தரங்கிணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,919 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“என் தாயே! என் தாயே!”

கண்களிலில் நீர் துளும்ப, தரங்கிணி, ஜலத்தை அப்படியே ஆலிங்கனம் செய்துவிடுபவள் போன்று, இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றாள். நல்லவேளை, வேறெவரும் அங்கில்லை. அவள் கணவன் மார்மேல் கட்டிய கைகளுடன் அவள் முகத்திலாடும் நிழல்களைக் கண்டு அதிசயித்து நின்றான்.

தரங்கிணி அவன்மேல் சாய்ந்து, அவன் தோள்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“என்னைப் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டாயே?”

அவன் பதில் பேசவில்லை. புன்னகை புரிந்தான். தரங்கிணி முன்றானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“என்னமோ தெரியல்லே; இத்தனை நாள் கழிச்சு இதைப் பார்க்கறப்போ என்னையுமறியாமல் என்னை என்னவோ பண்றது! இப்படிக் கரையோரமா நடப்போமா ?”

நடையோரம் நெளிந்து வளைந்து நிமிர்ந்த தென்னைகளில் மட்டைகள் சாமரம் ஆடி அசைந்தன. ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்புச் சிரித்தது.

வழிப் பொருள்களை அடையாளம் கண்டுகொள்கையில், காலடியில் மணல் ‘சரக் சரக்’ எனப் புதைகையில், அவள் கண்களில் கருவண்டுகள் ஜொலித்தன. அவனுக்குச் சரியாகக் காலை வீசிப் போடுகையில் அவள் இடைகீழ்க் கடையும் தொடைகள் அவனைக் கவர்ந்தன. அவை அவனுள் கிளறும் வேகம் தாங்காது கண்களை மூடிக் கொண்டான். இமைத்திரையில் குதிரையின் சப்பைகள் நீந்தின; உரமிகுந்து வேர்வையில் பட்டுப்போல் மின்னும் கருஞ் சப்பைகள்; செவிக்குமெட்டா லயத்துடன் இதயத்தைத் தொட்டுக்கொண்டு எழுமொரு வேகம் அவனைச் சுற்றிலும் சுழித்தது.

“ஏது! நாம் இதன் ஊற்றுக்கே போய்விடப் போகிறோமா என்ன?”

“இன்று முழுக்க இப்படியே நடந்திண்டிருக்க எனக்கு இஷ்டம்தான். எனக்குச் சலிக்கவே சலிக்காது.”

“ரிஷி மூலம் நதி மூலம் தேட வேண்டாம் என்று சொல்லுவார்களல்லவா?”—அவனுக்குச் சலிப்பு இல்லை; ஆனால், அவளைச் சீண்ட அவனுக்குப் பிடித்தது.

என் மூலம் இதுதான்! என் மூலம் தெரிய உங்களுக்கு ஆசை இல்லையா?”

“நீ தரங்கிணி!”

“அது சரி, என் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டாமா? இதுதான் என்தாய். இங்கே உக்காருங்கோ, சோல்றேன்.”

இரவுப் பூச்சிகள் “கிர்க் கிர்க்”கென்றன. மணல் மெத்தைமேல் முகம் மறைந்த இருளில் பின்னிருந்து அவள் குரல் உருவற்ற உயிரோடு விறுவிறுத்தது.

“எனக்கு அம்மா இல்லை—அதனால், இதுவே என் தாய். அப்பாவும் எனக்கு நினைப்பில்லை; அவரே உயிரோடு இருக்காரோ இல்லையோ? அவர் போனவிடம் இன்னும் தெரியவில்லை, திடீர் திடீர்னு அவர் போயிடுவார். ஏதாவது நினைப்பு எடுத்துண்டுட்டா, அதே பித்தாய் ஊர் ஊராய் அலைஞ்சுண்டு இருப்பார். ஆனால் எதிலும் நிலையா நிற்கமாட்டார். நடுவழியிலேயே, ஆரம்பிச்ச காரியத்தை மறந்துட்டு, இன்னொரு மோகத்தைப் பிடிச்சுண்டு திரும்புவார். சங்கீதம்னா ஒரே பித்து! யாராவது நன்னா பாடறான்னு அவர் மனசுலே பட்டுட்டா, அவன் போற இடமெல்லாம் ஊர் ஊராய்ப் பின்னாலேயே துரத்திண்டு போவார். அவருடைய அப்போதைய லட்சிய புருஷனை ஒத்தரும் குத்தம் சொல்லி மீள முடியாது. அடிக்கப் போயிடுவார். ஆனால், அந்த ஜூரம் அவரை விட்டவுடனே, அவ்வளவுதான்—அவரே அவருடைய மஹானை சாக்கடையிலே போட்டுப் புரட்டிடுவார். எதிலுமே அப்படித்தான். அவரை நம்பி பெண்ணைக் கொடுத்தப்புறம்தான், கொடுத்தவாளுக்கு அவரை எதுக்குமே நம்பறத்துக்கில்லையென்று தெரிஞ்சுது. உருப்படியா எதுக்குமே உதவாமே போயிட்டார். இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேனே, உங்களுக்கு என்னைப் பத்தி எனப்பமாயிருக்கோன்னோ? இதுவரைக்கும் ஏன் சொல்லல்லேன்னு கோவமாயிருக்கோன்னோ?”

“ஆமாம்.”

அவளுக்குத் திக்கென்றது. அவன் கையைத் தேடினாள்.

“நிஜமாவா?”

“ஆமாம்; உன்னைத் தள்ளி வெச்சுட்டு, மறு கல்யாணமும் பண்ணிண்டுட்டு, அப்புறம்தான் நாளைக்குப் பல் தேய்க்கப் போகிறேன்!”

“அப்பா!”—தரங்கிணி பெருமூச்செறிந்தாள். “நான் நிஜமா பயந்தே போயிட்டேன்! என்ன செய்வேன்? என்னால் எதையுமே மனசுலே பூட்டி வெச்சுக்க முடியறதில்லே. அதுவும் இன்னிக்கு, இத்தனை நாளைக்கு அப்புறம், இந்த ஒடற தண்ணிக் கெதிரே உக்காந்துண்டு என்னால் எதையுமே என்னுள் நிறுத்தி வெச்சுக்க முடியாது. இன்னிக்கு என் மனசு கட்டுக் கடங்காமல் ஓடறது—என் மனசில் இருக்கும் எல்லாமே. ஆமாம். எல்லாமே!” –

“அப்புறம் சொல்லு.”

“ஆமாம்; இன்னிக்கோ நாளைக்கோன்னு அம்மா என்னை நிறை வயிறாயிருந்தாள். அப்பா மேல்துண்டோடே வெளியிலே போயிட்டு மூணு மாதமா விலாசமே தெரியாமல் இருந்தவர், ஒருநாள் சாயந்திரம், என்னவோ எதிர்த்திண்ணைக்குச் சீட்டாடப் போயிட்டு வந்தாப் போலே அவ்வளவு அனாயாசமா, நிஷ்கவலையா, சாவ காசமா, “மா-ஆ-ஆ-யே-மாம் பாஹி-ஶ்ரீ பாஹி-மாம் மாயே”ன்னு பாட்டை முனங்கிணட்டு வீட்டுள்ளே நுழையறார்! அம்மா தாழ்வாரத்துலே ஏதோ பாத்திரத்தை எடுத்துக் குனிஞ்சு நிமிர்ந்துண்டிருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் அப்பாவுக்குக் கொஞ்சம் ‘திக்’குனு ஆயிடுத்து. அவரையும் அறியாமல் என்ன தோணித்தோ தெரியல்லே, கைக்காரியத்தைப் பிடுங்கிக் கீழே வெச்சார்.

‘நெற்றியிலே வேர்வை கொப்புளிச்சு நிக்கறதே, காற்றாட ஆத்தோரமா கொஞ்சம் போயிட்டு வருவோம் வா’ன்னார்.

“பாட்டி கூடத்திலே பாயிலே படுத்திருந்தாள். அவளுக்கு வயசு தள்ளாமை.

இதுதானாடா சமயம்? எங்கே போயிருந்தே, என்ன பண்ணினே?” .

“எங்கப்பாவுக்குத் தனியா ஒரு மூர்க்கம் உண்டு. சமயம் போது எதுவுமே இல்லாத மூர்க்கத்தனம்.

“ஏன்? என் ஆம்படையாளோடு நான் கொஞ்ச நாழி பேசறது கூடச் சகிக்கல்லையா? நான் அப்படித்தான் கூட்டிண்டு போவேன்” என்று இரைந்தார்.

“அம்மாவுக்கும் அப்போ அப்படி வர வெக்கமா இருந்தது. மனசும் இல்லை. இடக்குப் பண்ணினாள்”.

‘நான் சொல்றேன், நீ கேட்கப் போறையா இல்லையா?” அப்பா அதிகாரம் பண்ணினார்.

“தர்க்கம் பண்ணுவதைவிடத் தணிந்துபோவதே மேல்” என்று அம்மா எதிர்பேசாமல் கிளம்பிவிட்டாள்.

“வாசல்படி தாண்டினதுதான், அப்பாவுக்குக் காரம் எல்லாம் எங்கோ சிட்டாப் பறந்தோடிப்போச்சு.

“வழியெல்லாம் விரலைச் சொடக்கிண்டு ‘மாயே’

மெட்டை முனகிண்டு நடந்தார். இதோ, இங்கேதான், மணலில் உட்கார்ந்ததும் ஏதோ ஆரம்பித்தார்.

“என்ன போ, ராஜி! நேத்து அனக்காபுத்துார் குதிரை வாகன உற்சவத்துக்குப் போயிருந்தேன். சேந்தரம்பள்ளி ஆறுமுகம் நாயனம் வாசிச்சான். இந்த ‘மாயே’ பாட்டை

ஊதியிருக்கான், பாரு! ஹாம்! நாலு வீதியையும் வளைச்சாச்சு, பாட்டு முடிஞ்ச பாடில்லை. வெளுத்துக் கட்டிட்டான், போ! இத்தனைக்கும் அடைப்பம்

தூக்கறவன்தான்! நேத்திக் காலையிலேகூட அவன்கிட்டத் தான் பண்ணிண்டேன். ‘என்னடாப் பாவி, கழுத்தை வெட்டறயே’ என்றுகூடக் கேட்டேன். வாத்தியத்திலே புத்தியை வெச்சுண்டிருந்தால் கத்தி கழுத்தை வெட்டாமல் என்ன பண்ணும்? அடே! சுவரை வெச்சுண்டுதான் சித்திரம் எழுதணும். கத்திதாண்டா உன் வயத்துப் பிழைப்பு. துருத்தி ஆத்ம திருப்தி அவ்வளவுதாண்டா’ என்று புத்தி சொன்னேன். சொன்னேனே யொழிய, பயல் வாசிப்பைக் கேட்டப்புறம் எனக்கே தாங்கல்லே. ஸ்நானம் அப்புறம் பண்ணிண்டாலும் போறதுன்னு அவனை அப்படியே கட்டிண்டுட்டேன்-”

“அம்மா ‘ஒ’ன்னு அழுதுட்டாள். ‘நீங்கள் இப்படித் தான் எப்போதைக்கும் இருக்கப் போறேளோ?ன்னு கேட்டாள்.

“அப்பா முழிச்சார். ‘என்ன? எப்படி?’

“நல்ல வேளையா இதுவரை பெத்ததெல்லாம் தக்காமல் போச்சோ, நான் நல்லதங்கா மாதிரி நடுச்சந்தியிலே நிக்காமே நிக்கறேன்! ஆனால் நம் குடும்பத்துக்கு இனிமேல் கதி மோட்சமே கிடையாதா? உங்களுக்கு திருந்தறதா உத்தேசமே யில்லையா?”

“அப்பா கொஞ்சம் அலண்டு போயிட்டார். ‘என்னை என்னடி பண்ணச் சொல்றே? என்னை எதிலுமே தக்க வொட்டாமல் ஏதோ ஒண்னு தள்ளின வண்ணமாயிருக்கே! நான் என்ன பண்ணுவேன்? இத்தனை வயசுக்கு மேல் என்னைத் திருத்த முடியும்னு உனக்குத் தோணறதா? இனிமேல் நான் திருந்தித்தான் என்ன ஆகனும்?”

“இந்த ரீதியிலே இரண்டுபேரும் ஏதோ ரொம்ப நாழி தர்க்கம் பண்ணியிருக்கா. அம்மாவுக்கு அழுது அழுது மூஞ்சி வீங்கிப்போச்சு. மாரே வெடிச்சுடும் போலிருந்தது. அம்மா திடீர்னு கண்ணை மலர மலர முழிச்சாளாம். அப்பா பயந்துபோய், சின்னக் குழந்தை மாதிரி, ‘நான் இனிமே சரியா இருக்கேண்டி’ன்னு சொல்லித் தவிச்சாராம். அம்மாவுக்குப் பேச்சே திடீர்னு மூச்சு ஆயிடுத்தாம்.

“எனக்கு இடுப்பு வலியெடுத்துப் போச்சு. எப்படியாவது வீட்டிலே கொண்டுபோய்ச் சேர்த்துடுங்கோ.”

அப்பா அம்மாவைப் பாதி தூக்கிண்டும் பாதி இழுத்துண்டும் போனார். ஆனாலும் முடியல்லே. அதோ. அங்கே அந்தத் தென்னைமரம் தெரியறது பாருங்கோ, அதன் பக்கத்திலே ஒரு தாழம்புதர். அதுவரைக்கும் போனதுமே, அம்மா, ‘என்னை இந்த மறைவிலே விட்டுடுங்கோ, விட்டுடுங்கோ’ன்னுட்டா.

“அப்பா அப்படியே அங்கே விட்டுட்டார். அங்கே அம்மா, என்னைத் தாழம் புதரண்டை பெத்திண்டிருக்கையில், இங்கே அப்பா இந்த மணல்லே, குட்டி போட்ட பூனை மாதிரி எப்படி அலைஞ்சிருப்பார் என்கிறதை இப்போ நினைச்சாக்கூட சிரிப்பாய் வரது.

“அம்மாவுக்கு திடீர்னு ஆச்சர்யமான பலந்தானிருந்திருக்கணும். அந்த நிமிஷத்துலே, ‘காவேரியம்மா, இந்த நிலைமையிலிருந்து, இங்கே வேறொருத்தரும் வராமல், என் மானம் தப்பி, என்னை மீட்டேன்னா, பொறந்த குழந்தையை உன்னிடத்திலேயே அலம்பிக்கறேன். இது உன் குழந்தை” என்று வேண்டிண்டாளாம். அப்படியே பாருங்கோ, நான் பிறந்ததுமே, அந்த உடம்போடே இங்கே வந்து இந்த ஜலத்துலே என்னை அலம்பி, தோளிலே போட்டுண்டு வீடு வந்து சேர்ந்துட்டாள்.

“ஆனால் அம்மாவுக்கு அதுக்குவேலே அவள் பலம் தோத்துப்போச்சு.

“அந்த ஆயாசம்தான் தாங்கலையோ, இல்லாட்டா, இப்படி நடுவழியிலே என்னைப் பெக்கும்படி நேர்ந்து விட்ட வெட்கமோ, அப்பா திருந்தாத ஏக்கமோ எதுவோ, பெத்ததே சாக்காய்க் கிடந்து ஒரு மாசத்துக்கெல்லாம் செத்துப்போயிட்டா. பாச்சையா வெளுத்த ஊசி உடம்போடே பாட்டி என்னைக் கூடத்திலே வளர்த்தி விட்டிருப்பாளாம். வம்பு அடிக்கவும், கரண்டியைத் ‘தலைவெட்டி’ சர்க்கரை, காப்பிப் பொடி, கடுகு, உப்பு கடன் வாங்கவும் கொடுக்கவும் வராளே, பக்கத்தாத்து ராதா, எதிர்த்தாத்து சீதா, இவாளோ அல்லது பத்துப் பாத்திரம் தேய்க்கற செங்கமலமோ சின்னம்மாளோ, ஆளுக்குக் கொஞ்சம் என்னை எடுத்து விட்டுட்டுப் போவாளாம். இதெல்லாம் பாட்டி எனக்கு அப்புறம் பேச்சு வாக்கிலே சொன்னதுதான். என்னை அப்படி எடுத்துவிட்டவள் ஆளுக்கு ஒரு பிடியாய் உயிரை வளர்த்து விட்டவர் எலும்பையெல்லாம், நாளடைவிலே இந்த ஆற்றிலேயே கரைச்சாச்சு.

“அப்பாதான் எனக்குத் ‘தரங்கிணி’ன்னு பேர் வெச்சா. அந்த ‘மாயே’ பாட்டினுடைய ராகமாமே அது.”

“ஆமாம். உங்கப்பா உங்கள் வீட்டுக்கு நல்லவரில்லையோ என்னவோ, அவர் விஷயங்களை அனுபவிக்கத் தெரிந்தவர் என்று தெரிகிறது.”

“நீங்கள்தான் மெச்சிக்கனும், என்ன வேண்டியிருக்கு!” இருளில் தரங்கிணி அலுப்புடன் கையை உதறினாள். “பேர் வெச்சதோடு சரி; அவர் மாறல்லே. ஒருநாள் தெருக் குப்பையிலே அக்கும் அலக்குமா ஒரு வைத்தியப் புத்தகம் கிடந்ததாம்; அதையெடுத்து வெச்சுண்டு வீட்டிலே ரெண்டு நாள் சேர்ந்தாப்போலே சோத்தைக்கூட மறந்துட்டுப் புரட்டிண்டிருந்தாராம். அப்புறம் அதிலே பேர் கண்ட மூலிகை ஒண்ணைத் தேடப்போறேண்டா ராஜான்னு போனவர்தான்; இன்னும் வரப்போறார்! பாட்டிக்குக் கொள்ளி போடக்கூட வரல்லே. கிழவி அடுத்த தெருவுலே என் மாமா தலையிலே என்னைக் கட்டிட்டுப் பிராணனை விட்டாள். நான் அங்கேதான் வளர்ந்தேன். என் வளர்ப்பே இப்படித்தான். இங்கே உறவாத்துலே கொஞ்ச நாள், அங்கே தெரிஞ்சவா வீட்டிலே கொஞ்ச நாள், தெரியாதவா ஆத்திலே கொஞ்ச நாள்…என் அம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியே தான் நான் ஆயிட்டேன்—வேண்டியவா வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி,

எங்கெங்கோ எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி,

ஒரு சமயம் பெருகி ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்—’

அவள் குரல் நடுங்கிற்று.

“தரங்கிணி! எப்படிப் பேசுகிறாய்! உன் வாக்கைக் கேட்கையில் அசூயையாய்க்கூட இருக்கிறது.’

“எதுக்கு?”

“கனமிகுந்த அர்த்தங்களை நய மிகுந்த வார்த்தைகளில் எப்படி உன்னால் இழைக்க முடிகிறது? அதுவும் கொஞ்சம்கூடக் கசப்பில்லாமல்!” –

‘நீங்கள் சொல்வதெல்லாம் உங்களுக்குத்தான் புரியும். இங்கே இப்படி உட்கார்ந்திருக்கையில், இப்படித்தான் வார்த்தைகள் வரது. அவ்வப்போ மனசில் தோன்றுவதை அப்படியே தோன்றியபடி உங்களுக்கு மாற்றிவிடப் பார்க்கிறேன்; அவ்வளவுதான்.”

ஆழ்ந்த யோசனையில் அவன் குரல் தாழ்ந்தது.

“அது அவ்வளவு சுலப மென்று நினைக்கிறாயா?”

“என் சின்ன வயசில் பாவாடையும் சொக்காயுமாய் நான் வளைய வரும் நாளில், அடிக்கடி இங்கே வந்து, பின்னால் கையைக் கட்டிண்டு கரைமேல் நிற்பேன். இது எனக்கு நன்னா நினைவிருக்கு. அம்மா என்னைப் பெத்த இடத்தைச் சுத்திச் சுத்தி வருவேன். அந்த இடத்திலிருந்து இந்தக் கரைக்கு நேர்க்கோட்டில் நடந்துவந்து இரண்டையும் ஒண்ணாகச் சேர்த்துவிட்டதாக நானே நினைச்சுப்பேன்.

“இந்த ஜலத்தை அடிக்கடி உள்ளங்கையில் எடுத்து விரலிடுக்குகளின் வழியா என்மேலேயே விட்டுப்பேன். அதில் எனக்கு ஏதோ அலாதி அர்த்தம் மனசுக்குத் தெரியும்; ஆனால் வார்த்தைக்குப் புரியாது.

“எனக்கு அடிக்கடி ஜலதோஷம் வந்துவிடும். என்னை ஜலத்தில் துளையக் கூடாதுன்னு தடுப்பா. தப்பளைன்னு திட்டுவா. ஆனால் திருட்டுத்தனமா நான் இங்கே வந்து போயிண்டுதான் இருப்பேன்.

“அந்த ஊரிலே வெள்ளம் வந்தது; இந்த ஊரிலே ஜலம் பெருகித்து; வீடு, வாசல், மண்ணு, ஆடு மாடு, மனுஷாளையெல்லாம் அடிச்சுண்டு போச்சுன்னு எங்கேயாவது யாராவது பேசிண்டிருந்தால், உடனே அதுமாதிரி ஏன் நம்ம ஊர் ஜலம் பெருக மாட்டேன்கறதுன்னு எனக்கு ஏதோ ஏமாத்தமா, நமுநமுன்னு வருத்தமாக்கூட இருக்கும். உடனே இங்கே வந்து நின்னுண்டு அதுமாதிரியெல்லாம் வெள்ளம் வந்து, ப்ரமாதமா தென்னை மர உயரத்துக்கு ஜலம் வீங்கி, நான் அதில் மிதக்கற மாதிரியெல்லாம் நினைச்சுப்பேன். இத்தனை ஜலம் ஒடறதே, இதுக்கெல்லாம் மையமா ஏதோ ஒர் இடம் இருக்கா? நமக்குத் தெரிஞ்சவா, தெரியாதவா எல்லாம் செத்துப் போனப்பறம் அவா அஸ்தியெல்லாம் கரைச்சிருக்குமே, அதெல்லாம் ஒண்ணுகூடி, அங்கே, அந்த நடு வயித்துலே தானே தங்கியிருக்கும்?— சொல்லுங்கோ, சும்மாயிருக்கேளே!”

“உம்—சொல்லு. உனக்கு இன்னும் என்னென்ன தோன்றுகிறதோ அதெல்லாம் சொல்லு.”

“ஏன், உங்களுக்குச் சிரிப்பாயிருக்கா?”

“இல்லை இன்பமயமாயிருக்கிறது உன் சொல் சொல்வதெல்லாம் சொல், சொல்!”

“அப்புறம் இவாளெல்லாம் மறுபடியும் அந்த நடு வயத்திலிருந்தே உசிரோடே வெளிப்பட்டு எங்கேயாவது பிறந்துண்டிருப்பாளோன்னோ? அந்த ஜலத்தைத்தானே வயலுக்குப் பாய்ச்சி, அந்த ஜலம் ஊறித்தானே பயிர்கள் வளர்ந்து, அப்புறம் அந்தம் பயிரால்தானே நாம் உயிர் வாழ்கிறோம்? அந்த உயிர் தானே மறுபடியும் மறுபடியும் நம் வயிற்றில் உயிர் வைக்கிறது.

“ஒருதடவை ஊரில் வாத்திபேதி வந்தது. உசிர்களைச் சுருட்டிண்டு போச்சு. ‘இந்த ஆற்று ஜலம் அசுத்தப்பட்டுப் போச்சு, இதை ஒத்தரும் உபயோகப்படுத்தக் கூடாது’ன்னு தண்டோரா போட்டு, பாராகூடப் போட்டுட்டா. ஆனால், எனக்கு அப்படியெல்லாம் தோணல்லே.

“நம்ம அம்மா என் தாய், தன் குழந்தையை அப்படித் தின்னுடுவாளா என்ன? ஒருநாள் மத்தியான்னம் இங்கே வந்தேன். நல்லவேளையா ஆள் ஒருத்தரும் இல்லை. ஜலம் என்றைக்கும் போல்தான், நிறைஞ்சு தாராளமா பரவி ஓடிண்டு இருந்தது. நான் வேணும்னு கரையோரமா கவிழ்ந்து படுத்து, ஆடு மாடு குடிக்குமே அது மாதிரி வாயை நேரே ஜலத்தில் வெச்சு உறிஞ்சி வயிறு நிறைய குடிச்சுட்டு வீட்டுக்கு ஒடியே வந்துட்டேன். என்னை ஒண்ணும் பண்ணல்லே. அதுக்கென்ன சொல்றேள்?”

“நீ தரங்கிணி.”

“நான் பார்க்கிற, பழகற மனுஷாளையும் இந்த ஜலரூபமாய்த்தான் புரிஞ்சுக்கறேன். எந்தெந்த விதமா, எப்படி எப்படி, எந்த அளவுக்குன்னு எல்லாம் கேட்கா தேங்கோ எனக்குச் சொல்லத் தெரியல்லே. ஆனால் அப்போ மொதக்கொண்டு அப்படித்தான் நினைசுப்பேன்.

“என் சிநேகிதி ஒருத்தியிருந்தாள். அவள் ஜலம் மாதிரி ‘கிளுக் கிளுக்’குன்னு சிரிப்பாள்.

என் மாமாவுக்குச் சில சமயத்திலே கோபம் வரும். அவருக்குக் கோவம் வந்துட்டால் வாயிலே வராத வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டுவார். அப்போ உச்சி வெய்யிலில் ஜலம் கக்கலும் கரைசலுமா ஒடற நினைவு எனக்கு வரும். அவர் கண் சிவப்பு அடிவண்டல் மண் மாதிரி இருக்கும்.

“எனக்கு இன்னொரு சிநேகிதி இருந்தாள். கல்யாணமாகி மூணு மாசம்கூட வாழல்லே. குறைப்பட்டு ஆத்துக்குத் திரும்பி வந்துவிட்டாள். அவள் வந்த முதல் நாள் எனக்கு மறக்கவே மறக்காது. எதுத்தாத்திலேதான் இருந்தாள். ஜட்கா வண்டியிலேருந்து கீழேயிறங்கினாள். நல்ல சிவப்பு! உடம்பிலே உடுத்திண்டிருந்த ஜப்பான் சில்க் புடவை அப்படித் தூக்கியடிச்சுது, பாருங்கோ. ஆனால் அவள் மூஞ்சிதான் இப்போ என் கண் முன்னால் நிக்கறது—பளிச்சுன்னு, கன்னம் மழ மழன்னு, நெற்றி வெறிச்சுன்னு, முகத்திலே, கண், மூக்கு, உதடு, கன்னம் எதிலேயுமே எந்த மாதிரியான அசைவுகூட இல்லை. அப்படித்தான் விடிகாலை வேளையில் ஜலம் முனுக்குனு கூட அசையாமல் அப்படியே நிற்கும். அப்பறம் நாம் தான் அதைக் கலக்கி, அதன் வயத்தைக் கலக்கறோம். நீங்கள் பாத்திருக்கேளோ?”

“நான் பார்த்ததில்லை. ஆனால் நீ சொல்லுகையில் பார்க்கறேன்”

“ஆனால் அந்தப் பெண் எப்பவுமே அப்படியில்லே. அப்புறம் ஏதோ பேசிச் சிரிச்சுக் கூத்தடிச்சுண்டுதாணிருந்தாள். அன்னிக்கு அப்படி ஜட்கா வண்டியிலே வந்து இறங்கினவளா இப்படியானாள் என்று அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியல்லே. அவளுக்கு இன்னும் கொஞ்சம் அடக்கம் இருக்கலாம்னு அவள் அம்மா கூட சொல்லுவாள். ஆனால் அவள் கேக்கற வழியாயில்லே. என் மாமிகூட அப்புறம் அந்தப் பெண்ணோடெ நான் சேரப்படாதுன்னு, உத்தரவு போட்டுட்டா, வரவா போறவா எல்லோரோடேயுமே கையைக் கொட்டி சிரிச்சுண்டு ஜலம் மாதிரி கலகலப்பாயிருப்பாள். –

“எங்கள் ஊருக்குப் புதிசா ஒரு போஸ்ட்மேன் வந்தான்—”

“உம். சரி— இந்தக் கதை எப்படி முடியும் என்று எனக்குத் தெரியும்.

“எல்லாத்தையும் சொல்றாப்போலே இதையும் உங்களுக்கு நான் சொல்றேன். அப்புறம் அவள் ஒருநாள் ஆத்துலேயில்லை. அந்தத் தபால்காரனுமில்லை. அவன் ஏதோ மணியார்டர் பணம் எத்தையோ சுளையம் பண்ணிண்டு ரெண்டுபேருமே ஒடிப் போயிட்டா.”

தரங்கிணி தலை குனிந்து மண்ணை அள்ளி ஆஹீதி சொரிய ஆரம்பித்தாள்.

“மூணு மாதம் கழிச்சு இதில்தான் அவள் உடல் மிதந்து வந்தது, தேகத்தில் ஏதோ படை படையாய்ப் பரவியிருந்தது. நான்கூட அவளை அப்போ பார்த்துட்டேன். எப்படியும் அவள் என் சிநேகிதி இல்லையா! இப்போயிருந்தால் இன்னும் என்னைவிட மூணு நாலு வயது பெரியவளாயிருப்பாள்; அவ்வளவுதான். நானும் அவளும் ஒரு சமயம் சாயந்திரம் இந்த ஆற்று மணலில் உட்கார்ந்துண்டு, சின்ன வயதின் சிறு பிள்ளைத்தனத்தில், திடீர்னு ஒருவர்மேல் ஒருவருக்குப் பால் பொங்கி வழியும் பிரியத்தில், ஒத்தரை விட்டு ஒத்தர் பிரியவே போறதில்லை, அப்படியே கல்யாணமாகி அவா அவா தனித் தனியாப் பிரிந்து போனாலும், கடிதாசு எழுதிண்டு எங்களுடைய அருமையான சினேகிதத்தை எப்படி எப்படி வளர்ப்போம்னு கையடிச்சுச் சத்தியம் பண்ணின்டதெல்லாம் எனக்கு நினைவு வந்தது.

“அவள் உடம்பைக் கரையிலே எடுத்துப் போடறத்துக்குக்கூட எல்லாருக்கும் பயம்.

“கரையோரத்திலே, போலீஸ் வரவரைக்கும் அவள் ஜலத்திலேயே கிடந்தாள். சின்ன அலை மெள்ள மெள்ள அவள் முகத்தில் மோதி மோதிக் கழுவுகையில், “ஆப்படி யெல்லாம் சத்தியம் பண்ணிண்டோமே, இவள் கதி எப்படி ஆயிடுத்து பார்த்தையா!” என்று மனசிலே நினைக்காமல் இருக்க முடியல்லே.”—அவள் குரல் தழு தழுத்தது.

“அவள் கதி அப்படி! உன் கதி”

அவள் சோகத்திலிருந்து பேச்சை அவன் திருப்ப முயன்றான்.

“என் கதி? நீங்கள் வந்தேள்! மாமா ஜாதகங்கள் தேடாத இடமெல்லாம் தேடிச் சலித்துப் போனப்புறம், ‘ஏன்டா என் கஷ்டம் போறாதுன்னு என் தங்கை என் தலையில் ஒரு கல்லைச் சுமத்திவிட்டுப் போனாள் என்று எரிச்சல் பட ஆரம்பிச்ச சமயத்தில் நீங்கள் என் வாழ்க்கையுள் ஒரு புதுப்ரவாகம் மாதிரி வந்தேள்’ ‘அடியே, பக்கத்தாத்து மாதுர்பூதமய்யர் ஆத்துலே புதுசா ஒரு பையன் தங்க வந்திருக்கானே, அவன் ஜாதகமும் வேண்டாம் மண்னும் வேண்டாம், எனக்கு எதிலும் நம்பிக்கை கிடையாது, மனப் பொருத்தம் இருந்தால் போரும் என்று சொல்றாண்டி’ என்று மாமா என் மாமியிடம் பேசிக் கொள்கையில் இப்படியும் கூட இருக்காளா என்ன என்று நான் நினைச்சுண்டு, நேரே காவேரியம்மன் கிட்டே நடு வெய்யிலே ஓடிவந்து கேட்டதுண்டு அப்புறம் நீங்களும் என்னைப் பார்க்கவும் வந்தேள். ஆனால் கன்னிடத்தில் என்ன கண்டேள்?”

அவள் விரல்கள் அவன் மூழங்கையைத் தொட்டன.

சிறிய இருளில் அவன் பற்கள் பளீரென்றன.

“உன் பேரைக் கண்டேன். போகப்போக உன் பேரைப்போல்தான் நீயுமிருக்கிறாய் என்பதைக் கண்டு. கொண்டிருக்கிறேன்.”

“நானும் என் வீட்டாரும் மஞ்ச நீராடிய பின் நாலாம் நாள் இங்கே பாலிகை கொட்டவந்த பொழுது என் மனசுக்குள் என்ன வேண்டிண்டேன்னு தெரியுமா?”

“தெரியுமா?” என்று அவன் திருப்பிப் பரிகசித்தான்.

“உங்களுக்கு எல்லாமே சிரிப்புத்தான். இருந்தாலும், நான் சொல்லுவேன். சொல்லத்தான் போறேன். ‘ஏ காவேரி! நீ என்னை எப்படி இதுவரை காப்பாத்தி என்னை எப்படி ஷேமப் படுத்தினையோ அதேமாதிரி, எங்கள் குழந்தைகளையும் காப்பாத்திக் கொடுக்கணும். உன் கரையிலேயே என் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நான் ஆசைப்படுவேன்.—”

அவன் பதில் பேசவிலலை, சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அவன் வாயிலிருந்து சிகரெட்டை ‘வெடுக்’கெனப் பிடுங்கி எறிந்தாள். இருளில் அதன் நுனிப் பொறி கர்ணம் அடித்துத் தூரத்தில் விழுந்து அவிந்தது.

“ஏன் நீங்கள் இந்த மாதிரி பண்றேள்? நான் குழந்தைப் பேச்செடுத்தாலே வேறே எதிலேயோ ஏன் இப்படி முனையறேள்? ஏன் இப்படி அலட்சியமா இருக்கேள்?”—அவள் குரலில் கோபக் கண்ணிர் தளும்பிற்று.

அவன் குரல் இருளில் மெத்தென்று இறங்கிற்று. ‘’நீ குழந்தை குழந்தை என்று பேசும்போதெல்லாம் என்னையும் உன்னையும் பிரித்துப் பேசுகிறாய். இவ்வளவு நாழியாய் நீ சொன்னதெல்லாம் எனக்கு இன்பமாயிருக்கிறது. அத்துடன் இழைகிறேன். நீ சொல்வதோடு நான் இயங்குவதால், உன்னோடும் நான் ஒன்றாகிவிடுகிறேன். இந்த நிலையை ஏன் மறுபடியும் இரண்டாக்குகிறாய்? ஏன் என்னை இப்படித் துண்டிக்கிறாய்?”

“ஏன் இந்தமாதிரியெல்லாம் புரியாதபடிப் பேசி, என்னை வேதனைப் படுத்தறேள்? நான் என்ன, உலகத்தில் இல்லாததாய் என்ன சொல்றேன்?”

“உலகத்தில் இருக்கிறதெல்லாமே சரியாய் நடக்கிறபடி நடந்துகொண்டிருக்கின்றதென்று உனக்குள் எண்ணமா?”

தரங்கிணி திகைப்புற்றவளாய்த் தன் எதிர்ே இருளிலும் பளபளக்கும் வெள்ளைத் தகட்டை நோக்கினாள்

“எனக்கென்ன தெரியும்?”

“உனக்கு இந்த ஆறு ஒன்றுதான் தெரியும். சாக்கடைகளும் ஜலதாரைகளும் நீ அறிவாயோ? நான் அறிவேன்.”

“இந்தப் பாஷையை விட்டுப் பளிச்சுன்னு உங்களால் சொல்ல முடியாதா?’’

“எனக்குத் தோன்றுவதை விளக்க எனக்கு இந்தப் பாஷையை விடப் பளிச்சென்று வேறு கிடையாது. இதெல்லாம் நாம் விட்டுடுவோம். ஒன்றே ஒன்று மாத்திரம் நீ என்னிடம் சொல். சினிமாவில் கேட்கிற மாதிரி கேட்கிறேன். ஆனால், என்னால் கேட்காமலும் இருக்க முடியவில்லை; ஒரே வார்த்தையில் சொல்லிவிடு. உனக்கு என்மேல் ஆசையில்லையா? என்னை நீ விரும்ப வில்லையா?”

“ஏன் அப்படிக் கேக்கறேள்? என்னை நீங்கள் அப்படிக் கேக்கறப்போ எனக்கு மனசு ஏதோ இம்சை பண்றது.”

அவன் பெருமூச்செறிந்தான். அவளுடைய பதிலுக்குக் காத்திராமலே, “ஆனால் நீ எனக்கு ரொம்பவும் வேணும்; நீ இல்லாவிட்டால் நான் இல்லை. சில சமயங்களில் நான் உன்னைத் தொடுவதுபோல் எனக்கு ஒர் உணர்ச்சி ஏற்படுகிறது.”

அவள் அவன் கையைப் பற்றினாள். அவன் இருளில் புன்னகை புரிந்தான்.

“நாம் ஒருவரை யொருவர் தொடும்போதெல்லாம் தொடுகிறோம் என்று அர்த்தமில்லை. ஒருவரையொருவர் நெரியக் கட்டி, அதனால் மூச்சுத் திணறினால்கூட நாம் தோட்டுக் கொள்வதில்லை; ஆனால், நீ எட்டவிருக்கையில், என் கண்ணெதிரில்கூட இல்லாமல் என் நினைவு கூட இல்லாமல், நீ ஏதோ வேலையாய் இருக்கையில், அச்சமயம் நான் உன்னைப் பார்க்கவோ நினைக்கவோ நேர்கையில், நான் எப்படியோ உன்னோடு இழைத்துவிடுகிறேன். அந்தச் சமயங்களில் எனக்கு மனசில் ஒர் அலாதி அமைதி ஏற்படுகிறது. உன்னிடம் எப்படியும் ஒரு குளுமை இருக்கிறது. நமக்குக் கல்யாணமாகிப் பத்து வருஷங்களாகின்றன. ஆனால், அவ்வப்போது கிட்டும் இந்த அமைதியிலோ, குளுமையிலோ அதை நான் அதுபவிக்கும் நிறைவிலோ ஒர் எள்ளுக்கூடக் குறையவில்லை. தனியாய் இருந்திருக்கிறேன். இனியும் நேர்ந்தாலும் இருப்பேன். தனியாயிருக்கலாம்; ஆனால் தனிமையாயிருத்தல்—அப்பா…!” பயங்கரத்தில் அவன் சிவிர்த்துக்கொண்டான்.

அவள் அவனை அனைத்துக்கொண்டாள்.

“உங்களைச் சில சமயங்களில் எனக்குப் புரியல்லே… ஆனால் நீங்கள் படும் கஷ்டத்தை சகிக்கவும் முடியல்லே. நீங்கள் என்ன படுகிறீர்களோ அதை உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டுவிட நான் என்ன செய்யனும்?”

புன்னகை புரிந்தவாறு அவள் முதுகைத் தட்டினான். “நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இப்போது எனக்கு ஒன்றும் இல்லை.”

தென்னைமட்டை ஓலைகளின் சலசலப்பு காற்றில் மிதந்து வருகையில் வானம் பெருமூச்சு விட்டது போலிருந்தது.

“சரி, வா. போவோமா? நேரமாய்விட்டது.” போக மனமிலாது தரங்கிணி தண்ணிரைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.


திடீரென நடுநிசியில் அவள் விழித்துக்கொண்டாள். மூச்சுத் திணறி, விழிகள் பிதுங்கின. கழுத்தை அவன் கைகள் நெரித்துக்கொண்டிருந்தன. படுக்கையில் அவள் பக்கமாக அவன் திரும்பிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் பயத்தின் கோபமும் சப்தங்கள் அவன் வாயில் காழத்தன. ஒருவாறாக அவன் பிடியை அவள் இரு கைகளாலும் உதறியெறிந்தாள். எழுந்து அவனை பலமாய் அசக்கினாள்.

“எழுந்திருங்கோ, எழுந்திருங்கோன்னா…!”

“ஊ…ம்?” சட்டென விழிப்பு வந்துவிட்டது.

“ஆ… என்ன? ஏதாவது பிதற்றினேனா என்ன்?”

“பிதற்றினேளா? அத்தோடு விட்டால் போதாதா?’’ நெஞ்சைத் தடவிக்கொண்டாள். இன்னும் வலித்தது.

அவன் எழுந்து உட்கார்ந்தான். முதல் வகுப்பு வண்டியில் அவர்கள் இருவர்தான்.

“இந்தாங்கோ, கொஞ்சம் தீர்த்தம் குடிங்கோ. என்ன கனா?”

“என் தாயாரைக் கொன்று கொண்டிருந்தேன்.”

“ஆ…?” அவன் தோளண்டை போய்க்கொண்டிருந்த அவளது கை சட்டெனப் பின் வாங்கிற்று. அவன் நேருக்கு நேர் அவள் முகத்தை இன்னமும் பார்க்கவில்லை. தனக்குத்தானே தன் கனவைத் தன்னெதிரே விரித்துப் போட்டுக்கொண்டிருந்தான்.

“நான் கரையில் நின்றுகொண்டிருக்கிறேன். வெள்ளம் அமோகமாய்ப் புரண்டு அம்மாவை அடித்துக்கொண்டு போகிறது. நான் அவளைத் தூக்கக் கை நீட்டுகிறேன். என்னையும் தன்னுடன் இழுத்துவிட்டாள்; நான் தப்பப் பார்க்கிறேன். ஆனால் விடமாட்டேன் என்கிறாள். என் இடுப்பைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு, கோரமாய்ச் சிரித்தவாறு என்னை உள்ளே இழுக்கப் பார்க்கிறாள். திணறுகிறேன். அவள் கழுத்தை நான் பிடிக்க, என்னை அவள் உள்ளே இழுக்க, ஜலம் என் மூக்கு, கண், செவியில் புகுந்து நான் கத்த வாய் திறக்கையில் வாயுள்ளும் புகுந்து விழித்துக்கொண்டேன்.”

அவன் முக முழுவதும் வேர்வை கொப்புளித்திருந்தது. தலைமயிர் அடை அடையாய்க் கசகசத்தது. அவள் கையிலிருருந்து டம்ளரை வாங்கி, ஜலத்தை மடக்கென்று அவசர மாய்க் குடித்தான். ஜன்னலுக்கு வெளியில் ரயில் துாரத்தை உதைத்துக்கொண்டிருந்தது.

வெளியே பார்த்தபடி: “நான் என்னைப்பற்றி உன் ஆசிடம் முழுக்கச் சொல்லவில்லை, தரங்கிணி. நான் கசந்து கசந்து தொப்புள் வரை கசந்து உடலெல்லாம் விஷமாய்ப் போனேன்! என் தாய் ஒரு வாழாவெட்டி.

“நான் வயிற்றில் இருக்கும்போதே அசட்டுத்தனமாய்ப் புகுந்த வீட்டாரை ஆக்ரமித்துக்கொண்டு தாய் விடு வந்துவிட்டாள். பிறந்த வீட்டு அகந்தையின்

ஊட்டமும் சேரவே அப்புறமும் புத்தி வரவில்லை. எப்பவுமே வரவில்லை. என்றேனும் ஒருநாள் தன் கணவன் தேடிக்கொண்டு வருவான் என்று மனப்பால் குடித்தாள். விஷயம் முற்றிப்போனபிறகு மனதில் தோன்றினாலும் தன்னிடத்திற்கு திரும்பத் தைரியம் போய்விட்டது. பிறந்த விட்டுச் சோற்றைச் சோறாகத் தின்றுகொண்டு ஊர் சிரிக்க, வந்த இடத்திலேயே தங்கிவிட்டாள். எனக்கு எட்டு வயதாகியும் அப்பா என் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பெற்ற பிள்ளைமேல்கூட எண்ணம் இல்லை பார் என்று என் தாயும் அவள் வீட்டாரும் குற்றம் மறைக்க அப்பாவை ஏசுகையில், அந்த வயதிலேயே என்னையறியாமல் எனக்கு ரத்தம் கொதிக்கும். இப்படி வீட்டில், பேச்சுவாக்கில், வெளியில் நாலுபேர் வார்த்தை வாக்கில், விஷயம் என்னுள் ஊறி, ஒருநாள் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டேன். நடந்தே நாற்பது மைல் கடந்து அப்பா வீட்டைத் தேடியடைந்து கதவையிடித்தேன். மெலிந்த உடம்புடன் ஒருவர் கதவைத் திறந்தார்.

“அப்பா, நீதானே என் அப்பா?” என்று நான் அவரை முதன் முதலாய்க் கேட்ட கேள்வி இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. புழுதி படிந்த என்னை அப்படியே அவர் வாரிக்கொண்டார். “நான் உன் அப்பனோ இல்லையோ, கண்டிப்பாய் நீதான் என் மகன்” என்றார். இப்போப்போல் இருக்கிறது. என் முகத்தை நனைத்த அவர் கண்ணிர் இன்னமும் உலரவில்லை. அந்தக் கேள்வியிலும் அந்தப் பதிலிலும் சூட்சுமமான—விதவிதமான—அர்த்தங்களைச் சமயத்துக்குத் தக்கவாறு இன்னமும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. மனம் சளைக்கும் போதெல்லாம், இந்தக் கேள்வியையும் பதிலையும் ஞாபகப்படுத்திக் கொள்கையில் புதுப் பலம் பெறுகிறேன்.

“அப்பா, நீதானே என் அப்பா?”

“நான் உன் அப்பனோ இல்லையோ, நீதான் என் மகன்.”

“நான் அப்புறம் இன்னமும் என் தாயைக் காணப்போகிறேன். அப்பாதான் எனக்குச் சமைத்துச் சாதம் டோடுவார். நான் என்னிடம் போய்ச் சேர்ந்த சமயத்தில் அவருக்கு ரொம்ப நெருங்கியவர்கள் இறந்தோ அல்லது தூரதேசமோ போய்விட்டார்கள். அவரும் அவருள் என்ன விரக்தியோ தெரியவில்லை. ஸ்திரி இல்லாத ஆணாகவே இருந்துவிட்டார். அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் அவர் ஏன் அப்படி யிருந்தார், யார் மாதிரி இருக்க முயன்றார் என்று எனக்கு இன்னும் தெளிவாகப் புரியவில்லை. அப்பாதான் எனக்கு வாத்தியார். பகல் முழுவதும் உழைப்பில் ஊன்றியிருந்து விட்டு இரவு வந்ததும் பாடம் சொல்லிக் கெர்டுப்பார். என்மேல் அவருக்கிருந்த பாசத்தை எனக்கே முழுக்க முழுக்க அறிந்துகொள்ளவும் பயமாயிருக்கிறது.

“சில சமயங்களில் அவர் என்னை, வயதாகியும் மடி மீது வைத்துக்கொண்டு, நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு விட்டேன். தன்னந்தனியாகி விட்டேன். ஆனால் அன்று நீ கதவை இடித்து உன் குழந்தை முகம் நிமிர்த்தி என்னை ‘அப்பா, நீதானா என் அப்பா?’ என்று கேட்டதிலிருந்து எனக்கு மறுபடியும் நம்பிக்கை வந்துவிட்டது. நான் உனக்காகக் காத்திருந்த நாளெல்லாம் வீணாளில்லை அல்லவா? இனிமேல் நான் இறந்தாலும் சரி, அல்ல இதுவரை எனக்கு நேர்ந்த சோதனைகள் போதாதென்று நீயே என்னை முந்திக்கொண்டாலும் சரி, நான் வாழ்க்கை பலனில்லை என்று இனி சொல்லமாட்டேன்’ என்பார். அவர் சொல்வது புரியாது, ஆனால் இன்பமா யிருக்கும்.

“என் தந்தையும் நானும் அண்ணன் தம்பிகள். அவர் பக்கத்தில்தான் படுப்பேன். அவர் உடம்பெல்லாம் அன்பு தான் ஒடிற்றே யொழிய இரத்தம்கூட ஒடவில்லை, சில சமயம் அவரை நான் லேசாகத தொட்டுக்கூட பார்த்துக் கொள்வேன். உடம்பும் சற்றுப் பூஞ்சைதான். என் மனத்திலிருப்பதைக் கண்டுகொண்டு புன்னகை புரிவார். அந்த சமயங்களில் அவர் முகம் பலகணி திறந்ததுபோல் திடீரென வெளிச்சமாகும்.

“நான் ஒவ்வொரு பரீட்சையாக நன்கு தேறிவந்தேன். கடைசியில் உத்தியோகப் பரீட்சைக்கு டில்லிக்குப் போனேன். இந்தியாவில் நாலு பட்டணங்களிலிருந்தும் பொறுக்கியெடுத்தாற்போல் நானுாறு பேர் பரீட்சைக்கு வந்திருந்தனர். அத்தனைபேரிலும் முதலாய்த் தேறினேன். விஷயத்தை நான் தந்தி மூலமாவோ, தபால் மூலமாவோ, அப்பாவுக்குத் தெரிவிக்கவில்லை. நேருக்கு நேர் சொல்லி முகத்தைப் பார்க்க வேண்டாம்? அன்றே வண்டியேறி மூன்றுநாள் பிரயாணம் செய்து ஊர் திரும்பினேன்.

“அவர் என்னை தூரத்தில் வரும்போதே கண்டுவிட்டார்.”

‘அப்பா, பாஸ்!’ என்று கத்தினேன்.

“அப்பா என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே மிரள மிரள விழித்தார். –

“என்னப்பா? ஒண்ணுமே சொல்லமாட்டேன்கிறையே! நான் பாஸ் அப்பா, பஸ்ட் கிளாஸில் பாஸ்—அப்பா என்னவோ சொல்ல முயன்று கையைத் தூக்கித் தூக்கிக் காட்டி, தடாலென்று என்மேல் விழுந்து விட்டார். கண்கள் என்னையே பார்த்த பார்வையில், வாய் சிரிப்பிலும் அப்படியே உறைந்து போய்விட என் ஆலிங்கனத்தில் அவர் சவமாய்க் கொண்டிருந்தார்.

“குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப்போய் தான் இறந்து போய்விட்டோம், என்பதை உணரும் உணர்வு மாத்திரம் இருந்தால் எப்படி இருக்கும்! கொஞ்சநஞ்சம் சுவாமி பூதங்களில் எனக்கு இருந்த நம்பிக்கைகள் எல்லாம் அன்று முறிந்துபோயின. நம்பிக்கைகள் முறிந்தபின் மனிதனுடைய தனிமை தாங்கக்கூடியது அல்ல. முறிந்த நம்பிக்கையைத் திரும்ப அப்படியே பெறுவது என்பதும் இல்லை.

“குழந்தை குழந்தையென்று நீ ஏங்குகிறாய். ராமே சுவரம், அரசமரம் என்று இன்னும் உன்னைப்போல் எத்தனையோ பேர் தேடியலைகிறார்கள். என்னத்தைத் தேடுகிறார்கள்? எதற்கு? எனக்குச் சிரிப்பு வருகிறது. அவர்களைப் பார்த்தால் வெறுப்பாய்க்கூட இருக்கிறது. நான் என் அப்பனுக்கு எம்னாயிருந்தேன்.”

அவனுக்குக் கமற ஆரம்பித்துவிட்டது. சிகரெட்டைப் பற்றவைத்துப் பலமாய் இழுத்தான்.

தரங்கிணி மெளனமாய் அழுதுகொண்டிருந்தாள்.


“ஏ, தரங்!”

அவன் குரல் உள் அறையினின்று எழுந்தது

ஓவ்!”

தரங்கினி வெளியறையில் பெட்டியிலிருந்து துணி மணிகளையெடுத்து அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந் தாள்.

“உனக்குப் பிடிக்கவில்லையோன்னோ?

“எது?”

முகத்தில் சோப்பு நுரையுடன் கையில் கத்தியை ஏந்தியவண்ணம் அவன் வெளியே வந்தான். உதட்டோ ரங்கள் குறுநகையில் குழிந்திருந்தன.

“இந்தமாதிரி—நான் தான் என் உத்தியோகத்தில் ஊர் ஊராய்ச் சுற்றவேண்டி யிருக்கிறதென்றால் உன்னையும் கூட இழுத்துக்கொண்டு நாடோடிகள் மாதிரி நாலு நாள் அங்கே, எட்டுநாள் இங்கே என்று ஹோட்டலில் காலட்சேபம் பண்ணிக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றுகிறோமே, இதுதான்!”

“கொஞ்சம் அலுப்பாய்த்தானிருக்கு. ஒரு வேலையும் இல்லாவிட்டால், அதுவும் இம்சைதான். நீங்கள் காலையில் கிளம்பிப் போனப்பறம் நீங்கள் திரும்பி வரவரைக்கும் எனக்கு என்ன வேலையிருக்கு சொல்லுங்களேன்? வீடு இருந்தால் ஏதாவது வேலை இருந்துண்டேயிருக்கும். ஒண்னுமில்லாட்டா எதையாவது கொட்டியிறைச்சுட்டு அள்ளிப் பொறுக்கிண்டாவது இருக்கலாமே!”

“உனக்கு இது பிடிக்கவில்லையோன்னா?” “அப்படியும் சொல்லிவிட முடியுமா?’’

தரங்கினி அலமாரிக் கதவை மூடிவிட்டு கீழே கிழித்துப் போட்டிருந்த காகிதச் சுக்கல்களைத் திரட்ட ஆரம்பித்தாள். “இப்போ புதுப் புது ஊர்களாய்ப் பார்க்கிறேன். ரயில் பிரயாணம் செய்யறேன். அந்த அந்த இடத்து வினோதங்களை அழைச்சுண்டுபோய்க் காண்பிக்கறேள். இதெல்லாம் நான் ஆத்திலே கட்டுப் பெட்டியாய் உட்கார்ந்திருந்தால் கிட்டுமா?’’

கத்தி தாடிமேல் இறங்குகையில் ‘கிறிங் கிறிங்’ கென்றது.

“எத்தனை ஊர் சுறறனாலும் உனக்கு உன்னுார் சப்பாத்திப் புதரும், ஊர்க்கோவிலின் ஒடிசல் மணியும் தானே பிடிக்கிறது? அப்புறம் உன்னைப் பெத்த அந்த ஆறு—ஊவ்…”

“என்ன?’’

“வெட்டிக்கொண்டேன். உன்னோடு பேசிக் கொண்டே.”

“எல்லாமே ஏளனம் என்றால் அப்படித்தான். நீங்கள் என்னை எங்கெங்கோ தான் அழைச்சுண்டு போறேள், ஏன் அந்த அந்தக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன்கறேள்? இன்னிக்குச் சாயந்திரம் வாங்கோ போவோம்!”

அவன் முகத்தை ‘விறு விறு’வென்று டவலில் வேகமாய்த் துடைத்துக் கொண்டான்.

“எனக்குக் கோவில் வேண்டாம்,” அவள் முகம் விழுந்தது கண்ணாடியில் தெரிந்தது.

“ஆனால் போவோரை நான் தடுக்கவில்லை. வேனுமானால் நீ போய் வாயேன்.”

“இன்னிக்குப் போகத்தான் போகிறேன். வெள்ளிக்கிழமையாயிருக்கு.”

“ஜமாய்! உன் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டிக்கொள். சரி வா, சாப்பிடப் போவோமா? ஓயாமல், சாம்பார், கறி கூட்டு, ரஸ்ம்…”

“ஆமாம், நீங்க என்னவேனுமானாலும் சொல்லிக்கோங்கோ—அந்த சுண்டக்காய் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் கிட்டற நாள் என்னிக்கினு நான் ஏங்க ஆரம் பிச்சாச்சு.”

ஒரு பையன் வந்து பரிமாறினான். பத்துப்பன்னிரண்டு வயதுதானிருக்கும். ரேக்குச் சிவப்பு. நடுவகிடு எடுத்து சிகையின் மயிர்க்குஞ்சங்கள் பளபளத்துக்கொண்டு தோள் வரை தாழ்ந்து, சுருண்டு தொங்கின. பட்டை பட்டையாய் விபூதியை இட்டுக்கொண்டு புருவ மத்தியில் குங்குமம் ப்ரகாசிக்கத் தன்னையே கீழே இழுக்கும் கனத்தைத் தூக்கிக்கொண்டு, “சாம்பார் போதுமா அம்மா?” என்று உற்சாகத்துடன் கத்தினான். அவன் போவதையும் வருவதையும், தரங்கிணி கவனிப்பதை அவள் கணவன் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவளும் அதைப் பார்த்துவிட்டாள்.

“பார்த்தேளா, குழந்தையை! பழனியாண்டவர் மாதிரியே இருக்கான்!”

அவன் ஒன்றும் பதில் பேசவில்லை. ஆனால் ரஸத்தைத் தூக்கிக்கொண்டு வேறு ஆள் வந்தபோது தரங்கிணியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் அவனுக்கு சற்று பரிதாபமாய்த்தானிருந்தது. “ஏன், அந்தச் சின்னப் பையன் இல்லை?” என்று கேட்டான்.

மோரைத் தூக்கிக்கொண்டு பையன்தான் வந்தான். அவள் கணவன் அவள் காதண்டை குனிந்து “பழனியாண்டவரைச் சேவித்துக்கொள்” என்று ரகசியமாய்ச் சொல்லி விட்டு ஊறுகாயைத் தொட்டுத் தொண்டை நாக்கில் இழுத்துக் கொண்டான். பையனுக்கு அது காது கேட்டு விட்டதோ என்னவோ, சிரித்த முகத்துடன் அம்மாவிடம் போய் சாவதானமாய் நிறுத்திப் பரிமாறினான். அப்புறம் கூட அங்கேயே நின்றிருந்தான். வாயிதழ்கள் மலர்ந்தபடியிருந்தன.

*⁠*⁠*

ப்ரசாதத் தட்டை ஏந்தியபடி தரங்கிணி மாடிப்படியேறி அறையுள் நுழைந்து விளக்கைப் போடுவதற்காகக் கதவோரத்தில் இருந்த பொத்தானை அழுத்த—இல்லை, பொத்தான்மேல் வைத்த விரல் அழுத்தாமல் அப்படியே நின்றது. எதிரில் சுவரோரமாய்ப் போட்டிருந்த கட்டிலின் மேல் ஒரு தணல்பொறி கனிந்தது. அம்மாதிரி அவள் கணவன் புகையை உறிஞ்சி இழுக்கையில் அவனுக்கு மனம் சரியில்லை என்று அவள் அறிவாள். அவன் சீற்றங்களை அவள் அறிவாள். அப்போது அவனை யாரும் நெருங்குவதற்கில்லை. முன்பின் சுவடு இலாது கக்கிக் குமுறி எழும் எரிநீர்ச் சுழிகள் அவை.

அவள் விளக்கை ஏற்றவில்லை. மேஜையின்மேல் தட்டை வைத்துவிட்டுப் போய் அவன் பக்கலில் அமர்ந்தாள்.

“என்ன படமெடுத்திருக்காப்போல் இருக்கு!”

அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அவள் கழுத்தையணைத்து தன் பக்கம் இழுத்தான். அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள்.

“ஏனாம்?”

“ஒன்றுமில்லை. இப்போ என்ன அதைப் பற்றி?” என்று சிரித்துக்கொண்டே மறுபடியும் அவளை அணைக்க முயன்றான்.

“இல்லை; உங்கள் புகைச் சிரிப்பெல்லாம் வேண்டாம். விஷத்தை முழுக்கக் கக்கிடுங்கோ. உங்களை முன்னால் சுத்தி பண்ணியாகணும். இல்லாட்டா வயத்தில் அத்தனையும் வெச்சிண்டு எல்லாரையும் வேக அடிச்சூடுவேள்.”

“ஹூ!”

“சொல்லுங்கோ!”

“ஒன்றுமில்லை.”

“பரவாயில்லை, சொல்லுங்கோ.”

“இன்றைக்கு ஆச்சரியமாய், நீ எதிர்பாராக வெகுமதி உனக்கு தயார் பண்ணிவைக்கலாம் என்றிருந்தேன். அது என்னடாவென்றால் புஸ்வாணமாய்ப் போய்விட்டது. அதுதான்.

“அப்படி என்ன வெகுமதியோ?”

“இன்றைக்கு நமக்குப் பரிமாறினானே அந்தப் பையனை உனக்கு ரொம்பவும் பிடித்திருந்ததோன்னா?”

மெளனமானாள்.

“என்ன பதிலே யில்லையே? ஊம் கொட்டினால் அல்லவா?”

“ஊம்…”

“இப்போதுதான் சற்று நேரத்திற்கு முன் ஒரு எண்ணம் தோன்றிற்று. அந்தப் பயலை நம்முடனேயே கூட்டிக் கொண்டால் என்ன? லட்சணமாயிருக்கிறான். புத்திசாலி என்றும் தோன்றுகிறது. நினைத்ததுதான், எனக்கு ஒரே உற்சாகம் உண்டாகிவிட்டது. அவனைத் தேடிக்கொண்டு சமையல்கட்டுக்குப் போனேன். அவனைக் காணோம். வாசல் பக்கம் போனேன் காணோம். பின் கட்டுக்குப் போனேன். அங்கே இருந்தான். என்ன பண்ணிக்கொண்டிருந்தான் என்று நினைக்கிறாய்?”

“என்ன?”

அவன் சிகரெட்டை விச யெறிந்துவிட்டு கட்டிலி லிருந்து குதித்து, அறையின் குறுக்கே முன்னும் பின்னும் நடந்தவாறு கோபாவேசத்துடன் கையை வீசிக்கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டான்.

“தோய்க்கிற கல்லின்மேல் குந்திட்டுக்கொண்டு உட்கார்ந்து, ஒரு சுருட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான்.”

அவள் சிரித்துவிட்டாள்.

இல்லை, இல்லை; அப்படியில்லை அது!” அவன் மேஜைமேல் கோபத்துடன் அறைந்த அறையில் அதன் மேலிருந்த தட்டு அதிர்ந்தது. “சிரிக்கற சமாசாரம் இல்லை. வாண்டுப் பயில்! இவனைப்பற்றி இன்று காலையெல்லாம் நாம் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் என்ன, நான் நினைத்துக்கொண்டு வந்ததென்ன, இவன் இப்போது பண்ணிக் கொண்டிருக்கிறதென்ன? எனக்கு ஒரேயடியாய்ப் பொங்கிக்கொண்டு வந்துவிட்டது.

“என்னடா, இப்பொ நீ குடிக்கிற சுருட்டு உன்னை விட நீளமாயிருக்கும் போலிருக்கிறதே!’ என்றேன். அவனுக்கு அப்போதாவது ஒரு பயம் ஏற்படவேண்டாம்? சர்வ சாதாரணமாய்ப் புகையை ஊதிவிட்டு, ‘அதைப் பத்தி உனக்கென்னயா? காசு என் காசுதான்.’ என்றான். விட்டேன் பார், ஒன்று! ‘அப்பாடா’ என்று செவியைப் பொத்திக்கொண்டான். அப்புறம் நான் அங்கு நிற்க வில்லை விடுவிடுவென்று வந்து அவனைத் தொட்ட கையைக் கழுவிக்கொண்டு இப்பொழுதுதான் கட்டிலில் உட்கார்த்தேன்.”

தரங்கிணி மெளனமாய் இருந்தாள். அவன் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தான்.

“எல்லாம் தலைகீழாய்ப் போய்விட்டது. நான் குட்டிச் சுவராய்த்தான் போவேன். என்னைச் சரிப்படுத்த உரிமையில்லை’ என்று சட்டம் படிக்கிறதுகள்.”

“அதனாலே நீங்கள் அவனிடம் உங்கள் கைவரிசையைக் காண்பிச்சேளாக்கும்!”

அவன் குரல் தடித்தது. “ஏன்? நீயும் எனக்குச் சட்டம் படிக்க ஆரம்பித்து விட்டாயா?”

“இல்லை. ஆனால் நீங்கள் அவனுக்கு அப்பாவா?”

“அப்பாவா?”— அவன் சீற்றத்துடன் கட்டிலிலிருந்து தாவிக் குதித்தான். “என் பிள்ளை இப்படியிருந்தால் என்ன பண்ணுவேன் தெரியுமா? என் பிள்ளை! என் பிள்ளை!!” உணர்ச்சி வேகத்தில் அவனுக்கு மூச்சு அடைத்தது.

அவள் சாவதானமாய், “உங்கள் கையிலிருப்பது என்ன?” என்றாள்.

அவன் தன் கையில் கனிந்துகொண்டிருக்கும் சிகரெட்டை அப்போதுதான் புதிதாய் நினைவோடு கண்டான். அதை ஜன்னலுக்கு வெளியே வீசியெறிந்தான். அவன் ஆவேசம் புசுக்கென அவிந்தது. கால்கள் வெட வெடத்தன. களைப்புடன் கட்டிலில் சாய்ந்தான். அவள் அப்படியே அவனைத் தழுவிக்கொண்டாள்.

“எப்படியும் நான் கெட்டுப்போனாலும் என் பிள்ளையும் கெட்டுப்போக இஷ்டமாயிருக்குமா?” அவன் குரல் தழுதழுத்தது.

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. அவனை குழந்தை போல் அணைத்துக்கொண்டிருந்தாள்.

அம்மாதிரிச் சமயங்களில்தான் அவன் அவளை வெகுவாய் நாடினான். அவனை அலைக்கும் தீயை, அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக்கொள்ள முடித்தது.

ஜன்னலுக்கு வெளியே வானத்தில் மேகங்கள் யாருக்கோ வழிவிடுவனபோல் பிரிந்து இரு பக்கங்களிலும் ஒதுங்க ஆரம்பித்தன.

அவள் திடுக்கென்று, “நான் இப்போ ஒரு பித்துக் கொள்ளி ஆகப்போகிறேன்” என்றாள்.

“சந்தோஷம்.”

“உங்களை ஒரு கேள்வி கேக்கப்போறேன்.”

“பித்துக்கொள்ளி கேள்வி!”

“ஆமாம், உங்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ?”

“ம்…ம்…ம்”

“உறும வேண்டாம். பதில் சொல்லுங்கோ.”

“என்ன, இது எந்த நாவலில் எத்தனாவது பக்கம்?”

“எனக்கு அதிலெல்லாம் இஷ்டம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும். படிச்சால்தான் கேக்கத் தோணுமோ? இல்லாட்டா லோகத்திலே இந்தக் கேள்வியே கிடையாதா?”

“என்ன சொல்லவேண்டும் என்கிறாய்?”

“பிடிக்கறதுன்னு சொல்லிட்டுப் போங்களேன்.”

“பிடிக்கிறது.”

“எவ்வளவு பிடிக்கிறது?”

அவன் பதில் பேசவில்லை. அவளைத் தோளில் பற்கள் பதியக் கடித்தான். வீல் என்று கத்தினாள்.

“அவ்வளவு பிடிக்கிறது!”

“விளையாடாமெ நேர்ப் பதிலாகச் சொல்லுங்கோளேன்.”

“கடவுளே நேர்ப் பதில் கொடுப்பதில்லை.”

“நீங்கள்தான் அவருக்குப் போட்டி ஆச்சே, பதில் சொல்லித்தான் பாருங்களேன்.”

“சொல்கிறேன். இப்போது என் மனம் உன்னிடம் இருக்கும் நிறைவில், இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலேயே இந்த நிலையிலேயே நான் இறந்துபோய்விட வேண்டும். அவ்வளவு பிடிக்கிறது உன்னை.”

அவன் தன் மனத்தைப் பெட்டிபோல் திறக்கும் அதிர்ச்சியில் அவள் உடல் குலுங்கிற்று.

“ஏன் சாவு சாவு என்கிறீர்கள்:”

“அது தான் நிஜம்” பெருமூச்செறிந்தான். “உன்னை விரும்பும் விதமும் நான் சொன்னவிதம்தான். நீ கேட்டாய்; நான் சொன்னேன். அவ்வளவுதான்!”

அவள் கைகள் அவனைச் சுற்றி இன்னும் இறுகின.

“அப்படியானால் நீங்கள் நான் இப்போ சொல்லப் போவதைக் கேட்கப்போறேள்.”

“ஓஹோ! கேட்கப் போகிறேனோ?”

“ஆமாம். சத்தியமாய்க் கேட்கப் போகிறீர்கள்.”

“சத்தியமா? இதென்ன! புதிது புதிதாய் வார்த்தை நடமாடுகிறது?”

“ஆமாம்!—சத்தியமாய்த்தான்!”

“அது எப்படி யிருக்கும்?”

“இதென்ன, இப்படிக் கேட்கிறளே. இத்தனை நாழி எதைப்பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருந்தேள்?”

“நான் ஒன்றும் பேசவில்லையே.”

“என்மேல் உங்களுக்கு இருக்கும் பிரியத்தை எந்தத் தினுசில் நீங்கள் ஸ்தாபிச்சிண்டிருந்தேள்?”

அவன் சிரிப்பில் அறை எதிரொலித்தது.

“நான் சாவில் என் நிறைவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்?”

“சாவு என்பது உங்கள் பாஷை, சத்தியம் சாதாரணமான என் பாஷை என்று வெச்சுக்கோங்களேன். ரெண்டு பேரும் சொல்லும் விஷயம் ஒண்ணேதான்.”

“வெச்சுக்கோங்களேன், பண்ணிக்கோங்களேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் இன்னி முழுக்க என்ன, என்றைக்குமே வைத்துக்கொண்டிருக்கலாம்; எதை வேணுமானாலும் பண்ணிக்கொண்டிருக்கலாம்.”

“அப்படியல்ல இப்போ. இப்போது நிச்சயமாய் ஒன்றைச் செய்யப்போகிறோம்.”

“எதை?”

“நான் இப்போ உங்களுக்குச் சொல்லப்போவதை, செய்யறேன்னு சொல்லுங்கோ—சத்தியமாய்ச் செய்யப் போறேன்”னு.

“என்னை அந்த வார்த்தை ஏதோ வேதனைப்படுத்துகிறது” என்று அவன் முனகினான்.

“பயமாயிருக்கா?”

“பயமா?”— அவனுக்கு ரோஷம் பொங்கிவிட்டது. “எதுக்குப் பயம்? நான் எதுக்கும் பயப்படமாட்டேன்!”

அப்படின்னா சொல்லுங்கோளேன்.

“சரி சத்தியமாய்ச் செய்கிறேன், மனுஷ சாத்தியத்திலிருந்தால்.”

“நீங்கள் இன்னொரு கலியாணம் எனக்காகப் பண்ணிக்கொள்ளப் போகிறீர்கள்.”

அவ்வறையில் ஓர் இமைநேரம் நித்தியத்தின் கனம் தொங்கிற்று. ஜன்னலுக்கு வெளியே நிலவு கொடுக்கரிவாள் போல் முளைத்திருந்தது.

மறுகணம் அவன் அவளைத் தன்னிடமிருந்து வீசியெறிந்த வேகத்தில் அவள் எட்டடி தூரம் போய்த் தரையில் வீழ்ந்தாள். அவளது பின் மண்டை மேஜை விளிம்பில் ‘ணக்’கென்று மோதும் சப்தம் அறை முழுதும் அதிர்ந்தது.

அவன் எழுந்து விளக்கைப் போட்டான்.

அவன் கண்களில் தணல் வீசிற்று. கடித்த பற்களினிடையிலிருந்து வார்த்தைகள் சீறிக் கொப்புளித்தன.

“சூன்யக்காரி! சூன்யக்காரி! கோயிலுக்குப் போய் சூன்யம் வைக்கத் தெரிந்துகொண்டுதான் வந்தாயா! இந்தக் கைகேசி வரம் கேட்கத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?”

அவள் பின்மண்டையில் அடிபட்ட இடத்தைத் தேய்த்துக்கொண்டு எழுந்திருக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. பின்னுக்குத்தான் தள்ளிற்று.

“சத்தியமாம் சத்தியம்! உன் வீட்டுப் புழக்கடையில் போட்டிருக்கும் கொத்தமல்லி பாரு, அது!”

“வாய்வழி வெளிக்குதிக்க அஞ்சும் ஆபாச வசை மொழிகள் இன்னும் எத்தனையோ அடுக்கடுக்காய்ப் பற்களிடையில், அவன் நாக்கு நுனிமேல், வாய்க் கூரையைப் பிளக்கப் பார்ப்பது அவளுக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை.

“நீங்கள் என்ன வேனுமானாலும் திட்டிக்கோங்கோ. எனக்கு ஒண்னும் ஒட்டிக்—ஆ!”—அவள் கண்கள் சொருகிட்டன.

“இப்போது என்ன மாயம்!”

அவன் அருகே வந்து குனிந்து அவளை அப்படியே வாரித் தூக்கினான்.

அவள் அலறினாள். “ஐயோ—இடுப்பு! இடுப்பு’ கயண்டுட்டாப்போல் அப்படித் துடிக்கிறது!”

அவளைக் கட்டிலில் கடத்தினான்.

குங்குமப் பொட்டின்மேல் கோயில் ப்ரசாதமாய் இட்ட உதிரி விபூதிப் பொட்டின் மணம் அவன்மேல் கமழ்ந்தது.

“நான் போய் டாக்டரை கூட்டி வருகிறேன்.”

அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, “இருங்கோ. இன்னும் கொஞ்ச நாழி. இன்னும் சொல்றேன். நீங்கள் மறு கல்யாணம் பண்ணிண்டுதான் ஆகனும். அதுதான் சரி!”

“சரி சரி, நான் டாக்டரைப் போய்க் கூட்டி வருகிறேன்.”

“பத்து வருஷங்கள்! பத்து வருஷங்களாக்கும்! லேசில்லை பத்து வருஷங்கள். இன்னும் நாலு வருஷம் இப்படியே போனால் நான் கிழவி.”

“உஷ்! சும்மா இரு…”

“நீங்கள் இதனாலேயே வேறே ஆபிடுவேளா, ஆயிட முடியுமா?—நீங்கள் என்றைக்கும் என் சொத்துத்தானே! எல்லாமே என்னுடையதுதான்— நீங்கள் என்னிஷ்டப்படி கேட்கிறேள், அவ்வளவுதான். நீங்கள் மாத்திரம் என்ன, எனக்கு இளையாளாய் நான் கேட்கிறவளும் என்னுடையவள் தான். உங்களால் அவள் வயிற்றில் பிறக்கப் போவதும் என்னுடையதுதான். என்னுடையதுதான் என்றால் என்ன? நம்முடையது! நமக்கு என்று ஒண்ணு வேணும், கண்டிப்பாய் வேணும்.”

“உஷ்! தரங்கிணி.”

“உஷ்!” அவளும் கூடச் சேர்ந்து சின்னக்குழந்தையைப் பயமுறுத்துவதுபோன்று, மூக்கின்மேல் விரலை ஆட்டிக் கண்களை உருட்டி விழிக்க முயன்றாள். ஆனால் உண்மையில், வலியின் ஜன்னி அவள்மேல் மெதுவாய் இழுக்கும் திரைக்குப் பின் போய்க்கொண்டிருந்தாள், போகும் வழியில் ஏதேதோ பிதற்றிக்கொண்டே.

“நமக்கு என்று ஒண்னு கண்டிப்பாயிருக்கணும். கோயிலுக்கு இன்னிக்குப் போனதிலே இதை நான் கண்டிப்பாய்க் கண்டுவிட்டேன்.”

“எதை?” கவலையுடன் அவன் அவள் நெற்றியில் கை வைத்தான். அதில் முத்துக் கொதி ஏற ஆரம்பித்து விட்டது.

“ஒண்ணு என்பதை! அது இருக்கோ இல்லையோ, அத்தனைபேரும் அதைச் சுத்தித்தானே வரா! எல்லாருக்குமே அந்த ஒண்னு இருக்கு என்கிற திடம் இருக்கா என்ன? இல்லாவிட்டாலும் அந்த ஒண்னு என்கிற எண்ணமாவது அவசியமாய் வேண்டியிருக்கு. இது எனக்குக்கூடத் தெரிகிறது. உங்களுக்கு ஏன் தெரியவில்லை? உங்க அப்பாவுக்கு நீங்கள் அதுவா இருந்தேள். என் அம்மாவுக்கு நான் இருந்தேன். நீங்கள் அந்த எண்ணத்தை யிழந்துவிட்டு வரட்சியாய்த் தவிச்சுண்டிருக்கேள். எனக்கு நன்றாய்த் தெரியும். ஏன் என்றால் இன்னும் நாலு வருஷம் இப்படியே போனால், நானும் அந்த எண்ணத்தை இழந்துவிடுவேன்; நானும் வரட்சி ஆயிடுவேன். நான் வரண்ட அப்புறம் உசிரோடிருக்க மாட்டேன். ஆனால் எனக்கு உயிர்மேல்தான் ஆசை. நான் செத்துப்போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர். அதனாலே எனக்கு அந்த ஒண்னு கண்டிப்பாய் வேணும். என் மூலம் இல்லா விட்டாலும் உங்கள் மூலமாவது நமக்கு வேணும்…’

*⁠*⁠*

டாக்டர் வந்து பரிசோதிக்கையிலும் அவள் பிதற்றிக் கொண்டுதானிருந்தாள். தலை பரவாட்டல் ஆடியது. மூடிய கண்களின் மேல் புருவங்கள் மாத்திரம் நெரிந்தன.

“ஆமாம். கண்டிப்பாய் ஒண்ணு இருக்கணும். ஊருக்கெல்லாம் ஒரே நதி ஒடறாப்போலே, நதியில்லாட்டா கிணறாவது இருக்கணும். குளிக்காவிட்டாலும் குடிக்க வாவது ஜலமில்லாவிட்டால் என்ன செய்வோம்? எப்படி உயிர் வாழ்வோம்? அதனாலே எல்லாரும் மொண்டுக்கோங்கோ, வந்து வந்து மொண்டுக்கோங்கோ—வாளியிலும் தவலையிலும் குடத்திலேயுமா மொண்டுக்கோகாங்கோ. வாங்கோ வாங்கோ—அடி கண்ணாட்டி! நீ ஆட வந்தையா—சொம்பைக் கொண்டு வந்தையா?—அம்மா வரல்லியா? அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? உன்னாலே தூக்கிண்டு போக முடியுமோ? நான் துாக்கிண்டு வரட்டுமா? வேண்டாமா? நீயே போறையா? சரி போ! வாங்கோ! வாங்கோ! எல்லோரும் வாங்கோ…!”

பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அவன் அவளண்டை நின்றான். அவன் கண்களோரத்தில் வேள்ளை விழிகளில் ஊசிகள் பாய்ந்துகொண்டிருந்தன.

டாக்டர் தன் சோதனைகளை முடித்துக்கொண்டு நிமிர்ந்தார்.

“இடுப்பு எலும்பு ஒண்னு முறிந்திருக்கிறது. அதாவது பரவாயில்லை. மண்டையிலே உளளுற அடிபட்டிருக்கிறது. எப்படி எங்கே இவ்வளவு இசை கேடாய் விழுந்தாங்க? நான்போய் ஆம்புலென்ஸ் அனுப்பறேன்.”


“எங்கள் ஊர் ஜலம் வத்தவே வத்தாது. நூலாகவாவது ஓடிண்டுதாணிருக்கும். காவேரியா, லேசா? என்னென்று நினைச்சுண்டிருக்கே? வாயிலே வெச்சா கல்கண்டு தோத்தது போ—உ—ஹூம்—என்னன்னுடி நினைச்சுண்டு இருக்கே!—ஐயோ அம்மா வலிக்கிறதே! எங்கேடி போயிட்டே!


“எனக்கு நீச்சல் தெரியும்னு உங்களுக்குத் தெரியுமோ? ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எங்கள் ஊரிலே பத்து நாள் தங்கியிருந்தார். அவர் ஆம்படையாளும் கூட வந்திருந்தாள். நம்மாதிரிதான்!—

கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு.

“அந்த மாமி மலையாள சீமை அவள்தான் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தாள். அடேயப்பா! அவள்மாதிரி ஆம்பளைகள்கூட நீந்த முடியாது. ஜலத்திலே மல்லாக்கப் படுத்து மணிக்கணக்கில் மிதப்பாள் மத்தியான வேளையிலே ஒருத்தருக்கும் தெரியாமல் போயிடுவோம் அவள் மாதிரி மிதக்காட்டாலும் கொஞ்ச நாழியாவது என்னாலே மிதக்க முடியும்…”

“ஒருநாள் மழை பேஞ்சுது. ஒடிப்போய் ஜலத்தில் விழுந்தேன். என்னைத்தவிர ஒருத்தருமில்லை. மல்லாந்து படுத்து, வாயைத் திறந்துண்டுகட்டையாய் மிதந்தேன். மழைத்துளியை நேரே வாயிலே பிடிக்கணும்னு ஆசை. நம்மைச் சுற்றித் தூறல் கொட்டினாலும், வாய்க்கு நேரே முத்து எங்கே விழறது? விழறப்போதானே விழும்!”


“போடி! அவருக்கு என்ன தெரியும்? குழாயடியில் ஸ்நானம் பண்ணிப் பண்ணி ஜல விஸ்தீர்ணத்துக்கே வர மாட்டேன் என்கிறார்! அதை அவரால் அடையாளம் கூடக் கண்டுபிடிச்சுக்க முடியவில்லை. ஆனால் அவர் மேல் தப்பில்லை. அவரை அப்படிப் பண்ணிவிட்டாள், என்ன பண்றது. அவர் எவ்வளவு பெரிய ஜலம் என்று அவருக்கே தெரியல்லே. இருந்தாலும் எவ்வளவு நல்லவர் தெரியுமா? ரொம்ப ரொம்ப நல்லவர். ரொம்… ம்…ம்…ப!”

கட்டிலின் ஒரு பக்கம் அவன் நின்றுகொண்டிருந்தான். இன்னொரு பக்கம் கூழாங்கல் கண்ணாடிகளுக்குப் பின் பத்திரமாய்க் கவலைப்பட்டுக்கொண்டு டாக்டரும் நின்றார்.

“உங்கள் மனைவியை ஏதோ ஒர் எண்ணம் அழுத்திக் கொண்டிருக்கிறது ஸார். பாருங்கள் இடுப்பு எலும்பு கூடி விட்டது. ஜூரம் விட்டுவிட்டது. ஆனால் நினைவு மாத்திரம் தெளியவில்லை. What is it?

“இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்கு?”

உதட்டைப் பிதுக்கினார். கைகளை விரித்தார். “எப்படிச் சொல்ல முடியும்? இதுவரை நாலு மாதங்களாகிவிட்டன. I don’t know. Wait, ஏதோ சொல்கிறாள்.”

அவளுடைய பார்வையற்ற கண்கள் அவளுள்ளே தாழ்ந்திருந்தன. கற்சிலையின் புன்னகையில் உதடுகள் லேசாய்க் குழைந்தன.

“நான் ஒருநாள் குளிச்சுண்டிருந்தேன். அப்போ ஜலத்திலே ஒரு பூ மிதந்து வந்தது…”

கை விரல்கள், தாமாகவே மொக்கவிழ்ந்த மலரின் உருவை அமைப்பதில் மார்மேல் புலுபுலுத்தன.

“ஒரு சின்ன சொம்பளவு பெரிசுக்கு, வெள்ளை வெளேர்னு… அப்பா; என்ன அழகு தெரியுமா? நான் அதை எங்கிருந்து வந்ததுன்னு கேக்கல்லே. பிணத்து மேலே போட்டதா, மணத்து மேலே போட்டதான்னு கவலைப்படல்லே. எந்த இடத்துலே முளைச்சுது, கிள்ளின பூவா, தள்ளின பூவா, உதிர்ந்த பூவான்னு யோசனை பண்ணல்லே. எடுத்து அப்படியே கொண்டையிலே சொருகிண்டு ஜலத்தின் நிழலில் என்னைப் பார்த்துண்டேன். நான் அழகாயிருந்தேன். என்னைவிட அது அழகாயிருந்தது. ரொம்ப நாள் அது வாடவேயில்லை.”

டாக்டர் தன் மோவாயை யோசனையுடன் தடவினார்.

“Wonderfull wonderfull! உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ?”

‘ஆம்’ என்ற முறையில் அவன் தலையை அசைத்தான். இறுகிய தாடைகளில் மாலைகள் வழிந்தன.

“What is it?”

“இப்பொ என்ன அதைப்பற்றி! இவளைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் இரண்டு நாட்களில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியே சென்றான்.


‘ஊஹூம் நான் மனசிலே ஒண்ணும் ஒளிச்சுக்கல்லையே! உள்ளே ஒண்ணும் வெளியே ஒண்ணுமா நடத்துக்கல்லையே! நான் கைகேசியில்லை. என்னைத் தெரி

யல்லே? என்னைப் பாருங்கோ, சற்றே திரும்பிப்பாருங்கோ! நான் தரங்கிணி! மா—ஆ—ஆயே! ஸ்காயே! அம்மா, தாகமாயிருக்கே!—”


“இல்லை; நான் சொன்னதை வேணும்னா மறந்துடுங்கோ. சத்யம்னு சொன்னால் மாத்திரம் உங்களை என்னால் கட்டிவிட முடியுமா, என்ன? நான் உங்களை விடுவிச்சுட்டேன். இனிமேல் நீங்கள் உங்களை விடுவிச்சுக்கோங்கோ. உங்கள் இஷ்டம் இனிமேல். இனிமேல் இதைப் பற்றி நான் பேசப்போறதில்லை. சத்தியமாப் பேசப் போறதில்லே. ஆனால் ஒண்னு மாத்திரம்…” அந்த ‘ஒண்’ணைப் பிடித்துவிடுவாள் போலும் அவள் உள்ளங்கை கிண்ணம்போல் குழிந்தது.

“இதோ பாரம்மா, உங்கள் புருஷன் வந்திருக்கிறார். உங்களுக்கு ஏதோ கொண்டு வந்திருக்கிறார்.”

“ஆ? யாரு? எனக்கு தூக்கம் வரது—”

“தரங்கிணி, இந்தா! வாயைத் திற. ஆ! அப்படி! என்ன, அடையாளம் தெரியறதோ! இதைக் குடித்து விட்டுத் தூங்கு.”

“என்னது, தீர்மானம்?”

“எந்த ஜலம், அடையாளம் தெரிகிறதா? தரங்கிணீ! தரங்கிணீ!”

அவள் பதில் பேசவில்லை. மார்மேல் போர்வை லேசாய் மிதக்க ஆரம்பித்துவிட்டது. டாக்டர் குனிந்து அவளை உற்று நோக்கினார். அவர் நிமிருகையில் முகம் ஒளி வீசிற்று.

“துாங்குகிறாள். வெளியே வாங்கோ. It is good—நீங்கள் என்ன பண்ணினீர்கள்? What? வெறும் water? Amazing! Amazing!


பாதியிரவில் தரங்கிணி திடுக்கென விழித்துக்கொண்டாள். அவளுக்குத் தூக்கம் சரியாயில்லை. முழங்கால்களைக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் பட்டை நிலா ஜமாய்த்துக் கொண்டிருந்தது. தென்னந்தோப்புகளின் மரங்களின் சந்துகளின் வழி சற்று உன்னிக் கவனித்தால் ஆற்றுமணல் இப்போதுகூட நன்றாய்த் தெரியும். எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள், என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் திடீரென்று அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.

“தரங்கிணி!”

கண்களை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டாள். அறைவாசலில் அவன் உருவக்கோடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.

“இதோ இருக்கேன்?”

“தூங்கவில்லை?”

“இல்லை. இப்பொத்தான் முழிப்பு வந்தது. நீங்களும் வந்தேள்.”

“எனக்குத் தூக்கம் வரவில்லை”— பெருமூச்செறிந்தான். “உன்னோடு பேசலாம் என்று வந்தேன்.”

“இருங்கோ, விளக்கையேத்தறேன்.”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.” உள்ளே வந்தான்.

“என்ன, சுற்றுமுற்றும் பாக்கறேள்?”

“உட்காரத்தான், இங்கே நாற்காலியிருந்ததே!”

“கட்டிலிலேதான் இடம் இருக்கே உட்காருங்கோ” அவளுக்கு ஏனோ மறுபடியும் துக்கம் அடைக்க ஆரம்பித்து விட்டது. ஒரு தடவை மூக்கை சிந்தினால் எவ்வளவோ செளகரியமாயிருக்கும். ஆனால் பயம் தான் அழுவது அவருக்குத் தெரிந்துவிட்டால்?

சற்றுநேரம் கல்லைப் போட்டாற்போல் இருவரும் மெளனமாயிருந்தனர்.

“எனக்கு இன்று ஆபீஸிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. லீவு எல்லாம் எல்லை கடந்து எடுத்தாயிற்று இவ்வளவு தூரம் என் விஷயத்தில் அவர்கள் சலுகையாயிருந்ததே எனக்கு ஆச்சரியம். எட்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் உன்னிடத்தை விட்டு அசையவில்லை பார். மறுபடியும் வெளியூர் சுற்ற வேண்டும்.”

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை.

“இந்தத் தடவை அவர்கள் வகுத்திருக்கும் Tour ஐ முடிக்கக் குறைந்தது ஐந்து மாதங்களாவது ஆகும். ஆனால் இந்தத் தடவை உன்னைக் கூடவே கூட்டிக் கொண்டு போகப் போவதில்லை.”

அவள் வயிற்றுள் ஏதோ நெளிந்து புரண்டு மடிந்தது. ஆனால் சும்மாதானிருந்தாள்.

அவன் பார்வை ஜன்னலுக்கு வெளியே ஊன்றியது. உனக்கு ஒன்றும் அசெளகரியமாயிருக்காது என்று நினைக்கிறேன். உன் சொந்த இடத்திலேயே இருக்கிறாய். உன்னைச் சுற்றிலும் உனக்கு வேண்டிய மனுஷாள்தாம். பக்கத்தாத்து மாமியை ராத்திரி வந்து துணைக்குப் படுத்துக்கொள்ளச் சொல்லு, என்ன?”

“சரி.” (ஐயோ இந்த மூக்கை என்ன பண்ணுலாம்?)

“நாளைக் கானலயே புறப்படுகிறேன்” அவன் கைகள் சீவனற்று மடிமேல் கிடந்தன.

“தவிர, இதுதான் சரி என்று நினைக்கிறேன்.”

“எது?”

“இப்படி நான் உன்னை விட்டுப் போவது.”

மறுபடியும் மெளனம்,

“கீச்கீச்”

வெளியே ஆகாயத்தில் ஒரு குருட்டுப் பறவை.

“தரங்கிணி!”

“ம்…ம்!”

அவன் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டே “நீ சந்தோஷமாயிருக்கிறாயா!”

“இல்லாமலென்ன?”

“இல்லை. நீ இல்லை.”

“இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம். இப்படித்தான்—”

அவன் வெகு பொறுமையுடன், சற்றுப் பணிவுடன் கூட, “இல்லை, அப்படியில்லை. இப்படித்தான் இருந்தோமா, இதற்கு முன்னால்?”

“இப்போ எப்படியிருக்கோம்?”

“எப்படியிருக்கோமா?”—சிரித்தான். “இதுமாதிரி தான். நான் வருகிறேன். வந்த இடத்தில் என்னையறியாமலே உட்கார இடம் தேடுகிறேன். நான் வந்தால் நீ சர்வமரியாதையுடன் எழுந்து நிற்கிறாய். ஏதோ பேசுகிறோம் பேசிக்கொண்டிருக்கையில் முன் வார்த்தை மறந்துவிடுகிறது பின் வார்த்தை மறந்துவிடுகிறது. வாய் வார்த்தை அப்படியே வாயில் உறைந்துபோய்க் கல்லாய்த் தொங்குகிறது. பேச்சு சிக்குகிறது. இப்படித்தான் நாமிருந்தோமா? இத்தனை வருடங்கள் கழித்து இந்தச் சொற்ப காலத்துள் நம்மிடையில் ஏன் இப்படியெல்லாம் நேர்ந்துவிட்டது? கைகாட்டி மரங்கள் கூட நம்மைவிடக் கல கலப்பாயிருக்கின்றன. தரங்கிணி, இப்போது நினைத்துக் கொள்கிறேன். இன்று மாதிரியிருக்கிறது. இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன், நாம் உண்மையென்று நினைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் மனத்திலிருப்பதை மாற்றிக் கொண்டதெல்லாம் வெறும் பிதற்றலாகவும். இப்பொழுது நம்மேல் படர்ந்துவரும் பொய்மைதான் நிலையாகவும் மாறிவிடும் போலிருக்கிறது. இனி என்னால் இதைச் சகிக்க முடியாது. நான் நாளைக்குப் போய்விடப் போகிறேன் என்பதை ஒரு தினுசில் வரவேற்கிறேன். இந்தப் பொய் மையிலிருந்து விடுதலையல்லவா? திரும்பி வருகையில் எப்படியிருப்போம் என்று—”

அவளிடமிருந்து அழுகையும் சிரிப்பும் கலந்து ஏதோ ஒரு புதுச் சப்தம் உடைந்து வந்தது. சோகம் கரை கடந்த பின்னர் தோன்றும் ஏளனம் அவள் குரலில் ஒலித்தது.

“உண்மை என்றைக்கும் பிதற்றலாய்த் தானிருக்கும். அவாளவாளுக்கு உள்ளுக்கு உள்ளுக்கிருப்பதை விண்டு பார்த்தாலோ, பார்க்கப் பார்த்தாலோ பேத்தல்தான். நாம் விண்டு பார்த்ததுள், நாமே சின்னக் குழந்தையாய் உட்கார்ந்திருந்ததை நாமே கண்டோம் நமக்கு அது ஆச்சரியமாகவும் இன்பமாயுமிருந்தது இப்போ அந்த நிலையிலிருந்து மீண்டுவிட்டோம்—இல்லை மீண்டு விட்டோம்னு நினைச்சுண்டிருக்கோம். நாமே நமக்கே காரணமில்லாமல் ஏற்படுத்திக்கொண்ட அக்ரமம்தான் இது!”

“உஷ்—தரங்கிணி, அழாதே” அவன் கைகள் மடி யிலிருந்து எழுந்து எழுந்து தவித்தன. அவள் கண்கள் அவன் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் எழுந்தான்.

“எங்கே போறேள்?”

அவன் மெளனமாய் நின்றான். அவள் குரல் கேவிக் கொண்டே போயிற்று. அவன் கரங்களைப் பிடித்து இழுத்துத் தன்மேல் அணைத்துக் கொண்டாள். அவள் கைகள் அவன் தோள்களினடியில் விலா எலும்புகளை நொறுக்கிவிடுவனபோல் இறுகின. நெகிழ்ச்சியில் கரைந்து விடுவான்போல் இருந்தது அவனுக்கு.

‘என்னை விட்டுட்டு எங்கே போறேள்?’ மார் வெடிக்கும் அழுகையில், உருக்குழம்பிப்போன சப்தங்கள் அவளின்று புறப்பட்டுக் கொண்டிருக்கையில்-—ங்கங்கள் இருளில் ஒன்றையொன்று தேடித் தவித்து அடையாளம் கண்டு கொள்கையில் தென்னந்தோப்புக் கப்பால், பட்டை வீறும் நிலாவில் வான் கவான் கீழ் காவேரி, குழந்தைகளின் சண்டையைப் பார்த்துப் பார்த்துக் கேட்டுக் கேட்டுப் பழுத்துப் பருமனான பாட்டி நினைத்து நினைத்துக் குலுங்கி நகைப்பதுபோல், தன் வெள்ளைச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டு பரவி, ஒரே அன்புப் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தெரியாத ரகசியங்களே இல்லை. கலக்குபவளும் அவளே; கலங்குபவளும் அவளே. தெளிபவளும் அவளே; தெளிவிப்பவளும் அவளே. ஆற்றுபவளும் அவளே. ஆறுபவளும் அவளே.

அவன் வெளியிற் செல்லுமுன் வாசற்படியில் சற்றுநேரம் ஏதோ சொல்ல வாயெடுத்துத் தயங்கி நின்றான்.

“தரங்கிணி!”

“என்ன?”

“ஒன்றுமில்லை—” என்று தனக்குத்தானே தலையாட்டிவிட்டுப் போனான்.

கிணற்றுக் கைப்பிடிச் சுவரின்மேல் தொங்கிய தாம்புக் கயிறின்மீது ஊரும் வண்டின்மேல் நிலைத்த பார்வையுடன் தரங்கிணி கொல்லைப்புறக் குறட்டில் தூண்மேல் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தாத்து மாமி பக்கத்தில் பருப்பு நோன்பிக் கொண்டிருந்தாள்.

“தரங்கிணி!”

“ஏய், ஏடி!”

அப்புறம் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை. எழுந்து பக்கத்தில் போய் அவள் முகத்தின் எதிரில் விரலைச் சுண்டினாள்.

“உம்—என்ன மாமி?” தரங்கிணி திடுக்கென லிழித்துக் கொண்டாள்.

“மூச்சு இருக்கா இல்லையான்னு பார்த்தேன்.”

இருவருக்கும் சேர்ந்தாற்போல் சிரிப்பு வந்துவிட்டது.

“நீ என்ன யோசனையில் இருக்கேன்னு எனக்குத் தெரியும்!”

தரங்கிணியின் கண்களில் வினாவெழுந்தது.

“ஒரு மாதமா தபால்காரன் உன் வீட்டு வாசற்படியேறாமல் தாண்டிண்டு போறான்னுதானே!”

“ஆமாம்; நீங்கள் இன்னும் கேலி பண்ணிண்டிருங்கோ. நாங்கள் ரெண்டுபேரும் நேத்திக்குத்தான் மாலை மாத்திண்டோமோன்னோ?”

மாமி மறுபடியும் நோன்ப ஆரம்பித்தாள். “இதுக்கெல்லாம் நேத்திக்கு இன்னிக்குன்னு உண்டாடி? நேத்தி மாதிரிதான் இன்னிக்கு. இன்னிமாதிரிதான் நாளைக்கும். எனக்கு எவ்வளவோ விஷயங்கள் நேத்து மாதிரிதான் இருக்கு. இன்னிக் காத்தாலே மொதக்கொண்டு முக்கு வீட்டிலே அமர்க்களப் படறதே, என்ன தெரியுமோன்னோ? ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே நடந்த சமாசாரம் இன்னிக்குத் தொடர்ந்துண்டிருக்கு.”

“என்னவாம்?”

“நீ இல்லை அப்போது. இங்கே தருமாம்பா இருக்கா பாரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே திடீர்னு அவளுடைய கழுத்துச் சங்கிலியைக் காணோம். எங்கே தொலைச்சுட்டதோ, தெரியல்லே. அவள் ஆம்படையான் எவ்வளவு மூர்க்கன்னு ஊர் தெரிஞ்ச விஷயம். நெய் முட்டையைக் காக்கா கொத்திண்டு போச்சுன்னா, எந்தக் காக்கா கொத்திண்டு போச்சு, ஊரிலேருக்கற காக்காயெல்லாம் என்னெதிரே கொண்டுவந்து நிறுத்து என்பான். அதுவும் கழுத்துச் சங்கிலியைக் காணோம்னா, உசிரோட கொன்னுப்பிடுவான். தொலைச்சுப்பிடுவான் வெச்சுக்கோ. அவன் மூர்க்கம் எவ்வளவு ப்ரசித்தமோ, அவ்வளவு ப்ரசித்தம் தருமியின் அசடும். ஜோடி எவ்வளவு ஆகையா மாட்டிண்டி ருக்கு, பார்!

“தருமி ‘டக்’ குன்னு வேலைக்காரக் குட்டி மேலே பழி வைச்சுட்டாள். எண்ணெய்ப் பிசுக்கெடுக்க, சோப்புத்தண்ணீரில் டப்பாவில் ஊறப்போட்டு வெச்சிருந்தேன். கிணத்தடியிலே இருந்தது. அடுப்புச் சாதத்தை கிளறிட்டு வரத்துக்குள்ளே காணோம்’னு ஒரேயடியா சாதிக்கறன. என்ன பண்றது? நாங்களும் அப்போ அவளை நம்பினோம்னுதான் வெச்சுக்கோ. அசடுகளுக்கெல்லாம் ஒரு தனிச் சமத்து உண்டு, தெரியுமோன்னோ? நிஜமோ, பொய்யோ பிறத்தியார் தங்களை நம்புபம்டி, கடைசி வரையில் சொன்னதையே சொல்லிண்டிருக்கும். அந்தப் பெண் மானி. நல்லபடி வாழ்ந்து நசிச்சுப்போன குடும்பம் போலிருக்கு. இங்கே வேறே திட்டி மிரட்டியிருக்கா. வீட்டுக்குப் போனால் அங்கேயும் ஆம்படையான் மானம் போச்சேன்னு—அவள் திருடின்னு நினைச்சுண்டு— அடிச்சிப் புடைச்சிருக்கான். அன்னி ராத்திரி சீமெண்ணையை மேலே ஊத்திக் கொளுத்திண்டுடுத்து!”

தரங்கிணி செவிகளைப் பொத்திக் கொண்டாள்.

மாமி சுவரஸ்யமாய் வாய் எச்சிலை உள்ளுக்கு உறிஞ்சிக் கொண்டாள். “அது அப்படிப் போச்சா? அதுக்கு அப்புறம் தருமியின் ஆம்படையானும் செத்துப் போயாச்சு. தருமியும் கோலம் பண்ணிண்டு வெள்ளையும் உடுத்திண்டாச்சு. இன்னிக்குக் கார்த்தாலே ஆத்துக்குக் குளிக்கப் போனாள் போன இடத்துலே தோய்க்கிற கல் வாட்டமாயில்லைன்னு, அதை நகத்திப் புரட்டினாக்கே அதன் அடியிலேருந்து நீளமா பாசி பிடிச்ச கடிகாரச் சங்கலியை எடுக்கறா! இந்தத் தண்ணிக்கு முதல் கொண்டிருக்கிற திருட்டுத்தனத்தைப் பாரேன்! தனியாயிருந்தால் ஒருவேளை அதை அமுக்கியிருப்பாளோ என்னவோ. கூடவே பக்கத்தாத்துப் பொண்ணும் போயிருக்கு. அவ்வளவுதான். ஊரெல்லாம் பத்திண்டுடுத்து. அநியாயமாய் ஒரு பெண்மேலே அபவாதம் சொன்னியே சொன்னியேன்னு தெருவிலே போறவா எல்லாம் மெனக்கெட்டு அவள் வீட்டுள்ளே புகுந்து புகுந்து மூஞ்சியிலே துப்பிட்டுப் போறாள்.

செத்துப்போன அந்தப் பெண்ணின் ஆம்படையான் வந்தான். அவன் ஒண்னும் சொல்லலே. ‘ஏ பாப்பாத்தி என் பெண்சாதியைக் கொன்னவளே நீதான்! இப்பொ நீ அந்தச் சங்கிலியைப் போட்டுக்கிட்டு நிக்கறதைப் பார்க்கணும்’ என்கிறான். போறுண்டியம்மா, போறும், நம்ப மானமே போறது—என்னடி?”

தரங்கிணிக்குத் திடீரெனக் கண்கள் சொருகின. வயிற்றைக் குமட்டிற்று. குடுகுடுவென்று குறட்டோரம் ஓடினாள்.

“என்னடி, உடம்பு சரியில்லையா?”

தரங்கிணி திகைப்புடன் தன் குமட்டலின் விளைவை பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் நெற்றியில் வேர்வை துளித்து நின்றது; மாமி பக்கத்தில் வந்து கையைப் பிடித்தாள். திடீரென்று மாமி முகத்தில் மேகங்கள் விலகி சிரிப்பின் ஒளி முகம் முழுவதும் சிதறிற்று. தரங்கிணியின் முகத்தை இருகைகளாலும் வழித்து நெற்றியில் நெறித்துக் கொண்டாள். சொடக்குகள் ‘சொடசொட’வென உதிர்ந்தன. அவசர அவசரமாய் சமையலறைக்குள் நுழைந்து சர்க்கரை டப்பாவை எடுத்துவந்து தரங்கிணியின் கையில் கொடுத்துத் தன் கையை நீட்டினாள். அவள் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது.

அவள் செய்கைகள் மண்டைக்குள் தோய்கையில் தரங்கிணியின் கண்கள் அகல விரிந்தன. தேகமாத்யந்தம் ‘விர்’ரென்றது. அவளுள் நேர்ந்த உள் உதயத்தின் தகதகப்பில் அவள் கண்கள் தாழ்ந்து, உள்ளுக்கிழுத்த திரிபோல் வெளிப் பார்வை மங்கியது. தூக்கத்தில் நடப்பவளாய் விட்டாள். மாமியின் பக்கமிருந்து திரும்பிய கால்கள் மெதுவாய்க் குறட்டைக் கடந்து, கொல்லை ரேழியைக் கடந்து—

“தரங்கிணி!”

முற்றத்தைக் கடந்து—

“எங்கேடி போறே? ஏடி தரங்கிணி!”

முற்றத்திற்கு அப்பால் அகன்ற தாழ்வாரத்தைக் கடந்து—

“சரிம்மா; நான் இப்படியே ஆத்துக்குப் போறேன் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோ.”

அவளுக்குக் காது கேட்கவில்லை. அவள் தன் வசத்திவில்லை. அவள் கால்கள் அவளை வாசல் அறைக்குள் தாங்கிச் சென்று மேஜைக்கெதிரே நாற்காலியில் அமர்த்தின. கைகள் மேஜைமேல் இருந்த அட்டையையும் காகித அடுக்கையும் பக்கத்தில் இழுத்துக் கொண்டன. மசியில் பேனாவைத் தோய்த்து, கை தானே எழுத ஆரம்பித்தது.

“—உங்களுக்கு இந்தச் சமயத்தில் என்ன எழுதறதுன்னு தெரியல்லே, உங்களுக்கு நான் இப்போ சொல்லணும்னு ஆசைப்படற விஷயங்கள் எங்கிட்டேருந்து எழும்பற வேகத்திலேயே என்னை அமுக்கறது, நான்…”

“போஸ்ட்!”

அந்தக் கூவல் அவளைக் கட்டியிருந்த மந்திரத்தை அவிழ்த்தது. தரங்கிணி எழுந்து கவரைக் கையில் வாங்கிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள். கதவுகள் எல்லாம் திறந்தன திறந்தபடியிருந்தன.

தென்னந்தோப்பைத் தாண்டி ஆற்றங்கரைக்குச் சென்றாள். ஜலத்துக்கு எதிரில் மணலில் உட்கர்ர்ந்து கொண்டு சாவகாசமாய் ஓரங்களில் மஞ்சள் தடவிய கவரை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு உடைத்தாள். பூவிதழ்கள் இரண்டும் அட்சதையும் மடியில் சிதறின. தரங்கிணி படித்துக்கொண்டே போனாள். விழிகள் முன்னும் பின்னுமாய் வரிகள்மேல் ஒடி அவைகளின் அர்த்தத்தைப் பருகுகையில் அவளையறியாமலே கைகளிலருந்து கடிதம் நழுவி மடியில் விழுந்தது. அவள் அதை எடுக்க முயலவில்லை. ஜலத்தைப் பார்த்தவண்ணம் அப்படியே சிலையாய் உட்கார்ந்திருந்தாள்.

எத்தனை நாழியோ?…தோய்க்கும் கல்லருகில் சிற்றலைகள் தத்தம் தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக் கொத்தாய்ச் சடைபிடித்த பிடரி மயிர் அலை மோத, தலைகள் உதறிக்கொண்டு வெள்ளைக் குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக்கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.

ஆனால் தரங்கிணி இன்னும் நிலை அசையாது அப்படியேதான் உட்கார்ந்திருந்தாள். அர்ச்சனைப் புஷ்பங்கள்போல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தவண்ணமிருந்தது.

– அஞ்சலி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1994, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *