கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2012
பார்வையிட்டோர்: 9,768 
 

செய்தாமு சாயபும் சேமீரா வாத்தியாரும் சிங்களத்-தில் பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தனர்.

இடம்தான் கொஞ்சம் இடித்தது! அது, அவர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த இலங்கை-யிலுள்ள பதுளையோ, பண்டாரவிளையோ அல்ல; சாத்து மாநகரின் மீன் சந்தை.

‘‘அப்புறம்… நேத்து என்னதான் செய்தீர்?’’ & திடீரென்று தமிழுக்குத் தாவினார் சேமீரா.

‘‘என்ன ஓய்… இம்பிச்சிக்காணும் ஒரு மாவுளாவை வெச்சுக்கிட்டு இருபது ரூவான்னான். சோலியப் பாருவேன் னுட்டு, கடையிலே போயி நாலு முட்டை வாங்கிக் கொடுத்து ஆக்கச் சொன்னேன். பகல் முற ஒப்பேரிட்டா ராத்திரிக்கு ரொட்டி-தானே… வெறும் ஆணம்கூடப் போதுமே?’’

‘‘இன்னிக்கும் அப்படித்தான் ஆவும்போல் இருக்கு. ஏதாவது சாளை அல்லது மொற லாவது வரும்னு பார்த்தா, ஒண்ணை யும் காணோமே!’’ என்றவர், மார்க் கெட்டுக்குள் மரியம் பீவி நுழைந்து கொண்டு இருப்பதைப் பார்த்து, ‘‘அந்தா வாரா பாரும் ராயல் ஃபேமிலி!’’ என்றார்.

‘‘நீமிரு சொன்னாலும் சொல்லாட்-டாலும் அவ ராயல் ஃபேமிலிதான் ஓய்..! அவ பொறந்த எடத்துக்கும் வாக்கப்பட்ட எடத்துக்கும் என்ன கொறச்சல்..? அவ புருஷன் மீறாசா, கொழும்புலே ஒருத்திய சேர்த்துக் கிடப் போய் இப்படி ஆயிட்டா!’’

மரியம் பீவி நேராக அந்தோணி முத்து இருக்கும் இடத்துக்குச் சென்றாள். ஒரு பெரிய அருக்குளா மீனை வைத்துக்கொண்டு, யாராவது தோதான பார்ட்டி வந்தால் ஒரு நூறு அல்லது நூத்துப் பத்து ரூபாய்க்குக் கொடுத்துவிடுவோமா, அல்லது பதி னைந்து கூறு போட்டு பங்கு பத்து ரூபாய் வைத்து விற்போமா என்று யோசித் துக்கொண்டு இருந்தான். அப்படி யானால் மீனின் தலை தன் வீட்டுக் கறிக்கு உதவும். ஆனால், மெனக்கேடு!

‘‘என்னா, அந்தோணி முத்து… இவ்வளவு பெரிய மீனை யாரு வாங்கப் போறா? அது நொந்து நூறு சில்லியாப் போறதுக்கு மின்னாடி கூறு போட்டு வித்துட வேண்டியது தானே?’’ என்றாள் மரியம் பீவி.

‘‘நானும் அப்படித்தான் ரோஸ்த்-துக்கிட்டு இருக்கேன். இன்னய்க்கி என்னமாவது மாசம், கெழமையா இருக்கும். அதான், ஆளுவளையே காணோம். எம்மோவ்… ஒரு பதினஞ்சு கூறு போடலாமா?’’

தன்னோடு பள்ளிக்கூடத்தில் படித் தவன் என்கிற உரிமையில் மரியம் கொஞ்சம் எடக்காகப் பதில் சொன் னாள்… ‘‘உன்னையும் சேர்த்து அறுத்தாதான் பதினஞ்சு கூறு தேறும். பேசாம பத்து கூறு போட்டு பங்-கொண்ணு பத்து ரூவா வை போதும்!’’

‘‘எம்மோய்! நானும் காசு குடுத்து தான் வாங்கிட்டு வாரேன். ஒவரியி லிருந்தும் பெரியதாளையில் இருந்தும் சைக்கிளைச் சமுட்டிக் கொணாந்து, சக்காத்துக்கா யாவாரம் செய்வாவ?’’

கடைசியில், கூறு இருபது வீதம் ஆறு கூறுகள் என்று தீர்மானமாயிற்று. அங்கு வந்த செய்தாமு சாயபும் சேமீரா வாத்தியாரும் ஒரு பங்கைத் தாங்கள் இருவரும் எடுத்துக் கொள்வ தாகச் சொல்ல, மரியம் பீவி முழுசாக ஒரு கூறு வாங்கினாள்.

சேனாவுக்கும் சேயன்னாவுக்கும் கொஞ்சம் கடுப்புதான். அவர்களால் வாங்க முடியாது என்றல்ல; அவர்கள் சம்பாதித்த காலத்தில் பணம் ஒரு பொருட்டே இல்லை. கொழும்பில் அதனை ‘சல்லி’ என்றுதானே சொல் வார்கள்! ஆனால், பெற்ற மக்களின் சம்பாத்தியத்தில் இன்று வாழும் போது, செலவு என்பது ‘எண்ணிச் சுட்ட பணியார’மாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களது நினைப்பு.

ஆனால், மரியத்தின் நிலை?

பிறந்ததும் புகுந்ததும் பெரிய இடங்கள்தான். வம்சாவளிச் சொத்தை எல்லாம் பொண்டாட்டி தாசர்களா கப் போய்விட்ட அண்ணன், தம்பிகள் ஏமாற்றி அபகரித்துக்கொண்டார்கள். ‘போக்கழிஞ்சு போறானுவ மாடனுவ’ என்று இவளும் விட்டுவிட்டாள். ஆயிரம் பூமிக்கு அதிபதியாக இருந்-தாலும், கடேசில பள்ளிக் கபறாடி யிலே, ஓசியிலே கெடைக்கிற தரை, இறுகிப் போனா… மையம் இத்துப் போனா அடுத்த ஒண்ணைக் கொண்டு வந்து அடக்க மாட்டாங்க என்கிறது என்ன நிச்சயம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்வாள்.

புகுந்த இடமும் பெருங்காய டப்பாவாகிப் போனது. கொண்டவன் கூறு உள்ளவனாக இருந்தால் அவ ளுக்கு ஏன் இக்கதி வரப்போகிறது? அவன், ‘தொடர்ந்து இலங்கையில் இருக்க, பிரஜா உரிமை அவசியம். அதற்காக இங்கே ஒருத்தியைக் கட்டிக்கப் போறேன்’ என்று அவ ளுக்கு எழுதிப் போட்டுவிட்டே செய் தான். பிரஜா உரிமை எடுத்திருந் தால் இலங்கை பாஸ்போர்ட்டிலேயே இங்கு வந்து போய் இருக்கலாம். ஆனால், அதற்கான தேவை அங்கேயே நிறைவேறியபோது… ஓ… அவன் ஆண்பிள்ளையாயிற்றே!

நாளாக நாளாக நகை, நட்டு, பண்ட பாத்திரங்கள் எல்லாம் காலி! என்றாலும், யாரிடத்திலும் எதையும் யாசிப்பதில்லை & அண்ணன், தம்பி யிடம் உட்பட & என்பது அவளது பிடிவாதமான கொள்கை.

‘எனக்குள்ளதையே ஏமாத்தி அப்பிக்கிட்டானுவ. பொறவு இவனுவ என்ன எனக்குப் போட்டுக் கட்ட றது?’ என்பாள்.

மின் இணைப்பு இல்லாத ஒரே வீடு அவளுடையது என்றாகிப்-போனது. ‘அது வேற எதுக்கு தெண்டம்! அந்த ரூவாய்க்கு ஒருபடி கடலையும், கருப்பட்டியும் வாங்கினா ஒரு வாரத்துக்கு ஹனாயத்து கழியுமே!’ என்கிற நினைப்பு.

இரண்டு ஆண் மக்களில் மூத்த வனுக்கு பத்துப் பன்னிரண்டு வயதி ருக்கும். ‘ஏதாவது கடை கண்ணியில் விட்டால் நாலு காசு கிடைக்குமே?’ என்றால், ‘அது கடவாய்ப் பல்லுக்குக் காணுமா?’ என்று திருப்பிக் கேட்பாள். தன் குடும்பப் பெருமைகளை மீட் டெடுக்கும் அளவுக்குத் தன் மக்களை ஆளாக்க வேண்டும் என்று அவள் உள்ளுக்குள் ஒரு ஆவேச தீ!

ஒரு நாள், கொழும்பிலிருந்து ஒரு கடிதம்.. அந்த நல்ல மனுஷன் நூப்பனார் பேரன் எழுதி இருந்தார். ‘உன் புருஷன் இங்கே தேயிலை புரோக்கர் வேலை செய்கிறான். அவன் எங்கள் கம்பெனிக்கு தீர்க்கும் சரக்குகளுக்குள்ள தரகுப் பணத்தை அவனிடம் கொடுக்காமல் பிடித்து வைத்து, உனக்கு அனுப்ப எண்ணி இருக்கிறேன். அவனுக்கும் அதில் சம்மதம்தான். இல்லாவிட்டால் யார் அவனை வாசற்படி ஏற்றப் போறா? குலசேகரபட்டணத்திலிருந்தோ, தருவை யிலிருந்தோ யாராவது ஒருவர் பணம் கொண்டுவந்து தருவார்’ என்றிருந் தது. அந்த வகையில் நேற்றுக் கொஞ்சம் பணம் வந்தது.

கையிலுள்ள காசு கரைந்து, இனி அடுத்து செலவுக்குப் பணம் வரும் வரை, சில வீடுகளில் மாவு இடித்து வறுத்துக் கொடுப்பாள். சிலருக்கு தண்ணீர் மெத்திக் கொடுப்பதும் உண்டு. சரீரப்பாடு படுவதால் குடும் பப் பெருமை ஒன்றும் கெட்டுவிடாது என்பது அவளது நம்பிக்கை.

இந்நிலையில்தான், பட்டாணி ராவுத்தர் இன்ஸ்பெக்டராக அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். ஓட்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்குச் செத்துப்போய்க்கிடந்த அவருக்கு ஒழுங்காக ஆக்கி அடுக்கிக் கொடுக்கத் தேவைப்பட்ட பெண்ணாக மரியம் அமைந்தாள்.

‘‘ஏ மூதி… நீ என்ன மூத்து நரச்ச கெழவியா, சின்ன மனுஷிதானே? அவரும் ஒத்தயா தனிச்சிருக்குற மனுஷன்தானே..? இது நல்லாவா ஈய்க்குது?’’& கல்லூட்டுக் கண்ணம்மா பெத்தா கேட்டாள். உதவி செய்ய முன்வராவிட்டாலும், உபதேசம் செய்ய நான், நீ என்று வருபவர்கள் அநேகம். மரியம் தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘‘ஏ பெத்தா! மனுஷா மக்கள்ல ஆளும் தரமும் தெரிய வேண்டாமா?’’ என்று மட்டும் கேட்டு வைத்தாள்.

செய்த வேலைக்குரிய பிரதி பலனைப் பெற்றுக்கொள்வதல்லாது அவள் உப்பு உரைப்புகூடப் பார்ப்ப தில்லை என்பதில் பட்டாணி ராவுத் தருக்கு அவள் மீது பெருமதிப்பு.

எனினும், காலக்கிரமத்தில் அநேக-மான ஆண்கள் போடும் அந்தக் கணக்கை அவரும் போட ஆரம்பித்-தார். இளமை இன்னும் விடைபெறாத, முதுமையின் எந்த அம்சமும் இது-வரை வந்து சேராத அவளது உடற்-கட்டு, புருஷனைப் பிரிந்து நெடுங்-காலமாக இருக்கும் நிலைமை, எல்லா-வற்றுக்கும் மேலாக அவளைச் சூழ்ந்-துள்ள வறுமை… கூட்டல், கழித்தல் சரியாக வரும் போல் தெரிந்தது.

அன்று அவர் ஆபீஸ் போகவில்லை. அவள் சமையல் வேலைகளை முடித்து வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானாள் மரியம்.

அவர் அவளை நெருங்கினார். கொஞ்சம் நடுக்கம், கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் பதற்றம்… ஆனால் அவள் எவ்வித உணர்வும் இல்லாமல் அவரை ஏறெடுத்துப் பார்த்தாள். அவருடைய நடுக்கம் நின்றது. தயக்கம் மறைந்தது. பதற்றம் குறைந்தது. மூச்சுக்காற்று லேசாக, வெகு நிதா-னத்துடன், மிக இயல்பாக வந்தது. மெள்ள நெருங்க ஆரம்பித்தார்.

‘வழி தவறுவதற்கு வறுமை ஒரு சாக்காக இருக்கக் கூடாது’ என்கிற மெஹ்ராஜ் லெப்பையின் வெள்ளிக் கிழமை ஜும்மா பிரசங்கம், அவள் ஞாபகத்துக்கு வந்தது.

‘‘என் புருஷன்கிட்டேயிருந்து இன்னிக்கும் எனக்குப் படி உடை வருது. ஒரு தடவை வர்ற பணம், எனக்கு ஒரு மாசம் கஞ்சி குடிக்கப் போதும். கொஞ்ச நாளைக்குன்னாலும் நல்ல சோறு, நல்ல கறி ஆக்கித்தான் நானும் என் மக்களும் தின்போம். மத்த நாட்கள்ல பட்டினி கெடக்கறதப் பத்திக் கவலையில்லை. இப்போ என் புருஷன் இங்கே இல்லை. ஆனா, எப்ப னாச்சும் வரும்போது அவங்களோடு சேர்ந்து வாழற மாதிரி வாழ்வேனே தவிர, நீங்க நினைக்கிற மாதிரி…’’ நிதானித்தாள்; நிறுத்தினாள்.

அதிகம் படிப்பறிவில்லாத பட்டிக் காட்டுப் பெண் தத்துவம் பேசுவது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஆகவே, அதை ஒரு எதிர்ப்பாக அவர் எண்ணவில்லை. அதனால் இன்னும் கொஞ்சம் துணிவு பெற்றார். அவள் தோளைத் தொட்டார்.

அவள் ஆடவில்லை. அசையவில்லை. வேறொரு ஆடவன் அவளைத் தொடுவது இதுதான் முதல் முறை. ஒரு ஆணோடு சரி சமமாக நிற்பது, பேசுவதும்கூட இதுதான் முதல்முறை. உச்சி தொட்டு உள்ளங்கால் வரை அவள் உடலில் பரவுவது சூடா, குளிரா? உடல் சிறிது நடுங்கத் துவங்கியது.

தன் புருஷனால் அல்லவா தான் இக்கதிக்கு ஆளானோம் என்று நினைத்தபோது, அவன் மீது கோபம் வந்தது. தனக்கு எதற்குப் புருஷன், தனக்கு எதற்குக் குலப் பெருமையும் குடும்ப கௌரவமும் என்கிற கழிவிரக் கம் வந்தது. ஆனால், தன் பிள்ளைகள் தலையெடுக்கிற காலத்தில், தன் செய்கைகள் எதுவும் அவர்களைத் தலை குனியும்படியாக வைத்துவிடக் கூடாது என்கிற நினைவு வந்தபோது கூடவே யானை பலமும் வந்தது.

தோளில் பட்ட கையை ஆங்காரத் தோடு விலக்கினாள். ‘‘என் புருஷன் இங்கே இல்லைங்கறதால, நீங்க என் கையப் புடிச்சி இழுக்கிறீங்க? ஊர்ல உங்க பொண்டாட்டியும் நீங்க இல் லாமதான இருக்காங்க..? அவங்களை வேறொரு ஆம்பிளை கையைப் புடிச்சு இழுக்க நீங்க சம்மதிப்பீங்களா?’’ படபடப்பு அடங்குவதற்காகச் சிறிது நிறுத்தினாள். வியர்வையைத் துடைத் துக்கொண்டாள்.

‘‘இத நான் இப்படியே விட்டுர்றேன். இது வெளியே தெரிஞ்சா நம்ம ரெண்டு பேருக்குமே கேவலம். இதுக்-காக நா நாளைக்கு வேலைக்கு வராம இருக்க மாட்டேன். ஆனா… நீங்க மறு-படியும் எப்பனாச்சும் இப்படி நடக்க நெனச்சா, எனக்குக் கஞ்சி ஊத்த ஆளில்லேன்னாலும் கச்ச கட்ட ஆளிருக்கு. மறந்துடாதீங்க!’’

இது வேண்டுகோளா, உபதேசமா, எச்சரிக்கையா என்பதை அவர் புரிந்து கொள்வதற்குள் அவள் போய்விட்டாள்.

மறுநாள்… வேலைக்குப் போக வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. பட்டாணி ராவுத்தர் நீண்ட விடுப்பில் ஊர் போய்-விட்டார்.

அவளது மூத்த மகன் ஒரு பலசரக்குக் கடையில் வேலைக்குப் போகிறான்.

– 04th ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *