கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 4,689 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் வீடு திரும்பியபோது இருள் அடர்ந்து விட்டது. தெருவின் நிசப்தமும் பெருகிய இடைவெளியில் அமைந்திருக்கும் விளக்கேற்றிய வீடுகளும் என்னை மயக் கின. ஆனால் அந்த அழகு மயக்கத்திலே லயித்திருக்க என் மனைவி விடவில்லை. ‘சீக்கிரமாக நடங்களேன். மாப்பிள்ளை வந்து காத்துக் கொண்டிருக்கப்போகிறார்’ என்று என்னைக் கடிந்து கொண்டாள். ஆனால் வீட்டுக் கதவை நாங்கள் தான் திறக்க வேண்டி யிருந்தது. மாப்பிள் ளையும் பெண்ணும் இன்னும் வரவில்லை.

வீட்டினுள் நுழைந்ததும் பக்கத்து வீட்டு மராத்தியப் பெண் ஒரு கடிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத் தாள். அதில் ‘ கௌரி, திருநெல்வேலி – நாளைக் காலையில் வருகிறேன்.’ என்று எழுதியிருந்தது. உடனே என் மனைவி பரபரப்புடன், “நாங்கள் இல்லாதபோது வந்து தேடினாளோ?” என்று மராத்தியில் கேட்டாள்.

“ஆமாம்” என்றாள் அந்தப் பெண்.

“தனியாகத்தான் வந்தாளா அல்லது கூட யாரேனும்…”

“இல்லை தனியாகத்தான்” என்று பதில் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

எனக்கு வியப்பினால் பேசவே முடியவில்லை. கௌரி – அந்தப் பேதைப் பெண் – இங்கு எப்படி வந்தாள்? தன்னந் தனியாக இந்தப் புனாவில் வந்து தேடுகிற அளவுக்குத் தைரியம் வந்துவிட்டதா? இப்படிக் கேள்வி மேல் கேள்வி கள் என் உள்ளத்தில் எழுந்து கொண்டிருந்தன. வாழ்க்கை யிலே எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். சிலருடன் பல நாட்கள் பழகினாலும் கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் நினைவு , ‘ஸ்பிரிட்’ ஆவியாகி விடுவதைப் போல் மறைந்து விடுகின்றது. சிலருடைய நினைவுகள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதவாறு மனத்தில் வயிரம் பாய்ந்து விடுகின்றன. கௌரியும் எங்கள் மனத்தில் அப்படித்தான் தங்கிவிட்டாள்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் நான் திருநெல்வேலியில் ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ‘ வேலை பார்த்தேன். திருநெல் வேலிச் சீமையின் தமிழ்ப் பேச்சும், தாமிரபரணியின் தெளிந்த நீரும் இனிமையானவை என்று பலர் சொல்வார் கள். ஆனால் எனக்கோ அனந்தையன் அக்ரஹாரத் தினரின் வாழ்க்கையைப் போல இனிமையானது உலகில் இல்லை என்பது திட்டமான அபிப்ராயம். அந்தத் தெரு வில் என்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பரம்பரைப் ‘பண்ணையார்கள் ‘. ஆகவே அறுவடைக்காலம் தவிர மற்றப்போதெல்லாம் அவர்களுக்கு அரட்டைக் காலம். யாராவது ஒருவருடைய வீட்டுத்திண்ணையில் நாள் தோறும் ஒரு மகாநாடு கூடும். ஆங்கிலேய ‘வைஸ்ராயின் விநோத சட்டத்தினால் தாமிரபரணியில் தண்ணீர் குறைந் தது ?. குப்புசாமியின் எட்டாவது குழந்தைக்குக் கையில் ஆறு விரல் இருந்ததனால், அவனது எதிர்காலப் பதவி என்னும் பல விஷயங்கள் குறித்து ‘எழுதாக்கிளவி’ களாகப் பல தீர்மானங்கள் நிறைவேறும்.

பிறகு எல்லோரும் யோக நிலையில் அமர்ந்து இஸ் பேட் , ‘ ‘ஜாக்கி’ ஆகிய தெய்வங்களைத் துதிப்பார்கள். பிறகு – ‘டேய்! அடா’ என்று ஏக வசனத்தில் கூச்சல்கள் – எல்லோரும் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொள்ளு தல் – மகாநாடு கலைதல். நாள்தோறும் நடக்கும் இந்த மகாநாட்டைப் பார்க்கும் போதெல்லாம் ”சீ! என்ன ‘ரெவின்யு’ உத்தியோகம்? மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் ஊர் ஊராக அலைவதும் வசூலாகும் பணத்தை நெருப் பைப் போலப் பாதுகாத்து வைத்துக் கொள்வதுமே வாழ்க் கையாக ஆகிவிட்டது. இப்படி ஒரு நாளாவது நான்கு மனிதர்களோடு கலகலப்பாக உறவாட முடிகிறதா?” என்று அலுத்துக் கொள்வேன்.

ஊர் ஊராக அலைந்தாலும் ஓய்ந்து இருக்கும் போது என்னை வாட்டும் தனிமையின் சலிப்புப் பொறுக்க முடிய வில்லை. அதைத் தவிர்ப்பதற்காகவே நான் சாம்பசிவ ஐயருடன் தொடர்பு கொண்டேன். சாம்பசிவ ஐயர் பக்கத்து வீட்டுக்காரர் என்ற அளவுக்கு மிகவும் நல்லவர் . எந்த விஷயத்தைப் பற்றியும் சளைக்காமல் பேசுவார். ஆனால், எப்போதாவது நான், “இந்த நாற்காலி நன்றாக இருக்கிறது; இல்லையா? நீங்களும் உங்கள் வீட்டில் நாலு நாற்காலி வாங்கிப் போடுங்களேன்”, “உங்கள் பிள்ளை வைத்திக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுப்பது தானே. பாவம்! காலேஜுக்கு நடையாக நடக்கிறானே” என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தால் உடனே ”எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. வரட்டுமா?” என்று கிளம்பிவிடுவார். அவர் போன பிறகு என் மனைவி வந்து என்னிடம், “உங் களுக்குக் கொஞ்சமாவது மனிதர்கள் சுபாவத்தைப் புரிந்து கொள்ளும் புத்தியே கிடையாது. அவருக்கு காசை நழுவ விடுவது என்றால் கையையே நறுக்கிக் கொள்வதுபோல, அந்த மாதிரி மனிதரிடம் போய் இப்படியா செலவுக்கு வழி சொல்வது?” என்று வெறுத்துக் கொள்வாள்.

எனக்குச் சாம்பசிவ ஐயருடைய நடத்தை ஆச்சரிய மாகவே இருந்தது. நிலமும் சொத்தும் குறைவின்றிக் குவித் துள்ள அந்த மனிதர் ஏன் சாயவேட்டியைத் தவிர, வேறு எதையும் விரும்புவதில்லை? அரையணா குறைவாகத் தேங் காய் வாங்குவதற்காக ஊரெல்லாம் அலைவதில் ஏன் தளர்வ தில்லை? அந்த மனிதருடைய உள்ளத்தில் ஏதோ இருக்க வேண்டும். ” ஒருவேளை வைத்தியை இங்கிலாந்து, அமெ ரிக்கா என்று வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பப் போகிறாரோ!” என்று எண்ணினேன்.

ஒரு நாள், “என்ன மாமா, வைத்தியை மேலே என்ன படிக்கச் சொல்வதாக உத்தேசம்” என்று வினவினேன். சாம்பசிவ ஐயரின் முகத்தில் ஒரு திருட்டுப் புன்னகை ஓடியது. “இப்போது தான் காலேஜிலே சேர்ந்திருக்கிறான். பிள்ளையாண்டான் பாஸ் பண்ணின அப்புறம் அவன் பாடு அவன் மாமனார் பாடு. எனக்கேன் வீண் தலையீடு?” என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன்.

“என்ன உங்க பிள்ளைக்குக் கல்யாணமாகி விட்டதா? எனக்குத் தெரியவே தெரியாதே!” என்றேன். பள்ளிக் கூடப் பையன்களின் விஷம் புத்தியும், குமரப் பருவத்தின் அலட்சியத் தன்மையும் கலந்த வைத்தியைக் கல்யாண மான மனிதன் என்று நம்பவே முடியவில்லை. “யார் பெண்?” என்று திகைப்பை மறைப்பதற்காகக் கேட்டேன். “எல்லாம் நம்ப பக்கந்தான். கடையத்துப் பண்ணையார் நல்லசாமி ஐயர் பொண்ணு; ஏதோ மஞ்சக்காணி இருக்கு. பதினாலு வயசாகிறது அவளுக்கு – கௌரிக்கு; மாசத்திலே ஒருதரம் இங்கே வருவாளே! நீங்க பார்த்ததில்லையா? ஏன் சார்”

நான் பேசாமலிருந்தேன் ; “காலா காலத்தில் கல்யாணம் பண்ணிவிட வேண்டும் குழந்தைகளுக்கு” என்று பொதுவாகச் சொன்னார், சாம்பசிவ ஐயர். எனது பெண்ணைச் சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணிக் கொடுப் பதற்காக அப்படிச்சொன்னாரா, அல்லது தமது செயலுக்குச் சமாதானம் தேடுவதற்காக அப்படிப் பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை.

நான்கு நாட்களுக்குப் பிறகு “மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணு” என்று சொல்லிய வண்ணம் சாம்பசிவ ஐயர் உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னே ஒரு பெண், என் மகள் சுமதியை விட சற்றுப் பெரியவளாக இருப் பாள் – மேனி துவள வந்து என்னை வணங்கினாள். வீட்டி னுள்ளிருந்து சுமதியும், என் மனைவியும் வந்து கௌரியை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

கௌரியிடம் இன்னும் பேதைப் பருவத்தின் இனம் புரியாத இயல்பு தேங்கிக் கிடந்தது. அவளுடைய முகத் திலும் கண்களிலும் குழந்தையின் ஆர்வம் பொங்கி வழிந் ததே தவிர யுவதியின் மயக்கும் சக்தி அவற்றில் காணப் படவில்லை. மேனி எல்லாம் நகை பூட்டியிருந்தார்கள். அந்த நகைகளும் சரி, கௌரி நாணி நடந்ததும் சரி – எல்லாம் எனக்குப் பருவம் மீறிய சுமையாகத் தான் தென் பட்டன. இந்தச் சின்ன வயதிலே குடும்ப பாரத்தைச் சுமக்கச் செய்து விட்டார்களே என்று எண்ணினேன். ஆனால் என்னுடைய எண்ணத்திற்குப் பதில் கூறுவது போல அந்தச் சம்பவம் நடந்தது. அப்போது கௌரி எவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கினாள்!

ஒரு ஞாயிற்றுக்கிழமை; காலை பத்து மணி இருக்கும். நான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தெருவில் சலசலப்பு ஏற் பட்டது. வெளியே எட்டிப் பார்த்தேன் சாம்பசிவ ஐயரின் வீட்டு வாயிலில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாலைந்து ஜவான்களுடன் நின்று கொண்டிருந்தார். தெருவில் உள்ள “அரை டிக்கெட்டுகள்” எல்லாம் வேடிக்கை பார்ப்பதற் காகக் கூடி நின்று கொண்டிருந்தன.

“வைத்தியநாதன் என்கிற பையன் இந்த வீட்டில் தானே இருக்கிறான்?” என்றார் இன்ஸ்பெக்டர். “ஆமாம்” என்றார் சாம்பசிவ ஐயர் நடுக்கத்துடன். “நாங்கள் இந்த வீட்டைச் சோதனை போடவேண்டும். இந்த ஊர் காலேஜ் பிரின்ஸிபாலிடமிருந்து எங்களுக்கு ‘ரிபோர்ட்’ வந்திருக்கிறது” என்று கூறிய வண்ணம் இன்ஸ்பெக்டர் தமது ஆட் களுடன் உள்ளே நுழைந்துவிட்டார். சாம்பசிவ ஐயருக்கு நா எழவில்லை. வைத்தி பூனை போல் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருந்தான்.

போலீஸ்காரர்கள் தேடாத இடமில்லை. நெல் குதிர், பரண் , பெட்டிகள் எல்லாவற்றையும் துருவிப் பார்த்து விட்டனர். ஒன்றும் பயனில்லை. கடைசியில் வீட்டின் பின் புறம் இருந்த தவிட்டுப் பானையைக் கிளரத் தொடங்கினர். அதில் கையை விட்டுத் தோண்டத் தோண்ட விதவிதமான கடிகாரங்கள், சில தங்க மோதிரங்கள், மைனர் செயின்கள் எல்லாம் பாற்கடலிலிருந்து பொருள்கள் தோன்றுவது போல் வெளியே வந்தன. நான் அயர்ந்து போனேன்; வைத்தியின் முகம் கன்னிப்போயிருந்தது. இன்ஸ்பெக்டர் என்னையும் வேறு சிலரையும் பஞ்சாயத்தாராக வைத்துக் கொண்டு வழக்குப் பதிவு செய்தார். வைத்தியைக் கைது செய்து அழைத்துக்கொண்டு போனார்கள்.

தெருவில் கதம்பமான பேச்சுக்கள்.

“சீ! பாவம், வைத்தி சாது …”.

“ஓகோ சாதுவா ! உனக்கென்ன தெரியும் பய பூனை மாதிரி இருக்கானே ஒழிய பலே கைகாரன்.”

“காலேஜிலே ஹாஸ்டல் பையன்களெல்லாம் எண் ணெய் தேச்சுக்கறத்துக்கு முன்னே அறையிலே கடிகாரம். மோதிரம் இதெல்லாத்தையும் கழட்டி வைச்சுட்டுப் போவானுக , இவன் தோட்டத்திலே உலாத்தற கணக்கா ஜன்னல் வழியா வாரிண்டு வந்துடுவானாமே.”

“அப்பன் கஞ்சனாயிருந்தா மகன் களவாணியாத்தான் இருப்பான்!”

“சாம்பசிவ ஐயருக்கு இப்போ கை கரையப் போறது. ஹே! ஹே!” என்று ஒருவர் ஆனந்தப்பட்டார்.

விசாரணை, சாட்சியங்கள் என்னும் சட்டத்தின் சம்பிரதாயச் செயல்களுக்குப் பிறகு வைத்தியை ஜாமீனில் விடுவதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்கள். கௌரிக்கும் அவள் தகப்பனாருக்கும் செய்தி போயிற்று. இருவரும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். என் மனைவி, கௌரியை அழைத்து வீட்டில் வைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லத் தொடங்கினாள். நான் சாம்பசிவ ஐயரைப் பார்க்கச் சென்றேன். “மாமா, ஏதோ போதாத காலம் ; பையன் புத்தி இப்படித் திரிந்து போய்விட்டது. ஹும், இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள். ஏதோ ஐயா யிரமோ , ஆயிரமோ ஜாமீனைக் கட்டி அழைத்து வாருங்கள். எனக்குத் தெரிஞ்ச வக்கீல் இருக்கார். ஏதோ நம்மால் ஆனதைப் பார்க்கலாம்” என்று அவரிடம் சொன்னேன்.

“அதெல்லாம் பண்ணி வைக்க வேண்டியவாள் அதோ இருக்கா ; மாப்பிள்ளை மேலே கொள்ளை ஆசை, இல்லாவிட்டா சிரமத்தைச் சிரமம்னு பார்க்காம கடை யத்திலிருந்து ஓடி வருவாளா?” என்று சாம்பசிவ ஐயர், தமது சம்பந்தி நல்லசாமி ஐயரைக் காட்டினார்.

“சே! சே! அப்படிச் சொல்லக்கூடாது. பெத்து வளர்த்த ஒங்க கைக்கு மேலே நான் என் கையை உயர்த் துவதாவது! இந்தக் காரியத்தை நான் பண்ணினா உங்கள் கௌரவம் என்ன ஆகும்?” என்றார் நல்லசாமி ஐயர்.

“என்னது? படிக்க வைத்து வேலை தேடிக் கொடுப்பது என் பொறுப்பு என்கிற பேச்சிலே தானே கல்யாணமே நடந்தது. இப்போ படிப்புக்குத் தடங்கல் வந்ததனாலே நீர்தான் ஐயா ஈடுகொடுக்கணும்.” என்று நேரடியாகப் பேசினார் சாம்பசிவ ஐயர்.

“உங்க பையன் இப்படிப்பட்டவன் என்று தெரிந்தால் இந்த சம்பந்தத்துக்கே நான் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன்” என்று இரைந்தார் நல்லசாமி ஐயர்.

எனக்கு ஏற்பட்ட வெறுப்பிற்கு அளவே இல்லை. பணத்திற்காக – தங்கள் கஞ்சத்தனத்திற்காக இந்த மனிதர்கள் எப்படிப் புதுப்புது நியாயங்களைக் கற்பிக்கின்றனர்! அந்தப் பேதைப் பெண் கௌரியின் மனம் என்ன பாடுபடும் என்று கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்தார்களா? நான் வீடு திரும்பியபொழுது ஒரு பரிதாபமான காட்சி தென்பட்டது.

கௌரி தனது நகைகள் எல்லாவற்றையும் கழற்றித் தரையில் வைத்திருந்தாள். அழுதுகொண்டே என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“மாமி, அப்பா வண்டியில் வரும்போதே சொல்லி விட்டார், என்னிடமிருந்து சல்லிக் காசு பெயராது’ என்று. ‘அவருடைய அப்பாவும் கூட ஜாமீன் கட்ட மாட்டேன்னு சொன்னால் நான் என்ன பண்ணுவது.” என்னைக் கண்டதும் கௌரி என் முன்னே விழுந்து என் பாதங்களைப் பற்றிக் கொண்டாள். “மாமா, நீங்கள் தான் எனக்கு ஒரு வழி செய்யணும். இதோ, இந்த நகை யெல்லாத்தையும் வித்து அவரை அழைத்துக்கொண்டு வரணும். எனக்கு யாருமில்லை; நீங்கதான் உதவணும்” என்று கதறினாள்.

அவளுடைய கண்ணீர் என் பாதத்தை நீராட்டியதுமே என்னுள் ஒரு புதிய சக்தி பிறந்தது. அவளுடைய வேண்டு கோளை நிறைவேற்றுவது என் கடமை என்று தோன்றியது. மைனர் பெண்ணின் நகைகளை விற்பது அவளவு எளிதாக இருக்கவில்லை. நான் என்னுடைய செல்வாக்கை எல்லாம் உபயோகிக்க வேண்டி இருந்தது.

வைத்தி ஜாமீனில் வெளியே வந்ததும் கௌரியிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெண்கள் வெகு விரைவில் முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றுவிடுவார்கள் என்பது வெறும் கவிதைப் பேச்சல்ல. தன்னுடைய பிறந்தகத்தையும் புக்ககத்தையும் உதறித் தள்ளினாள் ; வைத்தியுடன் தனியா கவே வசிக்கத் தொடங்கி விட்டாள். தன்னுடைய கணவ னின் வழக்கை நடத்துவதற்காகத் தன் சக்தி முழுவதையும் உபயோகித்தாள். தையல், சமையல் வேலை இன்னது என்று ஒரு வேலை இல்லை; எல்லாம் செய்து பணத்தைத் தேடினாள். ஆனால் கௌரி பட்ட பாடெல்லாம் வீணாயிற்று. வைத்திய நாதன் ஆறு மாதம் விலங்கு பூண வேண்டித்தான் வந்தது.

அதன் பிறகு நான் சென்னைக்கு மாற்றப்பட்டு விட்டேன். கௌரியிடமிருந்து என் மனைவிக்கு அடிக்கடி கடிதம் வரும். வைத்தியநாதன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, “கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ள மறுக் கிறார்கள். வேலை கிடைப்பதும் கடினமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது பெண் சுமதியின் கல்யாணத்திற்கு கௌரி வந்திருந் தாள். தன்னுடைய மஞ்சள் காணி நிலத்தை விற்று வைத் தியநாதனை ஒரு சைக்கிள் கம்பெனி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தொழில் நன்றாக நடப்பதாகவும் தெரிவித்தாள்.

அதற்குப் பிறகு பத்து வருடங்கள் கடந்துவிட்டன. நானும் என் மனைவியும் புனாவில் எங்கள் பெண்ணுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டோம். இங்கு வந்த பிறகு கௌரியிடமிருந்து கடிதம் வருவது நின்று போய்விட்டது. எனக் குக் கௌரியின் நினைவு தோன்றும் போதெல்லாம், “வைத்தியநாதன் ஒரு மூடன்; அவனுக்குக் கௌரியைப் போன்ற மனைவி கிடைத்திருப்பது பூர்வ ஜன்ம பலனைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?” என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

புனா நகரின் காலைப் பனிதான் பிரபலமானதாயிற்றே! மணி ஏழான பிறகும் கூட பனித்துளிகள் நிலத்தில் படிவது நிற்கவில்லை. கேட்டின் இரும்புச் சட்டங்களில் பனித் திவலைகள் அரும்பி, திரண்டு, தரையில் விழும் அழகை ரஸித்துக் கொண்டிருந்தேன்.

“என்ன மாமா! கௌரியைத் தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஒரு பெண் குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன்; கௌரிதான்!

எவ்வளவு மாறி விட்டாள் ! பிச்சோடாப் பின்னல் கையில் கடிகாரம், பிளாஸ்டிக் பை வேறு; இவளைப் பார்த்தால் பழைய கௌரி என்று நம்ப முடியுமா?

“வா கௌரி, பனியைக்கூடப் பார்க்காமல் புறப்பட்டு வந்து விட்டாய் போலிருக்கிறதே?” என்று உபசாரம் கூறினேன்.

“செல்லம்! கௌரி வந்து விட்டாள்” என்று என் மனைவியைக் கூப்பிட்டவண்ணம் கௌரியை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

“வா கௌரி ! சௌக்கியமா? ஏது இவ்வளவு தூரம்?” என்று வரவேற்றாள் செல்லம்.

“இவதான் கௌரி. நான் சொல்வேனே அடிக்கடி திருநெல்வேலியிலே …………” என்று என் பெண் சுமதி தன் கணவனுக்கு அவளை அறிமுகப்படுத்தினாள்.

“வைத்தி எங்கே வரவில்லையா?” என்றேன் நான். “ஊஹும்” என்றாள் கௌரி .

“புனாவுக்கே வரவில்லையா? அல்லது …” என்றாள் செல்லம்.

“ஆமாம். நான் தனியாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்”

கௌரியின் முகத்தில் சோகம் கப்பிவிட்டது; “இனிமேல் நான் தனிதான்” என்றாள் கௌரி .

“என்னது?” என்றாள் செல்லம். நான் கௌரியின் நெற்றியைப் பார்த்தேன். அதில் துலங்கிய குங்குமம் விபரீதம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை என்று விளக்கியது.

“என்ன கௌரி, உன்னை …”

“ஆமாம் மாமா ஆமாம். நான் அவருக்கு வேண்டாதவளா போய்விட்டேன். பணம் மனிதர்கள் கையிலே சேர்ந்தால், குணமும் மாறிப்போவது சகஜந்தானே! அவர் பெரிய சைக்கிள் கம்பெனி முதலாளி. அவருடைய பூர்வீக சொத்து வேறே இப்போ வந்து விட்டது. அதனாலே பெரிய இடத்து சம்பந்தம் கிடைக்கிறதுக்குக் கேட்கணுமா? அல்லது என்னைப் போல அப்பா, அம்மா எல்லோரையும் உதறிவிட்டு வந்த துக்கிரிதான் அவருக்குத் தகுந்தவளா?”

“உன்னைத் தள்ள எப்படியடி மனசு வந்தது?” என்று ஆத்திரத்தைக் கொட்டினாள் என் மனைவி.

“மனசு என்ன மாமி, போன வருஷம் எனக்கு இருமல் விடாது ரெண்டு மாசமா இருந்தது. அதைக் கொண்டு ‘டி.பி.’ ன்னு டாக்டர்களிடம் ‘சர்டிபிகேட்’ வாங்கினார். பிறகு தனக்கு வேண்டிய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். நான் என்ன பண்ணுவேன். இங்கே அபலா சிரமத்திலே வேலை தேடிக்கொண்டேன்.”

“ஏன் கௌரி, நீ அவன் மேல் கேஸ் போடுவது தானே?” என்று நான் ஆத்திரத்துடன் கேட்டேன். கௌரியின் உதட்டில் ஒரு வறட்டுப் புன்னகை தோன்றி மறைந்தது. “மாமா , உங்களுக்குத் தெரியாதா? அந்த நாளிலே அவர் சிறைக்குப் போகாமல் இருக்கணும் என்று என்ன பாடுபட்டேன். இப்போ நானே இவர் ஜெயிலுக்குப் போவதற்கு வழி செய்யணுமா? அந்த அவமானம் வேறு வேண்டுமா? எப்படியோ அவர் சந்தோஷமாக இருந்தால் சரி.”

நான் தலை குனிந்தேன். குனியாமல் இருக்க முடியுமா? பெண்மையின் கம்பீரத்தை மதிக்காத பேதை அல்லவே நான்.

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *