கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 13,962 
 

விக்ரமின் புத்தம் புதிய அந்த இரண்டு சக்கர வண்டி புயல் போல காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் சட்டென்று ப்ரக் அடித்து நின்றது. அந்த வண்டியின் வந்த வேகமும், அதிலிருந்து விக்ரம் இறங்கி பங்களாவின் உள்ளே ஓடிய விரைவும் அந்த இளைஞனின் கோபத்தை வெளிப்படையாகக் காட்டியது.

“டாட்…டாட்…’ என்று உரத்த குரலில் சத்தம் போட்டபடி ஹாலில் சினிமா ஸெட் போல் அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிகளில் விரைந்து ஏறிய விக்ரம் அவன் தந்தை மாதவன் விசாலமான மாடி பால்கனியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவர் எதிரில் போய் நின்ற அவனது அழகான, இளமைத் ததும்பும் முகத்தில் கோபமும், துவேஷமும் கொப்பளித்தன.

மாதவன் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் பேப்பர் படிப்பதில் மும்முரமாக இருப்பவர் போல் காட்டிக் கொண்டார்.

“டாட்… எனக்குப் பணம் வேண்டும்… ஐ வான்ட் மனி…’ என்றான் விக்ரம் உரத்த குரலில்.

மாதவன் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை.

“யு ஹியர் வாட் ஐ ஸெட்…’ என்றான் மறுபடியும்.

அவர் தினசரியிலிருந்து முகத்தை நிமிர்த்தாமலே “ம்… அதான் தமிழ், இங்கிலீஷ் இரண்டிலும் தெளிவாகச் சொல்லி விட்டாயே…?’ என்றார். பின் தொடர்ந்து “போன மாதம்தானே உன் கணக்கில் ஐந்து லட்சம் போய் போட்டேன்’ என்றார்.

: 2 :

“ஹக்…’ என்று உறுமினான் விக்ரம். “பிசாத்து ஐந்து லட்சம்… அது தீர்ந்து போய் விட்டது…’

“அப்படி உன் செலவுதான் என்ன மகனே…?’ என்றார் மெதுவாக.

“எனக்கு ஆயிரம் செலவு இருக்கிறது. அதையெல்லாம் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க முடியாது… இப்போ எனக்கு அர்ஜண்டா பத்து இலட்சம் வேண்டும்… தர முடியுமா, முடியாதா…?’ விக்ரமின் ஒவ்வொரு வார்த்தையிலும் சினமும், அகங்காரமும் கொப்பளித்தன.

“முடியாது என்றால்….?’

“உங்கள் மானமும், கௌரவமும் கப்பலேறும்…’

மாதவன் புன்னகை செய்தார். “ஓ… அப்படியா… இப்போது என்ன பிரச்னை?’ என்றார் எகத்தாளமாக.

விக்ரம் பரபரப்பாக இங்கும், அங்கும் உலாத்தினான்.

“ஷிட்… இரண்டு நாட்கள் முன்பு ஃப்ரண்ட்ஸ் கூடப் பார்ட்டிக்குப் போய் விட்டு வரும் வழியில் என் கார் ப்ளாட்பாரத்தில் ஏறி அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பிச்சைக்காரப் பசங்களைக் கொன்று விட்டது…’

“நேற்று அடையாளம் தெரியாதவர்கள் ஓட்டிச் சென்ற கார் என்று செய்தியில் காட்டினார்களே… அது உன் கார்தானா…?’ என்று திடுக்கிட்டவராய் கேட்டார் மாதவன்.

“யெஸ்… விவேக் ஃபுல்லி ட்ரங்’ என்றான் விக்ரம் அலட்சியமாக.

“விக்ரம்… திஸ் ஈஸ் டூ மச்… உன்னை எவ்வளவு தடவை சொல்லி இருக்கிறேன்… குடித்து விட்டு போதையில் வண்டியை ராத்தியில் ஓட்டிக் கொண்டு வராதே… என்று…’ என்றார் மாதவன் கோபமாக.

: 3 :

“அட்வைஸ்… அட்வைஸ்…’ என்று அலுத்துக் கொண்டான் விக்ரம்.

“என்னை என்னால் இனிமேல் மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றான் அலட்சியமாக.

“உன் கார் என்று போலீஸுக்கு எப்படித் தெரிந்தது…?’ என்றார் மாதவன்
கவலையுடன்.

“எதில் திசைல உட்கார்ந்திரு நான்கு ராஸ்கல்கள் காரையும், கார் நம்பரையும் பார்த்து இருக்கிறான். போலீஸில் சாட்சி சொல்லி இருக்கிறான்…’

மாதவன் பதில் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் அவர் மனது வேதனையில் வெந்து போக ஆரம்பித்தது. இதுவரை வெறும் சூதாட்டம், அடிதடி, பெண்கள் சகவாசம் என்றுதான் திரிந்து கொண்டிருந்தவன் இன்று கொலையில் இறங்கி விட்டான். இதில் என்ன இருக்கிறது ஆச்சர்யப்பட…? அவைகளுக்கு அடுத்த நிலை கொலைதானே என்று அவர் மனச்சாட்சியே அவரைப் பார்த்து ஏளனமாகக் கேட்பது போல் இருந்தது.

“உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி கமிஷனரிடம் பேசினால் என்னை விடுவிக்கலாம்… அதோடு கொஞ்சம் பணமும் செலவு பண்ண வேண்டும்…’ என்றான் விக்ரம்.

செல்வாக்கு… இதுநாள் வரை அவர் அரசியல் செல்வாக்கு, மந்திரி பதவி என்ற ஆயுதத்தை உபயோகித்துத்தான் விக்ரமின் தவறான பாதைகளின் வழிகளை எவருக்கும் தெரியாமல் காப்பாற்றி வந்தார். ஆனால் இப்போது வந்திருப்பது…?

கொலை!

அதுவும், நிராயுதபாணியாக சோற்றுக்கே வழியின்றி தெருவில் படுத்துறங்கும் பிரஜைகளின் மீது…

: 4 :

“என்ன டாட்… ஒன்றும் பேச மாட்டேன் என்கிறீர்கள்…?’

“என்ன பேசுவது… நீ செய்திருப்பது கொலை இல்லையா?’

“ஹக்… கொலை என்ன… பெரிய ஆளையா கொன்று விட்டேன்…சோற்றுக்கே வழியில்லாமல் தெருவில் படுத்துறங்கும் பஞ்சப் பரதேசிகளைத்தானே….?’

“இருந்தாலும் ஐந்து மனித உயிர்கள்?’ என்றார் மாதவன். அவர் அரசியல்வாதி தான். அவர் உழைப்பாலும், நேர்மையாலும் படியேறியவர். அவரிடம் இருந்து பலவீனம் பணம் வாங்குவதும் அதை தாயில்லாப் பிள்ளை என்று செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிய இந்தப் பிள்ளையும்தான்…

அதனால்தான் விக்ரமின் ஆட்டங்கள் அம்பலத்துக்கு வராமல் இருந்தன. ஆனால், இன்று… அவருடைய ஓர் பலவீனம், மற்றவர்கள் அவரின் இன்னொரு பலவீனத்தை உபயோகப்படுத்தி அவனை மீண்டும் காப்பாற்று என்கிறது…

மாதவனுக்கு விக்ரமுடன் அந்த சமயத்தில் பேசப் பிடிக்கவில்லை.

“சரி… போ… நான் பார்க்கிறேன்…’ என்றார்.

அன்று இரவு சாப்பிட்டபின் வெளியே கிளம்ப முயன்ற விக்ரமைத் தடுத்து “என்னோடு என் பெட்ரூமுக்கு வா… உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்…’ என்றார்.

“ஓ… டாட்… என் நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்… நான் போக வேண்டும்…’ என்றான் விக்ரம்.

“போகலாம்… பத்து நிமிஷம்தான்…’ என்றார் மாதவன்.

அவர் அறைக்குள் போனதும் அவனை கட்டிலுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் “உட்கார்…’ என்றார்.

: 5 :

“ஐ ஸே…’ என்று அவசரமாக ஆரம்பித்த அவனைக் கை அமர்த்தினார் மாதவன்.

“என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்… நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்…’ என்றார்.

“மைகாட்… நான்தான் சொன்னேனே… லேட் நைட் பார்ட்டி…. நாங்கள் கொஞ்சம் அதிகமாகவே ட்ரிங் பண்ணி விட்டேன்… நான்தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.. நைட் டைம்… ஃப்ரண்ட்ஸ் ஏதேதோ ஜோக் அடித்துச் சிரித்துக் கொண்டே வந்தோம்… நடுராத்திரி ட்ராபிக் இல்லை என்பதால் வண்டியை செம ஸ்பீடாக ஓட்டிக் கொண்டு வந்தேன்… திடீரென்று எனக்கு ஏதோ நிலை தடுமாறியது… வண்டி தாறுமாறாக ஓடி பிளாட்பாரத்தில் ஏறி ஓடி நின்றது…’

“எத்தனை பேர்?’ என்றார் மாதவன்.

“செத்ததா… வண்டில இருந்தவங்களா…?’

“செத்தது…?’

“ஓ… ஐ டிண்ட் ஸீ… வெளிச்சம் அவ்வளவா இல்லை… ஃப்ரண்ட் மனோதான் திடீரென்று கத்தினான்… டேய்… ஒரே ரத்தம்டா… ஆள்மேல ஏத்திட்ட போல இருக்குன்னான்… பயத்தில காரை உடனே ஸ்டார்ட் பண்ணிட்டேன்…’

“எந்த வண்டி…?’

சொன்னான்.

அவனுடைய பிறந்த நாள் பரிசாக அவர் அவனுக்கு வாங்கிக் கொடுத்த கார்…

“சரி… நீ போ… நான் பார்த்துக்கிறேன்…’ என்றார் மாதவன் அமைதியாக.

“பணம்….?’

“தருகிறேன்… நீ போ…’

விக்ரம் வேகமாக வெளியேறினான்.

மாதவன் சற்றுநேரம் சிலை போல் அமர்ந்திருந்தார்.

அவர் சிறு வயதிலிருந்தே மக்கள் பணியிலும், அரசியலிலும் ஈடுபட்டு தன்னை முன்னேற்றிக் கொண்டது. கட்சித் தலைமையின் அன்பையும், மதிப்பையும் சம்பாதித்தது, தேர்தலில் நின்று ஜெயித்தது, பல வழிகளில் பணம் சேர்த்தது, இன்று மந்திரியாக இருப்பது என்று அவர் வாழ்க்கை அவர் கண்முன் ஓடியது. ஆனால் அவருடைய ஒரே மகன்… அவன் கண்காணிப்பில்லாததால் குட்டிச் சுவரானான். நாட்டுப்பணி என்ற போர்வையில் அவர் வீட்டுப் பணி என்ற ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விட்டார். அவர் அவரது வாழ்க்கையில் பணம் சேர்த்ததைத் தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால், பல குற்றங்கள் செய்த மகனை நல்வழிப்படுத்தத் தவறி இருக்கிறார். அது சிறியதாகத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு கொலைகார மகனை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி சமூகத்தில் தன் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

இந்தியாவில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தினம் தினசரிகளில் வெளிவந்து கொண்டுதான் உள்ளன. அவரைப் போன்று பதவியையும், பணத்தையும் வைத்துக் கொண்டு தவறு செய்யும் மகன்களும், உறவினரும், கட்சிப் பிரமுகர்களும், அடியாட்களும் தப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அவர் இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு கொலைக்கோ, அதைக் காப்பாற்றவோ முயன்றதில்லை.

: 6 :

இன்று அவர் அருமை மகன்… ஒரே பையன்… அவருக்குப் பின் அரசியலில் கூடப் பிரசேவம் செய்யலாம்… அவன் ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு அவர் முன் வந்து அவர் செல்வாக்கை உபயோகித்து காப்பாற்றச் சொல்கிறான்.

அவர் வாழ்வது யாருக்காக? அவருக்காகவா, அவரது கட்சிக்காகவா, அல்லது அவர் பாசம் வைத்திருக்கும் ஒரே மகனுக்காகவா!

அவர் யோசனையில் ஆழ்ந்து போனார்.

அவர் என்ன செய்யப் போகிறார்?

அவர் சிந்தனையில் சிக்கினார்.

அவருடைய மகனின் எதிர்காலம் என்ன?

அவர் மனம் போராட்டத்தில் ஆடியது.

நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின் அவர் செயல்படலானார். அதற்குப்பின் மாதவன் அமைதியாக, ரத்த அழுத்தத்திற்காக டாக்டர் கொடுத்திருந்த தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு உறங்கச் சென்றார்.

மறுநாள் காலை அவரது வேலைக்காரன் எட்டுமணி வாக்கில் குடிபோதையில் தாறுமாறாக உறங்கிக் கொண்டிருந்த விக்ரமை அவசர அவசரமாகக் கதவைத் தட்டி எழுப்பினான். மிகுந்த கோபத்துடன் வந்து பெட்ரூம் கதவைத் திறந்த விக்ரமிடம் அந்த வேலைக்காரன் “அய்யா இறந்துட்டாங்க தம்பி…’ என்றான்.

···

மாதவனின் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்து மூன்றாவது நாள் விக்ரம் வக்கீலை அழைத்து சொத்து விவரங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவர் ஓர் போலீஸ் ஜீப்பில் வந்து வாசலில் இறங்கி இன்ஸ்பெக்டருடன் வருவதைப் பார்த்து வியப்புடன் எழுந்து நின்றான்.

: 7 :

உள்ளே வந்த வக்கீல் “உட்கார் விக்ரம்…’ என்றார். அவர் முகமும், உடன் வந்த இன்ஸ்பெக்டர் முகமும் இறுகி இருந்தது.

“என்ன… என்ன விஷயம்?’ என்றான் விக்ரம் பதட்டமாக.

“உன்னைக் கைது செய்ய வந்திருக்கிறார் இவர்…’ என்று இன்ஸ்பெக்டரைக் காட்டினார் வக்கீல்.

“எதற்கு…?’ என்றான் விக்ரம் திகைப்புடன்.

“தெருவில் உறங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் மேல் காரை குடிபோதையில் ஏற்றிக் கொண்ட குற்றத்திற்காக…’

“நான்ஸென்ஸ்…. உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று சீறினான் விக்ரம்.

இன்ஸ்பெக்டர் பதில் தராமல் தனது பையிலிருந்து ஒரு கடிதத்தையும் மாதவனின் ஸெல்ஃபோனையும் எடுத்துக் காட்டினார்.

“நீங்கள் உங்கள் தந்தையிடம் கொடுத்த வாக்குமூலம் இதில் பதிவாகி இருக்கிறது. இது உங்கள் தந்தை உங்களிடம் தரச் சொல்லி எங்களுக்கு அனுப்பி வைத்த கடிதம்…’ என்று ஒரு கவரை நீட்டினார் இன்ஸ்கெக்டர்.
பரபரப்புடன் அந்தக் கவரை வாங்கிக் கிழித்து உள்ளே இருந்த பேப்பரை எடுத்துப் படித்தான் விக்ரம். அதில் சுருக்கமாக இரண்டு வரிகள்தான் இருந்தன.

விக்ரம்,
உன்னை ஓர் கேவலமான பிரஜையாக வளர்த்ததற்கான தண்டனையை நான் எனக்கே கொடுத்துக் கொண்டேன். உனக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கும்…’
மாதவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *