சிறகொடிந்த தீயினிலே

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 25,521 
 
 

மனம் நிறையக் கல்யாண ஆசைக் கனவுகளோடு தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால்
தேடி வானத்திலிருந்து இறங்கி வரும் ஒரு தேவ புருஷனை எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் சராசரிப் பெண்கள் போலன்றி,மனத்தை உயிரோடு பிடுங்கி வேரறுத்து விட்டுப் போகும் இந்தக் கல்யாண சலனமும் அதனால் வளர்கின்ற ஆசைப் பெருந்தீயும் தனக்கு வரக்கூடாதென்பதில், கல்யாணி காட்டி வருகின்ற அதி தீவிர வைராக்கிய நிலை தந்தை கந்தசாமியின் மனதுக்கு எட்டாத கசப்பான ஒரு புதிய செய்தியாகவே நெஞ்சில் உறைத்தது.

நளினமான பெண்மையின் உயிர் மூச்சுப்படாத,அவளின் இந்த வரட்டுக் கோலத்திற்கான பின்னணி இருப்புத் தடங்கள் என்னவென்று பிடிபடாமல், அவர் மிகவும் குழம்பிப் போயிருந்தார்.. இப்படிக் கல்யாணத்தை வெறுத்துக் கரை ஒதுங்கிப் போகுமளவுக்கு அவளுக்கு வாழ்க்கை ஏன் கசப்பானது என்று புரியாமல் அவர் அறிவு பூர்வமாய் எவ்வளவோ வழிகளில் சிந்தித்தும் அதற்கான விடை கிடைக்கவேயில்லை.
அவர் கல்யாணப் பேச்சை எடுக்கிற ஒவ்வொரு சமயங்களிலும் அவள் அதை மிக இயல்பாகத் தட்டிக் கழித்து விடுவதிலேயே குறியாக இருந்தாள். அதற்கான பின்னணிக் காரணம் விடை அவிழ்க்கப்பாடாத, பெரும் புதிராகவே இன்னும் இருந்தது. அவள் அவரின் ஒரேயொரு செல்ல மகளென்பதால் , அவளுக்குச் சீதனமாக வாரி வழங்கவதற்கென்றே, அவரிடம் கோடிக் கணக்கில் பணமும்
கொழும்பில் சொந்த வீடும் இருந்தன, இது தவிர, தான் சொந்தக் காலிலேயே
நிற்க வேண்டுமென அவள் எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவின் விளைவாகத்
தனியார் நிறுவனமொன்றில், பட்டப் படிப்புப் படித்த பெரும் அதிகாரியாகவும் அவள் இருந்தாள். அழகிலும் ஒளி விடும் ஒரு தேவதை அவள்., அவள் காலடி மண்ணைத் தரிசிக்கவென, எத்தனை ஆயிரம் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றார்கள் .அவளோ எவரையுமே ஏறெடுத்துப் பார்க்க விரும்பாத ஒரு கன்னித் தபஸ்வினி போல நடந்து கொள்கிறாள்.

உணர்ச்சிகள் ஜடமாக மரத்து அவள் ஏற்றுக் கொண்டிருக்கிற இந்தக் கன்னித் தவக் கோலம் என்றாவது ஒரு நாள் ஒரு தேவபுருஷன் தேர் ஏறிவரும் போது நிச்சயம் அழிந்தே போகுமென்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தான் உயிருடன் இருக்கும் போதே, அவளை ஒரு கல்யாண மணப்பெண்ணாய் கண் குளிரத் தரிசித்து
விடவே அவர் விரும்பினாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவள் தன்னிச்சையாக மனம் போன போக்கில், எடுத்துக் கொண்டிருக்கிற இந்த முடிவுக்கு ஒரு மூலக் கருப் பொருளாய் அவர்கள் வாழ்வில் உறைந்து கிடக்கிற, அவரைப் பற்றிய கசப்பான

உண்மையும் , அதனாலுண்டான தாக்கங்களுமே காரணமென்பது அவரின் அறிவுக்கு எட்டாமல் போனதுதான் பெரிய ஆச்சரியம்.

அவளின் கண் முன்னால் உயிருடன் உணர்ச்சிகள் எரிக்கப்பட்டு, வாழாமல் வெறும் நடைப் பிணமாக, அப்பாவை மணம் முடித்த பாவதிற்காக, அவரின் காலடியில் மனிதப் புழுவாகச் செத்து மடிந்து போன அம்மாவைப் பற்றிய, கண்ணீரே வாழ்வான
அந்தச் சோக காவியம் இன்னும் நெஞ்சில் நிறைந்த ஒரு கரிக் கோலமாய் உயிர் கொண்டு நிற்பதை, அவள் ஒருத்தியே அறிவாள். இதைப் பற்றி வாய் திறந்து ஒரு வார்த்தை கூட அவரோடு அவள் பேசியதில்லை. அன்பு வழிபாடற்ற, மன வக்கிரம் கொண்ட, அவரின் குணக் கோளாறு நடத்தைகளினால் அம்மா உயிருடன் சமாதி கட்டப்பட்டது மட்டுமல்ல,ஆண் சமூகம் குறித்து, அவள் மனதில் பற்றியெரிகின்ற
அந்தத் தார்மீகக் கோப நெருப்புக்கும் இதுவே காரணமானது.

இதைப் பற்றி அவரோடு, தர்க்கிப்பதில் பலனில்லை என்று அவளுக்குப் பட்டது.
ஏனெனில் ஒரு பாவமும் அறியாமல் தன்னிடம் மனைவியாக வந்து சேர்ந்த அம்மாவை மனித நேயமற்ற, ஒரு கொடும்பாவியாய் நின்று, தான் வஞ்சித்துப் பலியெடுத்த அந்த வாழ்க்கைக் கொடுமையை ஒரு குற்றமாகவே அவர் உணரப் போவதில்லை. அவரின் அறிவுக்கெட்டாத முழுமையான இந்த மனிதப் பண்புகள் குறித்து,த் தன்னைத் தேடி வருகின்ற ஒருவரிடமே தன்னால் மனம் திறந்து பேச முடியுமென்று இப்போது அவள் கருதினாள்.

அதற்கான காலம் விரைவிலேயே இப்படிக் கதவு திறந்து கொள்ளுமென்று அவள் கனவுகூடக் கண்டதில்லை. அன்றைக்கு ஞாயிறு விடுமுறை தினமாதலால், அவள்
வீட்டிலேதான் இருந்தாள். வாசலில் அமர்ந்து, திறந்து கிடந்த ஜன்னல் வழியே தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். ஜன நெரிசல் நிரம்பி வழியும் காலி வீதி, மாலையானால் இன்னும் பரபரத்து, ஆரவாரம் கொள்ளும். வாகன நெரிசலில் அள்ளுண்டு போகும் மனித நிழல் கற்றைகள் மீது, அவள் கவனம் கொண்டு நிலை குத்தி அமர்ந்திருந்தாள்.

ஒவ்வொரு நிழல்கள் மீதும் உயிர் செறிந்து மின்னும் ஒளிச் சுடராய் அலை அடித்துப் பொங்கும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் பரவச மனிதர்களே எங்கும் அவள் கண்படும் இடமெல்லாம் காட்சி கொண்டு நிற்பது போல் அவள் உணர்ந்தாள்.
இந்தக் காட்சி மனிதர்களில் ஒருத்தி போலாகாமல், அம்மாவின் இருப்பு மறவாமல்,

உயிர் விட்டு மனம் ஒழிந்து போன தனிமைச் சூனியத்தில் தான் கரை ஒதுங்கி வாழ நேர்ந்ததே என்று அவளுக்குக் கவலை வந்தது. பிறகு அதை மறந்து விட்டுத் தனக்கேயுரித்தான சுயாதீனப் போக்கில் வெறும் போக்காகக் ,கண்களை அகல விரித்துத் தெருவை அலசும் போது ,அப்பாவின் கார் வாசலிலே வந்து நிற்பது தெரிந்தது.அவர் பெரும் தொழில் அதிபராக ,இருப்பதால், வாழ்வில் எவ்வளவோ
வசதிகள் அவருக்கு. காருக்கு டிரைவர் வேறு வைத்துக் கொண்டிருந்தார். அந்த டிரைவர் மலை நாட்டைச் சேர்ந்தவன் வேலு என்று பெயர். வாட்டசாட்டமான இளைஞன் வேறு.

கல்யாணி நிமிர்ந்து கூட அவனைப் பார்த்தறியாள். அவனின் வாடை படுமுன்பே ஒதுங்கிப் போய் விடுவாள். அப்பா மகிழ்ச்சி பொங்கக் காரை விட்டு இறங்கி வருவது தெரிந்தது. கூடவே அவருக்குப் பின்னால் ஒரு கம்பீரமான இளைஞன் மிடுக்காக வந்து கொண்Bடிருந்தான். அவன் யாரென்று புரியாமல் அவள் சட்டென இருக்கையை விட்டெழும்பிப் பின் வாங்கிப் போனாள்.

அவசரமாக உள்ளே படியேறி வந்த அப்பா, அவள் கதவுத் திரை மறைவில் மறைந்து நிற்பதை பார்த்து விட்டுக் குரலை உயர்த்தி அவளை அழைத்தார்.

“வெளியே வா பிள்ளை. உன்னைப் பார்க்கவல்லே இவர் வந்திருக்கிறார்.”

இப்படி எவ்வளவு தடவைகள் அவளை முகம் பார்க்க ஆட்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு முறையும் இவர்களின் ஆண்வாடை பட்டு அவள் கருகிப் போகிறாள். இனியும் வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!. வேண்டவே வேண்டாம்
அவள் வந்த கோபத்தில் கால்கள் நிலை கொள்ளாமல் காளி போல ஆவேசம் கொண்டு வெளிப்பட்டாள் .உணர்ச்சி தாங்காமல் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் இந்த உண்மை நிலை அறியாதவனாய் சோபாவில் அமர்ந்து கொண்டே அவன் தன் தீர்க்கமான விழிகளை உயர்த்தி அவளை ஆவலோடு கூர்ந்து பார்க்கிற
போது, அவள் தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டுக் குரலை உயர்த்திக் கொண்டு கேட்டாள்.

“என்னை வேடிக்கை பார்க்கத்தானே இஞ்சை வந்திருக்கிறியள்?”

“என்ன சொல்லுறியள்?”

“நான் ஒன்றும் மற்றப் பெண்களைப் போலக் கல்யாணத்துக்கு ஆசைப்பட்டுத் தவம் கிடக்கேலை. ஆண்களைக் கண்டாலே எனக்கு மனம் கொதிக்குது. இதை அப்பா உங்களுக்குச் சொல்லவேயில்லையா?”

இல்லை என்பது போல் அவன் தலை ஆட்டினான். அப்பாவே அதற்குப் பதில் சொல்வது போல் குறுக்கிட்டுப் பேசினார்.
“கல்யாணி! ஒரு பெரிய அதிர்ஷ்டம் உன்னை வீடு தேடி வந்திருக்கு .இவர் யார் தெரியுமே? லண்டனிலே பெரிய டாக்டர் இவர். புரோக்கரிடம் உன்ரை படம் பார்த்ததுமே பிடித்துப் போய்த்தான் உன்னை நேரிலே பார்க்க வேணுமென்று
வந்திருக்கிறார். என்ன சொல்கிறாய்? ஓமென்று சொனால் உன்ரை அதிர்ஷ்டம்”

“அப்பா! என்னை மன்னிச்சிடுங்கோ! இந்தக் கல்யாணத்திலேயே எனக்கு நம்பிக்கை
விட்டுப் போச்சு, முன் பின் அறிமுகமில்லாமல், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், ஓர் உணர்ச்சி வெறியிலே இதுக்கு நான் சம்மதித்தால் எனக்கு இதிலே
சந்தோஷம் வருமென்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கு? ஒரு வேளை இதிலே நான்
தோற்றுப் போனால இது என் விதி பாவக் கணக்கு என்று சொல்லி மனம் ஆறத்தான் என்னால் முடியுமா? சொல்லுங்கோவப்பா?”

இதைக் கேட்டு விட்டுப் பொங்கி வரும் அழுகையை அடக்க முடியாமல் அவள் தேம்பினாள். அவன் கை தேர்ந்த டாக்டரென்பதால் அவளின் அழுகையும்,அதற்கான பின்னணிக் காரணங்களும் நன்றாகவே புரிந்து கொண்டு விட்ட நிலையிலும், அதற்கப்பால் அவளை மையமாக வைத்து மயக்கம் கொண்டு தடுமாறும் ஆசைச் சுழலில் அகப்பட்டவனாய் இப்போது அவளோடு வாழ்ந்து அனுபவிக்கப் போகும் அந்தச் சுகானுபவமே அவனுக்குப் பெரிதாகப் பட்டது. அதனால் அவளை வழிக்குக் கொண்டு வருவதிலேயே அவன் குறியாக இருந்தான். முகத்தில் புன்னகை மாறாமல் மெளனம் கலைத்து அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே,அவன் பேசத் தொடங்கிய போது, அவள் முகம் திருப்பி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். கனவில் கேட்பது போல் அவனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“உங்கடை பிரச்சனை எனக்குப் புரியுது. இது உங்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஒரு சூழ்நிலைக் குற்றம் இதுக்காக எல்லா ஆண்களையும் இப்படி நீங்கள் வெறுக்கிறது சரியா? தான் மணம் முடித்துக் கொண்ட பெண்ணைக் கண்ணின் இமை போலக் காப்பாற்றி வாழ வைக்கிற ஆண்களை நீங்கள் மறந்து விட்டீர்களே!. .எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு நான் லண்டனிலேயிருந்து வந்தது இப்படியொரு

பெண்ணைத் தேடித்தான். நான் விரும்பி எதிர்பார்க்கிற எல்லா நிறைவுகளுமே உங்களிடம் இருக்கு. என்னை நம்புங்கோ! நான் உங்களை எள்ளவும் அன்பு குறையாமல் உயிர் போல நினைத்துக் காப்பாற்றுவேன் இது சத்தியம்”

அதைக் கேட்டு விட்டு அவள் வரட்சியாகச் சிரித்துக் கொண்டே குரல் கம்மிக் கூறினாள்.

“நீங்கள் எவ்வளவு சொன்னாலும் எனக்கு எனக்கு நம்பிக்கை வாறது கஷ்டமாகவே இருக்கு.. இப்ப என்ரை அழகிலே மயங்கி,நீங்கள் நிறையவே பேசலாம். ஆனால் வாழ்க்கையென்பது வெறும் வார்த்தைகளோடு மட்டும் முடியிறேலை. ஆழமாய் ஒருவரை ஒருவர் நேசித்து உணர்வுபூர்வமாய் வாழாமல் போனால் வாழ்வென்பதே வெறும் பேச்சுக்குத்தான். இப்படியொரு வாழ்க்கைக்கு முகம் கொடுத்து , வீணாக நான் ஏன் என்னை இழக்க வேணும்? இழப்பற்ற இந்தச் சுகானுபவமே எனக்குப் போதும் .என்னை விட்டிடுங்கோ”

அதை உறுதிபடச் சொல்லி விட்டு, அவள் இன்னும் தனிமையிலேயே நின்றிருந்தாள் மிக விஸ்தாரமாக, அவளைச் சுற்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அவளது சூறையாடப்படாத . தனிமையின் இருப்புக்கு எட்டாத வெகு தொலைவில் தான் நின்று கொண்டிருப்பதாய் இப்போது அவன் உணர்ந்தான். இந்நிலையில் அவளை நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு மனம் கூசியது. .மார்பு தட்டிக் கொண்டு அவள் முன்னால் வர நேர்ந்த தன் விலை மதிப்பற்ற பெருமையே அவளின் கறை பட்டுப் போக விரும்பாத இந்த உயிர் எழுச்சிக்கு முன்னால், பங்கமுற்றுச் செல்லாக்காசாகி விட்டதாய் அவன் மனம் கூசினான். ஆண் சார்பான எந்த நியாயமுமே, அவளிடம் எடுபட வாய்ப்பில்லை , என்ற அந்தக் கசப்பான உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவனுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது, எங்கோ சில ஆண்கள் விடும் முரட்டுப் போக்கான அறிவு தெளிவற்ற, இந்தத் தவறுகளினால் ஒட்டு மொத்த ஆண் சமூகமுமே வெட்கித் தலை குனிய வேண்டியது தான் என்று அவன் மிகவும் மன வேதனையோடு நினைவு கூர்ந்தான்.

நீர்க்குமிழியென நிலையற்று மறைந்து போகும் வாழ்க்கையில் மனதை வருத்தாத எந்தக் கடும் போக்குமின்றி அன்பினால் மேலோனாய், எல்லோருக்கும் நல்லவனாய்
வாழ்ந்தாலே போதுமென்று அவனுக்குப் பட்டது அன்பற்ற ஒரு வாழ்க்கைச் சூறாவளிக்குள் அகப்பட்டு உருக்குலைந்து அழிந்து போன பெண் அபலைகளின்

கண்ணீர்ச் சுவடு கண்டு, நெருப்புக் குளிக்கும் அவளை இனம் கண்டு கொண்டு விட்ட வேதனை மாறாமல் , அவன் பொய்யாகச் சிரித்தபடியே அவளிடமிருந்து விடை பெற்றுப் போக எழுந்தான்.

“பரவாயில்லை! நான் போயிட்டு வாறன்!“ அவன் குரல் காற்றில் அலை மோதி அடங்கிப் போனது. பெறுமதி மிக்க அவனின் வருகையையே பொய்யாக்கி விட்ட பெருமிதம் மாறாத உயிர்க் களை மின்ன அவள் இன்னும் அங்கேயே தரித்து நின்றிருந்தாள். அந்த உயிரின் தடங்களே பிடிபடாத, வெகு தொலைவில் தனது இனிய வாழ்வின் இருப்புகளுக்கே பொருள் தேடி அலையும், அந்த நிழலிலேயே சிறுத்து ஒடுங்கும், ஒரு வெறும் மனிதனாய் அப்பாவின் முகம் தெரிந்தது. தான் நினைத்தது கை கூடாமல் அவளிடம் ஏமாந்து போன கோபம் கொந்தளிக்க அவர் நிலை தடுமாறி ஆவேசம் கொண்டு நிற்பதாய் அவள் உணர்ந்தாள்.

“ அவரின் இத்தகைய கோப தாபங்களின் உச்ச விளைவாகவே , அவர் காலடியில் கருகி அழிந்து போனாளே அம்மா! அவளின் கறைப் பட்ட கதைக்கு ஒரு சான்று பரிகாரமே என்ரை இந்த முடிவு! .அப்பாவென்ன, கடவுளே வந்தாலும் இந்த முடிவு மாறாது என்று அவள் சபதமிடுவது போலத் தனக்குள்ளேயே கூறிக் கொண்டாள்.

உண்மையில் அப்பா குறையற்ற அன்பினால் அம்மாவை உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டு அவளைச் சந்தோஷப்படுத்தி நல்லபடி வாழ வைத்திருப்பாரேயானால் , நான் ஏன் இப்படியொரு முடிவை எடுக்கப் போறன்?” சராசரி பெண்ண்களைப் போலக் கனவிலேயே கல்யாண மேடை விரித்துக் கம்பீரமான ஓர் ஆண் தேவ புருஷன் எனக்கு மாலையிட்டு மகிழ்வதாக நானும் கற்பனைத் தேரேறி மகிழ்ந்திருப்பேனே!! பதிலாக ஆண் முகம் கண்டாலே நான் கரை ஒதுங்கி போறேனே! எனக்கெதற்குக் கல்யாணம், இந்தக் காட்சி நாடகமெல்லாம்?”

பொருளே குறியாக வாழ்கின்ற அப்பாவுக்கு,க் கேவலம் அந்த லண்டன் மாப்பிள்ளையின் இழப்புத்தான் இன்னும் பெரிதாக மனதை உறுத்தியது, அவளை நேர் கொண்டு பார்க்கவே முடியாமல், உள் கொதித்துச் சுவாலை விட்டெரின்ற கோப நெருப்பில் தானே சமைந்து ஜடமாகி விட்டிருப்பது போல் உணர்ச்சி மரத்த வெறும் நிழல் தோற்றமாய் அவர் தோன்றினார். அதை ஒரு வேடிக்கை போல மிகவும் வெகு உயரத்தில் நின்று பார்க்கிற மாதிரி, அவள் உணர்ந்தாள். அந்த உணர்வில் மனம் குளிர்ந்து போன சிலிர்ப்பில், தன் ஆளுமையின் பெருமை மாறாத அந்த விஸ்வரூப தரிசனமே கண்டு அவள் மிகவும் மனம் குளிர்ந்து போயிருந்தாள்.

– மல்லிகை மார்ச் 2007

Print Friendly, PDF & Email

2 thoughts on “சிறகொடிந்த தீயினிலே

 1. ஆனந்தி,

  மிகவும் அற்புதமான கதை. மிக நல்ல நடையில் உயர்வான தரமான வார்த்தைப் பிரயோகங்களில் ஒரு பெண்ணின் மன உணர்ச்சிகளை மிகவும் தத்ருபமாக வெளிப் படுத்தி இருக்கிறீர்கள். மனது கனத்து விட்டது.

  ரவி.

  1. ரவிக்கு,

   எனது சிறகொடிந்த தீயினிலே கதை பற்றி புகழ்ந்து எழுதிய உங்களின் உயர்வான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நன்றி

   ஆனந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *