சென்னைக்கு மிக அருகில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,129 
 
 

‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!”

‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும் எப்படியோ மேனேஜர்கிட்ட பேசி சிக்லீவ் வாங்கி வச்சிருக்கேன்”

‘அதிலிங்க…. வெண்ணிலா, கணவனிடம் எதையோ சொல்ல வந்தவளாகத், தயங்கிப் பேசினாள்.

‘உன்னால வரமுடியலைன்னா, விட்டுடு! நான் மட்டும் போயிக்கிறேன்” கதிரிடமிருந்து, ‘சுள்’ளென்று வார்த்தைகள் வந்து விழுந்தன. வெண்ணிலா, மேற்கொண்டு எதுவும் பேச விரும்பாதவாளக, மௌனமாக எழுந்து உள்ளே போனாள்.

‘குழந்தைகளுக்கு வேண்டிய பால், பிஸ்கட் எல்லாம் தனியா ஒரு ‘பேக்குல எடுத்துக்கோ! அவங்களுக்கு, டிரஸ் எடுத்துக்குடு. நான் தயார் பண்ணி விடுகிறேன்”, அப்பா சொன்னதைக் கேட்ட பெரியவன் அரவிந்த் குதூகலமானான்.

‘அப்ப இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாமாப்பா?” குரலில் அவ்வளவு உற்சாகம்!.

‘இன்னைக்கு லீவு போட்டுக்கலாம்”

‘நாம எங்கப்பா போகப்போறோம்?”

‘நமக்குப் புதுசா ஒரு வீடு வாங்கப் போறோம்ல, அதைப் பார்க்கப் போறோம்” ஏழு வயது அரவிந்த் முகத்தில் ஏகத்துக்கும் சந்தோஷம். படுக்கையிலிருந்து, துள்ளிக் குதித்து எழுந்தான். அவனாகவே பல் தேய்த்து, காலைக் கடன்களை முடித்து விட்டு வந்து நின்றான்.

‘அம்மா நானே குளிச்சுக்கவா?”

‘இந்த சுறுசுறுப்பு ஸ்கூல் போகும் போது இருக்குதா பாரு! சரியான ஊர்சுத்திடா நீ !” கணவனிடம் செல்லுபடியாகாத தன் கோபத்தை, பிள்ளையிடம் கொட்டினாள் வெண்ணிலா.

‘அரவிந்த்! இங்க வா! அப்பா குளிக்க வைக்கிறேன்” என்று குரல் கொடுத்த கதிர், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆதித்யனையும்; தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். பத்து நிமிடங்களில், தானும் தயாராகி, குழந்தைகளையும் தயார் செய்து கொண்டு வந்தான்.

‘இன்னும் அடுக்களையில என்ன பண்ணிகிட்டிருக்கே, நிலா?”

‘டிபன்”

‘நான்தான் சொன்னேனே! போகும் போது வழியில எங்கயாவது சாப்பிட்டுக்கலாம்! நீ சீக்கிரம் ரெடியாகு”

‘நான் எதுவும் சொல்றதுக்கில்ல! குழந்தைங்கள இந்த மொட்டை வெயில்ல, அதுவும் டூ வீலர்ல முப்பது, நாப்பது கிலோ மீட்டர் அலைக்கணுமா? சனிக்கிழமைன்னா அவங்கள உங்கத் தம்பி வீட்டுல விட்டுட்டு நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ப் பாத்துட்டு வரலாம்ல?”

‘சும்மா அறிவில்லாம பேசாத! யாருக்கும் நாம இந்த இடம் முடிகக்pற விஷயம் தெரியக்கூடாதுன்னு பாக்கிறேன். எதையாவது சொல்லி தட்டி விடுறதுக்கு எத்தனை பேர் தயாரா இருப்பாங்க தெரியுமா?”

வெண்ணிலா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. உடை மாற்றச் சென்றாள். வீட்டைப் பூட்டிக் கொண்டுக் கிளம்பினார்கள்.

‘வண்டியில இங்கயிருந்து கிலோ மீட்டர் செட் பண்றேன். அந்த இடம் எவ்வளவு தூரம்னு பாத்துக்கலாம்”. கதிர் உற்சாகமாக வண்டியை உதைத்துக் கிளப்பினான். காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஊர்ந்து ஊர்ந்து தாம்பரம் வருவதற்கே நாற்பது நிமிடத்திற்கு மேலாகி விட்டது. பேருந்துநிலைய ஹோட்டல் ஒன்றில் சிற்றுண்டி முடித்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்கள்.

‘சென்னையில் மட்டும் வருஷத்திற்கு இருநூறு நாள் கத்திரி மாதிரிதான் இருக்கிறது’ சூரியன் சுள்ளென்று போட்டு வாங்கியது. வெண்ணிலாவுக்கு கணவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இப்படித் தலைபோகிற அவசரமாக வீடு வாங்காவிட்டால்தான் என்ன? நண்பர்கள் உறவினர்கள், யாரையும் கலந்து ஆலோசிக்கவில்லை. விசாரிக்கவுமில்லை. கேட்டால், எல்லா விவரமும் ‘நெட்’டில பார்த்தாச்சு என்று வாயை அடைத்து விடுகிறான்.

கதிரின் சொந்த வீடு வாங்கியே ஆக வேண்டும் என்ற இந்தக் கொலைவெறிக்குக் காரணம் தற்போது அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர்தான். போன ஞாயிற்றுக்கிழமை, பல்லாவரத்தில் ஒரு கல்யாணத்துக்கு வந்தவர், தகவல் எதுவும் சொல்லாமல் மதியான நேரம் இவர்கள் வீட்டுக்கு திடுதிப்பென்று வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை வீடு, கேட்கவா வேண்டும்? வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்கள் எல்லாவற்றையும் ஹாலில் இழுத்துப் போட்டு சின்னவன் விளையாடிக் கொண்டிருந்தான். பெரியவன், கத்திரிக்கோலால் நியூஸ் பேப்பர்களை பொடிப்பொடியாக வெட்டி ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். இது எதையும் கண்டுக்கொள்ளாமல், நட்டநடுவில் ஒரு தலையணையைப் போட்டு படுத்திருந்த கதிர் ரிமோட்டை கட்டைவிரல் வலிக்க அழுத்திக் கொண்டிருந்தான்.

வெண்ணிலா இந்த சத்தத்திலிருந்து எல்லாம் தப்பித்து உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். சோபாவில் அவிழ்த்துப் போட்ட அழுக்கு உடைகள் அப்படியே கிடந்தன. ஞாயிற்றுக்கிழமை, வீட்டை ஒழுங்குப் படுத்த கூடவே கூடாது. அது முற்றிலும் அவரவர் சந்தோஷத்திற்கான சுதந்திரமான நாள் என்பது அவர்கள் வீட்டில் எழுதப்படாதச் சட்டம். ஆனால் விருந்தாளிகளோ, நண்பர்களோ வருவதாக முன்கூட்டியே சொல்லியிருந்தால் வீட்டை சுத்தமாக ஆக்கி வைத்து காத்திருப்பது வழக்கம். வீட்டு உரிமையாளர் வீட்டை இவர்களுக்கு வாடகை;கு விட்டு கிட்டத்தட்ட ஒன்றறை வருடம் ஆகிவிட்டது. வாடகை செலுத்துவது எல்லாம் வங்கிக் கணக்கில்தான். அழைப்புமணி ஒலித்தது.

‘யாரு?”

‘நான்தாங்க உமேஷ்வரன்”

பெயரைக் கேட்டதும் வாரிச்சுருட்டி எழுந்தவன், அவசர அவசரமாக சோபாவில் கிடந்த துணிமணிகளை சுருட்டி எடுத்து உள் அறைக்குள் வீசினான். காலில் தட்டுப்பட்ட பொருட்களை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தள்ளி மறைத்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

‘வாங்க சார் ! என்ன திடீருன்னு? சண்டே இல்லையா? நல்லத் தூக்கம்! அப்புறம் எப்படியிருக்கீங்க உள்ள வாங்க” குரலில் சலிப்பு வெளிப்பட்டு விடாமல் கவனமாக உபசரித்தான்.

‘ வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா? வரேன்னு ஒரு போன் பண்ணியிருக்கலாமே சார் !”

‘இல்ல சார் ! இந்தப் பக்கம் ஒரு கல்யாண வீடு. அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன்”.

‘நிலா! உமேஷ்வரன் சார் வந்திருக்காரு” அறையை நோக்கி சத்தமாக குரல் கொடுத்தான். நைட்டியின் மேல் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு தூக்கக் கலக்கத்தோடு வெண்ணிலா வந்தாள்.

‘வாங்க! வீட்டுல நல்லாயிருக்காங்களா?”

பதிலுக்கு செயற்கைப் புன்னகையோடுத் தலையை ஆட்டிய வீட்டுச் சொந்தக்காரர் போர்க்களம் போல் கிடந்த வரவேற்பறையை கண்களால் அளந்தார். தனக்குப் பக்கவாட்டில் இருந்த சுவரின் மேல் விழுந்த அவர் பார்வையில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது. பெரியவன் தன் கைவண்ணம் மொத்தத்தையும் அதில் காட்டியிருந்தான். கிரையான்களால் ஏ,பி,சி,டி, ஒன்,டூ,த்ரி எல்லாம் பெரிது பெரிதாக எழுதியிருந்தது. மம்மி, டாடி என்ற தலைப்பில் படம் வரைந்து பாகம் குறித்திருந்தான்.

‘உள் ரூம்ல ஏசி மாட்டியிருக்கேன்னு சொன்னீங்கள்ல செட்டாயிடுச்சா?. ஹோல்ஸ் எல்லாம் அவங்களே
போட்டுக்கிட்டாங்களா?”

‘உள்ள வந்து பாருங்க சார்”

அதற்காகவே காத்திருந்தவர் போல் உள்ளே அறைகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து வந்தார். படுக்கை அறைக்குள் நுழைந்ததும் நேரே பார்வையில் பட்ட சுவர், அவரை அதிர்ச்சியில் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. ‘குற்றம் நடந்தது என்ன?’ என்று தொலைக்காட்சி புலனாய்வுத் தொடருக்கு விளம்பரம் காட்டுவார்களே அது போல் சுவர் எல்லாம் சிவப்பு நிறத்தில் கைத்தடங்கள், கோடுகள் என அதிபயங்கரமாக இருந்தது. அவர் பார்வை போனபோக்கைப் புரிந்து கொண்ட கதிர்,

‘ ஓய்‡ப் நெயில் பாலீஷ் போட்டுட்டு அப்படியே மறந்து கீழே வச்சிட்டுப் போயிட்டாங்க. பையன் எடுத்து சுவரெல்லாம் பூசிட்டான். ரிமுவர் போட்டுத் துடைச்சாப் போயிடும்னு நினைக்கிறேன்” அசடு வழிந்தான். ‘ச்சே! இது ஞாபகமேயில்லையே’ வெண்ணிலா தர்ம சங்கடத்தில் நெளிந்தாள்.

‘சின்னக் குழந்தைங்க இல்லையா வீட்டை ஒரு வழிப் பண்ணிடறாங்க” என்றாள். ‘குழந்தைங்கன்னா அப்படித்தாம்மா இருப்பாங்க”, என்று அவர் சொல்லுவார் என எதிர்பார்த்தவள் ஏமாந்துப் போனாள். அவர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

‘சார்! ஒரு வருஷம் அக்ரிமெண்ட் முடிஞ்சதும் வாடகை ஜாஸ்திப் பண்ணுவேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். அடுத்த மாசத்திலயிருந்து லெவன் தௌசண்ட் குடுத்துடுங்க. எல்லா இடமும் வீட்டு வாடகை ஏறிப்போச்சு இல்லையா?”

‘சார் ஒரேடியா ரெண்டாயிரம் ஜாஸ்திப் பண்ணினா எப்படி? வேணா டென் தௌசண்ட் கொடுக்கறேன்”.

‘இல்ல சார் ! உங்களுக்குச் சௌவுகரியப் படலேன்னா விட்டுடுங்க. பன்னிரெண்டாயிரம் தர்றதுக்கு நிறைய பேர் கேட்டுட்டிருக்காங்க. யோசிச்சு, உங்க முடிவை எனக்குப் போன்ல சொல்லுங்க. நான் கிளம்பறேன்”.

‘காபி, டீ ஏதாவது சாப்பிடலாமே”

‘இல்லம்மா! இப்பத்தான் சாப்பிட்டேன். வர்றேன்”

காரில் ஏறிக் கிளம்பிப் போனார்.

‘பசங்கள கொஞ்சமாவது டிசிப்ளினா வளர்க்கணும்னு சொன்னா வியாக்கியானம் பேசுவியே! இப்பப் பாரு இவங்களால கண்டவங்க முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வேண்டியிருக்குது, ஏதோ ஸ்கூல் பையன் ஹெட்மாஸ்டரப் பார்த்துப் பயந்த மாதிரி!”

‘சின்னக் குழந்தைகளை எவ்வளவுன்னுக் கண்டிக்கிறது? கண்ணை மறைச்சிட்டு இந்த மாதிரி சுவரையெல்லாம் ஒரு வழி பண்ணிடறாங்க”.

‘இல்ல நிலா! இதுக்கு ஒரு முடிவுக் கட்டியே ஆகணும். ஏழு வருஷமா இந்த சென்னையில வாடகை வீட்டோட நாம பட்டப் பாடு கொஞ்ச நஞ்சமா? கொஞ்சம் வைஸா திங்க் பண்ணியிருந்தோம்னா யாருக்கோ மாசா மாசம் குடுக்கற தொகையை இ.எம்.ஐ அடைச்சிருக்கலாம். நமக்குன்னு ஒரு சொத்தும் சேர்ந்திருக்கும். நீ தான் யோசிச்சு பண்ணலாம்னு சொல்லிச் சொல்லியே இவ்வளவு நாள் இழுத்துட்ட!”

வெண்ணிலாவுக்குத் தெரியும்! வாடகை வீட்டில் எந்தப் பிரச்சனை என்றாலும் அவன் தன்னைத்தான் குறை சொல்லுவான் என்று. ஊரில், தன் அப்பா பூர்வீக சொத்தாகத் தனக்குக் கொடுத்திருக்கும் பத்து சென்ட் நிலத்தை விற்று, இங்கு சென்னையில் ஒரு வீடு வாங்கிவிடவேண்டுமென்பது கதிரின் லட்சியம். வெண்ணிலாவுக்கு, அதற்கு மனம் ஒப்பவே இல்லை.

‘அவ்வளவு பெரிய இடத்தை விற்று, இங்கு புறாக்கூண்டு மாதிரி ஒரு வீடு வாங்கவா? அதற்குப் பதில் வேலைப் பார்க்கும் வரைக்கும் வாடகை வீட்டிலேயே கழித்துவிட்டு, சொந்த ஊரில் விஸ்தாரமாய் ஒரு வீட்டை கட்டிப் போட்டுவிட்டால், வயதான காலத்தில் போய்த் தங்கிக் கொள்ளலாம்’ என்பது அவளின் கருத்து.

வாடகை வீடுகளில் இப்படி பிரச்சனை வரும்போதெல்லாம், கதிர் பத்திரிகைகளைக் கரைத்துக் குடிப்பான். ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், ஒன்று விடாமல் பார்ப்பான். புரோக்கர்கள் சொல்லும் இடங்களுக்குச் சளைக்காமல் போய்ப் பார்த்துவிட்டு வருவான். சதுர அடி ஐந்தாயிரம், ஆறாயிரம் என்று விலை சொல்லுவார்கள். கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ஒத்துவராது என்று ஒதுங்கிக் கொள்வான்.

சென்னையின் புறநகர்களைச் சுற்றியுள்ள இடங்கள் இப்போது வேகமாக முன்னேறி வருவதாகவும், விலையும் மலிவாக இருக்குமென்றும் அலுவலக நண்பர்கள் கிளப்பிவிட, மும்முரமாக ‘சென்னைக்கு மிக அருகில்” என்பதான விளம்பரங்களைத் பிடித்தான். அப்படி கிடைத்தது தான் இந்த ‘நெப்டியூன் சிட்டி” விளம்பரம். இந்தமுறை, கொஞ்சம் கூடக்குறைய இருந்தாலும், இடத்தை முடித்துவிட்டுதான் வரவேண்டும் என்ற முடிவோடு, மனைவியையும் உடன் அழைத்துச் செல்கிறான்.

‘ஏங்க! நீங்க சொன்ன இடம் பேரு என்ன?” வெண்ணிலா கேட்டாள்.

‘கூடுவாஞ்சேரி தாண்டினதும் போன்பண்ணச் சொன்னாரு. இரு! கேட்டுக்கறேன்” வண்டியை ஓரங்கட்டினான்.

‘அம்மா தண்ணி வேணும்” பெரியவன் வெயிலில் வதங்கிப் போயிருந்தான். சின்னவனும் அசதியில் தூங்கிப் போயிருந்தான். வெண்ணிலாவுக்கு தலைவலி, விண்ணென்று அடித்தது. கதிர் எதையும் சட்டை செய்யும் மன நிலையில் இல்லை.

’ஹலோ! மிஸ்டர் தாமஸ்! நான் கதிர் பேசறேன். கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாப்புல நிக்கறேன். அடுத்தது எப்படி வரணும்?” எதிர்முனையில் என்ன பதில் கிடைத்தது என்று தெரியவில்லை. கதிரின் முகத்தில் மெலிதான ஏமாற்றம்.

‘என்ன சொல்றார்?”

‘இதே ரோட்டுல, நேரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வரச் சொல்றார்”

‘அந்தக் கோவில் பக்கம்தான், நாம பார்க்கப் போற வீடா?” வெண்ணிலா அப்பாவியாகக் கேட்டாள்.

‘சிங்கப்பெருமாள் கோவில்ங்கறது ஒரு ஊர் பேரு. இன்னும் ரெண்டு, மூணு ஸ்டாப்பிங் தள்ளியிருக்குது”

‘இன்னும் போகணுமா? நீங்க அந்தாளுக்கிட்ட …..

வெண்ணிலா சொல்லி முடிப்பதற்குள் வண்டியைக் கிளப்பினான் கதிர். குழந்தைகளை உட்கார வைத்து விட்டு, மௌனமாக ஏறி அமர்ந்து கொண்டாள். ஒரு வழியாக, சிங்கப்பெருமாள் கோவில் வந்தது. மீண்டும் செல் பேசினான்.

‘சார் ! சிங்கப்பெருமாள் கோவில் மார்க்கெட்ல நிக்கறோம்.”

‘. . . . . .”

‘என்ன சொன்னார்?” வெண்ணிலா சற்று கலவரமாகக் கேட்டாள். இதற்கு மேலும் பயணம் என்றால் குழந்தைகள் தாங்க மாட்டார்கள். அவளுக்கும் தொண்டை வறட்டியது. கதிர் பதிலே, சொல்லாமல், வண்டியில் ஏறி உட்காரும் படி சைகை செய்துவிட்டு, ஓட்ட ஆரம்பித்தான். முன்னால் உட்கார்ந்திருந்த பெரியவன், பெட்ரோல் டாங்கின்மேல் தலை வைத்து தூங்கத் தொடங்கினான். மனைவி எதுவும் கேட்காமல் அமைதியாக வருவது, கதிருக்கு என்னவோப் போலிருந்தது.

‘இன்னும் கொஞ்சந் தூரம்தான். ரைட்டுல திரும்பி, வந்த ரூட்லயே வரச் சொல்றாரு. அங்க ஒரு சிக்னல் வருமாம். அங்க விசாரிச்சுக்கச் சொன்னாரு”

‘கடவுளே! இன்னும் விசாரிச்சுத்தான் போகணுமா?’ வெண்ணிலா நொந்து போய் விட்டாள். அந்தக் குறிப்பிட்ட சிக்னல் வந்ததும் வலது புறத்தில் உள்ளே செல்லும் சாலையில் பயணிக்கத் தொடங்கினார்கள். சற்று தூரம் சென்றதும், ‘கண்ணதாசன் நகர் 5 கி.மீ‘ என்ற பெயர்பலகை இருந்தது. அவனுக்கு நம்பிக்கை வந்தது.

‘கண்ணதாசன் நகர்’ன்னுதான் ஏதோ பேர் சொன்னார். டிரா‡பிக் இரைச்சல்ல சரியா காதுல விழல!”

கண்ணதாசன் நகர் வந்தது. ஒரேயொரு பெட்டிக்கடை மட்டும் இருந்தது. அருகில் சென்று விசாரித்தான் கடைக்காரர், அவன் சொன்ன ‘நெப்டியூன் சிட்டி’ என்ற பெயரை சொல்லிப் பார்க்க முயற்சி செய்து, தோற்றுப் போனவராக. ‘தெரியாது’ என்று தலையை ஆட்டினார். கதிர் மீண்டும் அலைபேசியை அழுத்தினான்.

‘என்னவாம்?” வெண்ணிலா கேட்டாள்.

‘இங்கயிருந்து பத்து கி.மீ உள்ளே வரச் சொல்றான்”. எதிர்முனையில் பேசியவன் மட்டும் எதிரே இருந்தால், மென்னியைத் திருகியிருப்பான். அவன் கண்களில் அவ்வளவு ஆத்திரம் தெரிந்தது. மனைவி தன்னைத் திட்ட ஆரம்பிக்கும் முன்பு, முந்திக் கொண்டான்.

‘நல்ல செழிப்பான இடம் இல்ல? ‡ப்யூச்சர்ல நல்ல டெவலப் ஆயிடும்”. வெண்ணிலா வாயைத் திறக்கவில்லை. வழியெங்கும் பச்சை பசேலென வயல்கள், தோட்டங்கள். பறவைகளின் விதவிதமான சப்தங்கள், இதமான காற்று என சென்னைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள் அவர்களின் களைப்பைக் கொஞ்சம் போக்கியிருந்தது. குழந்தைகளும் முழித்துக் கொண்டார்கள்.

‘ஹை! இது என்ன இடம்பா? சூப்பரா இருக்குது” பெரியவன் அரவிந்தன் மிகவும் உற்சாகமானான். அவனுக்கு ஏதோ காட்டுக்குள் சுற்றுலா போவதுபோல் தோன்றியிருக்க வேண்டும். சற்றுத் தொலைவில், ஆளேயில்லாத அந்தச் சாலையில் இரண்டு பேர், முழுக்கைச் சட்டை, கழுத்துப் பட்டை பளபளக்க, கையசைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘அவங்கதான் !” அருகில் சென்று நிறுத்தினான்.

‘மிஸ்டர் தாமஸ்?”

‘ஐ யம் தாமஸ்” என்றபடி, அதிலொருவன், முன்னால் வந்து கைக்குலுக்கினான்.

‘வெல்கம் சார் ! வெல்கம் மேம் ! வாங்க உள்ள போலாம் “

ஆடம்பரமாக ஒரு நுழைவு வாசல் வளைவு. ஓரத்தில் சீருடையில் ஒரு வயதான காவலாளி உட்கார்ந்திருந்தார். அவர் இவர்களைச் சட்டையே செய்யவில்லை. ‘காரில் வந்து இறங்கியிருந்தால் எழுந்து சல்யூட் அடித்திருப்பார்?’ கதிர் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நெப்டியூன் சிட்டிக்குள் நுழைந்தார்கள்.

‘அம்மா! அங்கப் பாரு! ஊஞ்சல்!” அரவிந்தன் பெருங்குரலில் கத்தினான். சின்னவன் ஆதித்யனும் வெண்ணிலாவின் இடுப்பிலிருந்து வேகமாக இறங்கி தத்திதத்தி ஓடத் தொடங்கினான். அங்கே ஓரிடத்தில் ஊஞ்சல், சறுக்கு மரம், சீ-சா என, குழந்தைகள் விளையாடும் இடம் இருந்தது.

‘சார்! இதுதான் ப்ளே ஏரியா! அதோ அந்த லார்ன்க்கு பின்னாடிதான் ஸ்விம்மிங் பூல் வரப் போகுது. நீங்க ஆபிசுக்கு வாங்க! எல்லாத்தையும் எக்ஸ்ப்ளயின் பண்றேன்”;

அந்த ’டை’ பார்டிகள் இருவரும் முன்னால் நடந்தார்கள். விளையாட்டு இடத்தை விட்டு வர அடம்பிடித்த பிள்ளைகளை, வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள், கணவனும் மனைவியும்.

‘அலுவலகம்’ என்று சொல்லப்பட்ட அந்தக் கட்டித்தைக் தவிர , கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும், பொட்டக் காடாக இருந்தது. வரிசையாக கம்பங்களில் வண்ண, வண்ணக் கொடிகள் மட்டும் பட்டொளி வீPசிப் பறந்து கொண்டிருந்தன.

‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்! எங்க எம்.டி வந்து உங்ககிட்டச் பேசுவார்”. சற்று நேரத்திற்கெல்லாம் கோட், சூட் சகிதமாக ஒரு பருமனான மனிதர், உள்ளே வந்தார். அலுவலக ஆட்கள் பரபரப்பாக ஆனார்கள்.

‘எல்லா டீடெய்ல்சும் சொல்லிட்டீங்களா?”

‘யெஸ் சார்” என்று அந்த இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

‘முதல்ல நீங்க விஷ{வல்ஸ் பாருங்க!”

எம்.டி இப்படி சொல்வதற்காகவே காத்திருந்தவர்களாக, அங்கிருந்தவர்கள், சுவரை அடைத்த அகலத் தொலைகாட்சியை ஆன் செய்தார்கள். வெண்ணிலாவையும், கதிரையும் தவிர மற்றவர்கள் ஏதோ பக்திப்படம் பார்க்கப் போவது போல் பவ்யமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த எம்.டி, கதிர் தம்பதியைப் பார்த்து அர்த்த புஷ்டியாகப் புன்னகைத்தார்.

வெண்ணிலாவுக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் புரியவில்லை. குழந்தைகள் இருவரும், அந்த ‘பெரிய’ தொலைக்காட்சியைப் பார்த்ததும் ஏகத்துக்கும் குஷியாகி, குஷன் சோபாவில் குதித்து, குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

திரையில் காட்சிகள் விரிந்தன. வண்ண, வண்ணமாய் இரண்டடுக்கு வீடுகள், நீச்சல் குளம், உணவு விடுதி, பள்ளி, விளையாட்டுப் பூங்கா என முப்பரிமான கட்டிட வரைபடங்களை காமிரா வளைத்து வளைத்துக் காட்டியது. பிண்ணனியில் மேற்கத்திய இசை மென்மையாக ஒலிக்க, பிரம்மாண்டமான, ஒரு ஆங்கில படத்தைப் பார்ப்பது போன்றதொரு பாவனையில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக அதில் ஒரு கட்டிடம் மட்டும் க்ளோஸ்-அப்பில் காட்டப்பட்டது.

‘சார்! இது தான் தேர்ட் ‡பேஸில் ‘னு’ ப்ளாக். இந்த ஒரு வில்லாவைத் தவிர மற்ற எல்லாமே புக் ஆகியிடுச்சு. இதுக்குமே ஏகப்பட்ட டிமாண்ட். ரெண்டு, மூணு பார்ட்டி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க! ஸோ, யோசிக்காம ஒரு ட்வென்டி‡பைவ் தௌசண்ட் டோக்கன் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிக்கோங்க.! நாளைக்கு நீங்க வந்து கேட்டாக் கூட, நான் ‘ஸாரி’ன்னு தான் சொல்ல வேண்டியிருக்கும்”

ஆகப் பெரிய நகைச்சுவை ஒன்றை சொல்லிவிட்டது போல், தன் தொப்பை குலுங்கச் சிரித்தபடியே இதைச் சொன்னார், அந்த எம்.டி. பின்னால் நின்று கொண்டிருந்த அந்த யூனிபார்ம் ஆட்களும், எம்.டி யின் பே;சசை ஆமோதிப்பவர்களாக, அகலமாகச் சிரித்து வைத்தார்கள். கதிர் எதுவும் பேசமுடியாத, குழப்பமான மனநிலையில் இருப்பது வெண்ணிலாவுக்குப் புரிந்தது. அவளே கேட்டாள்.

‘விலையைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலியே?”

‘மேடம் ! சிட்டிக்குள்ள சதுரடி ஏழாயிரம் வரைக்கும் போகுது. இது கொஞ்சம் (?) அவுட்டர்ங்கறதால, நாங்க ரொம்ப ரீசனபிளாத்தான் விலை வெச்சிருக்கோம்! ஜஸ்ட் ‡போர் தௌசண்ட் டூ ஹன்ரட் ஒரு சதுரடி. அவ்வளவுதான். லை‡ப் டைம் மெயின்டனன்ஸ் எல்லாம் சேர்த்தாக் கூட, ஒரு வில்லாவோட விலை ஐம்பது லட்சங்கிட்டதான் வரும்”. எம்.டி சொன்னதைக் கேட்டதும், கதிரும், வெண்ணிலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘எனி நெகோஷியேஷன்?” கதிர் கேட்டான்.

‘நீங்க புக் பண்ணுங்க சார் ! அமேசிங் டிஸ்கவுண்ட்ஸ் இருக்குது! முதல்ல லொகேஷன் பாருங்க!”

அலுவலகம் எனச் சொல்லப்பட்ட அந்த கட்டிடத்திலிருந்து, நடக்கத் தொடங்கினார்கள். அந்த யூனி‡பார்ம் ஆட்கள் முன்னே செல்ல, கதிரும், வெண்ணிலாவும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். ஆங்காங்கே, சில மரங்கள் மட்டுமே! வெயில் வேறு வாட்டி எடுத்தது. அரை கி.மீ தூரம் நடந்ததும் அதில் ஒருவன் சொன்னான்.

‘சார்! இது ‡பர்ஸ்ட் ‡பேஸ்! நமக்குள்ளது மூணாவது பேஸ் இல்லையா? இன்னும் கொஞ்சதூரம் நடக்கணும்”

நடந்தார்கள்! நடந்தார்கள் பாதயாத்திரை கணக்கில், வழியும் வியர்வையைப் பிழிய, பிழிய நடந்தார்கள்.

அந்த மனிதர்கள் இருவரும், ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்றார்கள்.

‘சார் ! இது தான் தேர்டு ‡பேஸ் ! அந்த லாஸ்ட்லதான், உங்களோட டி ப்ளாக் வில்லா வருது!” மிஸ்டர் தாமஸ் இப்படிச் சொன்னதும் வெண்ணிலாவுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. காரணம், அவர்கள் சுட்டிக் காட்டிய இடத்திற்குப் பின்னால் கூப்பிடு தூரத்திலேயே இரண்டு சிறிய மலைகள். அதைச் சுற்றிலும் பனங்காடுகள். அவள் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கதிர், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திருதிரு வென முழித்துக் கொண்டிருந்தான்.

அந்த இடத்தைப் பார்த்ததும் பெரியவன் அரவிந்தன், உற்சாகத்தில் ஹோ! ஹோ! என்று கத்த ஆரம்பித்து விட்டான்.

‘அப்பா! அங்கப் பாருப்பா! மலை! இங்கயா நாம புதுவீடு வாங்கப் போறோம். ஜாலிதான்! தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும் நான் ட்ரக்கிங் போவேனே! ஆனா, அந்த ஜங்கின்லயிருந்து சிங்கம், கரடி எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்துடுமாப்பா?” சிறுவன் அப்பாவியாகக் கேட்க, அந்த ‘நெப்டியூன் சிட்டி’ பார்ட்டிகள் இருவரும் அசடு வழிந்தார்கள்.

‘ஸ்மார்ட் பாய் !” என்றபடி அரவிந்தனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான் அதில் ஒருவன்.

‘பார்த்திட்டீங்களா? போலாமா சார்?”

‘ம்!” நுழைவு வாயிலை நோக்கி, நடக்கத் தொடங்கினார்கள். கதிர் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த, வெண்ணிலாவைப் பார்த்த போது அவனையுமறியாமல், அவன் இதழோரத்தில் குறுஞ்சிரிப்பு எட்டிப் பார்த்தது,

‘லொகேஷன் பிடிச்சிருக்கா சார்?” ‘மிஸ்டர் தாமஸ்’ கேட்டார்.

‘எனக்கு ஒரு டூ டேஸ் டைம் வேணும் ! வீட்டுல பெரியவங்கக்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன். அதுக்கப்புறம் புரொசீட் பண்ணலாம் !”

‘நோ ப்ராப்ளம் ! டேக் யுவர் ஓன் டைம் சார் !” என்று அந்த ஆட்கள் இருவரும் ஒன்றாகச் சொன்னார்கள்.

நாளைக்கு வந்தால்கூட ‘ஸாரின்னு’தான் சொல்ல வேண்டியிருக்கும்னு சொன்னவர்கள் இப்படி பல்டிப் அடித்துப் பேசியதும், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு கி.மீ நடந்தபின் வண்டி நிறுத்தியிருந்த இடம் வந்தது. அந்தப் பணியாளர்கள், சாலைவரை வந்து கைக்குலுக்கி வழியனுப்பினார்கள். கதிர் தன் மொத்த கோபத்தையும் வண்டியை உதைப்பதில் காட்டினான். கொஞ்ச தூரத்திற்கு, இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

வெண்ணிலா ஆரம்பித்தாள்.

‘தேங்க்ஸ் !”

‘எதுக்கு?”

‘இப்பிடி திடீருன்னு ஒரு பிக்னிக் கூட்டிட்டு வந்ததுக்கு!”

அவன் மௌனமாக இருந்தான். வெண்ணிலா தொடர்ந்தாள்.

‘இந்த இடத்த ‘சென்னகை;கு மிக அருகில்’ன்னு நீங்க நெனைச்சா, நம்ம சொந்த ஊரு, ‘சென்னைக்கு கொஞ்சம் தொலைவில்’ அவ்வளவுதான்! பேசாம, லோன் போட்டு நம்ம இடத்துல ஒரு வீடு கட்டப் பாருங்க! அதை வாடகைக்கு விட்டுட்டு, வேலைப் பாக்குற வரைக்கும் இந்தச் சென்னையில வாடகை வீட்டுலயே அட்ஜஸ்ட் பண்ணிகிட்டுக் கழிச்சிடலாம்! உங்க இருபது லட்ச ரூபாய் பட்ஜெட்டை ‘சென்னையோ” ’சென்னைக்கு மிக அருகிலோ” தாக்குப் புடிக்காது! புரிஞ்சுதா?”

‘புரிகிறது’ என்று அவனிடமிருந்து வார்த்தை வரவில்லையென்றாலும், அவனுக்குப் புரிந்துவிட்டது என்பதை, அவன் மெலிதாகப் புன்னகைத்தபடியே வருவதை, வண்டியின் பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொண்டாள், வெண்ணிலா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *