கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2023
பார்வையிட்டோர்: 3,946 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹெலிகாப்டரில் ஏறி அந்த மண்ணெண்ணை எடுக்கும் கிணறு பக்கம் இறங்கி, மூன்று நாள் மற்ற என்ஜினீயர்களுடன் வேலை செய்தபோதுகூட நான் ஜெனிபரை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

நான்காம் நாள், எனக்கு கடலுக்குள் வேலை செய்த அனுபவமில்லாததால் காய்ச்சல் வந்துவிட்டது. டாக்டரை பார்பதற்காக நண்பன் ஜேம்ஸ் என்னை ஜெனிபர் முன்னால் நிறுத்தி “டாக்டர் இவனுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. கொஞ்சம் பார்த்து மருந்துகொடுங்கள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

இந்த நடுக்கடலில் ஒரு டாக்டராக கண்டிப்பாக நான் ஜெனிபரை எதிர்பார்க்க வில்லை. அவள் என்னை அடையாளம் கண்டு கொண்டதும் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமும் வியப்புமே மேலிட்டது.

“ராசையா….நீங்களா…?” கொஞ்சம் திகைத்துப் போனவள் ”உட்காருங்கள்'” என்றாள்.

பழையவைகள் எனக்கு நினைவிருப்பவை போல இவளுக்கும் நினைவிருக்கும் அதை வைத்து என்னைப் பழிவாங்க விரும்புவாளா என்று என்னையே போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தபோது அவள் எந்தச் சலனமுமில்லாமல் என் கையைப் பிடித்து நாடி பார்த்தாள்.

தெர்மாமீட்டரை எடுத்து என் வாயில் வைத்துவிட்டு திரும்ப எடுத்து காய்ச்சல் அளவு பார்த்தாள்.

ஸ்டெதஸ்கோப் எடுத்து காதுகளில் மாட்டிக்கொண்டு என்நெஞ்சைத் தொட்டுப்பார்க்க நினைத்தவள் செய்யாமல் திரும்பவும் ஸ்டெதஸ்ஸை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள்.

அவள் மவுனம் என்னைக் கொலை செய்து கொண்டிருந்தது. மவுனத்தைக் கலைத்து விடலாம் என்று நான் பேச தீர்மானித்த போது “எப்போது வேலைக்கு வந்தீர்கள்?” என்று அவளே கேட்டாள்.

“மூன்று நாட்களாகி விட்டது”

“என்னை இங்கே எதிர் பார்த்தீர்களா?”

“கண்டிப்பாக இல்லை”

“உங்களுக்கு வந்திருக்கும் நோய் கடல் காய்ச்சல் தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கிறேன்”

“பழையவைகள் நினைவிருக்கிறதா? இல்லை…?”

”நன்றாக ஞாபகமிருக்கிறது”

“இப்போது கூட உங்களை என்னால் பழி வாங்க முடியும் தெரியுமா?”

நான் பதில் பேசவில்லை.

“ஒரு பெண் கொஞ்சம் ஊமையாக இருந்தால் ஒரேயடியாக அவளை இப்படி ஏதாவது வஞ்சனை செய்வதா? உங்களால் எத்தனை வேதனை… எத்தனை கால விரயம் என்பது தெரியுமா?” அவள் கோபத்தில் படபடவென்று பேசியபோது மூக்கும் கன்னங்களும் சிவந்து போயிருந்தன.

“மவுனமாக இருக்கிறீர்களே, பதில் பேசத் தெரியாதா… இல்லை. விரும்பவில்லையா?”

“சாரி டாக்டர். கண்டிப்பாக அது ஒரு இளமையின் வேகத்தில்… கண்டிப்பாக உங்களை இவ்வளவு துரத்தியடிக்கும், வேதனைப்படுத்தும் என்று நான் எதிர்பாக்கவில்லை”.

“சரி இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம். இந்த மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்.. சரியாகப் போய்விடும்” என்று ஒரு சின்ன பாக்கெட்டில் மாத்திரைகளைப் போட்டுக் கொடுத்தாள்.

“ஒரு சின்ன கேள்வி”

“என்ன? சொல்லுங்கள்”

“கடலுக்கு நடுவிலே அத்தனையும் ஆண்கள்வேலை செய்யும் இடத்திலே எப்படி வேலைக்குள் சேரத் துணிவு வந்தது ஜெனிபர்?”

”பணம் தான் காரணம். கண்டிப்பாக நான் ஒரு கிளினிக் நடத்தினால்கூட இந்த அளவுக்கு வருமானம் வராது. இன்னும் சொல்லப் போனால் ஒரு அசட்டுத் துணிச்சல். முந்திய ஜெனிபர் போல எதுவுமே தெரியாத அசடாக இருந்து விடக்கூடாது என்ற ஆற்றாமையும் கூட”

“இப்போது எங்கே தங்கியிருக்கின்றீர்கள்?”

“மும்பையில் எங்க அக்கா குடும்பத்தோடு”.


ஜெனிபர் தந்த மாத்திரைகளை விழுங்கி இரண்டு நாள் கழித்தும் ஜுரம் தணியவில்லை. திரும்பவும் அவளிடம் போவதற்கு விருப்பமில்லை. ஒரு வேளை பழிவாங்க நினைத்திருப்பாளோ…

ப்ளஸ் டூ படிக்கிற காலத்தில் யாரோ ஒரு பெண் எழுதிய லெட்டரை ஜெனிபர் எனக்கு எழுதியதாக திட்டு வாங்கித் தந்து… டீச்சரின் நாற்காலியில் பெவிகால் பசை போட்டு, அதை ஜெனிபர் தான் செய்தது என தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்கித் தந்து… தேர்வு நாளில் காப்பியடிக்க கொண்டு வந்த பேப்பரை அவள் காலடியில் போட்டுவிட்டு அவள் காப்பியடிக்க முயன்றதாக குற்றம்சாட்டி, தலைமையாசிரியர் அவளுடைய சேட்டைகள் தாங்க முடியவில்லை என்று டிஸ்மிஸ் பண்ண வைத்தது, இதனால் அவள் இறுதி தேர்வு எழுத முடியால் போக…அவள் அப்பாவிற்கு தஞ்சாவூர் பக்கம் டிரான்பேர் வந்து அவள் குடும்பம் மொத்தமும் ஊரிலிருந்து மாற்றலாகிப் போன பிறகு இப்போதுதான் அவளைச் சந்திக்கிறேன்.

“என்ன ராசையா. எப்படி இருக்கிறீர்கள்?” என்றவாறு ஜெனிபர் என்னுடைய கேபினுக்குள் வந்தபோது அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“இன்னும் காய்ச்சல் கொஞ்சம் கூட குறையவில்லை. பழைய கோபத்தில் என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்கள் போல இருக்கிறது” என்று நான் குரலில் ஒரு வித இறுக்கம் காட்டி சொல்ல “சே! இன்னும் அதையே மனதில் வைத்துக் கொண்டா இருப்பார்கள்? நினைவிருக்கிறதா என்று தான் கேட்டேனே ஒழிய, டாக்டர் தொழில் நான் படித்தது பழி வாங்க அல்ல. நோய் தீர்க்க. வாங்க ஒரு இஞ்ஜெக்ஷன் போடுகிறேன். ஹெவி டோஸ். கண்டிப்பாக குணமாகி விடும்” என்றாள்.

நான் அசையாமல் படுத்திருப்பதைப் பார்த்த ஜெனிபர் “ராசையா பயப்படாதீங்க. இந்தகடல் காய்ச்சல் கூடினால் தான் உடனடியாக போகும். கூடுவதற்கு தான் மாத்திரை தந்தேன். கண்டிப்பாக உங்களை பழிவாங்க அல்ல. இஞ்ஜெக்ஷனைப் போட்டு இன்னும் காய்ச்சலை அதிகப் படுத்துவேன் என்று கவலைப் படவேண்டாம். எழுந்திருங்கள்” என்று அவள் என் கையைத் தொட்டு தூக்கியபோது அதில் ‘பழசை’ மறந்த டாக்டர் ஜெனிபர் மட்டுமே தெரிந்தாள்.

– 2010ல் தினத்தந்தி ஞாயிறு இதழில் வெளிவந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *