டைட்டில் கார்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 9,651 
 
 

கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது.

குடும்பமே துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் செல்போனுக்கு ஒரு வீடியோ கால்! குழந்தை பற்றிய தகவலாக இருக்கும் என்று பதறிப் போய் பார்த்தார் கோடீஸ்வரன் கோமதி நாயகம்!

“ஐயோ!…. அம்மா!….எனக்கு பயமா இருக்கு !” என்று கத்தி கதறிய குரல் அவரின் அருமை பேத்தி சித்ரலேகாவின் குரல் தான்!

அவரை சுற்றி நின்று கோமதி நாயகத்தின் குடும்பமே அந்த வீடியோவை பார்த்து!க் கொண்டிருந்தது! ஒரு வீட்டின் நான்காவது மொட்டை மாடி! கைப் பிடி சுவரை ஒட்டி ஒரு தடியன் நின்று கொண்டு வெளி பக்கம் சித்திரலேகாவின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு தலை கீழாக தொங்க விட்டிருந்தான்.

வெளிப் பக்கம் அதல பாதாளத்தில் இருக்கும் ரோட்டைப் பார்த்தபடி சித்ரலேகா பீதியில் “ஐய்யோ! …அம்மா!… எனக்கு ரொம்ப பயமாக இருக்கு!…” என்று கதறுகிறாள்!

அந்த வீடியோவைப் பார்க்கப் பார்க்க அந்தக் குடும்பம் செத்துக் கொண்டிருந்தது! “ மிஸ்டர்! கோமதி நாயகம்!… உங்க வீட்டிலிருந்து போலீஸூக்கு தகவல் போனதாக எனக்கு ஏதேனும் செய்தி வந்தா… என் நண்பன் உன் பேத்தியின் கால்களை விட்டு விடுவான்….. அப்புறம் சிதறு தேங்காய் கதி தான்! …ஜாக்கிரதை!..”

“ டேய்!… தயவு செய்து அப்படி எதுவும் செய்து விடாதே!… நீ சொன்னதைச் செய்கிறேன்..”

“ உன் சின்னப் பொண்ணு காலேஜூக்குப் போகுமே… அந்தப் பொண்ணு நல்லா கார் ஓட்டும்… அவ கையில் ஒரு சூட் கேஸில் ஒரு இருபது லட்சம் போட்டு அவளை மருத மலை அடி வாரத்திற்கு அனுப்பு! அவள் கார் எடுப்பதிலிருந்து எங்க ஆட்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்!.. ஏதாவது வழியிலேயே ஒரு இடத்தில் எங்க ஆள் கைகளுக்கு அந்த சூட் கேஸ் வந்து விடும்! அதன் பின் உங்க பேத்தி பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவாள்…..வயசு பெண்ணை தனியா அனுப்பும்படி சொல்கிறானே…. என்றெல்லாம் பயப்படாதே!… நாங்க நேர்மையான கடத்தல் கும்பல்!..உங்க பொண்ணுக்கோ…பேத்திக்கோ எந்த சேதமும் இருக்காது …இதெல்லாம் ஒரு சேப்டிக்குத் தான்!..”

“சரியப்பா!… இன்னும் ஒரு மணி நேரத்தில் என் பொண்ணு சூட்கேஸுடன் மருத மலை நோக்கி கிளம்பி விடுவாள்!… என் பேத்தி பயத்தில் மயக்கம் போடாமல்.. சாப்பிட ஏதாவது கொடுங்கப்பா!.”. என்று கெஞ்சினார் கோமதி நாயகம்!

சாயிபாபா காலனி. கோவை சில்ஸ் ஜவுளிக் கடை அதிபர் முருகநாதன் வீட்டில் ஒரே களேபரம். காலையில் அருகில் இருந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்குப் போன ஆறு வயசு மகன் வீடு திரும்ப வில்லை! அவன் சரியான குறும்பு. சிறுவனைக் கூட்டி வர ஒரு ஆயாவை நிமித்திருந்தார்கள். சரியாக பனிரண்டு மணிக்கு ஸ்கூல் விடுவார்கள்! ஆயா கேட்டில் நின்று குழந்தை கதிரேசனை அழைத்துக் கொண்டு வந்து விடுவாள்..

ஆயா அன்று ஸ்கூலுக்கு பத்து நிமிஷம் தாமதமாகப் போய் விட்டாள். அங்கு குழந்தை இல்லை! அக்கம் பக்கம் தேடி ஒரு பிரயோசனமும் இல்லை!
குழந்தை கடத்தல் கொஞ்ச நாளாக கோவையில் அடிக்கடி நடப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதை நினைக்கும் பொழுது முருநாதனுக்குப் பயமாக வேறு இருந்தது!

அந்த நேரத்தில் ஒரு வீடியோ கால்!

“என்ன முருநாதன்!.. நீங்க நினைச்சது ரொம்ப சரி!…உங்க பையன் எங்க வசம் தான்! … எங்க டிமாண்ட் வழக்கம் போல் இருபது லட்சம் தான்!.. பணத்தை ஒரு சூட்கேஸில் போட்டு ரெடியா வச்சிருங்க…எங்கே கொண்டு வருவது என்று அப்புறம் சொல்கிறேன்… நம்பிக்கை இல்லையா?…உங்க பையனைப் பார்க்க வேண்டுமா?… …கேமிராவில் அவர் குழந்தை கதிரேசன் வருகிறான். ஒரு கோடவுனில் அவன் கை கால்கள் எல்லாம் வடக் கயிற்றால் கட்டிப் போட்டு கிடக்கிறான்…. ‘என்னை…அவுத்து விடுங்கடா!…’ என்று அவன் சத்தம் போடுகிறான்.. ஒவ்வொரு சத்தத்திற்கும் ஒருவன் சிகரெட்டை ஊதி ஊதி அவன் தொடையில் சூடு போட்டுக் கொண்டே இருக்கிறான்.. ‘ஐயோ! எரிச்சல் தாங்க முடியவில்லையே!”.. என்று கதிரேசன் கதறுகிறான்.

முருகநாதனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை!

“பணம் ரெடியாக இருக்கு….. எங்கு கொண்டு வருவது? ..”

“அதுதான் புத்திசாலித்தனம்! எங்கு எப்படி என்று அப்புறம் சொல்கிறோம்!..போலீஸூக்குப் போக நினைத்தால் கை ..கால் தனித்தனி பார்சலாக வீட்டு வாசலில் கிடக்கும்!…” என்று சொல்லி விட்டு போனை ‘கட்’ செய்து விட்டார்கள்!

ஆர். எஸ். புரம் மில் அதிபர் சுந்தரத்தின் பங்களா. மாலை நேரம். வீட்டில் ஒரே பதட்டமான சூழ்நிலை!

சுந்தரத்திற்கு ஒரு வீடியோ கால்! அதை எடுத்துப் பார்த்தார். அவருடைய ஐந்து வயசு பேத்தி பரிமளாவை ஒருவன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் விடுகிறான். தண்ணீர் வாய் வரை வருகிறது “ஐயோ! அம்மா!…” என்று அவள் கதறுகிறாள். அப்பொழுது சிறுமியை நெற்றி வரை தண்ணீருக்குள் மூழ்க விட்டு மறு நொடியில் அவளை மேலே இழுத்துக் கொள்கிறான். அந்த வீடியோவை பக்கத்தில் இருந்த பார்த்த மனைவி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள்!

அவசர அவசரமாக “பணத்தை எங்கு கொண்டு வருவது?…” என்று சுந்தரமே கேட்கிறார்! அவருக்கு வேறு வழி தெரியவில்லை! கோவை நகரில் கடந்த நான்கு மாதமாக இது ஒரு தொடர் கதையாக இருக்கிறது!

அந்த குழந்தை கடத்தல் கும்பல் பலம் பொருந்திய புத்திசாலி கும்பல்! அவர்களின் வீடியோவில் அந்த மிரட்டல் காட்சிகள் மட்டும் இடம் பெறும்! அது முடிந்த மறு நிமிடமே குழந்தைகளுக்கு தேவையானவற்றைக் கொடுத்த குழந்தைகளைச் சமாதானப்படுத்தி, ஆறுதல் சொல்லி வைத்திருப்பார்கள்!

அவர்களுக்குத் தேவை இருபது லட்சம். அவர்கள் செய்யும் தொழிலுக்கு உரிய தர்மத்தை கடைப் பிடிக்கிறார்கள்! அவ்வளவு தான்! பணம் கைக்கு வந்ததும் எந்த சேதாரமும் இல்லாமல் குழந்தைகளை பத்திரமாக வீடு கொண்டு சேர்த்து விடுவார்கள்!

சிங்கம் சினிமாவில் “நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு…” என்று வித்தியாசமான மீசையோடு சூர்யா வருவதை எல்லோரும் பார்த்திருப்பார்கள்! அதே போல் ஒரு போலீஸ் அதிகாரி கோவைக்கு மாற்றலாகி வருகிறார். இந்த கடத்தல் கும்பலை ஒடுக்குவதற்காகவே அவருக்கு அரசு கோவைக்கு மாறுதல் கொடுத்திருந்தது!

அவர் பொறுப்பேற்ற இரண்டே மாதங்கள்! பல டீம்கள் போட்டு வித விதமான வலைகள் விரித்து அந்த கும்பலை கூண்டோடு பிடித்து விட்டது போலீஸ்!

அந்த கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் கையாண்ட ஒவ்வொரு வழிகளுமே கிரைம் மன்னன் ராஜேஸ் குமார் நாவல்களை நினவு படுத்தின!

காவல் துறை அந்த கடத்தல் கும்பலை சேர்ந்த தலைவனை கைது செய்து இழுத்துக் கொண்டு போவதுடன் ‘கடத்தல் கும்பல்!’ என்ற திரைப் படத்திற்கு சுபம் போட்டு விட்டார்கள்!
படம் முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் தன் மனைவி சுஜாதா, மகள் ஆனந்தியைக் கூட்டிக் கொண்டு போய் காரை தியேட்டரிலிருந்து வெளியில் எடுத்தான்.
எப்பொழுதுமே கோபால கிருஷ்ணனுக்கு திகில், விறு விறுப்பு நிறைந்த திரைப் படங்கள் தான் பிடிக்கும்!

‘கடத்தல் கும்பல்!’ படம் ரீலீஸ் ஆனவுடன் நல்ல வரவேற்பு இருந்தது! அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக் கொண்டிருந்தது! கோபால கிருஷ்ணன் பல வேலைகளை ஒத்திப் போட்டு விட்டு அன்று அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தான்.

கார் வீட்டை நோக்கிப் போய் கொண்டிருந்தது. ஆனந்தி மெதுவாக கேட்டாள்! அவளுக்கு ஒன்பது வயசு தான் ஆகிறது..அவள் எதைக் கேட்டாலும் அதில் அர்த்தம் இருக்கும்!

“ அப்பா!… எனக்கு ஒரு சந்தேகம்?..”

“ சொல்லுடா கண்ணு!…”

“ படம் நல்ல வர வேண்டும் என்று ஒரே காட்சியை சினிமாக்காரங்க திரும்பத் திரும்ப எடுப்பாங்கனு சொல்லறாங்க….. அப்படினா ஐந்தாவது மாடியிலிருந்து ஒரு குழந்தையின் இரு கால்களையும் பிடித்து தலை கீழாகத் தொங்க விடும் காட்சியில், அந்த குழந்தை கதறும் காட்சி நல்லா வர வேண்டும் என்று ஐந்தாறு முறை தொங்க விடுவாங்க!…அப்படித் தானே?.. அதே மாதிரி தொட்டித் தண்ணீருக்குள் முழுவதும் மூழ்கடிக்கும் சிறுமியையும் காட்சி நல்லா வர வேண்டும் என்று நாலைந்து முறை மூழ்கடிப்பாங்க… அதை எல்லாம் நினைச்சு பார்க்கவே கஷ்மா இருக்குது அப்பா…

படம் ஆரம்பிக்கும் பொழுது இந்த திரைப் படத்தில் மிருகங்களை வதைக்கும் காட்சிகள் இல்லை என்று டைட்டில் கார்டில் போட்டார்கள்! ……அதே போல் குழந்தைகளையும் வதைக்கும் காட்சிகள் இந்த சினிமாவில் இல்லை என்று டைட்டில் கார்டில் போட்டா என்னப்பா?…”

கோபால கிருஷ்ணன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்! குழந்தைகளை வைத்து எடுக்கும் இந்த வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது, எதிர்காலத்தில் அப்படி ஒரு ‘டைட்டில் கார்டு’ போட வேண்டிய அவசியம் கூட நம் நாட்டில் வந்து விடுமோ?

– டிஜிட்டல் தீபாவளி மலர் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *