(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35
அத்தியாயம்-26
மறுநாள் வித்யாபதி போன் செய்தான். சரியாக இந்திரா ஆபீசிலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்கு வருவதாகவும், கொஞ்ச நேரம் எங்கேயாவது உட்கார்ந்திருக்கலாம் என்றும் சொன்னான். இந்திரா முதலில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பைல்களை பார்த்துக் கொண்டே “இன்று என்னவானாலும் சரி, இந்த விஷயத்தை உண்டு இல்லை என்று தெரிந்து கொண்டு விடவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
மாலை ஆகிவிட்டது. இந்திரா வெளியே வந்தாள். ஆனால் வித்யாபதி தென்படவில்லை. இந்திரா பஸ்ஸ்டாப் அருகில் நின்றபடி காத்திருக்கத் தொடங்கினாள். எத்தனை பஸ்கள் வந்தாலும் ஏறாமல் யாருக்காகவோ எதிர்பார்ப்பது போல் நின்று கொண்டிருந்த இந்திராவைக் கவனித்த ஓரிரு போக்கிரிகள் விசில் அடித்தார்கள். இந்திராவுக்கு பயமாக இருந்தது. உடனே ஆட்டோவில் ஏறிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். என்னவாயிற்று வித்யாபதிக்கு? என் வரவில்லை? இந்திராவின் மனதில் பலவிதமான பயங்கள் தலைதூக்கின.
அன்று இரவு முழுவதும் இந்திரா உறங்கவே இல்லை. மறுநாள் காலையில் ஆபீசுக்கு வந்த போது வித்யாபதி அங்கே வந்திருந்தான். அவனும் இரவெல்லாம் உறங்காதது போல் தென்பட்டான்.
”இந்தூ! நேற்று மாலை அவசர வேலை ஒன்று வந்துவிட்டது. அதான் வர முடியவில்லை” என்றான்.
”என்ன வேலை?’ கலவரத்துடன் கேட்டாள்.
“கம்பெனி ஆர்டர் ஒன்று ஒரு லட்சத்திற்கு அவசரமாக அனுப்ப வேண்டியதாகி விட்டது.”
இந்திரா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கம்பெனி வேலையா என்ற திரஸ்காரம் தென்பட்டது அந்தப் பார்வையில். வங்கிக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள்.
“நான் மாலையில் வருகிறேன்.” சொன்னான் அவன்.
”எனக்கு வேலை இருக்கு.” மறுக்கப் போனாள்.
“ப்ளீஸ்… மறுக்காதே.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.
இந்திராவால் அன்று முழுவதும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மாலையில் வருவதாக சொல்லியிருக்கிறான். தான் இருக்கக் கூடாது. கம்பெனி வேலையாம். என்னதான் மறுத்தாலும் அவனுக்கு கம்பெனி விவகாரங்களில் ஆர்வம் இருக்கிறது. அது நினைவுக்கு வந்தால் இந்திராவுக்கு எப்படியோ இருந்தது. அவனுக்கு கம்பெனியிடம், சீதாவிடம் கொஞ்சம் கூட ஆர்வம் இருக்கக் கூடாது. எப்படி தான் ராப்பகலாக அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாளோ அவனும் அதே போல் தன்னை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவள் மனம் விரும்பியது.
இந்திரா மதியமே கிளம்பிப் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் மதியம் ஆனதம் அவள் மனதில் இருந்த பிடிவாதம் தளர்ந்துவிட்டது. அவன் வரப் போகிறான். அவனைப் பார்க்காமல் வீட்டுக்குப் போவது அசாத்தியமாகத் தோன்றியது. மாலையாகிவிட்டது. அவன் வந்துவிட்டான். அவன் முகத்தில் தென்பட்ட களைப்பைப் பார்த்ததும் அவளுக்கு இரக்கம் ஏற்பட்டது.
‘இருக்கிறாயா? அப்பாடா.. ஏனோ தெரியவில்லை. நீ போய் விடுவாயோ என்று தோன்றியது. மதியம் போன் செய்தேன். நீ பிசியாக இருப்பதாக உங்க மேனேஜர் சொன்னார். அரைமனி கழித்துத் திரும்பவும் பண்ணிய போது அதையேதான் சொன்னார். உன்னைப் போன் அருகில் கூப்பிட அவருக்கு இஷ்டம் இல்லை என்று புரிந்தது.”
இருவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள். பூங்காவிற்கு அருகில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.
“நம்மை யாராவது பார்த்துவிட்டால்?” என்றாள் இந்திரா.
“பார்க்கட்டுமே.” எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னான் அவன்.
“சீதாவுக்குத் தெரிந்துவிட்டால்?”
அவன் பதில் பேசவில்லை.
“ஏன் பதில் சொல்லவில்லை?”
“சொல்லமாட்டேன். உன்னிடம் இதுவரையில் ஆயிரம் தடவை சொல்லியிருப்பேன், சீதாவுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றும், அவளுக்கு எல்லாம் தெரியும் என்றும். அப்படியும் நீ என் பேச்சை நம்ப மாட்டேங்கிறாய். இது என்னுடைய துரதிர்ஷ்டம்.”
அவன் ஆவேசத்தைக் கண்டு இந்திரா வியப்படைந்துவிட்டாள்.
“நீ என்னை நம்பாததைப் பார்த்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது.”
இருவரும் அங்கே இருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டார்கள்.
“எத்தனை நாட்களுக்கு இப்படி?” இந்திரா கேட்டாள்.
அவன் மௌனமாக இருந்துவிட்டான்.
“உன்னைத்தான். இதற்கு பரிகாரம் காட்டச் சொல்கிறேன்.”
“எதற்கு?”
“நம் இருவரின் உறவைப் பற்றி.”
“நீயே சொல்லு.” அவன் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
“நான் சொல்லுவதை நீ கேட்பாயா?”
“முயற்சி செய்கிறேன்.”
“சீதாவைக் காதலிக்க முயற்சி செய்.”
“இந்தூ!” அவன் இந்தப் பக்கம் திரும்பினான்.
இந்திரா தொலைவில் பார்த்துக் கொண்டே சொன்னாள். “இல்லையா என்னைக் கல்யாணம் செய்துகொள். ஏதாவது ஊருக்குப் போய் விடுவோம். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய். ஏதாவது ஒரு வழியில் நாம் போக வேண்டும். இந்தத் திருட்டு வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது. நேற்றுத்தான் பார்த்தாயே. சேர்ந்து பத்து நிமிடங்கள் கூட நம்மால் இருக்க முடியவில்லை. இன்றும் அதே போல்தான். நாளையும் அப்படித்தான். வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”
அவன் மௌனமாக இருந்துவிட்டான். இந்திரா சொல்லத் தொடங்கினாள். “நேற்று இரவு நான் நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டேன். நான் ரொம்ப முட்டாளாக இருக்கிறேன். இந்த உலகத்தில் யாரும் செய்யாத காரியத்தை நான் செய்திருக்கிறேன். சுயநலத்தைப் பாராமல், மற்றவர்களின் நலத்தைப் பற்றி யோசித்தேன். உனக்கு உங்க அம்மாவின் மேல் எத்தனை பிரியம் என்று எனக்குத் தெரியும். அவங்க சொன்ன பெண்ணை அல்லாமல் நீ என்னைப் பண்ணிக் கொண்டால் அவங்களும் குழந்தைகளும் வேதனைப் படுவார்கள் என்று நினைத்தேன். அவர்களை வேதனையில் ஆழ்த்தி நீ என்னுடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்று யோசித்தேன்.
நான் செய்த பெரிய தவறு உன் தரப்பில் யோசித்துப் பார்த்ததுதான். உங்க அம்மா வருத்தப்பட்டால் எனக்கு என்ன? அவள் என்னைப் பற்றி யோசித்தாளா? நான் எதற்காக அவளைப் பற்றி யோசிக்கணும்? முட்டாள்தனமாக என் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற உன்னை இழந்து விட்டேன். மறுபடியும் இப்பொழுது அதே தவறை செய்து கொண்டிருக்கிறேன். உன்னைப் பற்றி, சீதாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று இரவு முதல் அந்த யோசனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். உன்னால் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா முடியாதா சொல்லு. முடியும் என்றால் நாம் எங்கேயாவது போய் கோவிலில் கல்யாணம் செய்து கொள்வோம். நாம் நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்போம். உண்மையைச் சொல்லு.”
அவன் சிலையாய் அமர்ந்திருந்தான்.
“நாளையும் அதற்கு அடுத்த நாளும் வங்கிக்கு விடுமுறை. திங்களன்று எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி முடிவாகச் சொல்லு.”
அவன் எந்த விமரிசனமும் செய்யவில்லை.
“இனி நான் கிளம்புகிறேன்.”
அவன் எழுந்துகொண்டான்.
இந்திரா ஆட்டோவை அழைத்து அதில் ஏறிக்கொண்டாள். அவனிடம் போய் வருவதாக சொல்லிக் கொள்ளவும் இல்லை. அவனும் எதுவும் சொல்லவில்லை. விருப்பம் இல்லையா? ஆட்டோவில் வரும் போது இந்திராவுக்கு அழுகை வந்தது. தான் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றியது.
அத்தியாயம்-27
இந்திராவுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிரும் பாரமாகக் கழிந்தன. யோசித்து யோசித்து மூளை சூடாகிவிட்டாற்போல் இருந்தது. திங்களன்று ஆபீசுக்குப் போனாள். ஆபீசில் எல்லோரும் கூடி கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவரும் சீட்டில் அமர்ந்து வேலை செய்யவில்லை. ஒரே சந்தடியாக இருந்தது.
”என்ன நடந்தது?” பக்கத்துசீட்டு சாவித்திரியிடம் கேட்டாள் இந்திரா.
“ரமா நேற்று இரவு கிரோசின் ஊற்றி கொளுத்திக் கொண்டு விட்டாளாம்.” இந்திராவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ரம்யாவா? ரம்யாவுக்கு என்னவாகிவிட்டது?” என்று கேட்டாள்.
ரம்யா அவளுடன் வேலை பார்ப்பவள். நல்ல சுபாவம். அதிகமாக பேச மாட்டாள். தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பாள். மணி மணியாக இரண்டு குழந்தைகள்.
“வீட்டில் ஏதோ பிரச்னையாம். கணவன் சரியாக கவனிக்க மட்டானாம். வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டாம்.”
“இருந்தால் மட்டும்?”
“வெறுமே தொடர்பு வைத்துக் கொண்டிருந்த போது ரம்யா எதுவும் சொல்லவில்லை. அவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டானாம். அதைத் தாங்க முடியாமல் ரம்யா கிரோசின் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு விட்டாளாம். இந்தக் கூத்து நேற்று இன்றையதில்லை. நான்கு வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு தன்னை விட்டுவிடுவான் என்று நினைக்கவில்லையாம். அவனுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே அந்தப் பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதாம். வரதட்சணைக்காகத்தான் ரம்யாவை பண்ணிக் கொண்டானாம். கல்யாணம் ஆனது முதல் பணத்திற்காக துன்புறுத்திக் கொண்டிருந்தானாம். மாமனார் கொடுத்த பணமெல்லாம் கற்பூரமாக செலவழிந்து விட்டதாம். ரம்யாவின் சம்பளப் பணத்தில்தான் வீடு ஓடிக் கொண்டிருந்ததாம்.”
கூட வேலை பார்ப்பவன் ஒருத்தன் வந்து சொன்னான். “நாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் பார்க்கப் போகிறோம். நீங்களும் வர்றீங்களா?”
“ஏன் வரமாட்டோம்? உங்களை விட நாங்கள்தான் ரொம்ப வேதனையில் இருக்கிறோம்” என்றாள் சாவித்திரி.
எல்லோரும் வேனில் கிளம்பினார்கள். ரம்யாவின் உயிரற்ற உடல் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அவள் தாய் போலும், அழுதுகொண்டிருந்தாள். “தரித்திரம் பிடித்தவன். மகளைக் கொடுத்து மணம் முடித்தால் சந்தோஷமாக வைத்துக் கொள்வான் என்று நினைத்தோம். இப்படி அவள் வாழ்க்கையைப் பொசுக்கி விடுவான் என்று நினைக்கவில்லை. அவன் மட்டும் கண்ணில் பட்டால் கொன்று புதைத்து விடுவேன்.”
எல்லோரும் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்கள். அவளுடன் சேர்ந்து ரம்யாவின் கணவனைத் திட்டினார்கள். குழந்தைகள் “அம்மா.. அம்மா” என்று அழுது கொண்டிருந்தார்கள்.
“இனி போகலாமா?” எல்லோரும் கிளம்பினார்கள்.
இந்திரா வீட்டுக்கு வந்துவிட்டாள். இந்திராவின் கண்ணெதிரில் ரம்யாவின் உயிரற்ற உடல்தான் தென்பட்டுக் கொண்டிருந்தது. காதுகளில் அவள் தாயார் இட்ட சாபம்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. “அவள் எவளோ என் மகளின் வயிற்றெரிச்சலைக் கட்டிக் கொண்டு சுகமாக இருக்க மாட்டாள். என் மகள் பேயாக அவளைப் பிடித்துக் கொண்டு ஆட்டி வைப்பாள். கண்ணில் பட்டால் கைகால் உடைத்துப் போட்டு விடுவேன்.”
“அழாதே சித்தி! அவன் எங்கே போய் விடுவான்? அவனுக்கு ஒரு முடிவைக் கட்டாமல் நான் சும்மா விட்டு விடுவேனா?” இளைஞன் ஒருவன் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தான்.
அந்த சாபங்களும், வசவுகளும் இந்திராவின் காதுகளை விட்டு நீங்க மறுத்தன.
இந்திரா ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அக்கா வந்து நெற்றியின் மீது கையை வைத்துப் பார்த்தாள். “என்ன இது? அந்த ரம்யா போய்ச் சேர்ந்தால் நீ எதற்குப் பைத்தியம் பிடித்தவளைப் போல் பார்க்கிறாய்? நல்லபடியாக கல்யாணம் ஆகாவிட்டால் எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் இப்படித்தான் முடியும்” என்றாள்.
சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். இந்திரா சாப்பிட மறுத்துவிட்டாள். உறக்கமும் வரவில்லை. என்ன காரியம் செய்துவிட்டாள் அவள்? வித்யாபதியிடம் “வந்துவிடு. எங்கேயாவது போய் கல்யாணம் செய்துகொள்வோம்” என்று சொல்லி விட்டாளே? அவன் வந்துவிடுவான். அதில் சந்தேகம் இல்லை. தன்மீது அவனுக்கு இருக்கும் காதலில் கடுகளவுகூட சந்தேகம் இல்லை. அப்பொழுது சீதாவின் நிலைமை என்ன? சீதாவின் உடல் எரிந்து போன நிலையில் விகாரமாக இந்திராவின் கண்முன்னால் நிழலாடியது.
இந்திரா வீலென்று கத்தினாள்.
“என்ன?” சமையலறையில் பாத்திரங்களை ஒழித்துக் கொண்டிருந்த அக்கா ஓடி வந்தாள். இந்திராவின் முகத்தில் வியர்வை அரும்பியிருந்தது. “என்ன நடந்தது?”
“ஒன்றும் இல்லை அக்கா. ஏனோ பயமாக இருந்தது.”
அக்கா இந்திராவை வியப்புடன் பார்த்தாள். “பயமாக இருக்கிறதா? நான் வேண்டுமானால் துணைக்கு படுத்துக் கொள்ளட்டுமா?” என்றாள்.
சரி என்பது போல் பார்த்தாள் இந்திரா. அக்கா கதவைச் சாத்திவிட்டு வந்து மகளை அணைத்தபடி படுத்துக் கொண்டாள். அடுத்த நிமிடம் குறட்டை விடத் தொடங்கினாள்.
இந்திரா கட்டிலில் அப்படியே உட்கார்ந்திருந்தாள். தான் எவ்வளவு பெரிய தவறை செய்ய முற்பட்டாள்? வித்யாபதியை தன்னுடன் வரச் சொல்லிவிட்டாள். சீதாவின் கதி என்ன? இதில் சீதாவின் தவறுதான் என்ன? எல்லோரையும் போலவே பெற்றோர்கள் முடிவு செய்த வரனை பண்ணிக் கொண்டாள். வித்யாபதி ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தது சீதாவின் தவறு இல்லையே? சீதாவை சம்மதிக்க வைத்து வித்யாபதி வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது சாத்தியம்தானா? இந்த உலகத்தில் எந்த நாட்டிலும் கொடுக்காத மதிப்பு திருமணத்திற்கு நம் நாட்டில் அதிகம்தானோ?
திருமணம் என்ற சடங்கு மிகவும் உயர்வானது என்றுதானே தானும் தவியாய் தவித்தாள். அதன் மதிப்பு தெரியவில்லை என்றால் வித்யாபதியுடன் சேர்ந்து வாழலாமே? இந்திராவுக்கு மூளையே கலங்கிவிடும் போல் இருந்தது. கடைசியில் “என் மூளையில்தான் ஏதோ குறை இருக்கிறது. எப்பொழுதுமே என்னைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்களைப் பற்றியே யோசிக்கிறேன்” என்று நெற்றியில் அடித்துக் கொண்டு தன்மீதே கோபம் கொண்டாள்.
விதயாபதி என்னவென்று முடிவு செய்வான்? சீதாவை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுவானா? தன்மீது காதல் இருந்தால் மட்டும் அதென்ன முடிவு? அது அவனுடைய தனித்தன்மைக்கே களங்கமாக இருக்காதா? அவன் சரி என்று சொல்லிவிட்டால் அவனிடம் அருவருப்பு எற்படுமோ என்னவோ. அப்பொழுது அவள் என்ன செய்வாள்? தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்திவிட்டு அவனைப் போகச் சொல்லி விடுவாளா? ஒருக்கால் சீதாவை விட்டுவிட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டால்? இந்திராவை மேலும் சோர்வு ஆட் கொண்டது.
அத்தியாயம்-28
செவ்வாய்க்கிழமை இந்திரா ஆபீசுக்கு வந்தாள். அவள் மனம் நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்கும் குற்றவாளியைப் போல் இருந்தது. வித்யாபதி வந்தால் என்ன செய்வது? வராவிட்டால் என்ன செய்வது? இந்திரா அடிக்கடி கடியாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். காலியாய், வெறிச்சிட்டுக் கிடந்த ரம்யாவின் இருக்கையைப் பார்க்கும் போது இதயம் பாரமாகிவிட்டது. ரம்யா எவ்வளவு நல்லவள்? ரொம்ப சாது சுபாவம். இந்திராவின் மனம் கொஞ்ச நேரம் ரம்யாவைப் பற்றி, கொஞ்ச நேரம் வித்யாபதியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது.
பல யுகங்கள் போல் மிக பாரமாக கழிந்தபிறகு மாலையாகிவிட்டது. வங்கி மூடும் நேரமாகிவிட்டது. எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். இந்திரா வெளியே வந்தாள். அங்கே வித்யாபதி இல்லை. இந்திரா சாவித்திரியை துணைக்கு இருக்கச் சொல்லி மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்தாள். வித்யாபதி வரவே இல்லை. இந்திரா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். “சாரி சாவித்திரி! உனக்குச் சிரமம் கொடுத்துவிட்டேன். வா, வீட்டில் இறக்கி விட்டுப் போகிறேன்” என்று ஆட்டோவை அழைத்தாள். சாவித்திரி தடுத்தாலும் கேட்டுக் கொள்ளாமல் வீட்டில் இறக்கிவிட்டாள். பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தெரு முனையில் வித்யாபதி தனக்காகக் காத்திருப்பான் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது.
உடைகளை மாற்றிக் கொள்ளும் போது, சாப்பிடும் போது எந்த சின்ன சத்தம் கேட்டாலும் வாசல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு வந்துவிட்டது. கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த இந்திரா ஆட்டோ சத்தம் கேட்டதும் ஓடிப்போய் ஜன்னல் கர்டெனை விலக்கி வெளியில் பார்த்தாள். பக்கத்து வீட்டுக்கு வந்த ஆட்டோ என்று தெரிந்ததும் பெருமூச்சு விட்டபடி திரும்பினாள். கட்டில் மீது அமர்ந்து கொண்டிருந்த இந்திராவுக்கு உறக்கம் வரும் ஜாடையே தெரியவில்லை. வித்யாபதி கட்டாயம் வருவான் என்று தன்னுடைய மனச்சாட்சி அழுத்திச் சொன்ன சத்தியம் இப்படியாகிவிட்டதே என்று தோன்றியது. பொழுது விடிந்தது. இந்திரா சோர்வுடன் படுத்துக் கிடந்தாள். ரொம்ப முயற்சி செய்து எழுந்து தயாராகி ஆபீசுக்குக் கிளம்பினள்.
மாலையும் ஆகிவிட்டது. வித்யாபதி வரவே இல்லை. அவனால் வர முடியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் வராமல் இருந்துவிட்டான். இந்திராவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. வந்து தைரியமாக ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போயிருந்தால் அவளுக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்? அவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு அருவருப்புதான் ஏற்பட்டது. ஏதோ வாய் நிறைய பேசினானே தவிர செல்வம் நிறைந்த மாமனாரை விட்டுவிடுவானா? தான் ஒரு பைத்தியம். அவனுக்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டாள். இந்திராவுக்கு அந்த நிமிடத்தில் உலகத்தில் எல்லோரும் தன்னைவிட புத்திசாலியாய் இருப்பது போல் தோன்றியது. மேலும் ஒரு மணி நேரம் கழிந்த பிறகு இந்திராவால் கோபத்தை அடக்க முடியவில்லை. தானே அவனுடைய அலுவலகத்திற்கு போன் செய்தாள். இப்படி அவனுக்காக போன் செய்வது இதுதான் கடைசி தடைவை என்று மனதில் சபதமிட்டுக் கொண்டாள்.
போன் ஒலித்தது. மறுமுனையில் யாரோ எடுத்தார்கள். இந்திரா “ஹலோ” என்று ஒலிக்கப் போகும் பரிச்சயமான குரலுக்காகக் காத்திருந்தாள்.
“ஹலோ” மறுமுனையிலிருந்து ஒலித்தது. அந்தக் குரல் வித்யாபதியுடையது அல்ல. கட்டைக் குரலில் முரட்டுத் தனமாக இருந்தது.
“மிஸ்டர் வித்யாபதி இருக்கிறாரா?”
“வித்யாபதியா? அவர் இல்லையே? ஊருக்குப் போயிருக்கிறார்.”
”ஊருக்கா? எந்த ஊர்?”
“பாம்பே. அவருடைய மாமனார் ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார். ஃபாமிலியுடன் போயிருக்கிறார்.”
இந்திரா அதைக் கேட்டதும் நிமிர்ந்து நின்றாள். “மாமனார் போய்விட்டாரா?” தெளிவற்ற குரலில் சொன்னாள்.
“ஆமாம். அவர் கிளம்பி இரண்டு நாட்களாகிறது. இன்று வந்து விடுவார். நீங்கள் யார்? உங்களுடைய வேலை என்னவென்று சொல்லுங்கள். மேனேஜர் வந்ததும் சொல்லுகிறேன். ஹலோ…”
இந்திரா அதற்குள் போனை வைத்துவிட்டாள். “மாமனார் போய்விட்டார். ஃபாமிலியுடன் பம்பாய்க்குப் போயிருக்கிறார்” என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன. சீதாவின் தந்தை இறந்து போய்விட்டாரா? வித்யாபதி சீதாவை அழைத்துக் கொண்டு பம்பாய்க்குப் போயிருக்கிறானா? இந்திராவுக்கு எப்படியோ இருந்தது. வந்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். பைலில் எண்கள் தென்படவில்லை.
பம்பாய் தென்பட்டது. அங்கே சீதாவைத் தேற்றிக் கொண்டிருக்கும் வித்யாபதி தென்பட்டான். சீதாவில் தலை அவன் தோளில் சாய்ந்து இருந்தது. சீதா அழுதுக் கொண்டிருக்கிறாள். வித்யாபதியின் கை அவள் தலையை வருடிக்கொண்டிருந்தது. “சீதா! அழாதே ப்ளீஸ். போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்பா போய் விட்டார். அவருக்கு என்ன குறை சொல்லு? அழாதே, இந்த காபியைக் குடி. சீதா நல்லப் பெண் இல்லையா. காபி குடிக்காவிட்டால் என்மேல் ஆணை.” அவன் வலுக்கட்டாயமாக காபியைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தான். ஒரு வாய் குடித்த சீதா பேதையைப் போல் அவனைப் பார்க்கிறாள். அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. “சீதா!” அவன் சீதாவை மார்போடு அணைத்துக் கொண்டான். சீதா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
“உங்களைத்தான். மேனேஜர் உங்களை வரச் சொன்னார்.” ப்யூன் வந்து சத்தமாக சொன்னான்.
இந்திரா திடுக்கிட்டாள். எப்படியோ சமாளித்துக் கொண்டு அவன் பின்னால் நடந்தாள். இந்திராவின் கண்களுக்கு மேனேஜரில் உருவம்தான் தென்பட்டுக் கொண்டிருந்தது. அவர் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை. மேனேஜரிடமிருந்து வெசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டாள். உடல் நலம் சரியாக இல்லை என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
அத்தியாயம்-29
பத்து நாட்கள் கழித்து சீதாவின் வீட்டில் லாயர் உட்கார்ந்திருந்தார். வித்யாபதி மேஜையில் சாய்ந்தபடி நின்றிருந்தான். லாயர் தஸ்தாவேஜுகளை கவனமாக முடிச்சுப் போட்டுக் கொண்டே “அம்மா சீதா! இதுதான் விஷயம். உங்க அப்பாவின் சுயசம்பாத்தியம் இந்த சொத்து. இது உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்குச் சேரும். நீங்க இருவரும் உயிருடன் இருக்கும் வரையில் அதை அனுபவிக்கலாமே ஒழிய விற்பதற்கோ, தானம் செய்வதற்கோ எந்த உரிமையும் இல்லை” என்று சொன்னார்.
சீதா கண்ணிமைக்கும் நேரம் வித்யாபதியைப் பார்த்தாள். அவன் கைகளை கட்டிக் கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். “ஆகட்டும் வக்கீல்சார். படித்துச் சொல்லி விட்டீங்க இல்லையா” என்றாள் காகிதக்கட்டை வாங்கிக் கொண்டே.
“இன்னொரு விஷயமும் சொல்கிறேன். நீ பிறப்பதற்கு முன்னால் உங்க அப்பா தன்னுடைய தம்பி மகன் பிரசாதை எடுத்து வளர்த்தார். அவன் இப்பொழுது சொத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கோர்ட்டில் கேசு போடப் போகிறானாம். நீங்க ஜாக்கிரதையாக இருக்கணும்.”
“போடட்டுமே. அதையும் பார்த்து விடலாம்” என்றாள் சீதா அலட்சியமாக.
சீதா தஸ்தாவேஜுகளை எடுத்துக் கொண்டு பீரோவில் பத்திரமாக வைப்பதற்காக போனாள்.
லாயர் கிளம்பப் போனவர் நின்று வித்யாபதியின் தோளில் தட்டிக் கொடுத்தார். “சீதா பெண்பிள்ளை. இதுவரையில் தந்தையில் நிழலில் வளர்ந்துவிட்டாள். இந்தச் சொத்தை கொள்ளை அடித்துக் கொண்டு போகலாம் என்று எல்லோரும் கழுகு போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி நீதான் இந்த சொத்துக்கெல்லாம் காவலாளி. கவனமாக பார்த்துக் கொள். பணத்தைச் சம்பாதிப்பது கஷ்டம் இல்லை. காப்பாற்றுவதுதான் ரொம்ப கஷ்டம். சீதா! நான் கிளம்புகிறேன். ஏதாவது தேவைப்பட்டால் சொல்லியனுப்பு. உடனே வந்து விடுகிறேன். நீ எதற்கும் கவலைப் படாதே. துணைக்கு நான் இருக்கிறேன்” என்றார்.
சீதாவின் விழிகளில் ஈரம் படர்ந்தது. “ஆகட்டும் மாமா” என்றாள்.
சீதா தந்தையின் காரியங்களை பெரிய அளவில் நிறைவேற்றினாள். தாய் நோயாளியாக மாறிவிட்டாள். அவளையும் அவளையும் சீதாதான் சீதாதான் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. சுபத்ரா மட்டும் சீதாவை பெற்றதாயைவிட அதிகமாக பார்த்துக் கொண்டாள். அவளுக்கு சீதா என்றால் ரொம்ப பிரியம். இவ்வளவு பணக்கார வீட்டுப் பெண் தன்னையும் குழந்தைகளையும் அன்பாக பராமரித்து வருவது தன்னுடைய பூர்வ ஜென்மபலன் என்று தினமும் ஒரு தடவையாவது நினைத்துக் கொள்வாள். குழந்தைகளுக்கும் சீதா என்றால் அன்பு அதிகம். ஏன் என்றால் தங்களுக்கு வேண்டியதை எல்லாம் அண்ணாவை விட மேலாக பார்த்துப் பார்த்து செய்வாள்.
சீதா கவலையில் ஆழ்ந்தாள். தந்தை நிறைய சம்பாதித்து விட்டுப் போயிருக்கிறார். ஆனால் அதன் மூலம் அவளுக்கு சந்தோஷம் இல்லாமல் வேதனைதான் வந்து சேர்ந்தது. கம்பெனியின் லாப நஷ்டத்தைப் பார்த்துக் கொள்ளணும். கணவன்மீது கோபம் இருந்தாலும் வேலைக்காரர்களுக்கு முன்னால் கேலிக்கூத்தாகி விடும் என்று பயம். இரண்டு வாரங்கள் கழிந்ததோ இல்லையோ கோர்ட்டிலிருந்து சம்மன்கள் வந்து சேர்ந்தன.
இதை எல்லாம் தாங்கிக் கொள்வதும், எதிர்த்து நிற்பதும் சீதாவுக்கு தாங்க முடியாத பாரமாகத் தோன்றியது.
தந்தை இறந்துவிட்டார் என்று சித்தப்பாவிடமிருந்து போன் வந்த இரவை தன்னால் எப்படி மறக்க முடியும்? அன்று வீட்டில் எவ்வளவு பயங்கரமான சண்டை நடந்தது? வித்யாபதி அவளை விவாகரத்துத் தரச் சொல்லிக் கேட்டான்.
சீதா திகைத்துப் போனாள். “நான் என்ன தவறு செய்து விட்டேன்?” என்றாள். வித்யாபதியால் பதில் சொல்ல முடியவில்லை. சீதா உலுக்கி எடுத்தாள்.
“இதில் உன்னுடைய தவறு எதுவும் இல்லை. தவறு முழுவதும் என்னுடையதுதான். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டது, செய்து கொண்ட பிறகு எல்லா கணவன்மார்களைப் போல் காதலிக்க முடியாமல் போனது என் தவறுதான்.”
“நான் இப்பொழுது உங்களிடம் காதல் பிட்சை கேட்கவில்லையே?”
”சீதா!”
“உங்களுடைய சந்தோஷத்திற்குக் கூட குறுக்கே வரவில்லை. இந்திராவுடன் நீங்கள் வெளியே சுற்றுகிறீர்கள், ஹோட்டலுக்கு போகிறீர்கள். அவளுக்கு இங்கேயே மாற்றல் கிடைக்கும் விதமாக செய்தீர்கள். வீடு அலாட் ஆகும்படியாக செய்தீர்கள். ஜுரம் வந்தால் ஆஸ்பத்திரியில் இருந்து பனிவிடை செய்தீங்க. நான் என்றாவது ஏதாவது சொன்னேனா?”
“சொல்லவில்லை.”
“அதையெல்லாம் தாங்கிக் கொண்டேன். எதற்கு? அப்பாவுக்காக இல்லை. எனக்காகத்தான். நீங்கள் என்னை கவனிக்காவிட்டால் உலகத்தாரின் முன்னால் இளப்பமாகி விடுவேனோ என்ற அச்சத்தால்தான் சகித்துக் கொண்டேன். சிறுவயது முதல் அதிர்ஷ்டசாலி என்று பெயர் பெற்று விட்டேன். என் அதிர்ஷ்டத்திற்கு ஈடு இணை இல்லை என்று பூரித்துப் போயிருந்தேன். இந்த இடத்தில்தான் விதி என்னை பலமாக தாக்கிவிட்டது. இந்த அடி வெளியே தெரிந்து விடாமல் சமாளிக்கத்தான் உலகத்தாருக்கு முன்னால் பூசி மெழுகி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய கௌரவம் என்னைவிட, உங்களைவிட எனக்கு முக்கியமானது. இதை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. நான் உங்களை விவாகரத்து செய்வது என்பது என் உடலில் உயிருள்ள வரையில் நடக்காத காரியம். இந்தத் திருமணத்தை ஏன் செய்து கொண்டீங்களோ எனக்குத் தெரியாது. இது நடந்தது என்னுடைய துரதிரஷ்டம் மட்டுமே இல்லை. உங்களுக்கும்தான். என்னை மறுத்துவிட்டு நீங்கள் போய்விட முடியாது. அப்படிப் போனால் என்னால் உங்களை திரும்பவும் வரவழைத்துக் கொள்ள முடியும். நீங்க எதற்காக டைவோர்ஸ் கேட்கிறீங்க என்று எனக்குத் தெரியும். இந்திராவை உங்களால் வெறுமே வைத்துக் கொள்ள முடியுமோ என்னவோ. திருமணம் மட்டும் பண்ணிக் கொள்ள முடியாது.”
“வாயை மூடு.” சீதாவின் கன்னம் அதிர்ந்தது. “எல்லை மீறிப் பேசாதே.” வித்யாபதியின் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன.
அதற்குள் போன் ஒலித்தது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த சீதா மெதுவாக நினைவு திரும்பியவள் போல் நடந்துபோய் போனை எடுத்தாள். உடனே சத்தமாக “இல்லை. இருக்காது. பொய்.. பொய்” என்று கத்திவிட்டாள்.
அறைக்குத் திரும்பப் போன வித்யாபதி திரும்பிப் பார்த்தான். சீதா கதறிக் கொண்டே பேசினாள். “எப்பொழுது? எத்தனை மணிக்கு? என்ன நடந்தது? ஹார்ட் அட்டாக்கா..” அழத் தொடங்கினாள்.
வித்யாபதி அருகில் வந்தான். சீதா ரிசீவரை அப்படியே விட்டு விட்டு தலையில் அடித்துக் கொண்டே “பொய்.. பொய்” என்று கதறிக் கொண்டிருந்தாள். வித்யாபதி “என்ன நடந்தது?” என்று கேட்டான்.
“அப்பா போய் விட்டாராம்.”
வித்யாபதி போனை எடுத்துக் கொண்டான். பாம்பேலிருந்த சீதாவின் சித்தப்பா பேசினார். சீதாவை உடனே அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். உடனே கிளம்பினால் பிளயிட் கிடைக்கும் என்றும், டிக்கெட்டுக்கு தான் ஏற்பாடு செய்தவதாகவும் சொன்னாளர்.
அரைமணியில் இந்தச் செய்தி எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது. சீதா, விதயாபதி விமான நிலையத்திற்குக் கிளம்பினார்கள்.
காரில் சீதா அழுது கொண்டே இருந்தாள். வித்யாபதி கையைசீட்டி அவளை அருகில் இழுத்துச் சமானப்படுத்த முயன்றான். “சீதா!” அவன் இதழ்கள் தெளிவற்று உச்சரித்தன. சீதா அவனை பலமாக தள்ளிவிட்டாள். ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டு, கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழத் தொடங்கினாள். வித்யாபதி திகைத்துப் போனாற்போல் மௌனமாக இருந்துவிட்டான்.
அதற்குப் பிறகும் வித்யாபதி ஒரு பொம்மையாக நின்று கொண்டிருந்தானே தவிர சீதாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள். சீதாவின் தைரியத்தைக் கண்டு வியந்து போனான் அவன். சீதாவும் அவனும் மறுபடியும் தனிமையில் சந்தித்துக்கும் சந்தர்ப்பம் வரவே இல்லை. சீதாவைப் பார்த்தால் அவனுக்கு ரொம்ப இரக்கமாக இருந்தது. இந்த நிமிஷம் அவள் எவ்வளவு தனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. சீதாவுக்கு தன் மூலமாக வேதனை ஏற்பட்டதற்கு வருத்தமாகவும் இருந்தது. அவள் தன்னைத் தவிர வேறு யாரைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் சந்தோஷமாக இருந்திருப்பாள். அவன் தன்னந்தனியாக சீதாவின் குடும்பத்தில் ஒருவனாக மௌனமாக இருந்துவிட்டான்.
சீதாவுக்கு உறவினர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் பெரிய பெரிய பதவிகளில் இருந்தார்கள். சீதா குடும்ப கௌரவத்திற்கு ஏன் முக்கியத்துவம் தருகிறாள் என்று இப்போ அவனுக்குப் புரிந்தது.
அத்தியாயம்-30
இந்திரா மறுநாள் ஆபீசுக்கு வந்தாள். பஸ் தவறிவிட்டதால் வேறு பஸ் கிடைத்து வருவதற்குள் அரைமணி தாமதமாகிவிட்டது. இந்திரா அவசர அவசரமாக சீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு பைல்களை புரட்டிக் கொண்டிருந்தவள் எதற்காகவோ ரம்யா இருந்த சீட் பக்கம் பார்த்தாள். அந்த இருக்கை அன்று காலியாக இருக்கவில்லை. மாநிறமாக, உயரமாக இருந்த ஒருவன் உட்கார்ந்திருந்தான்.
பக்கத்தில் இருந்த சாவித்திரி அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். இந்திராவைப் பார்த்ததும் “இந்திரா! இவர்தான் பிரசாத். ரம்யாவின் இடத்திற்கு புதிதாக மாற்றல் ஆகி வந்திருக்கிறார். இவள் இந்திரா” என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள்.
“கிளாட் டு மீட் யூ” என்றான் முறுவலுடன். சிரித்த முகம். உதடுகளிலும், கண்களிலும் புன்முறுவல் தவழ்ந்துகொண்டே இருந்தது.
பிற்பகல் லஞ்ச நேரத்தில் அவனே எல்லோருக்கும் காபி வரவழைத்துக் கொடுத்தான். “இன்றைக்கு என்னைக் கொடுக்க விடுங்க. அப்புறமாக வட்டியும் முதலுமாக நானே வசூல் பண்ணிக் கொள்கிறேன். சொல்லப் போனால் என்னுடைய கொள்கையும் வங்கியின் கொள்கையும் ஒன்றுதான். யாருக்கு எதைக் கொடுத்தாலும் வட்டியுடன் வசூல் செய்து கொள்ளணும்” என்றான். எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.
வந்த கஸ்டமர்களுடன் கூட சிரித்துக் கொண்டு ஜோக் அடித்து சிரிக்க வைத்துக் கொண்டும் இருந்தான். அப்படிப் பட்ட நபர் கூட இருந்தால் வேலை செய்யும் களைப்பே தெரியாது. இந்திராவுக்கு அன்று சீக்கிரமாக கழிந்துவிட்டது போல் தோன்றியது.
அன்றைக்கு மட்டுமே இல்லை. அதற்குப் பிறகும் தினமும் வங்கியில் அடி எடுத்து வைத்தது முதல் நேரம் சீக்கிரமாக பொய்க் கொண்டிருந்தது. எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொள்ளும் மேனேஜர் கூட அவன் பேச்சைக் கேட்டு சிரிக்கத் தொடங்கினார்.
காஷியர் கோபாலன் அன்று எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்தான் மேனேஜர் வாய்விட்டு சிரித்தார் என்று. பிரசாத் வந்ததிலிருந்து தினமும் யாராவது ஏதாவது ஒரு காரணத்திற்காக பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய முறையும் முடிந்துவிட்டது. இந்திரா மட்டும்தான் இன்னும் கொடுக்கவில்லை. இந்திராவுக்கு எந்தக் காரணமும் தென்படவில்லை. “இந்திராவை எப்படியாவது பார்ட்டி கொடுக்குபடி செய்கிறேன்” என்று பிரசாத் சவால் விட்டான். அன்று இந்திரா வந்ததும் “கங்கிராட்சுலேஷன்ஸ்” என்றான்.
“எதுக்கு?”
“இந்தப் புள்ளிப் போட்ட புடவை உங்களுக்கு ரொம்ப நன்றாக இருக்கிறது.”
“தாங்க்ஸ்.”
“வெறும் தாங்க்ஸ் மட்டும் போதாது. பார்ட்டி கொடுத்தாக வேண்டும்.”
“ரொம்ப நன்றாகத்தான் இருக்கிறது.”
“அப்படிச் சொல்லிவிட்டால் சும்மா விட்டு விட மாட்டேன். பார்ட்டி கொடுத்துதான் ஆக வேண்டும். இந்தப் புடவை உங்களுக்கு அழகாக இருக்கு என்று சொல்வதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா?”
“கஷ்டமா?”
“ஆமாம். தினமும் நீங்க கட்டிக்கொள்ளும் புடவைகளை கவனமாக பார்த்திருப்பேன். அஃப்கோர்ஸ், எனக்குத் தெரியாமலேயேதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புடவையில் தென்படுவதுபோல் அத்தனை அழகாக வேறு எந்தப் புடவையிலும் தென்படவில்லை. அதோடு உங்கள் முகம் சீரியசாக இருப்பதைக் காட்டிலும் சிரிக்கும் போதுதான் இன்னும் அழகாக இருக்கும் இன்னும் சொல்லணும் என்றால்…” அவன் மேலும் சொல்லப் போனான்.
“போதும் போதும். நீங்கள் இன்னும் கஷ்டப்பட்டு புகழத் தேவையில்லை. நான் பார்ட்டி தந்து விடுகிறேன். போதுமா?” என்றாள்.
“தாங்க்யு” என்றான் சந்தோஷமாக.
அன்று மதியம் இந்திரா எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்தாள். எல்லோரும் பார்ட்டியில் கலந்து கொண்டார்கள். “எப்போதும் காபிதானா? ஒரு மாற்றத்திற்காக ஐஸ்க்ரீம்” என்று ஐஸ்க்ரீமை வரவழைத்தாள். பிரசாத் பார்ட்டி என்ற பெயரில் தினமும் ஒருத்தரைக் கொண்டு செலவழிக்க வைத்தாலும் கணக்கிட்டுப் பார்த்தால் வாரத்தில் ஒரு நாள் ஒருத்தருக்கு முறை வந்து கொண்டிருந்தது. அதன்படி பார்த்தால் அவரவர்களின் செலவைத்தான் வாரத்தில் ஒரேநாளில் செலவு செய்து கொண்டிருந்தார்கள்.
இந்திரா இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னதும் எல்லோரும் “ஆமாம் ஆமாம்” என்று வியப்படைந்து விட்டார்கள்.
எல்லோரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குள் வித்யாபதி அங்கே வந்தான். அவனைப் பார்த்ததும் இந்திராவின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்றுவிட்டது.
”இந்திரா! உன்னுடைய பிரண்ட் வந்திருக்கிறார்” என்றாள் துளசி.
இந்திரா வெளியே போவதா வேண்டாமா என்ற சங்கடத்தில் ஆழ்ந்தாள். மனம் வேகமாக யோசித்துக் கொண்டிருந்தது.
“எக்ஸ்க்யூஸ் மி. ஜஸ்ட் எ மினிட்.” இந்திராவுடன் பேசிக் கொண்டிருந்த பிரசாத் வித்யாபதியை நோக்கிப் போனான். “ஹலோ அத்தான்! என்ன விசேஷம்? இந்தப் பக்கமாக வந்திருக்கீங்களே? என் தங்கைக்குத் தெரியாமல் இங்கே அக்கவுண்ட் ஏதாவது வைத்துக் கொள்ளப் போறீங்களா? அப்கோர்ஸ்! சீதாவிடம் நான் சொல்லமாட்டேன், கவலைப்படாதீங்க” என்று ஜோக் அடித்தான். வித்யாபதி குழப்பத்துடன் பார்த்தான்.
“வாங்க. நாங்கள் பார்ட்டி கொண்டாடி கொண்டு இருக்கிறோம். நீங்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள். இவள் இந்திரா, என்கூட வேலை பார்க்கிறாள். இவள்தான் இன்று பார்ட்டி கொடுக்கிறாள். மிஸ். இந்திரா! இவர் பெயர் சீதாபதி, அதாவது சீதாவின் கணவன் என்று அர்த்தம்.”
ஏற்கனவே நேரமாகிவிட்டதால் எல்லோரும் தம் இருக்கைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இந்திரா விதயாபதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சீதா எப்படி இருக்கிறாள்? நானும் வரணும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். பாவம்! அவள் தந்தை இறந்து விட்டாராமே. துக்கம் விசாரித்து வரச் சொல்லி அப்பா நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கிறார். எனக்குத்தான் அதுபோன்ற விசாரிப்புகள் என்றால் சங்கடம். அதிலும் பெண்கள் யாராவது அழுது கொண்டிருந்தால் என்னால் பார்க்க முடியாது.” அவன் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான்.
“இந்திரா! மாலையில் சந்திக்கிறேன்” வித்யாபதி எழுந்து கொண்டே சொன்னான்.
பிரசாத் வியப்புடன் பார்த்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் முன்பே தெரியுமா?” எனறான்.
“நன்றாகவே தெரியும். நாங்க இருவரும் சிநேகிதர்கள். சீதாவுக்கும் இந்திராவை நன்றாகத் தெரியும்” என்றான் வித்யாபதி. அவன் கிளம்பிப் போய்விட்டான்.
“அப்படி என்றால் நீங்களும் எங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுங்க. வெரிகுட்” என்றான். அவன் முகத்தில் ஆர்வம் தென்பட்டது. இந்திராவின் முகம் சிவந்தது.
– தொடரும்…
– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.
– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.