கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 5,501 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு மாமியார். அந்த மாமியாருக்கு ஒரு மருமகள்.

மருமகளுக்குப் பதினான்கு வயது. புக்ககத்திற்கு வந்து ஐந்து நாளாயிற்று. “லக்ஷ்மீ , நான் நாலு குடம் இழுத்துப் போட்டிருக்கிறேன். நீ இன்னும் நாலு குடம் இழுத்து அண்டாவை ரொப்பி விடு. நான் அடுப்பங்கரைக்குப் போகிறேன்” என்று மாமியார் மருமகளைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

மருமகள் குடத்தைக் கிணற்றில் விட்டுக் கைநீட் டிக் கயிற்றை எட்டிப் பிடித்து, குடத்தை முழுகச் செய்தாள். பிறகு இழுக்கும் போது இடது கையில் வலித்தது. இழுக்க முடியவில்லை. இதைச் சொல்லிக் கொள்ள அவமானம். இடது கையை அதிகமாக உப யோகிக்காமல் காலால் கயிற்றை அமுக்கிப் பிடித்து ஒரு கையைக் கொண்டே மெதுவாகச் சமாளித்து நாலைந்து குடங்களும் இழுத்து அண்டாவை நிரப்பி வேலையை முடித்தாள்.

ஏழைக் குடும்பம். கர்நாடகப் பழக்க வழக்கம். மருமகள் பெரியவள் ‘ ஆனதும் சாந்தி முகூர்த்தம் முடித்துவிட்டார்கள். தனக்கும் ஒரு மாட்டுப் பெண் வந்துவிட்டாள் என்று மாமியாருக்கு மிக்க திருப்தி. அதிகாரம் செலுத்த ஓர் ஆள் அகப்பட்டால் யாருக் குமே அதில் ஒரு தனி சந்தோஷம். அரசியல் சாம் ராஜ்ய மோகத்தைப் போலவே இயற்கையில் ஒரு சாம் ராஜ்ய வேகம் உண்டு. முக்கியமாக ஏழைக் குடும்பங் களில் ஸ்திரீகளுக்கு இந்த ஆசை அதிகம்.

தனக்கு மாமியார் இட்ட எல்லா வேலைகளையும் லக்ஷ்மி சுறுசுறுப்பாகவே சந்தோஷமாய்ச் செய்து வந் தாள். ஆனால் ஜலம் இழுக்க மட்டும் முடியவில்லை. இரண்டு நாள் கஷ்டப்பட்டுச் சமாளித்துக்கொண் டாள். மூன்றாம் நாள் இரவில் புருஷனிடத்தில், “ஒன்று சொல்லுகிறேன். கோபித்துக்கொள்ளாம லிருப்பீர்களா?” என்று பயந்து பயந்து சொல்ல ஆரம்பித்தாள்.

“என்ன விஷயம்? சொல்லு என்றான் நடேசன். அன்பாகத்தான் பேசினான்.

கோபித்துக் கொள்வீர்கள் ” என்றாள் மறு படியும்.

“இல்லை, தைரியமாகச் சொல்லு” என்றான் நடேசன்.

“தண்ணீர் இழுக்க முடியவில்லை. கை வலிக்கிறது. சொன்னால் அம்மா ஏதாவது எண்ணிக்கொள்வார்கள். பயமாயிருக்கிறது!” என்று சொல்லிப் புருஷன் முகத்தைத் தான் ஏதோ பெருந் தவறு செய்தது போல் பார்த்தாள்.

முதலில் நடேசனுக்குக் கோபம் வரும் போல் தான் இருந்தது. மாமியார் – மருமகள் தகராறு ஆரம்பமாய்விட்டது என்று எண்ணினான். பிறகு, மனைவி விவரமாகச் சொன்னபின் சங்கதி தெரிந்தது. வீண் சண்டை அல்ல. மனைவிக்கு இடது கை ஊனம் என்பது தெரிந்தது.

நடேசனுக்கு அன்றிரவு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. காலையில் ஒரு தீர்மானத்துடன் எழுந்தான். தினமும் படுக்கைவிட்டு எழுந்ததும் தேகாப்பியாசம் செய்வது வழக்கம். அதற்குப் பதில், தானே தண்ணீர் இழுத்து அண்டாவை நிரப்பிவிட்டால் தேகப் பயிற்சியுமாகும்; மனைவியின் சங்கடமும் நிவர்த்தியாகும். கையைப் பற்றி வைத்தியர்களைக் கேட்கலாம் என்று தீர்மானித்தான்.

***

“ஏண்டா, நடேசா. தண்ணீர் இழுக்கிறாய்? பெண்டாட்டி செய்த வேலையா? நான் அவளை நாலு குடம் இழுக்கச் சொன்னது பெரிய தப்பாய்ப் போச்சா? அதற்காக என்னைத் தண்டிக்கிறாயா?” என்று வெகு கோபமாகத் தாயார் பேசினாள்.

“இல்லை. அம்மா. அவள் சொன்னதற்காக நான் செய்ததல்ல. உடம்புக்கு நல்லது. நீ எல்லா வேலையும் செய். அவளும் செய்யட்டும். நான் தினமும் காலையில் என் உடம்பு ஆரோக்கியத்திற்காக இதைச் செய்கிறேன் ” என்றான்.

தாயாரிடம் லக்ஷ்மிக்குக் கையில் கண்ட வலியைச் சொன்னால் அவளிடம் அதிருப்தி கொள்வாள் என்று நடேசன் உண்மையைச் சொல்லவில்லை.

தாயார் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள். இது மருமகள் செய்த குறும்பு என்றே அவள் நினைத்தாள். லக்ஷ்மி பேரில் வெறுப்பு ஆரம்பமாயிற்று.

பார்வதியம்மாளுக்கு (இதுதான் நடேசன் தாயார் பெயர்) ஒரு மகள், சீதம்மாள். நடேசனைவிட மூத்தவள். புருஷன் இறந்தது முதல் பிறந்தகத்திலேயே இருந்து வந்தாள். இவளுடைய தினசரி காரியக்கிரமம், பாய்மேல் படுத்துக் கொண்டு, யார் என்ன தவறு செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பது.

“உடம்புக்கு நல்லது கில்லது என்பது வெறும் பேச்சு. எல்லாம் அவள் வேலை. இத்தனை நாள் உடம் புக்கு நல்லதாக இல்லாதது இப்போது என்ன திடீர் என்று வந்துவிட்டது” என்றாள் சீதம்மாள்.

“புருஷப் பையன். ஜலம் இழுப்பதாவது! இது என்ன வெட்கக் கேடு?” என்றாள் தாயார்.

“அவள் பாயில் படுத்திருக்கட்டும். நான் தண்ணீர் தூக்கி அண்டாவை நிரப்பி விடுகிறேன்” என்றாள் மகள்.

இம்மாதிரி பேச்சு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று. நடேசனுடைய இல்வாழ்க் கைப் புது நந்தவனத்தில் அன்புக்கு இடமில்லாமல் முள் பரவிப் பாழ் படுத்திற்று. லக்ஷ்மியினுடைய உள்ளம் தவித்தது.

***

சிறு பெண் ஒருத்தி, பெரியோர்கள் செய்த சாஸ்திரத்தையும் பரம்பரையாக வந்த குல தருமத்தையும் அனுசரித்து. பெற்றோரை விட்டு, நீதான் கதி என்று தான் முன்பின் பழகாத ஒரு புருஷனை நம்பி புத்தம் புதிய ஒரு குடும்பத்தில் புகுந்து இவ்வாறு சிக்கிக்கொண்டு தவிக்கும் உள்ளத்தை ஆண் வாசகர்கள் சரியாக உணர்வதற்குக் கொஞ்சம் கற்பனா சக்தி வேண்டும்.

புருஷனுக்குத் தெரியாமல் ஒருநாள் அவள் மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்திருந்து கிணற்றண்டை போய், முதல் நாள் செய்த மாதிரி இடது கைக்குத் துணையாகக் காலைக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு ஸ்நானத்திற்கு வேண்டிய ஜலம் இழுத்து அண்டாவை நிரப்பிவிட்டு வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள். பிறகு நடேசன் எழுந்து வழக்கம் போல் தண்ணீர் தூக்கப் போய்ப் பார்க்கும் போது அண்டா நிறைய ஜலம் இருந்ததைக்கண்டான். தாயார் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பேசாமல் தன் காரியங்களைக் கவனித்தான்.

மறுநாளும் இவ்வாறே நடந்தது. சரி, இதற்கு என்ன செய்வது? நான் ஜலம் தூக்கிச் சிரமப்படுவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை; இவ்வாறு செய்கிறாள். என்று எண்ணி விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமலிருந்தான். அன்றிரவு லக்ஷ்மிக்குச் சுரம் கண்டது. இடது கை பலமாய் வீங்கிவிட்டது. அதன் பிறகு நடேசனுக்கு நடந்ததெல்லாம் தெரிந்தது. ஒன்றும் செய்யத் தோன்றாமல் குழப்பத்தில் கொஞ்ச நேரம் கிடந்தான். பிறகு தூங்கிப் போனான்.

***

“இவளுக்குக் கையில் ஏதோ ஊனம். இவளை ஏன் நம் வீட்டுக்குக் கட்டிக்கொண்டோம்” என்று மறுநாள் தாயார் இரக்கமின்றிப் பேச ஆரம்பித்தாள். நடேசனுக்குத் தாங்கவில்லை. தாயாருடனும் சண்டையிட்டான். வலியினால் வருந்திக்கொண்டிருந்த மனைவியிடமும் சண்டையிட்டான். இவ்வாறு இரண்டு நாள் கழிந்தது. பிறகு லக்ஷ்மியின் தகப்பனாருக்கு, அவளை அழைத்துப் போகும்படி கடிதம் எழுதினான். அவரும் வந்தார்.

“பிறந்தபோதே உங்கள் மகளுக்குக் கையில் ஏதோ தொந்தரவு இருந்ததாமே? இதை எங்களுக்கு ஏன் சொல்லவில்லை?” என்றாள் பார்வதியம்மாள்.

“அம்மா பிறந்தபோது இல்லை. எப்போதாவது வலிவந்து வீங்கிக்கொள்வதுண்டு. சொல்லாதது எங்கள் தவறுதான். ஊருக்கு அழைத்துப் போய்ச் சொஸ்தப் படுத்திப் பிறகு கொண்டுவந்து விடுகிறேன்” என்று மிகவும் பொறுமையாகவே அவர் சமாதானம் சொல்லி, மகளைச் சுரத்துடன் ஊருக்குக் கூட்டிக்கொண்டு போனார்.

***

“நல்ல இடங்கள் எத்தனையோ இருக்க, ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு இவனுக்கு இந்த நொண்டியைக் கட்டிவிட்டோமே! நம்முடைய கடனைத் தீர்க்க வேறே வழி இல்லாவல் போச்சா? நம் துரதிர்ஷ்டம் இப்படியாச்சே!”

இவ்வாறு வீட்டில் தினமும் பார்வதியம்மாளும் மகள் சீதம்மாளும் பேசிப் பேசி வந்தார்கள். மனைவிக் குச் சுரமும் கைவீக்கமும் குறைந்ததாக நடேசனுக்குக் கடிதம் வந்தது. ஆனால் அவள் இன்னும் படுத்த படுக்கையாகவே கிடப்பதாகச் சமாசாரம் கிடைத்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு மறுபடியும் கை வீங்கின தாகவும் பழையபடி சுரம் அடிப்பதாகவும் கடிதம் வந்தது.

“இது ஜன்மாந்தர வியாதி. நடேசா! இது சொஸ்தமாகிற வியாதி அல்ல” என்றாள் பார்வதி யம்மாள்.

“அப்படியும் இருக்கலாம். நம்முடைய கர்மத்தின் பலனை நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்” என்றான் நடேசன்.

“வேறு கலியாணம் பண்ணிவிட வேண்டியதுதான். என்னால் இனிமேல் பொறுக்க முடியாது” என்றாள் தாயார்.

“கன்னாபின்னா என்று பேசாதே” என்று நடேசன் சொல்லிவிட்டுக் கச்சேரிக்குப் போய்விட்டான்.

அவன் தாலுக்கா கச்சேரியில் குமாஸ்தா.

ஒரு வருஷம் கழிந்தது. பார்வதியம்மாளுக்கு ஒரு தம்பி. அவருக்கு ஒரு மகள்: மீனாட்சி. பன்னி ண்டு வயது. அந்தப் பெண்ணுடன் அவர் ஒருநாள் நடேசன் வீட்டுக்கு வந்தார்.

“எப்பேர்ப்பட்ட பெண், பார்! இவள் அந்தக் காலத்தில் ரொம்பச் சிறிசாயிருந்தாள். இல்லாவிட்டால் அப்போதே உனக்கு இவளைக் கலியாணம் பண்ணியிருப்போம். இவளுக்கு இப்போது எங்கெங்கேயோ வரன் ஏன் தேடிப் போக வேண்டும்? நம் வீட்டுக் குழந்தையாகவே இருக்கட்டும்” என்றாள் பார்வதியம்மாள்.

முதலில் இந்தப் பேச்சை நடேசன் வெறுத்தான். ஆனால் விடாமுயற்சி வீண் போகாது. மறு வருஷம் சித்திரை மாதத்திலேயே திருப்பதியில் சுவாமி சந்நிதானத்தில் நடேசனுக்கு இரண்டாம் விவாகம் முடிந்து விட்டது.

***

அடுத்த ஆறாவது மாதத்திலேயே . மீனாட்சி புருஷன் வீட்டுக்கு வந்து விட்டாள். பார்வதியம்மாள் மீனாட்சியிடம் மிக்க அன்பாக நடந்து வந்தாள். மீனாட்சியும் நல்ல பெண். சுறுசுறுப்பு . சிறு பெண்ணாயிருந்தும் வீட்டு வேலை அவ்வளவும் முதலிலிருந்தே தானாகவே செய்ய ஆரம்பித்தாள். இவ்வாறு எல்லாம் சரியாக இருந்தாலும் நடேசன் உள்ளத்தில் சுகமில்லை. என்னவோ வேதனை பண்ணிக்கொண்டே இருந்தது.

“ஏன். என்னிடம் நீங்கள் பிரியமாக இல்லை?” என்றாள் மீனாட்சி

“பிரியம் ஏன் இல்லை? நான் என்ன செய்துவிட்டேன் உன்னை? அடிக்கிறேனா. திட்டுகிறேனா?..” என்றான் நடேசன்.

“அதெல்லாம் வீண் பேச்சு. உங்கள் மனம் கிருஷ்ணாபுரத்தில் தான் இருக்கிறது” என்றாள் மீனாட்சி.

கிருஷ்ணாபுரம் என்பது லக்ஷ்மி நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஊர். நடேசன் ஒன்றும் பதில் சொல்ல வில்லை.

நடேசனுக்கு மறு விவாகம் ஆன சில நாட்களுக்கெல்லாம் எப்படியோ லக்ஷ்மியின் உடம்பு குணப்பட்டுவிட்டது. கை வீக்கம் இறங்கிவிட்டது. முழுதும் சரியாகவே போய்விட்டது.

“பார்த்தாயா, அவள் வேஷத்தை! இப்போ பிறந்தகத்தில் வீட்டுக்கு வேண்டிய ஜலம் எல்லாம் அவளே இழுத்துக் கொட்டுகிறாளாமே! நம் வீட்டில் நாலு குடம் இழுக்கத்தானே அவளுக்கு முடியாமல் போய் விட்டது” என்றாள் பார்வதியம்மாள்.

“அவள் இங்கே வரப் பார்க்கிறாளாம். வேஷக்காரி நாம் இருக்கிற நிலையில் இந்த அறியாப் பையனுக்கு இரண்டு பெண்டாட்டி வேறே வேண்டுமா!” என்றாள் பார்வதியம்மாள்.

“அது இருக்கட்டும். அம்மா. அவள் நடவடிக் கையைப் பற்றிக் கேட்டாயோ?” என்றாள் சீதம்மாள்.

“அந்த வெட்கக் கேட்டை என்னத்துக்கு எடுக்கிறாய்” என்றாள் தாயார்.

“இதெல்லாம் நடேசன் காதில் விழப்படாது. ஆனால் ஊரார் வாயை அடக்க முடியுமா?” என்றாள் சீதம்மாள்.

ஊரார் வாய் ஒன்றுமே பேசவில்லை. கிருஷ்ணா புரத்தில் எல்லாருக்குமே லக்ஷ்மியிடம் பரிதாபம். “இந்த அநியாயத்தைப் பார்த்தாயா? இரண்டு நாள் கையில் வாயு கண்டதற்காகத் தள்ளிப் போட்டார்களே! இப்படியும் உண்டா உலகத்தில்” என்றார்கள்.

“இரண்டாம் கலியாணம் கூட ஆகிவிட்டதாமே? அநீதி, அநீதி” என்றார்கள் சிலர். “பாவம்! தங்கமான குழந்தை இப்படித் திக்கற்றுப் போச்சு” என்றார்கள்.

“கோர்ட்டுக்கு இழுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்” என்றார்கள் வேறு சிலர்.

இப்படிச் சில நாள் கழிந்தது. முதலில் லக்ஷ்மி முகத்தை வெளியில் காட்ட வெட்கப்பட்டு வீட்டுக் குள்ளேயே இருந்து வந்தாள். எவ்வளவு நாள் அந்த மாதிரி இருக்கமுடியும்? ஆற்றங்கரைக்கும் கோயிலுக்கும் போக ஆரம்பித்தாள். ஆற்றங்கரையில் ஒரு அனுமார் கோயில். தினமும் லக்ஷமி ஆற்றில் முழுகி விட்டு அனுமாரின் முன் பழம் வைத்துக் கும்பிட்டுப் போவாள். “அப்பனே சீதையைக் காப்பாற்றினாயோ என் கதியைக் கொஞ்சம் பாரேன்” என்று வேண்டிக் கொள்ளுவாள்.

இவ்வாறு இரண்டு வருஷம் கழிந்தது. ‘பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ!’ என்று உள்ளத்தைச் சமாதானப் படுத்திக்கொண்டு லக்ஷ்மி தெய்வ க்தி குறையாமலிருந்தாள்.

மாமியாரும் நாத்தனாரும் பேசி வந்த கொடுமைகளைச் சிலர் கிருஷ்ணாபுரத்திலும் பரப்பினார்கள்.

‘ஒன்றும் இல்லாமல் தள்ளி விடுவார்களா? ஏதோ பிசகு நடந்திருக்கிறது’ என்று அந்த ஊரிலும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். பிறகு கற்பனைக் கதைகளையும் சிலர் கட்டி விட்டார்கள். வீட்டிலும் அண்ணனுடைய மனைவி மெதுவாகப் பேச ஆரம்பித்தாள். ‘என்னவான போதிலும் புருஷன் வீட்டை விட்டு எவ்வளவு நாள் வெட்கமில்லாமல் பிறந்தகத்தில் இருக்க முடியும்? இதைவிட நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாமே’ என்று லக்ஷ்மியின் காதில் படும்படியாக முணுமுணுப்பாள். இவ்வாறு பேசுவதைத் தடுப்பார் யாருமில்லை. லக்ஷ்மியின் தாயார் இறந்துபோய்ப் பல வருஷங்களாயிற்று. தகப்பனாருக்கு இப்போது வியாதி கண்டு தேகம் மெலிந்து வந்தது. பிறகு செருப்புக் கடித்த புண் சீழ்பிடித்துக்கொண்டு படுத்த படுக்கையாக மூன்று மாதம் கிடந்தார். லக்ஷமி இந்த மூன்று மாதங்களும் தகப்பனாருக்குப் பணி செய்வதில் ஈடுபட்டுத் தன் துயரத்தை ஓரளவு மறந்திருந்தாள்.

ஒருநாள் தகப்பனார் மகனைக் கூப்பிட்டு “அப்பனே. நான் பிழைக்கப் போவதில்லை. உனக்கு ஒன்று சொல்கிறேன்: எப்படியாவது மாப்பிள்ளையிடம் போய்க் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு லக்ஷ்மியை அந்த வீட்டில் சேர்த்துவிடு; தெய்வம் விட்ட வழியாகட்டும். எனக்குப் பின் அவள் இந்த வீட்டில் இருக்கமுடியாது” என்று சொல்லித் துயரத்தை அடக்கமுடியாமல் விம்மி விம்மி அழுதார். அந்த இரவே அவருக்கு நினைவு தப்பி, மூன்று நாள் அப்படியே கிடந்து பிறகு பிராணன் போய்விட்டது.

***

லக்ஷ்மியின் தமையனும் தகப்பனார் ஆணைப்படி பல முயற்சிகள் செய்தான். ஒன்றிலும் பயன்படவில்லை . “கெட்டுப்போன அவலக்ஷணங்கள் இந்த வீட்டு வாசலை மிதிக்கக்கூடாது” என்றாள் பார்வதியம்மாள். மகள் சீதம்மாளும் அப்படியே சொன்னாள். நடேசனுக்கு இதைப் புறக்கணிக்க மனமிருந்தும் தைரியமில்லை. லக்ஷ்மியின் தமையனிடம், முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

ஆற்றங்கரை அனுமாரை வணங்கிவிட்டு வழக்கம்போல் அவ்விடம் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். லக்ஷ்மி.

“ஏனம்மா அழுகிறாய்?” என்றான் அங்கே நின்ற ஒரு மாட்டுக்காரப் பையன்.

இவனுக்கு லக்ஷ்மி தினமும் அனுமார் சந்நிதியில் பூஜைக்கு வைக்கும் பழத்தை வழக்கமாகக் கொடுப்பாள். அவன் வாங்கிச் சாப்பிடுவான். இருவருக்கும் இவ்வாறு பழக்கம் ஏற்பட்டிருந்தது.

அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தாள்.

“சும்மா அழாதே. அம்மா! சாமி இருக்க, ஏன் அழுகிறாய்?” என்றான் அந்தப் பையன்.

“தம்பி, சாமிக்கு என்மேல் இரக்கமில்லை. செத்துப் போகவேண்டும் என்று எனக்கு ஆசை; சாவு வரவில்லையே என்று அழுகிறேன்” என்றாள்.

“எங்க அக்கா இப்படித்தான் அழுது அழுது ஒருநாள் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அவள் புருஷன் அவளை அடிச்சு அடிச்சு அதைப் பொறுக்க முடியாமல் அவள் அப்படிச் செய்தாள். குடிகாரப் பயல் அக்காளை இப்படிச் செய்துவிட்டான்” என்றான் மாட்டுக்காரப் பையன்.

“அப்பனே. என்னை என் புருஷன் அடித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கட்டும்: அதைப் பொறுத்துக் கொள்ளலாம்”.

“அடிக்காமல் போனால் ஏன் அழுகிறாய்?..” என்றான் அந்தப் பையன்.

“நான் சொன்னால் உனக்குத் தெரியாது. தம்பி! உன் அக்கா செத்துப் போனாள். இப்போ அவள் சுகமாக இருக்கிறாள். நானும் அப்படியே செத்துப் போகலாம் என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் பயமாக இருக்கிறது. என் கூடவா, தம்பி. பெரிய மடுவரையில் வருவாயா?” என்றாள்.

“எங்கே? தண்ணீரிலே விழவா? நான் வரமாட்டேன்” என்றான் பையன்.

“வரமாட்டாயா? சரி, நானே போகிறேன்” என்று சொல்லி அனுமார் முன் மறுபடியும் விழுந்து கும்பிட்டு நீண்ட நேரம் பேச்சில்லாமல் கிடந்தாள். பிறகு எழுந்து வேகமாக நடந்து ஆற்றில் பெரிய மடு வண்டை போனாள்.

“வேண்டாம்! வேண்டாம்! உன் காலில் விழுகிறேன் தாயே எல்லாம் சரியாகப் போகும். தண்ணீரில் செத்தால் பிசாசாய்ப் போவாய், வேண்டாம் ..” என்று மாட்டுக்காரப் பையன் கூப்பாடு போட்டுக் கொண்டு பின்தொடர்ந்து ஓடினான்.

பெரிய மடு என்பது வேனிற்காலத்தில் ஆற்றில் ஆழமான ஓர் இடம். இப்போது பெரும் பிரவாக மாக ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மத்தியான்ன வேளை. யாரும் மனித சஞ்சாரம் இல்லை. மாடு மேய்க்கும் பையன்கள் சிலர் மட்டிலும் அக் கரையில் தூரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு விஷயம் எட்டவில்லை. லக்ஷ்மி தண்ணீரில் குதித்தவுடன் பையன் திகிலடைந்து திரும்பி ஓடி விட்டான்.

***

பார்வதியம்மாள் : – ஆற்றில் விழுந்து செத்தாளாமே. நல்லதாப் போச்சு!

சீதம்மாள் : – நம்ம வீட்டுப் பெயர் இனி எல்லார் வாயிலும் இருக்காது. பிழைத்தோம்.

மீனாட்சி : – துர்மரணமாகச் செத்துப் போனால் பிசாசாகப் போகிறாளாமே!

பார்வதியம்மாள் :- ஆமாம் ! அப்படித்தான் கஷ்டப் படுவாள், படட்டும்.

பார்வதியம்மாளும் சீதம்மாளும் மருமகள் மீனாட்சியும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மீனாட்சி கர்ப்பிணி. ஏழாவது மாதம்.

இரண்டு மாதத்திற்குப் பின் மீனாட்சிக்கு சுகப் பிரசவமாயிற்று: பெண் குழந்தை. நடேசன் வீட்டில் இப்போது மகிழ்ச்சி நிரம்பிற்று. நடேசனுடைய உள்ளம்கூட லக்ஷ்மியைப்பற்றி நிம்மதி அடைந்தது. மரணத்தை ஒரு பெரிய கேடாக எண்ணி வருகிறோம்.

ஆனால் அதுவே பல கஷ்டங்களுக்கும் துக்கங்களுக் கும் நிவாரணம். அது இல்லாவிடில் வாழ்க்கை ஒரு தீரா நரகமாய்ப் போகும். லக்ஷ்மி ஆற்றில் விழுந்து செத்துப் போய்விட்டாள் என்றதும். எவ்வளவு வியா குலங்கள் பல பேருக்குத் தீர்ந்து போயிற்று!

***

பிரசவமாகிப் பத்தாவது நாள். மீனாட்சிக்கு இலேசாகக் சுரம் கண்டது. “ஒன்றுமில்லை. சரியாகப் போகும்” என்றாள் பார்க்க வந்த கிழவி ஒருத்தி.

மறுநாள் மீனாட்சி படுத்த படுக்கையாக ஏதோ கன்னாபின்னா என்று பேச ஆரம்பித்தாள். “சும்மா இரு” என்று அதட்டினாள் மாமியார்.

மீனாட்சி ஒரு விழி விழித்தாள். பிறகு “ஆமாம். சும்மா இருப்பேன்! என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாயோ இல்லையோ? விடுவேனா உன்னை?..” என்றாள். மறுபடி. “நீ குழந்தை பெற்றுவிட்டாயா? யாருடைய குழந்தை இது? கிளம்பு! ஓடு! ஆற்றில் விழுந்து சா” என்று பேயாகக் கத்தினாள் மீனாட்சி.

கண்கள் பயங்கரமாகச் சுழன்று உடல் விறுவிறு வென்று கட்டை போல் ஆயிற்று. கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள். பிறகு படுக்கையை விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள்.

“ஐயோ. அவளுடைய பிசாசம்மா இது” என்றாள் சீதம்மாள் நடுநடுங்கி.

“சுவாமி, அம்மனே, உனக்கு எது வேண்டுமானாலும் கொடுக்கிறேன். மாரியம்மா. எங்களைக் காப்பாற்று” என்று கதறினாள் பார்வதியம்மாள்.

மாரியம்மன் கோயில் பூசாரிக்குச் சொல்லி யனுப்பி ஒரு கோழியைப் பலி கொடுக்க ரகசியமாய்ப் பார்வதியம்மாள் ஏற்பாடு செய்தாள்.

ஜோசியம் சீதாராமையர் வந்து மந்திரம் ஜெபித்து விபூதி கொடுத்தார். விபூதியைக் கையில் வாங்கிப் படுக்கை மேல் வைத்துக்கொண்டு மீனாட்சி கொஞ்சம் சாந்தமானாள். விபூதியின் சக்தியைக் கண்டு எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.

“பூசிக்கொள்” என்றான் நடேசன்.

“பூசிக் கொள்கிறேன்” என்று வெற்றிலை மேல் வைத்திருந்த விபூதியைக் கையில் எடுத்துக் கொண் டாள்.

திடீர் என்று விபூதியை ஊதி இறைத்துப் போட்டு “ஹா ஹா” என்று கதறினாள்.

“விடுவேனா உன்னை? அந்த மாமியாரைக் கூப்பிடு. அவளுக்குச் செய்கிறேன் வேலை! விபூதியைக் கொடுத்து ஏமாற்றப் பார்த்தாளா? என்று உன் மத்தச் சிரிப்புச் சிரித்தாள்.

“ஐயோ பாவி, ஆற்றில் விழுந்து செத்தவள் தான் இது. கொண்டு வா. துடைப்பக் கட்டையை” என்றாள் பார்வதி.

சீதம்மாள் துடைப்பக் கட்டையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பார்வதியம்மாள் அதை வாங்கி மீனாட்சியை இரண்டு மூன்று அடி தலையில் அடித்தாள்.

“ஐயோ. ஐயோ, அடிக்க வேண்டாம். நான் போய்விடுகிறேன். வேண்டாம், வேண்டாம்” என்று கதறினாள் மீனாட்சி.

“போ! போ” என்று மறுபடியும் அடிக்க ஆரம்பித்தாள் பார்வதியம்மாள்.

“போதும் போதும்” என்று தடுத்தான் நடேசன்.

“உனக்குத் தெரியாது. நடேசா நீ தூரப் போம்” என்று கத்தினாள் பார்வதியம்மாள்.

***

இவ்வாறு ஐந்து நாள் பிசாசு வேட்டை நடந்தது. ஒன்றும் பயனில்லை. பைத்தியம் அதிகமாயிற்று.

“இது சூதிகா வாயு” என்றார்கள் சிலர். “இது ஒரு கறுப்பு” என்றார்கள் வேறு சிலர்.

“ஐயோ, இது அவள் தான்” என்றாள் சீதம்மாள்.

“கோழி கொடுத்தது போதாது. அம்மன் பெரிய பலி கேட்கிறது, வெள்ளாடு கேட்கிறது” என்றான் பூசாரி ரகசியமாகப் பார்வதியம்மாளிடம். அதற்கும் பார்வதியம்மாள் நடேசனுக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்தாள். ஆனால் ஒரு நன்மையும் ஏற்படவில்லை.

“இதுவும் என் தலை விதியா, ஈசனே” என்று நடேசன் அலறி அலறித் திகைத்துக் கிடந்தான்.

***

நாலு அமாவாசை தீர்ந்தால் சரியாய்ப் போகும் என்று விபூதி கொடுத்த ஜோசியம் சீதாராமய்யர் சொன்னபடி நாலு மாதம் கழித்து மீனாட்சிக்குச் சுகப்பட்டுவிட்டது. எல்லாம் ஒரு பெரிய கனவுபோல் தீர்ந்தது. இப்போது வீட்டில் ஒரு புது அமைதியும் பக்தியும் ஏற்பட்டது . லக்ஷ்மியைப்பற்றி ஓரளவு எல லாருக்கும், பார்வதியம்மாளுக்குங்கூட மரியாதை உண்டாயிற்று. அவளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். மீனாட்சி புருஷனிடம் மிக்க அன்பாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டாள். தான் ஏதோ மெய்மறந்து தவறுகள் செய்துவிட்டதாக அவளுக்கு ஒரு வெட்கம். எப்படியோ தப்பினோம் என்று அதைப்பற்றி ஒன்றும் பேசாமல், எல்லாரும் சாமர்த்தியமாக நடந்துகொண்டார்கள்.

***

ஒரு வருஷத்திற்குப் பின் மீனாட்சி மறுபடியும் கர்ப்பம் தரித்தாள். பார்வதி ரொம்ப ஜாக்கிரதையாகக் கோயில்களுக்குப் பகிரங்கமாகவும் ரகசியமாகவும் வேண்டிக்கொண்டு பூஜை பலி எல்லாம் நடத்தினாள். பிரசவகாலம் நெருங்கியதும் நடேசன் பக்கத்து ஊரான பாகலூரில் பாதிரியார் நடத்திவந்த ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியைத் தருவிப்பதற்கு ஏற்பாடு செய்தான். உள்ளூர் மருத்துவச்சி போன தடவை உதவியதில் பிசகு ஆயிற்று. இந்தப் பிரசவத்திற்குத் தேர்ச்சி பெற்ற மருத்துவச்சி வருவது நலம் என்று எல்லாருமே ஆட்சேபனை சொல்லாமல் ஒப்புக்கொண்டார்கள்.

***

மீனாட்சியின் இரண்டாவது பிரசவம் யாதொரு கஷ்டமுமின்றி முடிந்தது. ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் போது பக்கத்தில் ஆஸ்பத்திரி மருத்து வச்சி இருந்தாள். ஒரு மாதம் வரையில் தினம் ஒரு தடவை வந்து பார்த்துப் போனாள். தாய்க்குப் புத்தி மாறாட்டம் ஏதும் உண்டாகாமல் குழந்தைக்குப் பால் கொடுத்து வந்தாள். சென்ற தடவைபோல் ஏதாவது கோளாறு உண்டாகுமோ என்று நடேசன் மிகவும் பயந்திருந்தான். அப்படி எதுவும் உண்டாகாமல் எல்லாம் சரியாக நடந்ததில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கேயோ கடன் வாங்கி மருத்துவச் சிக்குப் பத்து ரூபாய் கொடுக்கப் போனான். “வேண்டாம்” என்று அவள் மறுத்து விட்டாள்.

“என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் தாயே! கோபித்துக் கொள்ள வேண்டாம். எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினான்.

“வேண்டாம். இந்தப் பிரசவத்திற்கு நான் பணத்திற்காக வரவில்லை. அன்பு காரணமாகவே வந்தேன்” என்று சொல்லிவிட்டு, மீனாட்சியின் பெண் குழந்தையைத் தூக்கி எடுத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து, “நான் போய் வருகிறேன், மீனாட்சி” என்று விடை பெற்றுக்கொண்டு போய்விட்டாள்.

மருத்துவச்சி தன்னுடன் பேசியபோது நடேசனுக்கு முதல் மனைவி நினைவு வந்தது. அதைப்பற்றி ஞாபகப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டான்.

***

“சாந்திதேவி அந்த வீட்டில் நீ போயிருந்த போது உன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையா?” என்றார் பாகலூர் ஆஸ்பத்திரிப் பாதிரியார். சாந்திதேவி என்பது லக்ஷ்மியின் புதுப் பெயர்.

“ஆஸ்பத்திரி வேஷம் காப்பாற்றிற்று. பெண்டுகளுக்குக் கொஞ்சங்கூடத் தெரியவில்லை. பிரசவ ஸ்திரிக்கு என் அடையாளமே தெரியாதல்லவா? புருஷர் என்னை உற்றுப் பார்க்கவில்லை. மரியாதையாக விலகி நின்றார். கடைசி நாள் நான் பேசிய போது மட்டும் கொஞ்சம் ஏதோ சந்தேகப்பட்டது போலிருந்தது. ஆனால் என் முக்காட்டை இழுத்து முகத்தைப் பாதி மூடிக்கொண்டு சமாளித்துவிட்டேன்..

“சரி, உன் மனம் நிலையிலிருக்கிறதா?.”

“இருக்கிறது. அப்பனே! நோயாளிகளுக்கு சிச்ரூஷை செய்வதில் எனக்குச் சாந்தி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் என்னை ஆற்றிலிருந்து எடுத்துப் போட்டுக் காப்பாற்றாமலிருந்தீர்களானால் நான் பிசாசாகத் தானே போயிருப்பேன். அந்த மாட்டுக்காரப் பையன் சொன்னபடி!”

பாதிரியார் சிரித்தார். “பிசாசு கிசாசு ஒன்றும் கிடையாது. அது மூடர்கள் பேச்சு. ஆனால் நீ சந்தோஷமாக இருக்கிறாயா?” என்றார்.

“சந்தோஷமில்லை. ஓரளவு சாந்தி அடைந்திருக்கிறேன். அவ்வளவு போதும். கடவுளும் நீங்களும் இருக்கிறீர்களல்லவா?” என்றாள்.

“புருஷனிடம் போயிருக்க உனக்குச் சம்மதமா? நான் எல்லாம் விவரமாகச் சொல்லி ஏற்பாடு செய்யமுடியும்” என்றார்.

“வேண்டாம். அப்பனே அந்த அறியாப் பெண் சுகமாக இருக்கிறாள். அந்தச் சுகத்தை நான் ஏன் போய்க் கெடுக்க வேண்டும்? இந்த நோய்ச் சிசுரூஷை வேலையில் எப்படியோ நான் காலந்தள்ளி வருகிறேன்” என்றாள்.

“புருஷனிடம் போயிருக்கப் பிரியம் இல்லாவிட்டால், ஏன் நீ ஞான ஸ்நானம் செய்து எங்களோடு ஒன்றாக இருக்கக்கூடாது?” என்றார் பாதிரியார்.

“அனுமார் கோபித்துக் கொள்வார்!..” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

அடுத்த தீபாவளியன்று சாந்தி தேவி ஒரு கட்டுப் பட்டாசும் ஒரு பெரிய பொட்டணம் மிட்டாயும் கொஞ்சம் பூவும் வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு மீனாட்சியின் ஊருக்குப் போனாள். வீட்டு வாசலில் மீனாட்சியின் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது.

“கமலா. இந்தா உனக்குப் பட்டாசு” என்றாள். குழந்தை ஓட்டமாக ஓடி வந்தாள். பிரசவம் பார்த்த மாமியின் அடையாளத்தைக் கண்டு கொண்டாள். பட்டாசும் மிட்டாயும் கையில் வாங்கிக்கொண்டு பூவைச் சூட்டத் தலையைக் காண்பித்தாள். லஷ்மியும் புஷ்பத்தைச் சூட்டிக் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்து வீட்டுக்குள் அனுப்பினாள்.

“அம்மா! அம்மா..” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு கமலம் தாயாரிடம் போய் விஷயத்தைச் சொன்னாள் .

‘அந்த மருத்துவச்சி ரொம்ப நல்லவள் போலிருக்கிறது” என்றாள் மீனாட்சி, மாமியாரிடம்.

பார்வதியம்மாளும் நடேசன் வீட்டுக்கு வந்ததும் ஆஸ்பத்திரி மருத்துவச்சி அன்று வந்து குழந்தைக்குப் பட்டாசும் மிட்டாயும் கொடுத்துப் போனாள் என்று சொல்லிச் சந்தோஷப்பட்டாள்!

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது. டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே…மேலும் படிக்க...

1 thought on “சாந்தி

  1. 1940களிலிருந்து நமது சமுதாயம் மாறவே இல்லை. பெண்களுக்கு எதிரி பெண்களே:(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *