தனிக்குடித்தனம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 9,096 
 
 

” என்னங்க நீங்க பாட்டுக்கு ஆபிஸ் போறதும் வரதுமா இருக்கிங்க.. நம்ம அருண் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான்.. அவனுக்கு ஒரு கல்யாணமும் பண்ணிட்டா ஒரு பாரம் குறையும்….”

அலுவலகத்திலிருந்து வந்த வெங்கடேசன் கைகளில் காபியை கொடுத்து கேட்டாள்.

“ விஜயா நம்ம பசுபதியோட பெண்ணை பார்க்கலாமா? எம்.எஸ்ஸி மேத்ஸ் முடிச்சிருக்களாம். இப்போதைக்கு தனியார் பள்ளியில வேலை செய்யறாளாம்.

“ ஆமா.. அந்த ப்யூன் பசுபதியோட பெண்ணையா? உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா நம்ம அருண் அவன் ப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட என் மாமனார் ஸ்கூல்ல பெல் அடிக்கிற ப்யூன்னு பெருமையா சொல்லிக்கவா? எத்தனை லட்சம் செலவு பண்ணி படிக்க வச்சிருக்கோம். நம்ம அந்தஸ்துக்கு தகுந்தா மாதிரிதான் ஒரு பார்க்கனும்.

“தரகர் ஒரு ஜாதகம் கொடுத்துட்டு போயிருக்கார். பொண்ணு சி.ஏ பண்ணிட்டிருக்காளாம். அவ அப்பா வக்கீலாம் .. ஒரே பொண்ணு வசதியானவங்க … எதிர்பார்க்கறதை விட அதிகமா செய்வாங்களாம்.”

“எப்படியோ போ நான் சொல்றதை என்னவா கேட்க போற.. அப்படியே தப்பி தவறி எதாவது கேட்டுட்டாலும் சரிபட்டு வரலைன்னா எல்லாம் உங்களால்தான்னு பிலு பிலுன்னு புடிச்சுக்குவே..”

நிஷாவை பார்க்க போயிருந்தார்கள். விருந்து பார்த்து பார்த்து செய்திருந்தார்கள். அருணுக்கு நிஷாவை பார்த்தவுடனே பிடித்து போனது.

பெண்ணின் அம்மா விஜயாவிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தாள். “ ஒரே பொண்ணு செல்லமா வளர்ந்துட்டா. வீட்டு வேலை எல்லாம் செய்ய மாட்டா.. காபி போடக்கூட தெரியாது. உங்க வீட்டுக்கு வந்தாலும் செய்யமாட்டா… எதையும் முதல்ல சொல்லிடறது பெட்டரில்லே… அப்புறம் வீட்டை துடைக்கல… காபி போடலைன்னு சொல்லக்கூடாது… எங்க வீட்ல எல்லாத்துக்கும் வேலைக்காரி வச்சிருக்கோம்…”

“ ஆமா நாமதான் வீட்ல கெடக்கிறோம்.. அவங்கவங்க வேலைக்கு போக போறாங்க.. அருணும் ஓரே பையன் உயிரையே வச்சிருக்கோம்.. அவங்க சந்தோஷமா இருந்தா போதும். எனக்கு தெம்பு இருக்கற வரை நானே செஞ்சிட்டு போறேன்…”

நூறு பவுன் நகையும் காரும் விஜயாவின் கண்ணை மறைத்தது. நல்ல நாள் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். நிச்சயம் முடிந்ததிலிலிருந்து அருண் அடிக்கடி போனில் பேசி கொண்டிருந்தான்.

“ அருண் இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் வந்துடேன்… இந்த இடம் கூடி வரனும்னு முருகனுக்கு வேண்டிகிட்டிருந்தேன்.. ஒரு நடை கோயிலுக்கு போயிட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடலாம். அப்புறம் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சப்பறம் குடும்பத்தோட போய் அபிஷேகம் பண்ணிட்டு வரலாம்…”

“ அம்மா… இன்னிக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு… நீயே போய் வந்துடேன்மா…”

குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து கும்பிட வேண்டுமென்று விஜயா சொன்னதால் அண்ணன் வீட்டிற்கு சென்று அழைத்துவிட்டு, கடைக்கு போய் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு, அச்சிட்டு தயாராயிருந்த பத்திரிக்கைகளையும் பார்சல் எடுத்து கொண்டு வருவதற்குள் வெங்கடேசனுக்கு களைப்பாக இருந்தது. “ சும்மாவா சொன்னாங்க வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்னு… அவளுக்கென்ன வீட்டில் உட்கார்ந்து கொண்டே எல்லாத்தையும் சொல்லிடுவா.. “ முணு முணுத்து கொண்டே ஸ்கூட்டரை நிறுத்தி ஒரு காபியாவது சாப்பிடலாம் என்று “ ஆவணா இன்னில் நுழைந்தார். காபியும், மெதுவடையும் சொல்லிவிட்டு பார்வையை படர விட்ட போது அந்த ஏ.சி அறையின் கடைசி டேபிளில் சின்ன வெளிச்சத்தில்.. அருண் நிஷாவிடம் வெகு ஆர்வமாய் எதோ பேசி சிரித்து கொண்டிருந்தவன் அப்பாவை கவனித்து ஒரு நிமிடம் முகம் மாறியவன் வேகமாக எழுந்து வந்தான்,

“ அப்பா வந்து… இன்னிக்கு நிஷாவிற்கு பர்த்டேவாம் போன் பண்ணினா அதான் ஹோட்டல்ல சாப்பிடலாம்னு … “

“ சரிப்பா பரவாயில்ல… நீ ஒண்ணும் சங்கடப்படாத.. நான் காபி மட்டும்தான் சொல்லியிருக்கேன்.. நீ மெதுவா சாப்பிட்டே வா.. “

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் எதற்காக எழுந்து போனான் என்பதை கூட கவனிக்காமல் மெனுவில் ஆழ்ந்திருந்தாள்.. ஸ்கை ப்ளூ நிற டிசைனர் ஸாரி அருண் எடுத்து தந்திருக்கலாம் என்று தோன்றியது. அருணுக்கு சின்ன வயதிலிருந்து ஸ்கை ப்ளூ ரொம்ப பிடிக்கும்.. பேனா, பென்சில் எதுவானாலும் அந்த கலரிலே வேணுமென்று கேட்பான்.
ஒரு சுப தினத்தில் திருமணம் முடிந்தது. பத்து நாட்கள் ஹனிமூன், விருந்து என்று இருவரும் சுற்றி கொண்டே இருந்தார்கள். அம்மாவை சாப்பிட்டியா என்று கேட்க கூட மறந்தை அருணை வித்தியாசமாய் எதுவும் நினைக்கவில்லை விஜயா. கல்யாணமான புதுசு சந்தோஷமாய் இருக்கட்டும்.. இவளாகவே சென்று அருணை ஆர்வமாக விசாரிப்பாள்.

லீவு முடிந்து அருண் வேலைக்க செல்லும் நாள்..” அம்மா நிஷாவை எதுவும் வேலை எல்லாம் சொல்லாதே அவளுக்கு எதுவும் தெரியாது.. நீயே சமைச்சு வை.. மத்தியானம் நான் வந்துடறேன்…” கிளம்பினான்.

டூ வீலரை உருட்டினால் இருபது நிமிடத்தில் அலுவலகம்.. மதியம் எப்போதும் வீட்டுக்கு வந்து விடுவான்.. அவன் இரண்டு மணியானாலும் விஜயாவும் சாப்பிடாமல் காத்திருப்பாள்.

புது மருமள் இருக்கிறாள் என்று ஒரு கூட்டும் கேசரியும் எக்ஸ்ட்ராவாக சமைத்து விட்டு பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து ஹாலில் வந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தாள். மணி ஒன்று ஆக ஐந்து நிமிஷம் இருந்தது. நிஷா இன்னமும் ரூமை விட்டு வெளியில் வரவில்லை. டி.வி யை போட்டு உட்கார்ந்தாள். விளம்பரம் முடிந்து தொடர் ஆரம்பித்த போது காலிங் பெல்.. வெளியில் போன வெங்கடேசனாகத்தானிருக்கும்.. இருக்கும் என கதவை திறக்க அருண் நின்றிருந்தான்.

நேராக ரூமுக்கு சென்றவன் பத்து நிமிடங்கள் சிரிப்பு உரையாடல் முடிந்து வெளியில் வந்தார்கள்.

“ அம்மா.. நீ அப்பா வந்தவுடன் சாப்பிடு டைமாயிடுச்சி எங்களுக்கு எடுத்து வையேன்…”

மணி ரெண்டானாலும் சாப்பாட்டுக்கு வராதவன் இப்போதெல்லாம் ஒரு மணிக்கே ஆஜராகிவிடுகிறான். இடையில் ஒவ்வொரு நாள் பதினொரு மணிக்கு டீ சாப்பிட வந்தேன் என்பான். நிஷாவிடம் அரட்டை அடித்து விட்டு இவர்கள் எதிரிலேயே “ பை..செல்லம்..” கன்னத்தை தட்டி விட்டு போனான்.

அவளுக்கு வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டும் தூங்குவதும் சுகமாய் பழகிவிட்டதால். ஒரு மாதமாகியும் அவள் போக்கு மாறவில்லை காலையில் எட்டு மணிக்கு மேல்தான் எழுந்திருப்பதும், சாப்பிட்டு விட்டு ரூமுக்குள் போய் கதவை தாளிட்டு கொள்வதுமாய் இருந்தாள்.

பொறுத்து பார்த்த விஜயா ஒரு நாள், “ என்னம்மா எப்பவும் ரூமுக்குள்ளயே தனியா இருக்க… அருண் வந்தாதான் வெளிய வர்றே.. வந்து எங்களோட கல கலப்பா பேசு… கொஞ்ச கொஞ்சமா சமைக்க கத்துக்கோ.. இனிமே உங்க ரெண்டு பேர் துணியையும் நீயே துவைச்சி மடிச்சி வைக்கனும்..”

அவ்வளவுதான் உம் மென்று முகத்தை வைத்து கொண்டு உள்ளே போய் விட்டாள். அவள் அம்மாவிற்கு போனில் என்ன சொன்னாளோ தெரியவில்லை. விஜயாவிற்கு போன் செய்தாள், “ என்ன சொன்னிங்க என் பெண்ணை? நாங்கதான் அப்பவே சொன்னோம்ல… செல்லமா வளர்த்துட்டோம்னு… ஒரு வேலைக்காரி வச்சிக்கங்களேன்… மிஞ்சி போனா ஆயிரம்.. ரெண்டாயிரம் ஆகுமா..?”

வெங்கடேசனிடம் பொருமி தள்ளிவிட்டாள் விஜயா, “ நான் என்னமோ கொடுமை பண்ற மாதிரி இல்ல பேசறாங்க… எவ்வளவுதான் படிச்சாலும் நம்ம வீட்டு வேலை கூட செய்ய தெரியாம என்ன பெண்ணுங்க இது…?

“விஜயா நீ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் பெண்ணைப்பாருன்னா பணத்தை தானே பார்த்தே..” சிரித்தார்.
வழக்கமான வேலைகளுடன் இன்னொரு ஆள் வேலையும் கூடுதலாய் சேர்ந்து போனதில் சோர்ந்துதான் போனாள்.

“ அம்மா உன்னால முடியலைன்னா.. வேலைக்கு ஆள் வச்சிக்கோ…” ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான் அருண். இருவரும் எங்கு போவதாக வருவதாக இருந்தாலும் கிளம்பு முன் ஒரு சின்ன இன்பர்மேஷன் மட்டும்தான். இவள் எதாவது கேட்டாலும், “ நீங்களே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு வீட்டுக்கு வந்தா சும்மா நொய்..நொய்னு உசிரை எடுக்காதீங்க… சந்தோஷமா இருந்தா உங்களுக்கு புடிக்காதே…” அம்மாவையே திருப்பினான்.

ஒரே வீட்டுக்குள் அவர்கள் இரண்டு பேர் ஒரு சுவற்றுக்குள்ளும், இவர்கள் தனியாக ஒரு சுவற்றுக்குள்ளும் இருப்பது போல் இருந்தது விஜயாவிற்கு வருத்தமாகவே இருந்தது.

“ என்னங்க நான் உங்க வீட்டுக்கு வந்த போது உங்க தம்பிங்க, தங்கைன்னு எவ்வளவு கல கலப்பா இருந்தோம்… மொத்தம் எட்டு பேர்னாலும் ஆளுக்கொரு வேலை செஞ்சிகிட்டு அரட்டை அடிச்சிக்கிட்டு அந்த நாள் எல்லாம் கண் முன்னால் வந்து கஷ்டமா இருக்கு… நமக்கு இருக்கிற ஒரே பையன் இப்படி மாறுவான்னு கனவுல கூட நினைக்கலை…”

“ விடு விஜயா காலத்துக்கு தகுந்த மாதிரிதான் போகனும்.. இன்னிக்கு ஒரே பிள்ளைங்கன்னு எல்லா வசதியோடயும், விட்டு கொடுத்து போக தெரியாம வளர்ந்துட்டு அவங்க விருப்பபடி…. தனியா வாழத்தான் விரும்பறாங்க.. ஒண்ணா இருந்து சேற்றை வாரி பூசிக்கிறதை விட அவங்க வாழ்க்கை அனுபவத்தை அவங்களே கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிகிட்டமே.. இருக்கவே இருக்கு ஊர்ல நம்ம வீடு அங்க போய்டலாம். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியா இருக்கும் என்ன சொல்றே..?”

பேரன், பேத்தி என்று வீடு நிறைந்து வாழ ஆசைப்பட்டவள் மனம் கலங்கி, “ அப்படித்தான் போகலாங்க.. பிள்ளைங்களை வளர்த்து ஒரு வாழ்க்கையை கொடுக்கிறதோட நாம அவ்வளவுதான்..”

Print Friendly, PDF & Email
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *