ஜகதீச சாஸ்திரிகள் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 2,683 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரங்கூன் ஜகதீச சாஸ்திரிகள் தமது ஐம்பத்திரண்டாவது வயதில் தாம் பிறந்த ஊராகிய திருவிடை மருதூருக்குத் திரும்பி வந்தார். அவர் முதலில் பாரிஸ்டர் சுப்பய்யரின் சமையற்காரனாக இரங்கூனுக்குப் போனார். சில காலத்துக்கெல்லாம் சமையல் வேலையை விட்டு இரங்கூனில் குடியேறியிருந்த பிராமணர்களுக்குப் புரோகிதம் செய்து வைக்கத் தொடங்கினார். புரோகித் குடும்பத்தில் பிறந்தவராதலால், அவருக்குக் கொஞ்சம் மந்திரங்கள் தெரிந்திருந்தன. தெரியாத தற்கு, அச்சடித்த புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு சமாளித்து வந்தார்.

பரிசாரகத் தொழிலிலும், வைதிகத்திலும் சம்பாதித்த பொருளை வட்டிக்கு விட்டு விருத்தி செய்து வந்தபடியால் நாளடைவில் பணக்காரரானார். அவரிடம் லக்ஷம் ரூபாய் வரையில் ரொக்கம் உண்டு என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள்.

இரங்கூனிலிருந்த காலத்தில் சாஸ்திரிகள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பியது உண்டு. ஆனால் அந்த விருப்பம் நிறைவேற வில்லை. இப்போது வயது தாண்டிவிட்டபடியால் அந்த எண்ணத்தை விட்டுவிட்டார். திருவிடைமருதூரில் கொஞ்சம் நிலம் வாங்கிக்கொண்டு. போகிற வழிக்காக யாராவது ஒரு பையனைச் சுவீகாரம் செய்து கொண்டு, தம் வாணாளைக் கழித்து விடுவது என்று தீர்மானித்திருந்தார். ஆனால், அவர் திரும்பி வந்த வருஷத்தில் நேர்ந்த மகாமகத்துக்காகக் கும்பகோணம் போயிருந்தபோது ஏற்பட்ட ஒரு சம்பவம், அவரது வாழ்க்கையில் பெரிய மாறுதல் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று.

ஜகதீச சாஸ்திரி தங்கியிருந்த வீட்டில், அவரைப் போலவே மகாமக ஸ்நானத்துக்கு வந்த நாகேசுவர ஐயரும், அவருடைய மூன்று புதல்விகளும் தங்கி யிருந்தார்கள். விசாரித்ததில். நாகேசுவரய்யர் வைர வியாபாரி என்றும், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஒன்றின் ஏஜண்ட் என்றும் தெரியவந்தது. அவர் பிறந்த தேசம் வட ஆற்காடு ஜில்லா. வெகுகாலம் தெலுங்கு தேசத்திலும், பிறகு கொஞ்சநாள் கல்கத்தாவிலும் வாசம் செய்தவர். அவருடைய குமாரத்திகளில் மூத்தவர்கள் இருவருக்கும் விவாகம் ஆகிவிட்டது. கடைசிப் பெண்ணுக்குக் கலியாணம் ஆகவில்லை. அவளுக்கு வயது பதினான்கு. பார்வைக்கு இலட்சணமாயிருப்பாள். பிடில் அற்புதமாய் வாசிக்கத் தெரியும். வயது ஐம்பத்திரண்டு ஆன போதிலும், ஜகதீச சாஸ்திரி நல்ல திட சரீரமுடையவராயிருந்தார். அவரைப் பார்த்தவர்கள் முப்பத்தெட்டு. நாற்பது வயதுக்குமேல் மதிப் பிடமாட்டார்கள் என்று நாகேசுவரய்யர் அபிப்பிராயப்பட்டார். ஆகவே, கலியாணப் பேச்சு ஏற்பட்டது.

நாகேசுவரய்யர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்குச் சேரவேண்டிய பணத்தைச் செலவழித்துவிட்டு அதை ஈடு செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததாய்த் தெரியவந்தது. மேற்படி பாக்கி தீர்ப்பதற்காக ஜகதீச சாஸ்திரிகள் அவருக்கு ரூபா 6,000 கொடுத்து விடுவதென்றும், கலியாணத்தை ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் திருப்பதியில் உடனே நடத்திவிடுவதென்றும் ஏற்பாடாயிற்று. அவ்வாறே பணம் கொடுக்கப்பட்டு. கலியாணமும் நடந்தேறியது. நாகேசுவரய்யர் அவசர காரியமாய்க் கல்கத்தாவுக்குப் போய்விட்டார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லாதது ஜகதீச சாஸ்திரிகளுக்குக் கொஞ்சம் வியப்பாயிருந்தது. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தமது இளம் மனைவியை அழைத்துக்கொண்டு இரங்கூன் சென்றார்.


இரண்டு வருஷத்துக்குள் ஜகதீச சாஸ்திரிக்கு ஒரு புதல்வன் பிறந்தான். முதுவயதில் பிறந்த குழந்தையானபடியால் சாஸ்திரிகள் மகனை அருமையாய் வளர்க்கலானார்.

இரண்டு மூன்று வருஷத்துக்குப் பிறகு, ஊரில் அவர் மனைவியின் நடத்தையைப் பற்றிப் பேச்சு உண்டாயிற்று. இது சாஸ்திரிகளின் காதுவரைக்கும் எட்டியது. எனினும், அவர் ஒன்றும் செய்வதற்கு வழியில்லாமல் இருந்தார். கடைசியாக ஒருநாள் சாஸ்திரியார் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவியைக் காணவில்லை. பிடிலையும். அணிந்திருந்த நகைகளையும். பெட்டியிலிருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, கிழவனாரைப் பரிதபிக்க விட்டுவிட்டுக் காணாமல் போய்விட்டாள் அவள்.

பையனுக்கு இப்போது வயது ஏழு. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய படிப்பு முதலிய விஷயங்களில் சாஸ்திரியார் மனதைச் செலுத்தினார். முன்போல், சில முக்கியமான நண்பர்களின் வீடுகளில் புரோகிதமும் செய்துவந்தார். இவ்வாறு சிறிது சிறிதாக, சாஸ்திரி தமது துக்கத்தை மறந்து காலங்கழித்து வந்தார்.

இராமச்சந்திரன், இதுவே பையன் பெயர். நன்றாய்ப் படித்துப் பத்தொன்பதாம் வயதில் கல்கத்தா பி. ஏ. பரீட்சையில் தேறினான். அவனை அழைத்துக் கொண்டு சாஸ்திரிகள் 1930-ம் வருஷத்தில் மறுபடியும் தமது ஜன்மதேசம் வந்தார்.

ஜகதீச சாஸ்திரிக்கு மாமா பிள்ளை ஒருவர் மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற வக்கீலாயிருந்து வந்தார். அட்வகேட் ஜெனரல் பதவி காலியானால். அவருக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டார்கள். அவர் பெயர் ஸி.வி.சீதாராமய்யார் . கப்பலை விட்டிறங்கிய ஜகதீச சாஸ்திரிகள். இவருடைய வீட்டில் இரண்டு நாள் தங்கினார். சீதாராமய்யரின் மனைவி இராமச்சந்திரனைப் பார்த்தாளோ இல்லையோ, தன்னுடைய பெண் பார்வதியை அவனுக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள். “இதைவிட நல்ல வரன் எங்கே கிடைக்கப் போகிறது? பையன் பி. ஏ. தேறியிருக்கிறான். ஐ.சி.எஸ். பரீட்சைக்குச் சீமைக்கு அனுப்பலாமே?” என்று சீதாராமய்யரிடம் மனைவி சொன்ன போது. அவருக்கும் அது பிடித்தமாயிருந்தது. சாஸ்திரிகளிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவருக்கும் சம்மதமாயிருந்தது. ஆனால், ஒரே ஒரு இடையூறு குறுக்கே நின்றது. அதுதான். புதிதாக அப்போது நிறைவேறியிருந்த சாரதா சட்டம். பெண்ணுக்குப் பதினொரு வயதுதான் ஆகியிருந்தபடியால் சட்டத்தை மீறாமல் கலியாணம் நடத்த முடியாது. அட்வகேட் ஜெனரல் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் சட்டத்துக்கு விரோதம் செய்யமுடியுமா?

ஆனால். சீதாராமய்யரின் மனைவிக்கு இவ்வளவு நல்ல மாப்பிள்ளையைக் கைநழுவ விடுவதில் பிரியமில்லை. கலியாணம் இப்போது நடக்காவிட்டாலும் தஸ்தாவேஜி மூலமாய் நிச்சயதார்த்தம் செய்து விடவேண்டுமென்று வற்புறுத்தினாள். அவ்வாறே. சீதா ராமய்யர் தம்முடைய செலவில் பையனை ஐ.சி. எஸ்.பரீட்சைக்குச் சீமைக்கு அனுப்ப வேண்டியதென்றும். மூன்று வருஷங் கழித்துக் கலியாணம் செய்துவிட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. பெண் கறுப்பாயிருந்தபடியால் பையனுக்கு மட்டும் அவ்வளவு திருப்தியில்லை. ஆனால் தகப்பனார் வார்த்தையை முன்னிட்டும், சீமைக்குப் போக ஆசையாயிருந்தபடியாலும், அவன் ஆட்சேபிக்கவில்லை.


இராமச்சந்திரன் சீமைக்குப் பிரயாணமான பிறகு, ஜகதீச சாஸ்திரி திரும்பவும் இரங்கூனுக்குச் சென்றார். ஆனால், இந்தத் தடவை அவர் மனம் அங்கு நிம்மதியாயில்லை. புதல்வன் பேரிலும், ஓடிப்போன மனைவியின் பேரிலும் அடிக்கடி ஞாபகம் சென்றது.

மனநிம்மதியில்லாமையால் தேகதிடமும் குறைந்து போயிற்று. உடம்பில் ஏதோ வியாதியென்று எண்ணி டாக்டரைக் கேட்டார். உடம்புக்கு ஒன்றுமில்லையென்றும், சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது நல்லதென்றும் டாக்டர் சொன்னார். சாஸ்திரிகளுக்கும் இது உசிதமாய்த் தோன்றியபடியால், கடைசிமுறையாக இரங்கூனை விட்டு இந்தியாவுக்குப் பிரயாணமானார்.

கப்பலில், எதிர்பாராத ஒரு சம்பவம் நேர்ந்தது. இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்த ஒரு ஸ்திரீ. காணாமற்போன தமது மனைவியைப்போல் இருந்ததாக அவருக்குத் தோன்றியது. கொஞ்சம் வித்தியாசம் இருந்தது வாஸ்தவந்தான். ஆனால், அவள் போய் இப்போது பதினைந்து வருஷங்களுக்குமேல் ஆகி விட்டதல்லவா? சென்னைக்குச் சமீபமாக வருவதற்கள் அந்த ஸ்திரீ தமது மனைவியாய்த்தானிருக்க வேண்டுமென்று சாஸ்திரிகள் முக்காலே மூன்று வீசம் பங்கு நிச்சயமாக எண்ணினார். கப்பல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த ஸ்திரீ தன் சாமான்களுடன் இறங்குவதற்குத் தயாராய் நின்றபோது ஜகதீச சாஸ்திரிகள் அவள் எதிரில் போய் நின்றார். ஒருவரை யொருவர் ஒரு கணநேரம் உற்று நோக்கினார்கள். “அங்கப்ப நாயக்கன் தெருவு. 614-ம் நம்பர் வீட்டில் நான் தங்குவேன். என்னுடன் பேச வேண்டுமானால் அங்கே வாருங்கள் ” என்று அந்த ஸ்திரீ சொன்னாள். “நீ தானா? நான் நினைத்தது சரிதான்” என்று சொல்லி சாஸ்திரி சிரித்தார்.

“ஆமாம்! நான்தான்” என்று அவளும் சிரித்தாள்.


சாஸ்திரிகள், சம்மந்தி சீதாராமய்யர் வீட்டில் மிக்க உபசாரங்கள் செய்யப் பெற்றுச் சுகமாக இரண்டு நாள் இருந்தார். தமிழ்நாடெங்கும் பஞ்சமர்களுக்குக் கோயிலைத் திறக்கும் விஷயத்தைப்பற்றியே பேச்சாயிருந்தது. சநாதன தர்மம் போய்விட்டது என்று சீதாராமய்யர் வீட்டில் எல்லோரும் சொன்னார்கள். சாஸ்திரிகளுக்கும் அப்படித்தான் தோன்றிற்று.

“சாரதா சட்டம் செய்யும் போது நீங்கள் எல்லாம் ஏன் சும்மாயிருந்தீர்கள்? அதனுடைய பலன் தான் இது” என்று சீதாராமய்யர் மனைவி சொன்னாள்.

“உளறாத ! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று சீதாராமய்யர் கேட்டார்.”எல்லாம் ஒன்றுதான். சாஸ்திரத்துக்கு விரோதமாக ஒன்று நடந்தால் பிறகு எல்லாவற்றிற்கும் இடங்கொடுத்துப் போய்விடுகிறது” என்றாள் அம்மாள்.

“ரொம்ப வாஸ்தவம்” என்றார் ஜகதீச சாஸ்திரிகள். சீதாராமய்யரிடம் தொழில் பழகும் வக்கீல் ஒருவர் அங்கிருந்தார். “ஆமாம் நீங்கள் கப்பலேறி இரங்கூனுக்குப் போனீர்களல்லவா? அதிலிருந்துதான் எல்லாவற்றிற்கும் இடங்கொடுத்துவிட்டது” என்று அவர் மெதுவாகச் சொன்னார்.

“இது என்ன சம்பந்தமில்லாத பேச்சு? ஜீவனார்த்தமாக இரங்கூன் போவதும், கோயில்களில் பறையர்களை விடுவதும் ஒன்றுதானா?” என்று சீதா ராமய்யர் ஆத்திரமாய்ப் பேசினார்.

“சாஸ்திரத்தில் நாலு வர்ணங்கள் தானே சொல்லியிருக்கிறது? ஐந்தாவது வர்ணம் கிடையாதே. இந்த ஜனங்களை நாலாவது வர்ணமாகப் பாவித்து நடத்தினால் என்ன மோசம் முழுகிவிடும்?” என்று சின்ன வக்கீல் கேட்டார்.

ஜகதீச சாஸ்திரிகள் “இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு களைப் படித்துவிட்டு சாஸ்திரங்களைக் கரைகண்டது போல் பேசுகிறீர்கள். ஆதி சிருஷ்டி நாலு வர்ணந்தான். அதற்குப் பிறகு வர்ணக் கலப்பு ஏற்பட்டு சங்கர சாதி உற்பத்தியாயிற்று. பிரதிலோமச் சேர்க்கைகளின் பலனாய் சாதிச் சண்டாளர்கள் உண்டானார்கள்”.

சின்ன வக்கீல் , “பிரம்மாவுடைய எண்ணம் சாயாமல் போச்சுபோலிருக்கிறது. பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லாரும் கெட்டுப்போன பிராமண ஸ்திரீகளின் சந்ததிகள் என்றா சொல்லுகிறீர்கள்?”

சாஸ்திரிகள் “அப்படியெல்லாம் நோண்டிப் பார்த்தால் சரிப்படாது. தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சண்டாளர்கள் என்று வைத்து நடத்தி வந்திருக்கிறோம். இதற்கெல்லாம் ருசு கேட்கக்கூடாது. நாம் பிராமணர்கள் என்பதற்கு ருசு என்ன?”

இதற்குள் கோர்ட்டுக்குப் போக நேரம் ஆகிவிட்டது. கூட்டம் கலைந்ததும், ஜகதீச சாஸ்திரி அங்கப்ப நாயக்கன் தெரு, 614-ம் நம்பர் வீட்டுக்குச் சென்றார்.

***

அன்று மாலை ஜகதீச சாஸ்திரி சென்ட்ரல் ஸ்டேஷனில் டிக்கட் வாங்குமிடத்தில் நின்று காசிக்கு டிக்கட் கேட்டார். காலையில் அவரைப் பார்த்ததற்கு இப்போது பத்து வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.

“காசிக்கு எந்த மார்க்கமாய்ப் போகிறீர்கள். தாதா?” என்று டிக்கட் குமாஸ்தா கேட்டான்.

“எந்த மார்க்கமாயிருந்தாலும் சரிதான். சுருக்கு வழியாய்க் கொடுங்கள். சீக்கிரம் கங்கையில் ஸ்நானம் செய்து பாவங்களைப் போக்கிக்கொள்கிறேன்” என்றார் சாஸ்திரிகள்.

ஜகதீச சாஸ்திரி அங்கப்ப நாயக்கன் தெரு . 614-ம் நம்பர் வீட்டில் தமது மனைவியைக் கண்டு தெரிந்து கொண்ட விவரங்கள் அவருக்கு அவ்வளவு வைராக்கியத்தை உண்டுபண்ணிவிட்டன.

ஜகதீச சாஸ்திரியின் மாமனார் நாகேசுவர அய்யர் உண்மையில் ஐயருமல்ல: வைர வியாபாரியுமல்ல. அவரது உண்மைப் பெயர் பரியாரி நாகன். அஸிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனரல் தியாகராஜ அய்யர் அவனைக் கல்கத்தாவுக்குத் தம்முடன் அழைத் துச் சென்றார். அங்கே அவன் ஸலூன் வைத்து நடத்திக் கொண்டிருக்கையில் ஓர் அநாதைக் கைம்பெண்ணைச் சேர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். பிறகு மோசத் தொழில்களில் புகுந்து கெட்டுப் போனான். இவர்களுக்குப் பிறந்த பெண் தான் ஜகதீசசாஸ்திரியின் மனைவி. நாகேசுவரய்யர் என்கிற பரியாரி நாகன், ஜகதீச சாஸ்திரியின் கலியாணத்திற்குப் பிற்பாடு. ஏதோ ஒரு மோசடி வழக்கில் ஏழு வருஷம் தண்டனையடைந்து இப்போது லாகூர் சிறைச்சாலையில் கைதியாயிருந்தான்.

ஜகதீச சாஸ்திரியின் மனைவி இரங்கூனில் அவரை விட்டுப் பிரிந்த பிறகு சில நாட்கள் இங்குமங்கும் அலைந்து. கடைசியாக, சினிமா கம்பெனி ஒன்றில் சேர்ந்து நிறையப் பணம் சம்பாதித்து வந்தாள். தனக்குப் பணத்திற்குக் குறைவில்லையென்றும், கூடியவரையில் சந்தோஷமாய்க் காலங் கழிப்பதாகவும், உதவி எதுவும் தேவையில்லையென்றும் தெரிவித்தாள்.

“நானும் என் தகப்பனும் சேர்ந்து உங்களை ஏமாற்றினோம். பகவான்தான் எங்களை மன்னிக்க வேண்டும்” என்றாள்.

ஜகதீச சாஸ்திரிகளுக்குத் தம் அழகிய மனைவியிடம் அன்பு அதிகரித்தது. குழந்தையைப் போல் அழுதார். “இந்தப் பாழும் சாதிகளை யார் சிருஷ்டித்தது? சுவாமி ஒருநாளும் சிருஷ்டித்திருக்கமாட்டார். போனதெல்லாம் போகட்டும். நாம் மறுபடியும் இந்த ஊரைவிட்டு இரங்கூனுக்குப் போய்ச் சௌக்கியமாயிருக்கலாமே?” என்றார்.

“ஐயோ வேண்டாம். நீங்கள் என்னைத் தொடுவதற்குக்கூட நான் தகுதியற்றவள்: நான் கட்டிக் கொண்டிருக்கிற பாவம் பதினாலு தலைமுறைக்கும் தீராது. காசிக்குப் போய் கங்கையில் ஸ்நானம் செய்து என்னுடன் வாழ்ந்த பாவத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றாள் சாஸ்திரியின் மனைவி. அவ்வீட்டை விட்டு வெளியே வந்ததும் கிழவர் பெரிய பயங்கரத்தில் ஆழ்ந்தார். சீமையில் படித்துக்கொண்டிருந்த தமது பையனை நினைத்துக் கொண்டார். சில மாத காலத்தில் அவன் திரும்பி வருவான்; கலியாணம் நடக்க வேண்டும். அவன் இந்த துன்மார்க்க ஸ்திரீயின் புதல்வன் என்று மட்டும் தெரிந்துவிட்டால்? – அவள் என்ன சாதி? பையன் என்ன சாதி? சீதாராமையரும், அவர் மனைவியும் என்ன சொல்வார்கள்? – சாஸ்திரிகளின் தலை சுழன்றது. தள்ளாடிக்கொண்டே சென்று ஸ்டேஷனை அடைந்தார்.


சாஸ்திரிகள் ரயில் வண்டியில் பிரயாணம் தொடங்கிய இரண்டாம் நாள் இரவு, பக்கத்திலிருந்த பிரயாணிகள் இரக்கங்கொண்டு கிழவருக்குப் படுக்க இடங் கொடுத்தார்கள். களைப்புற்றிருந்த சாஸ்திரிகள் விரைவில் தூங்கிவிட்டார். தூக்கத்தில் ஒரு பயங்கரமான கனவு கண்டார்.

இராமச்சந்திரன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். பார்த்தால் பிராமணப் பையனாக இல்லை. சாபம் பெற்ற திரிசங்குவைப்போல் பறைப்பையனாய் வந்து சேர்ந்தான்! ஐ.சி.எஸ்.பதவி ஒன்றுமில்லை. கூலிக்காரப் பையனாயிருந்தான். ஆனால் – கனவின் மாயை – சாஸ்திரிகள் முன்னை விட அதிகமாக அவனிடம் அன்பு கொண்டிருந்தார்.

சீதாராமய்யரும், அவருடைய மனைவியும். தங்களை வீட்டை விட்டுத் துரத்துவதாகக் கண்டார். தோட்டக்காரன், மோட்டார் டிரைவர். தோட்டி முதற்கொண்டு அவர்களை ஏளனமாகப் பேசி, வீட்டுக்கு வெளியே துரத்தியடித்தார்கள். தெருவில் கூட்டம் சேர்ந்துவிட்டது. சாஸ்திரிகள் பிள்ளையுடன் எப்படியோ தப்பியோடினார்…

சாஸ்திரிகள் இப்போது தமது சொந்தக் கிராமத்தில் இருந்தார். அவர் ஒரு பறைப்பையனைத் தம் வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறார் என்று ஊராருக்குத் தெரிந்து போயிற்று. அவர்கள் கூட்டமாய் வந்து அவரையும் அவர் பையனையும் அக்கிரகாரத்தை விட்டு ஓட்டினார்கள்…

சாஸ்திரிகள் மறுபடியும் தம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார். அங்கு ஒரு மோட்டார் பஸ்ஸில் ஏறினார்கள். கண்டக்டர் வந்து “இந்த பையன் என்ன சாதி” என்று கேட்டான். கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த ஒரு கிழப் பிராமணர். ‘ஐயோ, இவன் பிரதிலோம் சந்ததி, சண்டாளன்’ என்று கூச்சலிட்டார். “அவனை இறக்கி விடு” என்று வண்டியிலிருந்த எல்லோரும் கத்தினார்கள் . பஸ்காரன் பையனை இழுத்துக் கீழே இறக்கினான். சாஸ்திரிகளும் உடனே குதித்து இறங்கினார். வெட்கம் பொறுக்க முடியாமல் பக்கத்திலிருந்த ஒரு சந்தில் போய் இருவரும் ஒளிந்து கொண்டார்கள்…

மறுபடியும் கனவு திடீரென்று மாறியது. மயி லாப்பூரில் சீதாராமையரின் ஆபீஸ் . ‘என் குழந் தையை உங்களிடம் குமாஸ்தா வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாதா?’ என்று சாஸ்திரிகள் சீதா ராமையரைக் கெஞ்சிக் கேட்டார்…

“அதெப்படி முடியும்? என் சம்சாரம் சண்டை பிடிப்பாளே?..” என்றார் சீதாராமையர். அச்சமயம் சீதாராமையர் மனைவி அங்கு வந்து சேர்ந்தாள். ஜகதீச சாஸ்திரி பயத்தால் நடுநடுங்கினார்.

“பறைப்பையன் எங்கள் ஆபீஸில் உட்கார்ந்து வேலை செய்வதா? ரொம்ப நன்றாயிருக்கிறது! எங்களுக்கு வேண்டாம். பணத்தைக் கீழே வையும்?..” என்று சொல்லிச் சீதாராமையரின் மனைவி தஸ்தாவேஜை எடுத்து நீட்டினாள். அது இராமச்சந்திரன் கலியாணத்தைப்பற்றிய தஸ்தாவேஜு, சீதாராமையர் அதுவரை 15,000 ரூபா இராமச்சந்திரனுக்காகச் செலவு செய்திருந்தார். அதைத் திருப்பிக் கொடுக்கும் படி சாஸ்திரிகளைக் கேட்டார்கள்.

காட்சி மறுபடியும் மாறியது. ஒரு மடாதிபதி காஷாயதாரியாய், கையில் திரிதண்டத்துடன் மான் தோல் ஆஸனத்தில் வீற்றிருந்தார். “சுவாமி! என் மகனை பிராமணனாக்க முடியாதா?..” என்று சாஸ்திரிகள் கேட்டார். காஷாயதாரி உச்சஸ்வரத்தில் சொல்லுகிறார்: “முடியவே முடியாது. சாதிச் சண்டாளனுக்குப் பிராயச்சித்தம் இல்லை. அவனுடைய நீச உடம்பு எரிந்து சாம்பலான பிறகுதான் சண்டாளத்துவம் நீங்கும். இந்த ஜன்மத்தில் தன் குலதர்மத்தைச் சரிவரக் கடைப்பிடித்து வந்தானானால், அடுத்த ஜன்மத்தில் கொஞ்சம் உயர்ந்த குலம் சித்திக்கலாம். ஆனால் அனேக ஜன்மம் எடுத்த பிறகுதான் பிராமணனாக முடியும்..”

ஜகதீச சாஸ்திரி கோபாக்கிராந்தராகிக் கூச்ச லிட்டார். “அட பாவி! நீ சந்நியாசியா? நம்பிக்கைத் துரோகக் கேஸை மறந்தாயா? பொய் விண்ணப்பங்கள் போட்டாயே ! குடிக்கூலிக்கு எடுத்த சாமானை விற்றாயே! ஜயிலுக்குப் போகவேண்டியவன் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டாயே! அதற்கெல்லாம் ஒன்றுமில்லையோ?”

மடாதிபதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன. “பிரஷ்டா! உன்னைச் சபித்தேன்! என் பூர்வாசிரமத் தைப்பற்றிப் பேசிவிட்டாய்…” என்று சொல்லிக் கொண்டு தண்டத்தைத் தூக்கி அடிக்க வந்தார். சாஸ்திரி ஓடி வாசற் கதவில் தலையை முட்டிக் கொண்டார்.

தூங்கிக் கொண்டிருந்த கிழவர் ரயில் பலகையிலிருந்து புரண்டு கீழே விழுந்தார். அந்த அதிர்ச்சியில் கண் விழித்தார். பக்கத்திலிருந்தவர்கள் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள்.


மறுநாள் இரவும் சாஸ்திரிகளுக்குத் தூக்கத்தில் இதே மாதிரி மகனைப்பற்றிய கனவுகள் வந்தன. கண்ணை மூடினால் உடனே சொப்பனந்தான்.


சாஸ்திரிகள் மறுபடியும் தம் புதல்வனுடன் அலைந்து கொண்டிருந்தார். பசி எடுத்து ஒரு காப்பி ஹோட்டலுக்குள் இருவரும் சென்றார்கள். பரிசாரகன் இலையில் இட்டிலி கொண்டுவந்து இரண்டு பேருக்கும் வைத்தான். சாப்பிட ஆரம்பிக்கும் போது அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். அந்தப் பையன் யார்? என்று கேட்டார். சாஸ்திரிகள் திடுக்கிட்டுப் பதில் சொல்லாமல் இருந்தார். “அவன் சண்டாளன்” என்று ஒரு குரல் கேட்டது. உடனே எல்லோரும் சேர்ந்து “சண்டாளன்! சண் டாளன்! துரத்துங்கள் வெளியே” – என்று கத்தினார்கள். பரிசாரகன், பையன் முன் இருந்த இட்டிலியை எடுத்து எச்சில் தொட்டியில் எறிந்துவிட்டு, பையனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். “என் மகன்! என் மகன்” என்று கத்திக்கொண்டு சாஸ்திரிகள் அவன் பின்னோடு வெளியேறினார்.

கும்பகோணம் ராவ்பஹதூர் நரசிம்மாச்சாரியார் டில்லி சட்டசபை அங்கத்தினர். “நீங்கள் டில்லிக்குப் போகும் போது என் பையனைக் குமாஸ்தாவாக அழைத்துக்கொண்டு போங்களேன். பையன் பி.ஏ. படித்திருக்கிறான். என்னுடைய பாவத்தினால் திடீரென்று பறைப்பையனாகி விட்டான்” என்றார்.

“முடியாது. சாஸ்திரிகளே! டில்லியில் நம்ம ஊர்க்காரர்கள் சாதி வித்தியாசம் அதிகமாய்ப் பார்ப்பதில்லை என்பது வாஸ்தவந்தான். ஆனாலும் பறைப் பையனை வீட்டுக்குள் எப்படி வைத்துக்கொள்ள முடியும்? சூத்திரப் பையனாயிருந்தாலும் பாதகமில்லை” என்றார் நரசிம்மாச்சாரியார். “அப்படியானால் அவனை சூத்திரப்பையனாய் செய்துவிடட்டுமா?” என்று சாஸ்திரிகள் ஆவலுடன் கேட்டார்.

“நான் எப்படியப்பா சூத்திரப்பையனாக முடியும்? நான் தான் சங்கர சாதியாச்சே? நீங்கள் தானே அப்படிச் சொன்னீர்கள்?” என்றான் பையன்.

“ஐயோ , வாஸ்தவந்தான். சாஸ்திரங்களை யாராவது கொளுத்திச் சாம்பலாக்கமாட்டார்களா?” என்று சாஸ்திரி கத்தினார்…

“அப்பா அப்பா! ரயில் போர்ட்டர் வேலைக்குப் போய்விடுகிறேன். அங்கே யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்” என்றான் இராமச்சந்திரன்.

“அதையும் பார்க்கலாம். குழந்தாய்” என்றார் சாஸ்திரிகள். உடனே இராமச்சந்திரன் ரயில் போர்ட்டராக மாறினான். முதல் முதல் அவன் தூக்கிய பெட்டிக்கு நாலு அணா கிடைத்தது. அடுத்த தடவை அவன் இன்னொருவருடைய பெட்டியையும் மூட்டையையும் தூக்கிக்கொண்டு கிளம்பியபோது, ஒரு பையன் ஓடிவந்து. “சாமி! சாமி! அவன் பறைப் பையன்” என்றான்.

பெட்டி மூட்டைகளின் சொந்தக்காரர் ஒரு பிராமண உத்தியோகஸ்தர். அவர், “அட பயலே எப்படியடா என் மூட்டையைத் தொட்டாய்?” என்று கத்திக்கொண்டே குடை நுனியால் பையன் முதுகில் குத்தினார். அவன் பெட்டியையும் படுக்கையையும் கீழே போட்டுவிட்டு ஓடினான்…

சாபத்துக்காளான பிள்ளையுடன் சாஸ்திரிகள் மீண்டும் அலையலானார். ஆகாயவெளியில் எங்கிருந்தோ ‘சண்டாளன்! சண்டாளன்’ என்னும் சப்தம் வந்துகொண்டிருந்தது. மரங்களின் இலைகள் ஆடும் ஓசை. ‘சண்டாளன்’ ‘சண்டாளன் என்பது போலத் தோன்றிற்று. பட்சிகளும் ‘சண்டாளன்’ ‘சண்டாளன்’ என்று பாடின.

பையனுடன் அலைந்து அலைந்து, கிழவர் களைப்புற்றுப் போனார். கால் வலித்தது. தாகம் தொண்டையை வறட்டிற்று. சமீபத்தில், குளம் கிணறு ஒன்றையும் காணோம்.

“குழந்தாய்! ரொம்பத் தாகமாயிருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் வாங்கிக்கொண்டு வருகிறாயா?” என்று சாஸ்திரிகள் சொன்னார்.

“நான் கேட்டால் யார் கொடுப்பார்கள். அப்பா” என்றான் ராமச்சந்திரன்.

“வாஸ்தவந்தான், குழந்தாய்! நாம் சாக வேண்டி யதுதான்.”

” சாகவாவது! அப்பா. எழுந்து நடங்கள். சீமைக்குப் போவோம். அங்கே சாதித் தீட்டுக் கிடையாது.”

“சீமைக்கு எப்படிப் போவது? நாம் இன்னும் விருத்தாசலத்தில் தானே இருக்கிறோம்?” என்றார் சாஸ்திரிகள்.

“அதோ ஒரு படிக்கிணறு இருக்கிறது. இறங்கித் தண்ணீர் குடிக்கலாம்” என்று பையன் அழைத்துக்கொண்டு போனான். பயந்து நடுங்கிக்கொண்டே கிணற்றில் இறங்கினார்கள். அங்கு ஒருவரும் இல்லை. இருவரும் தாகம் தணியும்படி தண்ணீர் குடித்தார் ள். மறுபடியும் படியிலேறி வெளியே வந்துகொண்டிருக்கையில், கிழவி ஒருத்தி அங்கே வந்தாள். அவர் ளைப் பார்த்ததும். ‘ஐயோ! இதென்ன? யாரோ பறைப்பையன் வந்து ஊர்க்கிணற்றைத் தீட்டாக்கி விட்டானே, பாவி’ என்று கூச்சலிட்டாள்.

உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாரும் சேர்ந்து இராமச்சந்திரனை அடிக்க வந்தார்கள். சாஸ்திரிகள் பையனைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு ஓடினார். தூரத்தில் ஒரு கோயில் தென்பட்டது . “சுவாமி! பகவானே! நீதான் காப்பாற்ற வேண்டும்..” என்று சத்தமிட்டுக்கொண்டு கோயிலை நோக்கி ஓடினார். ஆனால் கோயில் அருகில் வந்ததும், சந்தேகம் வந்துவிட்டது.

“பகவானே! எல்லாரும் என் பையனைச் சண்டாளன் என்றார்களே! உன்னுடைய கோயிலுக்குள்ளாவது நாங்கள் வரலாமா? உன்னைத் தவிர எங்களுக்குக் கதி வேறு யார்?” என்று கதறினார்.

“வரலாம். அனைவருக்கும் தாயும் தகப்பனும் நான்” என்று கோயிலுக்குள்ளிருந்து அசரீரி போல் ஒரு சப்தம் வந்தது.

சாஸ்திரிகளும் பையனும் உள்ளே நுழைந்தார்கள். “அப்பா! கடைசியாக அடைக்கலத்திற்கு ஓர் இடம் கிடைத்தது” என்று பெருமூச்சுவிட்டார் சாஸ்திரிகள்.

அதற்குள்ளாக ‘ஐயோ சண்டாளன் கோயிலுக்குள் வந்துவிட்டானே’ என்று கூவிக்கொண்டு அர்ச்சகர் ஓடிவந்தார். இன்னும் பலரும் எங்கிருந்தோ மள மளவென்று வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“பறைப்பையனுக்கு என்ன தைரியம்? அடியுங்கள்! உதையுங்கள்” என்ற கூக்குரல் எழுந்தது.

“ஐயோ! அவன் பறையன் அல்ல; என் பிள்ளை. என் பிள்ளை” என்று சாஸ்திரிகள் கத்தினார்.

அந்தச் சமயத்தில் சாஸ்திரியின் மனைவி அங்கு எவ்வாறோ வந்து சேர்ந்தாள். “அது பொய் கிழவனை நம்பாதீர்கள்! அவன் என் பிள்ளை. நான் சங்கர சாதி. பையன் சண்டாளன் தான்” என்று அவள் கூவினாள்.

“அடி பாவி! துரோகி சண்டாளி!..” என்று சாஸ்திரிகள் கூச்சலிட்டார். பிறகு கூட்டத்தை நோக்கி, ‘பகவான் அசரீரியாக வாக்குக் கொடுத்தாரே, உள்ளே வரலாமென்று சொன்னாரே” என்று கத்தினார்.

“பொய், பொய்: அசரீரியாவது ஒன்றாவது? பறைப்பையனை உதையுங்கள், கொல்லுங்கள்” என்று கத்திக்கொண்டு ஜனங்கள் ராமச்சந்திரன் மீது விழுந்து தாக்கினார்கள்.

“ஐயோ” என்று கத்திக்கொண்டு சாஸ்திரி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அவரைத் தட்டி எழுப்பிய டிக்கட் கலெக்டர். “ஏன் தாத்தா அலறுகிறீர்? டிக்கட்டைக் காட்டும்” என்றான்.

நல்ல வேளை. எல்லாம் கனவுதான். என்றாலும் சாஸ்திரிகளின் உடம்பு வெகுநேரம் நடுங்கிக் கொண்டிருந்தது. ரயில் ஓடும் சத்தங்கூட அவர் காதில் சண்டாளன், சண்டாளன் – என்பது போல ஒலித்தது.

மங்களம்

சில நாட்களுக்குப் பின் இராமச்சந்திரன் சீமையிலிருந்து திரும்பி வந்து கர்நூலில் அஸிஸ்டெண்ட் கலெக்டரானான். ஜகதீச சாஸ்திரியின் மனைவி வெளியிட்ட விவரங்கள் இராமச்சந்திரனுக்காவது, சீதா ராமய்யருக்காவது ஒன்றும் தெரியாது.

கிழவரைக் காணோமே என்று எல்லாரும் பரிதபித்துச் சிலநாள் பேசிக்கொண்டார்கள். திடீரென்று வைரர்க்கியம் பிறந்து காசி யாத்திரை போய் அங்கே சந்நியாசம் வாங்கிக்கொண்டார் என்று சிலர் சொன்னார்கள் : கங்காந்தியில் முழுகி இறந்து போனார் என்று வேறு சிலர் சொன்னார்கள்.

கொஞ்சநாள் பார்த்தும் அவர் வராமற்போகவே. உடன்படிக்கையில் கண்டபடி. சீதாராமய்யரின் புதல்விக்கும். அஸிஸ்டெண்ட் கலெக்டர் ஜே.ஆர்.சந்திராவுக்கும் விவாகம் சிறப்பாக நடந்தேறியது.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *