கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 6,682 
 
 

அம்மப்பா – அம்மாவின் அப்பா – வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பொடியனான நான் யார் வந்தார் என வாசலுக்கு வந்து பார்க்க, அவர் என்னை அப்படியே வாரி எடுத்துக் கொண்டார்.

அவரை அம்மா வாசல் வரை வந்து வரவேற்க முடியாது. நாங்கள் பெரிய மிராசுக் குடும்பம். ஆண்கள் இருக்கிற முன்பகுதிக்குப் பெண்கள் வரக்கூடாது. மகளைச் சமையல்கட்டில் போய், அம்மாப்பாவேதான் பார்க்கணும். ஆனால் அவர் உடனே உள்ளே போகலை. அப்பாவிடம் பேசினார்.

நேரடியாகப் பேசாமல், சுவற்றில் பேசுவது போல், சுவற்றைப் பார்த்துக் கொண்டுதான் அப்பாவிடம் அம்மப்பா பேசுவார். மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் மரியாதை! “மாப்பிள்ளை! பொண்டாட்டினு வந்நதப்பறம் குடும்பம்னு நெனைக்கணும். ஆட்டம், ஓட்டம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னம் சரிதான். இப்பப் பையன் கூடப் பொறந்தாச்சு.” இப்படிச் சொல்லும் போது, என்னை இறுக்கமாய் அணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து, “என் மக முன்னாடி மான்குட்டி மாதிரி இருந்தா.. மிருகமா நடந்தா.. அவ பொலிவு இழந்து….” என்று சொல்லும் போது, அம்மப்பா வார்த்தைகளை முடிக்க முடியாமல் குழறினார்.

அப்பாவால் பதில் பேச முடியலை. தலையைத் திருப்பிக் கொண்டார்.

“எம்மவளுக்கு நீங்க பண்ற துரோகம், உங்க வம்சத்தை எப்படிப் புடிச்சு ஆட்டப் போதுனு, நீங்க உங்க வாழ்நாளிலே ரெண்டு கண்ணாலேயே பாக்கதான் போறீங்க, மாப்பிள்ளே!” என்று அம்மப்பா திடீரென சாபம் விடுகிறார் போல உக்கிரமாய் கத்தினார்.

பின்னர் அவர் பின்கட்டுக்கு அம்மாவைப் பார்க்க, என்னைத் தூக்கிக் கொண்டே சென்றார். அம்மப்பாவைப் பார்த்த அம்மா சிரித்தாள். ரொம்ப நாளைக்கு முன்னாடி அம்மையின் முகத்தில் பார்த்த சிரிப்பு, மறுபடியும் குடிகொண்டது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அப்ப அம்மப்பா என்னிடம் சொன்னார். “ஏலேய், இனிமே நீதான் உன் அம்மைக்கு எல்லாம்.. பெரிய மிராசுனு பாத்துப் புள்ளையைக் கொடுத்தேன். நல்ல மனுசனா பாக்க தவறிப்புட்டேன்..”

கொண்டு வந்த பண்ட பலகாரங்கள், அம்மாவின் கைகளுக்கு மாறின. “விவஸ்தை இல்லாம இன்னும் மைனர் மாதிரி அலையறார் இவன் அப்பா. நாகாட்டுவிளையில் மானாத்தார் பொண்டாட்டியையும், மகளையும் இவரே வச்சுட்டு இருக்காராம். விசயம் நம்ப ஊர் வரை வந்து முட்டி நாறுது!” அவன்கிட்டே சொல்ல முடியாத விசயங்களை, நேரடியாகவே அம்மாவிடம் அவனை வைத்துக் கொண்டே சொன்னார். அம்மா முகத்தை வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்ணீர் வடித்தாள். அப்பம்மா – அப்பாவின் அம்மா – ஒரு மூலையில் இதை எதையும் கேட்காகதது போல, முடங்கிக் கிடந்தாள். அம்மப்பா போனதும், அப்பாவுக்கு அவள் வசவு பாடினாள்.

அன்னைக்கு நான் எடுத்த முடிவுதான். என்ன ஆனாலும், அம்மாவுக்காக நிக்கணும்..

அம்மப்பா போன கொஞ்ச நேரத்தில் அப்பா வந்தார். “கள்ளுக்கடை வச்சு சம்பாதித்தப் பசங்கள்லாம் மிராசுக்கே அறிவுரை சொல்லப் புறப்படுட்டாங்கய்யா. நாங்க பெரிய மனசு பண்ணி, பொண்ணு எடுத்ததுக்கே, பெருமைப் பட்டுக்க வேணாம்? அதை விட்டுட்டுப் பெரிசா வேதாந்தம் பேசிகிட்டு?”

அம்மா பெண்புலி போல சீறினாள். “சீரு செனத்தி இல்லாம கட்டின சீலையோட கட்டிகிட்ட மாதிரி பேசறீங்க.. எங்கப்பன் அளவுக்குச் செய்யறதுக்கு, உங்க மிராசு குடும்பத்துலே, எவனாவது ஒருத்தனுக்கு வக்கு இருக்கா?”

“எல்லாம் சாராயம் விற்ற காசடி!”

“வேண்டாம்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே? மீன் விற்ற காசு நாறாது!”

அப்பா பட்டென அம்மாவை அறைந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத நான், பக்கத்தில் கிடந்த அலுமினியத் தட்டைக் கோபத்தில் எடுத்து, அப்பா மேல் விசிறியடித்தேன். நல்லவேளை, பக்கத்தில் அருவா கிருவா ஏதும் கிடக்கலை. அப்பா என்னைப் பிடிச்சு வச்சு, நல்லா முதுகில் மொத்தினார். அப்பம்மாதான் இடைமறித்து, அவரது முரட்டு கரங்களிலிருந்து, என்னைக் காப்பாற்றினாள். அப்பாவை அடிக்கப் போகும் அளவிற்குத் தற்குறியாய் நான் வளர்ந்து விட்டேன் என அம்மா, தனது மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.
###

பெரியவன் ஆனதும்தான், அந்தச் சந்தேகமே எனக்கு வந்தது. அப்பா ஏன் தினமும் முற்றத்தில் வெட்டவெளியில் படுக்கிறார்? ராத்திரி விழிப்புத் தட்டினால், அப்பா கட்டிலில் கிடக்கிறாரா அல்லது வேறு எங்கேயாவது போய் விட்டாரானு எனக்குச் சந்தேகம் வரும். ஏன் உள்ளே படுக்கக் கூடாதுனு, அவர்கிட்டேயே நான் கேட்க, ‘மிராசு, பொண்டாட்டி சேலைக்குள்ளதான் எப்போதும் அடைஞ்சு கெடக்கிறானு, ஊர்காரங்க எல்லாம் எளக்காரமா பேசுறதுக்காகவா?’னு எங்கிட்டேயே கேட்டார்.

எனக்கு அவர் சொல்லும் தர்க்கத்தில் நம்பிக்கையில்லை. ஒருநாள் விழித்திருந்து பார்த்துட வேண்டியதுதானு முடிவெடுத்தேன். அப்படிப் பார்த்தப்ப……
ராத்திரி அப்பா கூடக் கிடந்தப் பொண்ணை, பாதி அம்மணமாவே புடிச்சு மரத்திலே கட்டி வச்சேன். அம்மா ரொம்ப நேரமா அழுதா.. “இந்த வூட்லே என்ன நடக்கக் கூடாதுனு நெனைச்சேனோ, அது நடந்துடுச்சு,”னு சொல்லி அழுதாள். ராத்திரி முழுக்க யாரும் துங்கலை..

விடிஞ்சு வெளியே வந்து பார்த்தா, கட்டி வச்சப் பொம்பிளையைக் காணோம். பொண்டாட்டியை வீட்டுக்குள்ளாற தூங்க வசசுட்டு, முன்முற்றத்தில் இன்னொருத்தியுடன் சல்லாபம் பண்ற மப்பும் தெகிரியமும், இந்த மிராசுக் குடும்பத்துக்குதான் வரும். எனக்கு ஆத்திரமாய் வந்தது.

கட்டி வச்சிருந்த பொம்பளையை அம்மாதான் அவுத்து விட்டுருக்கணும் என்பது புரிந்தது. அப்பா ராத்திரியே கோவிச்சுகிட்டு போனவரு நாலு நாளாய் வீட்டுப் பக்கம் வரலை. பாளையங்கோட்டைக்குப் போயிருக்காராம். அங்கே எந்த முண்டை வீட்டில் கிடக்கிறாரோ?

அப்பா வந்த அன்னைக்கு, திருநெல்வேலி அல்வாவும், மல்லிகைப்பூவும் வாங்கிட்டு வந்தார். வெள்ளைக்கொடி வீசினார். அம்மாவுக்கு அப்பா வந்தது சந்தோசம்தான் என்றாலும், மொனைப்பா கொஞ்ச நேரத்துக்கு மூஞ்சை வைத்துக் கொண்டிருந்தாள்.

எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமலும், அப்பா ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
###

அப்பனுக்கு காவல் மகன். நானும் கட்டிலை வாசலில் போட்டுப் படுக்க ஆரம்பித்தேன்.

“ஏண்டா வெளியே படுக்கிறே? காற்றுக் கறுப்பு அடிச்சிட்ப போவுது?” என அம்மாதான் எச்சரித்தாள்.

“உம் புருசன் நித்தம் வெளியிலேதான் படுக்கிறார். அவரை அடிக்காத காத்துக் கறுப்பா என்னை அடிச்சிடப் போவுது? வேணும்னா, அவரை உள்ளே படுக்க வச்சுக்கோ..”

அப்பாவே யாருக்கும் சங்கடம் இல்லாமல், கோவித்துக் கொண்டு படுக்கையுடன் உள்ளறைக்குப் போய் விட்டார்.
ஆனால் முற்றத்தில் படுத்திருந்த என் கட்டிலோ, மழை காலத்துலே குளிருது என்றும், வெயில் காலத்தில் உறைக்குது என்றும், சிறிது சிறிதாய் நகர்ந்து, வீட்டின் வலது ஓரத்தில் கிடந்த குச்சிலுக்குள் ஒதுங்கியது.
அதுதான் வினயத்துக்குக் காரணமாய் போச்சு.
ஒரு பொண்ணு ஒரு ஆம்பிளைக்குப் புடிக்கணும்னா, அதுக்கு ஏதும் விசேச காரணம் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. பிடிக்காம போச்சுன்னாதான், விசேச காரணம் சொல்லணும்.

நானே எதிர்பார்க்கலை. “குச்சிலுக்கு வாரீயா?”னு, நானும் ஒரு பொம்பளையைப் பார்த்துக் கூப்பிடுவேன் என்று. பொண்டாட்டியாக்கி முறையா வாழணும்னு நினைக்காம, தேவடியா மாதிரி ஒரு பொண்ணைக் கூப்பிடுவது எப்படி முறையாகும்? எப்படி இருந்தாலும், அப்பன் ரத்தம் மகனுக்குள் ஒரு துளியாவது ஓடாமலா இருக்கும்?

அன்று பெளர்ணமி. நல்ல நிலாவெளிச்சம்! அவ வந்துட கூடாது என குலைநடுக்கத்தில் குச்சிலில் படுத்துக் கிடந்தேன்.

“என்னை வரச் சொல்லிட்டு, இப்படிக் குப்புற அடிச்சு கெடந்தா, என்ன அர்த்தம்?” என கேட்டு வந்த அவள், கையைப் பிடிச்சதும், கரண்ட் பாஞ்சாப்பிலே எனக்கு இருந்தது. ஏதோ இவ்வளவு நாள் கிளர்ந்த சுகாவேதனைகளும் கழண்டு, சூனியத்தில் மிதப்பது போலிருந்தது. அவள் காலைக் கூட அகற்றாமல், என்னோடு அப்படியே கிடந்தாள். அப்பா மட்டும் இப்பப் பார்த்தா, மரத்தில் கட்டி வச்சிட மாட்டார்?
அவள் போன பிறகும், கட்டிலின் தலைமாட்டுச் சட்டத்தில் துவாலையைப் பொதிந்து சுருட்டித் தலை உறுத்தாத மாதிரி வைத்துச் சாய்ந்தேன். கிடுகின் ஓட்டை வழியே நிலாப்பால் ஒழுகியது. ஊற்றிக் கொட்டிய வியர்வையைக் கூடத் துடைக்காமல், காற்றிலேயே காயட்டும் என அப்படியே கிடந்தேன்.

கால்மாட்டில் கிடந்த அவள் ஜாக்கெட், அவள் வெற்று மார்பை நினைவூட்டியது. அவள் நெஞ்சில் ஊறிய வியர்வையின் வாசனையை என்னால் இன்னும் நாசியில் முகர முடிந்தது.

திடீரென நான் சுயபச்சாதாப பட்டேன். எந்த அப்பனுக்கு எதிரா உறுதியா நிக்கணும் என நான் நினைச்சேனா, அதெல்லாம் இந்த பொம்பளை மடியிலே முகத்தைப் பதிச்சப்பையே போச்சு… நான் தேம்பி அழுதேன்.
குச்சிலை விட்டு, முற்றத்தை நோக்கி நடந்தேன். உடல் அசதியாய் இருந்தது. கால்முட்டு “விண்” என தெரித்தது.

அப்பா வாசலில் உட்கார்ந்திருந்தார். எல்லா கூத்தையும் பார்த்திருப்பார் போலிருந்தது. இருந்தாலும் ஒன்றும் சொல்லை. என்னை மன்னித்து இரட்சித்தால், இனி என்னச் செய்தாலும், அவரும் என்னால் இரட்சிக்கப் பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவார் என கருதுகிறாரா? ஒன்றும் என்னால் முடிவுக்கு வர இயலவில்லை.
அவர் அப்படியே தோள் துண்டைத் தலைப்பாய் மாதிரி கட்டிக் கொண்டு, ஜடமாய் அமர்ந்திருந்தார். “இது அழகா?” என ஒரே வார்த்தையைக் கேட்டுட்டு, உள்ளே போயிட்டார். அவர் குரலின் நெகிழ்ச்சி, அவர் அழறாரா என்று கூட என்னை நினைக்கத் தூண்டியது.
###

பக்கத்தில் கிடந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு, அது போன போக்கில் கிளம்பி விட்டேன். மெள்ள மஞ்சள் பூசி, பின்வெயிலின் வெம்மை முதுகைப் பிளக்கும் வரை, சைக்கிளை ஓட்டினேன். சைக்கிள் தொட்டிப்பாலம் தாமிரபரணி பாசன வாய்க்கால் அருகே உள்ள ரோட்டில் போய் கொண்டிருப்பது புரிந்தது. சைக்கிளை நிறுத்தி, வாய்க்கால் ஓரமுள்ள ஆலமரத்து நிழலில் படுத்தேன்.
சலசலக்கும் தண்ணீரையும் பறவையின் ‘கீச், கீச்’ குரலையும் மீறி அவளின் பிம்பம்தான் மனதில் அலையாடியது. முழங்கால் வரைக்கும் உள்ள அவளது நீண்ட கூந்தல், என் முகத்திலும், உடலிலும் அழையும் போது, என் மார்பு முடியை அவள் கைவிரல்கள் வருடும் போதும்… இந்தத் தேவலோக சுகத்திற்கு மயங்கிதானே அப்பா அலைந்தார்? சீ! என்ன அப்பாவுக்கே வக்காலத்து?

வீட்டுக்கு வந்தப்ப, அப்பா முகம் பேயறைந்தது போல இருந்தது. கம்பீரமா விசாரிக்க வேண்டியவர், சூம்பிப் போயிருந்த சூட்சமம் எனக்குப் புரியவில்லை. ஏன் இவர் பிச்சைக்காரன் மாதிரி, என்னிடம் யாசிக்கிறார்? “யேய்! இந்தப் பொண்ணு வேண்டாம்டா! எல்லா கண்ராவியும் இதோட போட்டும்.. இனிமே ஏதும் வேண்டாம்ப்பா….”

நான் பேசாமல் இறுக்கமாய் இருந்தது, நான் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவாக அவருக்கு உணர்த்தியது. அம்மாவும் அப்பாவுடன் சேர்ந்து கொண்டு, ஒத்து ஊதியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏன் ரெண்டு பெரிசுகளும் இவ்வளவு உறுதியா எதிர்க்கிறார்களன் என்று நானும் யோசித்துப் பார்த்தேன். இதுதான் காரணமாக இருக்க வேண்டும். “இந்த ஊருலே நாம்ப பிராசு குடும்பம், ஆனா மத்தவங்க நம்ப ஜாதிதானாலும், நம்ப தோட்டத்துலே வயக்காட்டிலே வேலைப் பாக்குறவுங்க.. நம்மோட அவங்களுக்கு, எந்த ரத்த உறவும் கிடையாது. ஏதோ அவுங்க உங்களை யதார்த்தமா அண்ணாச்சினு கூப்பிட, நானும் அவங்களைச் சித்தப்பானு கூப்பிட, அதனாலே அவ என்னோட சித்தப்பா மகளா ஆயிட மாட்டா.. அவ ஒரு பொம்பளை, நா ஆம்பிளை.. அவ்வளவுதான் எங்க உறவு.. சொல்லிப் புட்டேன்..”

இந்த வார்த்தையைக் கேட்ட அப்பா, தாங்க முடியாத வேதனையில் துடித்தார். “ஏண்டி உங்கப்பன் கொடுத்த சாபம் என்னோட வம்சத்தைப் புடிச்சு ஆட்டுதடி!” என்று தலையைப் பிடித்துக் கொண்டு, அப்படியே உட்கார்ந்து விட்டார்.

அப்பாவின் ஒவ்வொரு செயலும், எனக்கு நடிப்பாய் தெரிந்தது. அதில் எந்த அர்த்தமும் இருப்பதாக நான் கருதவில்லை. அவரது எந்தச் சால்சாப்புக்கும் நான் மயங்குவதாக இல்லை.

வெளியே போய் விட்டு, திரும்பி வந்தப்ப, வீடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அப்பா, காசிக்குச் சன்னியாசம் போகப் போறாராம்.
சகலத்தையும் திவ்வியமாக அனுபவித்து விட்டு, இப்ப ஜீரணத்துக்கச் சன்னியாசமா? சீய்! இங்கப் பண்ணினது போதாதுனு, வாரனாசி பஜாரிகளுடன் போய் படுத்துக்குவார். சன்னியாசிச் சட்டையைக் கூட கழட்டாமல், படுத்துக் கொள்வார்.

அம்மா, அப்பாவைத் தடுக்கச் சொல்லி மன்றாடினாள். “அந்தப் பொண்ணு மட்டும் வேண்டாம்னா போதும், அவர் போக மாட்டார்,” என்றாள். தானும், அப்பாவுடன் சென்று விடப் போவதாகச் சொல்லி மிரட்டினாள்.

“இப்ப இதெல்லாம் முடியாதும்மா.. நா தொட்டப் பொண்ணை, நான் கைவிட முடியாது. வேணா அவனைக் கூப்பிட்டுக்கிட்டு, நா போயிடறேன்…” என்றதும், எல்லா தூசும் அடங்கியது.
###

அப்பா போனதும், மாமாவும் மாமியும் அவனைக் கூட்டிக் கொண்டு, வீட்டிற்கே வந்துட்டாங்க. அப்பா இல்லாமல் கல்யாணம் முடிந்தது.

முடிந்த எட்டாம் மாசமே, எங்கப்பாவுக்குப் பேரன் பிறந்தான். வம்சம் தளைத்தது.

அப்பா திருநெல்வேல அல்வாவும், மல்லிகைப்பூவும் வாங்கிட்டு, வெள்ளைக் கொடியாட்டிட்டு வந்துடுவார் என நான் நம்பினேன். ஆனா அவர் வரலை.

உண்மையிலேயே காசிக்கே போயிட்டாரா? இனிமே அம்மாவையும் கூட்டிட்டுக் காசிக்குப் போய் தங்கி, அப்பாவைத் தேடணும்னு முடிவு செய்தேன்.

புள்ளைக்குப் பேர் வைக்க வேண்டி வந்தது.

“உங்க அப்பா பேரை வைப்போம்,” எனப் பையனின் தாயார் பரிந்துரைத்தாள்.

“ஆமா, அதாஞ் சரியா இருக்கும்,” என மாமனாரும், மாமியாரும் பக்கமேளம் தட்டினார்கள்.

‘வேணாம். அவர் அவ்வளவு நல்லவர் இல்லை. வேற யாருடைய பேரையாவது வைப்போம்’ என நான் எனக்குள் யோசித்து வைத்துக் கொண்டிருந்தேன்.
ஆட்டுக்கட்டிலில் கிடந்த மகனுக்கு விளையாட்டுக் கொண்டிருந்த மாமனாரும் அவளும் அங்கிருந்து அகல, என் மாமியார் மட்டும் பையனுக்கு ஏதோ ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைப் பாட்டியைப் பார்த்துச் சிரித்தது.. அம்மாவுக்கும் அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் ஒரு சந்தோசம். எப்போதும் சோகம் ததும்பி கிடக்கும் அவள் முகத்தில், சில சந்தோசக் கீற்றுகள்.
இதுதான் சரியான தருணம் என்று நான்தான் சன்னமான குரலில் அம்மாவிடம் கேட்டேன். “ஏம்மா, என்ன பேர் புள்ளைக்கு வைக்கலாம்னு நீயே சொல்லு.. அப்பன் பேரையா வைக்கணும்?” என்று அதை ஏற்றுக் கொள்ளாத தொனியில் கேட்டேன்.

“ஏன் உன் பொண்டாட்டியோட அப்பன் பேரை வைக்கலம்னு பாக்கிறீயா?” என அம்மா விசனமாய் கேட்டாள். அப்பா வீட்டை விட்டுப் போவதற்குக் காரணமாய் இருந்த என் மனைவியின் வீட்டார் மேல், அம்மா காட்டமாய் இருப்பது நியாயம்தான் என்று எனக்குத் தோன்றியது.

ஆனா இப்படிச் சொல்லி, அம்மா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குவாள் என நானே எதிர்பார்ககலை.

“டேய்! உனக்கும், உன் பொண்டாட்டிக்கும் அம்மைதான் வேற.. அப்பன் ஒருத்தன்தான்.. அதனாலே உன் அப்பன் பேரை வச்சாலும், அல்லது அவ அப்பன் பேரை வச்சாலும், கதை ஒண்ணுதாண்டே!!”

நான் விஷம் குடித்தது போல துடித்துப் போனேன். என் மாமியார் தலை குனிந்தாள். அம்மா வழக்கம் போல தலை திருப்பி அழுதாள்.

அப்போது உள்ளே வந்த மாமனார், மும்முரமாய் குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தார். மாமியார் அறையை விட்டு அகலும் போது, அப்போதுதான் உள்ளே நுழைந்த தனது மகளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு போனார்.

எனக்கு என் மனைவி நிரந்தரமாய் மரணித்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அப்பா இனி வரவே மாட்டார், என்பது புரிந்தது…
அம்மப்பன் சாபம் பலித்து விட்டது.. ரொம்ப கச்சிதமாக பலித்து விட்டது.

அதனால்தான் சொல்றேன், எந்த சாபத்தையும், சட்டையிலே பட்ட அழுக்கு மாதிரி தட்டி விட்டு போக முற்படாதீர்கள்.. என்ன கோபம் வந்தாலும், யாரையும் சபீக்காதீர்கள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *