சோதனை மேல் சோதனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 2,117 
 

சிற்றுண்டி முடித்து விட்டு, ஹால் சோபாவில் அமர்ந்து பேப்பர் வாசிக்க ஆரம்பித்தேன். டைனிங் ஹாலில் அம்மா கொஞ்சம் பலமாக இரைப்பது கேட்டது. பேப்பரில் ‘சுடுக்கு’ புதிரை அவிழ்ப்பதிலிருந்து என் கவனம் சிதறியது.

‘சுந்தரி, என்ன தோசைக்கு நெய் போடாமக் குடுத்திருக்கே. நெய் தீர்ந்திச்சா?’ போன வாரம் தானே அரை கிலோ வாங்கினோம்?’.

நான் எதோ விபரீதம் ஆரம்பிக்கப் போகிறது என்று நினைத்தேன்.

‘ஏங்க, அம்மாவுக்கு இன்னும் சொல்லலையா. நேத்து வந்த ஹெல்த் ரிப்போர்ட் பத்தி சொல்லுங்கோ’.

எனக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அது ஒரு பிரபலமான உடல்நல பரிசோதனை சேவை வழங்கும் ஆன்லைன் நிறுவனம். ரூ 9000 பெறுமான எக்ஸிகியூடிவ் ஹெல்த் பாக்கெஜுக்கு வெறும் ரூ 1500 என்று சூப்பர் ஆஃபர். ஆசை யாரை விட்டது. வெகு காலமாக எந்தவித உடல்நல செக்கப் செய்துக் கொள்ளாத அம்மாவுக்கு, ஒன்றை பதிவு செய்தேன். ஆண்டவன் படைத்த உடம்பைப் பரிசோதிக்க ஒரு வாய்ப்பு.

‘நான் இன்னும் அதைப் பார்க்கவே இல்லையே. நீ என்னப் பார்த்தே அதிலே. ரிப்போர்ட்டை டவுன்லோடுப் பண்ணிட்டியா?’

‘பார்த்தேனே நல்லா. கொலஸ்டெரால் 250 மேலே இருக்கு. ரொம்ப ரிஸ்க் அளவாம். அதான், முதல்லே நெய் கட் பண்ணிட்டேன்’.

‘ஒரேயடியா கட் பண்ணா எப்படி? துளியூண்டுப் போட்டுருக்கலாம்’.

‘கொலெஸ்ட்ரால் மட்டுமில்ல, கூட சுகரும் 140 இருக்கு. இத்தன நாள் எப்படி தெரியாமப் போச்சின்னு தெரியல. அதனால, அம்மாவுக்கு சர்க்கரை இல்லா காபி தான் இனிமே’.

‘சர்க்கரையும் கட்டா? அப்போ BP எகிறிடுமே அம்மாவுக்கு?’

‘எகிறதா, ரிப்போர்ட் பிரகாரம் அவங்களுக்கு BP 150 இருக்கு. ஹார்ட் பீட்டும் ஜாஸ்தியாவே இருக்கு. அவங்கமட்டும் இல்ல, நாமளும் உஷாரா இருக்கணும். அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடாதீங்க. ஒன்னு கிடக்க, ரெண்டாயிடும்’. அம்மாவுக்கு இந்த வயசிலும் கேள்வி செல்வம் ரொம்ப நன்றாக இருக்கிறது.

‘நான் நல்லா கேட்டுண்டுத் தான் இருக்கேன். அப்போவேச் சொன்னேன், இந்த டெஸ்டெல்லாம் வேணாம். நல்லாயிருக்கற உடம்பை கூடக் கெடுத்திடும். நீங்க தான், ஒரு வயசுக்கு அப்புறம் மாஸ்டர் செக்கப் பண்ணா நல்லதுனிங்க. இப்போப் பாரு ஒன்னொன்னா தொந்தரவு வரிசையா வருது’.

சுந்தரி ஹாலுக்கு வந்து இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

“தைராய்டு பிரச்சினை வேற இருக்குங்க. 7.7 அளவு. ஹைப்போ-தைராய்டு. வெயிட்டை கண்ட்ரோல் பண்ண வேணும். யூரிக் ஆசிட்-ம் நார்மல் விட ஜாஸ்தி. பருப்பு, ஹார்லிக்ஸ் எல்லாம் கம்மி பண்ண வேண்டியிருக்கும்”.

என்னடா இது, இந்த பரமனுக்கு வந்த சோதனை?. யாருக்கு சப்போர்ட் செய்வது? அம்மாவா, மனைவியா?. இக்கட்டிலிருந்து விடுபட ஒன்றைத் திட்டமிட்டேன்.

“அம்மாவே ஒன்னும் டென்சன் ஆவாமே இருக்காங்க. நீ எதுக்கு இவ்வளவு டென்சன் ஆவர. முதல்லே உனக்கு தான் டெஸ்ட் பண்ணனும். நான் ஒன்னு பண்றேன். இது ஒரு ரிப்போர்ட் தானே. நம்ம டாக்டர்கிட்டே காண்பிச்சு மேற்கொண்டு முடிவு செய்யலாம். சரியா?.”

டாக்டர் நலவேந்தன். எங்கள் குடும்ப டாக்டர். ஆனால், அவரை நண்பராகத் தான் பெரும்பாலும் சந்தித்துள்ளோம். அவரை கிளினிக்கில் பார்த்தது ரொம்ப அபூர்வம். அவரிடம் மாலை அப்பாய்ன்ட்மென்ட் எடுத்துக் கொண்டேன். அம்மாவும், சுந்தரியும் வந்தால் கொஞ்சம் கபளீகரம் ஆகிவிடலாம். எனவே, நான் மாத்திரம் லேப் ரிப்போர்டுடன் சென்றேன்.

‘வைத்தியநாத் மருத்தவ நல கிளினிக்’ என்று பெரிய தடித்த எழுத்தில் பெயர் பலகை. கொஞ்சம் கீழே பிராக்கெட்டில் ‘உங்கள் நலம் எங்கள் உறுதி’ என்று சின்ன சைஸ் எழுத்தில் இருந்தது.

பரஸ்பரம் கொஞ்சம் பழைய கதைகளை பரிமாறியப் பின் லேப் ரிப்போர்ட்டைக் கொடுத்துவிட்டு அவருடைய பதில் அறிவுரைக்காகக் காத்திருந்தேன்.

நாலு பக்க ரிப்போர்ட்டை டீடைலாக தீவிரமாகப் பார்த்தார்.

‘நெறய பிராப்ளம் இருக்கு. லைப் ஸ்டைல் மாத்திக்கணும். டயட் கண்ட்ரோலும் வேணும். வேற வழியே இல்லை. வேணுமின்னா இங்கேயே நல்ல லேப்லே இன்னொரு தரம் செக்கப் பண்ணிடுவோம். மனசுக்கும் நிம்மதியாயிருக்கும். இல்ல மெடிசின் ஆரம்பிக்கணும்’ என்று சொல்லியவாறு ப்ரிஸ்கிரிப்சன் பேடை எடுத்தார்.

கொஞ்ச நேரம் ரிப்போர்டின் முதல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். திடிரென்று என்னிடம் கேட்டார். ‘ஆமா, உங்க அம்மா பேரு தாரணி (DAARANI)-வா?. பெங்களூரு அட்ரஸ் போட்டிருக்கே’.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இல்ல, அம்மா பேரு தரணி (DARANI). நாங்க இங்கே தான் இருக்கோம். என்னவோ குளறுபடி ஆயிருக்கு”.

‘பேர்ல ஒரு கால் எக்ஸ்ட்ரா போட்டா என்னன்ன கலாட்டா ஆவுது’ என்ற டாக்டரின் பேச்சைக் கேட்காமல், அவரிடம் விடைபெற்று (பீஸை கொடுத்து விட்டுத் தான்) விரைந்து வீட்டிற்க்கு வந்தேன். அந்த கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் போன் செய்ய, நீண்ட நேர காத்திருத்தலுக்குப் பிறகு லைன் கிடைத்தது .

‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு.’ என்று திட்டித் தீர்க்க வேண்டும் என்று ஆத்திரம். அவன் இந்தியில் ஆரம்பிக்க, நான் இங்கிலிஷ், சௌராஷ்டிர, தமிழ் மாத்திரம் என்றேன்.

இங்கிலிஷ் பேசும் ஆள் லைனில் வர கால் மணி நேரம் ஆயிற்று. பின்னர் வந்த நபரிடம் என் சமாச்சாரத்தை விளக்கினேன். ‘கொஞ்சம் காத்திருக்கவும்’ என்று இன்னொரு கால் மணி நேரமாயிற்று. ‘பெயர் குழப்பத்தால் நேர்ந்த தவறுக்கு மிகவும் வருந்துகிறோம்’ என்றும், புதிய ரிப்போர்ட் உடனடியாக அனுப்பப்படும் என்று உறுதியளித்து போனைத் துண்டித்து விட்டார்.

அதற்குள் என் போன் ரகளையைக் கேட்டு எல்லோரும் ஹாலுக்கு வர, நான் நிலைமையை விளக்க சுந்தரியின் முகம் ஒரு மாதிரியாகி விட்டது. பதட்டத்துடன் கண்யிமைக்காமல் ரிப்போர்டுக்காக கணினி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஐந்து நிமிடங்களில் வந்த ஈமெயிலில் ரிப்போர்ட்டைப் பார்த்தால் எல்லா உடல்நல அளவுகளும் கரெக்டாக இருந்தன. சந்தோசத்தில் ஒரு நிமிடம் யாருக்கும் பேச்சு மூச்சு வரவில்லை. பின்னர் என்ன, ராத்திரி நெய் ரோஸ்ட, ஜாமுன், ஐஸ்கிரீம் என்று டின்னர் கொண்டாட்டம் அமர்க்களமாகியது.

– 15-Aug-2023, குவிகம் மின்னிதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *