சோதிடம் பொய்யாகுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 5,194 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவிடைமருதூர்ச் சாமிநாதையர் தொண்டை மண்டலம் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு வருஷங்களாகத் தலைமை உபாத்தியாயர் . அவர் மனைவி அகிலாண்டம்மாளும் அவரும் மிகவும் சந்தோஷமாகக் குடும்ப வாழ்வு நடத்தி வந்தார்கள். ஆனால் மனைவிக்கு ஒரு பெருங்குறை. குழந்தையில்லாதது!

“அதனாலென்ன, அகிலம் ! (இப்படித்தான் சாமி நாதையர் தன் மனைவியை அழைப்பது) பள்ளிக்கூடத் தில் இருநூறு குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனைப் பேரும் எனக்குக் குழந்தைகள் தான்” என்பார்.

“உங்களுக்கென்ன? பள்ளிக்கூடத்திலிருக்கிறவர் களெல்லாம் உங்கள் குழந்தைகளாயிருக்கலாம். நான் வீட்டில் தனியாகத்தானே இருக்க வேண்டும்! என் வாழ்வைப் பாருங்கள்” என்று மனைவி சொல்லுவாள்.

இதைப்பற்றிய குறை வரவர அகிலாண்டம்மா ளுக்கு அதிகமானதைப் பார்த்து, சாமிநாதையர் யாத் திரைபோவதாகத் தீர்மானித்தார். பள்ளிக்கூட நிர்வாக அதிகாரியிடம் இரண்டு மாதம் விடுமுறை பெற்றுக் கொண்டு தெற்கே பழநி, இராமேசுவரம் முதலிய ஸ்தலங்கள் பார்த்துவிட்டு, மைசூர் தேசத்தில் புத்திர சம்பத்துத் தருவதில் பெயர்போன ஓரிரண்டு அசுவத்த மரங்கள் பிரதட்சணமும் செய்து ஊர் திரும்பினார். அவருடைய ஜாதகம் பார்த்து ஒரு தெலுங்கு சோதிடர் சொல்லியிருந்த வாயிதாவுக்குச் சரியாக அகிலாண்டம்மாள் கருத்தரித்தாள்.

“சோதிடம் பொய்யாகுமா?” என்றார் சாமி நாதையர். ஆனால், அகிலாண்டம்மாள் அசுவத்தமரப் பூசைதான் இந்தப் பாக்கியம் தந்தது என்று சொல்லுவாள். எப்படியிருந்தாலும் சரி, சுகப் பிரசவமாய் எல்லாம் சரியாக முடிந்தால், பழநிக்கு இன்னொரு தடவை போவதாக விரதம் எடுத்துக்கொண்டு, நாள் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பல வருஷங்கள் கழித்துக் கருத்தரித்திருக்கிறபடியால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தானிருக்க வேண்டு மென்று சாமிநாதையருக்கு நண்பர்கள் சிலர் சொன்னார்கள். பிரசவத்திற்கு எழும்பூர் ஆஸ்பத்திரியிலேயே போயிருப்பதுதான் மேல் என்று அவர்கள் எல்லாரும் யோசனை சொன்னார்கள். அகிலாண்டம்மாளின் தாயார் வெகுநாட்களுக்கு முன்பே இறந்துவிட்டாள். அத்தை ஒருத்தி இருந்தாள். அவள் வரக்கூடுமென்று எதிர்பார்த்தார்கள். ஏதோ காரணத்தினால் அவள் வர முடியவில்லை. சரியான சகாயமில்லாதபடியால் பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி போவதே சரி என்று முடி வாயிற்று.

யாதொரு கஷ்டமும் இல்லாமல் சரியான பருவத்தில் பிரசவமும் ஆயிற்று. சாமிநாதையருடைய சந்தோஷத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆஸ்பத்திரி சிப்பந்திகளுக்கு. பணத்தை வாரி இறைப்பதாக உத்தேசித்தார்.

குழந்தை இரவு ஒன்பது மணிக்குப் பிறந்தது. வழக்கப்படி உடனே அதைக் குளிப்பாட்டி, எடை எடுத்துக் குறித்துக்கொள்வதற்காக, பிரசவம் பார்த்த தாதி குழந்தையை எடுத்துக்கொண்டு போனாள். இதற்காக ஆஸ்பத்திரியில் ஒரு தனி இடம். அதே சமயம் மொத்தம் மூன்று குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பிறந்தன. தாதிகளுக்கெல்லாம் பேருற்சாகம். தங்களுக்கே புத்திரோத்பவமான மாதிரி அவர்கள் களித்துக் கூத்தாடினார்கள்.

மூன்று குழந்தைகளுக்கும் செய்ய வேண்டியது எல்லாம் செய்தார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் இடுப்பிலும் ஒரு எண்ணிக்கைச் சீட்டுக் கட்டுவது வழக்கம். இல்லாமல் போனால், ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகள் மாறிப் போகுமல்லவா?

மூன்று குழந்தைகளில் ஒன்று கறுப்பு. மற்ற இரண்டு குழந்தைகளும் அனேகமாகச் சமநிறம், சம எடை.

அகிலாண்டம்மாளின் குழந்தையை எடுத்து வந்த தாதி, அதை அங்கிருந்த மற்ற தாதிகளிடம் ஒப்பித்து விட்டு ஏதோ வேலையாக வேறு இடத்திற்குப் போய் விட்டாள் .

முன்னதாகவே சீட்டுக் கட்டி விடுவது வழக்கம். அப்படிச் செய்யாமல் வம்பு பேசிக்கொண்டு மறந்து விட்டபடியால், அங்கிருந்த தாதிகளுக்கு எது அகிலாண்டம்மாள் குழந்தை, எது மற்றொன்று என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. கறுப்புக் குழந்தையைப் பற்றி தகராறு இல்லை. மற்ற இரண்டு குழந்தைகளைப் பற்றி ஒருவாறு தீர்த்துக்கொண்டு, சீட்டுகள் கட்டிவிட்டார்கள். அகிலாண்டம்மாள் குழந்தை ஒரு மாற்று அதிக வெளுப்பு. எட்டாவது வார்டில் படுத்திருந்த முஸ்லீம் பெண் கொஞ்சம் கறுப்பு. குழந்தையும் அப்படித்தானிருக்கும் என்று தாதிகள் தீர்மானித்தார்கள். கொஞ்சம் அதிக வெளுப்பு என்று தோன்றிய குழந்தையை அகிலாண்டம்மாளிடம் கொண்டு போய் ஒப்பித்துவிட்டார்கள். ஒரு தகராறும் ஏற்படவில்லை.

“எத்தனை அழகாக இருக்கிறது! உங்கள் குழந்தை ஏழு ராத்தல் எடை. இது உங்கள் முதல் குழந்தையா?..” என்றாள் தாதி. அவள் ஒரு பிரெஞ்சு வெள்ளைக்காரி .

“ஆமாம் -” என்றார் சாமிநாதையர். அவரும் அங்கே அப்போது இருந்தார். சொல்லிவிட்டு மனைவியைப் பார்த்தார். அவள் சோர்ந்து படுத்திருந்தாள். அவளுடைய அகமகிழ்ச்சி முகத்தில் புன்முறுவலாக மலர்ந்தது. தன் வாழ்வு பயன் பெற்றதாயிற்று என்று அப்போது அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே யில்லை .

‘குழந்தை திடமாக இருக்கிறதா?’ என்றார்.

“ஓ, இன்று பிறந்த மூன்று குழந்தைகளில் இது தான் முதல் தரமானது” என்றாள் தாதி ஆங்கிலத்தில்.

இதைச் சாமிநாதையர் அகிலாண்டம்மாளுக்குத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

இதற்குள் குழந்தையை முதலில் எடுத்துப்போன தாதி வந்தாள். அவளும் குழந்தையை எடுத்துச் சீராட்டி விட்டு, இரண்டு தாதிகளும் வெளியே போனார்கள்.

“தொப்புளுக்குப் பக்கத்தில் ஒரு மச்சம் இருந்ததே. அது எப்படி இவ்வளவு சீக்கிரம் மறைந்து போயிற்று?” என்றாள் முதல் தாதி.

‘அதுவா இவள் குழந்தை? அது எட்டாவது வார்டு அல்லவோ போய்விட்டது! அது முஸ்லீம் பெண் குழந்தை என்று எண்ணிச் சீட்டுக்கட்டினோம்” என்றாள் இரண்டாம் தாதி.

முதல் தாதி. “சரி. இனிமேல் பேசாதே. சும்மா இரு.”

இரண்டாம் தாதி. “சீ. பாவம்! உனக்கு ஞாபகம் நிச்சயமாக இருந்தால் மாற்றிக்கொடுத்து விடலாமே” என்றாள்.

முதல் தாதி “பைத்தியக்காரி! அப்படியெல்லாம் செய்தால் வம்பு ஆகும். நம் வேலை போய்விடும். தாயார் இரண்டு பேருக்கும் கூட சந்தேகமும் மன வருத்தமும் உண்டாகும். பேசாமலிரு” என்றாள்.

அப்படியே ஒரு கலவரமுமில்லாமல் பன்னிரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு, ஆண்டர்ஸன் தெருவில், அப்துல் தையாப்ஜி சேட்டு மனைவியும்.

திருவல்லிக்கேணியில் அகிலாண்டம்மாளும், தத்தம் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இரண்டு குழந்தைகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கப் பெற்றன. சேட்டு வீட்டில் ஏராளமான செல்வமும் சௌகரியமும். சாமிநா தையர் வீட்டிலோ கரைகடந்த அன்பும் சந்தோஷமும் நிறைந்து, சேட் வீட்டுக் குழந்தைக்கு எள்ளளவும் குறையவில்லை, வாத்தியார் வீட்டுக் குழந்தை மேல் செலுத்திய கவனமும் கருத்தும்.

குழந்தைக்கு ஒரு மாதம் ஆனபின் அகிலாண்டம்மாளின் அத்தை வந்தாள். குழந்தையின் கண்கள் தன் அண்ணன் முத்துசாமியின் கண்ணே தான். பிரத்தியட்சம் என்றாள். மூக்கு மட்டில் சாமிநாதையர் வீட்டு மூக்கு என்றாள். இதில் சாமிநாதையருக்குக் கொஞ்சம் திருப்தியே. இரண்டிலும் அகிலாண்டம்மாளுக்குத் திருப்தியே.

தையாப்ஜி சேட்டு வீட்டிலும் இவ்வாறே. ஆனால் அங்கே நடந்த சம்பாஷணைகள் நான் நேரே கேட்க வில்லை.

இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு. இப்போது அப்துல் தையாப்ஜி சேட்டு இறந்து போய், மகன் சுலேமான் சேட்டு. சிறுவயதிலேயே மிகுந்த சாமர்த்தியமாய் தகப்பனார் வைத்துப் போன பெரிய இறக்குமதி வியாபாரத்தை நடத்தி வருகிறார்.

சாமிநாதையர் மகன் பெயர் அசுவத்த நாராயணன்.எஸ்.எஸ்.எல்.ஸிக்குமேல் என்ன கஷ்டப்பட்டாலும் அவன் படிப்பு ஏறமுடியவில்லை. பம்பாயிக்குப் போய், இரண்டு மாதம் அங்கே நண்பர்களுடன் இருந்து கொண்டு சிபார்சுகள் சம்பாதித்து, எங்கெங்கேயோ தேடிப்பார்த்தும் வேலை ஒன்றும் கிடைக்காமல் திரும்பி வந்தான். அவனைப்பற்றிச் சாமிநாதையருக்கு எப்போதும் கவலை. தெலுங்கு சோதிடன் எழுதிக்கொடுத்திருந்த குறிப்பில், ‘மகன் பெரிய வியாபாரியாவான்; பாக்கிய சாலி: ஆனால் தாய் தகப்பனுக்கு ஒரு பிரயோசனமுமில்லை’ என்று எழுதியிருந்தது.

‘எனக்கும் உனக்கும் ஒரு பிரயோசனமும் இல்லாவிடினும். அவன் நன்றாயிருந்தால் போதுமே சோதிடம் எல்லாம் பொய்’ என்றார் சாமிநாதையர்.

‘பொய் என்று சொல்ல முடியுமா? எழுதியிருந்தபடி குழந்தை பிறக்கவில்லையா? பகவான் எழுத்துப் பொய்யாகுமா? இன்னும் என்ன வரும். என்ன வராது என்று யாருக்குத் தெரியும்? ஒரு செட்டியாரிடம் சேர்த்துப் பாருங்கள். வியாபாரத்தில் கெட்டிக்காரனாகத் தேர்ந்தாலும் தேறுவான்’ என்றாள் அகிலாண்டம்மாள்.

சோதிடம் பொய்யாகுமா?

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *