(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அண்ணாவுக்கு டில்லியிலே பெரிய உத்தியோகம். இரண்டாயிரத் 5 துக்குக் கிட்டத் தட்டச் சம்பளம் வாங்குகிறார். உத்தியோகம் உயர்ந்ததிலிருந்து அவருடைய நடை உடை பாவனை யாவும் புதுவித மாய் மாறிவிட்டன. ஆங்கிலத் துரைமாரைப் போலவே ஆகிவிட்டார். நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறை ஊர்ப்பக்கம் வருவார். ஒரு வாரத் திற்கு மேல் கிராம வாழ்க்கை இருப்புக் கொள்ளாது. “சுத்த ‘டர்ட்டி லேஸ்’, ‘ப்ரூட்ஸ் ஆல்’ (ஆபாசமான இடம், காட்டு மிராண்டிகள்) என்று வைது விட்டுக் கிளம்பிவிடுவார்: அண்ணா இப்படியானால் மன் னியோ அவரையும் மிஞ்சினவள். எல்லாச் சாமானும் இங்கிலீஷ் கடை களிலிருந்து தான் வரவேண்டும். கறந்த பசும்பால் உதவாது; டப்பிப் பால் தான் அவளுக்கு ருசியாக இருக்கும். ஏனென்றால் இங்கிலீஷ் மணம் அதில்தான் அதிகம்.
என் அண்ணாவுக்கு நான் கடைசித் தம்பி. எஸ். எஸ். எல்.ஸி.க்கு மேல் எனக்குப் படிப்பு ஏறவில்லை. பிதுரார்ஜிதச் சொத்து ஒன்றுமே இல்லை. ஓர் ஓட்டு வீடு தான். இப்போது என் கண்காணிப்பில் உள்ள நில புலம் அண்ணாவின் ஆஸ்தியே. எத்தனையோ பேர் இந்தக் காலத் தில் தம் உறவினருக்கு எத்தனையோ வழிகளில் வேலை பண்ணி வைக்கின் றனர். ஆனால் அண்ணா அந்த விஷயத்தில் நிர்த்தோஷி. அவர் பம்பா யில் இருந்தபோது, ‘ஒரு வேலை பண்ணிவை’ என்று கூச்சத்துடனேயே எழுதனேன். அதற்கு அவர், “நான் இருக்கும்போது உனக்கு எதற் கடா வேலை? ஊரிலேயே என் நிலங்களைப் பார்த்துக்கொள்” என்று மாதம் மாதம் முப்பது ரூபாய் அனுப்பிவருகிறார். அது மன்னிக்குத் தெரி யுமோ தெரியாதோ? கிராமத்தில் உள்ள சின்ன வீட்டை எனக்கே கொடுத்துவிட்டார். தமக்காக ஒரு பெரிய பங்களா கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் விழுந்தது. இது மன்னிக்குச் சற்றும் சம்மதம் இல்லை. ‘போயும் போயும் குக்கிராமத்தில் பங்களா எதற்கு?’ என் பது அவளுடைய எண்ணம். அவள் மனசு திருப்தி அடைவதற்கு அண்ணா தம் மைத்துனியின் பெண்ணுக்குப் பத்தாயிரம் ரூபாய்ச் செலவில் ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணினார். அந்தச் சூட்டோடு சூடாக மாப்பிள்ளைக்கும் காயமான உத்தியோகம் டில்லியிலேயே, தம் இலாகாவிலேயே, பார்த்துத் தந்தார்.
ஊரில் என்னையே வீடு கட்டச் சொன்னார். கிராமத்தில் அவ்வளவு பெரிய பங்களா அவசியம் இல்லைதான். ஆனால் அண்ணா பிடித்தால் ஒரே பிடி தான். அவர் தந்த ‘பிளான்’ படியே வீட்டை அழகாகக் கட்டி முடித்தேன். நானே பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்ட தால் அவருக்கு இரண்டாயிரத்திற்கு மேல் மிச்சப்பட்டது. உள்ளுக் குள் சந்தோஷந்தான். அந்தத் தடவை எனக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் வந்தது. என் குழந்தைகளுக்கு நாலைந்து தினுசுகளில் பம்பாய் ஸில்க் அனுப்பியிருந்தாள் மன்னியும்.
அண்ணா ‘ரிடையர்’ ஆக இன்னும் மூன்று வருஷங்கள் இருக்கின் றன. ஆறு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந் தார். மதனி அம்மாளுந்தான். புது வீட்டில் இறங்கினர். அவர் சொல்லாமல் இருக்கும்போது புங்கனூர்க் குட்டை ஒன்றை வாங்கி னேன். அவர் அதிருஷ்டமோ, என் அதிருஷ்டமோ, அது வேளைக்கு இரண்டு படிக்குமேல் பால் சொரியும். முதலில் அண்ணா , “எதற்கு இதை வாங்கினாய்?” என்றார், நானே செம்பு வழிய வழியப் பாலைக் கறப்பதைப் பார்த்து மன்னி, ‘”பேஷ்!” என்றாள். அவரும் தலை யசைத்து, “ரொம்ப பேஷ்!” என்றார்.
ஒரு நாள் சாயங்காலம், நான் கழனியெல்லாம் சுற்றிவிட்டு வீடு திரும்புகையில் அண்ணா சாய்வு நாற்காலில் சாய்ந்து கொண்டிருந்தார். ‘பையா!” என்று கம்பீரத்துவனியில் என்னைக் கூப்பிட்டார். நாலைந்து பிள்ளைகளுக்கு நான் தகப்பனா யிருந்தாலும் இன்னும் அவருக்கு நான் ‘பையன் ‘தான்.
“ஏன் அண்ணா” என்றேன்:
“நீ என்ன பண்ணறே இந்த ஊரில் இருந்து கொண்டு? தண்டப் பொழுது போக்குறே” என்றார் திடுமென. எனக்குப் புரியவில்லை, அவ ருடைய கருத்து. “கழனிக்குப் போகிறே. மீதி சமயம் ஊரில் அரட்டை அடிக்கிறே. இப்படி வீட்டைச் சுத்திக் காடுமாதிரி செடி முளைச்சிருக்கே. இதெல்லாம் போக்கிவிட்டு நல்ல பூந்தோட்டம் ஏன் வைக்கக்கூடாது? யாராவது பெரிய மனுஷ்யன் பார்க்க வரான்; இப்படிக் கச்சா பிச்சா வென்று இருப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பான்?”
“அப்படிக் கச்சா பிச்சாவென்று நான் கண்ட செடியையும் வைக்க வில்லையே, அண்ணா!”
“நான் தோட்டத்தைப் பார்க்காமல் சொல்லலே. இந்த மூலையில் ஏதோ ஒரு புதர்; அந்த இடத்தில் ஏதோ காட்டுக்கொடி படர்ந்திருக் கிறது. வாசல் பக்கம், ஒழுங்காக இருக்கவேண்டிய இடம், குத்துக் குத்தாக என்னவெல்லாமோ செடிகள். ரொம்ப மோசம்; உனக்கு நாசுக்காகவே வைத்துக்கொள்ளத் தெரியவில்லை.”
“இதெல்லாம் உபயேர்கமா கிற பூஞ்செடி அண்ணா. புதராக இருக் கிறது சம்பங்கிக் கொடி. வாசல் பக்கம் இருக்கும் குட்டையான செடி பவளமல்லிகை. அந்த மூலையில் அடர்த்தியாக இருப்பது துளசி, மாசி பத்திரம்; பூஜைக்கு எப்போதாவது உதவுமே என்று தான் வளர்த்திருக் கிறேன். எடுக்கச் சொன்னால் எடுத்துவிடுகிறேன்.”
“இந்தப் பூஞ்செடி, துளசியெல்லாம் யாருக்கு வேணும்? கண் மறைவாக வீட்டுக்குப் பின்னால் எங்கேயாவது இருந்தாலும் பரவாயில்லை. வீட்டெதிரே விகாரமாக இருக்கிறது. நாட்டுப்புறத்தில் இருந்து இருந்து ரொம்பக் குறுகின எண்ணம் உனக்குப் படிந்து விட்டது”
“இதைவிடப் போக்கிடம் வேறு ஏது அண்ணா எனக்கு? நிலத்தைப் பார்த்துக்கொள்ள நீதான் என்னை இங்கே இருக்கச் சொன்னே?”
“அதற்காகச் சொல்லலேடா; தோட்டத்தை இன்னும் அழகாக வைத்துக்கொள்ள லாமே என்று தான் சொன்னேன். நான் இங்கிலீஷ் விதைகளுக்கு எழுதி யிருக்கிறேன். கூனூர் நர்ஸரியிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். இப்போது தான் விதை போடுவதற்கு ஏற்ற சமயம். வீட்டு முன்னால் இருக்கிற செடியை எடுத்துவிடு. எடுத்துவிட்டுக் ‘கேட்’டுக்கு இரண்டு பக்கமும் குழி எடு. அதில் நான் சொல்கிற படியே எருப் போடு. நன்றாக ஒரு வாரம் காய்ந்ததும் விதை நட வேண்டும். அது கிளைத்துப் பூத்தால் என்ன அற்புதமாகக் காட்சி அளிக் கும், தெரியுமா? வெள்ளைக்காரன் எவனாவது பார்த்தானேயானால் ‘ஆ’ என்று அப்படியே மலைத்து நிற்பான்” என்றார்.
நானும் உற்சாகத்தைக் காட்ட, “அப்படியே செய்துவிடுகிறேன், அண்ணா” என்றேன். அடுத்த நாள் காலை நானும் என் தமையனும் தோட்டத்தைப் பார்வையிட்டோம். எந்தச் செடியை வெட்டுவது, எதை வேருடன் கிளப்புவது, எதைப் ‘போனால் போகிறது பாவம்’ என்று விட்டுத் தொலைப்பது- இவ்வாறாக ஓர் ஏற்பாடு செய்தோம். “முன்னால் வாசல் ‘கேட்’ பக்கம் இருக்கிற அந்தச் சனியனை எடுத்து மறு வேலை பார்” என்றார்.
“ஐயோ அண்ணா, அது சம்பகச் செடி ஆயிற்றே; என்ன கஷ்டப்பட்டேன் தெரியுமா, அதை இங்கே பயிராக்க?” என்றேன்.
“பிரமாதச் சம்பகச் செடி! கேட்டுக்கு இரண்டு பக்கமும், ‘மார்னிங் ப்யூடி’ என்ற கொடி படர்ந்து அது பூக்கும் அழகைப் பார்த்தால் நீ சொக்கிப் போய்விடுவே! என்னமாத்தான் இருக்கும்! அந்தப் புஷ்பத்திற்குச் சமானமா, உன் சம்பகம்?” என்றார் அண்ணா.
“சரி, சம்பகச் செடியை எடுத்துவிடுகிறேன்” என்று நான் சற்று வேதனையுடன் சொன்னபோது, அவர், “டில்லியில் எங்கள் ஆபீஸர் ஸர் ரன் அவே இருக்கிறானே, இந்த மார்னிங் ப்யூடிக்குத் தன் உயிரையும் கொடுக்கக் கூடியவன். அவர்கள் பங்களாவில் தான் இந்தக் கொடியின் அழகைப் பார்த்தேன். அது நம் வீட்டில் பூக்க வேண்டும். என்ன பூ, என்ன பூ என்று ஜனங்கள். திரண்டு வருகிறார்களா இல்லையா, பார்!” என்றார்.
இவ்வளவு அண்ணா உயர்த்திக் கூறவே அந்தப் பூவின் அழகைப் பார்க்க வேண்டுமென எனக்கும் ஆசை எழுந்தது. சீமைத் துரையே இப்படி அதைப் பார்த்து மெய்ம் மறப்பானாயின் சுதேசிகளான நம் முடைய நிலை எவ்வாறு இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
அவர் சொன்னபடியே ஒரு வாரத்திற்கெல்லாம் பெரிய பார்ஸலாகச் சீமைப் பூஞ்செடி வித்துக்கள் வந்தன. ஒவ்வொரு தினுசு விதை கள் அடங்கிய காகிதப் பைக்குமேல் அந்த அந்தப் பூவின் அழகான வர்ணச் சித்திரம். சித்திரத்தில் உள்ளதுபோலப் பூப் பூக்குமோ என்பது தான் கேள்வி. அண்ணா ஒவ்வொரு பையாகப் பிரித்து, ‘இது டாலியா, இது கிரிஸாஸ்தமும், இது பால்ஸம், இது பான்ஸி, பாக்ஸ்க்ளவ், மார்னிங் ப்யூடி! என்ன அமைப்பு, என்ன வர்ண சித்திரம் இந்தப் புஷ்பங்களில்!’ என்றெல்லாம் வியந்து பாராட்டினார். நானும், “பேஷ், அப்படியா! படத்திலேயே பூவின் வர்ணம் இவ்வளவு பளிச்சென்று இருக்குமானால் அசல் பூ இன்னும் எப்படி இருக்கும்!” என்று கண்கள் விரிய ஓத்துப் பாடினேன்.
அடுத்த நாளே உரம் தயார் செய்யும் வேலை என் தலையில் விடிந் க்து. கொடி படர்வதற்குக் ‘கேட்’டின் இரு மருங்கிலும் கமான் வளைக்க மூங்கில் பிளாச்சு வாங்கிவர ஆளை ஏவினேன். “ஐயா வூட்லே என் னமோ விசேசம். பந்தக் கால் நட்றாங்கோ” என்று கிராமத்துப் பாமர ஜனங்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். நான் விரும்பி வளர்த்த சம்பகத் தருவை வெட்டிவிட்டேன். என் முகம் வாடி இருப்பதைப் பார்த்து அண்ணா, “இந்தச் சம்பகம் வருஷத்தில் ஒரு தரமே பூக்கும்; ஆனால் ‘மார்னிங் ப்யூடீ’ வருஷ முழுவதும் பூக்கும்” என்று எனக்குத் தேற்றரவு கூறினார்.
அண்ணாவுக்கு வீட்டிலேயே ஒரு சின்ன ‘மை லேடீஸ் கார்டன்’ அமைக்க வேண்டுமென்ற ஆசை. தம்முடைய ‘லேடி’ பகல் வெயிலுக் குக் குளுகுளுவென்ற அதன் தண்ணிழலில் தங்க வேண்டுமென்ற அபி லாஷை. “எல்லாம் படிப்படியாகத்தான் ஆகவேண்டும்” என்றார்.
“பையா, எரு எல்லாம் தயார் பண்ணினாயா?”
“ஆச்சு அண்ணா”என்றேன்.
“என்ன என்ன கலந்தே?”
“மாட்டுச் சாணம், அழுகிய சருகு, கொஞ்சம் வண்டல் மண் கலந்து வைத்திருக்கிறேன். கல் இல்லாமல் கட்டி கசடு உடைத்து மண்ணை மாவுப் பதமாக ஆக்கிவிட்டேன். நீங்கள் விதையை நடவேண்டியதுதான், அண்ணா “
“பேஷ், நீ பூஞ்செடிக்குச் செய்திருக்கும் பக்குவம் செடி முளைச் சாற் போலத்தான்” என்றார் பரிகாசமாக. “எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு அக்கறையாகக் கவனித்தும் கடைசியில் இந்த ஸொட்டுத் தானே? ”என்ன செய்யவேண்டும் அண்ணா? எனக்குத் தெரியாது போனால் சொல்லு. செய்கிறேன்” என்றேன்.
“இந்தப் பட்டிக்காட்டில் ரசாயன உரம் எங்கே அகப்படப் போகிறது?”என்றதும் உள்ளே சென்று தோட்டக் கலையைப் பற்றிய ஆங்கி லப் புத்தகம் ஒன்றை எடுத்து வந்தார். ‘ஹார்ட்டிகல்சரிஸ்ட்’ என்ற நூலிலிருந்து விஷயங்களைத் தமிழில் எடுத்து எனக்குச் சொன்னார். “தாழைமட்கு ஒரு பாகம், புறாப்பிழுக்கை ஒரு பாகம், வண்டல் மண் ஒரு பாகம் – மூன்றையும் கலந்து அதில் கொஞ்சம் மணலையும் கூட்டிக் குழிகளில் வைத்தால் என்ன மாத்தான் செடி வளரும் போ. களகள வென்று இருக்கும். பூவும் நல்ல நிறமாக விழும். ‘மார்னிங் ப்யூடி’ யை அல்ப சொல்பமான பூ என்று எண்ணாதே, அப்பேன்! ராஜா இனத்தைச் சேர்ந்த மலர். அதற்கு ரொம்பக் குளிர்ச்சியும் கூடாது, வெப்பமும் ஆகாது. ஓலை மறைப்புக் கட்டவேண்டும், கொடி விடும் போது. அது சரிதான், தழை மட்கு என்றால் அர்த்தம் தெரியுமா?”‘ என்றார்.
“தழை அழுகிய உரந்தானே? நம் புழைக்கடையிலேயே மரத்தடியில் விசேஷமாகக் கிடைக்கும்” என்றேன்.
“அப்புறம் புறாப்பிழுக்கை …?”
“அது தான் கொஞ்சம் கஷ்டம். தேடிப் பிடிக்க வேண்டும்.”
“வண்டல்…”
“வேணது, ஏரி மடுவிலிருந்து கழனிக்காக வாரி வைத்திருக்கிறேன்: பத்துக் கூடை கொண்டுவந்தால் போகிறது” என்றேன். அண்ணா செய் யும் இந்த வேடிக்கையைக் கடைசி வரைக்கும் பார்க்க வேண்டுமென்று எனக்குந்தான் ஆவல். இந்த ‘மார்னிங் ப்யூடி’க்காக நான் இப்படி ஓடாக உழைப்பதற்குக் காரணமும் உண்டு. நான் அவருக்குச் சரியாகக் குதிக்காது போனால் என் மீது கெட்ட அபிப்பிராயம் கொள்ள இடம் இருக்கிறது. மாதந்தோறும் அனுப்பும் ஜீவனாம்சத்தின் வாயில் மண் விழுமே! குழந்தை குட்டிக்காரனான நான் போகிற கதி? மன்னிக்கு மட்டும் தாராள மனசுதான்.
புறாப் பிழுக்கைக்கு நான் அலைந்தது உண்டே , ஈசுவரா! ஐந்து மைலுக்கு அப்பால் ஒரு கோயில் கோபுரத்தில் புறாக்கள் கூட்டமாகக் குடித்தனம் வைத்திருந்தன. அன்றாடம் ஒருவனை ஏவி ஏறச்சொல்லி ஒரு கூடைப் புறா எரு சம்பாதித்தேன். மூன்று உரத்தையும் அண்ணா சொன்ன அளவில் கூட்டி ஒரு வாரம் ஆற வைத்தேன்.
இதற்குள் அண்ணாவும், “ஆச்சா, ஆச்சா?” என்று துரிதப்படுத்திக் கொண்டே இருந்தார். “இன்னும் இரண்டு நாள் ஆகிவிட்டால் பருவம் தவறிவிடுமே!” என்றார். அவர் புத்தகத்தில் உள்ளதை அப்படியே கடைப்பிடிப்பவர். நான் உடலாலும், அண்ணா மூளையாலும் நடத்தும் தோட்ட வேலையைப் பார்க்க மன்னிகூட நடுநடுவே வருவாள். நானே மண்ணைக் கொத்தி உரம் வைப்பதைக் கண்டு அவள், “அட ராமா! ஓர் ஆளை வைத்துக் கொள்ளக் கூடாதோ? இப்படி வேர்க்க வேர்க்க உழைப் பானேன்? கண்ணராவியாக இருக்கு!” என்று வாசா அநுதாபத்தைக் காட்டுவாள்.
“மார்னிங் ப்யூடீ ப்யூடீ என்று டில்லியில் அடித்துக் கொள்வாயே. இதோ இன்னும் மூன்றே மாதத்தில் நம் அகத்திலேயே பார்த்து மனசார அநுபவித்துவிடு; அதுக்குத்தான் இவ்வளவு பாடும்” என்றார் அண்ணா. தன் அன்பிற்குரியாளை நோக்கி..
“என்ன புஷ்பம்! எப்படிப் படரும்? வா வான்னு அழைக்கிற மாதிரியே பசுங்கொடி பூவோடு அசையும். அற்புதம்!” என்பாள். மதனி இன்டர் பரீட்சை தேர்ந்தவள், பெரிய இடத்துப் பெண். அண்ணா அவளை விவாகம் செய்து கொள்ளாமல் இருந்தால் அவள் எம்.ஏ. வரைக்கும் எட்டிப் பார்த்தே இருப்பாள்; அவளுடைய நல்ல தசையினால் தான் அண்ணாவுக்குப் பெரிய உத்தியோகம் ஆயிற்றென் பது பல பேருடைய அபிப்பிராயம்.
“ஐயோ, இப்போ லேடி ரன் அவே வந்து பார்த்தால் நம்மைக் கண்டு பொறாமைப்படுவாள்” என்றாள் தன் கணவனைப் பார்த்து.
“விதை இன்னும் நட்டாகவில்லை. பூப் பூத்த பிறகுதானே இதெல்லாம்?” என்று நான் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
ஊரெங்கும் பரவிவிட்டது, ‘மார்னிங் பியூடி’ யின் புகழ். ராமசுப்பு வின் வாசல் திண்ணை பெரிது. ஊர் வம்பளப்பெல்லாம் அங்கேதான் நடக்கும். ராமசுப்பு மிராசுதார். நிலபுலம் நிறைய உண்டே தவிர ரொக்கம் கிடையாது. சுப்பாமணி அதாவது என் அண்ணாவின் பேரில் அவனுக்குச் சற்று அழுக்காறு. ‘என்னவோ டில்லியில் பெரிய வேலை ஆய்விட்டதென்று தலை துள்ளிப்போகிறது. இவனுடைய பெரியவா இத்தனை யூண்டு அகத்திலே குச்சு உள்ளிலே வாழ்ந்தது தெரியாதா என்ன? ரெண்டு பாஸ் பண்ணிவிட்டான். உத்தியோகமாகிவிட்டது. அவன் தம்பியைப் பார்; தரித்திரம் பிடுங்கித் தின்கிறது. எப்படியெல் லாமோ பணம் குவிச்சுப்பிட்டான்னு சொல்லறா. சீமைத் துரை தான் என்று எண்ணம். ‘மோர்னிங் பியூடி’ (அழுகிற அழகி) என்று பூஞ்செடி நட்டாலும் நட்டான். இப்படி ஊர் திமிலோகப்படுகிறது. பயல் கிட்டே இரண்டு காசு இருக்கோ இல்லையோ, அது தான் நாலு நாய் பின்னாலேயே அலைகிறது!” என்றான்.
இதற்குள் அண்ணாசாமி வாத்தியார் தம் இரட்டைக் குரலை எடுத்து, “எப்போ சுப்பாமணி ஊரை விட்டுப் போனானோ தலைகீழாய்விட்டது அவன் சமாசாரம். அவன் சம்சாரத்தைப் பாரேன்; தரையைப் பார்த்தா நடக்கிறாள்? மடி தாறு வைச்ச புடைவை கட்டிக்கொள்வதில்லை. டில்லியில் அது கூட இல்லையாம். கவுனோ என்னமோ சொல்வாளே, அதைத்தான் போட்டுக்கொள்கிறாளாம். ஏங்காணும் இவளை ஜாதிப் பிரஷ்டம் செய்யக்கூடாது?” என்றார்.
அப்போது அந்த வம்பளப்புக் கட்சியில் சேர்ந்த ஒருவன் பட்டதும் படாததுமாய், “ஓய், உம்ம பெண்ணை முதலில் கட்டுத்திட்டம் பண்ணும். – அப்புறம் பிறத்தியாரைப்பற்றி ஒச்சம் சொல்லலாம்” என்றான். சாஸ்திரியாரின் வாய் அடைத்துவிட்டது.
“அந்தச் செடி என்னமாகத்தான் பூக்கிறதோ! பார்ப்போமே” என்ற முடிவிற்கு வந்ததும் அந்தக் கூட்டம் கலைந்தது.
விதையை மன்னியின் கையாலேயே நடச் சொன்னார் அண்ணா. 10 அல்லது 15 குடம் தண்ணீர் நானே தூக்கி அன்றாடம் குழிகளில் கொட்டுவேன். போதாதென்பார் அண்ணா. ஒரு வாரத்திற்கெல்லாம் ஏழெட்டு முளைகள் வெளியே தலை காட்டின. மூன்றாவது இலையும் வெடித்துச் செடி வளரத் தொடங்கியது. ஆனால் திடீரெனப் பன்னிரண். டாவது நாள் செடியெல்லாம் வதங்கிவிட்டன. மறு நாள் எரிந்தே போயின. அன்று நிலங்களைப் பயிரிடும் வாரக்கார முனிசாமி வந்திருந் தான். பயிர் பச்சைகளைப்பற்றி அநுபவம் மிக்கவன். “என்ன சாமீ, பாக்கிறீங்க?” என்றான். இந்தச் செடி நன்றாகக் களகளவென்று தளிர்த்துத் திடீரெனக் காய்ந்துவிட்டது. ஏனோ தெரியவில்லை” என் றேன். மண்ணை எடுத்து மோந்து பார்த்து, ‘ரொம்பக் காரமான உரம். இளஞ்செடி தாளாது. பிஞ்சு கட்டு மண் ரவெ சேத்து மறு படியும் விதையை ஊணுங்கோ . என்னமா முளைக்கிறது பாருங்கோ” என்றான்.
அவன் சொன்னதில் நம்பிக்கை விழவில்லை, அண்ணாவுக்கு. ஆங் கிலப் புத்தகந்தான் அவருடைய பிரமாண நூல். தாமே ஏதோ யோசனை பண்ணி , ”மண்ணைப் பாதி எடுத்துவிடு; களிப்பிராத மண்ணைக் கொஞ்சம் கல; விதையை இந்த வாட்டி என் கையாலேயே நடுகிறேன்” என்றார்.
அப்போது அந்தக் குடியானவன், “சாமி, சின்ன ஐயா கையாலேயே நடட்டும். ஆகிவந்த கை. குழந்தை குட்டி எடுத்த கை. நம் ஐயா கையைக் கொண்டுதான் முதல் விதைப்பாடு போடுகிறோம் இந்த ஊரில். ஒண்ணு ஆயிரமாக விளையுது” என்றான்.
அண்ணாவின் முகம் சுருங்கியது. என்னையே விதையைப் போடச் சொன்னார். மூன்றாவது நாளே முளை வெடித்து வந்தது. செடி கிளைத்து, மடமடவென்று மாரளவு கொடியும் ஓடிற்று. கொழு கொம்பை நிறுத்தி மூங்கிற் படலில் ஏற்றினேன். கசகசவென்று ஒரு மாதத்திற்குள் கொடி ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு வாசலில் அலங் காரமாகப் படர்ந்து விளங்கியது. செடி நட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். “பூ எப்போது பூக்கும்?” என்று அண்ணா எதிர் பார்த்துக்கொண்டே இருந்தார். எந்த இடம் போனாலும் ‘மோர்னிங் ப்யூடியாமே’ என்று தம் கிராமிய மொழியில் ஊரார் என்னை விசாரிக்கா மல் விடுவதில்லை. அண்ணாவுக்கு இந்தப் பக்கம் ‘லீவ்’ கழிந்து கொண்டே வந்தது. விளையாட்டாக மூன்றுமாத காலம் இந்தச் செடி ஜோலியிலேயே போய்விட்டது. . ‘லீவ்’ முடிவதற்குள் அது பூத்து விடுமா என்ற ஆத்திரம் அவருக்கு. மழையும் பெய்து வெயிலும் நன்றாகக் காயவே , முகைப்பதம் வருவதன் குறிகள் தென்பட்டன.
கொடியின் ஒவ்வொரு கிளையையும் ஊன்றிக் கவனித்து வந்தேன். ஒரு நாள் பார்க்கையில் சுமார் நூறுக்கு மேல் அரும்பு கொப்பளித்திருந் தன. அண்ணாவிடம் ஓடிப்போய்ச் சமாசாரத்தை எட்டவிட்டேன். அவர் வந்து பார்த்தார். ”இன்னும் ஒரு வாரம் : கண்ணுக்கு ஒரே விருந்து பார்!” என்று ஒரு குதி குதித்தார். “ஒரு வாரம் எப்படிப் பொறுப்பேன்!” என்று மன்னி துடித்தாள்.
மொட்டின் புற இதழில் மெல்லிய ஊதா நிறம் கலந்த வெளுத்த கோடுகள் தெரிந்தன. அவைதாம் இதழ் விரியும் இடம். இன்னும் இரண்டே நாளில் மலரும் என்று எனக்குப் பட்டது. அந்த இரண்டு நாளும் அண்ணாவுக்குத் தூக்கமே வரவில்லை. தாமே முதலில் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. இரண்டாவது நாள் விடி காலையில் ஓர் ஆனந்தக் கூச்சல் கேட்டது. முகத்தை இன்னும் நான் கழு வக்கூட இல்லை. ஓடி வந்தேன். ‘கேட்’ அருகே கொடிக்குவை யெங் கும் ஒரே பூவின் கோலம். “கடைசியாக மார்னிங் ப்யூடியைக் கண்டேன்” என்று அண்ணா குதித்துக்கொண்டிருந்தார். மன்னியும் வராந் தாவில் இருந்தபடியே தூக்கம் தெளிந்த கண்களுடன் அந்த அற்புதக் காட்சியை விழுங்கிவிடுவது போல் கவனித்தாள். ஒரே குறை அவளுக்கு. டில்லியில் இவ்வளவு அழகாக இந்தச் செடி பூக்கவில்லையே என் பதுதான். வெல்வெட்டின் மழுமழுப்பான மென்மை; ஊதா கலந்த வெண்மை. மெல்லிய காற்றில் இணர்கள் ஒன்றை ஒன்று தழுவி விளை யாடும் காட்சி அழகாகத்தான் இருந்தது. வாசனை இருக்கிறதோ என்று பூவை அணுகி மோந்தேன். மண்ணாங்கட்டி வாசனை தான்! அபூர்வமான வர்ணம் தோன்றுமென்று அண்ணா சொன்னார். பேதை போல் சிரித்தது அந்த மலர்: பொலிவோ, பகட்டோ அதனிடத்தில் இல்லை.
இந்தப் பூ மலர்ந்த அன்று தற்செயலாக வரலக்ஷ்மி விரதம் வந்தது. சீமை நாகரிகத்தின் சாயம் ஏறி இருந்தாலும் மதனி நம் தேசத்து நோன்பு அநுஷ்டானங்களை ஒன்றும் விடாதவள். நாகரிகம் ஒரு பக்கம்; ஆசாரம் ஒரு பக்கம். சோமு தீட்சிதர் எங்கள் வீட்டுக்கு உபாத்தியாயம். பூஜை செய்விக்க அவர் சற்றுப் பொழுதோடேயே வந்துவிட்டார். மதனி அம்மாள் எதையும் நேரத்தோடு செய்பவள். எது எப்படிப் போனாலும் ஒன்பதரைக்கெல்லாம் சாப்பிட்டாக வேண்டும். அவளுக்குப் பசி தாளாது. ‘மார்னிங் ப்யூடி’ யண்டை ஒரே கூட்டமாக ஜனங்கள் நிற்கவே, அவரும் அதைப் பார்க்க வந்தார். அண்ணாவைப் பார்த்து அவர், “சுப்பாமணி, என்ன இப்படி எல்லாரும் காலங்கார்த்தாலே இந்தப் பூங்கொடியைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்.
“ஓய், உமக்கென்ன தெரியும் இதன் அருமை? சீமையில் தான் இந்தச் செடி இப்படிப் பூக்குமாம்” என்றார் அண்ணா. கொடி அருகே சென்று, கூர்ந்து கவனித்தார் தீட்சிதர்.
“இந்தச் சனியன் பிடித்த கொடியை முன்னே அறுத்துப் போடுங்கள். வீட்டைத் துடைத்து விடுமே! வயல் காட்டிலே தானே இது இருக்க வேண்டும்? அவலட்சணம், நல்ல நாளும் அதுவுமா!” என்றார்.
“இதன் பெருமை உமக்கு என்ன தெரியும்? மார்னிங் ப்யூடி, கடலின் நுரை என்று வெள்ளைக்காரன் போற்றி வளர்த்து அழகு பார்க்கிறான் ஓய்” என்றார் அண்ணா .
“சுப்பாமணி, இது கடல்பாலைப் பூ, வேறொன்றுமில்லை. முன்னே வெட்டித் தள்ளுங்கள். உதவாது நமக்கு; சிரேயசுக்கு நல்லதன்று” என்றார் தீட்சிதர்.
“கடல்பாலைப் பூ? என்ன?” என்றார் அண்ணா .
“கடல்பாலையேதான்! எனக்குக் கண்ணில்லையா? இலையின் பின் புறம் பட்டுப்போல் மழமழவென்று இருக்கிறதே, பாரேன்”‘ என்றார் தீட்சிதர்.
“இது கடல்பாலைப் பூத்தானா? உமக்கு நன்றாகத் தெரியுமா?” என்றேன் நான், சந்தேகம் தெளிவதற்கு.
“அட ராமா! இன்னுமா அவநம்பிக்கை? சுடியன் தோட்டத்தில் விசேஷமாக இருக்கிறது. வேலிக்கொடி இது. மரத்தை எல்லாம் கப்பிக்கொள்ளுமே இந்தப் பாழும் கொடி” என்று கூறிவிட்டு, நாழிகை ஆகிவிட்டதால் உள்ளே விரத பூஜையைச் செய்விக்கச் சென்றார் தீட்சிதர். தட்சிணை வாயனத்துடன் வெளியே வரும்போது அண்ணா அவரைப் பார்த்து, “அப்படியானால் அந்தத் தோட்டத்தைக் காட்டும். என் கண்ணாலேயே பார்த்துவிடுகிறேன்” என்றார்.
எங்கள் பின்னாலேயே ஒரு கூட்டம் சென்றது தோப்புக்கு. ஆற்றங் கரையோரம் ஏராளமாகப் படர்ந்திருந்தது ஒரு கொடி. இலையுடன் பூவை அறுத்துவரச் சொன்னோம். ‘மார்னிங் ப்யூடி யின் இலையையும் பூவையும் அண்ணா மாதிரிக்கு எடுத்து வந்திருந்தார். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார். தடவித் தடவிப் பார்த்தார். மோந்து மோந்து பார்த்தார். கிள்ளிப் பார்த்தார். இரண்டும் ஒரே வகை தான்! அவருக்கு வாயே அடைத்துவிட்டது. அங்கே இருந்தவர்களை நோக்கி அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். வீடு திரும்பினோம். “சாயந்தரம் வண்டி எப்போது, பார்!” என்றார் என்னை. “பட்டணத்துக்கா? இன்று நவமியாச்சே. அதோடு வெள்ளிக்கிழமை. சிராவணமும் வருகிறது. இருந்துவிட்டுப் போயேன் அண்ணா” என்றேன்.
“இல்லை, பையா; முக்கியமாகச் சிலரைப் பார்க்கவேண்டும். ‘லீவ்’ இன்னும் ரொம்ப நாள் இல்லையே. கட்டாயம் போகவேண்டும்” என்று அந்தப்புரத்தினுள் மறைந்தார்.
எனக்கோ அழுகை வெடித்து வந்தது. “ஐயோ, பாழும் கடல் பாலையே! உனக்காக என் உடலை மாய்த்துக்கொண்டேனே! கண்போல் வளர்த்த என் சம்பகத்தைப் பறி கொடுத்தேனே! அது இருந்தால் இத் தனை நாள் பூத்து ஊரே நறுமணம் கமழுமே!” என்று அந்த ‘மோர்னிங் ப்யூடி’யைச் சபித்தேன். அண்ணாவை அல்ல; அவர் எனக்குப் படி அளக்கும் மகா நுபாவர்.
– அக்டோபர், 1951 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை