கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 16,451 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது.

ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுயம்புவின் கண்களில் ஒரு மிரட்சி. அவன் முகத்தில் ஒரு கலவரம். அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு. “அய்யோ!” என்று சிறு கூவல் எழுப்பியது அவன் வாய்.

காரணம்? வேகமாகப் பறந்து கொண்டிருந்த உல்லாசிகளை அவன் கண்கள் பார்த்த சமயத்திலேயே, அந்த நிஜக் காட்சியை அழித்தபடி வேறொரு தோற்றம் அவனுக்கு புலனாயிற்று. இதுவும் நிஜமாகவே நேரில் காண்பது போல்தான் அவனுக்குப் பளிச்சிட்டது.

எமன் வாகனம் போல நின்றது லாரி. அதனால் மோதப்பட்ட மோட்டார் பைக் விழுந்து கிடந்தது. மண்டையில் அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடக்கிறான் அந்த இளைஞன். அவனுடைய தோழியும் அருகிலேயே விழுந்து கிடக்கிறாள். சிறு கும் பல் கூடியிருந்தது.

வேக வாகனத்தின் “படபட” ஒசை காதில் விழுந்து கொண் டிருக்க, சுயம்பு அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து பார்த் தான். உல்லாச ஜோடி ஒய்யாரமாக போய் கொண்டிருந்தது.

நெடுமூச்சுயிர்த்தான் சுயம்பு. “நல்ல வேளை!” என்றொரு எண்ணம் அசைந்து கொடுத்தது அவன் உள்ளத்தில். ஆனால், “அய்யோ!” என்று அவன் வாய்விட்டு அலற நேர்ந்தது உடனேயே…..

ரோடின் திருப்பத்தில் வேகமாக வந்த லாரி, மோட்டார் பைக் உல்லாசிகளை மோதித் தள்ளி, சக்கரத்தால் இளைஞனைக் காயப்படுத்தி, ரத்தம் ஒட வைத்தது. அந்த பெண் தூக்கி ஏறியப் பட்டிருந்தாள். கூச்சல்…. கும்பல்…. குழப்பம்.

ஒரு கணத்திற்கு முன்பு சுயம்பு மட்டும் தெளிவாகத் தன்னுள் கண்டறிந்த கோர விபத்து உண்மை நிகழ்ச்சியாகி பயங்கரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது, பலரும் பார்க்கும்படியாக.

சுயம்புவின் உள்ளில் ஒரு அதிர்ச்சி. இதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்றில்லை. தனக்கு இப்படி ஒரு அதீத சக்தி இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்வதற்குள் இரண்டு மூன்று அனுபவங்கள் அவன் கண்முன்னே நடந்துவிட்டன.

சர்யம்பு தெருவழியே போய் கொண்டிருந்தான். காலை ஒன்பது – ஒன்பதரை மணி இருக்கலாம். ஒளிமயமாக சிரித்தது உலகம். பரபரப்பாக இயங்கினர் மனிதர்கள். உலகமே இனியதாக தோன்றியது அவனுக்கு. கல கல வென்று ஒரு சிரிப்பொலி அவன் கவனத்தை கவர்ந்தது. அங்குமிங்கும் பார்த்தான். ஒரு வீட்டு மாடி பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் தான் சிரித்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். பளிடும் நவீன ஆடையில் ஒரு அழகுப் பூ மாதிரி மிளிர்ந்தாள் அவள். அவளுக்கு வேடிக்கை காட்டியபடி பெரிய பெண் ஒருத்தி ஒளிந்தும், மறைந்தும் இயங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த காட்சி சுயம்புவை பரவசப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவன் பரபரப்பு அடைந்தான். அவன் உள்ளத்தில் ஒரு பதைப்பு. பால்கனியில் நின்ற சிறுமி தலைகுப்புற விழுந்து கிடக்கிறாள் கீழே தரை மீது. அவள் மண்டையில் அடிபட்டு ரத்தம் செவே லெனப் பளிச்சிடுகிறது. அந்நேரத்திய அந்த முகம்….

திடுக்கிட்ட சுயம்பு தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தான். பால்கனி பால்கனியாகவே இருந்தது. நீலநிற கவுன் அணிந்து, சந்தோஷத்தின் குறள் உருவமாய் காட்சி தந்த சிறுமியும் அப்படியே தான் இருந்தாள்.

நல்ல வேளை!” என்றது சுயம்பு மனம். அவன் சில அடிகள் கூட நகர வில்லை. “ஐயோ, அம்மா. பிள்ளை பிள்ளை” என்று அலறல்கள் வெடித்தன. அவன் திரும்பிப் பார்த்தான்.

சிறுமி கீழே ரோடில் விழுந்திருந்தது, வீட்டு வாசலின் முன்பு, பால்கனியின் மரத்தடுப்புகள் பெயர்ந்து விழுந்து கிடந்தன. குழந்தையின் தலையில் பலமான அடி. மேலே இருந்த பெரிய வர்கள் கீழிறங்கி வருவதற்கு முன்னதாகவே அக்கம்பக்கத்தினர் கூடி விட்டனர். ரத்தம் குழந்தையின் ஆடையை நனைத்துப் பளிச்சிட்டது….

“அய்யோ பாவம்” என்றது சுயம்பு மனசு. இப்படி நடக்கும்னு எனக்கு ஏனோ தோணியிருக்கு என்று எண்ணினான் அவன். உள்ளுணர்வின் திடுக்கிடலாக இருக்கலாம் என்றும் நினைத்தான். அப்படியே நடந்துவிட்டது என்று கூறியது அவன் மனம். கவிதைத் துணுக்காய் சிலிர்த்துச் சிரித்த சிறு பெண் கோரச் சித்திரமாய் ஒரு கணத்தில் மாற நேரிட்டது அவனுள் ஒரு வேதனையை உண்டாக்கியது. அது தான் அவனுக்கப் பெரும் உறுத்தலாக இருந்தது. வேறு எதுவும் எண்ண வில்லை அவன்.

திரும்பவும் இந்த உள்ளுணர்வு அவனை திடுக்கிட வைத்தது வேறொரு நாளில்

தெரிந்தவர் ஒருவர் வீட்டின் முன்னறை. நண்பன் ஒருவனுடன் வந்திருந்தான் சுயம்பு. பலர் இருந்தனர், நாற்காலிகளில். சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தனர். சுயம்பு, சும்மா அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தான். உயரே மின் விசிறி வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது.

அவன், அதை கவனித்தவாற இருந்தான். திடீரென அவனுள் ஒரு பரபரப்பு, அந்த விசிறி அறுந்து கீழே விழுந்துவிட்டது. அதற்கு கீழே இருந்தவர் தலை மீது விழுந்தது, அவர் சரிந்து விழுகிறார். மண்டையில் அடிபட்ட அவர் செத்துப் போகிறார். “அய்யோ” என்றது சுயம்புவின் வாய். தலையை உலுக்கிக் கொண்டு அவன் பார்த்தான். அப்படி எதுவும் நடந்திருக்க வில்லை.

மற்றவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். “என்ன, உனக்கு உடம்புக்கு குணமில்லையா?” என்று நண்பன் கேட்டான். “திடீர்னு அய்யோன்னுகத்தினியே?” என்றான். சுயம்பு திகைத்தான். என்ன சொல்வது? எப்படி விளக்குவது? “ஒண்ணுமில்லே! என்று அசடன் போல் முனகினான்.

அவனும், நண்பனும் புறப்படத் தயாராயினர். அப்போது தான் அது நிகழ்ந்தது. மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறி திடுமென அறுந்து விழ, அது கீழே இருந்தவரின் தலையைத் தாக்க, அவர் சரிந்து கீழே விழுந்தார். சரியான அடி. ஆள் குளோஸ்!

சுயம்பு அதிர்ந்து போனான். அவன் உள்ளத்தில் பெரும் உறுத்தல். இவரை நான் காப்பாற்றியிருக்க முடியுமோ? நாற்காலியை தள்ளிப்போட்டு உட்காரும்படி எச்சரித்திருக் கலாமோ? அவன் மனமே அவனை குடைந்தது. ஆனால், என்ன காரணம் சொல்லி அவரை எச்சரித்திருக்க? இப்படி எனக்கு தோணிச்சு என்றால் மற்றவர்கள் நம்பியிருப்பார்களா? பைத்தியம் என்று பரிகசித்திருப்பார்கள் என்றும் அவன் எண்ணிக் கொண்டான்.

எனினும், இந்த அனுபவத்தின் நினைப்பு அவனுள் வேதனைக் குளவியாய் குடைந்து கொண்டுதான் இருந்தது.

இதுவும் இதுபோன்ற இதர அனுபவங்களும் அவனை சதா எண்ணி உளைய வைத்தன. தனக்கு, சாதாரணமாக மற்றவர் களுக்கு இல்லாத, ஒரு அதிசய சக்தி இருப்பதாக அவனுக்கு பட்டது. அது, அவனுக்கு கிளர்ச்சி ஊட்டியது. அதேசமயம் அச்சம் தருவதாகவும் இருந்தது. அதுபற்றி நண்பர்களிடம் பேசவும் தயங்கினான் அவன். மற்றவர்கள் நம்பமாட்டார்கள், கேலி பண்ணுவார்கள் என்ற பயம் அவனுக்கு. நல்ல மருத்துவரை பார்; உளயியல் நிபுணரை கலந்து ஆலோசி என்றெல்லாம் கலவரப்படுத்துவார்கள் எனும் எண்ணமும் உண்டாயிற்று.

”சரி. இருப்பது இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் எனக்கு ஒன்றும் தொல்லை இல்லையே,” என்று சுயம்பு தன் மனசை தேற்றிக் கொண்டான்.

அவன் படித்தவற்றில் தற்செயலாக அவன் பார்வையில் பட்ட சில ஆங்கிலக் கட்டுரைகள் அவனுக்கு சிறிது தெளிவு தந்தன. மனிதரின் உள்ளுணர்வு பற்றியும், உள்ளுணர்வின் அபூர்வ சக்தி குறித்தும், பார்வைப் புலனுக்கு மேற்பட்ட அதிகப்படி கண்டுரைக்கக் கூடிய தனி ஆற்றல் பற்றியும் அவை பேசின. சிலரது விந்தை அனுபவங்கள் குறித்தும் அவை விவரித்தன.

இருக்கலாம்; எனக்கு ஏன் இது திடீரென வந்து சேர்ந்தது என்று சுயம்பு குழம்பித் தவித்தான். பிறகு, இது வந்தது போல் திடீரென மங்கி மறைந்துவிடவும் கூடும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

அவனுக்கு புரியாத ஒரு விஷயமாக வியப்பளித்தது இன்னொரு உண்மை. இப்படி “அதீதப் புலன் உணர்வு பிடித்துக் காட்டுகிற அனுபவம் எல்லாம் சோக நிகழ்ச்சிகளாக, கோர விபத்துக்களாகவோ இருக்கின்றனவே! மங்களகரமான சந்தோஷங்கள் நிறைந்த காட்சிகள் என் உள்ளுணர்வில் முன்கூட்டியே பளிட மாட்டாவோ?” என்று சந்தேக அலைகள் அவனுள் எழுவது உண்டு. அதற்காக அவன் மன வேதனை கொள்ளவில்லை.

இந்நிலையில் சுயம்புவுக்கு ஒரு காட்சி புலனாயிற்று. ஆனந்தமயமான சூழலில் அமைந்த மகிழ்ச்சிகர நிகழ்ச்சியாகவே தோன்றியது அது.

அவன் நண்பனுக்குத் திருமணம். கல்யாண மண்டபக் காட்சிகள் வர்ணமயமாக குளுகுளுத்தன. எங்கும் சந்தோஷம். இனிமைகள். முகூர்த்த நேரம் நெருங்குகிறது. ஒரே பரபரப்பு.

இவை எல்லாம் சுயம்புவுக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்தன. சட்டென நிலைமை மாறியது. ஒருவர் வந்து மணமகனிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அவன் முகம் வெளிறுகிறது. செய்தி மெதுவாகப் பரவ, உண்மை வெளிப்படு கிறது. மணமகளை காணவில்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கோ போய்விட்டாள். தன் மனசுக்குப் பிடித்த காதலனுடன் ஒடிப்போயிருக்க வேண்டும்.

இக்காட்சி சுயம்புவை உலுக்கியது. உண்மையாகவே அவன் நண்பனுக்கு திருமணம் நிகழ இருந்தது. இப்போது தன்னுடைய கடமை என்ன? நண்பனுக்கு கடைசி நேர ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். ஆனால், தான் சொல்வதை மணமகனும், மற்றவர்களும் நம்புவார்களா? எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களா? அல்லது, எச்சரிக்க முற்பட்ட அவனையே பழித்து, பரிகசித்து, குறை கூறி, அவமதிப்பார்களா? அவன் குழம்பினான்.

உண்மையில், பிந்தியதைத்தான் அவர்கள் செய்வார்கள்; அதுதான் மனித இயல்பு என அறிவுறுத்தியது அவன் உள்ளம். நடப்பது நடந்தே தீரும் என்று எண்ணினான் சுயம்பு.
அவனது அதீத உணர்வில் புலனானது நிஜ நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது. சுயம்பு அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை.

– தினமலர் 1997

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *