சோதனை – வேதனை – சாதனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 4,006 
 
 

(1970 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொடிய இருளின் ஆலிங்கத்திலிருந்து ஆதவன் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தான். எங்கு பார்த்தாலும் சோக ஒலியில் அந்தப் பெரிய பள்ளிவாசல் மண்டபம் – அல்லோலகல்லோலமாகக் காட்சியளித்தது. சூறாவளி, பெருவெள்ளம் என்ற பேய்களின் சீற்றத்துக்குள்ளான எல்லாரும் அங்கு குழுமியிருந்தனர். வரலாற்றிலே காணாத இந்த அழிவின் விளிம்பிலிருந்து தப்பிய அந்த பெரிய பள்ளிவாசல் மண்டபத்திலும், வெளியிலும் கடல்போல் பெருகியிருந்த மக்களின் இரைச்சலைக் காணும் பொழுது வாழ்க்கையே வெறுமை தட்டுகிறது. அங்கே ஏழை – பணக்காரன், முதலாளி – தொழிலாளி, போடியார், முதலியார், ஹாஜியார், கீழ்சாதி – மேல்சாதி என நேற்று வரை கண்ட கூட்டங்கள் இன்று எதுவித பேதமுமின்றி அல்லாஹ்வின் சந்நிதானத்தில் ஒரேவித ஒப்பாரி ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். பிள்ளைகளைத் தேடும் பெற்றார், பெற்றாரைத் தேடும் பிள்ளைகள், உற்றாரைத் தேடுவோர், உடன்பிறப்புகளைத் தேடுவோர் மத்தியில் பொருள் இழந்தோர்களினதும் விசும்பல் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.

எதுவுமே செய்ய முடியாத நான், அவன் விட்ட வழி!’ என்ற வேதத்தை நெஞ்சினிலே நினைத்துக் கொண்டு மண்டபத்தை சுற்றி வருகிறேன். அங்கே! ஓர் ஓரத்திலே பேரன், பேர்த்திகளை அழைத்தவாறு தம் குடும்பத்தாருடன் – இடையிலே வேட்டியுடன் மட்டும் – குந்திக் கொண்டிருந்தார் “தானா மூனா போடியார். கருமேகமாய் அவர் முகமதில் சோகப்படலம் கவிந்திருந்தது.

அவ்வளவு சோகத்திலும், என்னைப் பார்த்து சிரிக்கிறார்…. அவர் ஏன் சிரிக்கிறார் என்று நான் எந்தவித அர்த்தமும் கற்பித்துக் கொள்ளவில்லை. பதிலுக்கு வெறுமனே சிரிக்கிறேன். என்றாலும் அவரைக் கண்டதும் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த அந்த சம்பவம் என் நினைவில் நிழலாடியது. –

நானும் அதே ஊரைச் சேர்ந்தவன்தான். என் பெற்றார் விட்டுச் சென்ற சொத்துக்களைக் கொண்டு நானும் என் மனைவியும் பிள்ளைகள் இரண்டும் சுகமே வாழ்ந்து வந்தோம். இறைவன் நாட்டம் என்னவென்று சொல்வேன்! எமது வாழ்வு எனும் சந்தோஷப் படகினில் ஓட்டை ஒன்றை செய்து விட்டான். தலைவலி எனப்படுத்த என் அருமை மனைவி, அதன் பிறகு எழும்பவே இல்லை …… – இறைவனடி சேர்ந்து விட்டாள். என் செய்வேன்? சிறிது காலம் எனக்கு உலகமே இருளாகியது.

இருள் தட்டிய என் உலகம் கருமை நீங்கியபோது, வைராக்கியம் என்ற ஒளி உதயமானது. அது…. என் பிள்ளைகளின் எதிர்காலம் என்ற நாட்டத்திலே சுடர் விட்டது. சொத்து, சுகம் இன்று வரும், நாளை போகும்… எனவே….என் பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையும் படிக்க வைத்தேன்.

இன்று ஒரு மகன் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் விசேஷ டொக்டர். மற்ற மகன் கொழும்பு எஞ்ஜினியரிங் கோப்பரேஷனில் முதன்மை எஞ்ஜினியர். நான் தனியே இருக்கக் கூடாது எந்த நேரமும் அவர்கள் பக்கத்திலே இருக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் என் பிள்ளைகள் கொழும்பிலே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விசேஷ அரசாங்க தனி குவாட்டஸில் என்னை அழைத்துக் கொண்டனர்.

மரத்தினிலே பழுத்த பழங்கள் தொங்கும் பொழுது அங்கே பறவைகளுக்கும் அணில்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அது போல என் பிள்ளைகளின் உயர் நிலைமைதனைக் கண்டு பல பெரிய இடத்துப் புள்ளிகள் வலைவிரிக்கத் தொடங்கினர்.

சுய உழைப்பிலே நம்பிக்கை கொண்ட என் பிள்ளைகள் பெரிய இடங்களில் கொழுத்த சீதனத்துடன் வந்த கலியாணப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தனர். நானும் இதைப்பற்றி சந்தோஷப்பட்டேன். அதில் என் சுயநலம் இருந்தது. என்கூடப் பிறந்த சகோதரி கொழும்பிலே இருக்கிறாள். அவளுக்குப் பிள்ளைகள் அதிகம். கணவன் அரசாங்க உத்தியோகம் என்றாலும் பெண்பிள்ளைகளும் தொழில் பார்க்கும் நிலைமை. இரண்டு பெண் பிள்ளைகளும் அரசாங்கப் பாடசாலை உபாத்தியார் உத்தியோகம்…. பார்க்க இலட்சணமாக இருந்தார்கள். என்பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க வரும் பொழுது தங்க இடவசதி செய்து பல உதவிகளும் கொடுத்தவர்கள்…. அவர்களை மறக்க முடியுமா?

ஐம்பது ஆயிரத்துக்கு மேல் விலைமதிப்புள்ள என் வளவு – பிள்ளைகளின் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய்க்கு “தானா மூனா” போடியாரிடம் அடைவாக இருக்கிறது அதை மீட்டுவிட வேண்டும் என்ற ஆசை மட்டும் என் முகத்தில் கவலையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது…. என் வேதனையை நான் காட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் என் பிள்ளைகள் அதை உணர்ந்தே இருந்தார்கள் என்பதை அன்று தான் நான் உணர்ந்தேன்…

– அன்று சிந்தனை வசப்பட்டிருந்த என்னை அழைத்து பதினைந்தாயிரம் ரூபாய்களைத் தந்து “வளவை மீட்டு வாருங்கோ வாப்பா” என்றனர். ‘யா அல்லாஹ்! நீயே போதுமானவன்’ என இறைவனைப் புகழ்ந்து கொண்டே அடுத்த நாள் போடியாரைக் காணப் புறப்பட்டுச் சென்றேன்.

அங்கே! எனக்கு சோதனையின் மேல் வேதனைதான் காத்திருந்தது.

‘நீங்கள் எந்த நேரம் பணத்துடன் வந்தாலும் உங்கள் உடைமையை உங்களுக்கே தந்து விடுகிறேன்’ என அன்று சொன்ன போடியார் இன்று….. “பாரூக்…..! நீர் பணம் கொண்டுவர மட்டும் எனக்கு பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஐந்து வருடங்களில் வளவை மீட்காவிட்டால் எனக்குச் சொந்தம் என நீர் தானே எழுதிக்கொடுத்தீர்… – பத்தாயிரம் ரூபாய்க்கு ஆதாயம் பார்த்தாலும் எனக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கு மேல் நீர் தரவேண்டும்” என மரியாதை இன்றிப் பேசத்துவங்கினார்…

எனக்கு தலை சுற்றியது…. எல்லாரையும் ஏமாற்றுவது போல் என்னையும் மோசம் பண்ணிவிட்டார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நானும் சற்று சூடாகவே பேசினேன்… “போடியார்… நீர் மோசக்காரன் என்பது எனக்கு தெரியும். ஆனால் படுமோசக்காரன் என்பது இன்றுதான் தெரியும். இது பகற்கொள்ளை போடியார், ஏழைகளின் கண்ணீர்…. அது பொல்லாதது… எனக்கு வார்த்தைகள் தடுமாறின… “ஓ…ஓ…என்னமேன்.. என்னை பயமுறுத்துகிறாய்….. மரியாதையாக எழுந்து போம்…பகற் கொள்ளைக்காரனாம்; ஏதோ இல்லாத நிலைக்கு உதவி செய்தால் கடைசியில் தலையில் ஏற வாறாங்க….ம்ம்…

அன்று உமது பிள்ளைகளை மாப்பிள்ளையாக கேட்டேன்…தந்தீரா…? இன்றும் குடிமுழுகவில்லை…உன் வளவுடன் இன்னும் பத்து வளவும் நாலு தலைமுறைக்குப் போதுமான பணமும் தருகிறேன் சம்மதிப்பீரா….?” என கடைசியாக என் தன்மானத்துக்கு விலை பேசினார்…

“தூ…. உமது பணமும் நீரும்… எமக்கு துணிவிருக்கிறது; சொத்து சுகம் நீர் தர வேண்டியதில்லை ; அவை ஹலாலாக எங்களைத் தேடிவரும் நாள் தூரத்திலில்லை …. அந்த நேரம் உம்மை சந்திக்கிறேன்….” என சூளுரைத்துக் கொண்டே வெளியேறினேன்.

உடனே கொழும்பு வர வாகன வசதிகள் இல்லாததால் பெரிய பள்ளிவாசலில் தங்கலாம் என அங்கு சென்றேன். மரிப் நேரம்….மஃரிப் தொழுகை முடித்து பள்ளிவாசலில் சிறிது சாய்ந்திருந்தேன்…. அந்த நேரம் நான் என் வாழ்நாளிலேயே கேளாத சப்தம்; காற்று சுழன்றும் பட் இஷாவுக்கு நேரம் நெருங்க நெருங்க வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை……

“யா அல்லாஹ்….” இறையை வேண்டி தொழுது நின்றேன்….

சிறிது நேரம் அமைதி…கொஞ்சம் செல்லச் செல்ல…அடாத மழை…தண்ணீர் பெருக்கெடுக்கும் சப்தம்; மரங்கள் முறியும் ஓசை; வீடுகள் இடியும் சப்தம்.. என எங்குமே இருள்….மக்களின் கூக்குரல்…. அதைவிட பெரிய ஓசையுடன் கழன்று சுழன்று அடித்தது காற்று! காற்றின் வேகம்…. ‘யா அல்லாஹ்….’ என பள்ளிவாசல் நிலத்தில் சாய்ந்து விட்டேன்.

‘என்ன நடந்தது? எனக்கே தெரியாது. எனது நினைவு மீளும் பொழுது அதிகாலை நேரம்….காற்று அமைதி பெற்றிருந்தது…பள்ளிவாசல், மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.

என் சிந்தனை ஓட்டம் தடைப்படுகிறது.. என் வளவு, என் வீடு, என் நிலம் எனக் கூற யாராலும் முடியாத நிலை…மரம் மட்டைகள் வீடு வாசல்கள் எல்லாம் தரைமட்டமாக காட்சி தந்தன…நேற்று எவ்வளவு அழகாக இருந்த ஊர்! இன்று இந்தக் கோர நிலை! என் செய்வேன்?

பெரியோர், சிறியோர், பேதமின்றி அலறும் அவல நிலை…”பசி… பசி…” என்று அலையும் கூட்டம். இயற்கையின் கோரப் பசிக்கு தப்பிய கால் நடைகள் மனிதனின் கோரப் பசிக்கு இரையாகின…ஆனால், எத்தனை பேருக்கு…? மையத்துகள் குழிவெட்டி மூடப்படுகின்றன. அதுவும் அரை குறையாக…நடப்பது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல..பசி என்ற உணர்வைத் தவிர வேறு எதுவும் எனக்கேற்படவில்லை….கையிலே பணமிருக்கிறது…உணவு இல்லை….பணத்தை சாப்பிட முடியுமா…

குர்…. இர்… இர்… என்ற சப்தம்…. ஆகாயத்திலே ஹெலிகொப்டர்கள் இரண்டு தாழ்ந்து பறக்கின்றன…. “பாண் போடுகிறாங்க…பாண் போடுகிறாங்க…” என்ற சப்தம். எல்லாரும் ஹெலிகொப்டர்கள் செல்லும் திசை நோக்கி அதைவிட வேகமாக ஓடுகிறார்கள். “தானா மூனா” போடியாரும் கச்சையைக் கட்டிக்கொண்டு ஓடுகிறார்…நானும் அவர் பின்னால் ஓடுகிறேன். மடியிலே பணத்தைக் கட்டிக் கொண்டு ஒரு துண்டுப் பாணுக்காக….ஓடுகிறேன்; ஓடுகிறார்…இது இறைவன் சோதனையா…? வேதனையா…? அல்லது சாதனையா?

– 1970, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *