கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 5,274 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு செங்கல்லை நான் தேடித் திரிந்தேன். என்னுடைய போதாத காலம், நான் போய்த் தேடின கடைகளில் எல்லாம் இந்த செங்கல் கிடைக்கவில்லை. களைப்பு மேலிட, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எல்லோரும் இல்லையென்றே கைவிரித்தார்கள். ஓர் உருண்டையான செங்கல்லுக்கு இவ்வளவு கஷ்டமா என்று நான் வியந்தேன்.

ஒரு கடைக்காரன் மாத்திரம் என்மேல் கருணை கொண்டு, அன்பு ததும்ப ‘தீர்ந்துவிட்டது’ என்றான். அவன் எனக்காக மிகவும் இரக்கப்பட்டான். அவன் மனது நொந்துபோய் இருந்தது. என்னை வெறுங்கை யோடு அனுப்ப அவன் விரும்பவில்லை. அவனுடைய துக்கத்தைப் பார்த்தபோது இந்த நல்ல மனிதனைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டேனே என்று எனக்குக் கவலையாகவிருந்தது.

உடலுக்கும் குரலுக்கும் தொடர்பில்லாத இன்னொ ருத்தன் என்னுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டான். அவனுடைய முதற்பார்வையிலேயே வெறுப்பு முழுச் சம்மதத்துடன் வெளிவந்தது. செங்கல் வந்ததும் எனக்கு அறிவிப்பதாக உறுதி கூறினான். அவனுடைய வாக்கில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

நான் களைத்து இளைத்து வீடு திரும்பும் சமயம் இன்னொரு கடை எனக்கு நம்பிக்கை தரும் விதமாக நடந்துகொண்டது. அந்தக் கடைக்காரர் என்னுடைய கேள்வியில் ஆச்சரியம் காட்டவில்லை. அத்துடன் அவர் ஆம், இல்லை ‘ என்றும் பதில் கூறவில்லை. மாறாக ‘எத்தனை கல் வேண்டும்?’ என்று விசாரித்தார். அதனு டைய விட்டம், பருமன், நிறம், பருவம் போன்ற நுணுக்கமான விபரங்களைக் கேட்டு, கம்புயூட்டரில் பதிந்து கொண்டார். ஆனால் அந்தக் கடைக்காரரும் அதற்குப் பிறகு என்னுடன் தொடர்பு கொள்ளவேயில்லை.

‘இவர்களில் ஒருவராவது எதற்காக?’ என்ற கேள்வியை எழுப்ப வில்லை. இதிலிருந்து நான் அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதாக எண்ணிவிடக்கூடாது. அவர்களுடைய அறியாமையும் ஆர்வமின்மை யும்தான் இதற்குக் காரணங்கள் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் திராட்சைப்பழங்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். அவை பலவிதத்தில் பல உருவத்தில் இருந்தன. காம்பு ஓடிபடாத, நசுக்கப்படாத , வயதுக்கு வந்து வழுவழுப்பாக இருக்கும் ஒரு பழத்தை எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டேன். கடைசியாகச் சாப்பிட.

அந்த நேரத்தில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. ஓர் உருண்டையான செங்கல் எங்கே கிடைக்கும் என்று. ஒரு யோசனை என் மூளையில் உதித்தால் அது லேசில் போகாது. அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பேன். உருண்டையான வீடொன்று கட்டுவதற்குத்தான் இந்த உருண்டையான செங்கல்லைத் தேடிக் கொண்டிருந்தேன்.

மிகப்பெரிய ஒரு வெள்ளைத்தாளை எடுத்து மேசையிலே விரித்து வைத்துக்கொண்டேன். அதிலே வீட்டின் வரைபடத்தைக் கீறத் தொடங்கினேன். முதலில் எல்லைகளைக் குறித்து வைத்தபின் கதவு, ஜன்னல் போன்றவற்றிற்கு அடையாளங்களை இட்டேன்.

இதிலே பல சிக்கல்கள் வந்தன. உருண்டையான வீட்டிற்கு இதற்கு முன் யாரும் வரைபடம் போட்டதாகத் தெரியவில்லை. சதுரமான வீட்டிற்குக் கூட நான் படம் வரைந்தது கிடையாது. என் மூளைக்கு எட்டியவரை சமையலறை, குளியலறை, படுக்கையறை, வரவேற்பறை என்று இடங்களை ஒதுக்கினேன். மகனுக்கும் மகளுக்கும் சரிசமமான அளவில் குட்டி அறைகள் தயார் செய்தேன். இது எல் லாம் வரைந்து முடிக்கும் போது இரவு நடுநிசியை தாண்டிவிட்டது.

இந்த வரைபடத்தைப் பார்ப்பதற்கு என் பிள்ளைகள் ஆவலாக இருந்தார்கள். அவர்களுடைய அறைகளைப் பார்த்தபோது என் சின்னப் பெண்ணுக்கு அழுகை வந்துவிட்டது. மிகச் சிறியதென்றாள். ஒரு எலிக்குஞ்சுக்குக்கூட அது போதாதென்றாள். மகனும் முகத்தைச் சிறுக்க வைத்துக்கொண்டான்.

இதுதான் வீடு கட்டுவதில் உள்ள சிரமம். சமையலறையில் கொஞ்சம் பிய்த்து எடுத்து மகளுடைய அறையுடன் ஒட்டவைத்தேன். மகளுக்கு நிரம்ப சந்தோஷம். மகனுக்காக வீட்டையே கொஞ்சம் பெரிசாக்கினேன். இப்பொழுது சமையலறை சுண்டைக்காய் அளவுக்குச் சுருங்கிவிட்டது.

மகனும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் அறைகளின் குணாதிசயங்களை வர்ணிக்கத் தொடங்கினார்கள். பச்சை வர்ணம் தன் அறைக்கு வேண்டும் என்று மகள் அபிப்ராயப் பட்டாள். அப்படியே செய்தேன். கடும் மஞ்சள் வேண்டும் என்றான் மகன். அதற்கும் சம்மதித்தேன். அப்பொழுதுதான் மகள் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள். இப்படியான சமயங்களில் அவளுடைய புத்தி கூர்மையுடன் வேலை செய்யும்.

உருண்டையான வீட்டிலே கதவு மேலேதான் வரும். எப்படி வீட்டினுள் ஏறுவது, இறங்குவது என்பதுதான் அவள் கவலை. என் மகன் ஏணி ஒன்றை வைக்கலாம் என்று சொன்னான். அது நல்லதாகப்பட்டது. ஆனால் உருண்டையான ஏணிக்கு நாங்கள் எங்கே போவது? செங்கல்லுக்கே இந்தப் பாடு படவேண்டி இருக்கிறது. ஆகவே அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

கடைசியாக என் மகளே அதற்கு ஒரு தீர்வும் சொன்னாள். எனக்கும் அது சிலாக்கியமாகத்தான் பட்டது.

‘அப்பா! அப்பா! நான் ராப்புன்ஸேல் மாதிரி தலைமயிரைத் தொங்கவிட்டுக்கொண்டிருப்பேன். நீங்கள் ராச குமாரன் மாதிரி அதிலே பிடித்து ஏறி வரலாம். ஆனால் அந்தப் பாட்டை மட்டும் பாடியே ஆகவேண்டும்’ என்றாள்.

“ராப்புன்ஸேல்! ராப்புன்ஸேல்!
தங்க கூந்தலைத் தொங்கவிடு!”

இப்படி பாடிக்கொண்டு என் மகள் தன் சின்ன இடையை அசைத்து அசைத்து ஆட்டினாள். இதில் அவள் மிகவும் ஆர்வமாய் இருந்தாள். தன் வார்குழலிலும் மிகவும் மதிப்பு வைத்திருந்தது தெரிந்தது. மறுப்புச் சொன்னால் கண்ணீர் முட்டியை உடைத்துவிடும் போலபட்டது.

என் மகனுக்கு இது பிடிக்கவில்லை. வட்ட முகத்தை இப்போது நீள்வடிவமாக்கி வைத்திருந்தான். அவன் எதிர்ப்புக்குப் பல காரணங் கள். அவன் தங்கச்சிக்குக் குட்டையான தலைமயிர். இது எப்பொழுது வளர்ந்து ராப்புன்ஸேல் அளவுக்கு நீள் கூந்தலாக மாறும்? இரண்டா வது, தன் தங்கையின் தலைமயிரைப் பிடித்து ஏறுவது வீரத்தனமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவனுக்கு அவமானமாகவும் அசிங்க மாகவும் இருந்தது.

மூன்றாவது வாதம் முதல் இரண்டையும் அடித்துக்கொண்டு போனது. அவன் தங்கையும் அவர்களுடன் வெளியே போயிருந்தால் யார் மயிரைப் பிடித்து ஏறுவது? ஆகவே இந்த யோசனையும் வந்த வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டது.

அடுத்து எனக்கு வந்த ஒரு சந்தேகத்தைக் கிளப்பினேன். உருண்டையான வீடு உருண்டோடும் தன்மை உடையது. அதைப் புதைத்து வைத்தால் அதன் உருண்டைத் தன்மை கெட்டுவிடும். தண்ணீரில் மிதக்கவிடலாம் என்றான் மகன். பலூன் போல பறக்க விடலாம் என்றாள் மகள். இரண்டுமே சரியாகப்படவில்லை . இதிலே சதியான ஒரு திட்டம் ஒளித்திருந்தது. இந்த யோசனைப்படி நாளுக்குநாள் வீட்டின் இடம் மாறிக்கொண்டே இருக்கும். பள்ளிக்கூட பஸ்ஸைத் தவற விடுவதற்கு வசதியாக இவர்கள் இருவரும் ஆலோசனை கூறுகிறார்கள் என்றே எனக்குப் பட்டது.

அட்டதிக்கு யானைகள் உருண்டையான பூமியைத் தாங்கி நிற்பதாக இந்தியப் புராணங்கள் கூறுகின்றன என்றான் மகன். இவன் புராணங்களில் நிபுணன். அதற்கு அடுத்தபடி சாத்தியமான காரியத்தை நாங்கள் ஆராய்ந்தோம். யானைத் துருத்திகளை நாலு மூலைகளிலும் வைத்துக் காற்றை எழுப்பினால் அந்தப் பலத்தில் வீடு மிதக்கும் என்று பட்டது. உருண்டையான வீட்டில் நாலு மூலைகள் எப்படி வரும் என்று கேட்கக்கூடாது. அதைக் கற்பனை செய்ய வேண்டியதுதான். பூமியிலே சரி குறுக்காக ஓடும் பூமத்திய ரேகையை நாங்கள் கற்பனை பண்ணவில்லையா? அப்படித்தான்.

இந்த ராட்சத ஊதிகள் என் மூளையில் அதிகப் பிரயத்தனம் செய்யாமல் தானாகவே உற்பத்தியான யோசனை. இதைக் கேட்டதும் என்னுடைய இரண்டு குழந்தைகளும் கைகளைத் தட்டி ஆரவாரித்தார்கள். என் மகன் சின்னக் கால்களால் மரத்தரையில் எம்பியெம்பிக் குதித்தான். மகளோ, நயனங்கள் விரிய நர்த்தனமாடினாள். மின்சாரத்தை மிச்சப்படுத்த இவர்கள் இரைச்சலை அவசரம் அடக்கியாக வேண்டும்.

ஆனால் நேரம் கடந்த முயற்சி.

அப்பொழுது பார்த்து என் மனைவி வேலையிலிருந்து திரும்பி யிருந்தாள். அவசரமாக எட்டிப் பார்த்தாள். அவள் முகத்தைக் கண்டதும் அந்த அறை ‘ப்ஸ்க்’ என்று சத்தமின்மையை அடைந்தது.

என் மனைவியின் புத்தி நுட்பத்திற்கு ஈடு இணையில்லை. அல்லாவிட்டால் அவள் என்னை மணக்க சம்மதித்திருக்க மாட்டாள். உருண்டையான வீட்டை அவள் விரும்பவில்லை. அந்த அதிருப்தியை அவள் பலவிதங்களில் வெளிப்படுத்தினாள். என்னுடைய பிள்ளைகளுடன் நான் கூட்டு சேர்ந்து கொண்டு சதி செய்வதாக நம்பினாள். நான் பார்க்காத சமயங்களில் அவர்களைக் கண்களாலும் சைகை களாலும் மிரட்டினாள். அவள் சொல்ல விரும்பிய அல்லது மறுத்த விஷயங்கள் சிறு குறிப்புகளாகக் குளிர்பெட்டியில் ஒட்டப்பட்டுக் காட்சியளித்தன.

இந்த வீட்டின் இடையீட்டால் என் மனைவியின் இனவிருத்தி ஆசைகள் எல்லாம் அணைந்துவிட்டன. விரோதமூட்டும் சமிக்ஞை களை பரிமாறினாள். நங்கூரம் அறுத்த கப்பல் போல தனியனாகி நின்றாள்.

நான் என் மனைவியைத் திருப்திப்படுத்த பலவிதங்களிலும் முயற்சி செய்தேன். எத்தனை விதமான தியாகங்களை இவளுக்காக நான் செய்ய வேண்டி வந்தது. வீட்டிலே, மூலைக்கு மூலை அவள் ஆசையோடு வளர்க்கும் மணிச்செடிகளின் இலைக் காம்புகளை நான் இப்பொழுதெல்லாம் கிள்ளுவதில்லை. காது குடைவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்திருந்தேன். மனைவி கொடுக்கும் பள்ளிக்காசில் பிள்ளைகளிடம் கடன் கேட்பதை முற்றிலும் தவிர்த்துவிட் டேன். குறைந்த பகலும், நீண்ட இரவும் கொண்ட ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளைகளில் முட்டை அப்பம் கேட்டு தொந்தரவு செய்வதில்லை. பிரியாணி, கோழி வறுவல் லெவலுக்கு இறங்கி வந்துவிட்டேன். அது மாத்திரமா? பேருந்துகளில் பயணம் செய்யும் போது அந்நிய பெண்களின் ஓவர்கோட்டுகளில் சிகரெட் நுனியால் ஓட்டை போடுவதையும் முற்றுமுழுதாக நிறுத்திவிட்டேன்.

இப்படிப் பலவிதங்களில் என் மனைவியை வசீகரிக்கப் பார்த்தேன். என்னுடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. நான் செய்த தியாகங்கள் எல்லாவற்றையும் அவள் உணர்ந்ததாகக்கூட தெரியவில்லை. மாறாக, இருக்கும் பலமெல்லாவற்றையும் திரட்டி முகத்தைக் கோபமாக வைத்திருப்பதிலேயே செலவழித்தாள்.

ஒருநாள் என் நண்பனை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். நாற்றம் வீசாத, காதிலே கடுக்கன் போடாத, மூக்கிலோ, சொண்டிலோ வளையம் மாட்டாத, இன்னும் பலவித அங்கங்களிலும் ஓட்டையோ, பழுதோ இல்லாத ஒருவனை என் நண்பன் என்று அறிமுகம் செய்து பார்த்தேன். அப்படியும் அவளுக்கு என் மீது மதிப்பு திரும்பவில்லை.

நித்திரை வராத நோயாளிகளுக்காகப் படைக்கப்பட்ட இரவு அது. மயிர் வளர்வது போல கண்ணுக்குத் தெரியாமல் அவள் விரோதம் வளர்ந்தது. வைகறைப் பிரியும் நேரத்தில் ஒருவித சத்தமும் இன்றி திடீரென்று என் முன்னே தோன்றினாள். அவள் கையிலே பிரயாணப் பை. லோண்டரியில் போய் நம்பரைக் கொடுத்தவுடன் உங்களுடைய உலர் சலவை ஆடைகள் தானாக அசைந்து சத்தமின்றி உங்கள் முன் வந்து நிற்குமே, அப்படி ஒரு பேச்சுமில்லாமல் எனக்கு முன்னே வந்து கண் கவிழ்த்து நின்றாள்.

நான் தான் பேச்சுக் கொடுத்தேன். எல்லாம் இந்த வீட்டால் வந்த பிரச்சினைதான். அவளுக்கு விருப்பமான ஆகாசச் சிவப்பில் வெளிச் சுவர்களை எல்லாம் வர்ணம் அடிப்பதாகச் சத்தியப் பிரமாணம் செய்தேன். அது மாத்திரமல்ல, பேயின் கைவிரல்கள் போலப் படரும் ஐவி செடிகளை வீட்டின் வெளியே மாத்திரமல்ல, உள்ளேயும் வளர்க்கலாம். படுக்கை அறை, பாத்திர அறையென்று எங்கே வேண்டுமென்றாலும் அவை படரலாம்; படமெடுக்கலாம் என்று வாக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவள் ஆர்வக் குறைவுடன் சம்மதித்தாள். வீடு கட்டுவதற்கல்ல; மனம் மாறி வீட்டிலே என்னுடன் தங்குவதற்கு.

வீட்டு வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒருவாறு ஒப்பேறிவிட்டன. என்ன என்ன வர்ணங்கள் எங்கேயெங்கே பூசுவது, தரைவிரிப்புகளின் தாரதம்மியம், திரைச்சீலைகளின் தகைமை எல்லாம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. சுவரிலே மாட்டுவதற்கு முன்னெச்சரிக்கையாக வளைந்த ஓவியங்கள், வளைந்த முகக்கண்ணாடிகள், வளைந்த மணிக்கூடுகள் என்று எல்லாம் தயாராகிவிட்டன.

எனக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அதனிலும் கூட விரோதிகளும் இருந்தார்கள். இவர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு யோசனைகள் வழங்கினார்கள். வீட்டு வேலைகள் சரிவர நடைபெற வேண்டும் என்ற ஆவல் தான் காரணம் என்றார்கள். நலம் அடித்த நாய் ஆலோசகர் வேலைக்கு மனுப்போட்டதாம். எனக்கு இந்த ஆலோசனைகள் பிடிப்பதில்லை. நான் என் சொந்த சம்பாத்தியத்தில் ஆலோசிக்கவே விரும்பினேன்.

இந்த நிலையில் தான் உருண்டையான செங்கல் வேட்டையில் நான் இன்னும் தீவிரமாக இறங்கினேன். பேப்பர்களில் விளம்பரம் செய்தேன். வணிகர்களிடமும் வழிப்போக்கர்களிடமும் ஆதரவு தேடினேன். தபால் மூலம் பிரபலமான கம்பனிகளுக்கெல்லாம் எழுதிப்போட்டேன். வையவிரிவலையில் விளம்பரம் கொடுத்தேன். ஒரு தீவிரவாதித் தன்மையுடன் இந்தத் தேடலில் என் நேரத்தைச் செலவழித்தேன்.

நாள் போகப்போக இந்த விஷயத்தில் கட்டுக்கட்டாகக் கடிதங்கள் வரத் தொடங்கின. குரல் அஞ்சலில் பலவிதமான குரல்கள் இரவும் பகலும் ஒலித்தன. ஆண் குரல்கள், பெண் குரல்கள், கீச்சுக் குரல்கள், முரட்டுக் குரல்கள், அப்பாவிக் குரல்கள். மேலதிக விபரங்களுக்காகக் காத்திருக்கும் மேதாவிக் குரல்கள். இப்படிப் பலவிதம். மின் அஞ்சல் கள் பாரமிறக்க பாரமிறக்க, ஊற்றெடுப்பது போல் நிறைந்துகொண்டே வந்தன. கொள்கலத்தை மணிக்கொரு தடவை காலி செய்ய வேண்டியிருந்தது. தொலைநகலில் தகவல்கள் வளையம் வளையமாக வந்து விழுந்தன. எல்லா பதில்களும் ‘இல்லை, இல்லை’ என்றே இருந்தன.

இப்பொழுது எனக்கு ஒரு பயம் பிடித்தது. தொலை நகல்கள் வரும்போது தயக்கம் வருகிறது. மின் அஞ்சலைத் திறக்கும் போது ஒருவித பீதி என்னைப் பீடித்துவிடுகிறது. கடிதம் என்றாலோ சொல்லத் தேவையில்லை. கைகள் நடுங்குகின்றன. ஆம், இருக்கிறது என்று பதில் வந்துவிடுமோ என்று பயந்தபடியே இருக்கிறேன். அப்படி வந்துவிட்டால் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையும் வருகிறது.

ஜன்னல் கம்பியைப் பிடித்தபடியே நின்றேன். தூரத்தில் ஒரு மலை தெரிந்தது. அது வெகு நேரமாக அங்கே இருந்தது. இயற்கைக் காட்சிகளையும், தூர தரிசனங்களையும் அது மறைத்தது. நாளை காலை முதல் வேலையாக அதை நகர்த்தி விட வேண்டும்.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *