கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,803 
 
 

“”முளைச்சு மூணு எலை விடலை… அதுக்குள்ளே இந்தப் பேச்சு பேசுறீயா… ஏண்டா, பாட்டியை போய், யாருன்னு கேட்டா… வில்லேஜ்லருந்து அழைச்சுட்டு வந்துருக்கிற சர்வன்ட்டுன்னு சொல்ற? என்ன தைரியம்டா உனக்கு?” மாலினி ஆவேசமாக கத்தியவாறே முரளியின் முடியை பிடித்து இழுத்து, முதுகில் இரண்டு சாத்து சாத்தினாள்.
தகப்பன் சாமிஅப்படியும் ஆத்திரம் அடங்க மாட்டாமல், “”என்ன துணிச்சல்டா உனக்கு? அம்மாவைப் பெத்த பாட்டின்னா, உனக்கு அவ்வளவு கேவலமா போச்சாடா… பாட்டி, எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா? அவங்க மனசு கஷ்டப்படற மாதிரி நடக்கலாமாடா… இந்த வாயிலிருந்துதானே அந்த வார்த்தை வந்தது… வாயக் கிழிச்சு தைக்காம விடறதில்லை, இன்னிக்கு…” மீண்டும் கையை ஓங்கினாள்.
அவள் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட முரளி, லாவகமா ஓடிப்போய் ஹால் மூலையில் நின்று, பெருங்குரலில் கத்தினான்.
“”என்னம்மா தப்பு? நீ சொன்னா தப்பு இல்லை; நான் சொன்னா தப்பா?”
“”டேய்… நான் எப்படா, எங்கம்மாவை அப்படியெல்லாம் பேசுனேன்?”
“”போன வாரம் சண்டே! உன் ஆபிஸ் பிரண்ட்ஸ் சாப்பிட வந்தாங்களே… அப்போ சொல்லலை?” சுட்டு விரலை ஆட்டிக் கேட்டான் முரளி.
“”ராஸ்கல்! பொய் வேற பேசுறீயா?”
“”அன்னிக்கு பாட்டி இங்க இல்லவே இல்லை,” மீண்டும் கோபத்துடன் அவனை பிடிக்க பாய்ந்தாள் மாலினி.
அவள் கைக்கு அகப்படாமல் வாகாய் நின்று, “”இந்தப் பாட்டியை இல்லை; நீ வள்ளி பாட்டியை சொல்லலை… வில்லேஜ்லயிருந்து வேலைக்கு அழைச்சுட்டு வந்து வச்சிருக்கோம்ன்னு சொல்லலை, சர்வன்ட்டுன்னு உன் கலீக்ஸ்கிட்டே சொல்லலை…” மாலினிக்கு பொளேரென்று அறை வாங்கியது போலிருந்தது.
வள்ளிப்பாட்டி என்று அவன் குறிப்பிட்டது, அவள் மாமியாரை. ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். உண்மைதான்! போன வாரம், தன்னோடு பணிபுரியும் சிலரை சாப்பிட அழைத்திருந்தாள். எல்லாரும் வள்ளியம்மை நளபாகம் தான்… மாலினி டேபிளில் பரிமாற, அவர் உள்ளேயிருந்து எடுத்து கொடுத்து உதவிக் கொண்டிருந்தார்.
மாலினிக்கு அவர் வேலை செய்யும் நறுவிசும், நேர்த்தியும் பிடிக்கும்… அவர் தோற்றம் பாங்காய் இல்லையே! யாரிடமாவது அறிமுகப்படுத்துற மாதிரியா இருக்கு வள்ளியம்மாள் தோற்றம். சென்னையில் தான் திருமணம். திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்பின் போது மாமியாராக வள்ளியம்மை, மாலினிக்கு அறிமுகம் ஆனார். அந்த முதல் பார்வையிலேயே, மாலினிக்கும், அவள் வீட்டாருக்கும், வள்ளியம்மை ரொம்ப இளக்காரமாகி விட்டார்.
தொட்டு பொட்டு வைத்துக் கொள்கிறாப் போல நிறமும், முன்னே நீட்டிக் கொண்டிருக்கும் பற்களை மூட முடியாமல் தவிக்கும் உதடுகளும். அறுந்து விடுமா என்று பயமுறுத்தும் வண்ணம் தோளைத் தொடுவது போல ஊஞ்சலாடும் பாம்படங்களும்…
எண்ணெய் வைத்தாலும் படியாத தலையும்… வெள்ளைச் சீலையும், தொள தொள ரவிக்கையும்… வெள்ளந்தி முகமும் என்னவோ, மாலினிக்கு மாமியார் என்ற பயமோ, மரியாதையோ தோன்றாமலேயே போய்விட்டது.
மாலினிக்கு முதலில் மாமியாரை தன்னிடம் வைத்துக் கொள்ள விருப்பமில்லை தான். மாலினியின் அம்மாதான், “வாயில்லாத பூச்சி மாதிரி இருக்குடி மாலு… மாப்பிள்ளையும் அம்மா மேலே உருகுகிறார்… கூட்டியாந்து வச்சுக்கோ… வேலைக்கும் ஆச்சு! வீட்டுக்கும் காவல்… பிடியை மட்டும் விட்டுடாதே…’ என்று தூபம் போட்டதும், மாமியாரை அழைத்து வந்து விட்டாள்.
ஒரு வேலை கிடையாது மாலினிக்கு, ஆபிஸ் கிளம்புமுன்னே, சாப்பாடு தயாராக ஹாட்பேக்கில் டைனிங்டேபிளில், ரெடியாக இருக்கும், சாயந்திரமும் கூட அப்படிதான். சுடச்சுட காபியும், டிபனும் வரவேற்கும். ராத்திரி சமையலுக்கு கூட, மாலினி கிட்டே வர மாட்டாள்.
ஆனாலும், அம்மாவின் பிடியை விடக்கூடாது என்ற மந்திரச் சொல்லில் கட்டுப்பட்டவளாய், அவ்வப்போது வார்த்தைகளில் அமிலத்தை ஊற்றுவாள். வள்ளியம்மையும், இவள் குணம் தெரிந்து அமைதியாகி விடுவார். இரு கை தட்டினால் தானே ஓசை.
மாலினி, யாரிடமும் வள்ளியம்மையை தன் மாமியார் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. வள்ளியம்மையும் யாராவது வந்து விட்டால், சமையலறையை விட்டு வெளியே வரமாட்டாள்.
அன்றும் கூட அப்படித்தான்… வந்திருந்தவர்களின் யாரோ, “சாப்பாடு சூப்பர்! கிராமம் மாதிரி இருக்கே, எனக்கும் நம்பிக்கையான ஆள் கிடைத்தால் தேவலை…’ என்று சொல்ல, மாமியார் என்று அறிமுகம் செய்து வைக்க மனசு வராமல், “ஆமா, ஆமா… வில்லேஜ்தான்… வேலைக்கு வீட்டோடு வைத்து இருக்கிறோம்…’ என்று பட்டும்படாமல் மழுப்பி வைத்தாள்.
ஆனால், அதை இந்த வாண்டு கவனித்து, தன் அம்மாவையே, தன் வீட்டுக்கு வந்த வகுப்புத் தோழனுக்கு இப்படி அறிமுகப்படுத்தும் என்று கண்டாளா என்ன? அரை மணி நேரம் போனில் அம்மா, வறுத்து எடுத்து விட்டாள்.
“”அம்மா… உன்னோட அம்மாவைச் சொன்னதும், உனக்கு இத்தனை கோபம் வருதே! நீ பேசினதைக் கேட்டால், அப்பாவுக்கு எத்தனை கோபம் வரும் சொல்லும்மா?” முரளியின் கேள்வியில் மாலினி, திக்குமுக்காடிப் போனாள். கோபமா… குடித்தனமே ஆடிப்போகாதோ?
“”நீ… சர்வன்ட் மெய்டுன்னு சொன்னதைக் கேட்டுட்டு இருந்த வள்ளிப் பாட்டிக்கு, மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? தினதுக்கும் பாட்டி எத்தனை வேலை செய்றாங்க… ஸ்கூல்லருந்து வந்ததும் பாட்டி எங்கிட்டே எவ்வளவு பாசமா எல்லாம் செய்றாங்க…
“”அவங்களை நீ இப்படி பேசுறது, எனக்கு புடிக்கலை! வள்ளிப்பட்டி எவ்வளவு நல்லவங்க தெரியுமா? அன்னிக்கு நீ பேசுவதை கேட்டு ஒரே கோபம் கோபமா வந்தது எனக்கு… அப்பா வரட்டும் சொல்லணும்ன்னு இருந்தேன்…
“”வள்ளிப் பாட்டிதான் அப்படியெல்லாம் அம்மா பத்தி சொல்லக் கூடாது; தப்புன்னாங்க… இதையெல்லாம் சொன்னா வீணா சண்டை வரும். வேண்டாம்னுட்டு என்கிட்டே பிராமிஸ் வாங்கிட்டாங்க. ஏம்மா… ஏம்மா… நீ இப்படி ட்ரீட் பண்றே!
“”பாட்டிக்கு நம்மை விட்டா யாரும்மா இருக்காங்க? ஏம்மா நீ கண்டபடி பேசுறே, திட்டுறே! நீ இப்படி நடந்துக்கறது எனக்கு பிடிக்கலை… உன்னை புடிக்கலை… ஷீ இஸ் மை கிராண்ட்மா; ஐ லவ் ஹர். ஐ ஹேட் யூ மம்மி… ஐ ஹேட் யூ! ஐயாம் அஷேம்ட் ஆப் யூ!”
முரளி ஆங்காரமாய் ஆரம்பித்து, அழுகையில் முடித்தான். சோபாவில் மடங்கி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தான். அந்த அழகான முகம், அழுகையில் அதுங்கியது. அந்த சின்ன மனசுக்குள் இத்தனை கஷ்டமா?
பார்த்துக் கொண்டேயிருந்த மாலினிக்கு, தன் மீதே கோபம் வந்தது. “சே… படித்து வேலைக்கு போய், நாகரிகம் தெரிந்தவளாக இருந்து என்ன பிரயோஜனம்? அத்தனை பெரியவளை… அதிலு<ம் கணவனை பெற்றவளை, கணவனை இழந்து ஒற்றை மனுஷியாய், வைராக்கியமாய் மகனை படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்தவளை... தான் நடத்திய விதம்... சே... சே... அதுவும் அவர் தோற்றத்தை தான் வெறுத்தது... அது இறைவனையே பழிப்பது போல் அல்லவா... தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்தியது! அவளுக்கும் அழுகையாய் வந்தது. மனசுக்குள் ஏதோ படக் கென்று உடைப்பெடுத்தாற் போலிருந்தது. அழுது கொண்டிருந்த மகனின் காலடியில், சரிந்து உட்கார்ந்து, அவன் கால்களை கட்டி அழுதாள். மனசுக்குள் இருந்த அழுக்கெல்லாம் கரைந்து, கழுவிய வீட்டுக்குள் ஏற்றி வைத்தச் சுடர் மாதிரி வெளிச்சம், மனசுக்குள் அலையடித்தது. ""தப்பு தாண்டா முரளி... தப்புதான் கண்ணா!'' மாலினி அழுதாள். காதுக்குள் மகனின், "ஐ ஹேட்யூ மம்மி!' என்ற அதுங்கிய குரல் பேரோசையாய் ஒலித்தது. ""மம்மி... டோண்ட் க்ரை மம்மி... பாட்டியை இனிமே அப்படி பேசாதே!'' முரளியின் சின்ன தளிர் விரல்கள், மாலினியின் கண்ணீரை துடைத்தன. ""இனிமே அப்படி பேச மாட்டேன்டா கண்ணா, சாரிடா... ஐ ஆம் சாரிடா!'' அவன் கண்களை அவள் துடைத்தாள். இருவரும் ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டனர். முரளி தன் தாயின் கன்னத்தில், "பச்'சென்று முத்தமிட்டான். முரளி, முரளிக் கண்ணா... விபூதி இட்டுக்கப்பா! ஓடிவந்த பேரனின் நெற்றியிலிட்டு, கண்களுக்கு மேலாய் விரல்களால் தடுப்பு கட்டி வாயால் ஊதினாள். திடும்மென காலில் சரிந்த மருமகளைக் கண்டதும் திடுக்கிட்டு, பின் வாங்கினாள் வள்ளியம்மை. ஒன்றும் புரியாமல், தன் காலில் மாலினி விழுந்தாளா இல்லை தடுமாறி தன் கால் அருகில் விழுந்து வைத்தாளா? கடவுளே... மிரண்டு போனது மனசு! ""பாட்டி... அம்மாவை தூக்கி பிளெஸ்... பிளெஸ்... அதான் ஆசிர்வாதம் பண்ணு பாட்டி...'' என்று பேரன் உ<லுக்கியதும், நினைவு மீண்டவளாய், மிரட்சியுடன் குழறலாய், "" நல்லாயிரும்மா நல்லாயிரும்மா... எந்திரி!'' என்றாள். ""என்னை மன்னிச்சிடுங்க அத்தை! '' ""அத்தை... அத்தைன்னா சொன்னே மாலினி?'' வள்ளியம்மைக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ""ஆமா அத்தை. என்னை மன்னிச்சிடுங்க!'' ""எதுக்கு... எதுக்கு...'' என்றவளுக்கு, பதில் சொல்லவில்லை மாலினி.'' வள்ளியம்மைக்கு புரியவில்லை. கையில் இருந்த விபூதியையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தார். ""எனக்கும் இட்டு விடுங்க அத்தை...'' என்றாள். மருமகளின் இந்த மாற்றம், அந்த மூதாட்டிக்கு சந்தோஷம் தந்தது. முருகன் படத்தை பார்த்து கண்மூடி கைகுவித்தாள். தகப்பன் சாமியாய் முரளி சிரித்தான். "தம்ஸ் அப்' என்பது போல கட்டை விரலைக் காட்டி, அரிசிப் பற்கள் தெரிய அம்மாவைப் பார்த்து,"ஐ லவ் யூ மம்மி' என்று சொல்லி, கண்ணடித்துச் சிரித்தது அந்த வாண்டு. - அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “தகப்பன் சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *