சாந்தி எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 226 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மறுநாள் வரலக்ஷ்மி விரதம். அவள் அதிருஷ்டம் – ஏன்? புண்ணியம். அந்தப் பழைய சிறிய வீட்டின் சுவர்கூடக் கொஞ்சம் சுண்ணாம்பைக் கண்டிருந்தது. சாஸ்திரம்,சம்பிரதாயம் இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அவளுக்குச் சித்திரக் கலையிலுள்ள ஆர்வத்தைக் காட்ட வரலக்ஷ்மி விரதம் பயனுள்ளதாயிற்று. வேண்டிய சாதனங்கள் – காவிக் கட்டி, கொட்டங்கச்சி, தேங்காய் நார், இத்தியாதிகளை யெல்லாம் சுறுசுறுப்பாகத் தயார் செய்துகொண்டு, சித்திரம் எழுத உட்கார்ந்தாள் ராஜி. 

சில நிமிஷங்களில் சுவரில் லக்ஷ்மி பிரசன்னமாகிவிட்டாள். மேற்கொண்டு எடுபிடி சாமான்கள்: யானை, தாமரைப்பூ,வாழை மரம். சுவர் முழுவதும் ஒரே காவிக்கோடு. ராஜி, தான் எழுதிய சித்திரத்தைப் பார்த்துத் தானே வியந்துகொண்டாள். தனக்குச் சித்திரம் எ எழுதுவதிலுள்ள திறமையைப் பார்த்து அவளே பிரமித்து விட்டாள். அவளை அறியாமல், “ஆஹா! என்ன அழகு !” என்றுகூட வாய்விட்டுச் சொன்னாள். 

அவளுக்குப் பின்னாடி யாரோ ‘களுக்’கென்று சிரிப்பதைக் கேட்டுத் திரும்பினாள். மணி நின்று கொண்டிருந்தான். அவள் முகம் மலர்ந்தது. “ராஜி சுவரிலே என்ன எழுதி யிருக்கே?” என்றான் மணி. 

“இது தெரியவில்லையா? லக்ஷ்மி” என்று பெருமையோடு சொன்னாள் ராஜி. 

“லக்ஷ்மியா! சரிதான். எனக்குப் புரியல்லே. நான் ஏதோ துஷ்ட தேவதேன்னு நினைச்சேன்” என்று பரிகாசம் கலந்த குரலில் சிரித்தபடியே சொன்னான் மணி. 

அவள் அவனிடமிருந்து இம்மாதிரி வார்த்தையையே எதிர் பார்க்கவில்லை. அவன் சொன்ன இப்பரிகாச மொழிகளால் அவள் உள்ளத்திலுள்ள பெருமையும் ஆனந்தமும் சின்னபின்னம் அடைந்தன. வெட்கமும் துக்கமும் அவளுடைய அழகிய வதனத் தைக் கருமையடையச் செய்தன. அவள் மணியின் முகத்தை நோக்கினாள். அவன் அந்தச் சுவரில் பிரசன்னமாகி யிருந்த லக்ஷ்மியைப் பார்த்துக்கொண்டே,”ஏன் இப்படி நல்ல சுவரை யெல்லாம் வீணாயடிக்கிறாய்?” என்றான். 

அவனுடைய பரிகாச நகைப்பு ஓயவில்லை. ராஜியின் உள்ளத்திலிருந்து அழுகையும், கோபமும் முண்டி முரணிக்கொண்டு வந்தது. “நீ நன்னாப் படமெழுதறே. கெட்டிக்காரன். இருந்தாலும் உனக்கு இவ்வளவு கர்வமும் ராங்கியும் இருக்கக் கூடாது” என்று படபட வென்று சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டாள். 

ராஜியின் கோபத்தை அவன் லக்ஷ்யம் செய்யவில்லை. ஏன்? இது சகஜம். சிறு குழந்தையிலிருந்து அவள் எத்தனையோ தடவை கோபித்துக்கொண்டிருக்கிறாள். நிபந்தனையில்லாத சமாதானங்கள் எத்தனையோ தடவை ஏற்பட்டிருக்கின்றன. மணி ராஜியை அதோடு விடுவதாக இல்லை. அவளை இன்னும் பரிகாசம் செய்து அழவைக்க நினைத்தான். அதை அவன் பொழுதுபோக்கிற் கான விளையாட்டாய் நினைத்தான். அதற்கு எப்பொழுது சந்தர்ப்பம் சரியாக இருக்கும் என்பதை யோசித்துக்கொண்டே தன் வீட்டிற்குப் போனான். 

மணி சித்திரம் எழுதுவதில் ஆர்வமுள்ளவன். நன்றாகச் சித்திரம் எழுதுவான். அக்கிரகாரத்தில் பெரிய வீடு அவன் வீடுதான். நல்ல ஐவேஜி. அதிகம் படித்தவனாய் இல்லாவிட்டாலும், நல்ல புத்திசாலி. அவனுக்குப் பொழுதுபோக்கு, சித்திர மெழுதுவது; மற்ற நேரங்களில் குஞ்சு ஐயர் பெண் ராஜியுடன் பரிகாசமாக ஏதாவது விளையாடிக் காலத்தைக் கழிப்பது. 

சதா சர்வ காலமும் சித்திரம் எழுதிக்கொண்டும், அவைகளிலேயே ஆராய்ச்சி செய்துகொண்டும் இருக்கிற மணிக்கு ராஜியின் ‘லக்ஷ்மி’ கொஞ்சம் ஏளனத்தைத்தான் உண்டாக்கியது. தவிர, பால்யதசை தாண்டாத அவனுக்குத் தான் அழகாகச் சித்திரம் எழுதுவதில் கர்வமடைய இது காரணமாகாதா? ராஜி எழுதிய சித்திர லக்ஷ்மி அன்று இரவு கனவில் கூடக் காட்சியளித்து அவனுக்குச் சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தாள். 

அன்று வரலக்ஷ்மி விரதம். இரவு போட்டு வைத்திருந்த திட்டப்படி மணி ராஜியின் அகத்துக்கு வந்தான். அவள் எழுதிய லக்ஷ்மியை மறுபடியும் பார்த்துப் பரிகாசம் செய்ய அவனுக்கு ஆசை. ஆனால் அவன் நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது நிலைமை. நேற்று அந்தச் சுவரை எடுபிடி மகர தோரணங்களுடன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கஜலக்ஷ்மி, ஒரு சாமானைக் கூடப் பாக்கிவிடாமல் எடுத்துக்கொண்டு அந்தர்த்தானமாகி விட்டாள். மணி அதைப் பார்த்துப் பரிகாசம் செய்த பிறகு அழிப்பதற்குத் துளிக்கூடத் தயங்கவில்லை ராஜி. ஆனால் அதை அவள் அழித்ததனால் மணி தான் ஏதோ ஒரு பெரிய பொருளை இழந்து விட்டவன்போன்ற துக்கமடைந்தான். அவன் எவ்வளவு ஆர்வத்தோடு வந்தான்,பாவம்! அவன் எண்ணத்தைப் பாழாக்கி விட்டு லக்ஷ்மி மறைந்துவிட்டாள். ராஜியைக் கிண்டலாகப் பரிகாசம் செய்வதற்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை இழந்த அவன் ஏன் துக்கப்படமாட்டான். 

ராஜி வந்தாள். “ராஜி, ஏன் அந்த லக்ஷ்மியை அழித்துச் சுவரை அலங்கோலப்படுத்தியிருக்கே?” என்றான். 

அவளுக்குக் கோபம் பீறிக்கொண்டு வந்தது. “முன்னே இருந்த அலங்கோலத்துக்கு இது தேவலை. இனிமே சொல்லிப் பிட்டேன் மணி, நீ என்னோடே பேச வேண்டாம்.” 

“நிஜமாவா சொல்றே? 

அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அந்த விறைப்புத் தளராமலேயே உள்ளே போய்விட்டாள். 

மணி அப்பொழுதுகூட நகைத்தான். “இது எத்தனை நாளைக்கு?” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

ஒரு வாரம் ஆயிற்று. ராஜி மணியோடு பேசவேயில்லை. அவன் முகத்தைக்கூட அவள் சரியாகப் பார்ப்பதில்லை.மணியும் தளர்ச்சியடையாமல்தான் இருந்தான். அவளாகத்தான் நம்மோடு பேசட்டுமே என்ற பிடிவாதத்துடன் இருந்தான். 

திடீரென்று ஒரு மாறுதல். நெடு நாளாக மணி விருப்பங் கொண்ட விஷயம் பலித்தது. சித்திரகலை விஷயமாக ஆராய்ச்சி செய்ய, அவன் கல்கத்தா போக விரும்பினான். அவனுடைய தகப்பனார் அப்போதுதான் அனுமதி கொடுத்தார். அவனுடைய சந்தோஷத்திற்கு அளவில்லை. மறுநாளே புறப்படத் தயாரானான். ஊரில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டாகி விட்டது, ராஜி யைத் தவிர. அவள்தான் அவனைக் கண்டதும் திரும்பிப் பார்க் காமல் ஓடுகிறாளே! பிடிவாதமான மனத்தைச் சிறிது தளர்த்திக் கொண்டு அவளிடம் விடைபெறப் போனான். வாசற்படியில் நின்றுகொண்டிருந்த ராஜி மணியைக் கண்டதும் உள்ளே ஓடினாள். “ராஜி” என்று கூப்பிட்டு நிறுத்திவிட்டான். ஆனால் அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. “நான் கல்கத்தா வுக்குப் போகிறேன்.”-இன்னும் ஏதோ அவன் சொல்ல நினைத் தான். அதற்கவள் துளியும் இடந்தராதவள் போல் “சரி” என்று அலக்ஷ்யத்துடன் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். அவன் வெட்கத்துடன் வீடு திரும்பினான். 

மணி கல்கத்தாவிற்கு வந்து மூன்று வருஷகாலமாகிவிட்டது. இன்னும் அவன் ஆராய்ச்சி ஓயவில்லை. கல்கத்தா நகரம் அவனைப் பிடித்துக்கொண்டது. அவனுக்குத் தன் சொந்தக் கிராமத் தைப்பற்றிய சிந்தனையே இல்லை. அவன் எப்பொழுதாவது ராஜியை நினைத்துக்கொள்ளுவான். ஆனால் அது அவனுக்குப் பெரிய கிளர்ச்சியை உண்டாக்குவதில்லை. அவன் செய்துகொண் டிருந்த காரியமெல்லாம், சித்திரமெழுதுவது, அதைப்பற்றிச் சர்ச்சை செய்வது – இவைகளே. அதையே அவன் தன் வாழ்க்கை வாழ்க்கையின் இன்பம்-வாழ்க்கையின் பொருள் என்று எண்ணினான். 

ரகுராமன் ஒரு கலா ரஸிகன். கல்கத்தாவில் அவன் ஒரு கம்பெனியில் வேலையில் இருந்தான். அவனுக்குச் சித்திரம் எழுதத் தெரியாவிட்டாலும் அதிலுள்ள குற்றங்குணங்களை எடுத்துச் சொல்வதில் சமர்த்தன் என்பது மணியின் அபிப்பிராயம். இதன் காரணமாகவேதான் மணி ரகுராமனின் நட்பை விரும்பினான். “மிஸ்டர் மணி, நான் நன்றாகச் சித்திரம் எழுதக்கூடிய பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். அவள் எப்பொழுதும் சித்திரம் எழுதிக்கொண்டே இருக்கவேணும்; நான் அதைப் பார்த்து ரஸித்துக்கொண்டே இருக்கவேணும் என்பான் ரகு அடிக்கடி மணியிடம். “அதெல்லாம் முடியாது ஸார். நம் நாட்டிலே, அதுவும் தமிழ் நாட்டிலே, அப்படிப்பட்ட பெண் சல்லடை போட்டுச் சலித்தால்கூட அகப்படமாட்டாள்” என்பான் மணி. 

மணியின் வார்த்தை பொய்யாகிவிட்டது. ரகு சல்லடை போட்டுச் சலித்தானோ, வலைபோட்டுப் பிடித்தானோ, தமிழ் நாட்டிலிருந்து நன்றாகச் சித்திரம் எழுதக் கூடிய பெண்ணை விவாகம் செய்துகொண்டு கல்கத்தா வந்துசேர்ந்தான். 

ரகுவின் மனைவி எழுதிய படங்களைப் பார்ப்பதற்காக ஒரு நாள் மணி ரகுவின் வீட்டிற்குப் புறப்பட்டான். ரகு வாசலி லிருந்து உபசாரம் செய்தபடியே அவனை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போனான். சுவரில் வரிசையாக அநேக வர்ணப் படங்கள் மாட்டியிருந்தன. மணி அவைகளைப் பார்த்துப் பிரமித்தான். ”ரகு, நீங்கள் உண்மையில் பாக்கியசாலிதான்” என்று மணியை அறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன. ஒவ்வொரு படத்தையும் உற்றுப் பார்த்து, “ரொம்ப நன்றாய் இருக்கிறது” என்று தன் திருப்தியைத் தெரியப்படுத்திக் கொண்டான் மணி. அவர்கள் இருவரும் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, ரகுவினுடைய மனைவி இரண்டு கிண்ணங்களில் காபியை எடுத்துக்கொண்டு அவர்கள் எதிரில் பிரசன்னமானாள். 

மணி தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். திடுக்கிட்டு விட்டான். அவன் கால்கள்கூடத் தள்ளாட ஆரம்பித்தன. ஏதோ சொப்பன உலகிற்கு வந்துவிட்டவன் போல் மெதுவாக நாற்காலியைப் பிடித்துக்கொண்டு அதில் அமர்ந்தான். ஆம்! ராஜியும் தன் கையிலுள்ள காபிக் கிண்ணங்களைத் தவறவிடாமல் மேஜை மீது வைக்க மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள். ஆனால் ரகுவின் ஆத்திரம், இவைகளை யெல்லாம் கவனிக்கச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. “ராஜி! இவர்தாம் மணி – நான் சொல்லவில்லை?- என்னுடைய சிநேகிதர். நன்றாகச் சித்திரம் எழுதுவார். நீ எழுதினதை யெல்லாம் காட்டினேன். ரொம்ப அழகு, ரொம்ப நன்றாயிருக்கென்றார்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தான். மணி தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். யாரைப்பற்றி நினைக்க அவனுக்கு ஒரு நிடிஷங்கூட அகப்பட வில்லையோ, அவளைப்பற்றிய நினைவு இப்பொழுது அவன் மனத்தை அட்டையாகப் பிடித்து உரிஞ்சியது. அதைச் சமாளிப்பதற்காகத் தான் தலையைக் குனிந்துகொண்டு பிரயத்தனம் செய்ய ஆரம்பித்தான். 

ராஜியின் குழம்பிய மனத்திலிருந்து எப்படித்தான் இப்படிப் பட்ட தெளிந்த வார்த்தைகள் வெளிவந்தனவோ! “ரொம்ப சந்தோஷம். என் மனத்திலிருந்த குறையெல்லாம் இப்படிப்பட்ட பெரியவாளுடைய ஆசியினாலேயே நிவர்த்தியாகிவிட்டது. இனி மேல் நான் குறைப்பட ஒன்றுமே இல்லை” என்றாள். 

மணியின் மனத்தில் இவ்வார்த்தை ரணத்தைக் கத்தி கொண்டு கிளறுவதுபோல் பட்டது. அவன் ஒருவிதமாகச் சுதாரித் துக்கொண்டு, “நான் ஒரு பெரிய நிபுணன்னு சொல்லிக்கொள்ள என்னிடம் அப்படியொன்றும் இல்லை. நான் பெரிய நிபுணன்னு கர்வப்பட்டால் வெட்கப்படத்தான் நேரும்” என்றான். 

ரகு இப்பொழுது வாயைப் பொத்திக்கொண்டிருக்க இஷ்டப் படவில்லை. “பெரிய நிபுணர்களெல்லாம் எப்பொழுதும் தங்களைக் குறைத்துக்கொண்டுதான் பேசுவது வழக்கம்” என்று உபசார வார்த்தை சொன்னான். இதற்குப் பதில் சொல்லும் சுறுசுறுப்பு அப்பொழுது மணியிடம் இல்லை. “மணி, அடாடா! காபி சாப்பிடுங்கோ. ஆறிப் போறதே!” என்றான் ரகு. 

ராஜி அங்கு நிற்கப் பிரியப்படாதவளைப்போல் உள்ளே போய்விட்டாள். மணி ரகுவிடமிருந்து அவன் மனைவி எழுதிய படம் ஒன்றை ஞாபகார்த்தமாகப் பெற்றுக்கொண்டு அவனுடைய பலவந்த உபசாரங்களிலிருந்து தப்பித் தன்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தான். 

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்; அவனுக்கு நேற்றுவரையில் புராணக்கதைபோல் இருந்தது.ஆனால் இன்று நேற்று நடந்ததுபோல் அவன் மனக்கண்ணுக்குப்பட்டது. அவன் எதைக் குறித்து ஆச்சரியப்படுவான்? வருத்தப்படுவான்? அவன் மனக்கடல் ‘ராஜீ, ராஜீ” என்று ஓலமிட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய மனத்தில் எழுந்த கேள்விகளுக்கு அவனால் விடைகூற முடியுமா? ‘அவ்வளவு சிறியவளாய் இருந்த ராஜி? எவ்வளவு உயரம் வளர்ந்துவிட்டாள்! எவ்வளவு அழகாய் இருக்கிறாள்! அடாடா! எப்படிச் சித்திரம் எழுதுகிறாள்! என்னை விட நன்கு எழுதுகிறாளே! என்னை அவமானப்படுத்தத்தான் – என் கர்வத்தைக் குலைக்கத்தான் இவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். இல்லை – அவளை நான் அப்படிப் பரிகாசம் செய்யலாமா? அவள் முதல் முதலில் எழுதிய சித்திரத்தைக் கண்டு பரிகாசம் செய்தோமே; அதை எவ்வளவு ஆர்வத்தோடும் ஆசையோடும் அவள் எழுதியிருப்பாள் என்று சிந்தித்தோமா? காலில் இடறிய தனத்தைக் கைவிட்ட கபோதிபோலல்லவா நான் ஆகிவிட்டேன்? நான் எவ்வளவு துரதிருஷ்டசாலி! இனிமேல் நான் எதற்காக வாழவேண்டும்? சித்திரக் கலைக்காகவா? – அதை வளர்க்கும் சக்தி? ஆமாம்! அது என்னிடம் இல்லை. அது ரகுராமனிடம் போய்ச் சிக்கிக்கொண்டுவிட்டது. அவன் பாக்கியசாலி’ அவன் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க இந்தக் கேள்விகளும், விடையும், குழப்பமும் போதாவா? 

மறுநாள் பொழுது விடிந்தது. மன நிம்மதிக்காகச் சித்திரம் எழுதலாமென்று உட்கார்ந்தான். ராஜி எழுதிய சித்திரம் சுவரில் மாட்டியிருந்தது. ஒரு சவக்குழி – சமாதி: அதன்மீது ஒரு பெண் சாய்ந்து அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். கீழே ‘சாந்தி’ என்று எழுதியிருந்தது.- இதுதான் ராஜி எழுதிய சித்திரம். 

மணி தூரிகையை வர்ணத்தில் தோய்த்துக் குறையாயிருந்த ஒரு படத்தைப் பூர்த்தி செய்யப்போகும்பொழுது அப்படம் அவன் கண்ணில் பட்டது. அவன் கண்களில் அவனை அறியாமல் நீர் பெருகிற்று : கை நடுங்கிற்று. “சாந்தி” என்று ஒரு முறை சொன்னான். “சாந்தி எங்கே? சமாதியிலா?” சட்டென்று எழுந்து அப்படத்தைத் திருப்பி வைத்தான். மறுபடியும் எழுத ஆரம்பித்தான். அப்படத்தைத் திருப்பி வைத்ததனால் உலகமே மாறிவிட்டதா? மனம் நிம்மதி யடைந்துவிட்டதா? அவன் மனத் திரையில் பரிகாச நகை செய்துகொண்டிருக்கும் ராஜியின் உருவத்தை அழிக்க முடியுமா? திரைபோட்டு மறைக்க முடியுமா? அவன் மனக்குழப்பத்தோடு கறுப்பு வர்ணத்தில் கோலைத்தில் வைத்தான். எந்த முட்டாள்தான் இப்படி ஓர் அழகான படத்தை வீணாயடிப்பான். அவன் பைத்தியம் பிடித்தவன்போல் திரும்பி உட்கார்ந்தான். அவன் கையிலிருந்த தூரிகை நழுவிக் கீழே விழுந்தது. ‘சாந்தி எங்கே?’-‘சவக்குழியில்தான்’ என்ற கேள்வியையும் விடையையும் அவன் மனமே சொல்லிக் கொண்டது.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *