“ஹெல்மெட் போட்டுக்கோ, வண்டியை ஸ்ட்ராட் பண்ணறதுக்கு முன்னாடி ஸ்டேண்டை எடுத்துடு” அம்மா மனப்பாடமாய் ஒப்புவிப்பது போல் இருந்தது பிருந்தாவுக்கு.
அம்மா நீ டீச்சர் வேலையில இருந்து ரிட்டையர்டாயிட்டாலும், இன்னும் டீச்சராவே இருக்கே. நான் எப்பவும் கரெக்டா இருப்பேன்னு உனக்கு தெரியாதா? கொஞ்சலாய் அம்மாவிடம் சொல்லி விட்டு அம்மா சொன்ன எல்லா வேலை களையும் செய்து விட்டே வண்டியை எடுத்தாள்.
மகள் ஸ்கூட்டியில் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த யசோதாவுக்கு மகள் சொன்ன “எல்லாம் கரெக்டா செய்வேன்” என்று சொன்னது மனதில் வந்து வருத்தியது.
உண்மைதான், அவளின் கண்டிப்பு, வளைந்து போகாத தன்மை இவளுக்கு சமூகத்தில் நல்ல டீச்சர் என்று பேரை கொடுத்தாலும், அவளுக்கு என்று ஒரு வரன் அமைய மறுக்கிறதே. எதிர்பார்ப்பில்லாமல் எனக்காக திருமணம் செய்ய வரும் மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டுவேன் என்பது இந்த காலத்தில் நடக்க கூடிய காரியமா? பெருமூச்சுடன் உள்ளே வந்தாள். இத்தனைக்கும் காரணம் நான்தான். ஆரம்பத்திலிருந்து, நேர்மை, கண்டிப்பு இவைகளை இவள் மனதில் புகுத்தி புகுத்தி வளர்த்ததில் இவளுக்கு இதுவே வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறதோ?
வண்டியில் பறந்து கொண்டிருந்த பிருந்தாவுக்கோ நேற்று நடத்திய பாடத்தை இன்னைக்கு கிளாஸ்ல பசங்களுக்கு திரும்ப ஒரு முறை விளக்கமா சொல்லணும், நேத்தே நிறைய பேர் முகத்துல புரியாதது மாதிரி தெரிஞ்சுது” சிந்தனை இப்படி ஓடிக்கொண்டிருந்தது. பள்ளி காம்பவுண்ட் அருகே செல்லும்போது அந்த பரபரப்பிலும் சற்று தள்ளி காம்பவுண்ட் ஓரமாய் பள்ளி சீருடையுடன் ஒரு பெண்ணும், ஒரு பையனும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பையன் இவள் கையில் ஏதோ திணிக்க முயற்சிக்க இந்த பெண் சுற்று முற்றும் பார்த்து அதை வாங்க முயற்சித்தாள்
வண்டியை அப்படியே ஓரமாய் நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டி விட்டு யார் அந்த பெண் என்று உற்று பார்த்தாள். “சாந்தி” இவள் ஒன்பதாவது படிப்பவளாயிற்றே” இவர்கள் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுக்க போவதால் நன்றாக அடையாளம் தெரிந்தது.
“சாந்தி” பிருந்தாவின் குரலில் இருந்த ஆவேசம் அந்த பரபரப்பிலும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த பாதசாரிகளையும், மாணவ மாணவிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
இவளின் குரல் கேட்டவுடன் அந்த பெண்ணின் அருகில் நின்று கொண்டிருந்த பையன் அப்படியே விட்டு விட்டு ஓடினான்.அந்த பெண் திரும்பி பிருந்தாவை பார்த்தவள் மெல்ல பயந்து அவள் அருகே வந்தாள்.
யார் அது? இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கே? உன் கையிலே என்ன? ஆத்திரமாய் கேள்விகளை வீசினாள்.
எங்க சொந்தக்காரங்க,மிஸ் தயங்கி தயங்கி சொன்னவளின் கையில் இருந்ததை பிடுங்கி பார்த்தாள். அது ஒரு கசங்கிய பேப்பரில் கவிதை என்ற பெயரில்
அவளை வர்ணித்து எழுதப்பட்டிருந்தது.
“பளார்” பிருந்தாவின் கை அந்த மாணவியின் கன்னத்தில் விழ அவ்வளவுதான்
அங்கிருந்த அத்தனை பேரும் அப்படியே அதிர்ச்சியாய் அவர்கள் இருவரையும் பார்த்து நின்று விட்டனர்.
கன்னத்தில் வாங்கிய அறையில் பொறி கலங்கிய அந்த பெண் கண்களில் கண்ணீர் வழிய நின்றாள். “இப்ப கிளாசுக்கு போ” அப்புறமா என்னை வந்து பாரு, சொல்லிவிட்டு விறு விறுவென சற்று தள்ளி நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தாள்.
வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது தலைமையசிரியர் கூப்பிடுவதாக
அலுவலக உதவியாளர் கூப்பிட்டார். வகுப்பு முடிந்து ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லிவிட்டு பாடத்தை தொடர்ந்தாள்
தலைமையாசிரியர் அறையில் நான்கைந்து மாணவர்களும், இளைஞர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தனர். இவள் கேள்விக்குறியுடன் தலைமையாசிரியர் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தாள்.
நீங்க ஒரு ஸ்டூடண்ட்டை எல்லார் முன்னடியும் வச்சு அடிச்சுட்டீங்களாம்,
அதுக்காக நீங்க எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேக்கணுமாம்,
பிருந்தாவின் முகத்தில் இளநகை புரிந்தது, அது சரி சார், இவங்க நம்ம பசங்க, இவங்க கூட இருக்கறவங்க யாரு?
அவங்க ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்தவங்களாம்,
சரி அவங்களுக்கு இங்க என்ன வேலையாம்?
நீங்க ஒரு ஸ்டூடண்ட்டை ப்ப்ளிக்கா வச்சு அடிச்சிருக்கீங்க, நாங்க அதைய தட்டி கேக்கறதுக்கு வந்திருக்கோம், வந்திருந்த கூட்டத்தில் இருந்து ஒருவன் பேசினான்.
மன்னிக்கனும் இது எங்க விஷயம், ஆசிரியர் மாணவன் சம்பந்தப்பட்ட விஷயம்
எப்ப ரோட்டுக்கு வந்துடுச்சோ அப்ப அது பொது விஷயம் மறுபடி அந்த இளைஞன் பேசினான்.
தலைமையாசிரியர் ஏதோ பேச முயற்சிக்க இவள் சார் ஒரு நிமிசம் என்றவள்
மன்னிப்பு கேட்கலையின்னா?
போராட்டம் பண்ணுவோம், மாணவர்களை வெளியே வர சொல்லி மன்னிப்பு கேட்க வைப்போம்.
அதற்குள் வெளியே மாணவ மாணவிகளின் கூட்டம் பெரிதானது அதன் இரைச்சல் இங்கும் கேட்க தலைமையாசிரியர் உட்பட அனைவரும் வெளியே வந்தனர்.
தலைமையாசிரியருக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. அவருக்கு நன்றாக தெரியும், அந்த மாணவி ஏதோ தவறு செய்திருக்கிறாள், இல்லையென்றால் பிருந்தா அந்த இடத்தில் அப்படி நடந்திருக்க மாட்டாள்
கூட்டம் சேர சேர மாணவர்களின் கூட வந்திருந்தவர்களுக்கு உற்சாகம் வந்து விட்டது. பாத்தீங்கல்ல, எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுடுங்க, இல்லையின்னா இன்னும் பிரச்சினை பெரிசாயிடும்.
பிருந்தா ஒரு நிமிடம் அவர்களை உறுத்து பார்த்தாள். யார் இவர்கள்? இவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? கூடியிருந்த மாணவ மாணவிகளை பார்த்தாள். அவர்கள் முகத்தில் என்ன நடக்கிறது என்கிற ஆர்வம் மட்டுமே தெரிந்தது. இது போதும் இந்த கூட்டத்துக்கு, மேற்கொண்டு காய் நகர்த்த.
சரி மாணவ மாணவிகளை பார்த்து ஏதோ சொல்ல முயற்சித்தாள். அப்பொழுது “கொஞ்சம் நில்லுங்கம்மா”.. குரல் கேட்டவுடன் கூட்டம் திரும்பி பார்க்க நாற்பது வயது மதிக்கத்தகுந்த ஒருவரும் அவருடன் முப்பது வயது மதிக்கத்தகுந்த பெண்ணும் இருந்தனர். நாங்கதான் நீங்க அடிச்ச பொண்ணோட அப்பா, அம்மா. எங்களை கொஞ்சம் பேச விடணும்
கூட்டம் வழி விட அவர்கள் படியேறி தலைமயாசிரியர் அறை முன் வந்தனர்.
அங்குள்ள மாணவ மாணவிகள் கூட்டத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு முதல்ல இந்த பிரச்சினைக்கு என் பொண்ணு காரணமாயிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறோம்.
திரும்பி தலைமையாசிரிடமும், பிருந்தாவிடமும் கும்பிட்டனர். இருவரும் அதிச்சியாய் நின்றனர்.
குழந்தைகளே நான் இதே பள்ளியில படிச்சவன், இங்க இருக்காங்களே இந்த டீச்சரோட அம்மாதான் எங்களுக்கு டீச்சரா இருந்தாங்க. கண்டிப்புன்னா அப்படி ஒரு கண்டிப்பு, ஒழுக்கம், எங்களை எல்லாம் அப்படி நடத்துனாங்க, அப்படிப்பட்டவங்க கிட்ட இருந்த நான் இவங்களோட கண்டிப்பு தாங்காம இந்த பள்ளியை விட்டுட்டு பாதியில ஓடிட்டேன். இப்ப என்ன பண்ண்றேன், நானும் என் சம்சாரமும் ஒரு கடையில வேலை செய்யறோம். ரொம்ப கஷ்டப்படுறோம். இந்த நிலைமை என் பொண்ணுக்கு வந்துடக்கூடாதுன்னு வாயை கட்டி வயித்தை கட்டி படிக்க வைக்கிறோம்.
நான் செஞ்ச தப்பை என் பொண்ணு செஞ்சுடக்கூடாது, தயவு செய்து இந்த டீச்சரோட கண்டிப்புலதான் என் பொண்ணு படிக்கணும், தப்பு என் பொண்ணு பேர்லதான் இருக்குங்கறதை நாங்க வரும்போதே தெரிஞ்சுகிட்டோம்.
நாங்க அதுக்காக தலைமையாசிரியர்கிட்டேயும், இந்த டீச்சர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு, தயவு செய்து என் பொண்ணையும் மன்னிச்சு உங்களை மாதிரி படிச்சு பெரிய ஆளாக்கணும்னு வேண்டிக்கறேன். தாயும் தந்தையும் அந்த கூட்டத்தின் முன் கண்ணீர் விட்டு நின்றனர்.
கூட்டம் அப்படியே உறைந்து நின்றது. மாணவர்களுடன் நின்றிருந்த கூட்டம் சத்தமில்லாமல் வெளியேறி சென்றது.