தந்தை யாரோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 3,159 
 
 

“என்னங்க! டாக்டர் என்னமோ சொன்னாரே…?” என்று இழுத்தாள் இந்திரா.

அவளது கேள்வியில் அச்சமிருந்தாலும் அதில் அடங்கியிருந்த ஆர்வமும் எனக்குப் புலப்படாமல் இல்லை.  எனக்குள் ஆத்திரம் பொங்கி எழுந்தது. அப்படியென்ன பிள்ளை ஆசை வேண்டிக்கிடக்கிறது! படித்தவளாம், படித்தவள்!

எல்லாம்தான் இருக்கிறதே வாழ்வில். பிள்ளைச்செல்வம் மட்டும் இல்லாவிட்டால் குறைந்தாவிட்டது!

மணமாகி ஐந்து பிறந்த நாட்கள் வந்து போயும், தான் பூக்காத மரமாகவே இருக்கிறோமே என்றவளின் கவலை எனக்கு முதலில் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.

கிளினிக்கின் முதற்படி ஏறுமுன், அதுதான் என் அமைதியான வாழ்வின் இறுதிப்படி என்பதை நான் உணராமல் போனேன்.

“ஸாரி, ஸார்,” என்று ஆரம்பித்து, டாக்டர் விவரமாகச் சொன்ன விஷயத்தைக் கேட்ட நொடியிலேயே நான் இறந்துவிட்டேன். உலகின்முன் எப்படி நடிப்பது என்ற பெருங்கவலை என்னைச் சூழ்ந்துகொண்டது.

‘இவளுடைய வற்புறுத்தலுக்கு ஏன்தான் இணங்கினோமோ!’ என்று நான் என்னையே கடிந்துகொள்ளாத நாளில்லை. இல்லாவிட்டால், குறை என் உடலில்தான் என்று டாக்டர் தீர்மானமாகச் சொல்லியிருந்திருப்பாரா?

என் உணர்ச்சிகளைப் புரிந்தவளாக இதமாக நடந்துகொண்ட மனைவியால் என் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கத்தான் முடிந்தது.

எனக்காகப் பரிதாபப்படுகிறாள்!

காதலித்து மணந்தவர் ஆண்மையற்றவர் என்று அறிந்து. தன் துர்பாக்கியத்தை உள்ளுக்குள் சபித்துக்கொண்டாலும், வெளியில் பசப்புகிறாள்! இப்படி ஒரு குரூரமான எண்ணம்.

சே! அந்த உத்தமியைப்பற்றி இப்படியெல்லாம் நினைப்பதே பாவம். இன்னொருத்தியாக இருந்தால், சட்டபூர்வமாக விலகிவிடுவாள். இல்லை, இல்லை, என்னை விலக்கி வைத்துவிடுவாள். இது அவளை நன்கறிந்த எதிர்க்குரல்.

இந்திரா காரியவாதி. எங்களைப்போன்றோர் பிள்ளை பெற்றுக்கொள்ள ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தாள்.

“இதிலே ஒண்ணும் தப்பே இல்லீங்க!” பல முறை அவள் மன்றாடியபோது, ஒருவாறாக இணங்கினேன்.

“டாக்டர்கிட்டே முழு விவரத்தையும் கேட்டுக்கலாம்,” என்று சமாதானப்படுத்தினேன். அப்போதைக்கு அதுவே நல்ல அறிகுறிதான் என்ற மலர்ச்சி அவள் முகத்தில். 

“இது மேல்நாட்டிலே அமோக வரவேற்பு பெற்ற முறை, ஸார். தத்து எடுத்துக்கிட்டா, அதை முழுமனசோட ஏத்துக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க, சொல்லுங்க!” டாக்டர் சவால் விட்டார்.  “தன்னோட வயத்திலே வளர்ந்த குழந்தையைப் பாத்தா தாய்ப்பாசம் பொங்கும். ஒங்க குழப்பம் இவங்க சந்தோஷத்திலே கரைஞ்சுபோயிடாதா!”

இந்த மனிதரும் என் மனைவியுடன் சேர்ந்துகொண்டு, என் மனதைக் கலைக்க ஏதோ சூழ்ச்சி செய்கிறார்!

என்னிடம் இயற்கையும் வளர்ச்சியும் அளிக்கத் தவறிவிட்ட ஒன்றை எவனோ ஒரு இளைஞன் தானமாக அளிக்கப்போகிறான்!

சீச்சீ! எதைத்தான் தானம் கொடுப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது இப்போது.

“பெத்தவங்க சாயலே இல்லாம குழந்தைங்க பிறக்கிறதில்லையா!” டாக்டர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். அப்போதைக்கு அவரிடமிருந்து தப்பினால் போதும் என்ற, யோசித்து வருவதாகச் சொல்லி நழுவினேன்.

தன் ஏமாற்றத்தைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டாள் இந்திரா. நானோ, அந்த நினைப்பையே அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தேன். நடக்கிற காரியமா!

தானே கனிந்துவருவேன் என்ற நம்பிக்கை சரிய, `டாக்டர் என்னவோ சொன்னாரே!’ என்று சுற்றி வளைக்கிறாள்!

அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் கேட்பதெல்லாம் ஒரு குழந்தை. சாதாரணமாக எந்தப் பெண்ணுக்கும் எழும் ஆசைதான். இதைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், நான் எதில் சேர்த்தி?

மனத்தளவில் நான்தான் மடிந்துவிட்டேன். அவளாவது வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.

இப்போது இந்திராவின் மனதிலிருந்த பூரிப்பு உடலிலும் வெளிப்படையாகவே தெரிந்தது.

ஊர்பேர் தெரியாத எவனுடைய விந்துவோ என் மனைவியின் உடலுக்குள் நுழைக்கப்பட்டு, அது கருவாக வளர்வதைப் பொறாமையுடன் பார்த்தேன்.

இதே காரியத்திற்கு, `கட்டியவனுக்கு துரோகம்’ என்றொரு பெயருண்டு, வேறு சில சந்தர்ப்பங்களில். ஆனால், நாங்களே தெரிந்து செய்ததை என்னவென்பது! இந்த மன உளைச்சலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை.

இந்திராவின் உடல் எடைக்கு ஏற்ப என் மனச்சுமையும் கூடியது. பயங்கர மிருகமானேன். கொண்டவளைப் படாத பாடு படுத்தினேன். `உரிமை’ என்ற போர்வையில் என் வேதனை – மனதின் வெறுமையே – வெறியாக மாறுகிறது என்று புரிந்துகொண்டாற்போல், அவ்வளவுக்கும் ஈடுகொடுத்தாள்.

எதிர்ப்பில்லாத சண்டையும் ஒரு சண்டையா!

நான் அடங்கிப்போனேன்.

நான் இரவு பகலாக நினைக்க மறுத்து, அஞ்சிக்கொண்டிருந்த அந்நாள் இறுதியில் வந்தேவிட்டது.

`உங்களைச் சும்மா விட்டுவிடுவோமா? விருந்து எங்கே?” என்று மிரட்டிய நண்பர்களுடன் எனக்கு `வாரிசு’ பிறந்திருப்பதை கொண்டாடினேன். போலிச்சிரிப்புடன்.

மருத்துவமனைக்கும் சென்றேன் – பிறர் முன்னிலையில் மனைவியைத் தலைகுனிய வைக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு.

“என்னங்க! குழந்தை ரொம்ப அழகா இருக்கு இல்லே?” உவகையுடன் வந்த அவள் குரல் எனக்கு நாராசமாகக்  கேட்டது.

“ஏன், இந்தச் சனியனோட அப்பாபோல இருக்குதோ?” குரோதத்துடன் வெளிப்பட்ட என் எதிர்க்கேள்வியின் உக்கிரத்தைத் தாங்கமுடியாது அவளுடைய பச்சை உடம்பு நடுங்கியது.

சே! என்ன மனிதன் நான்! எவ்வளவோ யோசித்து அக்காரியத்தைச் செய்யத் துணிந்தும், மனம் ஒருநிலைப் படவில்லையே! எனக்கே என்மேல் வெறுப்பு ஏற்பட்டது.

“ஸாரிம்மா. ஒனக்குச் சந்தோஷமா இருந்தா சரிதான்!” ஒப்பிப்பதுபோல் பேசிவிட்டு, அவள் முகத்தைப் பார்க்கவும் துணிவின்றி வெளியே நடந்தேன்.

முன்யோசனை இல்லாமல் செய்த காரியத்தின் விளைவு. எங்களிடையே பாலமாக இருக்கும் என்று அவள் நம்பிப் பெற்ற குழந்தையே எங்கள் நெருக்கத்தைத் துண்டித்துவிடும் என்று அப்போதே நான் உணர்ந்துவிட்டேன்.

என் மனைவியின் குழந்தை பாபு, ஆமாம், அவன் என் மகனென்று உலகை ஏமாற்றியதுபோல் என்னையே நான் ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

அதன் அழுகைச் சத்தம் கேட்டாலே, “பிசாசு கத்துகிறதே! யாராவது ஏதாவது பண்ணித் தொலைக்கக்கூடாது?” என்று அலறுவேன்.

கண்ணீரைத் தடுக்க கீழுதட்டைப் பல்லால் கடித்தபடி அவனுடன் உள்ளே விரைவாள் பெற்றவள்.

கூடியவரை, தந்தையின் பராமுகத்தை அவன் அறியாதபடி அவன்மேல் பாசத்தைக் கொட்டினாள் இந்திரா. நானோ, அவனையும் எங்களுடன் வெளியே அழைத்துப்போய் புழுங்குவானேன் என்று எங்கும் தனியே செல்ல ஆரம்பித்தேன்.

பள்ளிக்குப் போக ஆரம்பித்ததும், “ஏம்மா அப்பா என்னோட பேசறதே இல்லே?  என் ப்ரெண்ட்ஸோட அப்பா எல்லாம் வெளியே கூட்டிட்டுப் போறாங்க, சேர்ந்து விளையாடறாங்களே!” ஏக்கத்துடன் வந்த குரலை ஒரு நாள் கேட்க நேர்ந்தது.

`அப்படி ஒரு எண்ணம் வேறு இருக்கிறதாடா பயலே உனக்கு?’ என்று கொக்கரித்தேன். ` எனக்கும் என் இந்திராவுக்கும் இடையே புல்லுருவிபோல வந்தாயே!  என் அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாடிப்போ!’

அடுத்த நாள், “நம்ப பாபுவுக்கு மலாய்ப்பாடம் கஷ்டமாயிருக்காம். அதனால..,” என்று இழுத்தாள் இந்திரா. பயத்தில் கண்களைச் சுருக்கினாள்.

பதிலுக்கு, “அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே? முட்டாள்தனத்துக்கு எவனைக் கொண்டதோ!” என்று சீறினேன்.

அதை லட்சியம் செய்யாது, “இந்த மூணாங்கிளாஸ் படிப்பு ஒங்களுக்கு ஒண்ணும் கஷ்டமா இருக்காது. நீங்க கொஞ்சம் கவனிச்சுக்கிட்டா..!”

ஓ! எனக்கும் பாபுவுக்கும் இடையே இருக்கும் அகழியை அடைக்கும் முயற்சியா?

“வேற வேலை இல்லே. டியூஷன் வெச்சுக்க ஒன் மக்குப்பிள்ளைக்கு”.

எவ்வளவோ நம்பிக்கையுடன் வந்தவள் அதிர்ந்துபோனாள். நான் மனதுக்குள் சிரிக்கிறேன்.

புண்பட்ட மனம் பிறரைப் புண்படுத்துவதில்தான் இன்பம் காணுமோ?

`அவசரம்! உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு வரவும். வார்டு எண்…!’

அலவலகத்தில் செய்தி கிடைத்தபோது, மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை. பதட்டத்துடன் விரைந்தேன். 

என் இந்திரா! அவளுக்கு என்ன ஆயிற்றோ!

ஒரு வேளை, தற்கொலை முயற்சியோ?

நீ இல்லாவிட்டால், அனாதைகளாகிவிட்ட நானும் பாபுவும் ஒருவர்க்கொருவர் பற்றுக்கோடாக மாறமுடியும் என்று யோசித்தாயா, இந்திரா?

உயிருடன் இருந்து சாதிக்க முடியாததை என் இறப்பு சாதித்துவிடும் என்றுதான் அவள் அந்த முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

புதிய வேதனையின் விஸ்வரூபத்தில் பழைய வேதனை சுருங்கிப்போயிற்று.

பிறருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்துகொள்ளாத முட்டாளாக இருந்துவிட்டேனே!

`இந்திரா! இனிமேல் உன் மனதைப் புண்படுத்தவே மாட்டேன். என்னை விட்டுப் போய்விடாதே!’ மானசீகமாகக் கெஞ்சினேன். எதையும் இழக்கும் தறுவாயில்தான் அதன் அருமை புரிகிறது.

எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சி.

என் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றிருந்தவள் படபடப்புடன் எதையோ கூறியதைக் கேட்கும் நிலையில் நான். அங்கேயே அவளை ஆரத் தழுவ வேண்டும்போல இருந்தது.

அவளுடைய வேதனையில் பங்கேற்கத் தோன்றவில்லை. நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்பட்டது.

அப்பாடா! அபாயம் பாபுவுக்குத்தானா?

ஏதோ விபத்தாம். உயிருக்கே அபாயமாம். எனக்குள் ஒரு சிலிர்ப்பு. என் ஆருயிர் மனைவிக்கும் எனக்குமிடைய வந்த கோடரி சக்தியிழந்து, நிரந்தரமாகக் கீழே விழப்போகிறது!

எனக்கு அவள், அவளுக்கு நான். நான்-இந்திரா. வேறு அர்த்தமற்ற உறவுகளுக்கே அங்கே இடமில்லை.

என் இன்பக் கனவுகளிலிருந்து என்னை உலுக்கியது அந்த அழுகுரல்: “நான் சொல்லச் சொல்ல அப்படியே நிக்கறீங்களே! அப்படிப் பாக்காதீங்க. (என் எண்ண ஓட்டம் அவளுக்கு எப்படிப் புரிந்தது?) ஒண்ணை மட்டும் நினைவு வெச்சுக்குங்க. அவன் இல்லாட்டி நானும் இல்லே. நான் கொண்டுவந்த உயிர் ஒங்களால போனா..,”  மேலே கூறமுடியாது விம்மினாள். மிரட்டலாக இல்லாது, அழுகுரலாக அவள் சொன்னதைப் பரீட்சித்துப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

நான் ரத்த தானம் அளித்து, எத்தனையோ பேரை பிழைக்க வைத்திருக்கிறேன். இந்திராவுக்காக இதுகூடச் செய்யமாட்டேனா இப்போது!

சிறிது பொறுத்து, “நம்ப பாபுவைச் சீக்கிரமே வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடணும். பாடமெல்லாம் வீணாகிடும். நான் கத்துக்குடுக்க வேண்டியது எத்தனையோ இருக்கு,” என்று உளறிக்கொட்டினேன்.

அவன் பிறப்பின் பின்னாலிருந்த நிழலைத்தான் என் ரத்தத்தால் துரத்திவிட்டேனே!

இந்திரா என்னைக் காதலுடன் பார்த்தாள்.

(தமிழ் நேசன், அக்டோபர் 3,1976)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *