தனிமரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 4,086 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் எதிர்பார்த்தது போலவே சுப்பையா அங்கிருந்தார். அவன் அவரைப் பார்த்து புன்னகை செய்யவே விரும்பினான். ஆனால் அது சகஜமாக வெளிப்படாததால் மாறுபாடான முகத்தோற்றத்தையே உண்டாக்கியது. நாற்காலியில் உட்கார்ந்திருந்த சுப்பையா இருப்பு கொள்ளாமல் சங்கடத்துடன் நெளிந்தார். மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே அவரது கண்கள் மிரட்சியுடன் நிலைகொள்ளாமல் தவித்தன. அவரை மேலும் தொல்லைக்கு உள்ளாக்கி விடக்கூடாதே என்ற எண்ணத்துடன் அவன் கூடத்தை விட்டு அடுக்களைக்குள் பாய்ந்தான்.

“தம்பி வந்துருச்சி. பசியா இருக்கும், நான் வாரேம்மா” என்று சுப்பையா அதுவரை இந்த மௌன நாடகத்தைச் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் தாயார் பகவதியிடம் சொல்லிவிட்டு பூனையைப் போல் மெல்ல வெளியேறினார்.

பெருமூச்செறிந்தவாறே பசுவதியம்மாள் எழுந்து அடுக்களைக்குச் சென்றார்.

அம்மாவின் பார்வையில் படத் தயங்கிய சுந்தரம் முகத்தை கழுவிக் கொண்டே இருந்தான். சோப்பு நுரை கண்ணில் பட்டதாலோ, மனக்குமுறலாலோ கண்கள் கரித்தன.

பகவதியம்மாள் அனுதாபத்துடன் சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

முகத்தில் இருந்த தண்ணீரை இரு கைகளாலும் அழுந்த வழித்து உதறியவாறு சுந்தரம் நகர்ந்து துண்டை எடுக்கப் போனான்.

“சாப்பிடுறியா…” என்று ஒற்றைச் சொல்லால் கேட்டார் பகவதியம்மாள். எந்தப் பிசிறும் இல்லாமல் அவரது குரல் கணீரென்று இருந்ததால் சுந்தரம் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.

“ஒன்றும் இல்லாததுபோல் சும்மா நடிக்கிறாங்களா- இல்லை, இயல்பாகத்தான் பேசுறாங்களா” என்று கண்டுகொள்ள முயன்று தோல்வி கண்டவனாக மேசையருகே முக்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

பகவதி அம்மாள் பரிமாறிக் கொண்டிருந்தார். அம்மா என்றால் இந்த வயதிலும் அவனுக்கு ஏன் இத்தனை பயம்! இந்த பயம் கலந்த பற்றே இன்னமும் தாயோடு அவனைச் சேர்ந்திருக்க வைத்தது. அவனோடு உடன் பிறந்த அண்ணன்களும் தங்கைகளும் அம்மாவைப் பார்க்க வருவதையே மானக்கேடானதாகக் கருதி தூ ரத்தில் போய் விட்ட பிறகும் சுந்தரம் அம்மாவோடு இருப்பதற்குக் காரணம் இந்த பயம்தானோ?

சுந்தரம் சுப்பையாவைப் பற்றி நினைத்துப் பார்த்தான். சின்ன வயதில் ‘மாமா மாமா…’ என்றும் பின் வயது கூடக் கூட வாங்க போங்க’ என்றும் சுப்பையாவை அவனும் அவனுடன் பிறந்தவர்களும் அழைத்த போதிலும் அவர் அவர்களுக்கெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலேயே இருந்தார்.

சிறகுகள் முளைத்து அவர்கள் பறக்கும் வரையிலும் ஒரு தந்தையின் பொறுப்போடும் அன்போடும் அவர் தான் அவர்களை வளர்த்தார்.

சுந்தரமும் அவனோடு பிறந்தவர்களும் சின்னஞ்சிறுசுகளாக இருந்தபோது அவர்களது தந்தை என்று சொல்லப்படுபவன் எவளோடோ ஓடிப் போனான். அந்த குடும்பத்தோடு பழகிய ஒரே காரணத்தால் சுப்பையா பகவதியின் குடும்பத்துக்கு உதவி வந்தார். சாப்பிடும் வேளை, தூங்கும் சமயம் தவிர பாக்கி நேரங்களில் அவர்

அந்தக் குடும்பத்திலேயே இருந்து வந்தார்.

இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. சந்தேகக் கதைகள் பல உலவி வந்தன. சுப்பையாவின் வீட்டில் பெரும் புயலே வீசியது.

ஆனால் உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது. சுப்பையா அத்தனைக்கும் ஈடுகொடுத்து பகவதி குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்தார்.

பிள்ளைகளுக்கு விவரம் தெரிய வந்தபோது தங்கள் அம்மாவைப் பற்றிய ‘கசமுசா பேச்சுக்கள் காதில் பட்டன. அவர்கள் குன்றிப் போனார்கள் என்றாலும் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை .

தோளுக்கு உயர்ந்தவர்களாக வளர்ந்துவிட்ட பிறகோ பகைமை உணர்வோடு அவரை ஒதுக்கித் தள்ளுவதில் முனைந்தார்கள். பல சமயங்களில் வெளிப்படையாகவே தங்கள் வெறுப்பை உமிழ்ந்தார்கள்.

ஆனால், அவர்கள் யாராலும் சுப்பையா நம்ம வீட்டுக்கு வரக் கூடாது’ என்றோ அம்மா, நீங்கள் அவரோடு பேசக் கூடாது’ என்றோ சொல்ல முடியவில்லை.

வேலை முதலான காரணங்களின் பேரில் வேறிடங்களுக்குச் சென்றுவிட்ட பின்னர் பகவதி அம்மாளை தங்களோடு அழைத்துக் கொள்ள முயன்றனர்.

யார் கூப்பிட்டும் பகவதி செல்லவில்லை . அம்மாவின் மறுப்பே பிள்ளைகளின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவர்கள் ஒதுங்கி விட்டனர்.

சுந்தரம் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அம்மா மேல் அவனுக்கு சந்தேகம் கிடையாது என்பது இல்லை. மாறாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு சமயத்துக்காகக் காத்திருந்ததும் உண்டு.

சின்ன வயசில் சுப்பையாவைப்பற்றி கேள்விப் பட்டபோது வெளியேற வக்கில்லாமல் அவரை நயந்து அவர் தயவில் ஆளாகி விட்டு இப்போது வந்து வீராப்பு பேசுவது என்பது அவனைப்பொறுத்தவரையில் நியாயமற்றதாக இருந்தது.

அன்றிருந்த அம்மாதானே இன்றும் இருக்கிறார் என்ற நினைப்பே முதலில் அவனை விலகிச் செல்வதில் இருந்து தடுத்தது. ஆனால் நாளடைவில் சுந்தரம் சில நியாயங்களை உணரத் தலைப்பட்டான்.

அம்மாவைப் பற்றிச் சொல்லப்படுபவை உண்மையாக இருந்தாலும் அதில் என்ன தவறு என்று தனக்குள் வாதித்தான்.

அப்பனைப்போல் அம்மாவும் பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடாததிலேயே அவன் பெரும் மன நிறைவு கொண்டான். அதுவே நன்றி உணர்ச்சியாகப் பெருகி அம்மாவின்பால் மரியாதையையும் பற்றையும் பயத்தையும் அவனுக்கு ஏற்படுத்தியிருந்தது. இப்போது சுந்தரத்தின் பிரச்னையே வேறு.

சொந்தக்குடும்பத்தாலேயே புறக்கணிக்கப்பட்டு நடைப்பிணமாக வாழ்ந்துவரும் சுப்பையா ஏன் பகிரங்கமாக தங்கள் வீட்டில் ஒருவராகிவிடக் கூடாது என்பது தான் அவன் பிரச்னை.

இதைப்பற்றி எப்படி அம்மாவிடம் பேசுவது? அப்படிப் பேசுவதே அத்தகைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திவிடாதா?

சுந்தரம் சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் கவளங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை எதிரே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பகவதி அம்மாள்.

‘இவன் ஏன் இப்படி மனசுக்குள் வச்சு மருகித் தவிக்கிறான்? இதப்பத்தியெல்லாம் எப்படி இவனிடம் பேசுறது? சாப்பாட்ட பாத்து சாப்பிடப்பா’ என்று பகவதியம்மாள் மனசுக்குள் பேசிக் கொண்டார்.

கோழிக்குஞ்சு மாதிரி மிருதுவாகத் தன் கைகளுக்குள் சிறு குழந்தையாக அடங்கிக்கிடந்தவன் பெரிய ஆண்பிள்ளையாக வளர்ந்து எதிரே உட்கார்ந்திருக்கும் நிலையில் அவருக்குத் தொண்டைக் குழியிலிருந்து சொற்கள் கிளம்பவில்லை.

வாய் பேசவில்லை என்பதற்காக மனம் ஓய்ந்து பேசாதிருந்து விடுமா என்ன? “சாப்பாட்டைப் பார்த்து சாப்பிடுடா” என்று பிடரியில் அடித்த மாதிரி இருந்தது சுந்தரத்துக்கு.

அம்மா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான். வாயிலிருந்த சோற்றை உமிழ் நீரோடு குதப்பி மென்றான்.

குழம்பில் உப்பு பற்றாதது போல் இருந்தது அவனுக்கு. உப்பு போடச் சொல்வோமா வேண்டாமா? என்று அவன் நிமிர்ந்த போது பகவதி அம்மாள் உப்பு பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து கரண்டியில் எடுதுத்துப் போட்டு கரைத்துக் கொண்டிருந்தார்.

‘அம்மாகிட்ட ஒண்ணும் சொல்லலையே’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது என்னடா புள்ள மனசு தாய்க்கு தெரியாதா?’ என்று பகவதியம்மாள் தனக்குள் கூறிக் கொண்டார்.

‘ஏம்மா, இப்படி முகக் குறிப்பறிஞ்சு நடக்குற உங்களுக்கு கடைசி காலத்துலேயாவது உங்க மனம் நிறையறாப்புல செய்யுற தைரியம் எனக்கு இல்லையே அம்மா’ என்று சுந்தரம் மனதுக்குள் குமைந்தான்.

‘ஏம்பா… என்னைப்பத்தி என்னாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கிற. இனிமே தான் நான் வாழப்போறேனாக்கும்’ என்று பகவதி அம்மாளின் எண்ணம் ஓடியது.

அப்படி இல்லேம்மா’ என்பது போல் நிமிர்ந்தவன் அம்மாவின் முகத்தில் ஆவேசம் சுடர் விட்டதைக் கண்டான்.

ஊரெல்லாம் நினைக்கிறமாதிரி நடந்துக்கிறதா இருந்தா சுப்பையா இந்த வீட்டில் காலடி வைக்காமலேயே எங்கேயோ எப்படியோ நடந்துக்க முடியும். அவரு பகிரங்கமா செய்யுற உதவியையே ரகசியமா என்னால வாங்கியிருக்க முடியும்னு ஏண்டா முண்டங்களா உங்களுக்குத் தோணல…’

‘நல்ல மனுசாளுங்களுக்கு ஒரு கட்டத்தைத் தாண்டியதும் ஆம்பிள்ளை பொம்பிள்ளேங்குற வித்தியாசம் மாறிப் போயிடும். ஒருத்தர் மேலே உண்மையான அனுதாபம் ஏற்பட்டுட்டா இந்த வித்தியாசம் எல்லாம் எங்கிருந்து வரும்…’

அன்னைக்கு புள்ள குட்டியோட அனாதையா நின்னப்போ அவரு ஆதரவு காட்டினாரு – இன்னைக்கி நம்மலாள அவரு அனாதையா நிக்கிறாரு. பெத்த பிள்ளங்ககூட அவர பாராட்டல. இங்க வர்றதுலே அவருக்கு ஒரு ஆதரவு எனக்கும் அவர பார்த்தா பேசினா நீங்க செஞ்ச நன்றிய மறக்கலேன்னு காட்டிட்டதா ஒரு நினைப்பு. எல்லாப் பயல்களும் சாறை உறிஞ்சுட்டு போயிட்டீங்க அந்த சக்கை காஞ்சு ரோட்டுக்கு வராம இருக்கணுமே, அதுக்கு தான் நான் இன்னமும் இங்கே இருக்கேன்…’

‘ஆயிரம் பேரு ஆயிரம் சொல்லியும் இத்தனை வருசமா அவர் தைரியமா இங்கே வந்து போறாரே, அதவிட என்னங்கடா சர்டிபிக்கட்டு வேணும்.’

பகவதி அம்மாளுக்கு நெஞ்சு வேகமாகத் துடித்தது. இதையெல்லாம் வாய்விட்டுச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. சத்தம் போட்டு பேசுவதைவிட மனசுக்குள் யோசிக்க அதிக சக்தி செலவாகும் போலும்.

பகவதி அம்மாளுக்கு மூச்சு இறைத்தது. சுந்தரத்தின் மனசைக் கழுவிவிட்டது போலிருந்தது. சுந்தரம் சாப்பிட்டு முடித்திருந்தான். வயிற்றிலே ஏற்பட்ட திருப்தி மனசிலேயும் வியாபித்து நிறைந்தது. இப்போது அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது முகச்சுருக்கங்களாக எழுதப்பட்டிருந்த தியாக முத்திரைகள் அவன் மனதில் பாச உணர்வைப் பெருக்கின.

கறை அவன் மனதிலிருந்து காணாமல் போனது.

மறுநாள் அவன் வீட்டில் இருந்தபோது சுப்பையா தயங்கியவாறு வீட்டுக்கு வந்தார்.

‘வாங்க மாமா, வாங்க’ என்று அவன் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு முறை போட்டு அழைத்தபோது சுப்பையாவின் முகம் என்னமாய் ஜொலித்தது!

கம்பீரமாய் நாற்காலியில் வந்து உட்கார்ந்தவர் பழைய அதிகாரத்தோடு அவனைப் பார்த்து அவன் திருமணத்தைப் பற்றி உரிமையோடு பேச ஆரம்பித்தார்.

– ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1984, மழைச்சாரல், பேராக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *