சூலூர் சுகுமாரன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 10,449 
 

சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல!

எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு படுத்தித் தான் பேசுவான்.

நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் மணிவண்ணன் எல்லோருமே இந்த சூலூர் மண்ணோடு தொடர்பு உள்ளவர்கள் தான் என்று அடிக்கடி சொல்வான். ஜோதிகா கூட எங்களூர் மருமகள் என்று சொல்லிப் பெருமைப் படுவான்

சுகுமாரனின் வீடு சூலூரின் புறநகர் பகுதியில் இருக்கிறது. தொழில் காரணமாக அவன் அடிக்கடி கோவை போய் வருவான். சூலூரிலிருந்து புற நகருக்குப் போகும் வழியில் இன்னும் தெரு விளக்கு வரவில்லை.

கொஞ்ச நாளா தினசரி மாலை நேரத்தில் மழை வந்து விடுகிறது. இரண்டு நாட்களாக சுகுமாரனின் காரில் வலது பக்க லைட் எரிவதில்லை. மெக்கானிக் ஷாப்பில் விட்டு சரி செய்ய அவனுக்கு அதற்கு நேரமே இல்லை

அன்று கோவையிலிருந்து வீடு திரும்ப இரவு எட்டு மணியாகி விட்டது. மழை தூறிக் கொண்டிருந்தது. கும்மிருட்டு. காரில் வலது பக்க லைட் மட்டும் தான் எரிந்து கொண்டிருந்தது.

அந்த மழையில் கூட ஒருவன் பைக்கில் புறநகர் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தான்

அடே!….அவன் என்ன சின்னத் தம்பியில் மாலைக்கண் வேடத்தில் வரும் கவுண்டமணியைப் போல தன் வண்டிக்கு நேராக இடது பக்கம் வருகிறானே..என்று நினைத்த மறு வினாடி இடது பக்கம் மோதியே விட்டான்.!

“டமார்!”

பைக்கில் வந்தவன் இடது பக்கம் காரில் மோதவும், சுகுமாரன் ‘சடர்ன் பிரேக்’ போட்டு காரை நிறுத்தவும் சரியாக இருந்தது.

சின்னத் தம்பி கவுண்டமணி போல் வந்த பைக்காரனை திட்டலாமென்று காரிலிருந்து இறங்கிய சுகுமாரனை, அக்கம் பக்கம் இருந்து ஓடி வந்தவர்கள் தான், “‘சின்னத் தம்பியில் ஒரு பக்க லைட்டோடு காரில் வருவானே ஒரு கேனையன் அது போல் ஒரு பக்க லைட்டோட இந்த இருட்டில் தினசரி வருகிறாயே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?” என்று ஒரு பிடி பிடித்தார்கள்.

பாவம் சுகுமாரன்! .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *