ஜோசப் என்பது வினைச்சொல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,086 
 
 

ராமநாதனுக்குக் காலையில் எழுந்ததும் ஜோசப்பின் நினைவு வந்தது. வீட்டுக்குப் பின்னால் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் மணி ஒலிப்பது, காலை நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டது. ‘ஜோசப்பை இன்றாவது எனக்குக் காட்டு, கடவுளே!’ என அவரது மனம் வேண்டிக்கொண்டது அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை கிறிஸ்துவிடம் அவர் எதுவும் வேண்டிக்கொண்டது இல்லை. ஆனால், அவர் மனைவி கமலமும் மகள் சாவித்திரியும் செவ்வாய்க்கிழமைகளில் புலியகுளம் அந்தோணியார் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக்கொண்டு இருந்தனர். அங்குதான் சாவித்திரி ஆண்டனியைச் சந்தித்தாள். சாவித்திரியின் நினைவு வந்ததும், ராமநாதனின் வாய் ‘ஓடுகாலி’ என்று முணு முணுத்தது.

சொடக்குப் போடும் நேரத்தில், அது நடந்துவிட்டது. ஏதோவொரு மயக்க நிலை. எதிரே எம வேகத்தில் ஒரு லாரி வருவது, கானல் நீர் நெளிவது போலத் தெரிந்தது. இன்னும் ஒரு எட்டு வைத்திருந்தால், விழுந்துவிட்டிருப்பார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எத்திசையிலிருந்து தோன்றினான் என அறுதியிட்டுக் கூற முடியாதபடி வந்த அவன், ராமநாதனை ஓரமாக இழுத்து நடைபாதையில் தள்ளிவிட்டுத் தானும் அப்பால் விழுந்தான்.

மெதுவாக எழுந்து உட்கார்ந்தபோது, யாரோ தண்ணீர் பாட்டிலை நீட்டினார்கள். தான் உயிரோடு

இருப்பதை நம்ப முடியாதவராகச் சுற்றிலும் பார்த்தார் ராமநாதன். கண்களில் பீதி இன்னும் மிச்சமிருந்தது. தன்னால் பேச முடியுமா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது. அப்போதுதான் அவனை முழுசாகப் பார்த்தார். கையெடுத்துக் கும்பிட்டார்.

‘‘லாரியைக் கவனிக்காம வந்துட்டீங்க சார்!’’

‘‘ம்… காலையில சாப்பிடலை. அதான், சர்க்கரை குறைஞ்சு லேசா கிறுகிறுப்பு வந்துருச்சு!’’

‘‘வாங்க சார், சூடா டீ சாப்பிடலாம்!’’

‘‘வேணாம்ப்பா! கொஞ்சம் குளூக்கோஸ் சாப்பிட்டா சரியாகிடும்’’ என்றவர், ‘‘உம் பேர் என்ன?’’ என்றார்.

‘‘ஜோசப் சார்!’’

‘‘என்ன செய்யறே?’’

‘‘வேலை தேடிட்டிருக்கேன் சார்!’’

அவனுக்குப் பிரதியுபகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தது. பாக்கெட்டில் ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளே இருந்தன. பெரிய நோட்டு ஏதாவது ஒளிந்திருக்கிறதா என்று தேடினார். ஏதோ தேவைக்காக எடுத்து வைத்திருந்த வங்கி காசோலை கையில் தட்டுப்பட்டது. மின்னல் கீற்றாய் அவருக்குள் ஒரு வெளிச்சம். உடனே, அதில் ‘ஜோசப்’ என்றெழுதிக் கையெழுத்திட்டு, அவனிடம் நீட்டினார்.

‘‘எவ்வளவு வேணுமோ, எழுதிக்க!’’ என்று உணர்ச்சி மேலிடச் சொன்னார்.

‘‘வேணாம் சார், ப்ளீஸ்!’’

‘‘ஒரு நொடி, ஒரே ஒரு நொடி நீ தாமதமா வந்திருந்தாக்கூட, நான் இப்படி நின்னு உங்கூட பேசிட்டிருக்க முடி யாது. இதுக்காக நான் ஏதாவது செஞ்சே ஆகணும். வாங் கிக்க!’’

ஜோசப் மறுக்க மறுக்க, காசோலையை அவன் பாக்கெட்டில் திணித்தார். ‘‘வேற ஏதா வது உதவி வேணும் னாலும், தயங்காம வீட்டுக்கு வா!’’ என்று விசிட்டிங் கார்டைக் கொடுத்தார்.

‘‘என்ன இருந்தாலும், இப்படியா பிளாங்க் செக் கொடுத்துட்டு வருவீங்க?’’ என்று கமலம் கேட்ட போது சுருக்கென்று இருந்தது ராமநாத னுக்கு.

‘‘ஏன், அதுக்குப் பதிலா லாரியிலேயே அடிபட்டுச் செத்துப் போயிருக்கலாங்கிறியா?’’ என்றார்.

‘‘ஐயோ கடவுளே! நான் அந்த அர்த்தத்துல சொல்லலீங்க’’ என்று கமலம் பொலபொல வென்று கண்ணீர்விட, ‘‘ஒரு லட்சத்துக்கும் மேல அக்கவுன்ட்ல இருக்குப்பா! அத்தனையும் எடுத்திட்டான்னா என்ன செய்வீங்க?’’ என்று முணுமுணுத்தான் மகன் பாலு.

‘‘நான் சொல்றேன்னு கோபப்படாதீங்க. யாரோ பெத்த பிள்ளை, தன் உசுரைக்கூடப் பெரிசா மதிக்காம உங்களைக் காப்பாத்தியிருக்கான். கண்டிப்பா அந்தப் பையனுக்கு நாம ஏதாவது உதவி செய்யணும்தான். வேலையில்லாத வன்னு சொல்றீங்க. ஒரு வேலை வாங்கிக் கொடுக் கலாம். ஆயிரமோ, ரெண்டாயிரமோ கொடுக்கலாம். பாலு என்ன சொல்றான்னா…’’ & சற்றே நிறுத்தி, கணவனின் முகத்தைப் பார்த்தாள். கோபத்தின் அறிகுறிகள் இல்லாதது கண்டு, திருப்தியுற்றவளாகத் தொடர்ந்தாள்.

‘‘அக்கவுன்ட்ல ஆயிரமோ ரெண்டாயிரமோ வெச்சுட்டு, மீதியை வேற அக்கவுன்ட்டுக்கு மாத்திடலாம்னு சொல்றான். எனக்கும் அதுதான் சரின்னு படுது. லட்சம் ரூபா கொடுக்குற அளவுக்கு நமக்கு வசதியிருக்கான்னு நீங்களும் யோசிச்சுப் பாருங்க. கஷ்டப்பட்டு நீங்க ஒவ்வொரு காசா மிச்சம் பிடிச்சு சேர்த்தது!’’

ராமநாதன் யோசித்தார். மனைவியும் மகனும் சொல்வது சரிதானா? நான்தான் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனோ? ஏதாவது ஒரு தொகையை நானே என் கைப்பட அதில் எழுதிக் கொடுத்திருந்தால், இவ்வளவு அவஸ்தை இல்லையோ?!

கணக்கில் வெறும் மூவாயிரம் ரூபாயை மட்டும் வைத்துவிட்டு, மீதியை வேறு அக்கவுன்ட்டுக்கு மாற்றியது, ஒரு வகையில் ஜோசப்பை தான் ஏமாற்றிவிட்டதான குற்ற உணர்ச்சியை அவருக்குள் விதைத்தது. ஜோசப் என்கிறவன் வந்தானா, எவ்வளவு பணம் எடுத்தான் என தினம் தினம் வங்கியை விசாரித்தார். இல்லை. அவன் வரவே இல்லை.

இப்படியே நாற்பது நாட்களுக்கும் மேல் ஓடி விட்டபோதுதான், ஜோசப்பைத் தேடிக் கண்டு பிடித்து விடவேண்டுமென்ற ஆவல் ராமநாதனுக்குள் எழுந்தது. முகவரி வாங்கிக்கொள்ளாத தனது முட்டாள்தனத்தை நொந்துகொண்டார். சம்பவம் நடந்த பேருந்து நிறுத்தத்தில் தினமும் நின்று பார்த்தார். பலன் இல்லை. நாளாக ஆக, ஜோசப்பின் முகம் தன் நினைவுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது குறித்துக் கலக்கமுற்றார்..

கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு, உடனடியாக அவன் ஒரு கணிசமான தொகையை அவர் கணக்கிலிருந்து எடுத்துப் போயிருக்கலாம்தான். ஆனால், அவன் அப்படிச் செய்யாதது, ராமநாதனுக்கு அவன் மீதிருந்த மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. எப்படியும் அவன் ஒருநாள் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கை அவருள் பதிந்திருந்தது.

துடிசையம்பதி விருந்தீஸ்வரர் கோயிலில், அன்று கூட்டம் சற்று அதிகம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராமநாதனின் மனம் அமைதியாக இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கும்போது, ‘ஜோசப் பெயருக்கும் வாங்கு’ என்றார் கமலத்திடம். கமலம் ஆச்சர்யப் படவில்லை. புலியகுளம் அந்தோணியாரிடம்கூட அவள் இப்போதெல்லாம் ஜோசப்புக்கான வேண்டு தலையும் அவர் சொல்லாமலே வைத்திருந்தாளே!

அந்தோணியார் கோயில் என்றதும், மகள் சாவித்திரியின் நினைப்பு அவள் மனதில் எழுந்தது. நான்கு வருடமாகிவிட்டது சாவித்திரி ஆண்டனியைத் திருமணம் செய்துகொண்டு போய்! அதன்பின், கமலம் இதுவரை சாவித்திரியைப் பார்க்கப் போகவில்லை. பாலு மட்டும் அவ்வப்போது ‘அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், உன்னைப் பற்றி விசாரித்தாள்’ என்பான். கண்ணில் நீர் வழியக் கேட்டுக் கொள்வாள்.

‘‘இத்தனை பாசம் வெச்சிருக்கியே… ஒரு நாள் அப்பாவுக்குத் தெரியாம உன்னை அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?’’ என்றான் பாலு ஒருநாள்.

‘’வேண்டாம்டா! அவருக்கு ஏதோ ஒரு பிடிவாதம். பாசமா வளர்த்த தன்னை உதாசீனப்படுத்தி ஒதுக்கிட்டு, இடையிலே வந்த எவனையோ நம்பிப் போயிட்டாளேன்னு கோபம். அவ மூஞ்சியிலே இனி முழிக்கவே மாட்டேன்னுட்டார். இப்ப நானும் அவரை விட்டுட்டுத் தனியா போய் சாவித்திரியைப் பார்த்தேன்னா, நானும் அவளோட சேர்ந்துக்கிட்டு அவரை ஒதுக்கி வெச்சது மாதிரி ஆயிடும். அப்புறம் ரொம்பவும் உடைஞ்சு போயிடுவாரு. பாவம், வேண்டாம். விட்டுடு!’’

பிராகாரம் சுற்றி வந்து முன் மண்டபத்தில் உட் கார்ந்தனர். ‘‘பாலு, சாவித்திரியைப் பார்த்தானாம்’’ என்றாள் கமலம் மெதுவாக. அது யாருக்கோ சொல்லப் பட்டது போல எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தார் ராமநாதன். மதில் மேல் உட்கார்ந்திருந்த காகம் பறந்து செல்வதும், மறுபடி வந்து உட்காருவதுமாக இருந்தது.

‘‘ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வர்றாங்களாம்!’’

கமலம் இதை அனுமதி கேட்கும் விதமாக இன்றி, தகவலாக மட்டுமே சொன்னாள்.

‘‘உங்களுக்கும் எனக்கும் பழக்கமில்லாத யாரோ ஒரு பையன், உங்களோட உயிரைக் காப்பாத்தியிருக் கான். என்ன மதம்னு அப்ப அவன் உங்களைக் கேட்டானா, அல்லது நீங்கதான் பார்த்தீங்களா? உயிரோட மதிப்பு எல்லோருக்கும் சமமாதான் இருக்குது. சாவித்திரியும் ஆண்டனியை உயிருக்கு உயிரா நேசிச்சிருக்கா. மதம் அவளுக்குத் தெரியலே. ஜோசப் பேர்ல ஐயர் அர்ச்சனை செஞ்சாரே… கடவுள் ஒதுக் கிட்டாரா என்ன? நாம மட்டும் ஏன் சாவித்திரியை ஒதுக்கணும்?’’

அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆவல் கொண்டது போல், மதில் மேல் உட்கார்ந்திருந்த காகம் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

தயக்கத்துடன் பிறந்த வீட்டில் காலெடுத்து வைத்தாள் சாவித்திரி. உள்ளூற ஏதோவொன்று உடைந்து வழியக் காத்திருந்தது.

போர்டிகோவில் உட்கார்ந்திருந்த ராமநாதன் எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றார். சாவித்திரி இயல்பாக வீட்டுக்குள் நுழைந்து, ‘‘அம்மா’’ என்றாள். கமலம் சமையலறையில் இருந்து ஹாலுக்கு வந்து, கணவனைப் பார்த்ததும் சற்றே தயங்கி நின்றாள். சாவித்திரி ஓடி வந்து கட்டிக்கொண்டு விசும்பத் தொடங்கியதும், கமலத்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. ராமநாதனின் கண்களும் கலங்கியிருந்தாலும், இறுக்கமான பாவனையில் உட்கார்ந்திருந்தார்.

ஆண்டனி அவனாகவே சோபாவில் உட்கார்ந்துகொண்டான். பாலு முகமெல்லாம் சிரிப்பாக “வாங்க மாமா’’ என்று வந்தவன், அப்பாவைப் பார்த்ததும் மௌனமாக நின்றான்.

சாவித்திரியின் பையன் துறுதுறுவென்றிருந்தான். கமலத்திடம், ‘‘எங்க வீட்டுக்கு நீங்க வந்ததேயில்லையே… நீங்க யாரு?’’ என்று கேட்டான்.

‘‘உங்க வீட்டுல பஸ்ஸ§, காரு, லாரி, கரடி பொம்மையெல்லாம் இல்லியா?” என்றான் ராமநாதனைப் பார்த்து.

ராமநாதன் பதில் சொல்லவில்லை. அவன் விடாமல், ‘‘உங்களை மாதிரியே ஒரு போட்டோ எங்க வீட்டுல இருக்குது’’ என்றான்.

ராமநாதன் சிறுவனைத் திரும்பிப் பார்த்தார். அப்படியே சாவித்திரியை உரித்து வைத்திருந்தான். ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவனிடம் பேசத் தூண்டியது.

‘‘உம் பேர் என்ன?’’ என்றார்.

இதுவரை யாரிடமும் பேசாத அப்பா, தன் மகனிடம் பேசுவது கண்டு ஆச்சர்யப்பட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் சாவித்திரி.

‘‘ஜோசப்.’’

ராமநாதனுக்குள் ஏதோ ஒன்று பேரிரைச்சலோடு எழும்பி அடங்கியது. கண்களில் அதீத வெளிச்சம் பரவியது. மிகுதியான வாஞ்சை அச்சிறுவன் மீது சட்டெனப் பெருகி வழிந்தது. “என்ன சொன்னே… என்ன பேரு சொன்னே?” என்று படபடத்தார்.

சிறுவன் ‘‘ஜோசப்… ஜோசப்’’ என்று அழுத்தமாகச் சொன்னான்.

‘‘சாவித்திரி’’ என்றார் ராமநாதன்.

சாவித்திரி அந்தக் கணத்தில் எதுவும் பேசத் தோன்றாமல் நின்றிருந்தாள். ராமநாதன் மீண்டும் உரத்த குரலில், ‘‘சாவித்திரி’’ என்றதும், சுயநிலைக்கு வந்தாள்.

‘‘அப்பா!’’ என்றாள் நெகிழ்ச்சியான குரலில்.

அப்பா, மகள் உள்பட அங்கு அத்தனை பேரின் கண்களும் கசிந்திருந்தன.

– 29th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *