செய்த உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 3,521 
 

ராசு குட்டி பையன் தான், ஐந்தாம் வகுப்புத்தான் படிக்கிறான், என்றாலும் அம்மாவுக்கு அவன் எப்பொழுதுமே புத்திசாலி பையன் தான். ஒரு நாள் அம்மா ராசுவிடம், பக்கத்திலிருக்கும் கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வர சொல்லுகிறாள்.

ராசு அம்மாவிடம் வெளியே போனாலே போலீஸ்காரங்க பிடிச்சுக்குவாங்க அம்மா, கொரானோ டைமுல ஏன் இப்படி ஊர் சுத்துறேன்னு மிரட்டுவாங்க.

தெரியும் ராசு, பெரிய பசங்க, வண்டியில போறாங்கா இல்லையா, அவங்களைத்தான், கூப்பிட்டு விசாரிப்பாங்க, அங்கயும் இங்கயும் போறதை தான் பிடிச்சு மிரட்டுவாங்க. நீ சின்ன பையந்தானே, அதுவும் இரண்டு தெரு தள்ளி இருக்கற மளிகை கடைதான். நீ சூதானமா போயிட்டு வாங்கி வந்துடு. நீ வாங்கிட்டு வந்தாத்தான் உனக்கும், அப்பாவுக்கும், தங்கச்சிக்கும் இட்லி சுட்டு சட்னி செஞ்சு தர முடியும்.

ஏம்மா இனிமேல் நான் சாமான் வாங்கி இட்லி சுடுவியா? மகனின் கிண்டலான கேள்விக்கு அதில்லைடா, இட்லிக்கு மாவு ஆட்டி வச்சுட்டேன், சட்னிக்குத்தான் சாமான் வேணும்.

சரிம்மா போய் வாங்கிட்டு வர்றேன், அம்மாவிடம் சொல்லிவிட்டு, வீட்டில் தனியாக வைத்திருந்த முக கவசத்தை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டு வெளியே வந்து காலில் செருப்பை மாட்டிக்கொண்டவன் சைக்கிளில் போகலாமா என்று நினைத்தான். வேண்டாம் நடந்து போனாத்தான் நல்லது, போலீஸ்காரங்களும் நடப்பவர்களை அதிகமாக கேள்விகள் கேட்கமாட்டார்கள், முடிவு செய்தவன் நடக்க ஆரம்பித்தான்.

தெரு அமைதியாக இருந்தது. நிறைய வீடுகளில் கதவு அடைத்தே வைக்கப்படிருந்தது. கொரோனா பயம் ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது. அங்கங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிலரும் பொறுப்பாய் முக கவசம் அணிந்து பயத்துடன் அவனை கடந்து நடந்து கொண்டிருந்தனர்.

சந்தின் முடிவில் வளைவு திரும்பி அடுத்த தெருவுக்குள் நுழைந்தவன், சற்று நிதானித்தான். வலது புற வரிசையில் இரண்டாவது வீட்டு வாசலில் ஒரு வயதான பாட்டி வெளியே நின்று கொண்டிருந்தார்.

அவர் முகம் பயத்தில் இருப்பதாக இவனுக்கு தோன்றியது. என்னெவென்று கேட்கலாமா? இல்லை அவர்களை தாண்டி போய் விடலாமா? இப்படி அவன் எண்ணிக்கொண்டிருந்தாலும் கால்கள் என்னவோ அந்த அம்மையார் முன்பு நின்று விட்டன.

ஏன் பாட்டி இங்க நிக்கறீங்க? அன்புடன் கேட்டான். யாராவது கேட்பார்களா என்னும் நிலையில் இருந்த அம்மையார் தம்பி வீட்டுல நான் மட்டும்தான் இருக்கேன். எல்லா சாமாங்களும் தீர்ந்து போச்சு, வாங்கிட்டு வரலாமுன்னு நினைச்சு வெளியே போலாமுன்னா, கண்ணு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு, இதுல வேற வயசானவங்க எல்லாம் வெளிய நடமாடக்கூடாதுன்னு பயமுறுத்திகிட்டு இருக்காங்க.

சரி கடைக்கு போன் பண்ணலாமுன்னா என் போன்ல சார்ஜ் இல்லை.. என்ன பண்ணறதுன்னு தெரியலை. யாராவது எனக்கு தெரிஞ்சவங்க வருவாங்களான்னு காத்து கிட்டிருக்கேன்.

பாட்டி உங்களுக்கு என்ன வேணும்னு ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்தீங்கன்னா நான் போய் வாங்கிட்டு வந்து தர்றேன், அப்படியே உங்க செல் போன் நம்பர் கொடுங்க, நான் ரீ சார்ஜ் போட்டு கொடுக்கிறேன்.

ரொம்ப நன்றி தம்பி, கொஞ்சம் நில்லு, நான் உள்ளே போயி ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்தாறேன், உள்ளே சென்றவர் பத்து நிமிடத்தில் ஒரு காகிதத்தில் வாங்க வேண்டிய சாமான்களை எழுதி கொண்டு வந்து கொடுத்தவர் கையில் பணமும், கைப்பை இரண்டும் கொடுத்தார்.

பாட்டியை உள்ளே போக சொல்லி விட்டு வேகமாக கடையை நோக்கி நடந்தான். கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

முக்கால் மணி நேரம் ஆனது, பாட்டி கொடுத்த சாமான்கள் வாங்குவதற்கு, அத்தனையும் வாங்கி, பாட்டி கொடுத்த பையில் எல்லாவற்றையும் வைத்து தூக்க முடியாமல் பாட்டியின் வீட்டுக்கு வந்தான்.

இவன் வாசலில் நின்று கூப்பிட்டவுடன் பாட்டி வெளியே வந்தவர்கள் இவன் தூக்க முடியாமல் சாமான்களுடன் வெளியே நிற்பதை பார்த்து வேகமாக வந்து பெற்றுக் கொண்டவர்கள், வா தம்பி உள்ளே, அன்புடன் கூப்பிட்டார்கள்.

வேணாம் பாட்டி, இந்த கரோனா காலத்துல யாரையும் உள்ளே கூப்பிடாதீங்க, நான் இப்ப கடையில முக்கால் மணி நேரம் நின்னுட்டு வந்திருக்கேன். நிறைய பேரு அங்க இருந்தாங்க. அப்படி இருக்கறப்ப, நான் உள்ளே வர்றதும், உங்க கூட இப்படி நின்னு பேசறதும் கூட உங்க உடம்புக்கு ஆபத்தாயிடும்.

உங்க செல் நம்பர் கொடுத்து எவ்வளவு பணம் ரீ-சார்ஜ் பண்ணனும்னு சொல்லுங்க போதும், இப்ப சாமான் எல்லாம் உள்ளே கொண்டு போகாம வாசல் முன்னாடி வச்சுட்டு கை கால் முகம் சோப்பு போட்டு கழுவிட்டு அரை மணி நேரம் கழிச்சு எடுத்துட்டு போங்க. சரியா.

பாட்டி வியப்பாய் அவனை பார்த்து பரவாயில்லை தம்பி, இந்த சின்ன வயசுல இவ்வளவு விவரமா இருக்கே, இரு என் செல் நம்பர் தர்றேன், பணமும் தர்றேன் உள்ளே சென்றவர்கள், இரண்டு நிமிடத்தில் எண்கள் எழுதிய காகிதத்தையும், ரீ சார்ஜ் செய்யவேண்டிய பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

ஆமா தம்பி கடையே இல்லையே, எப்படி ரீ சார்ஜ் பண்ணுவே? எனக்கு தெரிஞ்ச அக்கா பக்கத்துல இருக்காங்க, அவங்க கிட்டே கொடுத்தா அவங்க செல்லுலயே ரீ சார்ஜ் பண்ணி தருவாங்க.

உன் பேர் என்ன தம்பி? உங்கப்பா என்ன பண்ணறாரு?

அப்பா வேலை செய்யும் கம்பெனி பேரை சொன்னான். கம்பெனி லாக்டவுன் செய்துள்ளதால் அடைத்து வைத்துள்ளதாகவும், அப்பா வீட்டில் இருப்பதாகவும் சொன்னான். அம்மா வீட்டில் இருப்பதாகவும் குட்டி தங்கை இருக்கிறாள் என்றும் சொன்னான்.

வீட்டுக்கு போகும்போது அம்மாவும், அப்பாவும் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள், பயத்துடன் இருந்தார்கள். ஏண்டா எங்க போனே, உங்கப்பா கடைக்கு போய் பார்த்தா அங்க உன்னைய காணோம். அக்கம்பக்க விசாரிச்சாலும் யாரும் உன்னை பார்த்ததா சொல்லலை. எங்களுக்கு பயம் வந்துடுச்சு, சொல்லிக்கொண்டே அவனை அணைக்க போனார்கள்.

நோ..நோ..என்னை தொடாதே, முதல்ல சோப்பு கொடு, நான் நல்லா சோப்பு போட்டு கை கால் எல்லாம் கழுவுன, பின்னாடி என்னை தொடணும், சரியா?

அம்மா வியப்புடன் உள்ளே சென்று சோப்பை கொண்டு வந்து கொடுக்க, அவன் முகம் கை கால் எல்லாம் கழுவி வீட்டுக்குள் வந்து அதன் பின் நடந்ததை எல்லாம் சொன்னான்.

நல்ல பையண்டா நீ அம்மா அவனை பாராட்டிவிட்டு, சரிடா அம்மா வாங்கிட்டு வர சொன்ன சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டியா? அதெல்லாம் எங்கே?

அச்சச்சோ..அம்மா எதற்காக தன்னை கடைக்கு அனுப்பினாள் என்பது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. சாரிம்மா, மறந்துட்டேன், இப்ப வேணா போயி வாங்கிட்டு வந்துடட்டுமா?

ஒண்ணும் வேண்டாம், சாப்பிட வா, உங்கப்பா ரொம்ப நேரமா காணாம உன்னைய பார்க்க கடைக்கு வந்தப்ப அவரே வாங்கிட்டு வந்துட்டாரு. நல்ல வேளை நீயும் வாங்கிட்டு வந்துட்டா என்ன பண்ணறதுன்னு நினைச்சுகிட்டிருந்தேன். நீ மறந்ததுனால எனக்கு லாபம்தான். ராசுவை அணைத்தபடி சொன்னாள் அம்மா.

மீண்டும் அவனுக்கு பாட்டி செல்போன் ரீ சார்ஜ் சொன்னது ஞாபகம் வர அம்மாவிடம் சொல்லி பக்கத்து வீட்டு அக்காவை பார்க்க போனான்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. அப்பாவுக்கு இன்னும் கம்பெனி திறக்கவில்லை.ஒரு நாள் வீட்டு கதவு தட்டுவதை கேட்டு ராசுவின் அம்மா கதவை திறந்து பார்த்தாள். அதற்குள் ராசுவும், அவன் அப்பாவும் அம்மாவுடன் வந்து நின்று கொண்டனர்

வெளியே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். ராசு உங்க பையனா? ஆமா வாங்க உள்ளே.

வேணாம் வேணாம் இது கரோனா காலம், அதுனால இங்கேயே நின்னுக்கறேன். இந்தாங்க இதுல ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் இருக்கு, இதை உங்க கிட்டே கொடுக்க சொன்னாங்க

யாரு சொன்னாங்க?

அதோ அவங்கதான், திரும்பி கையை காட்ட ஒரு காரில் இவன் அன்று உதவி செய்த பாட்டி உட்கார்ந்து இவர்களுக்கு கையை காட்டி கொண்டிருந்தார்.

நான் அவங்க பையன், அம்மாவை என்னோட டெல்லிக்கு கூட்டிட்டு போறேன். அதுக்கு முன்னாடி ராசு வீட்டுக்கு ஏதாவது செய்ய சொல்லி இதோ இந்த சாமான் எல்லாத்தையும் வாங்கி உங்க கிட்டே கொடுக்க சொன்னாங்க.

சின்ன பையனா இருந்தாலும் தக்க சமயத்துல எனக்கு உதவுனான்னு அவனுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க. நானும் ராசுவுக்கு நன்றி சொல்லிக்கறேன்.வரட்டுமா, ராசுவின் கன்னத்தில் தட்டி விடை பெற்று காருக்கு சென்றான் அந்த இளைஞன்.

இவர்கள் குடும்பத்துடன் வெளியே வந்து அந்த பாட்டிக்கு கை ஆட்டி வழி அனுப்பி வைத்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *