போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்திருந்தது. என் மொபைல் கிடைத்துவிட்டதாம். வந்து வாங்கிக்-கொண்டு போகச் சொன்-னார்கள்.
இந்த மொபைல் தொலைந்து திரும்பக் கிடைப்பது இது ஐந்தாவது முறை. இப்போதெல்லாம் இதற்கு நான் ஆச்சர்யப்படுவதில்லை. முதல் முறை தொலைந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எங்கள் கம்பெனியிலேயே உரக் கிடங்கு இன்சார்ஜின் ரூமில் சார்ஜ் போட்டுவிட்டு அக்கவுன்ட்ஸ் பார்க்க ஆரம்பித்தேன். சாப்பிட்டு விட்டுப் போய்ப் பார்த்தால், சார்ஜர் மட்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. பக் என்று இருந்தது. ஐயாயிரத்து ஐந்நூறு ரூபாய் எள்ளா..?
‘‘பார்ல ஏதும் விட்டிருக்கப் போறீங்க…’’ என்றார் ஹெட் கிளார்க். இது வேறயா?
உரக் கிடங்கு ஈசானிய மூலை-யில் இருக்கிறது. அங்கே வேலையாக வருபவர்கள் தவிர பொது ஆட்கள், புது ஆட்கள் யாரும் வர மாட்டார்கள். ‘ஆஹா… டீ கொண்டுவரும் பையன் வருவானே’ என்று தோன்றியது. ஆனால், ஏழைப் பையனைச் சட்டென அப்படிச் சொல்லிவிட மனம் வரவில்லை. ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்த-தோடு விஷயத்தை மறந்துவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து டீ குடிக்கப் போன நண்பர், டீக்கடைப் பையன் என் மொபைலை விலை பேசும்போது பிடித்து-விட்டார். அது பொன்னைப் போல என் கைக்கு வந்தது. இரண்டு வாரம்கூட ஆகியிருக்காது. காலை எழுந்து பார்த்தால் போனைக் காணோம்.
சாயந்திரம் சிகரெட் கடைக்காரர், ‘‘நேத்து நைட் பன்னண்டு மணி வரைக்கும் கலாட்டாவைப் போட்டுட்டீங்க போல…’’ என்றார். ‘‘கொஞ்சம் ஓவராப் போச்சு’’ என்றேன்.
‘‘கொஞ்சமா..? போலிங் போடறேன்னு சொல்லி எத்தனை தடவை செல் போனைத் தூக்கித் தூக்கி எறிஞ்சீங்க தெரியுமா?’’ என்றார். ‘ஃபீல்டர்’-களில் எவனோ லவட்டி-விட்டான் போலிருக்கிறது’ என்று எண்ணியபடியே நான் திரும்ப யத்தனிக்கும்-போது, ‘‘இந்தாங்க, வெல கூடுதல் போன். கடைக்கு வரும் போது கொண்டுவரா-தீங்க’’ என்று எச்சரித்துவிட்டு போனைக் கொடுத்தார் கடைக்காரர்.
அடுத்த முறை நடந்ததை வெளியே சொல்லப்-படாது. ‘அங்கே’ போயிருந்தபோது மப்பிலும், அவளுடைய ஒத்துழைப்பிலும் மயங்கி, வள்ளலாக மாறி செல்லைப் பரிசாக வழங்கிவிட்டு வந்திருக்-கிறேன். என் செல்லில் இருந்த என் மச்சானின் நம்பரைக் கூப்பிட்டு அவளே கொடுத்துவிட்டாள்.
இந்த முறை விவகாரம் வேறு மாதிரி. வண்டி ஓட்ட முடியாது என்று தெரிந்ததால், ஆட்டோ ஏறிய நான் என் வீட்டுக்கு வழியை மாற்றி மாற்றிக் கூறியதால், கடுப்பான ஆட்டோக்-காரன், என்னிடமிருந்து போனைப்-பிடுங்கிக்-கொண்டு போய்விட்டான். அதனால்தான் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன்.
‘‘செல்போனெல்லாம் கேஷ் மாதிரிய்யா, போனாப் போனதுதான்! நாங்களே புரொசீஜருக்காகத்தான் புகார் வாங்கு-றோம். ஆனா, அந்தப் போதையிலேயும் ஆட்டோ நம்பரை மட்டுமாவது நோட் பண்ணிச் சொன்னே பாரு, கில்லா-டிய்யா நீ!’’ என்றார் சப் இன்ஸ்-பெக்டர்.
‘‘இது என் பொண்டாட்டி மாதிரி சார். என்னைவிட்டு என்னிக்கும் போகாது’’ என்று மொத்தக் கதையையும் சொன்னேன்.
வருகிற வழியில் வண்டியை நிறுத்தி ஒரு குவார்ட்டரும் நொறுக்குத் தீனியும் வாங்கிக்-கொண்டேன். வீட்டுக்குள் நுழைந்ததும், நடு ஹாலில் அந்தக் காகிதம் பட-படத்தது.
‘போகிறேன். தேட வேண்டாம்.
– வெளியான தேதி: 23 ஜூலை 2006