“ஏசப்பா…”
என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான்.
மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை.
ஆனால் அது அலறியடித்துக் கொண்டு ஒலித்ததால், ஸ்ரீகாந்தும் அவன் அம்மாவும் லேசாக அதிர்ந்தபடி பார்க்க, எதிரில் உட்கார்ந்திருந்த பெண் பழகிப்போன ரிங் டோன் என்பதால் எந்த பதற்றமும் இல்லாமல் சாவகாசமாகத் தன் மொபைலை எடுத்துப் பார்த்தாள்..
போனை எடுத்து,
“ஹலோ…”
“……………….”
“ஆங்… சொல்லுங்க…”
“………………..”
“மேடம்… இது வந்து சுபயோகம் மேட்ரிமோனியல்ன்னு சொல்லிட்டு ஒரு திருமண தகவல் மையம் மேடம். எங்க மூலமாத்தான் அந்த விளம்பரம் பேப்பர்ல வந்துச்சு… உங்களுக்கு மாப்பிள்ளை வேணுமா?… இல்ல, பொண்ணு வேணுமா மேடம்?…”
“…………………”
“என் பொண்ணு இல்ல மேடம்… என் பேரு கிருத்திகா… நீங்க விளம்பரத்துல பாத்தது ஒரு வரனோட தகவல்… நான் திருமண தகவல் மையத்திலர்ந்து பேசுறேன்… எங்ககிட்ட நிறைய வரன்கள் இருக்கு… உங்களுக்கு பொண்ணு வேணுமா, பையன் வேணுமா மேடம்?…”
“………………….”
“மேடம்… நான் உங்களுக்கு… ஹலோ… ஹலோ…”
என்று மீண்டும் மீண்டும் சொன்னபடி போனைப் பார்த்தாள். அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
ஸ்ரீகாந்தையும் அவன் அம்மாவையும் நிமிர்ந்து பார்த்த கிருத்திகா அம்மாவிடம்,
“சாருக்கு என்ன வயசும்மா?…
முப்பத்தாறு…
ஃபர்ஸ்ட் மேரேஜ்தான?…
இந்தக் கேள்வியை மட்டும் வேறு யாராவது கேட்டிருந்தால் அம்மாவின் பதில்கள் சென்சார் செய்யப்படவேண்டிய சில வார்த்தைகள் நிரம்பிய பதிலாக இருந்திருக்கும். அந்த வார்த்தைகள் அந்தக் கேள்வியைக் கேட்டவர்களின் அம்மா, அப்பாவிலிருந்து மூன்று தலைமுறைகள் வரை வெட்கித் தலைகுனிய வேண்டிய வார்த்தைகளாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட சம்பவங்கள் கணக்கில்லாமல் நிகழவைத்த கேள்வி இது.
“என் புள்ளையப் பாத்தா ஏழு கல்யாணம் பண்ணி பதினஞ்சு புள்ள பெத்தமாதியா தெரிது?… அவ கண்ல ஈயத்தைக் காச்சி ஊத்த… …………………….. அவ ……………………… நாக்க ……………..”
நல்லவேளை,
இத்தனை வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த ஸ்ரீகாந்த் ஒரு வழியாக ஒத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறான். அதுவும் இந்தக் கேள்வியைக் கேட்ட பெண் இந்த தகவல் மையத்தைச் சேர்ந்த பெண் என்பதால் ஸ்ரீகாந்த் பயந்தபடி எந்த வார்த்தைகளும் அம்மாவின் வாயிலிருந்து வரவில்லை.
ஆனாலும் அவள் இந்தக் கேள்வியைக் கேட்டது தவறுதான் என்ற வார்த்தைகள் அம்மாவின் முகத்தில் தெரிந்தது ஸ்ரீகாந்துக்குப் புரிந்தது.
“ஆமாம்மா… மொத கல்யாணம்தான்… இவன் எங்க?… இருவதாறு வயசுலருந்து கேட்டுக் கேட்டு இப்பத்தான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டான்…”
என்று சலித்துக் கொண்டார் அம்மா.
லேசான புன்னகையுடன் அந்தப் பெண்,
“கவலப் படாதீங்கம்மா… எங்ககிட்ட நிறைய வரன்கள் இருக்காங்க… இன்னும் கூட வந்திட்டிருக்காங்க… நிச்சயமா இதுல சாருக்கு நல்ல இடமா ஒன்னு அமையும்…”
மறுபடியும்,
“ஏசப்பா”
என்று இப்போது முனகியது கிருத்திகாவுக்கும் கேட்டிருக்கும்.
“நீங்க என்ன கேஸ்ட்?
“……………….”
“உங்களுக்கு எந்த கேஸ்ட்டா இருந்தாலும் ஓகேயில்லயா?…”
ம்… பரவால்லங்க…”
“சில பேரு செகண்ட் மேரேஜ் பண்றதா இருந்தாகூட அவங்க கேஸ்ட்லயேதான் பாப்பாங்க… நீங்க கன்வெர்ட்டட் கிறிஸ்டியனா?…
“ஆமாங்கம்மா…”
என்று சிரித்துக் கொண்டு சொன்னாலும் அம்மா முகத்தில் இருந்த லேசான கோபம் இவள் மறுபடியும் மறுபடியும் மறுமணம் பற்றியே பேச்சை எடுத்ததில் இருந்த ஆத்திரத்தைக் காட்டியது.
“இந்தாங்க சார்… இந்த ஃபைல்ல…. இதுல கிறிஸ்டியன் பொண்ணுங்களோட ப்ரொஃபைல் இருக்கு… இதப் பாருங்க… இன்னும் நிறைய இருக்கு… நான் தர்றேன்…”
என்று இரண்டு கோப்புக்களைக் கொடுத்தாள்.
முதலில் ஒரு கோப்பைப் பிரித்து ஒவ்வொரு பெண்ணின் போட்டோவையும், தகவல்களையும் பார்க்க ஆரம்பித்தான் ஸ்ரீகாந்த்.
சிலவற்றை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான். அம்மா பார்த்துவிட்டு ஏதோ ரகசியக் குரலில் சொல்லி வேண்டாம் என்பதுபோல் சொல்லி ஸ்ரீகாந்திடம் கொடுக்க, அவன் மீண்டும் கோப்புக்குள்ளேயே வைத்தான்.
ஒரு பெயரைப் பார்த்ததும் ஸ்ரீகாந்த் சட்டென்று அதிர்ந்தான்.
சுலோச்சனா.
ஆனால் அதில் புகைப்படம் இல்லை.
மேடம்… இதுல போட்டோ இல்லையா?…
என்று சின்ன ஆர்வத்துடனும் சந்தேகத்துடனும் கேட்க,
எட்டிப் பார்த்த கிருத்திகா,
“இருக்குமே சார்…”
சொல்லிக்கொண்டே பேப்பரைத் திருப்பப் போக, அந்தக் கண நேரத்தில் ஸ்ரீகாந்தின் மனதில் குவியல் குவியலாய் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன
“இது அவளா?… இல்ல வேற யாராவதா?… வயச பாக்காம விட்டுட்டேனே… அவளுக்குத்தான் அப்பவே மேரேஜ் ஆயிருச்சே… இல்ல… இது நிச்சயமா அவளா இருக்காது… அது இல்லாம, இதுல இருக்குறது கிறிஸ்டியன் பொண்ணுங்களோட ப்ரொஃபைல்… அவ இந்துவாச்சே… இல்லல்ல… ஆனா… நான் இப்ப ஏன் இப்படி தேவையிலாம டென்ஷனாகுறேன்?… இது அவளா இருந்தா என்ன? இல்லேன்னா என்ன?… ப்ச்ச்… அவ வேணும்னா சொன்ன வார்த்தைய மீறி கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கலாம்… ஆனா நான்… அவள மறக்க முடியாம… வெளிநாடு போயி… அப்ப கூட… ஒருவேள… ச்சே… நான் ஏன் மறுபடியும் தேவையில்லாம டென்ஷனாகுறேன்?… இது நிச்சயமா அவளா இருக்காது… அவளா இருந்தா என்ன?… இல்லேன்னா என்ன?…
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லப்போகும் அந்தப் போட்டோவை கிருத்திகா திருப்பினார்.
யாரும் அறியாமல், ஒரு ஓசையும் இல்லாமல் ஸ்ரீகாந்தின் மனதுக்குள் கேத்ரீனா, ரீட்டா போன்ற ஒரு பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தன.
அந்தப் போட்டோவிலிருந்தது வேறொரு பெண்.
இரண்டு வினாடிகள் பேப்பரைத் திருப்புவதை ஸ்ரீகாந்த் நிறுத்தினான்.
அம்மா நிமிர்ந்து அவனைப் பார்த்ததை உணர்ந்து மீண்டும் திருப்ப ஆரம்பித்தான்.
முதலில் அவன் பேப்பரைத் திருப்பியதற்கும் இப்போது திருப்புவதற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. இப்போது பேப்பரைத் திருப்பும் வேலையை அவன் கைகள் மட்டும்தான் செய்தது. மனம் மட்டும் நொடிக்கு பத்து வருடம் என்று ஒளியின் வேகத்தில் சுமார் பத்து வருடங்களைக் கடந்து போனது.
“சொன்னா புரிஞ்சுக்கோ… அவங்கள எப்படியாவது ஒத்துக்க வைப்போம்… அத விட்டுட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னுல்லாம் யோசிக்காத…”
என்றாள் சுலோச்சனா.
சுலோச்சனா ரொம்ப தைரியமானவள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலை உடையவள். அவள் பேசும்போது ஸ்ரீ பெரும்பாலும் அவள் முகத்தைப் பார்த்ததில்லை. ஒருவேளை அவள் முகத்தைப் பார்த்தாலும் அவனைறியாமல் அவள் சொல்வதை கவனிக்காமல் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவள் முக்கியமான விஷயம் ஏதாவது சொன்னால் அவன் கீழே குனிந்தபடி இருப்பான்.
இப்போது கீழே குனிந்த தரையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சுலோச்சனா மீண்டும் அவன் முகத்தைத் தன் முகத்தை நோக்கித் திருப்பினாள்.
“அது என்னப்பா நான் சீரியஸ்ஸா ஏதாவது சொன்னா மட்டும் தரைய பாத்துக்கிட்டிருக்க?…”
அவனுக்கு சிரிப்பு வந்தது.
“நீ சொல்லுப்பா… நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்…”
என்று மீண்டும் தரையைப் பார்த்தான்.
“சொல்லி முடிச்சுட்டேன், இனிமே நோ சீரியஸ் டாக்… ஒன்லி ரொமான்ஸ்…”
என்று சொன்னவள் அவன் முகத்தை மீண்டும் திருப்பி,
ஸ்ரீ…
என்று அழைத்தாள்.
திரும்பினான்.
“நான் பேரு வச்சுட்டேன்…”
“என்ன பேரு?…
புரியாமல் சந்தேகமாகக் கேட்க,
“பொண்ணு பிறந்தா வெண்ணிலா… பையன் பிறந்தா ஆதவன்…”
“ஓ… பொண்ணுன்னா நிலா… பையன்னா சூரியனா?…”
“யெஸ்…”
என்று சிரித்தாள்.
“பையன் பேரு… பொண்ணு பேருல்லாம் முடிவு பண்ணியாச்சு… கல்யாணத்துக்குக்கப்புறம் குழந்தை பெத்துக்கலாமா, இல்ல…”
என்று இழுக்க, சுலோச்சனா பளிச் பளிச்சென்று அடித்தாள்.
ஒரு கணம் நினைவுகள் சட்டென்று கலைந்தது.
ஸ்ரீ…
என்ற அம்மாவின் குரல்.
திடுக்கிட்டுத் திரும்பினான்.
“என்னப்பா… இந்தப் பொண்ணு எப்படி இருக்கு?…”
என்று கேட்டது அப்போதுதான் காதில் விழுந்தது.
“ஹூம்?… வேற ஏதாவது பாப்போம்…”
ஸ்ரீகாந்துக்கு அந்த போட்டோக்களில் கவனமே இல்லை. ஆனால் கைகளும், கண்களும் அவன் பார்த்துக் கொண்டிருந்த கோப்புக்களில் படிந்திருந்தாலும், மனம் மீண்டும் பின்னோக்கிச் சென்றது.
“ஸ்ரீமா… நீ வேற யூ.எஸ்லாம் போகப்போறேன்ற… ஏற்கனவே நமக்கு கேஸ்ட் பிரச்சனை இருக்கு… இது ஸ்டேட்டஸ் பிரச்சனையை வேறக் கொண்டு வருவாங்க… எங்க வீட்ல பிரச்சனை இல்ல… நீங்க எங்கள விட ஹையர் கேஸ்ட், அது இல்லாம பொதுவா பொண்ணு நல்ல வசதியான வீட்ல வாழப்போறான்னா எந்த பெத்தவங்களும் ஒத்துக்குவாங்க… எனக்கு பயம்லாம் ஒங்க வீட்ல ஒத்துக்குவாங்களான்றதுதான்…”
அவன் விரல்களில் சொடக்கு எடுத்துக் கொண்டே அவள் சொன்னது இன்னும் அவன் நினைவில் இருக்கிறது.
“வீட்ல ஒத்துக்கலேன்னா, ஒத்துக்குறவரைக்கும் வெயிட் பண்ணுவியா?…”
“எவ்வளவு நாள் ஆகும்?…”
“ஏய் என்னடா?… ஆட்டோக்காரன் மாதிரி கேக்குற?… விட்டா, வெயிட்டிங் சார்ஜ் எதும் கேப்பியா என்ன?…”
ஸ்ரீகாந்துக்கு அந்த சீரியஸ்ஸான மனநிலையிலும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே,
“நான் வெயிட் பண்றது இருக்கட்டும்… நீ எவ்வளவு வெயிட் பண்ண விடுவாங்களா?…”
“பாப்போம்…”
“என்னத்த பாப்பம், ஆப்பம்?… இதோ பார்… என்னப் பொறுத்தவரைக்கும், ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல… இன்னைலர்ந்து சரியா மூவாயிரத்தி அறுநூத்தி ஐம்பத்தி மூனு நாள், அதாவது பத்து வருஷம் வெயிட் பண்ணச் சொன்னாக்கூட, இதே லவ்வோட, உனக்காக ஸ்ரீ வெயிட் பண்ணுவான்…”
என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
ஸ்ரீகாந்த் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அந்தக் காதலர் தினம்தான் அவர்களின் கடைசி சந்திப்பு.
உண்மையில் அவள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. ஸ்ரீகாந்தின் வீட்டில் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தவுடன் அம்மாவும் அப்பாவும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் சுலோச்சனா வீட்டில் அவளுடைய தாய்மாமாவின் மதப்பற்று, இல்லை மதவெறி இவர்களின் காதலுக்குச் சவப்பெட்டி செய்து புதைக்க ஆரம்பித்தது.
ஒரு சூழ்நிலைக்கு மேல் அவளைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பெல்லாம் துண்டிக்கப் பட்டது.
அவர்கள் கடைசியாகப் பேசி இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே அவளுக்கு நிச்சயம் முடிந்து விட்டது என்று சொன்னார்கள்.
உறைந்து போனான் ஸ்ரீகாந்த்.
“ஸ்ரீ…”
அம்மாவின் குரல் அவனை மீண்டும் நிகழ்காலத்துக்கு இழுத்தது.
“இந்தப் பொண்ணு நல்லாருக்கே…
அம்மா சொன்னதும் நினைவு திரும்பியவனாய், அதைப் பார்த்தான்.
பதில் சொல்லாமல் திருப்பினான்.
அடுத்த படிவத்தில் பார்த்தால் பெயருடன் விதவை, ஒரு ஆண் குழந்தை வயது ஆறு என்று போடப்பட்டிருந்தது.
“மேடம், இந்த ஃபைல்ல்ல இருக்குறது செகண்ட் மேரேஜ் ப்ரொஃபைல்னு நெனக்கிறேன்…”
“இல்ல சார்… ஃபர்ஸ்ட் மேரேஜ்தான்…”
என்று சொன்ன கிருத்திகா எட்டிப் பார்த்து அந்த படிவத்தைப் பார்த்துவிட்டு,
“ஓ… இத இந்த ஃபைல்ல போட்டுட்டாங்களா?…”
என்றபடி அந்தப் படிவத்தை எடுத்தாள்.
“இவங்க எனக்குத் தெரிஞ்சவங்கதான்… ஹஸ்பெண்ட் இறந்துட்டாரு… ஒரு பையன்… அவங்க பையன் ஆதவன்னு பேரு… என்கிட்டதான் டியூஷன் படிக்கிறான்… தனியாதான் இருக்காங்க… வேலை பாக்குறாங்க… கல்யாணம்லாம் பண்ணிக்கிற ஐடியா இல்லாமதான் இருந்தாங்க… நான்தான் அவங்க தனியா இருக்காங்களேன்னு கம்பள் பண்ணி ப்ரொஃபைல் கேட்டு வாங்குனேன்… குழந்தைங்களோட ஏதாவது வரன் இருந்தா சொல்லச் சொல்லி சொன்னாங்க… என்று கிருத்திகா சொல்லி முடித்தபின் மீண்டும் சுலோச்சனா மனதுக்குள் வந்தாள்.
மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
அடுத்த கணம் கிருத்திகாவின் குரல் ஸ்ரீகாந்தின் கவனத்தைத் திருப்பியது.
“இவங்க ரீசன்டாதான் கிறிஸ்டியனா கன்வெர்ட் ஆனாங்க…”
என்னவோ நினைத்தவன் சட்டென்று அந்தப் படிவத்தில் இருந்த போட்டோவைப் பார்த்தான். அதிர்ந்தான்.
அது யாராக இருக்குமோ என்று நினைத்தானோ அவளேதான். அதே சுலோச்சனாதான்.
அங்கிருந்து எப்போது எழுந்து வந்தார்கள் என்று எதுவுமே ஸ்ரீகாந்துக்கு ஞாபகம் இல்லை.
கடைசியாக கிருத்திகா மீண்டும் மீண்டும்
“உண்மையிலயே ஓகேதானா சார்?…“
என்று கேட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது.
வீட்டில் அம்மா கத்திப் புலம்பிக் கொண்டிருந்தது அவனுக்கு கேட்டாலும் கதவைச் சாத்திக் கொண்டு தன் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
“இப்ப இவனுக்கு என்ன வயசாச்சுன்னு ஒரு விதவைய கல்யாணம் பண்ணிக்கிறேன்றான்… அதுவும் ஒரு குழந்தையோட…”
பக்கத்தில் அத்தை, சித்தியெல்லாம் இருந்தார்கள்.
“இந்தப் பொண்ண எங்கியோ பாத்தமாதி இருக்கே…”
ஸ்ரீகாந்தின் சித்தி மட்டும் ஸ்ரீகாந்தும் சுலோச்சனாவும் ஒருமுறை வெளியில் போயிருந்தபோது பார்த்திருந்தார்.
“இது இவன் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிட்டிருந்தானே… அந்தப் பொண்ணுமாதில்ல இருக்கு?…”
எப்படியோ இந்த விஷயம் அவர்களுக்குத் தெரிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான் ஸ்ரீகாந்த்.
“ஏய், அந்தப் பொண்ணுதான்க்கா இது…”
இப்படியே ரொம்ப நேரம் பேசினார்கள். வீட்டில் இருந்த ஆண்களும் பேசினார்கள். இவர்கள் என்னதான் வாதம் செய்து கொண்டிருந்தாலும் கடைசியில் ஸ்ரீகாந்தின் விருப்பப்படிதான் நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.
அந்த படிவத்தில் இருந்த சுலோச்சனாவின் போட்டோவைப் பார்த்தான். தன் பர்ஸில் இருந்த சுலோச்சனாவின் பழைய போட்டோவையும் எடுத்தான்.
உருவத்தில் நிறைய மாற்றங்கள் இருந்தன.
ஆனால் ஸ்ரீகாந்துக்கு இரண்டு போட்டோக்களிலும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சுலோச்சனாதான் தெரிந்தாள்.
சில தீர்மானங்கள் கண நேரத்தில் எடுக்கப் படுகின்றன. ஆனால் அந்த கண நேரம் எப்போது நிகழும் என்பதுதான் விடை தெரியாத கேள்வி.
எதார்த்தமாக நிமிர்ந்தவன் எதிரில் இருந்த காலண்டரைப் பார்த்தான்.
14.02.2014.
சரியாக மூவாயிரத்து அறுநூற்று ஐம்பத்து மூன்று நாட்கள் கடந்திருந்தன.