கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 2,484 
 

(1934ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

2-வது அதிகாரம் | 3-வது அதிகாரம் | 4-வது அதிகாரம்

பொறாமை தேவதைகள் புரியும் ஆட்சி 

சிந்தாமணி நல்ல அழகிய நங்கை! காண்போர் மனத்தைக் காந்தம்போல் இழுக்கும் சக்தி வாய்ந்த வனிதாமணியாய் விளங்கினாள். ஜெய ஸஞ்ஜீவி வைத்தியசாலையில் அவள் ஒர் ஏஜண்டாக நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் வாரம் ஒரு முறை அந்த கம்பெனிக்கு வருவதும், அங்கு மருந்துகளை வாங்கிக் கொள்வதும் வாங்கிய மருந்திற்குப் பணத்தை ஒப்புவித்து கணக்கைத் தீர்ப்பதுமாக விருந்தாள்! வாரம் ஒரு முறைக்குள் கொண்டுபோன மருந்துகள் செலவாகிவிட்டால் மத்தியில் வந்து எடுத்துச் செல்வாள். பொன்னம்மாளுக்கு இந்த பெண்மணியைக் கண்டால் நிரம்பவும் பிடித்தமாயிருந்தது. ஆதலால் அவளுக்குச் சரியான சம்பளமும், சுற்றுவதற்கான தனிச் செலவும் கொடுத்து வந்தாள். 

கடையில் விற்பனை செய்வதற்கு ஸ்திரீகளுக்கென்றே ப்ரத்தியேக இடம் வைத்து ஸ்திரீகளே அந்த வேலையைக் கவனிக்க வேண்டுமென்று ஒரு யோசனை தோன்றியதால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து பத்திரிகையில் பெண்கள் தேவை என்ற விளம்பரமும் செய்தார்கள். அந்த டிபார்ட்டுமெண்டிற்கு சிந்தாமணியையே மானேஜராக நியமித்தார்கள்; மொத்தம் 5 பெண்களே தமக்குத் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். மனுக்கள் கணக்கின்றி குவிந்துகொண்டே இருக்கின்றன. 

முன்னர் தாமோதரன் மீது கறம் வைத்துக் கோபமாகப் பேசிச் சென்ற தாண்டவராயன் கூட்டத்தினர்கள் தாமோதரனைப் பற்றி விசாரித்ததில் ஜெய ஸஞ்ஜீவி முதலிய அவுடதங்கள் தயாரிக்கும் முறைகளடங்கிய காகிதம் எப்படியோ கிடைத்துவிட்டதாயும், அதை அவன் தாயாருங்கூட உடந்தையாக விருந்து திருடிவிட்டாள் என்றும் அதனால் தான் இத்தனை உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டான் என்றும் விஷயம் அரைகுறையாய்த் தெரிந்து கொண்டார்கள்: அது முதல் எவ்விதமாவது முயற்சி செய்து அவனிடமிருந்து அந்த முறைகளைத் தாங்கள் அபகரித்துத் தாங்களும் இவ்விதம் செய்ய வேண்டுமென்ற துர்ப்புத்தி யுண்டாகி விட்டது. அதனால் அதைப் பற்றியே சதியாலோானை செய்து கொண்டிருந்தார்கள்: 

வெறும் வாயை மெல்லும் அவ்வைக்கு ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல இந்தக் கூட்டத்தினருக்கு தாமோதரன் செய்திருந்த விளம்பரம் வெகு ஆதாரமாகக்கிடைத்து விட்டது. அந்த விளம்பரத்தைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி கொண்டு அன்றிரவே ஓர் கூட்டங் கூட்ட ஏற்பாடு செய்து இரவு 10 மணிக்குக் குறிப்பிட்ட இடத்தில் கூட்டத்தையுங் கூட்டி விட்டார்கள். அக் கூட்டத்தின் தலைவனாகிய தாண்டவராயன் எழுந்து “நண்பர்களே! இக் கூட்டம் எதற்காகக் கூட்டி இருக்கிறோம் என்பது உங்கள் எல்லோருக் கும் தெரிந்த விஷயம். நம்முடனேயே சினேகமாக இருந்து, பல ஆண்டுகள் தின்று,கொழுத்துப் பின் நம்மை விரோதித்துக் கொண்டு சென்றதுமல்லாமல் நம்மை விலக்கி விட்டு அவன் நம்மிடம் கற்ற கொள்ளை யடிக்கும் வித்தையை உபயோகித்து ஜெயஸஞ்ஜீவி செய்யும் முறைக் காகிதத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து அதனால் பெரிய மனிதனாக விளங்கும் தாமோதரன் பணத்திமிரால் தான் முன்பு செய்து வந்த ஊழலையும்-நம் சினேகத்தையும் மறந்து அன்று எவ்வளவு உதாசீனமாகப் பேசினான் என்பது நீங்களறிவீர்கள். அந்தப் பயலைத் தலை எடுக்க வொட்டாமல் நாம் செய்துவிட வேண்டுவதுதான் நாம் அவனுக்குச் செய்யும் ப்ரதியாகும். இதற்கு இதோ இந்த விளம்பரமே நல்ல துணை யாயிற்று. 

நேயர்களே ! இப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்றால் நமது ஆசைக் கிழத்தி இந்திராணியை நாம் மறைமுகமாக நிறுத்தி இதற்கு ஓர் மனு போடச் செய்து எப்படியாவது அந்த ஜெய ஸஞ்ஜீவி வைத்திய சாலையில் வேலைக்கு அமர்த்திவிட வேண்டும். இந்திராணியைப் போன்ற கெட்டிக்காரியை இனி உலகில் இவளைப் படைத்த கடவுளாலேயே சிருஷ்டிக்க முடியாது என்பது நிச்சயம்.. 

(சபையில் கை கொட்டலும், ஆரவாரமும் பலக்கிறது) இவள் தற்காலத்திற்கேற்ப ஆங்கிலமும் படித்திருக்கிறாள்; நல்ல யூக சக்தி யுடையவள்; ஆகையினால் இக் காரியத் திற்கு இவளே சரியான ராணியாவாள். இப்போது தாமோதரன் இருக்கும் நிலைமைக்கு நாமும் வந்து விடலாம்; பிறகு போலீஸாரிடம் அகப்பட்டுச் சாகும் விதியை வென்று விடலாம். 

இந்திராணீ! விஷயந் தெரிந்தா ! அங்கு உனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும்படிக்குச் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உன் ஜால வித்தை முற்றும் காட்டி, நீ பெரிய குடும்பத்துப் பெண் போல நடித்து, தாமோதரனைக் கண்டு காதல் கொண்டலைதல்போல அபிநயித்து, அவனை உன் வலையில் போட்டுச் சிக்க வைத்த பின்னர் அவனிடத்திலிருந்து அந்த ப்ளானை எப்படியாவது அபகரித்துக் கொண்டு வரவேண்டும். அந்த முறைகள் அவனிடமாவது அவன் தாயாரிடமாவது தான் சதா இருக் கின்றனவென்று கேள்வி. அந்த கடிதத்தை எப்படியாவது கண்டு பிடித்து அடித்துக் கொண்டு வந்துவிட வேண்டும். அப்படி அதைக் கொண்டு வந்து விட்டால் அந்த முறையைக் கொண்டு நாம் தயார் செய்து அந்த கம்பெனியையே இந்திராணியின் பேரில் ரிஜிஸ்டர் செய்து விடலாம். (கரகோஷம்) என்ன சொல்கிறாய்! கண்ணாட்டீ ?” என்று மழை பெய்து ஓய்ந்ததுபோலக் கூறினான். 

அடுத்த நிமிடமே “அண்ணாத்தே! நீ சொல்றதுதான் சரி ! இதை நாங்கள் எல்லோரும் ஆமோதிக்கிறோம். அந்த தாமோதரனைச் சரியானபடி மட்டந் தட்ட வேண்டும். இல்லா விட்டால் நம்மைச் செய்த அவமானத்திற்குத் தக்க சிக்ஷை செய்ததாகாது.” என்று மற்றவர்கள் ஆரவாரித்தார்கள். இந்திராணி எழுந்து நின்று “என்னாசை நேசர்களே! இக் காரியத்தை நான் செய்வது ஒரு பெரியதே யல்ல. இதை ஒரு நொடியில் செய்து விடுகிறேன்; எனக்கு அந்த சாமர்த்தியங்கூட இல்லையா! இதைப் பற்றிக் கவலையே வேண்டாம். முதலில் இதற்கு ஓர் காரியம் செய்ய வேண்டும். அதாவது எனக்குச் சொந்தமாக சில வைர நகைகளும் உயர்ந்த ஆடைகளும் முதலில் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் என்னைப் பார்க்கும்போதே ஓர் பெரிய சீமாட்டியின் மகள் – செல்வச் சீமாட்டியைப் போல, இளைய ஜெமீந்தாரிணியைப் போல – இருக்க வேண்டும். அப்போதுதான் என்னை அவர்கள் முற்றிலும் சந்தேகமே இன்றி நம்பக் கூடும். இல்லையேல் அல்ப மனுஷி என்று எண்ணி விட்டால் பெரிய மோசமாகி விடும். 

மேலும் நான் வேலைக்குப் போவது என்னுடைய தொழிலுக்கு என்று நான் கூறப் போவதில்லை. “என்னுடைய பொழுது போக்கிற்காகவும், தமாஷுக்காகவும் நமது சகோதரிகளுக்கு தேக ஆரோக்கியத்தை யுண்டாக்க உதவி செய்யவும் தான் இங்கு வந்தேன்” என்று கூறப் போகிறேன். அதற்குத் தகுந்த அந்தஸ்திலிருக்க வேண்டுமல்லவா! ஆதலால் நாளையே இந்த ஏற்பாட்டைச் செய்யுங்கள்; மனுவும் எழுதிப் போட்டு விடுவதோடு நானே நேரிலும் பார்த்து விட்டு வருகிறேன்.” என்றாள். 

இந்த ரஸமான யோசனையை எல்லோரும் அங்கீகாரம் செய்தார்கள். இன்னும் அனேக தீர்மானங்கள் நிறைவேறின. அதன் பிறகு மதுபானம் வழங்கப் பட்டது; கூட்டமும் கலைந்தது. மீண்டும் தாண்டவராயன் இந்திராணியைத் தட்டிக் கொடுத்து “கண்ணே! ஜாக்ரதை. அந்தப் பயலை ஒரு அறை விட்டு நான் இதைக் கைப்பற்றி விடுவேன்; ஒரு கால் அது எக்கச் சக்கமாகிப் போலீஸாரிடம் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தால் கஷ்டமாக முடியுமே! அதற்காகத்தான் நாமும் அகப்பட்டுக் கொள்ளாது, காரியமும் ஒழுங்காக முடிய வேண்டிய வழியைத் தேட வேண்டும்; அதற்காகவே இவ்வித யோசனையைச் செய்துள்ளேன்; இதில் வெற்றியைக் காட்டி விட்டால் நீதான் இந்தப் பட்டத்து இந்திராணியாகி விடுவாய்” என்றான். 

விஷம் தலைக்கேற வாரம்பித்து விட்டால் எவ்வளவு வேகமாக ஏறுமோ அதே போல் விஷம புத்தி யுடையவர்களின் செய்கையும் பரபரப்பாக நடை பெறத் தொடங்கியது. மறு தினமே இந்திராணியின் அப்ளிகேஷன் ஒரு பாபமுமறியாத தாமோதரனுக்குக் கிடைத்தது. அன்று மாலையிலேயே நவீன நாகரிகமான அலங்காரத்துடன் இந்திராணி ‘ஜில், ஜில்’ என்று ஜெய ஸஞ்ஜீவி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தாள். அப்போதே வெளியில் புதிதாக வந்த பெரிய குடும்பத்துப் பெண்ணைப் போன்றும், நாணத்தில் மிகுந்த நாரீமணி போன்றும் பெருத்த நாட்டியத்துடன் வந்து தன் பெயர் அடித்த சீட்டைத் தாமோதரனின் முன்பு நீட்டினாள். 

இதை வாங்கிப் பார்த்த தாமோதரன் கபடமற்ற பார்வையுடன் “அம்மா! வாருங்கள்; இந்த ஆசனத்தில் அமருங்கள்.” என்று கூறி “அம்மா! அம்மா! இதோ யாரோ வந்திருக்கிறார்கள் பாருங்கள்” என்று தன் தாயாரைக் கூப்பிட்டான். பொன்னம்மாளும் வந்தாள். இந்திராணியினுடைய தடபுடல் அலங்காரங்களையும், சீமைக் கமலத்தின் ஜொலிப்பையும் கண்டு பொன்னம்மாள் வியப்புற்று மயங்கி விட்டாள். “அம்மா! இந்த கடிதமனுப்பியது நீதானா! நீ எங்கே இருப்பது? இதற்கு முன் எங்கேனும் வேலை பார்த்திருக்கிறாயா!” என்று கேட்டாள். 

இந்திராணி:- அம்மா! நான் தான் இதை யனுப்பியவள்! எனக்கு எங்கேனும் வேலை செய்துப் பிழைக்க வேண்டிய நிலைமையே கிடையாது. எங்களுக்குப் பரம்பரையாக வேண்டிய சொத்திருக்கிறது. நான் என் வீட்டிற்கு ஒரே செல்வப் புதல்வியாக விளங்குகிறேன். எனக்கு ஏராளமான பணச் செலவிட்டுப் பாட்டு, படிப்பு முதலியன சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; அதோடு எனக்கு அருமைக்கருமையாய் விளங்கிய பிதா இறந்துவிட்டார்; இரண்டு மாதங்களாகின்றன. வீட்டிலிருந்தால் அந்த விசனம் தாங்கமுடியவில்லை. அதனால் இப்படி எங்காவது வேலை பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்கலாம் என்று தோன்றியது.

மேலும் இது நல்ல கவுரமான கம்பெனி என்றும் கேள்விப்பட்டேன்! எனக்கு சம்பளத்தைப் பற்றி அவசியமில்லை. நான் கவுரவமாகவே வேலை செய்து பொழுது போக்கத் தயாராகவிருக்கிறேன். நல்ல சகவாசந்தான் எனக்கு முக்கியம். எனக்குப் பணம் ப்ரதானமில்லை.” என்று வெகு ஒழுங்காகக் கயிறு திரித்தாள். 

இதைக் கேட்ட பொன்னம்மாளுக்கு வெகு நம்பிக்கையும், அந்த கபடியினிடத்தில் மதிப்பும் உண்டாகிவிட்ட அவளுடைய நடிப்போ உலகிலேயே அவளைப் போன்ற கற்பிற்கரசியே இல்லை என்று கூறும்படியாக இருந்தது. அழகும் அதற்குப் போட்டி போட்டது. ஆடம்பரமும் மேல் வகைகளுக்குச் சகாயம் செய்ததால் முன் பின் சற்றும் யோசிக்காமல் அவளுக்கு வேலை கொடுப்பதாக வாக்குக் கொடுத்து அதற்கான காரியங்களைச் செய்துவிட்டு, நாளை முதல் வேலைக்கு வரும்படியும் கூறிவிட்டாள். தாமோதரனும் அதற்கு இசைந்தான். 

வந்த வேலை திருப்திகரமாக முதல் நாளே முடிந்து விட்டதனால் அளப்பரிய சந்தோஷத்துடன் இந்திராணி வீட்டிற்கு வந்தாள். அவளது வரவை எதிர் நோக்கி நின்ற தாண்டவராயனும் அவனது கூட்டத்தினரும் ஆவலோடு அவளை வரவேற்று, விஷயம் ஜெயம் என்றதையறிந்ததும் அளவிலா ஆநந்தமடைந்து அவளுக்குக் கைலாக்கு கொடுத்து அன்று பெரிய விருந்து நடத்திவிட்டார்கள். அப்போதே கைக்கு அந்த ப்ளான் கிட்டிவிட்டதாக மெத்த மனம் பூரித்தார்கள். 

மறுநாள் முதல் வெகு அடக்க ஒடுக்கமாக இந்திராணி வேலைக்குச் செல்ல வாரம்பித்தாள். அவளுக்கு என்ன வேலையுண்டோ அதை வெகு ஒழுங்காகச் செய்வதும், தலைநிமிராது குனிந்தபடியே இருப்பதுமாய் எல்லோரையும் ப்ரமிக்கச் செய்ததுடன் சில தினங்களுக்குள்ளேயே தன்னை நன்றாக நம்பும்படிச் செய்துவிட்டாள். 

சிந்தாமணியே அந்த டிபார்ட்டுமெண்டைக் கவனித்து வந்தாள். அங்கு 5 பெண்கள் வேலைக்கு அமர்ந்தார்கள். சிந்தாமணி அந்த கம்பெனி ஆரம்ப முதல் வேலை செய்வதால் அவளுக்குக் கம்பெனி விஷயங்கள் சகலமும் நன்றாகத் தெரியும்; ஆதலால் மானேஜர் வேலை பார்ப்பதற்கு வெகு சுலபமாக முடிந்தது. அவள் அங்கு வேலைக்கு வந்த நாள் முதலாக மிக்க ஒழுங்காயும் வித்யாசமற்ற அன்புட னும், தன்னை யறியாத ஓர் பற்றுதலுடனும் வேலை செய்து வருகிறாள். நாளடைவில் அவளுக்கு இயற்கையான பருவத்திற்கேற்ப வனப்பும், வசீகரமான தேஜஸும், பளபளத்த மேனியும், முக காம்பீரமும் ஒன்றுகூடி அபாரமான எழிலுடன் விளங்கினாள். ஆனால் அத்தனை தேஜஸிலும் அவள் முகத்தில் சதா விசனமான களையே நிறைந்து விளங்கியது. இதற்குக் காரணம் அவ்வனிதையின் மனமறியுமே யன்றி பிறரறிய முடியவில்லை. 

25 வயது வாலிபனாகிய தாமோதரனை மட்டும். இயற்கை யன்னையின் பருவ விளையாட்டு விட்டதா! விட வில்லை. அவனுடைய தோற்றம் அசல் மன்மதனைப்போல் தோன்றியது. தனலக்ஷ்மியும், ஜெயலக்ஷ்மியும் அவனிடம் பூர்ண கடாக்ஷம் செய்யத் தொடங்கிய பிறகு தனித்த ஜோதிக்குக் கேட்கவேண்டுமா! வயதிற்கேற்ற அறிவு; அதற் கேற்ற அனுபவம்; அதற்கிசைந்த ஒடுக்கம். அதற்குத் துணையான நன்னடத்தை, வாக்கு நாணயம், மரியாதை, பணிவு, முதலிய பல குணங்களும் ஒன்று கூடி அவனை வெகு மேன்மையாக விளங்கச் செய்தன. 

இந்திராணியோ தன்னுடைய காரியத்தில் ஜெயமடையும் பொருட்டு தாமோதரனைக் காணும்போதெல்லாம் குலுக்கிப் பிலுக்கி கடைக்கண்ணால் பார்த்து தன் வலையை வீசும் சாகஸங்களைச் செய்வாள்! தாமோதரன் இந்த பெண்ணிடம் அதிக நேரம் நிற்கக்கூடமாட்டான். காரியத்தைக் கவனித்துக்கொண்டு போய்விடுவான். இந்திராணி தின்பண்டங்கள், பழங்கள் இவைகளை வாங்கி வந்து தாமோதரனுக்குக் கொடுப்பான்! தாமோதரன் அவளுடைய கருத்தை யறியமாட்டானாகையினால் அவைகளில் ஒன்றிரண்டு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதைத் திருப்பிவிடுவான். 

சிந்தாமணி மட்டும் இந்திராணி செய்யும் ஜால லீலைகளை எல்லாம் வெகு கவனமாகக் கவனித்து வந்தாள். அதோடு இந்திராணியைக் கண்டாலே அவளையறியாத சந்தேகம் உண்டாகியது. அதனால் இந்திராணியைப்பற்றிக் கவனித்துக்கொண்டே வரத் தொடங்கினாள். இந்த ரகசியத்தை தாமோதரனாவது, இந்திராணியாவது அறிய மாட்டார்கள்; தான் எதிலும் பட்டுக்கொள்ளாதவள் போலவே இருந்து முக்கியமாக அதைக் கவனிக்கலானாள். தாமோதரனை எவ்விதமாவது குடிப்பதற்குப் பழக்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திராணியின் கூட்டத்தார் கொண்டுள்ளதால் அதற்குப் பிரயத்தனம் செய்யத் தொடங்கினாள். இந்த சூஷ்மத்தையும் சிந்தாமணி தெரிந்து கொண்டு அவ்வழியில் மிக்க ஜாக்ரதையாக வேலை செய்ய வாரம்பித்தாள். 

இந்திராணி மோட்டார் வைத்துக்கொண்டு தானே ஓட்டவாரம்பித்தாள்! தாமோதரனிடத்தில் வெகு ப்ரியமாகப் பழகிப் பேசுவதும், அவனையும் டிப்பன் சாப்பிட ஓட்டலுக்கு அழைப்பதுமாக ஆரம்பித்தாள். தினம் தினம் இவ்விதம் அழைத்தும் எத்தனை நாளைக்குத் தடுப்பது? பொன்னம்மாளுக்கும் அவளைப்பற்றி நல்ல அபிப்ராய மிருப்பதால் அவளும் அதைத் தடுக்காதிருந்து விட்டாள். தாமோதரன் வெகுவாய் நம்பிவிட்டதால் அவளுடன் மிக்க தாராளமாகப் பேசிப் பழக வாரம்பித்ததோடு அவளுடன் டிப்பன் சாப்பிடவும் தலைப்பட்டான். மோட்டாரில் அவனை யழைத்துச் சென்று உயர்தரமான குடி வகைகளைக் கொணர்ந்து வைத்துப் பார்த்தாள். அதற்கு மட்டும் தாமோதரன் இணங்கவில்லை. அவனுக்கு குடிப் பழக்கம் அடியோடு கிடையாதாகையினால் அதை அறவே மறுத்துவிட்டான். 

இந்திராணியுடன் தாமோதரன் காரில் செல்கையில் தன்னுடைய மனத்தின் ஆசையை வெகு அன்பாகக் கூறவும் தொடங்கினாள். இந்திராணி தன் வீட்டில் டீ பார்ட்டி வைத்து அதற்கு தாமோதரனை அழைத்திருந்தாள்! அழைப்புப் பத்திரம் தாமோதரன் கைக்கு எட்டியதும், அதே நேரத்தில் அவன் மேஜைமேல் கீழ் வரும் துண்டுக் கடிதமும் இருந்தது. 

“தாமோதரா! ஏமாந்து போகாதே! உஷார்! டீ பார்ட்டி என்பது உண்மையல்ல! உன்னை மோசம் செய்யும் பொருட்டே நடப்பதாகும். ஜாக்ரதை! இந்த உண்மையைப் பிறகு நீயே காணக்கூடும்.” 

என்று மொட்டையாக எழுதி இருந்ததைக் கண்டான். இவனுக்கு ஆச்சரியம் கூறத் திறமற்று விட்டது. “இதென்ன இது? இந்திராணியோ சாமானியப் பெண்ணல்ல; பெரிய குடும்பத்துச் சீமாட்டி ! அவள் எதற்காக என்னை மோசம் செய்ய வேண்டும்? அவள் என்னிடம் காட்டும் ப்ரியமெல்லாம் என்னை நேசிப்பதாக வன்றோ தெரிகிறது. அப்படி இருக்க என்னையே மோசம் செய்யக் காரணம் என்ன இருக்கிறது? இதென்ன வேடிக்கை!” என்று வெகு நேரம் சிந்தித்தான்; அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

பொன்னம்மாளுக்கும் இந்த அழைப்புப் பத்திரம் வந்திருந்ததால் அவளும் மரியாதையோடு போக வேண்டு மென்று தாமோதரனுடன் கூறிப் பிரயாணத்திற்கும் சித்தமாகி விட்டாள். தாமோதரன் ‘இந்த மொட்டைக் கடிதத்தைப் பற்றித் தன் தாயாரிடம் சொல்லலாமா, வேண் டாமா!’ என்று எண்ணிக் குழப்பமடைந்தான். பின்னும் சற்று நேரத்திற்கெல்லாம் எதுவாயினும் தன் தாயாரிடம் காட்டி விடுவதுதான் மேல் என்று தீர்மானித்துப் பின் கடிதத்தைக் காட்டினான். இதைக் கண்ட பொன்னம்மாள் அபாரமான வியப்பு கொண்டு “இதென்ன கடிதம் ! மொட்டையாக விருக்கிறதே ! யார் கொடுத்தார்கள்! எப்படி வந்தது?” என்று கேட்டுப் பிரமித்துப் போய் விட்டாள். 

தாண்டவராயன் கூட்டத்தினர்கள் பெரு முயற்சியுடன் டீ பார்டிக்குத் தயார் செய்து, தம்மை யன்றி புதிய ஆட்களையும் ஸ்திரீகளையும் சேகரித்து ஊருக்கு வெளியில் எடுத்து பெரிய இந்திர பவனம் போன்ற பங்களாவை அலங்கரித்துத் தடபுடல் செய்திருக்கிறார்கள். “இந்திராணீ இருவருக்கும் அழைப்புப் பத்திரமனுப்பினாயா?” என்றான் தாண்டவராயன். 

இந்திரா:- இன்னும் பத்திரமனுப்பாமலா! இதோ சற்று நேரத்திற்கெல்லாம் மோட்டார் அனுப்பப் போகிறேன்; தாயும், பிள்ளையும் சேர்ந்து வந்து விடுவார்கள்; பிறகு பார்டி நடத்தலாம்.- என்றாள். 

தாமோதரனும், பொன்னம்மாளும் அந்த துண்டுக் கடி தத்தைப் பற்றி ஒன்றும் தோன்றாது யோசித்தார்கள்; எனினும் அதைப் பற்றி அவர்கள் நம்பவில்லை. “இதை யாரோ வேண்டுமென்று செய்திருக்க வேண்டும். தாமோதரா! இதைப் பார்க்கையில் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா ! இந்திராணி நல்ல செல்வச் சீமாட்டியாயும், அழகாயும் இருக்கிறாள்; அதோடு நல்ல புத்திசாலி. அவளை எங்கே உனக்கு விவாகம் செய்துவிடப் போகிறார்களோ ! என்கிற பயம் அவர்களைச் சேர்ந்த எந்த மனிதர்களுக்காவது இருக்கலாம். பொறாமையினால் அவர்கள் இப்படிச் செய்து அதைக் கலைக்க முயன்றிருக்கலாம். இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லையே! உனக்கு என்ன தோன்றுகிறது?” என்றாள். 

“எனக்கா! நீ சொல்கிறபடிதான் இருக்கலாம். உண்மையில் நான் பழகிய வரையில் அவள் என்னை முழு மனத்துடன் நேசிக்கிறாள் என்பதை நான் தெரிந்து கொண் டேன்! அவளுக்கு என்னை விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்கிற எண்ணம் பரிபூர்ணமாக விருக்கிறது. ஆனால்…” 

பொன்ன:- என்ன ஆனால்? ஆனால் உனக்குப் பிடிக்கவில்லையா! அதுதானே சொல்லப் போகிறாய்! அதைப் பற்றி இப்போது விசாரமென்ன! வீதியில் ஏதோ மோட்டார் வந்த சப்தம் கேட்கிறதே பாரு என்றாள். 

உடனே ஒரு ஆள் வந்து “இந்திராணியம்மாள் வீட்டிலிருந்து கார் வந்திருக்கிறது. அவர்களுக்கு வருவதற்கு ஓய்வு இல்லையாம்; உங்களிரண்டு பேர்களையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்” என்று கூறினான். இந்த மொட்டைக் கடிதத்தைக் கவனிக்காமல் இருவரும் புறப்பட்டு வண்டியில் ஏறி விட்டார்கள். வண்டியும் வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. 

தாமோ:-ட்ரைவர்! அந்த பங்களா எங்கிருக்கிறது? வெகு தூரமா! 

ட்ரைவர்:-இல்லீங்க; கிட்டதானுங்க இருக்குது. நம்ப ஊட்டுக்கும் பங்களாவுக்கும் 10 மெயிலுதாங்க. ஜாஸ்தி இல்லீங்க.- என்று பேசிக் கொண்டே செல்கையில் எதிரே ஒரு மோட்டார் வெகு வேகமாக தலைத்தெறிக்கவந்தது. இவ்வண்டியின் சமீபத்தில் வருகையில் அந்த மோட்டார் நின்று விட்டது. வண்டியிலிருந்த ட்ரைவர் ஒரு குதி குதித்து, இறங்கி “அடேய்! வண்டியை நிறுத்து. உம்; நகருகிறாயா!” என்று கூறிக்கொண்டே துப்பாக்கியைக் காட்டினான். இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு நடு நடுங்கிய ட்ரைவரின் கை கால்கள் வெல வெலத்துப் போய் அப்படியே சாய்ந்து விட்டான். பொன்னம்மாள், தாமோதரன் ஆகியவர்களின் நிலைமையைக் கூற வேண்டுமா! கதி கலங்கி நிலை தடுமாறி ஸ்தம்பித்து “ஹா!” என்று வாய்விட்டு அலறிவிட்டார்கள். 

அப்போது மாலை 5 மணி சுமாரிருக்கும் காலம் ஐப்பிசி மாதமாகையினால் 5 மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் தருணமாகி விட்டது. சாலையின் இரண்டு புறமும் சவுக்கு மரங்கள் அடர்ந்திருந்தமையினால் இருள் சூழ்ந்த வாறே இருந்தது. பக்ஷி இனங்களின் ஆரவாரங்களைத் தவிர வேறு சந்தடியே இல்லை. இத்தகைய நிர்மானுஷ்யமான காட்டு வழியில்தான் மேற் கூறியபடி சம்பவம் நிகழ்ந்தது. கதி கலங்கிய தாயும் மகனும் மருண்டிருந்த சமயம் இரண்டு முரட்டு ஆட்கள் வந்து இவர்களை மிரட்டியவாறு துப்பாக்கியைக் காட்டி “பதில் பேசாமல் சகலத்தையும் ஆடையுள்பட கழட்டி வைக்கிறீர்களா! சுட்டு விடட்டுமா! உம்; பதில் பேசினால் செத்தீர்கள்.” என்றார்கள். 

என்ன செய்வார்கள் பாவம்! திருகத் திருக விழிக்கிறார்கள். உயிருக்கு மிஞ்சி யாதுமில்லை யாதலால் சகலத்தையும் கழற்றி வைத்தார்கள். வந்த முரடர்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, “அடேய் திருட்டுப் பயலே! ஓகோ! எங்களிடமா இந்த ஜால வித்தை! “ஜெய ஸஞ்சீவி” செய்யும் முறைக் காகித மெங்கே! அதற்காகத்தான் நாங்கள் உன்னைத் தேடியலைவது? இந்த வைரமெல்லாங் கிடக்கட்டும்; உம். அதை எடுத்து வை! எங்கே வைத்திருக்கிறாய்! சொல்லு” என்று அதட்டி மீண்டும் துப்பாக்கியைக் காட்டினார்கள். இனி என்ன செய்ய முடியும்? பொன்னம்மாள் அந்த முறையை ஓர் சிறிய பையில் போட்டுத் தன் தலையில் வைத்து முடிபோட்டுக் கொண்டிருந்தாள்! “அதை எப்படி இவர்கள் கண்டு கொள்ளப் போகிறார்கள்?” என்று எண்ணி “ஐயா! அந்த அல்ப விஷயத்திற்கா எங்களை இவ்விதம் செய்கிறீர்கள்? எங்களுக்கு அந்த முறை வாயிலேயே பாடமேயல்லாது ப்ரத்யேக ப்ளான் ஒன்றுமில்லை. வேண்டுமாயின் சொல்லுகிறேன்” என்று சற்று தைரியமாகக் கூறினாள். 

இதற்குள் அந்த முரடரில் ஒருவன் “ஓகோ! எங்களை எய்ப்பதற்கு இது ஒரு முறையோ! அதெல்லாம் முடியாது. நீ கொள்ளை யடித்த விஷயத்தை நாங்களறிவோம். அதைக் கூட நீ உயிருடன் சொல்ல மாட்டாயா! இந்த கதைக் கெல்லாம் நானா கட்டுப் படுகிறவன். உம்; அதை வைக்கிறாயா, இல்லையா!” என்று கேட்டபடியே சற்றும் அச்சமின்றி பொன்னம்மாளைத் தீண்டி, கையைப் பிடித்து இழுத்து, மற்றொரு கையினால் தலையில் கையைக் கொடுத்து மோட்டாரிலிருந்து கீழே தள்ளினான். 

அப்போது தலையில் வைத்திருந்த அந்தப் பையுடன் தலையவிழ்ந்து, அது பொத்தெனக் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் “ஆ!” என்று அந்த முரடர்கள் ஆரவாரித்தார்கள். பொன்னம்மாளும், தாமோதரனும் அப்படியே அலறி ஸ்மரணை தப்பியவர்களைப் போலானார்கள்: அடுத்த நிமிடம் அந்த முரடர்கள் அதை எடுத்துக்கொண்டு தங்கள் மோட்டாரில் ஏறிக்கொண்டு போய் விட்டார்கள்: அவர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிந்திருந்ததால் இருளுக்கும் அதற்கும் வெகு பயங்கரமாகத் தோன்றியது. 

அம்முரடர்கள் சென்று 5 நிமிடம் கழிந்த பிறகே இவ் விருவருக்கும் சற்று உயிர் வந்தது. இனி எது வந்து என்ன செய்யக் கூடும்? “ஐயோ! தாமோதரா! இப்படியோர் விதி வந்து நேரும் என்று நாம் கனவிலும் கருத வில்லையே! இனி என்ன செய்வது?” என்று பொன்னம்மாள் புலம்பினாள். “அந்த வழிபறிக் கொள்ளைக்காரர்களுக்கு நம்மிடம் இந்த ப்ளான் இருக்கிறது எவ்விதம் தெரிந்திருக்கும்? ஐயோ! அம்மா! நமக்கு டீபார்ட்டியும் வேண்டாம், இழவும். வேண்டாம். நாம் இப்போதே வீடு திரும்பி விடுவோம். வண்டியை மட்டும் திருப்பியனுப்பி விடுவோம். அப்பா! ட்ரைவர்! தயவு செய்து நீ எங்கள் வீட்டிற்கே ஒட்டு. நாங்கள் இந்த அலங்கோலத்தி லிருக்கையில் டீபார்டிதானா குறைவு! நேரே திருப்பு” என்றான் தாமோதரன். வண்டிக்காரனும் நடுக்கத்தோடு “ஐயா! இதென்ன ஆபத்து! நமக்கு பெரிய கண்டமாகவல்லோ முடிந்தது! என்ன ப்ளான்னு அது? எனக்கு விசயமெ தெரியலயே!” என்று கூறிக் கொண்டே வண்டியைத் திருப்பி வீட்டிற்கு ஒட்டினான். 

அவர்களுக்குள்ள, கலக்கமும், கிலியும் கூறத் திறமற்று விட்டது. “அந்த மொட்டைக் கடிதத்தை நாம் சட்டை செய்யாதுபோன தன் பலனோ இது!” என்று தவிக்கிறார்கள்: வண்டிக்காரன் மீண்டும் அவ் வழியே தான் எவ்விதம் போவது என்று பயந்தவாறு, தலை தரிக்க ஓட்டத் தொடங்கி வீட்டை யடைந்தான். 

சுமார் இரண்டாயிரம் ரூபாய் தாளுமான மோதிரம்; இரண்டாயிர ரூபாய் கடுக்கன்; கெடியாரம், ஜோபியில் இருந்த 100 ரூபாய் ஆக எல்லாம் போய்விட்டது ஒரு பங்கு இருக்க, அந்த மருந்து முறை போய் விட்ட துக்கம் கூறத் திறமன்று.நாம் என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறார்கள்: ஒன்றும் புலப்படவில்லை. தங்களுக்கு இவ்விதம் நேர்ந்தது என்பதைக் கூறவும் வெட்கம். கூறாமல் எவ்வித மிருப்பது. என்ற யோசனையில் இரவு முற்றும் குழம்புகிறார்கள். 

வண்டியோட்டி மெல்ல நடுங்கியவாறு வீட்டை யடைந்தான். இந்திராணி முதலியோர் இவர்கள் வரவை வெகு ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்கள். வண்டி வரும் சத்தங் கேட்டவுடனே இந்திராணி பெரும் ஆரவாரத்துடன் இவர்களை எதிர் கொண்டழைக்க வீதிக்கு ஓடிவந்தாள்: அங்கு கிலி பிடித்த முகத்துடன் வண்டியோட்டிமட்டும் இறங்கி “அம்மா! காரியம் மோசமாக முடிந்துவிட்டது.கள்ளனுக்கு மேல் பெருங் கள்ளன் நம் கண்ணில் மண்ணைத் தூவி ஏமாற்றி விட்டான்” என்று கூறி முடிப்பதற்குள் “ஹா! என்ன! என்ன! கொள்ளை போய்விட்டதா? அந்த ப்ளானா கொள்ளை போயிற்று! ஐயையோ! தாண்டவா! இனி வெளியில் வா: அவன் வரவில்லை: விஷயம் விபரீதமாகி விட்டது. அந்த சங்கரனையும், சீதாராமனையும் காணாமலிருக்கையிலேயே நமக்கு எதிராக வேலை செய்வதற்குத் தான் மறைந்து விட்டார்கள் என்று நான் கூறவில்லையா? நமக்கு எதிராகவே இப்போது செய்து விட்டார்கள்: இனி என்ன செய்வது! நாம் இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டதெல்லாம் வீணாயிற்றே!” என்று பெரியதாக அலறினாள். 

இதற்குள் மறைந்திருந்த தாண்டவராயன் முதலியோர் வெளியில் வந்தார்கள். “ஐயோ! நான் கூட அன்றே நினைத்தேன். நம்மிடம் சொல்லாமல் அந்த சங்கரன் எங்கே யும் செல்லமாட்டான்: அங்ஙன மிருக்க அவன் நமக்குத் தெரியாமல் சீதாராமனையும் இழுத்துக்கொண்டு மறைந் திருந்து இக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்: “ஏண்டா! நீதானே வண்டி யோட்டினாய்? ஆள் யார் என்பது உனக்குத் தெரிந்ததா?” என்றான். 

வண்டி:- எஜமான்! எல்லோரும் கருப்பு சொக்காய் கருப்பு குல்லாய் போட்டிருந்தார்கள். முகத்தில் கூலிங் கிளாஸு போல கருப்புக் கண்ணாடி பெரியதாக அணிந்திருந்தார்கள்: மீசை கட்டையாக விருந்தது. சங்கரன் குரல் போல ஒருவனுக்கு இருந்தது. இப்போதுதான் நினைவிற்கு வருகிறது; என்னைப் பார்த்ததும் அவன் விலகி இருந்து ஆட்களை ஏவினான். 

தாண்:-எண்டா! அந்த ப்ளானைப் பிடுங்கிக் கொண்டதைப் பார்த்தாயா? 

வண்டி:-ஆகா! என் கண்ணால் கண்டேன். கருப்புப் பட்டினால் செய்த சிறிய பையில் அந்த காகிதத்தைப் போட்டு அந்த அம்மாள் தலை மயிரோடு மயிராக முடிந்து கொண்டிருந்தாள். அந்த ஆசாமி முதலில் அதைத்தான் தேடிப் பிடித்து வாங்கிச் சென்றான். 

தாண்:-ஐயோ! நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது என்பது நிஜமாய் விட்டதே! இனிமேல் நாம் இவர்களை விட்டு விட்டு அந்தப் பயலைத் தேடவேண் டும்: அவன் எந்த பாதாள லோகத்தில் ஒளிந்திருப்பினும் நான் விடப் போவதில்லை: அவன் என்னிடமே வித்தையைக் கற்று என்னிடமே அதைக் காட்டுகிறானா! ஆகட்டும்; அவனைக் கண்டு பிடித்து ப்ளானைக் கைப்பற்றிக்கொண்டு. அவன் எனக்குச் செய்த த்ரோகத்திற்காக அவனைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்யாவிடின் என் பெயர் தாண்டவனல்ல. இது சத்தியம்: என்ன இந்திராணீ! 

இந்தி:- ஆமாம். அந்தப் பாவியை இலேசில் விடக் கூடாது. நான் திடீரென்று வேலைக்குப் போகாமல் நிறுத்தி விட்டால் அந்த மனிதன் நடந்த சம்பவத்தையும், நான் நின்றதையும் ஒத்திட்டுப் பார்த்துச் சந்தேகங் கொள்வான். பிறகு நாம் சங்கரனைக் கண்டு பிடித்து ப்ளானைப் பெற்று மருந்து செய்ய வாரம்பித்தால் நம்மைத்தான் கள்வர்களென்று வெகு சுலபத்தில் கண்டு போலீஸில் காட்டிக் கொடுத்துவிடுவான். நாம் சிரமப்பட்டும் பலனில்லாது போய்விடும். ஆகையினால் நான் என்னவோ வழக்கம் போல வேலைக்குப் போய்க்கொண்டே அவனிடம் அகப் பட்டதைச் சுரண்டிக் கொள்கிறேன்: உள்ளுக்குள் வேலையும் நடக்கட்டும் – என்றாள். 

தாண்டவராயன் இந்திராணியின் சாமர்த்தியமான புத்திக்கு மெச்சி “கண்ணாட்டீ! உன் புத்தியே புத்தி; உன் இஷ்டப்படியே செய். நான் அந்தப் பயல் சங்கரனை விடப் போவதில்லை; ஜாக்ரதை!” என்று கர்ஜித்தான். வழக்கம் போல மறு தினம் காலையில் இந்திராணி வேலைக்கு வந்தாள்: அதற்கு முன்பே சிந்தாமணியும் வந்தாள்: பொன்னம்மாளும் தாமோதரனும் அன்று வழக்கத்திற்கு விரோதமாய் மிக்க துயரமுற்று இருப்பதைக் கண்டு “அவர்களை விசாரிப்பதா! வேண்டாமா!” என்று பெரிய குழப்ப மடைந்தாள்: எனினும் கேட்பதே சரி என்று எண்ணினாள்: 

இதற்குள்ளேயே இந்திராணியும் வந்து சேர்ந்தாள். இந்திராணியின் வண்டிக்காரன் மூலம் அவளுக்கு விஷயம் தெரிந்திருக்குமென்று தாமோதரனுக்குத் தெரியும்: ஆதலால் இந்த விஷயத்தைப் பற்றி இந்திராணி தன்னைக் கேட்பாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தான்: அதற்கு முன்பே சிந்தாமணி இவனைச் சந்தித்தபோது, “என்ன உடம்பு? முகம் ஏதோ ஒருவாறாக இருக்கிறதே! விஷயமென்ன!” என்று வெகு வணக்கத்துடன் கேட்டாள் 

இதைக் கேட்ட தாமோதரனுக்கு உண்மையைக் கூற மனமில்லை. இது விஷயம் இவளுக்குத் தெரியாதிருக்கையில் தான் எதற்குக் கூற வேண்டுமென்று எண்ணியவனாய், “ஒன்றுமில்லை. நேற்று முதல் தலை இடியும், காய்ச்சலுமாக விருக்கிறது. அதனால்தான் ஒரு மாதிரி இருக்கிறது. வேறொன்றுமில்லை.” என்று கூறிக் கொண்டே சரியானபடி பேசாமல் போய் விட்டான். அடுத்த நிமிடமே இந்திராணியைச் சந்திக்கையில் அவள் வெகு நாணத்துடன் பேசுவது போல அபிநயித்து, “என்ன போங்கோ! இரவு ட்ரைவர் வந்து சொன்னது முதல் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் மனதே அத்தகைய வேதனை யடைந்தபோது உங்கள் நிலைமையைக் கூற வேண்டுமா! ஏதோ ப்ளானாமே அது விஷயமே ஒருவருக்கும் தெரியாதே! எந்த சண்டாளர்கள் அதை அப்படிக் கண்டு கொண்டு உங்களையும் வருத்தி கொள்ளையிட்டு, எங்கள் டீ பார்டியையும் நடக்காமல் செய்து விட்டார்களோ! தெரியவில்லையே ! இதை நினைக்க மிக்க வயிற்றெரிச்சலாக விருக்கிறது. இதற்கு மேற்கொண்டு என்ன செய்தீர்கள்?” என்று தான் ஏதுமே அறியாத பரம சாதுவைப் போலக் கேட்டாள். 

இதைக் கேட்ட தாமோதரன் “அம்மா! இது என்னவோ பெரிய வேடிக்கையாய் ஆச்சரியமாய் நடந்திருக்கிறது. சில காலமாக என்னிடம் உள்ள ப்ளான் மீது சிலர் கண் வைத்திருக்கிறார்கள் என்றும், அதை என்னிடமிருந்து அபகரிக்கப் போகிறார்களென்றும், வதந்தி என் காதிற் கெட்டியது. அதுமுதல் நான் வெகு உஷாராகவே இருக்கிறேன். நேற்று களவு போனது உண்மையான ப்ளானல்ல. நாங்கள் வேண்டுமென்று தாயாரித்த போலி ப்ளான்; அதை வெகு ஜாக்ரதையாக வைத்துக் கொண்டிருப்பதுபோல நடித்து வருகிறோம்: இந்த உண்மையை நான் யாருக்கும் கூறியதில்லை. உண்மையான ப்ளான் இருக்குமிடத்தை இந்திரன், சந்திரன்கூட அறிய மாட்டான். அது யார் கையிலும் அகப்பட முடியாது.” என்பதற்குள் இந்திராணிக்கு உள்ளுக்குள், தான் ஏமாறவில்லை. தனக்கு இன்னும் அந்த ப்ளானைப் பெறும் சந்தர்ப்பம் இருக்கிறதென்ற பெரும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. மேலுக்கு அதை யடக்கிக் கொண்டு வெகு அன்பு காட்கிறவள் போல “ஹா! அப்படியா! இப்போதுதான் என் மனது குளிர்ந்தது. உண்மையான ப்ளான்தான் போய்விட்டதோ என்று கலங்கிவிட்டேன்” என்று கூறியவாறு, தாமோதரனின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு தன் உத்சாகத்தைத் தெரிவித்தாள். 

இச் செய்கை தாமோதரனுக்கு அபாரமான வெறுப்பையும், அசங்கியத்தையும் உண்டாக்கியது. “சீ! பெண் பிள்ளையாம் இவள்; தானாக வலுவில் இவ்விதம் செய்வார்களா!” என்று மனத்திற்குள் திடீரென்ற ஓர் அருவருப்பு அவளிடம் உண்டாகி விட்டது. இதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் “அம்மா! தாங்கள் இவ்விதம் செய்தது அழகில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை” என்று கூறிக் கொண்டே எழுந்திருக்கப் போனான். 

வெகுவாய் வருத்தப் படுவதுபோல நடித்து, “ஐயையோ! நான் சுத்த மடத்தனம் செய்து விட்டேன்,என் மனத்தில் தங்கள்பாலுள்ள பிரேமையைப் பன்முறை கூறி இருப்பது தாங்களறிந்ததே! அந்த மிகுதியால் தீண்டிவிட்டேன். இனி தங்கள் உத்திரவின்றி நான் எதுவும் செய்வ தில்லை. சித்தத்தில் ஆயாஸங் கொள்ளலாகாது. மன்னிக்க வேண்டும்” என்று கூறி வணங்கினாள். “ஆனால் இனி உண்மையான ப்ளானுக்கு ஆபத்தில்லையே! அதுதான் வேண்டியது!” என்றாள். 

தாமோதரன் “அது சதா என் வசமே இருக்கிறது. ஆனால் எந்த விடத்திலிருக்கிறது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது.” என்று கூறிக் கொண்டிருக்கையில் டெலிபோன் மணியடித்ததால் அங்கு போய் விட்டான். அந்த சம்பாஷனை அதோடு நின்றுவிட்டது. இந்திராணி அளப்பரிய சந்தோஷத்துடன் அன்று வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். இவளுடைய உற்சாகக் களை உச்ச நிலையை அடைந்து ஜொலிப்பதைக் கண்ட தாண்டவராயன் “கண்ணே! விஷயமென்ன?” என்றான். இந்திராணியும் உண்மையை ஆதியோடந்தமாகக் கூறிவிட்டாள். தாண்டவராயன் இதைக் கேட்டு பெருமிதமான பூரிப்பை யடைந்து மீசை முறுக்கி, மார்பு தட்டி அமர்க்களம் செய்தான். “இந்திராணி! இனி எப்படி வகை செய்யலாம்?” என்றான். 

இந்தி:- வகை என்ன! மூலாதாரந்தான் அம்மனிதன் கையிலேயே இருக்கிறது. அவனை எப்படியும் நான் என் வலையில் போட்டு அதைக் கொண்டு வந்து விடுகிறேன் ; சமயத்தைப் பார்த்துச் செய்கிறேன்-என்றாள்.

வழக்கம்போல அவள் ஆபீஸுக்குச் செல்வதும், வருவதும் வெகு ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தாள். 

தாமோதரனுக்கோ, உண்மையான ப்ளான் போய் விட்ட துக்கம் தாங்க முடியவில்லை. அதை வெளியிடாமல் இந்திராணியிடம் சொல்லியதுபோல “போலி ப்ளான் களவு போய்விட்டதாகவும் அதைக் கண்டு தயாரிக்கும் மருந்துகள் வியாதிக்கு ப்ரதிகூலத்தை யுண்டாக்கி விடுமென்றும் ஆகவே அதை அபகரித்தவர்கள் மருந்து தயார் செய்வதில் உபயோகமில்லை என்பதை யறியவும்:” என்று சகலமான பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்துவிட்டான். 


நாட்கள் சிலவாகிப் பலவாகி, வாரங்களும் சில கழிந்தன. இந்திராணி சமயத்தை எதிர்பார்த்து வெகு ஒழுங் காக வேலை செய்துகொண் டிருக்கிறாள். பொன்னம்மாளும் தாமோதரனும் ரகஸியத்திலேயே, துப்பறிபவனை வைத்து அந்த ப்ளானைப் பற்றி விசாரித்து வந்தார்கள். அதே ஏக்கத்தினால் தாமோதரனுக்குப் பெரும் மன அதிர்ச்சி ஏற்பட்டு அதே கவலையால் நோய் கொண்டவன் போலாய் விட்டான். 

இவன் நாளைக்கு நாள் மெலிவதைக் காண பொன்னம்மாளின் கவலையும் அதிகரித்தது. தாமோதரன் ஏதோ சொந்த வேலையின் நிமித்தம் வெளியில் சென்றான்: அந்த சமயம் இவன் சென்ற வீதியில் ஓர் மாடி வீட்டிற்குள் ளிருந்து சிலர் இறங்கி வந்து, வீதியிலிருந்த மோட்டாரில் ஏறும்போது தாமோதரன் பார்த்து அப்படியே பிரமித்து நின்றுவிட்டான். அவ்வாறு பிரமிப்பதற்குக் காரணம் யாதாக விருக்கும்! தாமோதரனின் பழய சினேகிதர்களாகிய சோதாக்கள் – தாண்டவராயனும், மற்றவர்களும் இந்திராணியுடன் வெகு சல்லூக்காகப் பேசிக்கொண்டு வண்டியில் சென்றதேயாகும். 

“இது பரியந்தம் இந்திராணியை ஓர் உயர்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவ ளென்றும், மகா பரிசுத்தவதி என்றும் எண்ணி அவளை ஓர் உயர்தரப் படிக்கட்டில் வைத்து ஏமார்ந்தோமே! ஆகா! என்ன மோசம்! இந்தக் கூட்டத்தின் கையாளாக வன்றோ அவள் அமைந்திருக்க வேண் டும். அடாடா! எனக்கு டீ பார்ட்டி கொடுப்பது போலக் கொடுத்து என்னுடைய ப்ளானை யபகரிக்க அவளே இவ் வித சூழ்ச்சி செய்திருப்பாளா? இல்லையேல் உயர் குலத் துதித்த உத்தமப் பெண்மணியாக விருப்பின் ஏன் இந்த அல்ப சோதாக் கூட்டத்துடன் சகவாசம் செய்வாள்? இதில் ஏதோ பெரிய மோசமிருக்கவேண்டும். இதை நாம் கண்டு பிடிக்காது விடக்கூடாது” என்று தீர்மானித்து அவர்கள் சென்ற கார் நம்பரைப் பார்த்துக் கொண்டான்: பிறகு தன் வீட்டிற்கு வந்து தான் கண்ட விஷயங்ளைத் தன் தாயாரிடம் கூறினான். 

இதைக் கேட்ட பொன்னம்மாள் ஆச்சரியமடைந்ததோடு அபாரமான கவலையை அடைந்தாள். “தாமூ! எனக்கென்னவோ இப்போது தோன்றுகிறது. அந்த ப்ளானை அவளைச் சேர்ந்த கூட்டத்தினர்தான் அபகரித்திருக்க வேண்டும். ஐயையோ! அந்த சிறிய துண்டுக் கடிதத்தைப் பற்றி நாம் சற்றும் சட்டை செய்யாது போய்விட்டோமே! அதை நமக்கு அவளே தன்மீது சந்தேகமில்லாதிருக்கும், பொருட்டு மொட்டையாக அனுப்பி இருப்பாளோ! ஒன்றும் தெரியவில்லையே! இப்போது அந்த ப்ளான் அவளை விட்டு வேறு எங்கேயும் போகவில்லை என்று நன்றாகத் தோன்றுகிறது. அந்த ப்ளானை அந்த பஜாரியிட மிருந்து எவ்விதம் நாம் பெறுவது? தர்ம சங்கடமாக விருக்கிறதே: அவளை நாம் இப்போது வேலையை விட்டு நீக்காது ஓர் பங்தத்தைச் செய்து அவளிடமிருந்து அதை கிரகிக்கவேண் டும். சிந்தாமணியைக் கலந்துகொண்டு செய்யலாமா!” என்று கேட்டாள். 

தாமோத:- அம்மா! நாம் எதிலும் அவசரப் படக் கூடாது. நாம் அந்த இந்திராணியை உயர்வித்துச் சீமாட்டி என்று நம்பி பெரு மோசம் போனோம்; சிந்தாமணியோ, நம் கம்பெனியில் வந்த நாள் முதல் அவளுடைய அடக்க ஒடுக்கம், பணிவு; உத்தமமான குணம், தலை நிமிராத ஒழுக்கம் முதலியவைகளைக் காண அவனிடத்தில் தானாக நன்மதிப்பும், அன்பும் சுறக்கின்றன. அவளும் நம்மை வெகு மேன்மையாக மதித்திருக்கிறாள் : அங்ஙன மிருக்க நாம் இக் கேவலத்தை அவளிடம் எவ்விதம் தெரிவிப்பது என்று லஜ்ஜையாக விருக்கிறதம்மா! நீ நன்றாக யோசித்துக் கூறு. 

பொன்ன:- ஆமாம்: வாஸ்தவம்தான்! அந்நங்கை நல்லாளின் நடத்தையைக் கண்டு மனம் வியப்புறுகிறேன். உரத்த குரலில் பேசி அவளை நான் கண்டதே இல்லை. எந்த சமயத்திலும் சாந்தமே குடிகொண்டிருக்கிறாள்: நாம் ஏமாந்த விஷயத்தைத் தெரிவிப்ப தென்றால் வெட்கமாயு மிருக்கிறது. சரி; இனிமேல் நீ என்ன செய்யவேண்டு மென்றால் அவள் உன்னை நேசிப்பதாக நடிப்பதுபோல அவளை நீயும் நேசிப்பதாக மிக மிக இனிப்பு வார்த்தைகள் கூறி நடித்து அவளை மயக்கிப்பின் அதை யபகரித்து விடு; நானும் அதற்குத் துணையாகவே நடிக்கின்றேன்-என்று பேசி முடிவு கட்டிக் கொண்டார்கள். 

மறு தினம் காலையில் வழக்கம்போல இந்திராணி வேலைக்கு வந்தாள்: அன்று அவள் தனக்கு ஏதோ உடம்பு சரியில்லா தவளைப் போன்று “அப்பா, அம்மா” என்று அலற்றியவாறு தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். இதைக் கண்ட தாமோதரன், “ஆகா! துஷ்ட ஜந்துவே! உன்னால் மோசம் போனோமே!” என்று உள்ளுக்குள் எண்ணியவாறு, அருகில் சென்று தன் வேலையை ஏதோ கவனிப்பது போலப் பாசாங்கு செய்துவிட்டு…”என்ன உடம்பு? தலையைப் பிடித்துக்கொள்ளுகிறீர்களே?” என்று கேட்டபடியே உட்கார்ந்தான். 

இந்தி:-(இவ்விதமான சமயத்தையே எதிர்பார்த்திருந்தாளாதலால் வெகு நாணிக் கோணி, குலுக்கிப் பிலுக்கி) ஒன்றுமில்லை: ஏதோ சற்று தலைவலி: இரவு தூக்கமே கிடையாது. அதனால் இப்போது தலை வலிக்கிறது. 

தாமோ:- ஏன் தூக்கமில்லை…. எங்கேனும் ட்ராமா, சினிமா போயிருந்தீர்களா? தலைவலியாயின் இன்று ஏன் லீவ் வாங்கிக்கொள்ளக் கூடாது. தேக அசுகமாயின் எப்படி வேலை செய்ய முடியும்? 

இந்தி:- ஊம். இதற்கெல்லாம் நான் லீவு எடுப்பதென்றால் தினம் எடுக்கவேண்டியதுதான். என்னைச் சில தினங்களாகவே தலைவலியும் உடம்பு ஓய்ச்சலும் பீடிக்கின்றன. நான் என்ன செய்வது? 

தாமோ:- ஏனம்மா அப்படி உடம்பு? தாங்கள் நல்ல டாக்டரிடத்தில் ஏன் மருந்து சாப்பிடலாகாது? உடம்பு நன்றாக விருந்தாலல்லவோ வேலை செய்ய முடியும்? எங்கள் வைத்தியரிடம் வருகிறீர்களா? 

இந்தி:- நான் என்ன பதில் கூறுவேன்? நான் முதலில் இங்கு வரும்போதே சொன்னேன். எனக்கு வேலை செய்து பிழைக்க வேண்டுவதில்லை என்று. ஏதோ என் விசனம் மறையும் பொருட்டு வந்தேன். வந்த விடத்தில் ஓர் பெரிய நோயிக்கு அடிமையாகி விட்டேன். இதை ஜாடைமாடை யாகத் தங்களிடமே பன்முறை தெரிவித்திருக்கிறேன். எனது நோயைத் தீர்க்கும் மருத்துவன் உலகத்தில் தங்களை யன்றி வேறு உண்டா! இதை வெளிப்படையாயும் கூறி விட்டேன். நான் வயிற்றுக் கில்லாமலா இங்கு வந்து உழைக்கிறேன்! தங்களின் தரிசனத்திற்கும், தங்கள் கம்பெனியில் வேலையாவது செய்யலாமே என்கிற ஒர் ஆசையினால் நான் அலைகிறேன். ஊணும் உறக்கமும் ஒழிந்து எத்தனையோ நாட்களாயின” என்று கூறிக் கண்ணீர் விட்டாள். 

கள்ளனுக்குள் குள்ளன் என்பதுபோல தாமோதரன் அதற்கிசைந்த பதில் கூறி நடித்தாக வேண்டும். அவ்வாறு செய்யவோ அவன் மனம் சற்றும் சம்மதிக்கவில்லை. அவன் மனத்துள் அழுந்திக் கிடக்கும் உருவத்திற்கு விரோதமாக இந்த மூதேவியை நடத்தச் சங்கடமுண்டாகிறது. என்ன செய்வான் பாவம்! கடவுளே! என் மனப் பூர்வமான – பரிசுத்தமான – காதலை நான் ஓர் உயர்ந்த உத்தமியிடம் அடையும்படியாகக் கருணை செய்தாய்! மனக் கோட்டையை விட்டு இன்று தினம் வரையில் பெற்ற அன்னைக்கும், காதலித்த காரிகைக்கும் வெளியிடாது என் லஜ்ஜையும், அபாரமான வெட்கமும் என்னை மூடிவிட்டன. இந்த சனியனிடத்தில் மனம் பிடிக்காது நான் எவ்விதம் உரையாடுவது? ஈசா!” என்று உண்மையிலேயே விசனித்தான். தனக்கு முக்கியமான ப்ளானைக் கைக் கொள்ள வேண்டி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு…கண்ணே! “இந்திராணீ ! நான் என்ன பெரிய முட்டாள் என்று எண்ணி விட்டாயா! உன்னைப்போலவே நானும் வருத்தப்படுவதை நீ யறிய மாட்டாய்! என் சுபாவம் மிக்க லஜ்ஜை யுற்றது. அதனால் நான் என் கருத்தை வெளியிடாது பொறுமையா யிருக்கிறேன்; எனினும் என் தாயாரும் நானும் வீணாகக் காலத்தைக் கழிக்க வில்லை. எப்பொழுது விவாகத்தை முடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டுதானிருக்கிறோம்; அதை நாங்களே உன்னிடம் தெரிவிக்க நினைத்தோம். அதற்குள்ளாக அது வெளியாக வேண்டிய காலம் நெருங்கிவிட்டது” என்றான். 

இதைக் கேட்ட இந்திராணியின் சந்தோஷத்தைக் கூற வேண்டுமா! தன் காரியத்தில் ஜெயம் பிறந்து விட்டது என்று மனத்திற்குள் துள்ளிக் குதித்தாள். “ஆ! அப்படியா! இதைக் கேட்ட என் தேகமே சிலிர்க்கின்றதே! மயிர் கூச்செரிகின்றதே! என் வியாதி எல்லாம் போய் விட்டது. இச்சந்தோஷச் செய்தியை என் தாயார் கேட்டால் அளப்பரிய சந்தோஷ மடைவாள். தாங்கள் இனியும் லஜ்ஜை லஜ்ஐை என்று நாட்களைக் கழிக்காமல் விவாகத்திற்கு ஏற்பாடு செய்து விடுவதுதான் நல்லது. நான் இனி என் வீட்டிற்கே போகமாட்டேன்; இன்று முதல் நான் இங்கேயே தானிருக்கப் போகிறேன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று தாமோதரனின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள். 

தாமோ:-ஆகா! அப்படியே செய் ; உன்னிஷ்டம் எப் படியோ அப்படி நடக்க நான் தயாராக இருக்கிறேன்; அதோ என் தாயாரும் வருகிறாள் “அம்மா! நாம் நெடு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்த விஷயம் இன்று முடிவாகி விட்டது” என்றான். 

இதற்குள் இந்திராணி “மாமீ! என்னை அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறிப் பொன்னம்மாளுக்கு வணங்கினாள்; மூவர் நடிக்கும் நாடகம் வெகு ஜோராக நடக்கின்றது. முதல் சீன் முதல் தரமாகவே முடிந்தது. இதையே ஒரு சாக்காகக் கொண்டு இந்திராணி “இவ்விடத்திலேயே தங்கி, இரவு பெட்டி முதலியவற்றைத் திறந்து ப்ளானைக் கொள்ளையடிக்க வேண்டும்; பாலில் மயக்கத்தைப் போட்டு இருவருக்கும் கொடுத்து விட்டு இன்றே வேலையை முடித்து விடுவது” என்று தீர்மானித்துக் கொண்டாள்.. 

உடனே வேலைகள் முடிந்ததும் டிப்பனுக்குப் போவது போலச் சென்றாள். அக்கம்பெனிக்குச் சமீபத்தில் ஒரு ஒட்டல் இருக்கிறது. அதில்தான் இவர்கள் முக்கியமான சமயம் சந்திப்பது வழக்கம். அன்று அங்கு சென்று ஒரு தனித்த விடுதியில் வெகு அட்டகாஸத்துடன் புகுந்தாள். 

அங்கு தயாராக வீற்றிருந்த தாண்டவராயன் “ஹல்லோ! என்ன செய்தி! இன்னும் எத்தனை நாளாகும்? வேலையைச் சீக்கிரம் முடிக்கத் தெரியவில்லையே! அந்த இரண்டு பயல்களும் அகப்படவே இல்லை. என்ன செய்வது?” என்றான். 

இந்தி:- என்ன ஆத்திரப் படுகிறாயே ! இன்றுதான் நம் காரியம் ஜெயமாகும் கடைசீ தினமாக விருக்கலாம். அத்தனை ஏற்பாடுகளைச் செய்து விட்டேன். இன்று முதல் நான் அங்கேயே இருக்கப் போவதாயும் கூறி விட்டேன்; இன்று ஒரு இரவிலேயே நான் வேலையை முடித்து விடுகிறேன்.நீ என்ன செய்ய வேண்டு மென்றால் மயக்க மருந்து, ஒரு ரிவால்வர், முக மூடி இவைகளை எனக்கு இப்போதே கொடுத்து விடு. இரண்டாவது, நீங்கள் உங்கள் கூட்டத்துடன் அந்த பங்களாவின் தோட்டத்தில் நின்று கொண்டிருங்கள். நான்கு புறமும் பார்த்துக் கொண்டே வா! என்னுடைய பாக்கெட்டு விளக்கின் வெளிச்சம் எப்போது தெரிகிறதோ அப்போது அதைக் கவனித்துக் கொண்டு அந்த விடத்திற்கு வந்து விடுங்கள். இதுதான் சமிக்ஞை; இதற்குப் பிறகு நாம் அங்கு அகப்படும் சகலத்தையும் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடலாம். ஞாபகமிருக்குமா! ஜாக்ரதை ; ஜாக்ரதை” என்றாள். 

தாண்டவராயன் அபாரமானசந்தோஷத்துடன் இந்திராணியைத் தட்டிக் கொடுத்தான். ஒரு ரிவால்வர், மயக்க மருந்து, முக மூடி, மூன்றும் கொடுத்தான். அவற்றை வாங்கித் தன் மடியில் மறைவிடமாகச் சொறுகிக் கொண்டாள். “சரி ! நான் சொன்னபடி செய்யுங்கள் என்று கூறிவிட்டு வெளியில் வந்தாள். ஒன்று மறியாத மகா சாதுவைப் போலத் தன் வேலை ஸ்தலத்தில் வந்து அமர்ந்து விட்டாள். 

– தொடரும்…

– ஜெயஸஞ்ஜீவி (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: 1934, ஜகன்மோகினி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *