உன்னை போல் நானும் ஒரு சாதாரணப் பொண்ணுதான். எல்லா விதத்துலேயும் சாதாரணந்தான். நம்மநாட்டுல சாதாரணப் பொண்ணுங்கதானே அதிகம்? உலக நாடுங்கள்ல பொண்ணுங்க தலைவிகளா வந்துநிறைய சாதிச்சிருந்தாகூட நாம இன்னும் சாதாரணம் தானே? நம்மை நாமே ஏமாத்திக்க வேணாம். எதையோசொல்லப் போக என்னத்தையோ சொல்றேன்… என் புத்தி எங்கேயோ திரியுது…
நீ என்னை கேட்டியே…ஒரு சாதாரண பொண்ணுக்கு வாழ்க்கையிலே எப்போ ஓய்வு?
என் வாழ்க்கையைஉதாரணமா சொல்றேன்… நீ புரிஞ்சுக்கவே. ஏன்னா நீயும் சாதாரணப் பொண்ணுதானே?
எனக்கு சின்ன வயசு…
“ஏண்டி சும்மா நிக்கற? போய் தம்பிய குளிப்பாட்டி விடு…போ…போ…”
தம்பி அடம் பிடச்சான். அவன் முதுகில லேசா தட்டினேன். அவன் அலற, அம்மா என் முதுக பதம்பாத்துச்சு. அன்னிக்கி முழுக்க எனக்கு திட்டு, தலையில குட்டு, பட் பட்டுனு தட்டு.
எனக்கு இரண்டு அண்ணனுங்க, அக்கா – இவங்க அளவு எனக்கு படிப்பு ஏறலை. பாட்டு பாடறதுன்னாபிடிக்கும். பாட்டு கிளாஸ் அனுப்ப வீட்ல வசதியில்லை. படிப்பும் இல்லே, பாட்டும் இல்லே…எப்பவாச்சும்தனியா இருக்கப்போ பாடுவேன் மனசுல பட்டாம்பூச்சி பறக்கும்…ஆனா, நீடிக்காது…அம்மா அடுத்தவேலைக்கு கூப்டும். ஓய்வு? ஓட்டம்தான்.
காலம் ஓடிச்சு. எனக்கு வயசு வந்துட்டதாம். கல்யாணமாம். எனக்குன்னு ‘சம்’ முன்னு மாப்ளே வருவாராம். நான் பாட்டு கத்துக்க மாப்ளே சரின்னு சொன்னாலும் சொல்வாராம். ஆசை காட்டி ஏமாத்தினாங்க…அப்பறம்தான் தெரிஞ்சது. முன்னாலேயே தெரிஞ்சிருந்தாலும் நான் என்ன செஞ்சிருப்பேன்? ஒரு குரல்அழுதிருப்பேனா?
மாப்பிள்ளைக்கு என் பாட்டுலயா கவனம்? கல்யாணமாகி அடுத்த வருசமே முத குழந்தை…எனக்கு இருபத்திஎட்டு வயசுக்குள்ளே அடுத்தடுத்து நாலு பொறந்துடுச்சி.
சின்ன வயசுல என் தம்பியை பாத்துகிட்டது எவ்ளோ வசதியாயிடுச்சி…? “பாத்தியாடி, நீ தம்பியை வளத்த அனுபோவம் இப்ப கைகூடி வருது…” அம்மா அடிக்கடி இடிச்சி காட்டும். என்னை நல்லா பழக்கிட்டதாபெருமைப் பட்டுக்குது அம்மா.
மாப்பிள்ளைக்கு அடிக்கடி வெளியூர் பயணம்; நாலு பிள்ளைங்கள கட்டிக் காக்கறது என் பிரச்னை. அய்யோ…தப்பா சொல்லிட்டேன் என் கடமைதானே? வெளியூர்ல அவருக்கு ‘ஜோலி’ யோட ‘ஜாலி’ யும் இருந்திச்சாம்… கட்டினவனை தட்டி கேக்கமுடியுமா? அய்யோ, படியளக்கும் சாமியாச்சே!? என் வாயைப் பொத்திட்டாங்க.
நான் படிச்சிருந்தா? பாட கத்துகிட்டு சினிமாவுல பாட போயிருந்தா…ம்ம்…நான்தான் சாதாரணபொண்ணாச்சே…அப்டி போவ முடியலே.
என் புள்ளை பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி அவங்கவங்க குடும்பத்தோட போயிட்டாங்க. எனக்கும்ஐம்பத தாண்டிடுச்சு. எதையுமே பொறுமையா ஏத்துக்கற வயசுன்னு நினைக்கறப்ப பாழாப்போன மனசுஏத்துக்க மாட்டேங்குதே.
மாப்ளேக்கு வேலை ஓய்வாம். இத்தன வருசமா குடும்பத்துக்காக ஓடி ஆடினாராம். ரொம்ப உழைச்சாராம். எப்பவுமே அவரு மனசு கோணாம நான் நடந்துகணும்னு என் அப்பங்காரன் சொல்லிட்டு கண்ணை மூடினான். அம்மா அதுக்கு முன்னாடியே போச்சு.
‘நீ மட்டும் உன் குடும்பத்துக்காக உழைக்கலையான்னு என்னை கேக்கறயா?’ எனக்கு சிரிப்பு பொத்துகிட்டுவருது.
அடி பைத்தியமே! நானும் நீயும் செய்யறது உழைப்பு இல்லடி…நம்ம கடமை!! நாம செய்ற எல்லாத்தையும்உழைப்புன்னு நினைச்சு இதுலேருந்து நமக்கு ஓய்வு கிடைச்சிரும்னு நீ நினக்கிறயா? உலகம் தெரியாதலூசுங்க நாம…சாதாரணப் பொண்ணுங்க…
இன்னும் சொல்லிகிட்டே போவலாம். கடைசியா ஒண்ணு…
மாப்பிள்ளக்கி லிவரு கெட்டுப் போய் என்னை தனியாக்கிட்டு போயிட்டாரு. அம்மா நீ தனியாஇருக்கியேன்னு, நாலு வாரிசுங்க என்னை மாத்தி மாத்தி வரிசையா அவங்க வீட்டுல வைச்சிகிட்டாங்க. ‘அம்மாவந்துட்டாங்க கவனிச்சுக்கணும்…’ அப்டின்னு ஆரம்பிச்சி ‘இந்த கிழவி நமக்கு ஒத்தாசையா இருக்கட்டுமே’ ன்னு வீட்டு வேலையை தலையில கட்டுவாங்க…
ஒரு நாள்…என்னால முடியவேயில்ல. என் மனசை கேக்காமலேயே உடம்பு ஓய்ஞ்சு போச்சு;
மடிஞ்சுவிழுந்தது…
ஆஸ்பத்திரியில படுத்துகிடக்கேன். சீக்கிரமே நீ கேட்ட அந்த கேள்விக்கு பதில் கிடைச்சுடும்…ஓய்வு எப்போகிடைக்கும்?
இப்ப காலம் மாறிப் போச்சுன்னு நீ சொல்வே… உன்னை சுத்தி நல்லா பாரு. எது மாறி போச்சு? பொண்ணுங்க வீட்ல மட்டுமில்லாம, படிச்சிட்டு வெளியிலேயும் வேலை செய்யறாங்க… சம உரிமை கேட்டுவீட்டலேயும் வெளியிலேயும் போராட்டம் இன்னும் செய்ய வேண்டிய நிலை. என்னை பொறுத்தவரை எதுவுமே மாறல…சாதாரணமான பொண்ணுங்கதானே…
இத நீ படிக்கறப்போ அநேகமா நான் நெரந்தரமா ஓய்வுல இருப்பேன். புரியுதா?
– மார்ச்சு 8 ம் தேதி சர்வ தேச மகளிர் தினம். தாய்மைக்கும் பெண்மைக்கும் தலை வணங்குகிறேன்- வாஷிங்டன் ஶ்ரீதர்