சாமாலியின் திண்னை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,985 
 

விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும்.

”உன் மனசு யாருக்காவது வருமாடா? என்ன பகவான் ஒரு காலை நொண்டியா படைச்சுட்டான்! போடா கண்ணா மாட்டுக்கு கொஞ்சம் வைக்கோல் பிடுங்கி போடேன்” குழைவாள் விசாலம்.

”நன்னா தேனொழுக பேசு…ஒரு நாளைக்காவது சூடா சாப்பாடு போட்டிருக்கியா? பழைய சாதம்தான்”.

”நம்ம ராமூர்த்தி அய்யராத்துல அவர் பேரனுக்கு நிச்சயதார்த்தம் வருது…நம்ம குருதான் சமையல்., அவன்கிட்ட சொல்லி வைக்கறேண்டா”.

”வாய்தான் இருக்கு”, சொல்லிக்கொண்டே கொல்லைப்புறம் போனான் சாமாலி.

எனக்கு சாமாலியின் பூர்வீகம் பற்றி தெரியாது. எப்போது எங்கள் ஊருக்கு வந்தான்? எங்கிருந்து வந்தான்? எதுவும் தெரியாது. ஒல்லியான தேகம்…எலும்புகள் தெரியும், ஒரு கால் நொண்டி, முன்னால் ஐந்தாறு பற்கள் இருக்காது. வயது ஐம்பது இருக்கும். கொழ கொழ என்றாலும் நல்ல கணீர் குரல்.

அக்ரஹாரத்தில் பிறந்த குழந்தைகள் சாப்பிட அழும்போது ‘சாமாலி வரான்’, என்று பயமுறுத்தியோ ‘சாமாலிய கூப்படட்டுமா…இல்ல சாப்பிடறியா?’ என்று சொல்லியோ சாப்பிட வைப்பார்கள். நான் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. சாமாலியை ‘பூச்சாண்டி’ யாகவே உருவகப்படுத்தி தாய்மார்கள் எங்களை வளர்த்துவிட்டதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் சாமாலியைக் கண்டால் பயம்.

நான் நிறைய தடவை அவனை கவனித்திருக்கிறேன். காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பான். விசாலம் மாமியாத்து வாசலை பெருக்கி தண்ணீர் தெளிப்பான். ஆறு மணிக்கு எழுந்துவந்து கோலம் போடுவாள் விசாலம். இவனுக்கு ஒரு காபி கிடைக்கும்.

”இங்கேந்து காபி வழியா பாக்கும்போது விசாலம் மாமி பளிச்னு தெரியறா”, காபி தண்ணீர் என்பதை கிண்டலாகச் சொல்வான்.

”மாட்டுக்கு வயசாச்சுடா! புது மாடு வாங்குங்கோன்னா மாமா கேட்க மாட்டேங்கிறார்., யாராவது தானம் தருவாளானு காத்துண்டிருக்கார்”.

மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி போடுவது, தண்ணீர் காட்டுவது, பருத்தி-புண்ணாக்கு வைப்பது, தொழுவத்தைக் கூட்டி சுத்தம் செய்வது என ஒன்பது மணி வரை வேலை சரியாக இருக்கும். அதன்பிறகு அவனை மேல சிவன் கோவில் குளக்கரையில் பார்க்கமுடியும். குளித்து விபூதி இட்டுக்கொண்டு கோவிலுக்குச் செல்வான். விசாலத்திற்கு வேண்டிய சமையல் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பான். அதற்காக மேற்கு அக்ரஹாரத்தில் இருந்து கிழக்கு அக்ரஹாரம் வரை சிரமப்பட்டு நடந்து வந்து யார் வீட்டு திண்ணையிலாவது சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வான். விசாலம் மாமியாத்து திண்ணைதான் அவனுக்கு வீடு. அவனிடம் பொருட்கள் என்று அதிகம் எதுவும் கிடையாது. ஒரு அலுமினிய தட்டு சாப்பிடுவதற்கு, ஒரு டம்ளர், ஒரு துணி மூட்டை, அதில் அழுக்கேறிய இரண்டு அல்லது மூன்று பழைய மயில்கண் வேஷ்டிகள், ஒரு கைத்தடி…அவ்வளவுதான்.

ஒரு காலை தொங்கப் போட்டுக்கொண்டு, ஊனமான காலை மடக்கிக் கொண்டு உட்கார்ந்து அவன் வெற்றிலை போடும் அழகே தனிதான். ஒரு ராஜாவைப் போல் அந்த திண்ணையில் உட்கார்ந்திருப்பான்.

அக்ரஹாரத்தில் யார் வீட்டில் ஸ்ரார்த்தம் (தவசம்) என்றாலும் அதில் ”விஷ்ணு இலை” என்று ஒன்று உண்டு. திருமணமாகாத பூணூல் அணியப்பெற்ற பையனை திருமாலாகப் பாவித்து உணவு அளிப்பது என்பது சம்பிரதாயம். அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் இலையைத் தூக்கிக் கொண்டுபோய் காக்காய்களுக்கு வைத்து விடுவர். சாமாலி கட்டை பிரம்மச்சாரி’ என்பதால் எல்லோர் வீட்டிலும் அவனை ‘விஷ்ணு இலை’ க்குக் கூப்பிடுவார்கள். ஐந்து பத்து தேறும். செலவழிக்க மாட்டான். நேரே விசாலத்திடம் கொண்டுபோய் கொடுத்துவிடுவான். அவள் இவனது நடமாடும் வங்கி.

அக்ரஹாரத்தில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் சாமாலிதான் ‘தகவல் தொடர்பாளன்’.

”ராமூர்த்தி அய்யர் பேரனுக்கு நிச்சயதார்த்தம்…ஆத்துல நடக்கிறது….அவசியம் வந்து கலந்துக்கணும்னு சொல்லச் சொன்னார்”, என்று ஒவ்வொரு வீடாக வந்து சொல்லிவிட்டுப் போவான். அடுத்த அரைமணி நேரம் கழித்து ….

”ராமூர்த்தி அய்யர் பேரனுக்கு நிச்சயதார்த்தம்…பந்தி போட்டாச்சு…கூப்பிட சொன்னா”.

அக்ரஹாரத்தில் விருந்துக்குக் கூப்பிடுவது என்பது தொன்றுதொட்டு வரும் நல்ல பழக்கம். ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியாகக் கூப்பிடுவார்கள். சாமாலி வந்தால் எல்லோரையும் அழைத்துவிட்டுப் போவான்.

கலியாணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளில் ‘உக்கிரான வேலை’ என்று ஒன்று உண்டு. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, தேங்காய், வாழை இலை போன்றவற்றை தேவைப்படும்போது ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற வேலைகளையும் சாமாலி அவ்வப்போது செய்வான்.

திருமண நிகழ்ச்சிகளில் பந்திகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அக்ரஹாரத்து வீடுகளில் பந்திகள் மூன்று அடுக்குகளாக நடைபெறும். கூடத்தில் இருவரிசை எதிரெதிரெ, தாழ்வாரம் மற்றும் மித்ததிலும் அதேபோல. வீட்டின் உட்புற திறந்தவெளிப் பகுதிக்கு ‘மித்தம்’ என்று பெயர். கூடத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் மற்றும் அக்ரஹார பணக்காரர்கள், தாழ்வாரத்தில் அக்ரஹார நடுத்தர மக்கள்…. மித்தம் சாமாலி போன்றவர்களுக்கு….வரையறுக்கப்படாத சட்டம்.

சாமாலி ஒருமுறை தாழ்வாரத்தில் ஒரு இலையில் உட்கார்ந்து விட

”எழுந்திருடா படவா! தாவாரத்தில உட்கார்ர அளவுக்கு பெரிய மனுஷனாயிட்டியோ….மித்தத்துக்குப் போடா”, என்று அக்ரஹார பணக்காரர் ஒருவர் சொல்ல

”ஏதோ தெரியாம உட்கார்ந்துட்டேன்…ஒரு கால் இல்லாதவன்., இப்ப போய் எழுந்திருக்க சொல்றேளே”

”அதுக்காக தாவாரத்துல வந்து உட்கார்ரதாவது”, மூன்றுபேர் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கி மித்ததில் விட்டனர். மித்ததிலும் இலை இல்லை.

”அடுத்த பந்திக்கு வா”, அவனை வாசலில் உட்கார வைத்தனர்.

நான் மித்ததில் உட்கார்ந்து இருந்ததால் என்னுடைய இலையை தரலாமா என்று தோன்றியது. தந்தபிறகு என்னை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அதை சமாளிக்கும் மனப்பக்குவமோ, வயதோ இல்லை என்று தோன்றியதால் பேச இயலவில்லை. நியாயப்படிப் பார்த்தால் அவன் செய்த உதவிகளுக்கு, கூடத்தில் ரத்தினக் கம்பளத்தின்மேல் அமரவைத்து உபசரிக்கப்பட வேண்டியவன். நாகரிகம் தெரிந்தாலும் பண்பாடு தெரியாத அக்ரஹார பணக்காரர்கள். அந்த அக்ரஹார பணக்காரரைப் பற்றி வெளியே ஏதேதோ திட்டிக் கொண்டிருந்தான். அவனது ஆற்றாமை ஒரு பக்கம்…ஏழ்மை ஒரு பக்கம்., கோபமாய் முகத்தில் தெறித்தது.

என்னை சாமாலிக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய பாட்டி ஸ்ரார்தத்திற்கு வந்து நிறைய தடவை ‘விஷ்ணு இலை’ சாப்பிட்டு இருக்கிறான். என்னை எப்போது பார்த்தாலும் ”என்ன அம்பி., செளக்கியமா?”, என்னுடன் பேசிக் கொண்டு இருப்பான்.

பத்து வயதுவரை சாமாலியை ‘பூச்சாண்டி’யாகவும், ‘பேயா’கவும் கண்டு பழக்கப்பட்ட நான் அதன்பிறகு அவனை நன்கு உணர்ந்தேன். அவனுக்கென்று ஒரு மனது…அதிலும் ஈரம் அதிகம் என்பதை உணர முடிந்தது. அதன்பிறகு நான் ஊரில் இல்லை. மேற்படிப்பிற்காக ஊரை விட்டு சென்று விட்டேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு பாட்டி ஸ்ரார்தத்திற்காக ஊருக்கு வந்திருந்தபோது….

வழக்கமான ‘விஷ்ணு இலை’ படலம் வந்தது.

”விஷ்ணு இலைக்கு யார கூப்படறது? சாமாலியும் இல்ல… அம்பி! யாராவது பூணூல் போட்ட பசங்க இருந்தா அழைச்சுண்டு வா”, அம்மா.

”சாமாலிக்கு என்ன ஆச்சு ? ஊரை விட்டு போய்ட்டானா?”‘

”ஒலகத்தவிட்டே போய்ட்டான்….மேலக்கோவில் கொளத்தாங்கரைல தடுக்கி விழுந்துட்டான்…அதுக்கப்புறம் அவனுக்கு உடம்பு சரியில்ல….ரெண்டு மாசமா இழுத்துண்டு இருந்தான்…போய்ட்டான்”.

நெஞ்சு கனத்தது. ஒரு இனம்புரியாத சோகம் மனதில் வியாபித்து கண்கள் கலங்கின. ஆறு மாதத்திற்குள் என்னென்ன மாற்றங்கள்?

விஷ்ணு இலைக்கு ஆள்தேடி புறப்பட்டேன். மனதிற்குள் பூணூல் போட்ட பையன்களின் பெயர்பட்டியல் விரிந்தது. யாரை கூப்பிடலாம் என்ற சிந்தனையோடு நடந்து கொண்டிருக்கும் போது எதிரில் வந்தார் சங்கரய்யர். விஷ்ணு இலைக்கு ஆள்தேடி சென்று கொண்டிருப்பதையும்,சாமாலி இல்லாததையும் சொன்னபோது,

”ஆமா….மூணு மாசமா உதவாக்கரையா ஒரே எடத்துல கெடந்தான்…யாரால இவனே ரட்சிக்கமுடியும்?, கோவிந்தா கொள்ளி போட்டாச்சு”.

‘இந்த சங்கரய்யன் என்னிக்கு யாருக்கு உதவியா இருந்திருக்கான்?’, மனதிற்குள் என்னை நானே கேட்டுக்கொண்டேன். விசாலம் மாமியாத்தை நெருங்கியவுடன், வாசலில் உட்கார்ந்திருந்தவள் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.

”என்னடா….திஷ்ணாபள்ளில (திருச்சிராப்பள்ளி) படிக்கிறதா உங்கப்பா சொன்னான்….இப்ப என்ன லீவா? மேலத்தெரு பக்கமே வரமாட்டியே….அதிசயமா இருக்கு!”

”விஷ்ணு இலைக்கு ஆள் இல்ல…சாமாலி இருந்திருந்தா நன்னாருந்திருக்கும்”.

”ஆமா அவன் இன்னும் இருக்கனுமா? அது ஒன்னுதான் கொறச்சல்….இந்த திண்ணைல படுத்துண்டு என் பிராணணை வாங்கிண்டிருந்தது….சனியன் எப்படா தொலையும்னு ஆயிடுத்து. உள்ளே வாடா! வேகாத வெயில்ல வந்திருக்க….கொஞ்சம் தேர்ஸம் தரேன்”, உள்ளே எழுந்து சென்றாள்.

”எத்தனை நன்றி கெட்டவள் இந்த விசாலம்? சாமாலி இவளுக்காக என்னென்ன செய்திருக்கிறான்…..சாமாலி படுத்த படுக்கையாக இருந்தபோது அவன்மேல் எவ்வளவு வெறுப்பை உமிழ்ந்திருப்பாள்?” அதற்குமேல் அவளைப்பற்றி நினைக்கவோ, பேசவோ விரும்பவில்லை. அந்த திண்ணையில் இருந்த வெறுமையைப் பார்த்துவிட்டு விஷ்ணு இலைக்கு ஆள் தேடும் படலத்தை தொடர்ந்தேன்.

அக்ரஹாரத்தில் பூணூல் போட்ட பையன்கள் இருந்தாலும் கண்ணிற்கு எவரும் படாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன். சாமாலியின் இழப்பின் பாதிப்பு மனதில் நிலைகொண்டு ஏமாற்றமாய் கண்களில் பிரதிபலித்தது. அம்மா என் முகத்தில் இருந்த அந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொன்டவளாய்,

”காக்காய்க்கு போட வேண்டியதுதான்”, என்றாள்.

”அம்பி…சித்த இந்த இலையை பிடி”, அப்பா.

இலையைக் கொல்லைப்புறத்தில் வைத்துவிட்டு நகர்ந்தவுடன் ஒரு காக்கா சாதத்தைக் கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தது….சாமாலியாகவே என் மனதிற்குத் தோன்றியது.

”நேரமாயிடுத்தே……காக்கா வந்து சாப்பிடறதோ?”, அம்மா.

”சாமாலி வந்து சாப்பிட்டுண்டிருக்கான்”

விளங்காமை கலந்த விழிகளோடு என்னைப் பார்த்தாள் அம்மா. சாமாலி என் மனதிற்குள் இனிக்க ஆரம்பித்தான்.

அந்த திண்ணையில் அவன் உட்கார்ந்திருக்கும் உருவம் என் கண்களின்முன் தோன்றி மறைந்தது.

– திரு [thiru_writer@hotmail.com] (ஏப்ரல் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *