சந்தியாவின் முறுக்கும், சில முறுக்குகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 12,541 
 

காலை எழுந்திருச்சதிலிருந்து வயிற்றை ஏதோ பிசைவது போலவே இருந்துச்சு சந்தியாவுக்கு. பழையச்சோத்துப் பானையை திறந்து பார்த்தா. கொஞ்சம் சோறும், நிறைய நீருமாக இருந்தது. டம்ளரும், கரண்டியுமாக சோத்துப்;பானை பக்கத்துல உட்கார்ந்தாள். அம்மா பூஞ்சோலை காலையிலேயே வீட்டு வேலைக்கு கௌம்பி போயிட்டா

“யக்கா… வயிறு நோவுதுக்கா…” தூங்கிக்கிட்ருந்த தம்பி எப்ப எந்திரிச்சான்..?

“அம்மா நீராரதண்ணி வச்சிட்டு போயிருக்கு.. எந்திரிச்சு வந்து குடி..” பக்கத்துப்பானையில் இருந்த தண்ணீய மோண்டுக் குடிச்சுக்கிட்டா சந்தியா. நேற்று ராத்திரியும் சாப்புடல. நேத்து ராத்திரி பூஞ்சோலை சோறாக்கி, புளிக்குழம்பு வைச்சிருந்தா. அந்த நேரம் பார்த்தா வரணும் அவ புருசன்..? கேடு கெட்டவன்;.. பூஞ்சோலை அப்டிதான் திட்டுனா.. எம்புள்ளங்க அரவயிறு கஞ்சி குடிக்குதுங்க.. அதுக்கும் பங்குக்கு வந்துடுன்னு கத்திக்கிட்டே சோத்துப்பானைய தள்ளி வச்சு அதுமேல கவுந்துக்குச்சு. பூஞ்சோலையோட தலமயிரை புடுச்சி இழுத்து அப்பால போட்டுட்டு, சோத்துப்பானையில இருந்த சோத்தை தட்டுல கவுத்துக்கிட்டு, புளிக்கொழம்ப அதுல சாச்சுக்கிட்டான் தனபால்.

“அய்யோ… கொல்லையில போறவனே.. எம்புள்ளங்க வயித்துல அடிக்கிறியேடா.. நீ நல்லாயிருப்பியா.. சோத்த எடுத்த உன் கையில புத்து வைக்க…” சாபமிட்டு, ஓலமிட்ட பூஞ்சோலையை எட்டி உதைத்தவாறு வெளிய வந்தவன், லுங்கியில் கையை துடைத்துக் கொண்டே எங்கோ சென்று இருளில் மறைந்தான்.

பக்கத்து வீட்ல பால் காயும் வாசம் வந்துச்சு. அழகேசு அக்காவ பார்த்தான், “யக்கா.. சொம்பு எடுத்து தர்றியா..? நான் போய் டீ வாங்கியாரேன்;..”

“அம்மா.. காசு வைக்காம போயிடுச்சுடா… நீ எந்திரிச்சு கௌம்பு.. நாம பள்ளிக்கோடத்துக்கு போயி சாப்டுக்குவோம்… எனக்கு வைக்கிற முட்டைய நான் உனக்கு தாரேன்…” அழகேசன் முகத்தில் ஏமாற்றம் தெரிஞ்சுது. “நீ கௌம்புக்கா… நான் பின்னால வாரேன்..”

‘அம்மா எப்ப சாப்டுச்சோ தெரியல.. எப்படிதான் சாப்டாமலே வீட்டு வேலை பாக்குதுன்னே தெரியல.. நானாவது பள்ளிக்கோடத்துல போய் சாப்புடுறேன்.. இந்த அம்மாவ எப்ப கேட்டாலும் வேலை செய்ற வீட்ல டீ குடிச்சிட்டேன்னே சொல்லுது.. நல்லா படிச்சு பெரிய கலெக்டராயி அம்மாவுக்கு கொழம்பு ஊத்தி சோறு போடணும்..’ நெனைச்சுக்கிட்டே பைய தூக்கிட்டு கௌம்பிட்டா சந்தியா.

பள்ளி வகுப்பறையிலிருந்து தெருவை பார்த்தா சந்தியா. மத்யானம் எப்போ வரும்னு இருந்துச்சு. நீரார தண்ணிக் கூட இல்லாம போனதுல வயித்துல ஏதோ இருக்கி புடிச்சா மாதிரி வலி. சாப்பாட்டு தட்டை இப்பவே எடுத்து பாத்துக்கிட்டா. தூரத்துல தம்பி பள்ளிக்கு வந்துக்கிட்டுருந்தது தெரிஞ்சுது. இவள் வகுப்பை தாண்டி தான் அழகேசு படிக்கும் இரண்டாம் வகுப்புக்கு போக முடியும். அழகேசு இவளை பார்த்து சிரிச்சிக்கிட்டே போனான். ‘தெளிஞ்சு போய் தான் இருக்கான்..’ மனசுக்குள் ஏதோ பாரம் இறங்கினாற்போல் இருந்தது.

டீச்சர் வந்துட்டாங்க.. பாடத்தில கவனம் வைக்கமுடியல அவளால. எல்லாத்துக்கும் முந்தி முந்தி பதில் சொல்றவ இன்னிக்கு எதுக்கும் பதில் சொல்லல.. பாவம் அழகேசு எப்டி தான் தாங்கிக்கிறானோ..?

டீச்சர் போன பொறவு இன்ட்ரோல் பிரீட்ல பின்னால உட்காந்திருக்கிற ரேவதிய சுத்தி புள்ளைங்க கூடிக்கிட்டு கெடந்துச்சுங்க.. அவங்கப்பாரு வெளிநாட்லேர்ந்து வந்துருக்காராம்.. ஏதேதோ சாமானெல்லாம் கொண்டாந்து காட்டிக்கிட்டிருந்தா.. டீச்சருங்களுக்கு கூட. ஃபாரின் சென்ட், மழைக்குடை, தலைவலி தைலம்ன்னெல்லாம் கொடுத்தா. ஒவ்வொரு தடவை அவங்கப்பா வரும்போதும் இப்டிதான் டீச்சருங்களுக்கு குடுப்பா.. ஆனா குடுக்கும்போது ஆசையா வாங்கிக்கிற டீச்சருங்க சந்தியாவுக்கு தான் மார்க்கை அள்ளி போடறாங்க. யாராவது கல்வி அதிகாரிங்க வந்துட்டாங்ன்னா சந்தியாவை முன்னால நிக்க வச்சுடறாங்கன்னு ரேவதிக்கு கோவமாக இருக்கும். ஆனாலும் எங்கப்பாரு வெளிநாட்டுல இருக்காராக்கும்னு நெஞ்ச வெறச்சுக்கிட்டு இவளைப்பாத்து முறுக்கிகிட்டு நடப்பா. சந்தியாவோட எண்ணெய் பத்தாத தலையும், கிழிஞ்ச யூனிஃபார்மையும் பாத்து ‘நல்லா வேணும் இவளுக்கு’ன்னு நெனைச்சுக்குவா.

“டீ..சந்தியா.. இங்க பாரு.. ரேவதி சென்ட் லப்பர் குடுத்தா..” கோமதி காட்டிய ரப்பர் ரொம்ப வாசனையா இருந்துச்சு. பெரிய தலைவச்ச பேனா, பளபளா சீப்புன்னு அந்த கும்பல்ல ஆளுக்கொண்ணா குடுத்திருந்தா ரேவதி. பசி வயித்தை கிள்ளுச்சு.

“டீ.. அந்த சந்தியாவ பாரூடீ.. நம்ம பக்கம் திரும்பி திரும்பி பாக்குறா.. அஸ்கு புஸ்கு நான் அவளுக்கு ஒண்ணும் குடுக்க மாட்டேன்.. நான் வீட்டுக்கணக்கு போடலேன்னு டீச்சர்க்கிட்ட மாட்டி வுட்டால்ல..” அதுக்குள்ள சாப்பாட்டு பெல் அடிச்சுடுச்சு.. ரேவதி பெஞ்சுக்கிட்ட வந்தா சந்தியா. ரேவதி உடனே மடியில வச்சுருந்த சாமானெல்லாம் மூடிக்கிட்டா.. வேகவேகமா ரேவதிய தாண்டிக்கிட்டு நடந்தா சந்தியா.. அங்கன தானே சாப்பாடு போடற எடம் இருக்கு… சோத்தை அள்ளி அள்ளி வாயில போட்டுக்கிட்டவளுக்கு அப்பதான் ஞாபகம் வந்துச்சு. தட்டுல பாதி தான் முட்டை இருந்துச்சு. எடுத்துக்கிட்டு போய் அழகேசு தட்டுல வச்சா.

“வயிறு ரொம்ப நோவுச்சாடா அழகேசு…”

“ஆமாக்கா…” அக்காளை நிமிர்ந்து பாக்காமலே பேசினவன், அக்கா வச்ச அரை முட்டைய அப்டியே வாயில போட்டுக்கிட்டான்.

சாயங்காலம் பள்ளிக்கூடம் வுட்டு வீட்டுக்கு போவும்போதே இட்லி விக்கிற பாட்டி சந்தியாவை நிறுத்துச்சு, “எ குட்டி.. காலில உன் தம்பி இங்ஙன வந்து ரெண்டு இட்டிலி வாங்கி துன்னுட்டு போனான்.. அம்மா சாப்புட சொல்லுச்சு.. வீட்டு வேலை முடிஞ்சு வரும்போது காசு தரேன்னுச்சுன்னான்.. உங்கம்மா மறந்துட்டு போயிடுச்சாக்கும்.. அம்மாட்ட சொல்லி காசு வாங்கி குடு புள்ள..”

பள்ளிக்கூடத்துல பாக்கும்போது அழகேசு மொகம் தெளிவா இருந்துது ஞாபகம் வந்துச்சு.. இனிமே அம்மாவை வெள்ளன சமைக்க சொல்லணும். அப்பாரு வர்றத்துக்குள்ள சாப்டு முடிச்சுடணும்.. இல்லேன்னா ஆக்குன சோத்த பக்கத்து வூட்ல ஒளிச்சு வச்சுப்புடணும்.. மனசுக்குள்ள தீர்மானம் போட்டுக்கிட்டு நடந்தா.

அந்த தீர்மானம் பூஞ்சோலைக்கும் வந்தது மாதுரி சாயங்காலம் சீக்கிரமே புள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டா. “சீக்ரம் தின்னுடா.. இந்தாடீ சந்தியா உக்காரு… உங்கப்பன் வந்தான்னா எல்லா சோத்தையும் கவுத்துக்கிட்டு போயிடுவான்..” வேலை செய்ற வீட்ல குடுத்த கொழம்பையும், சோத்தையும் எடுத்து வைச்சா.

“எம்மா.. நீ சாப்டியா…?”

“நான் அங்ஙனயே தின்னுபுட்டு வந்துட்டேன்.. நீ சாப்டு..” கொரல் கிணத்துக்குள்ளேயிருந்து பேசுறது மாதிரி கேட்டுச்சு.

“எங்க பள்ளிக்கோடத்துல ஒரு புள்ளயோட அப்பாரு வெளிநாட்லேர்ந்து வந்தாங்களாம்… நெறைய தீனி கொண்டாந்து குடுத்துச்சு.. நான் அங்ஙனயே சாப்டேன்.. எனக்கு பசிக்கல.. நீ சாப்டு…” அம்மாவ உட்கார வச்சு மிச்சமிருந்த சோறும், கொழம்பும் ஊத்துனா சந்தியா. ஆர்வமா அள்ளி அள்ளி சாப்பிட்டா பூங்கோதை.

வெளையாண்டுட்டு புழுதியோட உள்ள வந்தான் அழகேசு. சந்தியா படிச்சுக்கிட்டு இருந்தா. “என்னமா புதுசா எதோ வாசம் அடிக்குது… தீனி வாங்கியாந்தியா…?” ஆர்வமாக கேட்டான் அழகேசு.

“உங்கப்பன் பொழக்கிற பொழப்புக்கு அது ஒண்ணும் தான் கொறச்சலு… நமக்கெல்லாம் பசிக்கு சோறு கெடச்சா பத்தாது…”

“என்னா வாசம் அடிக்குது..”? விடாக்கொண்டான் கேட்டான்.

“பக்கத்தூட்டுக்காரி முறுக்கு சுடுறா போலருக்கு… சரி.. நீ போ அப்பால… இந்த அடுப்பு வேற பொகைஞ்சுக்கிட்டே கெடக்கு.. ரேசனரிசி சோறு வெந்து தொலைய மாட்டேங்குது… சோறாக்கி வைக்கலேன்னா அதுக்கு வேற வம்புளுப்பான் உங்கப்பன்;…”

“எம்மா… நீயும் முறுக்கு செஞ்சு தாம்மா…” அம்மாகிட்ட குத்துக்காலு போட்டு உட்காந்தான்.

“நான் எங்கடா போவேன் காசுக்கு..? ரெண்டு வூட்ல வேல செஞ்சு நாலு சீவன் வவுத்த களுவுணும்… அப்பப்ப உங்கப்பன் அடிச்சு ஒதைச்சு இருக்கிறதையும் புடுங்கிட்டு ஓடிபுடுறான்..”

“எனக்கு பேனா வாங்கி தரேன்னு சொன்னீல்ல.. எனக்கு பேனா வேணாம்.. அழகேசுக்கு முறுக்கு சுட்டுக் குடும்மா..”’

“அவந்தான் சின்னப்பய சொல்றான்னா, நீயும் அவங்கூட சேந்துக்கிட்டியாக்கும்;…” அடுப்ப ஊதிக்கிட்N;ட மகளை நிமிர்ந்து பாத்தா. அவ கண்ல தெரிஞ்ச ஆசயையும் பாத்தா.. “சரிடீ.. நாளைக்கு வேலை செய்ற அக்காக்கிட்ட அட்டுவானுஸ (அட்வான்ஸ்) கேட்டு பாக்றேன்..”

அழகேசுக்கு நல்ல நேரம் தான். வீட்டுக்காரம்மா ரேசன் அட்டைய குடுத்து அரிசியும், உளுந்தும் வாங்கிக்க சொன்னாங்க.. “இன்னும் ஏன்டீ தலைய சொறியறே..?” வீட்டுக்காரம்மா கேட்டுச்சு.

“அப்டியே எண்ணெயும் வாங்கிக்கவாக்கா…?”

“சரிடீ… அடுத்த மாசம் சம்பளத்துல எண்ணெய்க்கு மட்டும் காசு புடுச்சுக்கிறேன்…”

அரிசிய களுவி காய வச்சு, உளுந்தை அது தலயில வறுத்துப்போட்டு மில்லுல குடுத்து மாவு அரச்சுக்கிட்டா. சோடாப்பு போட்டு, அம்பது பைசா கட்டிப்பெருங்காயத்த தண்ணியில ஊற வச்சு, எள்ளை வறுத்துப் போட்டு மாவு பெசஞ்சுக்கிட்டா. அடுப்புல எண்ணெய் காயுது.

“எம்மா.. மொத முறுக்கு நாந்தான் சாப்டுவேன்…” அழகேசு இன்னைக்கு வெளையாட போகல்ல.. வீட்டுக்கணக்க அப்றம் போட்டுக்கலாம்னு சந்தியாவும் எண்ணெ சட்டிக்கிட்டயே உட்காந்துட்டா.. பக்கத்தூட்ல வாங்குன முறுக்கு கொளவுல மாவ போட்டு புழிஞ்சு வுட்டா பூஞ்சோலை. ‘சொய்’யுன்னு சத்தத்தோட எண்ணெ சட்டி முறுக்க உள்ள வாங்கிக்குச்சு..

“எம்மா.. அப்பா இப்ப வந்துடுவாராம்மா…?” கண் பூரா முறுக்கு மேலயே இருந்துச்சு அழகேசுக்கு.

“அந்த பேதியில போறவன் பஸ்டாப்ல குடிச்சுப்புட்டு குப்புற வுழுந்து கெடக்கிறான்னு எதிர் வீட்டு காத்தாயி கெழவி சொல்லுச்சு.. அவன் போதை தெளிஞ்சு எந்திரிச்சு வர்றதுக்குள்ள சுட்டு முடிச்சுப்புடலாம்..”

சிக்கல் சிக்கலா அந்த முறுக்கு அழகா வெந்துடுச்சு. எடுத்து சாப்புடவொடனே கரைஞ்சு போயிடுச்சு.. “யம்மா… அக்க முறுக்கு குடும்மா..” வாயில முறுக்கோட பேசினான்.

“நம்ம மாதிரி சனமெல்லாம் இப்டி ஆசப்பட கூடாதுடா…” கையில ரெண்டும், டவுசர் பாக்கெட்டுல ரெண்டுமா திணிச்சுக்கிட்டான். டவுசர் கிழிசல்ல முறுக்கு வெளிய எட்டிப்பாத்துச்சு. அன்னைக்கு அழகேசு வெளையாட போவல.. சந்தியாவும் படிக்கல

இன்னைக்கும் வழக்கம்போல ரேவதிய சுத்தி ஓரே கும்பல். பளபளன்னு பாரீன் துணியில பாவாடை, சட்டை தச்சு போட்டுக்கிட்டு இருந்தா. அந்த வழவழப்புத் துணிய புள்ளைங்க ஏக்கமா தொட்டு தொட்டு பார்;த்துக்கிட்டு நின்னுச்சுங்க.. கும்பல மீறிக்கிட்டு சந்தியாவ பாத்த ரேவதி கண்ணுல பெருமயும் திமிரும் தெரிஞ்சுது.

சந்தியா கூடியிருந்த அந்த கும்பல பார்த்தா. சட்டுன்னு வந்த கோவத்துல பக்கத்துல இருக்குற கோமதிக்கிட்ட சத்தமா சொன்னா, “அய்யே.. பவுச பாருடீ அவளுக்கு.. பெரும பீத்தக்கள.. எங்கம்மா கூட தான் நேத்து முறுக்கு சுட்டுச்சு… நாங்கள்ல்லாம் சொல்லிக்கிட்டா திரியிறோம்…எப்பபாரு பீத்திக்கிட்டே கெடக்கறது.. பீத்தக்கள.. பீத்தக்கள..”.

– கிழக்கு வாசல் உதயம் – அக்டோபர் 2013.
திருச்சி வானொலியில் 14.11.2013 அன்று ஒளிப்பரப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *