சவிதா – வயது பதினொன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,353 
 
 

சவிதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அருகிலேயே வைத்திருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கரைக்கு இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது. தினம் எழுந்து கொள்ளும் நேரம். அதனால் சரியாக இந்த நேரத்துக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அலாரமே தேவையில்லை இப்போதெல்லாம். இருந்தாலும் எங்கே தூங்கிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தினம் தவறாமல் இரவு ப்ரேயர் முடிந்ததும் ஞாபகமாக அலாரத்தில் சாவி கொடுத்து விடுவாள்.

எதிர்ப்படுக்கையைப் பார்த்தாள். இவளுக்குப் படுக்கை இடது ஓரம். வலப்பக்கப் படுக்கையில் மெர்ஸி. நல்ல தூக்கம். அலாரம் எத்தனை அடித்தாலும் எழுந்திருக்க மாட்டாள். எப்போதாவது விழிப்பு வந்தாலும் “சவி, ப்ளீஸ் தூங்கேன்…” என்று முணுமுணுத்தபடியே திரும்பிப் படுத்துக் கொள்வாள். சாதாரண நாளில் மட்டுமில்லை, பரீட்சை நாட்களிலும் அப்படித்தான். எல்லா மாணவிகளும் கட்டாயம் எழுந்தாக வேண்டிய ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். சவிதா அறையிலிருந்தால், சோம்பல் முறித்தபடியே, தப்பாமல் “இன்னிக்கு என்ன கிழமை?” என்பாள்.

அவளுக்குக் கவலை எதுவும் கிடையாது. ஆறு மணிக்கு எழுந்து, ஏழு மணிக்குள் தயாராகி, வார்டன் மிஸ் ரவுண்டு வருகிற சமயம் கையில் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொள்வாள். ஏழரை வரையிலான “ஸ்டடி டைமி”ல் அரக்கப்பரக்க, சவிதா எழுதி வைத்திருக்கிற “ஹோம் வொர்க்”கை அப்படியே தன் நோட்டுப் புத்தகத்தில் காப்பிடியப்பாள். ஏழரை மணி அடித்தவுடன் டைனிங் ரூமில் முதல் ஆஜர் அவள் தான். ஹார்லிக்சும் இரண்டு ஸ்லைஸ் ஜாம் பிரெட்டும் தின்று விட்டு ஏழே முக்கால் மணி ப்ரேயருக்காக சேப்பலுக்கு ஓடி விடுவாள். இவையெல்லாம் விடுதியின் கட்டாயங்கள். அநேகமாக எல்லா மாணவிகளுக்கும் இதே கடமைகள்தான். சவிதாவைப் போல் யாருக்கும் நாலரை மணிக்கு எழுந்தாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பு என்றாலும் மூட்டை மூட்டையாகக் கொடுக்கிற “ஹோம் வொர்க்” கை முந்தின இரவே முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் சவிதாவைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். பனிமூட்டத்தில் ஒன்றுமே தெரியவில்லை. இப்போது வெளியே காலை வைத்தால் குளிரில் உறைந்து சாக வேண்டியதுதான். அதற்காக? போகாதிருக்க முடியுமா? எல்லோரும் கண் விழிக்கும் நேரத்தில் இவள் குளித்துத் தயாராகி, யூனிபார்ம் போட்டு, அதற்கு மேல் ஸ்வெட்டர், தலைக்குக் குல்லாய், கைகளுக்கு உறை, காலுக்கு ஷ• எல்லாம் அணிந்து விடுதியை விட்டு முதல் ஆளாய் இறங்கி ஓடுவாள்.

எட்டு நிமிடத் தொலைவில் இருந்தது விஷ்ணுவின் விடுதி. இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பான். அங்கு விதிமுறைகள் இத்தனைக் கண்டிப்பாக இல்லை. குழந்தைகள் என்பதால் தூங்குவதற்கு ஆறரை வரைக்கும் அனுமதி உண்டு. அப்படியும் ஆயாக்கள் ஆறு மணிக்கே வந்து எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொன்றும் தூங்கி விழுந்து, எழுந்து, மீண்டும் விழுந்து தூங்கும். இவள் போய் எழுப்பினவுடனே விஷ்ணு, “அக்கா…” என்று முனகியபடியே கண் விழித்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்படியே மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவான்.

“விஷ்ணு கண்ணா… எழுந்திரிடா, நேரமாச்சில்லை? அக்கா ஸ்கூலுக்குப் போகணுமில்லை” என்று கொஞ்சி அவனை எழுப்பி, அப்படியே தோளில் தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டு, பல் துலக்கி, குளிக்க வைத்துக் கொண்டு வருவாள். மற்ற குழந்தைகளெல்லாம் ஆயாக்களின் இயந்திரத்தனமான மேற்பார்வையில் தயாராகிக் கொண்டிருக்கும் போது விஷ்ணு மட்டும் சவிதாவிடம். விஷ்ணுவின் ஹாஸ்டல் வார்டன் மிஸ் இதற்காக சிறப்பு அனுமதி கொடுத்திருந்தாள்.

சவிதா திரும்ப வரும் போது அநேகமாக டைனிங் ஹால் காலியாக இருக்கும். சில நாட்களில் ஹார்லிக்ஸ் குடிக்க நேரமில்லாமல் அப்படியே சர்ச்சுக்கு ஓடுவாள்.

இந்தக் கான்வென்ட்டில் சவிதாவுக்கு ஒரு சௌகர்யம் இருந்தது. விஷ்ணுவின் விடுதியும் இவளுடையதும் கான்வென்ட்டும் ஒரே மதிலுக்குள் அமைந்திருந்ததால் இடைவேளையில் கூட சில சமயம் விஷ்ணுவைப் போய்ப் பார்க்க முடிகிறது. ஐந்து வயசுக் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள் நிறைந்து கிடக்கும் வகுப்பறையில் விஷ்ணு தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தால் சத்தமில்லாது திரும்பி வந்து விடுவாள்.

எப்போதாவது அம்மா ஞாபகம் வந்து குழந்தை அழுதால், மாலை ப்ரேயர் முடிந்ததும் விடுதி அலுவலகம் போய் எஸ்.டி.டி. போட்டுப் பேசுவாள். அந்தப் பக்கம் அம்மா எடுத்ததும், “அம்மா, விஷ்ணு பேசறான்” என்று அவன் கையில் கொடுத்துப் பேசச் சொல்வாள்.

குழந்தைக்கு ஒன்றும் பேசத் தெரியாது. அம்மா அந்தப் பக்கமிருந்து கேள்விகளாய்க் கேட்டுப் பேச வைக்க வேண்டும். “அம்மா, நான் சாக்லேட் சாப்பிட்டேன்” என்பான். சவிதா ரிசீவரைக் கையில் வாங்கினால், “சவிக்கண்ணு, எப்ப வர்றே?” என்பாள். இவள் வருகிற நாளைச் சொன்னால் பள்ளி முடிந்து இவள் விடுதிக்குத் திரும்பும் நேரம் கார் தயாராக இருக்கும்.

ஊட்டியிலிருந்து கோயமுத்தூரில் இவர்கள் வீட்டிற்கு கார் பிரயாணம் மூன்று மணி நேரம். டிரைவர் முத்துசாமி அதிகம் பேச மாட்டார். மேட்டுப்பாளையம் வந்ததும் “கண்ணுங்களா, பிஸ்கட் எதுனா சாப்பிடறீங்களா?” என்று கேட்பார். வீட்டுக்கு இவர்கள் போய்ச் சேருகிற நேரம் ஒன்பது ஒன்பதரையாக இருக்கும். அம்மா சில சமயம் அந்த நேரத்திலும் வீட்டில் இருக்க மாட்டாள்.

நகரத்தின் முன்னணி கைனகாலஜிஸ்ட். திடீர் திடீரென்று அழைப்பு வரும். பல சமயங்களில் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் மாதவனுடன் இரவு உணவு அருந்திவிட்டு அவருடைய காரிலேயே வந்து இறங்குவாள். சவிதா தூங்காதிருந்தால் “வந்தாச்சா? அப்பாவுக்கு ஃபோன் பண்ணினயா?” என்பாள்.

அப்பா இருப்பது இதே கோயமுத்தூரில் வேறு வீட்டில். தாவர இயல் விஞ்ஞானி. சதா செடிகளோடு ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். சின்னதாய் வட்டக் கண்ணாடி அணிந்து வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பார். சவிதா அங்கே தங்குகிற ஒரு நாளில் வாக்கிங் ஸ்டிக்கால் தோட்டத்தில் அடர்ந்திருக்கிற செடிகளைத் தட்டி “இது என்ன சொல்லு” என்பார். இவள் முழித்தால் “போன தரமே சொன்னேனே… ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ்… ஓடு ஓடு… நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு வா… எழுதி வைச்சுக்கோ… அடுத்த தரம் சரியா சொல்லணும்” என்பார். சவிதா அடுத்த தரமும் சரியாகச் சொல்லமாட்டாள்.

அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் குழந்தைகள் இருவரும் ஊட்டியில், பணக்காரக் கிறிஸ்துவக் கான்வென்ட்டில். இந்த ஒரு வருடமாகத்தான். அதற்கு முன்பு வீட்டில் இருந்த வரையிலும் கூட ஆயாக்கள் கவனிப்பில்தான் வளர்ந்தார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ தகராறு. என்னவென்று சரியாகத் தெரியவில்லை. வாய்த் தகராறு எல்லாம் பெரிதாகக் கிடையாது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். நீ பாட்டுக்கு நீ, நான் பாட்டுக்கு நான் என்று ஆளுக்கொரு பக்கமாய் இருப்பார்கள். விஷ்ணு வளர்ந்தது பூரா சவிதாவிடம். இந்த வருடம் அம்மாவும் அப்பாவும் தனித்தனியாக வாழ முடிவு செய்த போது, குழந்தைகளைப் பராமரிக்க முடியாது என்று இருவரையும் கொள்ளை நன்கொடை கொடுத்து, ஊட்டியில் இந்தக் கான்வென்ட்டில் சேர்த்து விட்டார்கள்.

விடுதியிலிருந்து இரண்டாவது சனி, ஞாயிறு வீடு போக அனுமதி உண்டு. அப்படி வருகிற சமயம் ஒரு நாள் அம்மாவோடும், ஒரு நாள் அப்பாவோடும் கழியும். சில சமயங்களில் அப்பா அந்த நாளில் தில்லிக்குப் போக வேண்டியிருந்தால் சவிதா போன் செய்கிற போது, “அடுத்த வாட்டி, ரெண்டு நாளும் இங்க வந்துடுங்க” என்பார்.

விடுதி வாழ்க்கைக்கு சவிதா அட்ஜஸ்ட் செய்து கொண்டாள். அவளுக்குப் பெரிய மாற்றம் எதுவுமில்லை. வீட்டிற்குப் பதில் விடுதி. ஆனால் குழந்தை விஷ்ணு விடுதியைக் கண்டு மிரண்டான். ஒரு வருடமாகியும் பழகவில்லை. அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்கிறான். அவன் அதிகமாக உணராதபடி சவிதாவின் அண்மை தேவையாக இருந்தது. அதனால்தான் இப்படி காலை தப்பாமல் நாலரைக்கு அலாரம்.

பனி மூட்டத்துக்கிடையில் வேகமாய் சரிவில் இறங்கிய போது ஜனவரி மாதத்துக் குளிர் தோலைத் தாண்டி எலும்பை முட்டியது. ஸ்வெட்டரும் கையுறையும் போதவில்லை. இரண்டு கைகளையும் முன்புறமாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு நடந்தாள். சேப்பலைத் தாண்டிய போது ஜூலியா மிஸ் நின்றிருப்பது தெரிந்தது. சர்ச்சில் காலை சர்வீசுக்கு ஆயத்தம் செய்வது எப்போதும் ஜூலியா மிஸ் தான்.

ஜூலியா மிஸ்சை சர்ச்சுக்குள் இருக்கும் போது சிஸ்டர் என்று கூப்பிட வேண்டும். வகுப்புக்கு வந்தால்தான் மிஸ். வேறு எந்த சிஸ்டருக்கும் பொருந்தாத அளவு இந்த மிஸ்சுக்கு மட்டும் இந்த சாம்பல் நிற அங்கியும் வெள்ளைத்தலை உறையும் பொருந்துகிறது. மிஸ் ஒரு பெரிய ரோஸ் நிற டேலியா பூப்போல் இருப்பார். பார்க்கிற யாருக்கும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை வரும். வகுப்பில் மிஸ் பாடம் முடிந்து போன பிறகு, கீழே உடைந்து கிடக்கும் சாக்குக் கட்டிகளைப் பொறுக்குவதில் போட்டி. சவிதாவின் பென்சில் பெட்டியில்கூட நான்கைந்து கலர் சாக்குக் கட்டிகள் கிடக்கின்றன.

முன்பெல்லாம் ஜூலியா மிஸ்தான் இவர்கள் விடுதிக்கு வார்டன். இப்போது மாற்றி விட்டார்கள். மிஸ் இப்போதெல்லாம் புனித அருளானந்தர் இல்லத்திற்கு வார்டன். அருளானந்தர் இல்லமும் இவர்கள் மிஷன் நடத்துவதுதான். ஆனால் அங்கே எல்லோரும் அனாதைக் குழந்தைகள். குழந்தைகள் படிப்புக்கும் விடுதி வசதிக்குமான செலவை ஆஸ்திரேலியாவிலிருந்து இவர்களுக்கு நிதி தரும் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக் கொள்கிறது. பெண்கள் விடுதியில் இவர்கள் அடிக்கிற கொட்டம் தாங்க முடியாமல்தான் அருளானந்தர் விடுதிக்கு மிஸ் போய் விட்டார் என்று சொன்னார்கள்.

ஆனால் காரணம் அதுவல்ல என்று மெர்சி சொன்னாள். ஜூலியா மிஸ்சும் அனாதைதானாம். ஆர்ச் பிஷப் தெருவோரத்தில் கண்டெடுத்தாராம். ஜூலியா என்று பெயர் வைத்து கிறிஸ்தவராக்கினாராம். அதனால்தான் மிஸ்சுக்கு அனாதைப் பிள்ளைகளின் விடுதி பிடித்திருக்கிறதாம். சவிதாவுக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும். உலகத்திலேயே அழகான பெயர் “ஜூலியா மிஸ்” என்று நினைப்பாள்.

மிஸ்சைப் பார்க்கும் போதெல்லாம் இந்த விடுதியை விட்டு விட்டு அருளானந்தர் விடுதிக்கு ஓடிப் போய் விடலாமா என்று தோன்றும். ஆனால் இவர்கள் அங்கே போக முடியாது. அனாதைக் குழந்தைகளானாலும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். விஷ்ணுவைக் குளிக்க வைத்துத் தயார்படுத்தும் போதெல்லாம், ஜூலியா மிஸ் சாம்பல் நிற அங்கியைக் களைந்து விட்டு, ரோஸ் நிறப் புடவையில் விஷ்ணுவைத் தோளில் போட்டுக் கொண்டு தூங்க வைப்பது போல நினைத்துக் கொள்வாள். ஆனால் அதுபோன்ற ஒன்று ஒருபோதும் நடவாத காரியம். ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரியாம். கல்யாணமே செய்து கொள்ள முடியாதாம்.

இவள் விடுதியை அடைந்த போது விஷ்ணு கண்விழித்திருந்தான். இவளைக் காணாமல் அழுவதற்குத் தயாராக இருந்தான். சில்வியா ஆயா அவனை சமாதானப்படுத்தி, “இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு” என்று சவிதாவிடம் ஒப்படைத்தாள். அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் சவிதா. “விஷ்ணு குட்டி, இன்னிக்கு சாயந்தரம் வீட்டுக்குப் போகலாம். அக்கா வந்து உன்னை அப்படியே மூட்டை மாதிரி தூக்கிக் கார்ல போடுவேனாம்… ம்… என்ன?” என்றதற்கு “ஓ…” என்றான் உற்சாகமாய்.

அனால் இந்த முறை அம்மா அதிர்ச்சி தரப் போகிறாள் என்று சவிதாவுக்குத் தெரியாது. மாலை ஃபாதர் டேனியலிடம் அவுட்பாஸில் கையெழுத்து வாங்கப் போன போது, “என்ன சவிதா, இந்த தரம் ஒரு வாரம் வீட்டிலயா? என்ஜாய்” என்று சொல்லி அனுப்பினார். இப்படியொரு செய்தி கேட்டால் எப்படி என்ஜாய் செய்ய முடியும்?

இவர்கள் போன போது அம்மா வந்திருக்கவில்லை. கார்ட்டூன் படம் பார்த்தபடியே சவிதாவும் விஷ்ணுவும் ஹாலில் சோபாவிலேயே படுத்துத் தூங்கி விட்டார்கள். அம்மா வந்து இவளை எழுப்பி, படிப்பைப் பற்றி விசாரித்து விட்டு, திடீரென்று “சவி உன்னோட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

பதினொரு வயதுப் பெண்ணை மதித்து “உன்னோட பேசணும்” என்று அம்மா சொன்னது இதுவே முதல் முறை. என்ன பேசப் போகிறாய்? அம்மாவின் பேச்சும் நடையும் இன்றைக்கு மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

அம்மாவுக்கு கலிபோர்னியாவில் மேல்படிப்புக்கு இடம் கிடைத்திருக்கிறது. இரண்டு வருடம். மருத்துவமனையே ஸ்பான்சர் செய்கிறதாம். அப்பாவும் வருடா வருடம் இந்திய அரசாங்கம் கொடுக்க முன்வந்த தாவரவியல் ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர் பதவியை இந்த வருடம் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டாராம். வேலை தில்லியில். விவாகரத்து அநேகமாக ஏப்ரலில் கிடைத்து விடுமாம். குழந்தைகளில் சவிதா அப்பாவிடமும், விஷ்ணு அம்மாவிடமும் இருக்கட்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்? இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா? அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம், அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமலிருக்கலாம், இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாதிருக்கலாம். ஆனால் எனக்கு என் தம்பி வேண்டும். பெற்றது இவர்களாயிருக்கலாம். ஆனால் அவன் வளர்ந்தது பூரா என்னோடுதானே! என்னை விட்டு ஒரு கணம் பிரிந்திருக்க மாட்டானே… அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?

உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வேகமாக ஹாலுக்கு வந்து, சோபாவில் குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தம்பியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, மாடியில் தன்னறைக்கு ஓடினாள். பின்னாலேயே மாடியேறி வந்த அம்மா, “சவி… ஒண்ணும் அவசரம் இல்லை. நிறைய டைம் இருக்கு. உன்னைத் தயார்படுத்தத்தான் இப்பவே சொன்னேன்” என்று சமாதானப்படுத்தி விட்டுப் போனாள்.

அடுத்த நாள் அம்மா மருத்துவமனைக்குப் போன பிறகும் சவிதா கீழே இறங்கவில்லை. அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து விஷ்ணுவும் அழுதான். இந்தச் சின்னப் பையனை எப்படிப் பிரிய முடியும்?

கலிபோர்னியா எங்கே என்று சவிதாவுக்குத் தெரியவில்லை. ரொம்பத் தொலைவு என்று மட்டும் தெரிந்தது. கண்டிப்பாக பஸ்சிலோ, ரயிலிலோ போக முடியாது என்று தெரிந்தது. அங்கே போய் மட்டும் அம்மாவா இவனை கவனிக்கப் போகிறாள்? அங்கேயும் ஆயாவிடம் தான் விடப் போகிறாள். ஆங்கில ஆயா. இவனுக்குப் பழக்கமில்லாத மொழியில் பேசி, பழக்கமில்லாத உணவுகளைக் கொடுத்து, பழக்கமில்லாத நடைமுறைகளைக் கற்றுத் தரப் போகிறாள். அம்மாதான் வீட்டில் இருக்க மாட்டாளே, அடித்தாலும் அடிப்பாள். குழந்தை “அக்கா…” என்று அழுதால் தில்லிக்குக் கேட்குமா? முடியாது. இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்… எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம். என் தம்பிதான் வேண்டும்.

அவசரமாய்க் குளித்து, தம்பியையும் தயாராக்கிக் கீழே வந்தாள். அம்மாவுடைய முன்பக்க கன்சல்டிங் அறை மேசையைக் குடைந்ததில் முன்னூறு ரூபாய் பணம் கிடைத்தது. சமையற்கார அம்மாவிடம், கடைசி வீட்டு லில்லி ஆன்ட்டியைப் பார்த்துட்டு வர்றேன் என்று சொல்லி விட்டு நடந்து வெளியே வந்தாள். மத்திய பஸ் நிலையம் செல்ல சவிதாவுக்கு வழி தெரியும். ஏழாம் நம்பர் பஸ். அங்கே போனால் நிறைய வெளியூர் பஸ் வரும் என்பதும் தெரியும். பாதி தூரத்துக்கு மேல் நடக்க மாட்டேன் என்று அடம்பிடித்த தம்பியைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்தாள்

ஒரு வாரம் விடுமுறைக்காகப் போன ஆறாம் வகுப்பு சவிதா, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் மாலை வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் டேனியல். அந்தச் சிறு பெண்ணின் உருண்டை விழிகள் அழுது சிவந்து, இரட்டைச் சடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷ• இல்லை, ரப்பர் செருப்பு… விஷ்ணுவின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி… அதுவும் புரியாமல் அழுது கொண்டிருந்தது.

“என்னம்மா சவிதா, என்னாச்சு? ஊர்லயிருந்தா வர்றே?” என்று படபடப்பாகக் கேட்டார்.

“ஆமாம் ஃபாதர், எனக்கும் என் தம்பிக்கும் பெயரை மாத்துங்க…”

“பெயரை மாத்தணுமா? எதுக்கு? என்னண்ணு?”

“எனக்கு – ஜூலியா, தம்பிக்கு பீட்டரோ, ஸ்டீவனோ… ஏதாவது…”

“எதுக்கு இப்ப திடீர்னு பேர் மாத்தணும்…?” பாதிரியார் புரியாமல் கேட்டார்.

“அப்பதான் எங்களுக்கு அங்க இடம் கிடைக்கும்?” – சவிதா ஜன்னல் வழியாக கை சுட்டிய திசையில் இருந்தது “புனித அருளானந்தர் இல்லம்.”

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *