சாவு முதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 2,890 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அக்பர் ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வரும்போதே லேசான பயத்துடன்தான் வந்தான். இன்று வீட்டின் வெப்ப நிலை எப்படி இருக்குமோ? வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த அம்மாவின் இயல்பான முகம் ஆறுதலைத் தந்தது. நல்ல வேளை.

“சமீரா வீட்டில் இல்லை. அம்மாவிடம் கேட்டால் அலுப்பாகப் பதில் சொல்வாள். லுங்கிக்கு மாறி ஹாலில் உட்கார்ந்தான்.

சிச்சன், சிட்டவுட், ரீடிங் ரூம் என்று மல்டி பர்பஸ் ஹால். மற்றும் படுக்கை அறையாகவும், ஸ்டோர் ரூமாகவும் இருக்கும் அறை , ஒண்டுக் குடித்தனம்.

காஃபி சாப்பிட்டால் கொஞ்சம் புத்துணர்ச்சி வரும். சமீரா எங்கே போனாள் என்று தெரியவில்லை. அம்மாவிடம் சொல்லிவிட்டுதான் போயிருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது. மனசு எப்படியோ அப்படி .

சமீரா, அம்மாவை மதிப்பதில்லை என்று தெளிவாகத் தெரிகின்றது. மனசுக்குள் புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சமீராவிடம் இதைப்பற்றிக் கேட்க முடியாது. அம்மாவைப் பற்றிப் பேச்சை எடுத்தாலே அவளுக்குப் பொங்க ஆரம்பித்து விடுகிறது. எப்படியும் அம்மாவுக்காகப் பரிந்து பேசுவதில்தான் இது முடியும் என்று அவளுக்குத் தெரியும்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை… என்று வெகு அலட்சியமாக அவள் சொல்லி விடுவாள். சொல்லும் தோரணையிலேயே அது அப்படித்தான், அதனால் என்ன என்று கேட்பது போல இருக்கும். ஊரில் மாமியாரை மருமகள்கள் படுத்தும் பாட்டைப் பட்டியலிட்டு, தான் அவர்களைவிட மேல் என்று வாதாட ஆரம்பித்துவிடுவாள்; இது முடிய நீண்ட நேரம் ஆகும்.

சமீராவை மடக்கிப் பேச எனக்கு வாய் போதாது. எத்தனை நேரம் வாய்ச்சண்டை போட முடியும்? பின் வாங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

அம்மா, வீட்டு சாகுலின் அம்மாவை இழுத்து உட்காரவைத்துப் பேச ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவு நேரம்தான் அவள் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்?

அவர்கள் பேசுவதை அக்பர் போன்ற இளைஞர்கள் கேட்க முடியாது. பேச்சு எங்கே சுற்றி வந்தாலும் கடைசியில் மருமகள்கள் அனைவரும் மனிதாபிமானமே இல்லாத ஜென்மங்கள் என்ற முடிவை, இந்த முன்னால் மருமகள்கள் நிலை நிறுத்திவிடுவார்கள். இவளுக்கு வாய்த்த மருமகள் சரியில்லைதான். ஆனால் எத்தனையோ நல்ல மருமகள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்ள விரும்பாத மாமியார்களுக்கு உதாரணம் சாகுலின் அம்மாதான்.

அவன் மனைவியும் இயல்பாகவே நல்ல சுபாவம் உள்ளவள்தான். அவளைக் கோபப்பட்ட வைப்பது அத்தனை சுலபமல்ல. அவளையே குற்றம் சொல்லும் சாகுலின் அம்மாவின் பேச்சு, குற்றம் சாட்டவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இருக்கும்; அக்பருக்கு அவளைப் பிடிக்காது.

டேப்ரிகார்டரை இயக்கினான். என்ன பாட்டு என்று கூடக் கவனிக்காமல், வாரப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம்பித்தான். காதில் பஞ்சுக்குப் பதிலாகப் பாட்டு…

நாலு பக்கங்களைப் புரட்டுவதற்குள் மின்சாரம் நின்றுவிட்டது. டிரான்சிஸ்டர் முதல் கிரைண்டர் வரை நின்று, நிசப்தம் நிலவியது. வினாடிகளில் சாகுலின் அம்மா பேச ஆரம்பித்துவிட்டாள்.

“இப்ப எனக்கு பிரச்சனை இல்லை. என் மருமக திருந்தி நல்லவிதமாக நடக்க ஆரம்பிச்சிட்டா. ஏதோ நேரம் கொணம் கெட்ட மாதிரி நடந்துகிறதுதான்’’என்று தன் பேச்சை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவளிடம் தெரிந்த உற்சாகம், அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இது என்ன அநியாயமாக இருக்கிறதே – மருமகளை மாமியார் புகழ்வதாவது? அதுவும், மருகளைப்பற்றித் தாறுமாறாகப் புகார் சொல்லி மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தவள், அப்படியே மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றால்? ஆவல் உந்த எட்டிப்பார்த்தான். இப்படியே இருந்தால் எத்தனை இதமாக இருக்கும்? மலர்ச்சிதானே முகத்துக்கு அழகு – மலர்ந்த மலரின் அழகு.

அவர்களோடு இவ்வளவு நேரம் இருந்த அம்மாவுக்கு அந்த உற்சாகம் தொற்றியிருக்கும் என்று ஆவல் பொங்க அவர்களைப் பார்த்தான். தொங்கிப் போயிருந்தது; ஏன்? ஏன். ஐ தள்ளி வைத்துவிட்டு, “சாகுலின் அம்மா சந்தோஷ மூட்லே இருக்குற மாதிரி தெரியுது… ஆச்சர்யமாக இருக்கே?” – என்றான்.

“அவங்க பொறந்த வீட்டுலே நடந்த பாகப்பிரிவினையிலே பத்து பவுன் கெடைச்சது. எல்லாம் அந்தக் காலத்து கெட்டி நகைங்க. அதுவும் வயசான காலத்துலே கிடைச்சா, சந்தோஷம் பொங்காதா? – என்றாள்.

என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே! வயது போனாலும் ஆபரண ஆசை விடுகின்றதா? அவளிடமும் நகைகள் இருந்தன. வியாபாரம் நொடித்துப்போன அதிர்ச்சியில் படுக்கையில் விழுந்த அப்பாவைக் காப்பாற்றும் முயற்சியில் நகைகளை ஒவ்வொன்றாக இழந்தாள்; அப்பா இறந்து போனார்.

பாவம் அம்மா! தனக்கென்று எதுவுமே இல்லாத வெறுமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் நொந்து போயிருக்கிறாள். என்ன செய்ய, சமீராவின் நெக்லஸ் மூன்றாவது வருடமாக பாங்கில் சிறைப்பட்டுக் கிடக்கும்போது அம்மாவுக்காக எதை வாங்கித்தர முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அக்பர், தன் அப்பாவின் மரணத்தின்போது கடன் வாங்க வழியில்லாமல் தவித்துப்போனான் (எல்லாம் முன்னேயே வாங்கியாகி விட்டது). அம்மாவின் கடைசி நகையான கை வளையலை அந்தச் சந்தர்ப்பத்தில் கேட்க மனமில்லாமல் அக்பர் தவித்தபோது, சமீராவே முன் வந்து மாமியாரின் கடைசி நகையைக் காப்பாற்றியதன் அடையாளம்தான் அவளின் நெக்லஸ். தாய் வீட்டு வரவு அது

“இந்த வயசுக்கப்புறம் நகைங்க போட்டுக்கறதுல எவ்வளவு சந்தோசப் படராங்கம்மா சின்ன பொண்ணாட்டாம்.” – என்றான். அம்மாவின் நகை ஆசையை மட்டுப்படுத்தவேண்டியது அவசியமாகிவிட்டது.

“அது நகை மேலே இருக்கிற ஆசை இல்லேப்பா. சாவு நல்ல விதமா அமையணுமேங்கிற பயம்!” – என்றாள்.

“சாவுக்கும் நகைக்கும் என்ன சம்பந்தம் ன்னு புரியல்லையே?” என்றான்.

“மரணப் படுக்கையிலே கெடக்கும்போது, மரணத்துக்கு பிறகும் தன்னால் மத்தவங்களுக்கு திடீர்சுமை ஏற்படக்கூடாது. அப்படி பொறுப்பெடுத்து செய்யுறவங்களுக்காக ஒடம்புல நகை இருக்கணும்னு பொம்பளைங்க ஆசைப்படுவாங்க. கடைசி காலத்துலே பராமரிச்சு எடுத்து போடுறவங்க, அந்த நகையை எடுத்துக்கலாம்; அதுதான் சாவு மொதல்”என்றாள் அம்மா.

பெற்ற தாயின் மரணம் கூட சுமையாகிவிடுமா என்ற கேள்வி அருவருப்பைத் தந்தது. தன் ஜனனத்துக்குக் காரணமான அப்பாவின் இறுதிச் செலவுக்கு எத்தனை அலைய வேண்டியதாகிவிட்டது. யார் யாரிடமோ கெஞ்சி வாங்கிய கடனை அடைப்பதற்குள் எத்தனை படவேண்டியிருந்தது? சுமை பாசத்தைப் பொருத்தது மட்டுமல்ல, கனத்தைப் பொருத்ததும் கூட.

செத்ததே செத்தார், படுக்கையில் கிடக்காமல் திடீரென்று செத்திருந்தால் நன்றாக இருத்திருக்குமே என்ற எண்ணம் வராமலா இருந்தது? சாவு வயது பார்த்தா வருகின்றது? ஒரு வேளை அம்மாவுக்கு முன்னால் நாம் போய்விட்டால்? சமீராவிடம் அம்மா இருக்க முடியுமா? பலமான சிந்தனையில் மூழ்கிப்போனான் அக்பர்.

அம்மாவுக்குச் சாவு முதல் வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டான். ஆனால் எப்படி ? சமீராவின் ஒரே நெக்லசை மீட்டும் முயற்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவும்போது புதிதாக நகை செய்ய முடியுமா? அதுவும் சமீராவின் மாமியாருக்கு!’ – என்று யோசித்தபடி ஒரு மாதத்தைக் கடத்திவிட்டான். எப்படியும் அம்மாவுக்குப்பிறகு அந்த நகை சமீராவுக்குத்தானே! அவளைச் சமாதானப்படுத்திவிடலாம்.

ஆனால் எப்படி?

ஒரு கல்ஃப் ரிடர்ன் நண்பனின் கேமராவை விற்றுத் தரும்படி நேர்ந்தது. அவன் இருநூறு ரூபாயைப் பையில் திணித்தான். அட இதுதான் வியாபாரமா என்று ஆச்சர்யப்பட்டான் அக்பர். மெல்லிய ஆர்வம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை . அதிக சிரமம் இன்றி இந்த வியாபாரம் விரிவடையும் என்று அக்பர் எதிர்பார்க்கவில்லை.

இந்த வியாபார வாய்ப்பு எத்தனையோ முறை அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாமல் அவனும் செய்திருக்கிறான். பணம் பண்ணிக்கொள்ள நினைத்ததில்லை. நட்புரீதியான உதவி மூலம் ஆதாயம் தேடிக்கொள்வதில் உறுத்தல் இருந்தது. இப்போது பணத்தின் தேவை உதவியை, வியாபாரமாக மாற்றிவிட்டது. முதல் இல்லாமலேயே சிறு சம்பாத்தியம் பண்ண முடிந்தது. ஆறு மாதத்தில் ரூபாய் 5000/ -உபரி வருமானமாகக் கிடைத்திருப்பது சமீராவுக்குத் தெரியாது.

அக்பர் தயாரித்து வைத்திருந்த செயல் திட்டத்தின்படி தாத்தாவைப் பார்க்கப் போனான்.

மகளின் நலனுக்காக அவர் உதவுவார் என்ற நம்பிக்கை. சிறு பொய் குற்றமாகிவிடாது என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தாத்தாவிற்கு வயது எண்பது போன் வாங்கி வந்த ஆப்பிளையும், ஆரஞ்சையும் அனுபவித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் குழந்தைகள் இருப்பதை அவர் கவனத்திற்குக் கொண்டுவரலாமா என்று இருந்தான். ஆனால் அக்பர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே அவர் சாப்பிடும் வேகத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது வயது ஆகிவிட்டால் மனசு இப்படி அலையுமா?!

அம்மாவுக்காக நகை செய்ய விரும்புவதில் அவருக்கு சந்தோஷம் பொங்கியது.

“நல்லது அக்பர்! நகை வாங்கிப் போட்டா அவ மனசுக்கு தெம்பா இருக்கும்” என்றபடி அவன் தோளில் தட்டினார்.

“நான் வாங்கித் தந்தா, சமீராவால பிரச்சனை வரும். அதனால் நீங்க வாங்கித் தந்ததா இருக்கட்டும், இந்த ஐயாயிரத்துலே வளையல் வாங்கிட்டு, அடுத்த மாதம் வீட்டுக்கு வாங்க,”அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் அத்தனை வேகமாக அந்தப் பணத்தை இவனிடம் திணிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் முகம் வெளிறிப் போயிருந்தது. இருவரும் கொஞ்ச நேரம் பேச்சற்று இருந்தனர்.

“ஏற்கனவே பொறந்த பொண்ணுங்களுக்கு நெறைய செஞ்சி புள்ளையை ஓட்டாண்டி ஆக்கிட்டேனுன்னு என் மருமகள் கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்குறா.- அந்த இடியையே வாங்கி கட்டிட்டு ஆகலை. அவ எதைச் சொன்னாலும் நம்ப மாட்டா. போற காலத்துலே எனக்கு ஏன் பிரச்சனை? அவளோட ஒத்துழைப்பு கண்டிப்பா தேவைப்படற இந்த நேரத்துல இது வேணாம்ப்பா!” – என்று தாத்தா சொன்னார்.

தோய்வுடன் வீட்டுக்கு வந்தான். வாசலில் சாகுலின் அம்மா மூக்கைச் சிந்தியபடி அம்மாவிடம் கொட்டிக் கொண்டிருக்கும் பழைய காட்சியை மீண்டும் பார்த்து ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டான். அவள் எழுந்து போய்விட்டாள். மெருகு மீண்டும் மைனஸ் ஆகியிருந்தது.

“என்ன ஆச்சு அவங்களுக்கு?” என்றான்.

“எல்லாம் தலையெழுத்துதான். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும் இப்பவே அந்த நகைகளை பிரிச்சி கொடுக்கச் சொல்லுறாங்க. மருமகளுக்கு கொடுத்துடுவாங்களோன்ற பயம். நகையை தந்துட்டா மருமக என்ன பண்ணுவாளோன்னு இவங்களுக்கு பயம்“என்ற அக்பரின் அம்மா.”பொம்பளை ஜென்மத்துக்கு வயசாயிட்டாலே கஷ்டம்தான்” என்றாள்.

“தாத்தா ஆண் பிள்ளைதான், அவருக்கு மட்டும் என்ன வாழுதாம்?” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

“மருமகளுக்குப் புரியணும், இல்லே பெத்த புள்ளைகளுக்காவது புரியணும்… புரிஞ்சாதானே!” – என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவள் சொன்ன தொனியே”நீயும்தானேடா!’ – என்று சொல்வது போல இருந்தது.

மகனுக்குக் கல்யாணம் செய்து பார்த்து சந்தோஷப்படும் அம்மாக்கள், அவனுக்கு இருக்கும் நிர்ப்பந்தங்கள், கடமைகளைப் பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் இருப்பது சாபக்கேடுதானே! இவர்கள் கயநல அம்மாக்கள்! அல்லது சுயநல மாமியார்கள்?

நெக்லஸை மீட்டுத் தந்து சமீராவுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சியைத் தந்துவிட்டு, அம்மாவைப் பற்றிப் பேசிப் பார்ப்போம், பலன் இல்லாமலா போய்விடும் என்று நினைத்தபடி பெருமூச்சு ஒன்றைச் செலவு செய்தான் அக்பர்.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *