கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 5,205 
 
 

அர்த்தமுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவை தானா என்ன.
தலைவன் கிம் கி டுக் – க்கு சமர்ப்பணம்.

***

கிம் கி டுக் சொன்னது போலவே… இந்த உலகம் என்பது நிஜமா கற்பனையா என்ற புள்ளியில் தான் சஜினிக்கு இந்த மலை உச்சியில்…. பனி தேசத்தில் திருமணம். நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் அவள் ஒப்புக் கொண்ட திருமணம் இது. அவளை அடிக்கவும் முடியாது. அடக்கவும் முடியாது. அவள் போக்கில் சில மேகங்கள் மழை தூவி விடும். அவள் வெறுமையில் நீண்டு வளைந்தது தான் வானமோ என்று கூட ஒரு நிற நேரம் யோசிக்கலாம்.

ஆளாளுக்கு நடக்கிறார்கள். செய்ய இருக்கும் காரியத்தை சிலர் செய்ய பலர் சும்மா நடப்பார்கள். ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் பாவனைக்கென்றே இருப்போர் தான் அந்த திருமணத்தை வண்ணமயமாக்குவார்கள். இங்கும் கூட சில இளசுகள்… சில பெருசுகள் என்று ஜிகினா பூசிக் கொண்டு கருப்பு தேநீர் அருந்தியபடி குளிர் வீசி… அமர்க்களம் தான். வெளியே பனியும் சில்லும். மலை வாழ் வீடுகளில் ஒரு வகை மணக்கும் வாசங்கள் இதயம் நிரப்பும். நிரம்பிக் கொண்டிருந்தன அக்கம் பக்கம் வீடுகளும்.

சிவப்பு புடவையில்.. மருதாணியை வாரம் முழுக்க உடல் பூசி சிவப்பு செய்தவள் போல சஜினி சுவரோரம் அமர்ந்திருப்பதே பேரழகு. கல்யாணத்தை நாளை செய்யலாம். களவாணித்தனத்தை இன்றே செய்யலாம் என்று இப்போது எட்டி பார்த்து போன மாப்பிள்ளை முனங்கியது…. சஜினிக்கு கேட்டதோ இல்லையோ… அந்த அறையில் எதிரே அமர்ந்திருக்கும் அவள் அம்மா பின்னால் ஒளிந்திருக்கும் கிம்- க்கு கேட்டது. கண் அசந்த அம்மாவுக்கு திடும்மென வந்த விழிப்பில் அத்தனை நேரம் போராடிக் கொண்டிருந்த சிந்தனையும் தன்னை எழுப்பி கொண்டது.

சிவந்த இதயத்தை மீண்டும் வேகமாய் துடிக்க விட்டு… கண்களை தேய்த்து கொண்ட அம்மா.. மகள் சஜினியை வெறுமையாக பார்த்தாள். வீட்டுக்குள் சுழன்று கொண்டிருக்கும் குளிரும்… முன்னே எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு தீயும்… ஓவிய பெண்களைத் தீட்டி கொண்டிருந்தன.

“உனக்கு நான் சொல்றது புரியுதுதான… காதல் வேற கல்யாணம் வேற. அதுவும் கல்யாணம் பண்ற வீட்டுக்கு இன்னொருத்தரோடு போவேங்கிறது… என்ன மாதிரி புரட்சி. ஒன்னும் புரியலயே… பேசாம உன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிட்டு நல்லா இரு… ஓடியாவது போ…” கண்களை சிமிட்டவே முடியாத அதிர்வு அம்மா முகத்தில்.

“ஓடில்லாம் போக முடியாதும்மா…அப்பா மானத்தை வாங்க முடியாது. நீங்க பாத்த மாப்பிள்ளய கட்டிக்கறேன். அதே நேரம் எனக்கு புடிச்ச கிம்மை கூட கூட்டிட்டு போய்க்கறேன்..” – தீர்க்கம் சொல்லில் இருக்க.. தெளிவு அவள் உடல்மொழியில் பலமாய் மிளிர்ந்தது

“லூசாடி நீ.. ஏதாவது அர்த்தம் இருக்கா… கிம்மை என்னன்னு சொல்லுவ.. எப்டி கிம்மை கூட்டிட்டு போவ… அதை சொல்லு…” நக்கலாக ஆனால் சூடாக மகள் பேச்சுக்கே வந்த அம்மாவுக்கு கோபம் தான் இப்படி இணங்கி பேச வைத்தது. என்ன தான் சொல்லுவான்னு பார்ப்போம் என்பதும் அம்மா கண்களில் உருண்டது.

“ம்மா… அதத்தான் சொல்ல வர்றேன்.. நீ விட மாட்டேங்கற… கிம்க்கு எதிர இருக்கறவங்க பின்னால ஒளிஞ்சுக்க தெரியும்… பாரு.. இப்ப கூட உன் பின்னால் ஒளிஞ்சுருக்கறத…” என்ற சஜினியை… திக்கென்று தன்னை தூக்கி வாரி போட்டு பார்த்த அம்மாவுக்கு இதயம் முகத்தில் துடித்தது. அவள் வேக வேகமாய் திரும்பினாள். திரும்பும் திசையெல்லாம் கிம்மும் திரும்ப…. ஒரு மனிதனால் 180 டிகிரி வரை தானே பார்க்க முடியும். அதாவது தன் முதுகை அதன் அளவில் இருக்கும் உலகை ஒருபோதும் பார்க்க முடியாது… இல்லையா. அந்த அளவில் இன்னொரு ஆள் நிற்க முடியும் தானே.

“3 iron” படத்தில் முக்கியமான காட்சியை அலைபேசி திரையில் போட்டு காட்டினாள்.

அகல விரிந்த கண்களும்… ஆழம் நுழைந்த சிந்தனையும்… படத்துக்கு சரி.. நிஜத்துக்கு எப்படி என்ற அம்மாவுக்கு குரல் இல்லை. வார்த்தை நடுக்கம் தான்.

“அது சினிமாவா இருந்தாலும்… அதுல இருக்கற விஷயம் லாஜிக் தானம்மா.. இப்போ பாரு உன் பின்னால இருக்கற கிம் ஐ உன்னால பாக்கவே முடியலல. அப்பிடி நாங்க ரெண்டு பேரு இருக்க போற வீட்டுல உன் மாப்பிள்ளைக்கு பின்னால கிம் மறைய… இந்த படத்துல மாதிரியே…”

வேற வழி இல்லை. அவள் பேச்சுக்கு மறுப்பு சொன்னால்… தாலியைக் கட்டினாலும் கழட்டி கொண்டு சென்று விடும் கிறுக்கு புத்தி வேலை செய்து விடும். சரி என்றாள். அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள்.

இரவும் ஊரும் காத்திருக்க.. விடியல்… டம் டம் டம் என்று பறை கொட்டியது.

அவள் சொன்னது போலவே கணவன் வீட்டில் அவளோடு கிம். கிம் கணவனின் பின்னால். காதலும் அது சார்ந்தவையும் தான் அந்த வீட்டில் இருந்தது. அன்பும் பேரன்பும் தான் அந்த வீட்டு முகவரி. கணவன் வேலைக்கு சென்ற பிறகு அந்த வீட்டில் சஜினியும் கிம்மும் ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டார்கள். கட்டிக் கொண்டார்கள்.

***

கிம் முதல் முறை வீட்டுக்கு வருவதால் சஜினிக்கு வெட்கம் தாங்கவில்லை. போராடி சம்மதம் பெற்ற பிறகு கிம் வீட்டுக்கு வரும் நாள் அது. நிலவுகள் பொழியும் வீட்டில் அன்புகள் நிரம்பும் விருந்து. மலை உச்சியில்…. மாளிகை செய்திருக்கும் சஜினியின் அப்பாவுக்கு உள்ளே வருத்தம் இருந்தாலும்…. வெளியே புன்னகை இருந்தது. பார்த்து பார்த்து கவனித்தார்கள். மாளிகை வராண்டாவில்… புற்களில் புறாக்கள் மேய… சிலு சிலு காற்றில்… சிந்தனையில் எல்லாம் சித்திரம் என தோன்றும். அப்படி ஓர் இன்பமயம் அங்கே சுழன்றது. கிம் க்கும் வெட்கம் தான். ஏதோ மாயம் நிகழ்வது போல இருந்தது எல்லாம்.

கிட்டத்தட்ட ஆயிரம் வருட காதல். வீட்டுக்கு விஷயம் தெரிய வருகையில்… ரணகளம் ஆனது உண்மை தான். ஒவ்வொரு ராத்திரியும் சூனியத்தில் உழன்றது உண்மை தான். ஆனால் எல்லா உண்மைகளை விடவும்… காதலே பெரியது என்று தீர்மானமாக இருந்தார்கள் காதலர்கள்.

கிம் மலை வாழ் மனிதர்களை சார்ந்த இதயம். இந்த திசையில் மாளிகை என்றால்… அந்த திசையில்… மலை வாழ் வீடுகள். அவர்களுக்கு எப்போதும் இந்த மாளிகை ஒரு பேரதிசயம் தான். விடுமுறைக்கு குடும்பத்தோடு சஜினி வரும் போதெல்லாம் அவர்களுக்கு வேடிக்கை தான். கிம்முக்கு மட்டும் அது காத்திருப்பு.

“ஐயோ…. பாரு…. மெழுகு பொம்மை மாறி அந்த பொண்ணு” என்று சஜினியை கண் கொண்டு மட்டும் அல்ல…. காது கொண்டும் தான் எல்லாரும் பார்ப்பார்கள். அத்தனை பேரழகி மீது கிம் க்கு காதல் வந்ததில் எந்த வியப்பும் இல்லை. கிம் மீது சஜினிக்கும் காதல் வந்தது தான் காலத்தின் கட்டளை. இரண்டு ஜீவனும் ஓர் உயிர் என்றே இருந்தார்கள். அப்படி இப்படி என்று பேசி அழுது அடம் பிடித்து சம்மதம் வாங்கி…. இதோ வீட்டுக்கு கூட்டி வந்து… இரவு விருந்து அமர்க்களப்படுகிறது.

இப்போது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அப்பா கேட்டுக்கொண்டதற்கிணங்க கிம்- ன் வருகை யாருக்கும் தெரியாமல் தான் இருக்கிறது.

இந்த முறை வேலைக்காரர்கள் கூட வைத்துக் கொள்ளவில்லை. அம்மாவே தன் கையால் சமைத்து பரிமாறினாள். ஓரிரு உருண்டைகள் ஊட்டி கூட விட்டாள். வயசுக்கு சாப்பிட்டு பிறகு வயிற்றுக்கு சாப்பிட்டு… பிறகு நெஞ்சேறிய உணவு பதார்த்தங்கள் பிறகு கழுத்து வரை நிரம்பியது. போதும் போதும் என்று சொன்னாலும் அப்பாவும் அம்மாவும் விடுவதாகயில்லை.

“ஐயோ அம்மா…. இதுக்கு மேல சாப்ட்டா வயிறு வெடிச்சிரும்” என்ற கிம்மை திடும்மென கண்களில் சுழன்ற வெஞ்சினத்தோடு பார்த்த அம்மா “வெடிக்கட்டும்னுதான எதிர்பார்க்கறோம்” என்றாள்.

கிம் க்கு திக்கென்று என்னவோ உள்ளே சுழல… எதிரே இருந்த சஜினி மயங்கி சரிந்திருந்தாள். அந்த அறையில் பெரு மௌனம் சடுதியில் சுவற்று கடிகாரத்தின் டிக் டிக்கை வேகப்படுத்தியது.

என்ன நடக்கிறது….. புரியாத ஒரு கணம் தலையில் அழுத்தினாலும்…….”ஐயோ சஜி….!” என்று எழும்பி அவளை நோக்கி கிம் நகர நகரவே… பாய்ந்த அப்பா கிம் முகத்தில் எதையோ பீய்ச்ச கிம் நொடிகளில் மயக்கத்துள்.

மறுகணம்.. தயாராக வைத்திருந்த பட்டை பட்டையான டேப்பை கிம்-ன் உடல் முழுக்க சுற்றினார்கள். தலை முகம் என்று மூக்கின் ஒரு துவாரத்தை மட்டும் விட்டு விட்டு மீதி இருக்கும் எல்லா உடல் துவாரங்களையும் அந்த டேப் சுற்றி அடைத்தார்கள். கை கால் என்று உடல் முழுக்க அசைய முடியாத இறுக்கத்தில் கிடத்தி வைத்திருந்த கிம்க்கு சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தது. ஆனால் மூச்சு வாங்கியது. உடலை அசைக்க முடியாத தவிப்பில் தொடைக்குள் என்னவோ முட்டிக் கொண்டு வர வயிறு முட்டிய உணவின் அழுத்தம் உடலை உப்பி உப்பி திமிர வைத்தது. வாய் வழியாக இறுக்கத்தை வெளியிட செய்ய செய்த முயற்சியும் கால்களை அசைத்து ஆசன வாயை தளர்ச்சி செய்ய செய்த முயற்சியும்… கழுத்தை தூக்க செய்து…. முதுகில் கிடந்த பாரத்தை நகர்த்த செய்த முயற்சியும்….அடி வயிற்று உப்புசம்…. சிறுநீர் கழிக்க தோன்றிய முயற்சி என்று எதுவும் பலிக்கவில்லை. எல்லா பக்கமும் அடைத்த உடலுக்குள் ஓர் எரிமலை குழம்பு கொதித்தது.

நெஞ்சு உப்புசத்தில்… கையளவு சோற்று குழைவு நீர் வாய்க்குள் மேலேறி காரம் ஏற்ற… கண்கள் கலங்கிய கிம்-க்கு கடும் இருட்டு தான் நெற்றியில் நெளிந்தது. ஒற்றை மூக்கில் எடுக்கும் மூச்சு உடம்புக்கு போதவில்லை. இழுத்த மூச்சை வெளியே விட உப்பிய வயிறும் இறுகிய நெஞ்சும் வழி விடவில்லை. வயிறு கலக்க வாயு சுழலும் வயிற்றை உப்பலில் இருந்து இறக்க இயலவில்லை. நரக வேதனை. மரணித்தால் கூட நலமென கிம்-ன் இதய துடிப்பு எகிற ஆரம்பித்தது. அம்மாவும் அப்பாவும் எதிரே அமர்ந்து வெறி கொண்ட நரியின் ஆவேசத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தார்கள். வீட்டை சுற்றிய இருளின் நசநசப்பு உடன் கழுகொன்றின் சிறகசைப்பை சேர்த்துக் கொண்டிருந்தது.

மரண நேரம் கொள்ளும் வலிமை தன் உடலை தானே புரட்டியது. தோல் போர்த்திய செதில் அடங்கிய மீனைப் போல கிம் சுழன்று சுழன்று சுழன்று…. டப்பென்று ஏதோ சத்தம். பின் உடலில் இயக்கமில்லை. அதுவரை அந்த அறையை இறுக்கி பிடித்திருந்த எதுவோ தளர்ந்தது போல அவர்களுக்கும் பெருமூச்சு.

அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் ஆணவத்தோடு பார்த்துக் கொண்டார்கள். எல்லாம் தயார். தூக்கினார்கள். பின்னால் தயாராக இருந்த ஜீப்பில் நழுவும் நீரில் மினுங்கும் மீனை ஏற்றுவது போல ஏற்றினார்கள். வண்டி வழக்கம் போல பக்கத்தூர் தேயிலை தோட்ட பங்களாவுக்கு போகிறது என்று தான் மற்ற விழித்திருக்கும் காதுகள் நினைக்கும். ஆனால் வண்டி சென்று நின்ற இடம்… மயான உச்சியாய் எப்போதும் காத்திருக்கும் மலை உச்சி. உடல் சுற்றிய டேப்பை உரித்தெடுத்தார்கள். வயிறு கிழிந்திருந்த வாசம் முகத்தை சுளிக்க வைத்தது. கோணியிருந்த வாயில் வாந்தி வழிந்திருந்தது. மூத்திரமும் மலமும்.. கசிந்திருக்க… கழுத்தில் குவிந்திருந்தது உணவு கரைசல்.

ஒரு கணம் நின்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெல்ல புரட்டி… தள்ளினார்கள். மூச்சு வாங்கினாலும்… நிதானம் இருந்தது. கனக்கச்சிதமாக வேலையை முடிக்கும் மும்முரம் இருவர் உடல் மொழியிலும். மலை உச்சி பாறையில் இருந்து விடுபட்ட கிம்- ன் உடல் காற்றில் மிதந்தது. விசுக்கென வெற்றிடத்தில் அழுத்தம் கூடியது போன்ற விசை அங்கே இனம் புரியாத சத்தத்தை ஏற்படுத்தியது. கிம்- ன் உடல் தரை சேரும் சத்தத்தை ஒருபோதும் யாராலும் கேட்க முடியாது. அத்தனை ஆழம் அது. விழுந்தோர் இதுவரை கிடைத்ததே இல்லை. கிம்- ன் உடலும் இனி கிடைக்க போவதே இல்லை. வெஞ்சின இதயங்களுக்கு விழி நிறைந்த அமைதி.

மகள் கொண்ட காதல் ஒழிந்தது… என்ற இருவரின் நிம்மதி சிறு புன்னகையாய் இருளை கிழித்து…. விஷம் ஏறிய மலைக்காற்றை அங்கு தீவிரமாய் சுழல செய்தது.

****

காதல் எதையும் மறைத்து வைக்காது. சஜினிக்கு தெரிந்து விட்டது. பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு புலியை போல உறுமினாள்.

“கிம்மை என்ன பண்னீங்க… கூட்டிட்டு வந்து சோறு போடும் போதே யோசிச்சன்… முறுக்குன மீசைக்கு பின்னால என்ன கிறுக்கு வேலை இருக்கோன்னு… பாவிங்களா… நல்லா இருப்பீங்களா… கெட்ட மனுஷங்க நீங்க… ” சொல்லிக்கொண்டே இருந்தவள் வேகமாய் ஓடி சென்று எதிரே இருந்த சுவற்றில் மோதி விழுந்தாள். ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த அம்மாவுக்கு ஐயோ என பதட்டம். ஊரான் புள்ளன்னா அணு அணுவா ரசிச்சு கொல்லலாம். தான் புள்ள ஆச்சே. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆட… ஓடி சென்று கதவை திறந்த அம்மாவுக்கு மீண்டும் அதிர்ச்சி. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்கிறது.

“ஏய் சஜினி… நாங்க எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான்… உன் காதல் ஒரு ஆறரை நாட்டு சனி. அதான் அத தொலைச்சு விட்டோம். எல்லாம் உன் எதிர்கால நல்லதுக்கு தான். ஒழுங்கு மரியாதயா கதவ தெற. அப்பா வந்தா அப்புறம்……..” கத்திக் கொண்டே கதவை தட்டினாள். தள்ளினாள். முட்டினாள். மோதினாள்.

மீண்டும் ஒரு சத்தம்.

தட்டுவதை நிறுத்தி விட்டு ஜன்னல் பக்கம் ஓடி சென்று கம்பிகளுக்கிடையே முகத்தை நெளித்து பார்த்த அம்மாவுக்கு துக்கம் வாரி போட்டது.

பீரோவில் நெற்றியைக் கொண்டு டம் டம்மென்று முட்டிக் கொண்டே நின்றாள் சஜினி.

என்ன பாக்குற என்பது போல நெற்றியில் குருதி வழிய முகத்தில் கண்ணீர் பொழிய திரும்பி ஒரு பார்வை. தூவென துப்புவது போல ஒரு செய்கை. வேகமாய் ஜன்னல் பக்கம் வந்து முழங்கையை கம்பிகளில் ஓங்கி ஓங்கி குத்தினாள். கண்டிப்பாக எலும்புடையும் சத்தம் தான் அது. எதிராளியை குனிய வைத்து முழங்கையால் குத்துவது போல… நின்றுகொண்டே ஜன்னல் கம்பிகளில் குத்தியது… எலும்பு நொறுங்கும் சத்தத்தை துல்லியமாக சிதறியது.

திறந்த வாயில் சத்தம் இல்லை. அகன்ற கண்களில் வெறுமை. பயத்தின் உச்சத்தில் கால்களில் மூத்திரம் போன அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள். மூச்சிருந்தும் பிணம் போல ஓர் உடல் மொழி. அதே நேரம் கதவைத் தட்டி பார்த்து திறக்காதது கண்டு ஜன்னல் பக்கம் ஓடி வந்த அப்பா….” சஜிமா… என்ன இது பைத்தியக்காரத்தனம்… கதவ தெற… பேசிக்கலாம்…. கிம் க்கு ஏதும் ஆகல…… நம்பு..”

கிட்டத்தட்ட கெஞ்சினார்.

“நீ பிறவி பொய்காரன்னு எனக்கு தெரியாதா என்ன….மயிறு மாதிரி கிம்ம கொல்ல தெரிஞ்சதுல…. இதையும் பாரு. இது தான்… உங்க ரெண்டு பேருக்கும் எங்க காதல் குடுக்கற தண்டனை. உன் புள்ள உயிர்னா உயிர்.. மத்தவங்க உயிர்னா மயிரா… கேடுகெட்ட மனுஷங்கடா நீங்க…”

ஆவென வாயைத் திறந்து கொண்டே பற்களை கட்டிலின் விளிம்பில் மோதினாள். அப்பாவின் முகத்தில் எலும்பு துருத்திக் கொண்டு வெளியேறியது போல நடுக்கம். ஐயோ ஐயோ என கத்தினார். தலையை பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்தார். அம்மாவுக்கு அடிவயிறு சுழன்றது. தலையில் கிறுகிறுப்பு.

சஜினி பற்கள் உடைந்த வாயோடு ரத்த சகதியை கவ்வியபடி எழுந்தாள். காலை தூக்கி கட்டிலின் அடியே உதைத்து தூக்கினாள். உதைத்து தூக்கினாள். உதைத்து தூக்கினாள். வலது கணுக்கால் முன்னால் மடங்கி எலும்புடைந்து சதை பிய்ந்து தொங்கியது. உடல் சோர்ந்து விட்டது. நடுங்கிக்கொண்டே வாய் கோணிய கிறு கிறுப்பில் நொண்டி நொண்டி… நாற்காலி மேலேறி… அதே வேகத்தில்… தரையில் தலை குப்புற விழுந்தாள். மண்டை உடைந்து விட்டது. நெற்றி சப்பளிந்து விட்டது. பீரோ அடிவாரத்தில் துருத்திக் கொண்டிருந்த சிறு தகரத்தில் கண் மாட்டி கிழிந்து இடது கண் கூழாகி விட்டது. நடுமுதுகில் இருந்து அவ்வப்போது திடுக் திடுக் என்று உயிர் எழும்பும் அசைவு. அறை முழுக்க மரண வாசம்.

தொண்டையில் குரல் இல்லை. சத்தத்துக்கு பதில் பயம் எச்சிலாய் வழிந்தது. அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்து கொண்டு… நின்ற இடத்தில் இருந்தே எட்டி எட்டி குதித்தார்கள்.

ஐயோ ஐயோ ஐயோ என்பதை தாண்டி நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொள்ளும் அனிச்சை இருவருக்கும். மாறி மாறி அடித்துக் கொள்ளும் பித்துநிலையும். தப்பு தான் தப்பு தான் தப்பு தான் தப்பு தான் தப்பு தான்… தங்கள் தலையில் தாங்களே அடித்துக் கொள்ளும் தப்பு நிலையும். கால்கள் ஓரிடத்தில் நிற்காமல்.. வெறி கொண்டு அங்கும் இங்கும் அசைந்து அசைந்து பார்த்தன. இருவரின் பார்வையும் ஜன்னல் உடைத்துக் கொண்டே கம்பிகளின் இடையே மிரண்டு கொண்டிருந்தன,

மெல்ல மெல்ல முகம் ஊன்றி எழுந்த சஜினி…கன்னத்தில் பாதி எழும்பு வெளியேறிய முகத்தோடு… அவர்களை பார்த்தபடியே நாக்கை கடித்தாள். ஒரு காளியின் செய்கையை ஒத்திருந்தது. ஓர் ஆணவத்தை அடக்க வந்த காட்சி பொருளென அவளின் உடல் நின்றது. உடல் வடிவமற்று உடைத்து நெளிந்து ரத்தம் பூசி… ரௌத்ரம் பூசி நின்றபடியே கழுத்து மடக் மடக்கென விழ மேலெழுப்பிக் கொண்டே நாக்கை இன்னும் இறுக்கமாக கடித்தாள்.

“சஜிமா வேண்டாம்… சொன்னா கேளு…. எங்களை மன்னிச்சிரு…” வார்த்தையில் சக்தி இல்லை..

இன்னும் இன்னும் இறுக்கமாக கடித்தாள். இன்னும் …..இன்னும் ……இன்னும்…..

“மன்னி….” ஜன்னல் கம்பி இடைவெளியில் தெறித்து விழுந்த நாக்கு பேசுவதை நிறுத்தியது. துடிப்பதை நிகழ்த்தியது. காணும் கண்களில் ரத்தம் உணர்ந்தார்கள் இருவரும். மொழியற்று முழியற்று வெற்று முண்டங்களை போல பார்த்த அவர்களுக்கு செய்ய ஒன்றும் இல்லை. வெறித்த பார்வை. திறந்த வாயோடு இருவருமே ஒருவர் பின் ஒருவராக சரிந்தார்கள்.

சுவரில் அரையடிக்கு ஒட்டப்பட்டிருந்த கிம் – ன் புகைப்படத்துக்கு நாக்கில்லா…. பல்லில்லா குருதி கொப்பளிக்கும் வாயால் முத்தமிட்டபடியே சரிந்த சஜினி ஆழமாய் ஏங்கிய மூச்சை விட்டபடியே கால்களை சடக்கென நிமிட்டினாள்.

மலை அடிவாரத்தில் இருந்து கிளம்பிய கிம்மின் அனத்தல் சத்தம் ஓங்காரமாய் மாறுவதை கேட்க முடிந்தது. மெல்ல கிளம்பிய கிம்மின் ஆன்மா படுவேகமாய் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.

***

அழுது ஓய்ந்து… அமைதி மட்டும் கிடைக்கவே இல்லை. முதுகுக்கு பின்னால் சஜினி நிற்பது போலவே ஓர் எண்ணம். அவள் அப்பாவும் அம்மாவும்… அவ்வவ்போது திரும்பிக் கொண்டே இருக்கிறார்கள். எங்கு போனாலும்… எங்கு இருந்தாலும்.. வீட்டில்… வழியில்… வாசலில்… ஒரு நாயைப் போல தங்கள் வாலை தாங்களே கடிக்க முயற்சிப்பது போல சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.

போதாமை அவர்களை சுழற்றிக் கொண்டே இருக்கிறது. சொல்ல முடியாத எல்லாமாகவும் அவர்கள் ஆகி விட்டார்கள். ஒவ்வொரு முகூர்த்தம் நாளன்றும் ஜாம் ஜாம் என மலை உச்சியில் இருக்கும் தங்கள் பங்களாவில் கல்யாணம் நடத்தினார்கள். முதலில் மற்றவர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தாலும்… பிறகு அவர்களின் மனநிலை புரிந்து கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள். காதலுக்காக தற்கொலை செய்து கொண்ட மகளை மறக்க முடியாத அப்பாவும் அம்மாவும் இல்லாத மகளுக்காக நடத்தும் திருமணம் இது என்று நம்பினார்கள். அங்கு மாப்பிள்ளையும் பொண்ணும் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். மற்றவர்களும் அதை அப்படியே நம்புவது போல நடந்து கொண்டார்கள். கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே இருக்கும் நூல் பிடித்து தான் ஒவ்வொரு மனிதனும் அட்சயை தூவ தயாராகிறான். அவர்கள் கற்பனையில் நம் உலகம் இயங்குகிறது என்பதாக அவர்கள் கற்பனை செய்தார்கள். ஒவ்வொரு மனிதனின் கற்பனையிலும் ஒரு உலகம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு வடிவம் தருவது அவர்களின் ஆற்றாமை என்றால்… நம்பலாம். ஊரையே கூட்டி தங்கள் மகளின் மீதான அன்பை வெளிப்படுத்தினார்கள். ஓர் இயல்பான கல்யாணம் போலவே ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டார்கள். ஊருக்கே சோறு போட்டார்கள். அந்த ஒரு நாளில் மட்டும் தான் சஜினியிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை. மற்ற நாட்களில் அவள் அப்பா அம்மா என்று மாறி மாறி முதுகுக்கு பின்னால் விழித்தே இருந்தாள். வாழ்நாள் சாபம் அது. கிட்டத்தட்ட அவர்களை உயிரோடு கொன்றாள். முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு அவள் மூச்சுக்கு திணறும் சப்தம் அவர்களை எப்போதும் நடுக்கத்திலேயே வைத்திருந்தது. சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத மரண ஸ்விங்கம் அவர்கள் வாய்க்குள் அல்லாடியது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையை திருமணம் தொடர்பாக மகள் சொல்வதாக நினைத்து அதை ஆமோதிக்கவும் கற்றுக் கொண்டாள் அம்மா. முதலில் முடியாது என்பது போல அப்பா புலம்பினாலும் பிறகு அவள் பேச்சுக்கு காது கொடுத்து சரி என்பார். முன்பு செய்த தவறை சரி செய்ய செய்யும் முயற்சியாகவே இருந்தது… அவர்களின் எல்லா நடத்தையும். அவர்களிடம் இருந்து அவர்களே மறைந்து கொள்ள அவர்கள் எடுத்த யுக்தி இது. மறைந்து கொள்ளும் இந்த நாளில் அவர்கள் மிகுந்த சந்தோஷமாக இருந்தார்கள். கொலையும் தற்கொலையும் விரட்டி விரட்டி அவர்களை முதுகு பார்க்க செய்யும் தண்டனையில் இருந்து இந்த திருமண நாட்களில் விடுதலை கிடைத்தது. அவர்கள் தண்டனையை வேறு வழியில் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் இதிலிருந்து விடுபட செய்யும் திருமணத்தில்… ஊரார் கூடி இருக்க பொண்ணும் மாப்பிள்ளையும் இருப்பது போல நம்புவது பிடித்திருந்தது. அந்த ஒரு நாளில் அவர்கள் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். செய்த பாவத்தில் இருந்து விடுபடும் சின்ன இடைவேளை அது. முதுகில் தொங்கி கொண்டிருக்கும் சஜினி ஒதுங்கி இருப்பதாக ஒரு நம்பிக்கை.

கிம் அடிக்கடி எங்காவது மறைந்து கொள்ளும் ஆள் தான். அப்படி தான் கிம்மின் பாட்டி நினைத்துக் கொண்டிருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாக கல்யாண விருந்தில் கண்ணீர் மல்க பிரியாணி தின்னும் பாட்டிக்கு மனதுக்குள் இருக்கும் இனம் புரியாத கவலை மட்டும் தீர்வதேயில்லை. எப்போதோ தான் செத்து விட்டதாக நம்பும் பாட்டிக்கு தான் இல்லாதது போலவே தான் ஒரு நம்பிக்கை. கிம் கூட எங்கோ இல்லாமல் போனதாக ஓர் எண்ணம் பாட்டிக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கல்யாண விருந்தில் அது இன்னும் அழுத்தம் கூட்டுகிறது.

இன்றும் கூட இல்லாத திருமணம் முடிந்து ஓய்ந்த இரவில்… அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். இந்த உலகம் கற்பனையாய் சுழன்றால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது. வீடு முழுக்க சூனியம் பெறுக ஆரம்பித்திருந்தது. ரத்த வாடையும்… மரண பூரணமும் மீண்டும் வீடு முழுக்க அப்பிக் கொள்ள….. ஒரே உருவமாய் கலந்திருந்த கிம்மும் சஜினியும் அம்மாவின் முதுகுக்கு பின்னால் வழக்கம் போல மறைந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். எதிரே இருந்த ஜன்னல் டம்மென திறந்து மூடி…. திறந்து மூடி……திறந்து மூடி……வழக்கம் போலான பிராண்டலை தொடங்கி இருந்தது. உயிர் உள்ள பிணங்களாக அவர்கள் இருவரும் அந்த வீட்டில் கிடந்தார்கள். சூனியம் அப்பிக் கொண்ட அந்த வீட்டில் ரண வாசம் நெடி முடை என்று ஒரு நரகத்தின் கூடாரத்தை மெய்ப்பித்துக் கொண்டிருந்தது. அவர்கள் நிகழ்த்திய பாவம்…. தங்களை நிஜம் என்றும் அவர்களை கற்பனை என்றும் இருவருமே மாறி மாறி நினைத்துக் கொள்ள செய்தது. இந்த நிஜத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த கற்பனை தேவையாய் இருந்தது.

அதே நேரம் தன் சிறு வீட்டில் தன் ‘பேத்தி’ கிம்முவின் புகைப்படத்தை துடைத்தபடியே ஆழமாய் பார்த்து விசும்பிக் கொண்டிருந்த பாட்டிக்கு இந்த மலை தேசத்தில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் தன் சிறுவயது கற்பனையா…. கிழ வயது நிஜமா என்று யோசிக்க முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *