கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 14,293 
 
 

அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத்திருந்தது. காலைக் குளிர் நீரில் விறைத்துப் போன தன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.

“துரை…, தேத்தண்ணியைக்குடிமேனை” பார்வதியின் இதமான வேண்டுதல் மனதிற்கு சுகமாக இருந்தது. ஆவி பறக்கக் கொதிக்கும் தேனீரை, மெதுவாக வாயால் ஊதிவிட்டு, சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.

வானொலியில் மாநிலச் செய்திகள் ஆரம்பமாகியிருந்தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டான்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. அரச அலுவலகங்கள், பாடசாலைகள், கடைகள் தனியார் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலேயே…..”

“தம்பி,……”துரை திடுக்குற்றுத் திரும்பினான். வாசலில் வடிவம் மாமி நின்றிருந்தாள். அவனுக்குப் பகீரென்றது.

“தம்பி, இண்டையோடை நாலாவது நாளாச்சு. நான் உன்னை நாணயமானவன் எண்டு நம்பித்தான், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த நானூறையும் அப்பிடியே தூக்கித் தந்தனான். சாப்பாட்டுக்குத் தவிக்கிற தவிப்பை விட என்ரை புருசன், பிள்ளைகளுக்கு நடுவில நிண்டு பதில் சொல்லேலாமல் நான் தவிக்கிற தவிப்பைத்தான் தாங்க முடியேல்லை” வடிவம் மாமி வாசற் கதவோடு அமர்ந்து விட்டாள்.

சுடு தேநீர் சுவையிழந்து கசந்தது. அவன் நெற்றியைத் தேய்த்து யோசித்து விட்டு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான். தனது காதணிகளைக் கழற்றித் துடைத்துக் கொண்டு நின்ற பார்வதி இவனைக் கண்டதும் அவற்றைப் பொறுப்போடு நீட்டினாள்.

“அம்மா என்ன இது…….?”

“வடிவம் மச்சாள் எங்கட வாசலுக்கை வந்திருந்து இனிமேல் முணுமுணுக்க வேண்டாம். நாலு குமருகள் இங்கை கரை சேராமல் இருக்குதுகள் எண்டதை அயலண்டைக்கு விளம்பரப்படுத்தவும் வேண்டாம்.”

அம்மாவிற்கே அறையலாம் போல அவனின்மனம் குறுகுறுத்தது.

‘நான் பாடுபடுகிறதெல்லாம் இதுக்குத்தானா?’ அவன் பொறுமையைக் கஸ்டப்பட்டுப் பற்றிக்கொண்டான்.

“இண்டைக்கு…… வெள்ளிக்கிழைமை! இந்த அநியாயம் நடக்க வேண்டாம். இண்டைக்குக் கடை திறக்கலாம்தானே? மூண்டு நாளாய்த் திறபடாத கடையில வியாபாரம் தாராளமாய் நடக்கும். பின்னேரத்துக் கிடையில எப்பிடியும் சேர்த்துக் குடுத்திடுவன்”

துரை வாசலுக்கு வந்த போது வடிவம் மாமி போய்க் கொண்டிருந்தாள்.

“தம்பி ………..பின்னேரம் எப்பிடியும் என்ரை கையிலை காசை வைச்சிடு- திரும்பிக் கூறியவள் கேற் வாயிலைத் தாண்டி விட்டாள்.

அவனுக்கு மனம் கனத்தது.

“இத்துடன் மாநிலச் செய்திகள் முடிவடைந்தன…..” கடைசித் தங்கை மீனா , வானொலியின் அலைவரிசையை அவசரமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

“……பொங்கும் பூம்புனல் …….” இலங்கை வானொலி நிகழ்ச்சி இசைக்குறியைத் தொடர்ந்து -வாழும் வரை போராடு…….வழியுண்டு என்றே பாடு……- என்ற தென்னிந்தியத் திரைப் படப் பாடல் இசைக்க ஆரம்பித்தது.

அவன் திறப்புக் கோர்வையை இடுப்பு வேட்டியில் செருகிவிட்டு சேட் கைகளை மடித்து, கிழக்கே திரும்பி கண்களை மூடி இறைதியானம் செய்து விட்டு நம்பிக்கையோடு வீதியில் இறங்கினான்.

“மேனை……..ராசா…….”

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சின்னாத்தைக் கிழவி நடுங்கிய கரங்களில் பசுஞ்சாணத்தோடு நின்றிருந்தாள்.

“கடைக்குப் போறாய் போலை…..”

“ஓமாத்தை…..சொல்லணை” அவன் தயங்கி நின்றான்.

மதவடியிலை கூட்டமாய் வந்து கொண்டிருக்கிறாங்களாம் ராசா- சின்னாத்தைக் கிழவியின் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.

“அட ……உது நெடுகத்தானே? அவங்கள் போடுவாங்கள்…………, நீ யோசியாமல் போணை” துரை மேலும் தாமதிக்காமல், திரும்பி சாதாரணமாக நடக்கத் தொடங்கினான். சின்னாத்தைக் கிழவி இன்னமும் தவிப்போடு திகைத்து நிற்பது அவனுக்குச் சிரிப்பையே கொடுத்தது.

ரவுனுக்குள் சனநடமாட்டம் குறைவாகவே இருந்தது. பட்டிகளில் இருந்து திறந்து விடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் துடிப்பும் படபடப்பும் அவர்களில் நன்கு தெரிந்தது.

துரை, தனது கடைக் கதவுகளைத் திறந்து நிலத்தைக் கூட்டி, காசு மேசையிலிருக்கும் சுவாமிப் படத்திற்குச் சாம்பிராணி போட்டுவிட்டு நிமிர்ந்த போது ஏனைய கடைகளும் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

“தம்பி…..பிறிஸ்டல் ரெண்டு வேணும்” சில்லறை லாச்சியில் விழ, பிறிஸ்டல் சிகரெட்டுகள் இரண்டு இடம் மாறின.

“புண்ணியம் கிடைக்குமண்ணா…….” வழக்கமான அழுக்குக் கிழவர்களுக்குப் பதிலாக, ஒரு சிறுமி தலையைச் சொறிந்து கொண்டு அலுமினியக் கிண்ணமொன்றுடன் நின்றிருந்தாள். இவனுக்கு எரிச்சலாக வந்தது.

“புண்ணியம் கிடைக்குமண்ணா…… நாங்கள் வவுனியாவிலையிருந்து…….”

“அகதிகளாய் வந்திருக்கிறியளாக்கும்… எனக்கு வேலை, உங்கட பட்டாளத்துக்குக் காசு போடுறதாக்கும்”

துரை தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டிவிட்டு முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டான்.

“அண்ணா….. மூண்டு நாளாய் சாப்பாடில்லை ஒரு வாய் தேத்தண்ணிக்கு மட்டும்….” சிறுமி கலங்கிய கண்களோடு கெஞ்சினாள். அவனுக்கு உள்ளம் தடுமாறியது. லாச்சியை இழுத்தான். ஐந்து ரூபாத் தாளொன்றும், ஒரு ரூபாக் குற்றிகள் இரண்டும், பத்துச் சதங்கள் நான்கும் இருந்தன. ஒரு ரூபாக் குற்றியொன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

மனதிற்குள் இனம்புரியாத பாரம் . வயிறு காலை உணவை எண்ணி உறுத்திக் கொண்டிருந்தது. மண் கூசாவில் கிடந்த பழைய நீரை வாயில் ஊற்றிக்கொண்டு, ஒருவித வைராக்கியத்தில் அவன் தீவிரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

நண்பகல் பன்னிரண்டு மணியான போது முந்நூற்றி அறுபது ரூபா சேர்ந்திருந்தது. அவன் சற்றுத் தெம்போடு காணப்பட்டான்.

‘பின்னேரம் நாலு மணிக்கிடையில நானூறுக்கு மேல் சேர்ந்து விடும்’.

மதியவேளைக்குப் பின் வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது, யாழ்ப்பாண மினி பஸ் ஒன்று மூச்சுப் பிடித்தபடி வந்து கிறீச்சிட்டு நின்றது. பாய்ந்திறங்கிய ஜனங்களிடத்தில் ஒருவித பரபரப்பும் பதற்றமும் தெரிந்தன. அவர்கள் நடை வேகம் அதிகமாகி ……..அதிகமாகி ரவுண் திடீரென்று கிலிப்பிடித்து தீவிரமாகக் கலையத் தொடங்கியது.

“வாறாங்களாம் ……..வாறாங்களாம்…….”

கடைகள் மிக வேகமாக மூடப்பட்டுக் கொண்டிருந்தன. துரை அவசரமாக மேசை லாச்சியை இழுத்து, காசுத்தாள்களை அள்ளி, பெனியனுக்குள் திணித்து, சில்லறைகளை வழித்து பாக்கினுள் கொட்டிய போது, தூரத்தில் வித்தியாசமான வாகன இரைச்சல் கேட்கத் தொடங்கியது. கதவை இழுத்துப் பூட்டைக் கொழுவி விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, குச்சு ஒழுங்கைகளினூடே திரும்பி ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்து அடையும் போது பார்வதியும் பிள்ளைகளும் ஏக்கத்துடன் காத்து நிற்பது தெரிந்தது.

“என்ரை ராசா……! வந்திட்டியே?”

“அண்ணா, மதவடியில் நாலு பேர் விழுந்து கிடக்கினமாம்…… நாங்கள் உன்னை நினைச்சுத்தான் நல்லா பயந்து போனம்”

பல குரல்கள் வாசலில் ஒலிக்கத் தொடங்கிய போது அவன் பெருமூச்சு விட்டவாறே உள்ளே நுழைந்து கொண்டான்.

பெனியனிற்குள்ளிருந்து எடுத்த பணத்தை எண்ணி, நானூறைப் புறம்பாக வைத்தபோது ஆறு ரூபா எஞ்சியது. அதனை பார்வதியின் கையில் வைத்து விட்டு, வடிவம் மாமியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். தெருமுனையில் வடிவம் மாமி, தனது மாட்டைத் தேடிக் கயிற்றோடு வருவது தெரிந்தது.

“மாமி….” அவன் காசை நீட்டினான்.

“துரை..! நல்ல காரியம்…… என்ரை நாணயத்தையும் காப்பாத்திப் போட்டாய்…” மகிழ்ச்சிப் பூரிப்பினால் வந்த வார்த்தைகளை பூரணமாக வெளியிட முடியாமல், திரும்பி நடக்கத் தொடங்கினாள் வடிவம் மாமி.

துரை ஒருவித ஆழ்ந்த நிம்மதியோடு வீட்டை நோக்கித் திரும்பினான். இப்போ, அவன் நடையில் ஒரு தலை நிமிர்வும், திருப்தியும், சந்தோசமும் இருந்தது. இவனைக் கடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பரபரப்பை இரசித்துக் கொண்டு வந்தவன் வீட்டை அண்மித்த போது……… பார்வதியும் மற்றவர்களும் விறைத்துப் போய் நின்றிருப்பது போல் தெரிந்தது!?

“என்னம்மா ……….என்ன விசயம் ? ஏன் எல்லாரும் ஒருமாதிரி நிற்கிறீங்கள்……?” துரை புரியாமல் யோசனையோடு அவசரமாகக் கேட்டான். பார்வதியின் கைகள் படபடக்க, உதடுகள் துடிதுடித்தன.

“என்னம்மா…..சொல்லுங்கோவன்” இவனையும் மீறி இவனுக்கு இதயம் படபடத்தது.

“ரவுணெல்லாம் பற்றி எரியுதாம் ராசா……”

பார்வதியையும் மீறி அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியில் வந்தது.

“கட…..வுளே……! அம்மா…..அ….”

அவன் கால்கள் பின்ன, தள்ளாடி வாசற் படியில் அமர்ந்தான். தூரத்தே….. .கரும்புகை, சிவப்புப் பொறிகளோடு போட்டியிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.

“துரை……துரை….ராசா……” ஓலங்கள் பூமிக்குள்ளிருந்து வருவது போல……..!

அவன் மேலே அண்ணாந்து, கரிய வானத்தில், தெரியாத புள்ளியொன்றைப் புரியத பாவத்துடன் தேடிக்கொண்டிருந்தான்.

– சிரித்திரன் – 1986 லண்டன் மூன்றாவது பரிசு பெற்றது.

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். மின்னஞ்சல் முகவரி: chandra363@googlemail.com வாழ்க்கைக் குறிப்பு சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *