கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 12,176 
 

“பளார்’ என்று ஓர் அறை. பிரியாவின் இடது கன்னத்தில் மின்னல் தாக்கியது போலிருந்தது.

“”காதல் திருமணமா – அதுவும் சாதிவுட்டு சாதி கேட்குதா உனக்கு?”

என்று சொன்னபடி அவர் வெளியே போய் கதவை அறைந்து சார்த்தி பூட்டினார். அறைபட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “”மாமா மாமா ஏன் உள்ளே வச்சு பூட்றே?” என்று ஜன்னலருகே சென்று கதறினாள். அவர் காது கேளாதவர் போல் விரைந்தார். அவர் நின்ற இடத்தில் சாராய நெடி சுழன்று கொண்டிருந்தது.

கௌரவம்கன்னத்தைத் தடவினாள். நெருப்பு பிடித்தது போல் காந்தல், விரல் தடிப்புகள் பதிந்தது போலிருந்தது. அழுகை பொங்கி பொங்கி வந்தது. வெளியே சாவுமேளச் சத்தம் ஒலி கூடுவதும் குறைவதுமாக இருந்தது. அம்மா இறந்து விட்டாள் என்று அழைத்தார்கள். வந்தவளை அறைக்குள் அடைத்து வைத்து விட்டார்கள். நல்லவேளை முன்னைச்சரிக்கையாக கணவன் சுரேஷ் ஊருக்கு வெளியே நின்று கொண்டான்.

“”ஏதாவது பிரச்னைன்னா போன் பண்ணு, நான் போலீசோடு வந்திர்றேன்” என்று உஷாராக இருந்து விட்டான்.

கணவன் சுரேஷ் எவ்வளவு கெட்டிக்காரன். வலதுகால் மட்டும் போலியோவால் சற்று சூம்பி விட்டது. தொடர்ந்து நிற்கவோ நடக்கவோ இயலாது. ஊன்று கட்டை உதவியாலோ மூன்று சக்கர உதவியாலோதான் நகர்வு. படிப்பில் கெட்டிக்காரன். அவள் பி.காம் படிக்கும் போதிலிருந்து அவனை வியப்போடு பார்த்து வந்தாள். கல்லூரி வளாகத்தினை விட்டு அவள் விடுதிக்கு மூன்று சக்கர சைக்கிளில் போகும்போது யார் உதவிட வந்தாலும் மறுத்து விடுவான். தன்னை ஊனமுற்றவன் என்று அனுதாபத்தோடு யார் பார்த்தாலும் சாதூரியமாய் அலட்சியப்படுத்திவிடுவான். ஆனால் அவர்களை நோகாமல் தனது அறிவால் வியக்க வைத்து விடுவான்.

வகுப்பறைகளில் பேராசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அவன் உதட்டின் நுனியில் இருக்கும். ஆனால் வேறு எவரும் அக்கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால்தான் அவன் கையை உயர்த்தி தன் விருப்பத்தை தெரிவித்து விட்டு, எல்லோருக்கும் புரியும்விதமாய் தெளிவான குரலில் பதில் சொல்லுவான். பிறருக்குத் தெரியாததை, எவரும் சொல்லாததை தான் சொல்லிவிட்டோம் என்ற பெருமித உணர்வோ, எண்ணமோ அவனது முகத்தில் தெரியாது. பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே, பல்கலைக்கழகங்களுக்கிடையே நடைபெறும் பாடம் தொடர்பானவை மட்டுமல்லாமல், சமூக அக்கறை, சுற்றுச்சூழல் தொடர்பான எந்த கருத்தரங்குகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்வான். கல்லூரிக்கும் சார்ந்த பல்கலைக்கழகத்திற்கும் சிறப்பான கெüரவத்தை, கோப்பைகளை ஈட்டி வருவான். அவன் மீதான வியப்பே, அக்கறையாகவும், காதலாகவும் ப்ரியாவிடம் மலர்ந்தது.

தனிமை கிட்டும் போது பல சந்தர்ப்பங்களில் அவனிடம் அவளது காதலை சொல்லியிருக்கிறாள். அவன் மறுத்தே வந்தான்.

“”நான் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு. மாவட்ட ஆட்சியராகவோ, ஒரு மாநில அளவிலான பெரிய அதிகாரியாகவோ வர வேண்டும். என் போன்ற எளிய மக்களுக்கு உதவ வேண்டும். காதல், அது இது என்ற வேகத்தடைகளோ, லட்சிய விலகலோ எனது முயற்சிகளுக்கு தடைபோட அனுமதிக்க முடியாது” என்று கண்டிப்பான குரலில் சொல்லி விடுவான்.

ப்ரியாவும் சோர்ந்து விடவில்லை. அவனைக் கெஞ்சியோ கொஞ்சியோ வெல்ல முடியாது என்று அவனோடு போட்டி போட்டுக் கொண்டு படித்தாள். போட்டிகளில் கலந்து கொண்டாள். அவனை வெல்ல முடியாவிட்டாலும் அவனுக்கு அடுத்த இடத்தில் நின்றாள். அவனது லட்சியம் போலவே தனது லட்சியம் என்றும் தன்னைப்போன்ற கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் தான் மேல்நிலையை அடைவதே லட்சியம் என்று அவனை ஆச்சரியப்பட வைத்தாள். பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதிலும், பாராட்டிக் கொள்வதிலும் சக போட்டியாளர்கள் வாழ்க்கையிலும் சக பயணிகளாக பயணிக்க சம்மதித்தான் சுரேஷ்.

எம்.காம் படித்து முடித்தவுடன் இருவரும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டனர். தேர்வுகளுக்காக பக்கத்திலுள்ள மாவட்டத் தலைநகருக்கு இருவரும் சேர்ந்து பயணிக்கையில் மனதாலும் உடலாலும் நெருங்கினார்கள். பதிவுத் திருமணமும் நண்பர்களின் உதவியால் செய்து கொண்டனர்.

ப்ரியாவின் வீட்டில் ஒரே கொந்தளிப்பு. அந்த மாவட்டத்தில் ஆதிக்க மிக்க சாதியில் பிறந்தவள். வேறு சாதிக்காரனை, அதுவும் ஓர் ஊனமுற்றவனை மணப்பதா? என்று கொந்தளித்தார்கள். பிரித்துவிடுவதாக சவால்விட்டார்கள். அவர்களைத் தாக்க ஆள்களை ஏவினார்கள். எதிர்ப்பு வலுக்க வலுக்க அவர்களுக்கிடையே நெருக்கம் கூடியது. ஒருவருக்கு ஒருவர் உயிராக உடலுக்கு நிழலாகப் பிரியாமல் நெருங்கினர். காவல்துறை பாதுகாப்பும் கோரினர். இந்தச் சூழலில்தான் அம்மா இறந்துவிட்டாள் என்று செய்தி வந்தது.

அம்மா பாவம். மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்று நைந்து போயிருந்தாள். ஆண்பிள்ளைப் பெற்றுத் தரவில்லை என்று அடித்து விரட்டி விட்டு, அப்பா இன்னொரு கல்யாணம், உள்ளுரில் தனக்கு மகள் வயதில் ஒரு பெண்ணை கட்டிக் கொண்டார். அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஊரெல்லாம் சுற்றி உடம்பு கெட்டு அம்மாவை தஞ்சம் அடைந்தார். அம்மா இருந்த ரெண்டு ஏக்கர் நஞ்சையை விவசாயம் செய்து பிள்ளைகளைக் காப்பாற்றி உள்ளூரிலேயே சொந்தத்திலேயே இரு மகள்களையும் கட்டிக் கொடுத்தாள். மருமகன்களோ விவசாய வேலை பார்க்காமல் ஊர் சுற்றினார்கள். ராத்திரி போதையில் மனைவியரை அடித்தார்கள். பெரிய மாமாவுக்கும் அக்காவுக்கும் சண்டை வர காரணம் அவருக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு செலவுக்கு இந்தக் குடும்பத்திலிருந்து பணம் பறித்துச் செல்வது. கேட்டால் சண்டை, அடி, உதை. அம்மாவால் தட்டி கேட்க முடியவில்லை. அப்பா இருந்தும் பயனில்லை. இந்தச் சூழலில் தான் போதும் பொண்ணு என்ற ப்ரியா வைராக்கியமாகப் படித்தாள். கண்ணீரும் கருமாயமுமாய் கிடக்கும் கிராமத்து பெண்கள் நிலை உயர்த்திடத் துடித்தாள்.

கைபேசி ஒலித்தது. எடுத்தாள். மூத்த அக்கா புருசன் தான்:

“”ஏய் ஓடுகாலி சிறுக்கி, என்ன செல்போனை நோண்டிகிட்டுருக்கே. அந்த நொண்டிப் பயலுக்கு போன் பண்ணி போலிசு கீலிசுக்கு தகவல் சொல்லிறலாம்னு பார்க்கிறியா. அவனை ஊரு எல்லையிலேயே கூல்ட்ரிங்ஸ் வாங்கிக் கொடுத்துக் கொல்ல ஏற்பாடு பண்ணிட்டேன். இன்னிக்கு இந்த வீட்ல மூணு பிணம். அம்மா இறந்த சோகத்தில் மகளும், மனைவி இறந்த சோகத்தில் மருமகனும் தற்கொலைன்னு உலகமே நாளைக்குப் பேசப் போகுது” கைப்பேசியைத் துண்டித்துவிட்டார் மாமன்.

“அய்யோ’ என்று கதறியபடி சுரேஷ்க்கு கைபேசியில் தொடர்பு கொண்டாள். தொடர்ந்து அழைத்தாள். இணைப்பு கிட்டவில்லை. தலையில் அடித்துக் கொண்டாள். ஆனாலும் அவளுக்கு ஒரு நம்பிக்கை. சுரேஷ் வெளியாள் யார் என்ன கொடுத்தாலும் வாங்குபவன் இல்லை. சாதுர்யமாகப் பேசி மறுதலித்து விடுவான்.

கைப்பேசி அலறியது.

“”என்னடி ஓடுகாலி, கதறி அழுதழுது சாவு. நீ குடிக்கும் தண்ணீர் எல்லாம் விஷம். குடித்தாலும் சாவாய். குடிக்காவிட்டாலும் பசி தாகத்தால் சாவாய் ஆக இன்னிக்கு இந்த வீட்ல மூணு பிணம்” என்று தீயள்ளி போட்டுவிட்டு கைபேசி துண்டித்தது. இந்த எமன் பேசினால் தொடர்பு கிடைக்குது. சுரேஷ்க்கு கிடைக்கவில்லையே என்று பதறினாள்.

“நான் என்னமோ பஞ்சமாபாவம் செஞ்சமாதிரி கொதிக்கிறான்களே. உலகத்திலே இல்லாததையா செஞ்சுட்டேன். இவனுங்களை மாதிரி இல்ல என் புருஷன். ஒழுக்கசீலன் உலகத்தை காப்பத்தத் துடிக்கிற உத்தமன். ஓடுகாலி ஓடுகாலின்னு சொல்றான்களே, யாரு ஓடுகாலி நல்ல அம்சமான பொண்டாட்டி இருந்தும் ஊரு மேயப்போறானே மாமன். அவன்தானே ஓடுகாலி. மனசில ஊனமில்லாத மனுசனை இல்ல நான் கட்டிகிட்டேன்

நான் கட்டிகிட்டதில்ல என்ன தப்பு. கால் ஊனமானவனை காலு நல்லா இருக்கிறவ கட்டிக்கிறது என்ன தப்பு? அப்படி என்ன இயற்கைக்கு விரோதமா, வினோதமா செஞ்சுட்டேன்? வழுக்கை தலைக்காரங்களுக்கு நீண்ட முடியுள்ளவ மனைவியா வாய்க்கிறதில்லை? உயரமான ஆண்களுக்கு குட்டையான பொண்டாட்டி வாய்க்கிறதில்லை’ ஆவேசம் பொங்க புலம்பினாள். வறண்ட உதடுகளை ஈரப்படுத்தினாள். முடியவில்லை. நாக்கே உலர்ந்து மேலன்னத்தோடு ஒட்டிக் கொண்டது. வீட்டில் இருக்கும் தண்ணீரை குடித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். கட்டிலிருந்து பெரிய பயறு கிடந்தது. சுவரில் இரு பல்லிகள் இணைந்து கிடந்தன. கரப்பான்பூச்சிகள் இரண்டு ஒன்றை ஒன்று துரத்தியபடி பறந்து கொண்டிருந்தன. சங்கு சேகண்டி சத்தமும் மேளச்சத்தமும் பாதாளத்திலிருந்து கேட்பது போல சன்னமாகக் கேட்டது. புருசனுக்கு என்ன ஆனதோ என்ற நினைப்பு அலைகழித்தது. வாடிய செடியாக தலையைச் சாய்த்து மயங்கினாள்.

திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. மேளச்சத்தமோ, சங்கு, சேகண்டி சத்தமோ இல்லாமல் அசாதாரணமான மவுனமாக இருந்தது. கதவு திறக்கப்பட்டது. மெல்ல கண் திறந்தாள். மாமன் நின்றிருந்தான். வியர்வையில தொப்பலாக நனைந்திருந்த சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள். பின்னால் கணவர் சுரேசும் இருபோலீஸ்காரர்களும் நின்றார்கள்.

அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை. மாமன் நடுங்கியபடி சொன்னார்.

“”ப்..ப்ரியா கண்ணு, இந்தா பாரு சுரேஷ் தம்பி வந்திருக்காரு” என்றபடி விரைந்து உள்ளே வந்து துண்டித்த மின்சார இணைப்பைக் கொடுத்தான். காற்றாடி சுழன்றது. விளக்கு ஒளிர்ந்தது. அழுது கொண்டிருந்த அக்காள்மார்களும் அப்பாவும் ஊர்ப் பெரியவர்களும் பதறியபடி திரண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் சாதி உணர்வை மீறிய அச்சமும் நடுக்கமும் தெரிந்தது.

போலீஸ்காரர் ஒருவர் சொன்னார்.

“”ஊர் மணியகாரர், கிராம அலுவலர் இருந்தா வரச்சொல்லுங்க” எல்லோரும் திகைத்து நின்றனர். ஊருக்குள் போலீஸ் வருவது தெரிந்தவுடன் கிராம அலுவலரும், தலையாரியும் பதறியபடி வந்தனர்.

மாமா நடுங்கியபடி பவ்யமாக போலீஸ்காரர்களையும சுரேசையும் கட்டிலில் உட்காரச் செய்தான். உள்ளே இருந்த பாட்டிலிலிருந்து குடிநீர் கொடுத்து குடிக்கச் சொன்னான். அப்பா முதல் ஊர் பெரியவர்கள் தொங்கிய மீசையும் நடுங்கிய உடலுமாய் மவுனமாய் நின்றனர். ஏதாவது வாய்விட்டுச் சொல்லி மாட்டிக் கொள்ளக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அவர்களது வாய்களைப் பூட்டியிருந்தது.

கிராம நிர்வாக அலுவலர் வந்து வணக்கம் சொன்னார்.

போலீஸ்காரர் கேட்டார். “”இவருதானா சார் ராமசாமி மகள் ப்ரியாவின் கணவன்

சுரேஷ்?”

அப்பாவும், ஊர்க்காரர்களும் உறைந்து போயிருந்தனர்.

“” என்னங்க நான் கேட்கிறது விளங்குச்சா?” என்றார் காவலர்.

கிராம நிர்வாக அலுவலர் சொன்னார், “”ராமசாமி அய்யா, சார் கேட்கிறாருள்ள பதிலு சொல்லுங்க?”

ராமசாமி பொங்கிய வியர்வையை மேல்துண்டால் துடைத்தபடி நாக்குளற, “”ஆமாங்க சார். சுரேசு தம்பி என் மகள் வீட்டுக்காரரு தான்”.

“”ஒண்ணுமில்லையா, உங்க மருமகன் உதவி கலெக்டர் பரீட்சையில் பாஸ் பண்ணி இருக்கிறார். இவரு இந்த ஊர்காரர்தானா? அவரு குணம் எப்படின்னு விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தோம்”.

ராமசாமி மூத்த மருமகனை பார்த்தபடி சொன்னார்.

“”சுரேசு எங்க மருமகன்தான். தங்கமான குணம் உள்ளவரு. எங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு டவுன்லியே தங்கிட்டாரு. என் சம்சாரம் செத்துட்டான்னு துக்கமுறை செய்ய வந்திருக்காரு”.

“”இன்னொரு விசாரணைக்கு வரலையா?” என்று ப்ரியா கேட்டாள். மாமா, அப்பா முதலான சொந்தக்காரர்கள் மனதில் பயம் கலந்த எரிச்சல்.

“என்னடா இவ முடிஞ்சுபோன கதையை கிளப்புறாளே’ என்று நினைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நிலைமையைப் புரிந்து கொண்ட சுரேஷ் “”சார், எனது மனைவியும் குரூப் 1 உதவி கலெக்டர் தேர்வில் தேறி இருக்கிறாள். அதுபற்றிதான் ப்ரியா கேட்கிறாள்”

“”சுரேஷ் சார், இருவருக்கும் வாழ்த்துக்கள். நான் தான் ஒரே கேள்வியில ரெண்டுபேரையும் சேர்த்தே கேட்டுட்டேனே”

ஊரே அன்னம் பாரித்து நின்றது.

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *