சிண்டரெல்லா கனவுகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 17,113 
 
 

டைனிங் அறையிலிருந்து ஏகப்பட்ட சத்தம். தட்டு ‘ணங்’கென்று தலையைத் தொடும் ஒலி. அதைத் தொடர்ந்து பாமாவின் உச்சஸ்தாயி கத்தல்.

மாடியில் ஏதோ வேலையாய் இருந்த சீதா வேகமாய் கீழே இறங்கி வந்தாள்.

பாமா பத்ரகாளி போல் கத்த, அவள் எதிரில் ஒடுங்கிய பூனைக்குட்டியாய் நின்றிருந்தாள் மைதிலி.

சீதாவைப் பார்த்தவுடன் பாமாவின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

”என்ன ஆச்சு இங்கே? என்னடி பண்ணே…..?” சீதா அதட்டிக் கேட்க மைதிலி மவுனமாகவே இருந்தாள்.

”அவ பதில் பேசமாட்டா! எனக்கு காலேஜுக்கு சீக்கிரம் போகணும்ன நேத்து ராத்திரியே சொல்லி வச்சிருந்தேன். இந்த மகாராணி எழுந்து சமையல் பண்ணறதுக்குள்ளே காலலேஜ் முடிஞ்சிடும். எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தாம்மா! நான் போறேன். நான் பட்டினியா போனா யார் கேர் பண்றாங்க?”

பாமா முசுமுசுவென்று நீலியாய் கண்ணீர் வடிக்க, சீதாவின் கோபம் சுர்ரென்று ஏறிவிட்டது.

”எழுந்து சீக்கிரம் சமைக்கிறதுக்கென்னடி சனியனே? ஏன் குழந்தை காலேஜுக்கு போறாள்னு பொறாமையா? உன்னை வச்சு மாரடிக்கணும்னு என் தலையிலே எழுதி வச்சிருக்கு!” சுட்டெரித்து விடுவதைப் போல் பார்த்தவளின் பேச்சைத் தவிர்க்க எண்ணி மைதிலி திரும்பியது இன்னும் தவறாகப் போனது.

”அநாதை பொண்ணாச்சேன்னு வீட்டிலே வச்சு சோறு போட்டாலும் என்ன? கொஞ்சமாவது நன்றி இருக்கா? எங்கே சோத்தைத் தின்னுட்டு இப்படி மதமதன்னு வளர்ந்து நிக்கத்தான் தெரியும்…” சீதாவின் குரல் இன்னும் மேலே எழும்ப, பாமா அவள் பின்னாடி ஒட்டி நிற்க, மைதிலிக்கு கண்களில் குளம் கட்டியது.

”சரி சரி! இப்படி அழுது மாயாஜாலம் பண்ணாதே. உள்ளே போய் வேலையை பாரு.” என்று சீதா சொன்னவுடன் மைதிலி சமையல் அறையில் தஞ்சம் புகுந்தாள்.

சீதாவுக்கு எதில் ஆரம்பித்தாலும், கடைசியில் ‘அநாதைப் பொண்ணு’ என்ற குற்றச்சாட்டில் தான் வந்து நிற்க முடியும். மைதிலியால் அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது மட்டும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

ஐந்து வயதில், ஆசையாய் ஒரு பெண்ணை அருமையாய் வளர்க்க விரும்பிய பெற்றோர், ஒரே சமயத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போனது. மைதிலியின் தவறா? பணக்கார தூரத்து உறவாய் சீதாவின் கணவன் ராகவன் பரிதாபப்பட்டு அந்த கன்னங்கரேலென்ற ஐந்து வயது கருவிழிகளில் சோகத்தை உணர்ந்து தன் வீட்டிற்கே அழைத்து வந்தது அவள் விதியா?

ராகவன் உயிரோடு இருந்த வரையிலும் சீதாவும், பாமாவும் தங்கள் குரோதத்தை வெளியே காட்ட முடியவில்லை. ஆனால், அவனும் ஒருநாள் ‘ஹார்ட் அட்டாக்’ என்று மறைந்தபோது, மைதிலி பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேளைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

எத்தனை வேலைகள்? இத்தனை பணம் இருந்தாலும் வேலைக்காரி, சமையற்காரி, தோட்டக்காரன் யாரும் கிடையாது. மைதிலி அழுகையை அடக்கிக் கொண்டு சமையல் செய்து இறக்கி, சமையலறையைத் துப்புரவாக சுத்தம் செய்தாள். பாத்திரங்களைக் கழுவி வைத்தாள். துணிகளைத் துவைத்து, உலர்த்தி, தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்ற வந்தாள்.

பாமாவை கல்லூரியில் விட்டுவிட்டு சீதா லேடீஸ் கிளப்புக்கு போனதில் மைதிலிக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. காலையில் எழுந்ததிலிருந்து பம்பரமாக சுழன்றதில் கூட உடற்களைப்புத் தெரியவில்லை. ஆனால் பாமாவும், சீதாவும் சொல்லும் வார்த்தைகள்? மறுபடி குபுக்கென்று கண்ணீர் வர, தோட்டத்தில் வழக்கமாய் உட்காரும் இடத்திற்கு வந்தாள்.

பாமாவுக்கு என்னைக் கண்டால் ஏன் பிடிக்கவில்லை? மைதில் பலமுறை தன்னையே கேட்டுக் கொள்ளும் கேள்வி தான். ஆனால், அவர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து பார்ப்பவர்களுக்கு உடனே காரணம் தெரிந்து விடும்.

வீட்டு வேலைகள் செய்வதே பெரிய உடற்பயிற்சியாய், மெலிந்த, சரியான வளைவுகளுடன் மைதிலி. மைதிலியின் அப்பா நல்ல சிவப்பு. அம்மாவிற்கு ஏகமாய் முடி. மூக்கும் முழியுமாய் இருப்பாள். தங்கள் ஒரே சொத்து என்று அழகை மட்டும் அவளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு மறைந்து போனார்கள். அவள் சமைக்கும் சாப்பாட்டை மூன்று வேளையும் குறை கூறிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, காரில் எப்போதும் சவாரி செய்வது, வீட்டில் இருக்கும் நேரம் படுக்கையில் புத்தகம் படித்தோ, ‘டிவி’ பார்த்தோ துருப்பை அசைக்காத பாமா ஏகமாய் பெருத்துதான் போய்விட்டாள். முக லட்சணத்துக்கு சீதாவை வேறு கொண்டிருந்தாள்.

சீதாவிற்கும் மைதிலியைப் பார்க்கும் போது ‘இவள் மட்டும் இவ்வளவு அழகாக இருக்கிறாளே’ என்று கோபம் வரும். பாமா மட்டும் தன் கல்யாண வயதில் கரிக் கட்டையாய், குண்டாய் இருக்க வேண்டும். அத்தோடு செல்லமாய் வளர்த்ததில் நிறைய ஆணவமும், ஆண்தனமும் வேறு வந்து விட்டன. அதனாலேயே சீதாவிற்கு மைதிலியின் கால்பட்டால் குற்றம் கைப்பட்டால் குற்றம்.

சூரியன் நல்ல உச்சிக்கு வந்ததில் மைதிலிக்கு ஒரேயடியாய் வியர்த்தது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது வேறு மயக்கமாய் வந்தது. எனக்கு இங்கிருந்து என்று விடுதலை? இப்படி மூன்றாம் வகுப்பு படிப்போடு அடுப்பங்கரையில் உழலும் நாட்கள் தான் என் வாழ்க்கையா? எனக்கு என்று எந்த ஆண்மகன் வந்து திருமணம் செய்து கொண்டு என்னை இந்த நகரத்திலிருந்து மீட்கப் போகிறான்?

திருமணத்தைப் பற்றி நினைத்த போது, மைதிலிக்கு சிரிப்பு தான் வந்தது. கல்யாணமா – எனக்கா? நடக்குமா?

நான்கு வயதில் அப்பா மடியில் படுத்து ‘சிண்டரெல்லா’ கதை கேட்ட ஞாபகம் இருக்கிறது. தே லிவ் டு ஹாப்பி எவர் ஆப்டர் என்றுதான் அப்பா எப்போதும் கதையை முடிப்பார். என் வாழ்க்கையிலும் கொடுமைக்கார சித்தியிடமிருந்து என்னை மீட்டு, என்னை மணக்கப் போகும் ராஜகுமாரன் எங்கே?

வாசல் கேட்டருகில் சைக்கிள் மணி அடிப்பதைக் கேட்டு மைதிலி சட்டென்று கனவு கலைந்தாள்.

”எத்தனை நேரமா மணி அடிக்கிறேன். தூங்கிக்கிட்டிருந்தியா?” என்று அதட்டிய தபால்காரரிடமிருந்து தபால்களைச் சேகரித்துக் கொண்டாள்.

அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டினுள் வரும் போது மேலே திருமண அழைப்பிதழ் அவள் கண்களைக் கவர்ந்தது. அழைப்பிதழ் மேலே ‘தியாகு வித் சரசா’ என்று போட்டிருந்தது. விள்ளை வீட்டார் அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது.

சரசா, பாமாவின் கல்லூரி தோழி. அவள் நேரயே வந்து கூப்பிட்டு, மைதிலியும் நிச்சயம் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தாள். சீதாவுக்கு அவள் வருவதில் இஷ்டமில்லை தான். ஆனாலும் சரசா அவ்வளவு வற்புறுத்தியதால் சாயங்காலம் ரிசப்ஷனுக்கு மட்டும் வந்தால் போதும்” என்று உத்தரவு கொடுத்திருந்தாள்.

அன்று தான் சரசாவின் திருமணம் மைதிலிக்குக் காலையிலிருந்தே இனம் தெரியாத குதூகலம் இருந்தது. காலையில் முகூர்த்தத்திற்கு சீதாவும், பாமாவும் போனவுடன் தன்னுடைய ஒரே நல்ல பிரிண்ட்டம் சில்க் புடவையை அயர்ன் பண்ணி வைத்தாள்.

மாலையில் எல்லா வேலைகளையும் அவசரமாக முடித்துக் கொண்டு சீதாவும், பாமாவும் ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று அதட்ட அவசரமாய் புடவையை மாற்றிக் கொண்டு ஓடி வந்து காரில் ஏறியபோது சீதாவின் முகத்தில் கடுகடுப்பு நிறைந்திருந்தது.

பக்கத்தில் பாமா! காஞ்சிபுரத்தில் ஸ்பெசலாய் ஆர்டர் பண்ணி வாங்கிய பட்டுப்புடவை, தானே டிசைன் பண்ணிய வைர அட்டிகை, இரண்டு மணி நேரம் பியூட்டி பார்லரில் செலவழித்து அலங்கரிக்கப்பட்ட முகம்! ஆனால் ஒரு பழைய பிரிண்டம் சில்க்கில், துடைத்து விட்டாற் போன்ற முகத்தில் ஒரு பொட்டுடன் ஒற்றைப் பின்னலில் – இந்த பெண்ணின் அழகுக்கு முன்னால் பாமா இன்னும் அவலட்சணமாக அல்லவா தெரிகிறாள்!

திருமண கூடத்தின் வாசலில் சரசாவும், தியாகுவும் நின்றிருந்து அவர்களை வரவேற்றார்கள். சரசா மைதிலிக்கு சிநேக பாவமாய் ஒரு புன்முறுவலில் தன் வரவேற்பைத் தெரிவித்துக் கொண்டு, பாமா, சீதாவின் பக்கம் திரும்பியபோது தனக்கு அங்கு வேலை இல்லை என்பதை மைதிலி புரிந்து கொண்டு நகர்ந்தாள்.

மூலையில் ஒரு மேடையில் அவசரமாய் முன்னுக்கு வந்துவிட்ட இளம் பாடகன். அவன் பாட்டைக் கேட்பதைவிட அவனைப் பார்ப்பதற்காக மேடை அருகே ஏகமாய் இளம் பெண்கள் கூட்டம். மைதிலி ஒரு மூலையாய் பார்த்து தானும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

எல்லாருக்கும் பேசுவதற்கு யராவதுகூட இருக்கும்போது, தான் மட்டும் தனியாய் அமர்ந்திருப்பது குறித்து அவளுக்கு வெட்கமாய் இருந்தது. பாட்டை ரசிப்பதில் கவனம் செலுத்தினாள். பாடகன், ”காக்கை சிறகினிலே நந்தலாலா” என்று கரைந்து கொண்டிருந்தான்.

”மிஸ்! யூ கேர் பார் பாண்டா?” என்று குரல் கேட்டு மைதிலி பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளை அழைத்தவன் அந்த முகத்தின் அதீத அழகை அவ்வளவு அருகாமையில் பார்த்து கண்கொட்ட ஒரு கணம் மறந்து மயங்கி நின்றான்.

அவன் ஆங்கிலத்தில் கேட்டது சட்டென்று விளங்காமல் அவள் திரும்ப, அவன் அவள் கையில்கொடுக்க வைத்திருந்த பாண்டா பாட்டில் தவறி அவள் மேலேயே விழுந்த அவள் புடவையை நனைத்தது.

மைதிலிக்கு தன்னுடைய ஒரே நல்ல புடவையை வீணானதே என்ற துக்கத்தில் லேசாய் கண்ணீர் பனித்தது. அவன் அந்தக் கண்ணீரை தவறாகப் புரிந்து கொண்டு ”ஐ ஆம் டெரிபிளி சாரி,” என்று மறுபடி மறுபடி சொன்னான்.

மைதிலி இப்போது நன்றாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். ஏறக்குறைய ஆறடி உயரத்தில் – விலை உயர்ந்த பேண்ட் – ஷர்ட்டில் அடத்தியான மீசையில் லேசாய் பச்சை நிறம் கலந்த கண்களில் அவன் நூறு சதவீதம் அழகிய ஆண் மகன். அவனது உடை, பாவனைகளிலிருந்து நிச்சயம் பணம் படைத்தவன் என்பது புரிந்தது.

அவன் தன்னையே உற்று நோக்குவதைப் பார்த்து தானாகவே, ”நான் மாப்பிள்ளை தியாகுவின் கசின். ஐ ஆம் பாலகுமார்,” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

”நீங்க உள்ளே நுழையும் போதே பார்த்தேன். உங்க மதரும், சிஸ்டரும் அதோ வராங்களே அவங்க தானே?” என்ற போது மைதிலி பயந்தாள். சீதா தான் இவனோடு பேசுவதைப் பார்த்தால் திட்டப் போகிறாளே என்று அவசரமாய், ”நான் போய் இந்த சாரியை வாஷ் பண்ணிக்கனும்” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

பாலகுமார் அவசரமாய் செல்லும் மைதிலியை பார்த்தான்.

மைதிலிக்கு அன்றிரவெல்லாம் தூக்கம் இல்லை. பாலகுமார்… பெயரும் அவனைப் போலவே அழகாய் இருக்கிறது. எத்தனை உயரம்? அவள் முகத்தை முதன் முதலாகப் பார்த்தபோது அப்படியே ஆச்சரியத்தில் தயங்கி உறைந்து போனதை நினைத்த போது அவளையும் அறியாமல் புன்முறுவல் வந்தது.
”நான் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது போல, நீயும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா” பாலகுமாரா! என்னை விடுவித்து மணக்கப்போகும் ராஜகுமாரன் நீதானா? மைதிலி ஒரு வழியாய் தூங்கியபோதும், கனவுகளில் பாலகுமார் பவனி வந்தான்.

ஒரு வாரம் ஓடியது.

சீதா பரபரப்பாய் இருந்தாள். பாமா மாடி அறையில் அலங்காரம் பண்ணிக் கொள்ள இரண்டு மணிக்கே போய்விட்டாள். நிமிடத்திற்கு ஒருமுறை மைதிலியைக் கூப்பிட்டு, ‘இந்த புடவையை அயர்ன் பண்ணு’, ‘இந்த நெக்லசை மாட்டி விடு’ என்று அதட்டிக் கொண்டு இருந்தாள்.

சீதாவுக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இந்த பரபரப்புக்குக் காரணம் – சரசாவின் கணவன் தியாகுவின் கசின் டாக்டர் பாலகுமார், சீதாவின் பெண்ணை திருமணத்தில் பார்த்தானாம். தன் அம்மாவையும் கூப்பிட்டுக் கொண்டு இன்று மாலை வருகிறான்.

வீட்டைச் சுத்தம் பண்ணி, வருபவர்களுக்கு பஜ்ஜி, சொஜ்ஜி பண்ணி ஓராயிரம் வேலைகள் மைதிலியின் தலையில் விழுந்தாலும், சீதாவுக்கும், பாமாவுக்கும் தெரியாத ரகசியத்தில் அவள் மனம் சந்தோஷ ராகம் பாடியது.

பாலகுமார்! என்னுடைய பிரின்ஸ். அவன் திருமணம் செய்து கொள்ள வருவது என்னை! பாமாவை என்று நினைத்த அவர்கள் அமர்க்களப்படுத்துகிறார்கள் மைதிலிக்குச் சிரிப்பு வந்தது.

மாலை வந்த போது பாலகுமாரும், அவனுடைய அம்மா காந்தாவும் வந்தார்கள்.

மைதிலி சமையலறையிலிருந்து மறைவான இடத்திலிருந்து நடப்பதைப் பார்த்தாள்.

காந்தா, ”உங்க பொண்ணை வரச் சொல்லுங்க” என்ற போது பாமா அதீத அலங்காரத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள். பாலகுமார் அவன் முகத்தில் தெரிந்த லேசான அதிர்ச்சியை மைதிலி இங்கிருந்தே ரசித்தாள்.

அவன் சீதாவிம் ஏதோ கேட்பது தெரிந்தது. பாமாவின் முகம் லேசாய் சுருங்குவது தெரிந்தது. ”இந்த பெண் நான் பார்த்தவள் இல்லை. வேறு ஒருத்தி. அவள் எங்கே? அவளைத்தான் மணந்து கொள்வேன்” என்கிறானா?

மைதிலி மெல்ல நகர்ந்த அவர்கள் பேசுவது காதில் விழும் இடத்தில் வந்து நின்று கொண்டாள். சீதாவின் குரல் நன்றாய் கேட்டது.

”ஓ…. அந்த பெண்ணா? அது எங்க வீட்டு சமையல்கார பெண். ரொம்ப தூரத்து உறவு. அநாதை பொண்ணு. பாமாவோட அப்பா பெரிய மனசு பண்ணி அழைச்சிட்டு வந்தார். அவரும் போனப்புறம் அந்த பொண்ணுக்கு வேற போக்கிடம் இல்லைன்னு இங்கேயே வச்சிக்கிட்டிருக்கேன். பாமாவுக்கு கல்யாணம் ஆனப்புறம் அவளையும் தகுந்த இடமா பார்த்த பண்ணி கொடுக்கணும்” ரொம்ப நல்லவள் மாதிரி சீதா சொல்ல, பாலகுமார் தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

அவள் விரும்பிய பெண் மைதிலி என்று தெரிந்தவுடன், சீதா இன்னும் அழுத்தம் திருத்தமாக மைதிலி அநாதை, ஏழை என்று சொன்னதில், காந்தா யோசிக்க ஆரம்பித்தாள். சீதா கிடைத்த சிக்க நூலிழையும் பிடித்துக் கொண்டாள்.

”ஐ ஆம் சாரி! நீங்க பொண்ணு கேட்க வந்தது பாமாவைன்னு நினைச்சுக்கிட்டேன். அதனால் என்ன? பாமா என் பொண்ணு. காலேஜுல படிக்கிறா. என் சொத்து சுகம் எல்லாம் அவளுக்குத் தான். நல்ல பையனா இருந்தா சொல்லுங்க” என்று சொன்ன போது காந்தா ”என் பிள்ளையோட ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசணும்” என்று தோட்டப்பக்கம் போனாள். பாலகுமாரும் அவளைப் பின் தொடர்ந்தாள்.

அவர்கள் திருமபி வந்தபோது மைதிலியின் மனம் படபடத்தது. சீதா தன்னை அழைத்துச் செல்ல எந்த நிமிடமும் உள்ளே வரலாம். மைதிலி தன் கூந்தலை லேசாய் ஒதுக்கிக் கொண்டு புடவையை சரிசெய்து கொண்டாள் நடப்பதைக் கவனித்தாள்.

பாலகுமார் ஒன்றும் பேசாமல் இருந்தான். காந்தா தான் பேசினாள்.

”மிஸஸ் ராகவன்! குமாரும் நானும் நல்லா யோசனை பண்ணி சொல்றோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா உங்க பொண்ணு பாமாவையே முடிச்சிடலாம், எங்க அந்தஸ்துக்கு அந்த சமையல்கார பொண் சரிபடாது…..”

அவள் மேலே சொன்ன எதுவும் மைதிலி காதில் விழவில்லை.

அவசரமாய் தோட்டத்திற்கு ஓடி வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். முகத்தை முழங்காலில் பதித்துக் கொண்ட போது, வெளிவந்த விம்மல்களை அடக்குவது கடினமாய் இருந்தது.

என் அழகைப் பார்த்து மயங்கி என்னைத் திருமணம் செய்து கொள்ள வந்தவன், எப்படி தன் மனதை உடனே மாற்றிக் கொண்டுவிட்டான்? சிண்டரெல்லா கதையின் ராஜ்குமாரன் அவள் ஏ¨¡ என்று தெரிந்ததும்தானே அவளை மணந்து கொண்டான்? என் கதை எப்படி மாறிப்போனது?

அசட்டுப் பெண்ணே! அது அந்நாளைய கதை. இன்றைய சிண்ட்ரெல்லா கதையில் ராஜகுமாரனின் அம்மா அந்தஸ்து பார்ப்பாள். ராஜகுமாரன் தன்னுடைய காக்டெயில் பார்ட்டிக்கு உதட்டு நுனியில் ஆங்கிலம் பேசப் பழக வேண்டும் என்று உன்னிடம் எதிர்பார்ப்பான். உனக்கு அந்தஸ்து இருக்கிறதா? ஆங்கிலம் தெரியுமா?

மைதிலி விக்கி அழுதாள். யதார்த்த உண்மைகள் புரிந்த போது, அவள் சிண்ட்ரெல்லா கனவுகள் இறந்து போயின.

– செப்டம்பர் 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *