளை வாசுகி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

”நீ வாம்மா போய் பாத்துட்டு வந்தர்லாம்.. வா”

வாசுகியிடமிருந்து விலகிய அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகத்தில் துக்கத்தை மீறிய நிதானம்.

”அக்கா.. நா அங்க வரலை.. வேண்டாம்.. அந்தக்காவுக்கு பெரிய மனசு.. அவர் மொகத்த இனி நான் பாத்து என்ன ஆவப் போவுது? இப்ப நா அங்கப் போனா அந்தக்காவுக்கு அவரை நெனைக்கும் போதெல்லாம் என்னோட மொகம்தான் நெனப்பு வரும். ஆயுசு முழுக்க உறுத்திட்டே இருக்கும்.. வேண்டாம்.. நா மொகம் தெரியாத ஒருத்தியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க போய் சொல்லி ஆக வேண்டியதப் பாருங்க.. நா இங்கயே இருக்கேன்.. அவங்க சொன்னதே போதும்… போங்க..”

நகர்ந்து அறை மூலையில் உட்கார்ந்து கொண்டாள். வாசுகி அவள் தலையை வருடினாள். அழுகைப் பொங்கியது. மின் விசிறியை இயக்கிவிட்டு எவர்சில்வர் சொம்பில் தண்ணீரை எடுத்து வைத்தாள்.

கதவை சாத்திக் கொண்டு வெளியே வந்தவள், வாசலில் காத்திருந்த கனகுவிடம் சொன்னாள்.

”எடுத்தார்லாம் தம்பி.. ஏற்பாடு பண்ணச் சொல்லு”

Print Friendly, PDF & Email

1 thought on “தருணம்

  1. விபத்துக்களுக்கு என்றும் மரணமில்லை.
    அது தரும் பெருவலி…..
    பெருக்கெடுக்கும் துயரம்….
    கண்டெடுக்கும் மற்றுமொரு ‘’தருணம்’’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *