கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 12,127 
 
 

பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும் அந்த லஷ்மிநாராயணரே வெளியே வந்து விட்டலநாராயணன் மாதிரி இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார் என்றே நினைக்கிறேன். சரி, அத்தையாகவே நிமிர்ந்து பார்க்கட்டும், அது வரை நானும் ரசிப்பது என்று தீர்மானமாக நின்று கொண்டிருந்தேன்.

கோலத்தை நிறைவு செய்த்துவிட்ட திருப்தியுடன் அதை பார்த்துக் கொண்டே பிரதட்சிணமாக வலம் வந்தவள், காதோரத்தில் அரும்பியிருந்த வியர்வையை கட்டைவிரலால் வழிக்கப்போனவள், குறுக்கிட்ட என்னை நிமிர்ந்து பார்த்து திகைத்துப் போனாள். சிரமப்பட்டு அடையாளம் கண்டு கொண்டாள். பரவசத்தில் கண்கள் அகலமாக விரிந்தன.

“சுரேஷ்! நீயாடா? எப்படா வந்தே? யாரோ அர்சனை செய்ய வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். சே! என்ன முட்டாள் நான்? இவ்வளவு நேரம் காக்க வைச்சிட்டேனே? என்னடா இப்படி திடீர்னு?”

அகன்ற புன்னகையை மட்டுமே பதிலாக வைத்தேன். சாதாரணமாகவே அத்தைக்கு என்னைக் கண்டால் தலைகால் புரியாது. அதுவும் பல வருடங்கள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே டெல்லியிருந்து களஞ்சேரிக்கு திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன் என்றதும் பதட்டம் கூடிப் போனது. நடுங்கும் கைகளோடு என் கையை பிடித்துப் பார்த்தாள். கோலமாவு கையாலேயே தலையை கோதினாள். என்ன செய்கிறோம் என்று புரியாமல் சின்னக் குழந்தை மாதிரி அங்கும் இங்கும் ஓடினாள். விறுவிறுவென என்னை கோயிலுக்கு வெளியே இழுத்து வந்து வெளிச்சத்தில் ஆசை தீர பார்த்தாள். என்னென்னவோ தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே வந்தாள். எதிர்ப்படுபவர்களிடம், “என் மருமவன் என்னை பார்க்கணும்னு வந்திருக்கான். டெல்லியிலே நல்ல வேலையிலே இருக்கான்.” என்று சொல்லி பெருமை பட்டுக் கொண்டே இருந்தாள்.

“அத்தை உங்க கோயில் வேலை முடிஞ்சிடுச்சா? வீட்டுல போய் நிதானமா பேசலாமே? எதிர் வீட்டுல என் பொட்டிய கொடுத்திட்டு வந்திருக்கேன்”

“இன்னும் பத்து நிமிஷ வேலைதான்டா. கொஞ்சம் பொறு, இல்லைன்னா, பிரகாரத்தை நாலு தடவை சுத்து. வாச படியிலே வந்து உட்கார்ந்துக்க, இதோ வந்திட்டேன்”

எழுபது வயது ஆனாலும், எவ்வளவோ கஷ்டங்கள் வந்து அவளை அலைக்கழித்தாலும், அதை துளி கூட பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் என் அத்தையை பார்க்கும்போது நெஞ்சில் ரத்தம் கசிந்தது. பின்னுக்கு போய்விட்ட நினைவுகள் மீண்டும் சிலிர்த்தெழுந்து என்னுள் முட்டி மோதின.

எனக்கு அத்தைகள் இரண்டு என்றாலும் அத்தான் ஒன்றுதான். கிரிஜா அத்தைதான் பெரிய அத்தை சொந்த மாமாவுக்குதான் கட்டிக் கொடுத்தார்கள். அத்தானுக்கு மேலக்குளத்துக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு ரைஸ் மில் இருந்தது. அது நஷ்டத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.அத்தை தன் உழைப்பை கொட்டி ஒரே வருடத்தில் லாபம் காட்டினாள். அந்த வருடமே கடைத்தெருவில் ஒரு மளிகை கடை போட்டு அதில் அத்தானை உட்கார வைத்துவிட்டு தான் ரைஸ்மில்லின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டாள். காசு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பிக்க, ஒரு துணிச்சலோடு என் சின்ன அத்தை வனஜாவையே, அத்தானுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைத்தாள். அக்காளும். தங்கையுமாக இருந்தால், சொத்து பிரச்சனை, சக்களத்தி சண்டை வராது என்பதை பொய்யாக்கியவள் என் சின்ன அத்தை.

அப்போதெல்லாம் எனக்கு பள்ளிக்கூடம் போகும் வயது. சின்ன அத்தை. பெரிய அத்தையை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதும், இரண்டு பேர்களுக்கு நடுவே என் அத்தான் தடுமாறி தவிப்பதும், ஆளாளுக்கு வந்து வக்காலத்து வாங்குவதும் அடிக்கடி நடக்கும். பெரிய அத்தை உழைக்கும் வகை என்பதால் எப்போதும் தன்னை அலங்கரித்து கொள்வதில் நாட்டம் கொண்டதில்லை. தனி ஆளாக ஒரு மூட்டை நெல்லை எடுத்து ஹல்லரில் கவிழ்ப்பாள். பெரும்பாலும் இரவில்தான் கரண்டு வரும் என்பதால் சில நாட்கள் நெல் மூட்டை மீது படுத்து தூங்கிவிடுவாள். வேலையாள் இல்லையென்றால் அவளே மாவரைப்பாள். தவிடு பிடிப்பாள். வீட்டில் தன் பிடி அற்று போவது தெரியாமல் பொன்னும் பொருளும் சேர்த்து கொடுத்துக் கொண்டிருந்த சொந்த அக்கா, தன் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டாள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை. வனஜா அத்தை தலைவிரி கோலமாக நடுதெருவில் நின்று கொண்டு ஏகத்துக்கும் சத்தம் போட்டு தகாராறு செய்ய, ஊரே கூடியது. என் அப்பாவும் தாத்தாவும் மற்ற உறவுக்காரர்களும் வரவழைக்கப்பட்டு விடிய விடிய பேசினார்கள். அதன்படி கோயில் பக்கத்தில் அரத பழசான ஓடு வேய்ந்த வீட்டுக்கு மட்டும் பெரிய அத்தை சொந்தக்காரியானாள். அத்தான் பெயரிலும், பெரிய அத்தை பெயரிலும் இருக்கும் மற்ற எல்லா சொத்துக்களும் வனஜா அத்தையின் பெயருக்கு உடனடியாக மாற்றி கொடுத்துவிட வேண்டும் என்பதாக முடிவானது. சின்ன அத்தையை அடிக்கப்போன அத்தானை பெரிய அத்தைதான் தடுத்தாள்.

சொத்துக்கள் தன் கைக்கு வந்ததும். கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் விற்று விட்டு தன் மூன்று பெண் குழந்தைகளுடன் தஞ்சாவூர் போனாள் சின்ன அத்தை. அங்கு மளிகை கடை வைத்தாள். அத்தான் சின்ன அத்தைக்கு தெரியாமல் அவ்வப்போது களஞ்சேரிக்கு வந்துவிட்டு போவார். அந்த சமயத்தில்தான் அத்தானின் முகத்தில் நிம்மதியை பார்க்கமுடியும். ரைஸ் மில் கையைவிட்டு போய்விட்டாலும், பெரிய அத்தை உழைப்பதை நிறுத்தவில்லை. ஊரில் ஒரு வீடு பாக்கியில்லாமல் எந்த வேலையென்றாலும் முகம் சுளிகாமல் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள்.

பெரிய அத்தைக்கு நன்றாக பாட வரும். கிணற்றடியில் துணி தோய்க்கும் கல்லில் பெரிய அத்தை குத்துகாலிட்டு மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்க அத்தான் அதற்கு பக்கத்திலிருக்கும் தூணில் சரிந்தவாறு ரசித்துக் கொண்டிருப்பார். காதல் கசிந்துருகிக்கொண்டிருக்கும் போது நான் கரடியாய் பல தடவை நுழைந்திருக்கிறேன்.

“வாடா மீசை மொளைச்ச என் மருமவனே! ரம்யாவை கட்டிக்கிறயா?” என்பாள். ரம்யா வனஜா அத்தையின் மூத்தப் பெண்.

“போ அத்தை! வனஜா அத்தை மாமியார்னா வேண்டாம். நீ எனக்கு மாமியாரா இருக்கியா? கட்டிக்கறேன்”

“பார்த்தீங்களா, உங்க மருமவன் பேசறத”

அத்தான் சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிடுவார். பெரிய அத்தையிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும் எனக்கு பெரிய அத்தைதான் பிடிக்கும். நான் படிப்பதற்க்கு சென்னை போனதும் பெரிய அத்தையிடமிருந்து தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. படிப்பு முடித்து, எனக்கு டெல்லியில் வேலை கிடைத்ததும். நான் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லி வந்துவிட்டேன்.

அதன் பிறகு இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானது, சின்ன அத்தையின் மூத்த பெண், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவனை காதலித்திருக்கிறாள்.

கொஞ்சம் வசதி குறைவு. கீழ் ஜாதி வேறு. சின்ன அத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ரம்யா ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், அந்த பையனுடன் களஞ்சேரி பெரிய அத்தை வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டாள். பெரிய அத்தை எல்லாவற்றையும் விசாரித்து விட்டு, அத்தானை வர வழைத்து, அவர் கையாலேயே ஆசிகள் வாங்க வைத்து திருமணத்தை நடத்திவிட்டாள். சின்ன அத்தை போலீசை வரவழைத்து ஊரே வேடிக்கை பார்க்கும் படி செய்தாளாம். ஆனால் பெரிய அத்தையின் உறுதியை கண்டு, அத்தானே மிரண்டு போனாராம்.

அடுத்து என் அத்தான் காலமானது. நாட்கள் போக போக, அத்தான் அதிக நாட்கள் பெரிய அத்தை வீட்டிலேயே இருப்பது அதிகமானதாம். அத்தான் உடலளவில் திடமாக இருந்து வந்தாலும், மனசளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். களஞ்சேரி வீட்டில் இருந்தபோது அவர் இறந்து போயிருக்கிறார். அதுவும் பெரிய அத்தையின் மடியில். சின்ன அத்தைக்கு தகவல் போனதாம். அதன் பிறகு அவள் செய்ததுதான் மிகக் கொடூரம். எல்லோர் பேச்சையும் மீறி அத்தானின் சவத்தை தஞ்சாவூர் எடுத்துக் கொண்டு போனாள். பெரிய அத்தையை அந்த சமயத்திலிருந்து எந்த சடங்கிலும் சேர்த்துக் கொள்ளவேயில்லை. பெரிய அத்தை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும். எங்கள் உறவிலும். உள்ளூர் மக்களும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

அதன் பிறகு பெரிய அத்தையின் உழைப்பு பெருமாளை நோக்கி திரும்பி விட்டது. சதா சர்வகாலமும் லஷ்மிநாராயணரே கதி என்று இருந்துவிட்டாள். ‘என் சன்னிதி சுத்தமோ சுத்தம். ஆஹா!” என்று அந்த கடவுளே பெருமை பட்டுக்கொள்கிறார் என்றால் அதற்கு பெரிய அத்தைதான் காரணம். கோயிலுக்காகவே தன்னை கட்டிப்போட்டுக் கொண்டுவிட்டதால் பெரிய அத்தை ஊருக்கு கோயில் அத்தை ஆனாள்.

பெருமாளுக்கு சாயரட்சை ஆனது. அதன் பிறகுதான் பெரிய அத்தை வந்தாள். நானும் பெரிய அத்தையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். நாளைக்கே போக வேண்டும் என்றதும் பொய்யாக கோபித்துக் கொண்டாள். அப்புறம் தானே சமாதானம் செய்து கொண்டாள். அடிக்கடி வரச்சொன்னாள். குடும்பத்தோடு வரச்சொன்னாள். அவசியம் தஞ்சாவூர் போய் சின்ன அத்தையையும் பார்த்துவிட்டு போகச் சொன்னாள். அதற்கு என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். சின்ன அத்தைக்கு இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாளாம். ஆனால் வசதிக்கு எந்த குறைவும் இல்லையாம்.

நான் களஞ்சேரிக்கு வந்த வேலை இனிமேல்தான் ஆரம்பிக்க இருக்கிறது. அத்தையை எப்படியாவது சமாளித்து, டெல்லிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று என் மனைவி சொல்லியனுப்பியிருக்கிறாள். ஆனால், அத்தையின் போக்கை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், மெதுவாக ஆரம்பித்தேன்.

“அத்தை! நீங்க இங்க ஒண்டியா இருந்துக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனும். என் கூட வந்திடுங்களேன். சரளா நீங்க டெல்லிக்கு வரப்போறதை ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா?”

என் பேச்சை பெரிய அத்தை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் கண் மூடி யோசித்தாள். பிறகு நிதானமாக கீழ் குரலில் ஆரம்பித்தாள்.

“சுரேஷ் ! மஹாபாரத் போர்ல கிருஷ்ணன் யார் பக்கங்கிறதுலேங்கறதுல துரியோதனனுக்கும். அர்ஜுனனுக்கும் போட்டா போட்டி நடந்துச்சாம். அந்த கதை தெரியுமா?”

“ஏதோ ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் நீங்களே சொல்லுங்களேன்”

“கதை ரொம்ப பெரிசு. அதனால் சுருக்கமாச் சொல்லறேன். கிருஷ்ணர் துரியோதனன்கிட்டே ‘உனக்கு நான் மட்டும் வேணுமா? இல்லே, என்னுடைய யாதவ சேனை மொத்தமும் வேணுமா?’ன்னு கேட்டாராம். அதுக்கு துரியோதனன், ‘உன் யாதவ சேனைதான் வேணும்’னு சொன்னானாம். ‘கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தா போதும்’னு அர்ஜுனன் சொன்னானாம். துரியோதனன் போன பிறகு. கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்டே அதுக்கான விளக்கம் கேட்டாராம். ‘கிருஷ்ணா! நீ எங்கே இருக்கே என்பதுதான் முக்கியம். எனக்கு யாதவ சேனை எவ்வளவு பெரிசு என்பது முக்கியமில்லைன்னு அர்ஜுனன் அதுக்கு பதில் சொன்னானாம். அந்த மாதிரி என்கிட்டே காசு பணம் வேணுமானா கொறைவா இருந்திருக்கலாம். ஆனா உங்க அத்தான் மனசு எப்போதும் என்னோடதான்டா இருந்துச்சு. அவர் மனக்கஷ்டத்தோட நொந்து வரும்போதெல்லாம் நாந்தான்டா அவருக்கு மருந்தா இருந்திருக்கேன். அவருக்கு சாவு வந்தபோதுகூட, அது என் மடியிலேதான் வந்திச்சு. நிம்மதியா செத்தார். அதுக்கப்பறம் அந்த உடம்புதான் அவ கிட்டே போச்சு. நான் எப்போதுமே அவர் என்னை விட்டு பிரிஞ்சதா நெனைக்கலே. கிருஷ்ண பரமாத்மா மாதிரி என்னோட எப்பவும் இருக்காரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி மாதிரி நம்ம ஊரு பெருமாளுக்கும் ருக்மணி, சத்யபாபான்னு ரெண்டு பொண்டாட்டி. இப்ப நான் அவருக்கு ஊழியம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு குறைவும் இல்லாம அவர் என்னை காப்பாத்திக்கிட்டு வராரு. ஊரே ‘கோயில் அத்தை! கோயில் அத்தை!’ன்னு என்னை கொண்டாடுது. நான் இன்னமும் பெருமாளை வேண்டறது என்ன தெரியுமா? ‘பெருமாளே! அந்த வனஜாவுக்கு நல்லதை செய். அவ சம்சாரி. அவளை ஏதாவது

தண்டிக்கணும்னா, அந்த தண்டனையை எனக்கு கொடு’ன்னு கெஞ்சுவேன். சுரேஷ்! நான் என்னிக்கும் தைரியமா இருக்கறதுக்கு ஒரே காரணம். அத்தான் இருந்த வரைக்கும் அத்தான். அவர் போன பிறகு நம்ம பெருமாள். காசு பணமெல்லாம் யாதவ சேனை

மாதிரி. அது முக்கியமேயில்லே….”

“அது சரி அத்தை, உங்களுக்கு வயசாகிறது இல்லையா?”

“அதை பத்தி நான் கவலைப்பட்டதே இல்லே. சுரேஷ் பாஞ்சாலி முழு சரணாகதி அடைஞ்ச மாதிரி நான் பெருமாள் கிட்டே என்னை கொடுத்திட்டேன். அவர் பார்த்துப்ப்பார். அத்தான் போகும் போது, எனக்கு பெருமாள் கிட்டே கை காமிச்சு விட்ட மாதிரி. பெருமாளே ஒரு நாள், சுரேஷ் உன் அத்தையை கூட்டிக்கிட்டு போ’ன்னு சொல்லுவாரு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டா நான் வந்துதானே ஆகனும்.”

என் கண்களுக்கு பெரிய அத்தை தெரியவில்லை. தாயார் சன்னிதியில் கொலுவீற்றிருக்கும் அந்த கற்சிலையே உருமெடுத்து எதில் அமர்ந்திருப்பதாகப் பட்டது. எழுந்து, நெற்றி நிலத்தில் பட அவளை நமஸ்கரித்தேன். கோயில் அத்தை அப்போதும் புன்னகை பூத்திருந்தாள்.

– தினமலர்-வாரமலர் 21 டிசம்பர் 2008, 2008 தினமலர் வார மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.

– சில ரகசியங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2018, வெளியிடு : FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

1 thought on “கோயில் அத்தை

  1. மனதை உருக்கி விட்டது… எக்காலத்திலும் கீழான மனம் படைத்தவர்களை மன்னிக்கும் மனம் கொண்ட மேலானவர்களும் உண்டு…சங்கு சுட்டாலும் வெண்மை தரும்… கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே…
    – திருமதி. விஜய்,
    லண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *